பழைய கதைகளில் பார்வைப் படிவுகள்
வெகு வருடங்களாகவே மணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’யின் சிறுகதைகளைப் படிக்கவேண்டும் என்ற அவா இருந்தாலும் தொகுப்புகள் இல்லை. தனிக்கதைகள் கூட வேறு தொகுப்புகளில் இருந்ததாகத் தெரியவில்லை. இணையத்தில் இருக்கிறதா தெரியவில்லை. சிறுவாணி கொண்டுவந்திருக்கும் இத்தொகுப்பு அக்குறையை நீக்கியது.

சிட்டி அவர்களை இரண்டு மூன்று முறை நேரில் பார்த்திருக்கிறேன். அவர் தான் எழுதுவதை விட எழுதுபவர்களை ஊக்குவிப்பவராக இருந்தார் என்றும் ஆழமான விரிவான வாசிப்பு கொண்டவர் என்றும் அறிந்திருந்தேன். அவர் தி.ஜானகிராமனுடன் இணைந்து நடந்தாய் வாழி காவேரி பயணக் கட்டுரை எழுதியது பிரபலம். சிவபாத சுந்தரத்துடனும், கு.ப.ரா வுடனும் இணைந்தும் எழுதியிருக்கிறார். இணைந்து எழுதுவது – அதிலும் இலக்கிய உலகில் – ஆச்சரியத்தையே அளித்தது.
21 கதைகள் உள்ள இந்த தொகுப்பில், அனைத்துமே எழுதப்பட்ட காலத்தின் பின்னணியில் வைத்து படிக்கவேண்டிய வாசிப்புப் பொறுப்பு நமக்குத் தேவை. சில கதைகள் முற்றிலும் அக்காலத்துக்குரியன. உதாரணமாக 10, 12 வயதுடைய விளையாட்டு சிறுவர்களோடு விளையாடும் உறவினர் சிறுமியிடம் அந்த பையன் ஒருவனுடன் ‘கல்யாணம் பண்ணிக்கப்போற பையன்’ என்று பேசுவது (ரப்பர் பந்து) இன்றைய இளம் தலைமுறையால் சகிக்க இயலாது (இன்று அதைவிட மோசமாக இணையத்தில் அவர்கள் புழங்கிவருவது குறித்து பேசுவதற்கில்லை என்றாலும்). ஆனால் அன்று சமூகச் சூழல் அப்படித்தான் இருந்தது. பாசாங்கற்ற கதைகள் அப்படித்தான் பேச இயலும். ஆனால் சில கதைகளில் மிக துணிச்சலாகப் பேசும் பெண் பாத்திரங்கள் அப்போதைக்கு புதியதாகவே இருந்திருக்க வேண்டும். அதில் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவென்றால் பெண் என்ற நிலையில் இருந்து பாத்திரம் பேசுவதில் தார்மீக துணிச்சல் இருக்கிறது; துடுக்குத்தனமாக அவை இல்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், முன்னதில் எதிராளியிடம் உணர்ந்துகொள்ளும் தன்மை இருக்கும்.).
நானறிந்தவரையில் ‘தாழை பூத்தது’ அருமையான கதை. அவன் மனைவி, அந்திமந்தாரை போன்ற கதைகள் நல்ல கதைக்களம் கொண்டவை. இன்னும் நன்றாக வந்திருந்திருக்கலாமே என்பதானவும் ஒன்றிரண்டு உள்ளன.
சரி. நாற்பதுகளில் வந்த இக்கதைகளை அறுபதாண்டுகள் கழித்து ஏன் படிக்கவேண்டும் ? இலக்கிய வாசிப்பில் காலங்களையும் படிக்கையில்தான் அது முழுமை பெறும். மற்றொன்று இன்றைய நவீன வாசிப்பில் நமது இலக்கியக் கதை சொல்லல் சூழலும், வாசிப்பு சமூகமாக நமது முதிர்ச்சியும் குறித்து சுய பரிசீலனை செய்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. சுவார்சியத்துக்காக, கதையோட்ட வசதிக்காக வாசிப்பது இந்த விசாரணையில் சேராது.
சிட்டியின் எழுத்துமுறை அப்போதிருந்த படர்க்கையில் கதை சொல்லல் முறைதான். விசேஷ எழுத்துப்பிரயோகங்கள் ஏதுமில்லை.. சொல்லிச்செல்லும் முறையில் உருவாக்கும் கதைச்சூழலும், சிறுகதைக்கே உரிய ‘முடிப்பு’ வகையிலும் அமைந்தவை. முக்கியமாக ‘உரக்கப் பேசாதவை’. ஓரிரு கதைகளில் கதையின் இறுதிப்பகுதிகள் நீளாமலிருந்தால் கதை மேலும் கனம் பெற்றிருக்கும் என்றும் தோன்றவைப்பன (சௌந்தரியமே சத்தியம்). சில கதைகள் மிக செயற்கையாக (பெண்மையின் பரிவு கதை – வயதுக்கு மீறிப் பேசும் சிறுமி பாத்திரம் ஒரு தமிழின் வெற்றிப்பட இயக்குனரை நினைவூட்டுகிறது). ஓரிரு கதைகள் (உடைந்த வளையல்) எழுதிப்பார்த்த சிறுகதை வகையாக உள்ளன.
நல்ல உருவ அமைதி கொண்டெழுந்துள்ள கதை தாழை பூத்தது. கல்யாணி நிறைய வெளியூர்ப்பயணம் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு அரசாங்க குமாஸ்தாவின் மனைவி. நல்ல வேலையிலிருந்தவன், திருமணமான மூன்று மாதத்தில் வேலை பறிபோய், இப்போது வேறொரு வேலை கிடைத்து அமர்ந்திருக்கிறான். குடும்பஸ்தனுக்கு வேலைதானே முக்கியம். கல்யாணி பெரும்பாலும் வீட்டில் தனியாகவே இருக்கிறாள். பெற்றோர் வீட்டில் மூத்த பெண்ணாக இருந்தவள் என்பதால் பொறுப்புகள் அதிகம். திருமணமாகி வந்தபின் அங்கு செல்வது கூட அப்படி ஒன்றும் குதூகலமாக இருப்பதில்லை. ஒருநாள் இரவு இவள் சாப்பிடும் சமயம் வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு “பத்திரமாக இரு” என்று சொல்லிவிட்டு செல்லும் பக்கத்துவீட்டு மாமி, இவள் திடீரென வாந்தி எடுத்த சப்தம் கேட்டு வருகிறாள். விசாரிக்கிறாள். இவள் எப்போதுமே தனியாகவே வீட்டில் இருக்கும் நிலை, பெற்றோர் வீட்டு நிலைமை, கணவனின் வேலை நிமித்தமான பயணங்கள் உள்ளிட்டவை சொல்லப்பட்டு கதை நகர்கிறது. கல்யாணி கருவுற்றிருக்கிறாளோ என்று மாமி அவளிடம் விசாரிக்கையில், கணவனுடன் தனித்திருக்கும் சமயங்களே அதிகமும் வாய்த்திராத கல்யாணி அதை பொருட்படுத்தாவிட்டாலும், ‘இப்ப அதுக்கென்ன அவசரம்’ என்று சொல்லிக்கொண்டாலும், அதுதான் உண்மையாகிறது. கணவன் வீட்டுக்கு வருவதே குறைவு. வந்தாலும் அலுவலகக் காகிதக் கட்டுகளுடந்தான் வருகிறான். “ஒரு நாளும் தான் அவனை இம்சித்தது இல்லையே. ஏதோ தற்செயலாய் அவன் வீட்டிலிருக்க நேர்ந்ததில், அம்மா! இந்த விளைவா? தெய்வமே!” என்ற வரி கதைக்கு போதுமானதாக இருக்கிறது.
தான் கருவுற்றுள்ள இந்த சமயத்தில் கணவன் எங்கே என்ன செய்துகொண்டிருப்பானோ என்ற பெண்ணுக்கே உரிய எண்ணங்கள் மோதுகின்றன. கருவுற்ற சுபவிஷயம் எல்லோருக்குமே சந்தோஷம்தான். ஆனால் படுத்துக்கொண்டிருக்கும் கல்யாணி விசித்து அழுகிறாள். என்ன ஆயிற்று என்று கேட்கும் பாட்டியிடம், கண்ணைத் துடைத்துக்கொண்டு ஒன்றுமில்லையே என்று சொல்லிவிட்டு மீண்டும் படுத்துக்கொள்கிறாள். அவளால் அழக்கூட முடியவில்லை என்று முடிகிறது சிறுகதை.
அனைவருக்குமான சந்தோஷம் அவளுக்கானதாகவும் ஏன் இல்லை? தவிர்க்க இயலாமல் தொலைவில் இருக்கும் கணவனின் நிலைமை, அவளுக்கு ஞாயமான எதிர்பார்ப்பும் இருந்தபோதும் கஷ்டமும் கூடவே இருக்கிறது. சந்தோஷத்தை சேர்ந்து பகிர்ந்து கொள்ள வழியில்லை. தீர்வு கிடைக்காத ஏக்கத்தை ஏற்றுக்கொள்வதை தவிர கல்யாணியிடம் வேறு வழி இல்லை. தாழை பூக்கும் வாசம் இரவையே கமழவைக்கும். ஆனால் அது பூப்பதெல்லாம் ஆளரவரமற்ற காட்டுப் புதர்களிடையேதானே! அதிகம் சொல்லாமல் நிறைய சொல்லிவிடும் அருமையான கதை.
~o0o~
சிட்டியின் மற்றொரு முக்கியமான எழுத்துமுறை, பிரபலமான சிறுகதைகளின் போக்கை கேள்வி கேட்டு, வேறொரு விதமாக சோதித்துப் பார்த்து கதைகள் எழுதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவ்வகை சோதனை வீம்புக்கானதாக இல்லாமல், மாற்றுப்பாதையிலான பயணமாக இருக்கிறது. இதுவும் இலக்கியத்துக்குத் தேவையான ஒன்றுதான். அவ்வகையில் குபராவின் கனகாம்பரம் இவருடைய அந்திமந்தாரை கதைக்கு மாற்றாக – எதிராக அல்ல – எழுதிப் பார்த்திருக்கிறார். (கனகாம்பரம் காலையில் பூத்தால், அந்திமந்தாரை மாலையில் பூப்பது). சிட்டியின் புரியாத கதை, குபராவின் புரியும் கதைக்கு மாற்றாக வந்திருக்கிறது. தி.ஜானகிராமனின் ‘மறதி’ கதைக்கும் மாற்றாக சிட்டி எழுதிப் பார்த்திருக்கிறார்.
இக்கதையும் நாற்பதுகளின் சூழலில் நடக்கும் கதை. சேஷாத்ரியும், பட்டாபியும் நெருங்கிய நண்பர்கள். திருமணமாகாத சேஷாத்ரி, பட்டாபி வீட்டுக்கு வருவதும், அவனோடு ஆற்றங்கரைக்கு சென்று பேசிக்கொண்டிருப்பதும் வழக்கம். ஒரு நாள் சேஷாத்ரி வரும்போது பட்டாபி இல்லாததால் ஜன்னல் வழியாக அவன் மனைவி காமாட்சியிடம் விசாரிக்க, பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கும் அவள் உடை சரிசெய்துகொண்டு எழுந்து நின்றாலும், பதில் சொல்லக் கூட சங்கோஜப்படுகிறாள். வெளி ஆணிடம் பேசும் சூழலில் வளராதவள். பதில் சொல்வதற்குள் சேஷாத்ரி அவள் சங்கோஜத்தை உணர்ந்து திரும்பிப் போய்விடுகிறான். வீட்டுக்கு வரும் கணவன் பட்டாபி சினிமா போகலாம் என்ற்கிறான். ஏதேதோ பேச்சில் நண்பன் வந்து விசாரித்ததை சொல்ல மறந்து போகிறாள். சினிமா விட்டு திரும்பும்போது நண்பனைப் போல ஒருவன் செல்வதை பார்த்து காத்திருந்து, பிறகு வண்டியில் வீட்டுக்கு வரும்போது, தெரு முனையில் நண்பன் திரும்பி செல்வதைப் பார்க்கிறான். தன்னைத் தேடிவிட்டுப் போகிறானே என்று சொல்லும்போது நினைவுக்கு வந்தவளாய் மனைவி காமாட்சி அவன் வந்து சென்றதை சொல்கிறாள். கணவனுக்கு கோபம் வருகிறது. அவளைத் திட்டுகிறான். நண்பன் தன்னைப் பற்றி என்ன நினைப்பானோ, தான் முன்பே வந்து சென்றதையும் பொருட்படுத்தாமல் மனைவியுடன் சினிமா சென்றதாக எண்ணி வருந்தி விலகிவிடுவானோ என்றெல்லாம் அச்சமுறுகிறான். மனைவியிடம் கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் செல்கிறான். அவளுக்குப் புரிகிறது. இந்நிலையில் வெளியே சாப்பிடப் போவதாக சொல்லி கிளம்பும்போது அந்த நண்பன் சேஷாத்ரி வருகிறான். அவனோடு வெளியே போக கிளம்பும்போது, காமாட்சி இருவருக்கும் சாப்பிட இலை போட்டுவிட்டு அழைக்கிறாள். தங்களுக்குள் சண்டை என்பதை பட்டாபி சொல்ல, ‘உனக்காகத்தான் சமைத்திருக்கிறாள். எனக்காக அல்ல’ என்று நண்பனிடம் தணிந்த கோபத்துடன் சொல்ல, அவன் பதிலுக்கு சொல்ல, கிண்டலுடன் சூழல் சமனமுறுகிறது. ஒரே செய்கையில் நண்பனுக்கு விருந்தோம்பலையும், பழைய தயக்கம் நீங்கியவளாகவும், கணவனின் கோபத்தை எளிமையான மென்மையால் வென்றுவிட்டவளாகவும், அவர்கள் நட்பில் இடைவெளியில்லாமல் செய்துவிட்டவளாகவும் இருக்கிறாள்.
கு.ப.ரா வின் கனகாம்பரத்தில் மென்மையான செயலால் தனது ஏமாற்றத்தை விழுங்கிக் கொள்ளும் பெண், அந்திமந்தாரையில் மென்மையான செயலால் அவனை வென்று நிற்கிறாள். இயல்பான குடும்ப உறவில் வெற்றியும் தோல்வியும் பூவும் காம்பும் போன்றவைதானே ! இப்படித்தான் இக்கதையை – அல்லது இவ்வகைக் கதைகளைப் – புரிந்துகொள்ள முடிகிறது.
~o0o~
‘அவனது மனைவி’ சிறுகதையில் ஒரு பெண்ணின் இயல்பான துணிவான குரல் இருக்கிறது. லட்சுமணனின் அலுவலகத்துக்கு ‘காம்ப்’ பிற்காக வரும் உயரதிகாரியை லட்சுமணன் வீட்டுக்கு அழைக்க, பிறகு நடக்கும் சம்பவத்தை சொல்லும் கதை. தனது உயரதிகாரி பற்றி லட்சுமணன் வீட்டில் சொல்ல, மனைவி பார்வதியும், மாமியார் மீனாட்சியும் அவரை மிக நன்றாக தெரியும் என்பதால் வீட்டுக்கு அழைத்துவரச் சொல்ல, தயக்கத்தோடு ஒரு காபி மட்டும் சாப்பிட்டுச் செல்வதாக வரும் உயரதிகாரிதான் பார்வதியை பல வருடங்களுக்கு முன்பு பெண் பார்த்தவர் என்பதை பொதுவில் போட்டு உடைக்கிறாள் மாமியார். லட்சுமணனுக்கும் அப்போதுதான் புரிகிறது. ஆனால் மாமியார் வெள்ளந்தியாக உயரதிகாரி மனைவியாக இருக்கும் வாய்ப்பு மகள் பார்வதிக்குத் தவறிப் போனதையும், தற்போது குழந்தைக்கு ஏங்கிக் கொண்டு இருப்பதையும் பலவிதமாக பேசுகையில், உயரதிகாரி தர்ம சங்கடத்தில் நெளிய ஒருவாரு நிலைமையை அவர் சமாளிக்கிறார். பார்வதியை பெண்பார்த்துவிட்டு அவர் சென்ற, பின் தனது கணவர் இறந்து போனதால் மேற்கொண்டு தொடராமல் போனது, பிறகு லட்சுமணனைப் பார்த்து திருமணம் செய்துகொண்டது என்று விவரிக்கிறாள்.
ஆனால் பார்வதியின் பார்வை தன்மீது தொடர்ந்து படிவதாக உயரதிகாரி உணர்கிறார். தவிரவும் மேலும் வார இறுதி என்பதால் தொடர்ந்து தங்கி இருந்து செல்ல நிர்பந்திக்கிறார்கள். பார்வதியும் கட்டாயப்படுத்துகிறாள். இது குறித்து தயக்கம் இருந்தாலும், இருப்பதிலும் சற்று சந்தோஷம் கூடுகிறது அவருக்கு. பிறகு லட்சுமணன், பார்வதி, உயரதிகாரி சேர்ந்து கோவிலுக்கு செல்லும்போது லட்சுமணன் பூ வாங்கிவரச் செல்லும்போது இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். கதையில் அவளது கரிசனம் சொல்லப்படுகிறது. பிறகு ஊருக்கு கிளம்ப தயாராகையில், மாமியார் அடுப்படியில் வேலை என்று உள்ளே செல்கிறாள்; கணவன் லட்சுமணன் ரயிலுக்கு போக வண்டி அழைத்துவர போக, உங்களோடு பேசவேண்டும் என்று அறையில் நாற்காலி போட்டு உட்காரச் சொல்கிறாள் பார்வதி. இந்த நெருக்கத்தை எதிர்பார்க்காத உயரதிகாரி அவள் இப்படி நடந்து கொள்வது சரியல்ல. அதுவும் நண்பன் மனைவி, இனி நான் இங்கு வரமாட்டேன் என்றெல்லாம் அறிவுரை சொல்கிறான்.
அப்போது பார்வதி ‘பேசி முடிச்சாச்சா?” என்று கேட்டுவிட்டு, உங்களோடு தனியாக பேச வந்த காரணம், என் அம்மா சொல்வது போல நாங்கள் ஒன்றும் வருத்தத்தில் இல்லை. கஷ்டப்படவில்லை. சந்தோஷமாகவே இருக்கிறோம். அவள் சொல்வது போல பெண் பார்த்துவிட்டு சென்ற பின் நடக்காததால் வருத்தமோ, லட்சுமணனை திருமணம் செய்து கொண்டதில் குறையோ கிடையாது. வேறு விதமாக நினைக்க வேண்டாம். சந்தோஷமாகவே இருக்கிறோம் என்பதை சொல்லவே, அனைவரின் முன்பு விளக்க முடியாது என்பதாலேயே அழைத்தேன். ‘அதற்குள் என்னமாய் விபரீதப் பேச்சு. இது புருஷாள் வழக்கம்தானே. சற்றுமுன் நீங்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றுங்கள். மீண்டும் இந்த வீட்டுக்கு வந்துவிடாதீர்கள் என்று சொல்கிறாள்.
வண்டி வந்துவிட, மீனாட்சி அம்மாள் மறுமுறை வரும்போது அவர் தன் மனைவியுடன் வந்து இவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று சொல்லும்போது ‘ஆமாம். தவறாமல் மனைவியுடன் வரவேண்டும்’ என்று பார்வதியும் சொல்கிறாள். குழப்பமும், அதிர்ச்சியுமாக விருந்தாளியாக வந்த அதிகாரி கிளம்பிப் போகிறார்.
இக்கதையில் பார்வதி அதுவரை அவரை பார்த்தது பேசியது எல்லாமே முன்பே அறிமுகமானவர் என்ற எண்ணத்தில்தான். ‘இது புருஷாள் வழக்கம்தானே’ என்ற ஒரு சொல் ஒரு இதிகாச காலத்தையே மின்னல் பொழுதில் காட்டி மறைகிறது. இந்த பார்வதி சீதை அல்ல. இக்கதையை முதலில் படிக்கும்போது, சொல்லப்பட்ட விதத்தால் உயரதிகாரியின் பார்வையில் வெளிபடுவதும், இரண்டாவது முறை படிக்கும்போது கதையின் முடிவு தெரிந்திருப்பதால், பார்வதியின் பார்வையின் பரிமாணத்தை பார்க்கமுடியும்படியாகவும் விளங்குகிறது. சொல்லும் முறையில் சாதுரியமாக எழுதப்பட்ட கதையாக இதைப் பார்க்கலாம்.
~o0o~
மாசறு கற்பினாள் சிறுகதை புதுமைப்பித்தன் மற்றும் ராஜாஜியின் இராமாயண அகலிகை குறித்த பார்வைகளை வேறொரு விதத்தில் ஆராய்கிறது. சிட்டியின் கதையில் கௌதம முனிவர் அகலிகை மனதிடத்துடன், உணர்சிகளை தடைபோட்டு வைத்திருப்பது குறித்த குற்ற உணர்வு கொண்டவராக இருக்கிறார். அறிவினால் உணர்ச்சியை தடைபோட்டு அவளது வாழ்வினிமையை வறட்சியுறச் செய்வதாக சொல்ல, தனது சம்மதத்தின் பேரில் அவருடைய தவத்துக்கு பணிவிடை செய்வதை பாக்கியமாக கருதுவதால் அதில் குற்றமில்லை என்கிறாள் அகல்யா. பிறகு இந்திரன் வருவதும், கௌதமர் இந்திரன் வரவை அறிவதும் குறிப்பாக சொல்லப்படுகிறது. ஒரு கல்லைப்போன்ற இயந்திரம் போல உயிர்வாழ்கிறாள். அப்போது இரு காவியச் சிறுவர்கள் வரும்போது அவள் மேல் வசந்தம் பொழியும் உணர்வு ஏற்பட, அந்த ஒளியில் தன்னை உணர்ந்து, கௌதமருக்கும் உண்மை உணர்வு உறைக்க, அகலிகையை கௌதமர் ஏற்கவேண்டும் என்று ராஜகுமாரன் சொல்ல, அகலிகையும் கௌதமரும் அருகருகே நிற்கிறார்கள். அப்போது கௌதமர், ஞானப் பாதையை தேடும் நம்மைப் போன்ற முனிவர்களுக்கு ஏன் இவ்வித சோதனை என்று விஸ்வாமித்ரரிடம் கேட்கும்போது, அது பிரபஞ்ச விதி. இதற்கு அந்த ராஜகுமாரனுக்கும் இந்த விதி பொருந்தும் என்று முடியும் கதை, சீதையின் மீது விழும் சந்தேகத்துக்கு பதில் சொல்லும் ராமனின் எதிர்கால சஞ்சலத்தின் குறிப்புடன் முடிகிறது. புதுமைப்பித்தனிடம் கௌதமரும், அகலிகையும், இந்திரனும், சீதையும் இருக்க, சிட்டியிடம் அது ராமனுடைய குறிப்பைக் கொண்டுவந்து, அவனை முழுதும் மானுடனாக வரிக்கிறது.
~o0o~
சௌந்தரியமே சத்தியம் கதை நல்ல கதைக் களனைக் கொண்டிருந்தாலும், பின்பாதியில் கதையின் ‘அருமை’யிலிருந்து விலகிச்சென்று, வழக்கமான ஃபார்முலா கதையின் பாதையில் சென்று முடிகிறாது. வேறுவிதமாக சொல்வதானால், கதை அதிகம் வளராமல் நின்று, அல்லது வேறுவிதமாக திரும்பியிருந்தால் அருமையான கதையாகி இருக்கும்.
குமார் கோட்டோவியத்தில் நிபுணன். மிகக்குறைந்த கோடுகளில் தத்ரூப உருவத்தை அடைந்துவிடுபவன். அவன் நண்பன் சந்தானம் தூரிகை ஓவியத்தில் நிபுணன். நிலக்காட்சிகளில் நிபுணன். இருவரும் இணைந்து ஓவியங்கள் வரைவதும் உண்டு. யாரென்றே தெரியாத ஒரு அழகான பெண்ணின் ஓவியத்தை வரைந்த குமாரின் கோட்டோவியத்தை வர்ணங்கள் தீட்டி, கண்காட்சியில் வைத்து விருது பெறுகிறான் சந்தானம். குமார் மனதார பாராட்டுகிறான். உனது அடிப்படையான கோட்டினால்தான் இது சாத்தியம் என்று நன்றியுணர்கிறான் சந்தானம்.
ஒருநாள் இரண்டு பெண்கள் அடையாறு அருகே சந்தானம் ஒவியம் வரைவதைப் பார்த்து, பாராட்டி, பரிச்சயமாகையில் அதில் இளைய பெண்ணை வரைந்துதான் அவன் விருது பெற்றது தெரிகிறது. தான் அவனது ஓவியத்தின் மாடலாக இருந்திருப்பதை அறிந்து நாணமுறும் அவளிடம், ஓவியம் பற்றி பேசி, அது காதலாகி திருமணத்தில் முடிகிறது. ஆனால் ஒரு விஷயம், தன் நண்பன் குமாரும் ஓவியன் என்றெல்லாம் பேசும் அவன், அந்த அடிப்படைக் கோட்டுருவை வரைந்தது தன் நண்பன் குமார்தான் என்பதைச் சொல்வதில்லை. திருமணம் பற்றி அறியும் குமார் அவர்களை வாழ்த்தினாலும், அதுவரையில் இருந்திராத ஒரு ஏமாற்ற உணர்வு குமாரிடம் எழுகிறது. திருமணத்துக்கு வராமல் அவன் டெல்லி சென்று விடுகிறான். இரு கலைஞர்களுக்கு இடையே இருந்த ஒத்துழைப்பு விரிசலுறுகிறது. தனது கோட்டுருவம்தான் அடிப்படையான திறமை என்று குமாரும், வர்ண விசேஷத்தால்தான் அது கவன ஈர்ப்பைப் பெற்று விருதுக்குரியதான் மதிப்பை பெற்றது என சந்தானமும், முன்னைக்கு மாறாக கருதுகிறார்கள்.
ஓவியம் என்பதின் கோடு, வண்ணம் என்ற இரு பரிமாணங்களும், அந்தந்த சிறப்பியல்புகள் கொண்டவர்கள் அதை உணர்ந்து ஏற்றலும், அதனால் உண்டான பெண் மேல் காதல், கல்யாணம் என்று வரும்போது அவர்கள் வேறு விதமாக யோசிப்பதும் செறிவான கதையம்சம். இந்தப் பகுதியில் உயர்ந்து செல்லாமல், கதை லௌகீகமான இடத்துக்கு திரும்பி விடுகிறது.
சந்தானத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து பத்திரிகைகளுக்கு படம் வரைகிறான். பிரபலமாகிறான். குழந்தை பிறக்கிறது. பாட்னா செல்கிறான். பம்பாய் சென்ற குமார் பெரிய ஓவியனாகிறான். வெளிநாட்டு வாய்ப்பு, விருதுகள் கிடைக்கின்றன. ஒருநாள் கலைப் பத்திரிகையில் தன்னைப் பற்றி கட்டுரை வந்திருப்பதை மனைவி கல்பகத்திடம் காட்டி, குமார் இதைப் பார்த்திருக்க வாய்ப்பில்லையே என்று சொல்ல, அவள் நிச்சயம் பார்த்திருப்பார், ஏனென்றால் குமார் பற்றியும் வெகுவாகப் புகழ்ந்து அதில் கட்டுரை வந்திருப்பதைக் காட்டுகிறாள். அவன் அதிருஷ்டசாலி என்று சந்தானம் சொல்ல, உங்களுக்கென்ன குறைச்சல். நீங்களும் வரையுங்கள் என்று அவள் சொல்கிறாள். குமார் போலவே கோட்டுச்சித்திரம் வரைய முயன்று அதில் தரத்தை எட்ட முடியாமல் போகிறது. தனது குழந்தையை கோட்டு உருவம் வரைய முயன்று அது கேலியாகி அவள் சிரிக்கிறாள். ஏமாற்றமும், இயலாமையும் மோத, பேச்சு எப்படியெல்லாமோ வளர்ந்து, முதலில் அவளை வரைந்தது குமார்தான் என்று வாய்தவறி சொல்லிவிடுகிறான். அப்போது அவள் ஏமாற்றத்தில் அதிர்ந்து கண்ணீர் சிந்துகிறாள். ஒரு பெண்ணின் ஏமாற்றமடையும் மனம் மிக இயல்பானது. அழுத்தமானது. ஆனால் முக்கியமான இந்த இடத்தில், கதை அதைப் பற்றி விரிக்காமல் நகர்ந்து போய்விடுகிறது.
சௌந்தர்யம்தான் கலைக்கு சத்தியம். நீ அழகாய் இருந்தாய் நான் வரைந்தேன் என்ற கணவனிடம், அந்த ஓவியத்துக்கு அடிப்படை குமார் அல்லவா என்று கேட்கிறாள். அடிப்படையான ஓவியனாக இருந்தும், இன்று தனிமையில் இருக்கும் குமார் பற்றிய பரிதாபம் அவளுக்குள் எழுகிறது.
அவர்களிடையே இப்படி வாய்த்தகராறு நடக்கும்போது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு வீடு விழுகிறது. குழந்தையை மீட்க ஓடும் அவர்கள் வீட்டுச் சிதிலத்தில் மாட்டிக்கொண்டு விடுகிறார்கள். பாட்னா பூகம்பம் பற்றி செய்தியில் அறியும் குமார், விசாரிக்கும்போது இறந்தவர்கள் பட்டியலில் இவர்கள் இருப்பதை அறிந்து பெரும் துக்கமடைகிறான். குழந்தையை காப்பாற்ற ஓடும் சந்தானம், கல்பகம் இருவரையும் ஓவியமாக வரைய அது பெரும் தொகைக்கு விற்கப்படுகிறது.
வெளிநாடு செல்லும் வாய்ப்புகளை உதறிவிட்டு, விற்ற அந்த ஓவியத்தை மீட்டுக்கொண்டு பாட்னாவுக்கு திரும்புகிறான் குமார். ஓவியனும் சக நண்பனுமான சந்தானம், தனது ஓவியத்தின் மாடலாக இருந்து நண்பனின் மனைவியான கல்பகம், அவர்கள் குழந்தை அனைவரையும் இழந்த சோகத்தில் இருக்கும் அவனிடம் செவிலி, ஒரு குழந்தையைக் கொண்டுவந்து தருகிறாள். இடிபாடுகளில் தப்பிய அக்குழந்தை சந்தானம்-கல்பகம் தம்பதியின் குழந்தை.
ஓவியத்தின் கலைப் பரிமாணத்தில் பரஸ்பர மரியாதை கொண்டவர்கள், அவர்கள் ஓவியத்தின் மாடலாக எதேச்சையாக அமைந்துவிட்ட கல்பகம் அவர்களுடைய வாழ்க்கைக்குள் வரும்போது, கலை மனங்கள் திசை மாறுவதும், மனம் கலங்குவதும், களங்கமுறுவதுமாக மாறுகிறது. மேலும், கலைத்தன்மைக்காக மனத்தையும், வாழ்க்கையையும் இணைத்துக்கொண்ட பெண், அந்த நம்பிக்கையில் பிழை இருந்துவிட்டதை உணரும்போது, அத்தனையும் அர்த்தமற்றுப் போகும் தன்மையை, மனத்தின் போராட்டத்தை, அழுத்தத்தை தேவையான அளவுக்கு கதை உணர்த்தியிருக்கவில்லை. இது போக, தாங்கள் அறியாமல் தங்கள் மாடலாக இருந்த பெண்ணை தங்கள் உரிமையாக கருதும் இரு ஆண்களின் மனதையும் பற்றி சுட்டிக்காட்டக் கிடைத்த இடத்தையும், கதை கண்டுகொள்ளவில்லை.
காத்திரமான கதைக் களனைக் கொண்டிருந்தும், வழக்கமான சிறுகதைப் பாணியில் நாடகீய பாணியில் சரிந்துவிட்ட, மிகச் சிறந்த கதையாகி இருக்கவேண்டிய சிறுகதை இது என்ற ஆதங்கம் எழத்தான் செய்கிறது.
இவற்றைத் தவிர நிசாசர கணம் என்ற பேய்க்கதையை ஒத்த ஒரு கதையும்; எறும்பு பேசுவதான சின்னச்சின்ன எறும்பே என்ற கதையும்; பந்து விளையாட்டு தோழியான பெண்ணை, வளர்ந்தபின் அவனது தோழனும், அவளுடைய முறைப்பையனுமானவன் திருமணம் செய்து கொள்ள முடியாமல் ஜாதகம் குறுக்கே நிற்க, தன்னுடைய ஜாதகத்தைத் தேடி அவர்கள் வர, அவளுக்கு அக்கனவு இருந்தாலும், ஜாதக காரணம் தனக்கும் குறுக்கே வந்துவிடக்கூடாது என்று ஜாதகம் தரவேண்டாம் என அவன் அம்மாவிடம் சொல்வதும், அதை அவனுடைய அம்மா புரிந்து கொள்வதுமான ரப்பர் பந்து கதையும்; குடும்ப சிக்கலால் பிறந்த வீட்டுக்கு செல்லும் மனைவியை கணவன் தன் வீட்டுக்கு அழைப்பதில் கௌரவப் பிரச்சனை வர, எதிர்வீட்டுச் சிறுமி கடிதம் எழுதி அந்த மனைவியை வரவழைப்பதுமான பெண்மையின் பரிவு என்ற கதையும்; நோயுற்ற மனைவி பிள்ளைப்பேறுக்கு வாய்ப்பில்லை என்ற நிலையில், உதவிக்கு வரும் தங்கையை சந்தேகப்படுவதும், பிறகு அவளது அப்பாவித்தனத்தை அறிந்துகொள்வதும், கருவுற்றால் மரணம் என்ற நிலையில் தான் கருவுற்றிருப்பதாக பொய் சொல்வதும், ஆனால் பரிசோதித்த டாக்டர் உடம்புக்கு ஒன்றுமில்லை, மரணபயம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, உடனிருக்கும் நர்ஸிடம் கர்பத்தால் மரணமில்லை. பிரசவத்தின்போது ஆபரேஷன் செய்யவேண்டும் என்றாலும் இப்போதைக்கு என்ன இருக்கிறது. உயிரைப் பற்றி உரிமை கொள்ள நாம் யார் என்று சொல்லும் மரண தண்டனை உட்பட மேலும் சில கதைகள் உள்ளன.
பழைய கதைகள் என்று பாராமுகமாக செல்லாமல், சிலவற்றைப் படிக்கும்போது அதையொட்டி வாசக மனம் சில எண்ணங்களை எழுப்புவதும் நல்ல அனுபவமாகவும் இருக்கிறது.
Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
