30+ ஆண்டுகள் நடந்த இலங்கை உள்நாட்டுப் போரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட, புலம் பெயர்ந்த தமிழ் அகதிகளின் பயணங்களைப் பற்றி , போதிய அளவு சொல்லப்படவில்லை. அகதி அந்தஸ்தைப் பெறுவதற்காக, உலகத்தின் பல்வேறு நாடுகளை நோக்கி அவர்கள் செய்த பயணம், அதன் அபாயங்கள், அலைச்சல்கள், துயரங்கள், அவர்கள் பட்ட அடிகள், அவமானங்கள் , மரணங்களைப் பற்றிய வரலாறு விரிவாகச் சொல்லப்படவில்லை. இவ்வரலாற்றை, வயதடைவு புனைவாக முத்துலிங்கம் தனக்கே உரிய செறிவான மொழிநடை, நகைச்சுவை, சிக்கனம் ஆனால் அடர்ந்த, சுருக்கமான யதார்த்தச் சித்தரிப்பின் வாயிலாக வாசகனை வசப்படுத்துகிறார். அதில் நாயகனின் பயணம், சிறகு விரித்துச்செல்லும் ஒர் பறவையின் பயணமன்று, கடலில் மிதந்து செல்லும் சிறு இலையின் பயணம்.
“உங்கள் நாட்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என 1992-ல் இலங்கையை விட்டு நிஷாந் தொடங்கும் பயணத்தில், அவன் அகதியாகச் சென்றடைய வேண்டிய நாடு அவ்வளவு எளிதாக வருவதில்லை. இலங்கையில் இருந்தால் இயக்கத்தில் இணைந்து விடுவான் எனப் பயந்து, அவன் அம்மா தன் காணியை விற்று ஏஜண்ட்டுக்குப் பணம் கொடுத்து அனுப்புகிறார்கள். மாஸ்கோ, உக்கிரெய்ன், பெலாரஸ் ,லிதுவேனியா , போலந்து, ஜெர்மனி என எந்த நாடு வழியாகச் செல்வது என்ற பாதையை மாறி-மாறி வரும் ஏஜண்ட்டுகள் நிர்ணயிக்கிறார்கள். நிஷாந் கராச்சி வழியாக மாஸ்கோ செல்கிறான், அங்கிருந்து உக்கிரெய்ன் எனப் பயணிக்கிறான். வங்கிக் கொள்ளை அடித்தவன், பள்ளி மாணவியைப் பலாத்காரம் செய்தவன் எனப் பலவிதமான சக அகதிகளுடன் தங்குகிறான், மோசமான, வசதி குறைந்த, நெருக்கமான தங்கும் இடங்களே அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. ஆனாலும், லாடா ஜிகுலி கார்கள், சமகோன் என்ற உக்கிரெய்னின் வீட்டிலே தயாரித்த வொட்கா, கரடி பியர் எனப் பல சுவாரஸ்யங்களுடன் அவன் பயணம் தொடர்கிறது.

சக அகதிகளின் அனுபவங்களால் ஒவ்வொரு கட்டத்திலும் உருவாகிறான். பள்ளி ஆசிரியரான மாஸ்ரரிடம், “நாம் சாவுலகத்துக்குப் பயணப்படவில்லை, இன்னொரு நாட்டுக்குப் பயணப்படுகிறோம், அவ்வளவுதான். பதற்றப்படுவதால், ஆத்திரப்படுவதால் ஒன்றுமே ஆகாது. அமைதியாக இருக்கப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்’’ எனக் கற்றுக் கொள்கிறான். நிஷாந், சந்திரா மாமியுடன், உக்கிரெய்னில் எல்லையைக் கடந்து செல்லும் போது, திரும்பிவிடுவது என்று தன்னிச்சையாக முடிவெடுக்கிறான். இரவின் கரும் இருட்டில், வழி அறியாமல் சுற்றுகிறார்கள். சந்திரா மாமி பறவைகளைப் பற்றி அறிந்து இருந்ததால், அவை எழுப்பும் ஒலிகள் கேட்டு வழி காட்டுகிறாள். ஒரு விதத்தில், அவன் எடுத்த முடிவினாலேயே மாமிக்கு, தொடை அடிபட்டு அழுகி, வலியால் துயருறும் நிலை ஏற்படுகிறது. மாமியை நன்றாகக் கவனித்துக்கொள்கிறான். மனித உயிர் பற்றியும், தன் நிலையின் ஆபத்தினையும், நேரடியாக அறிகிறான். வலசை முடிந்து திரும்பும் லூன் நீர்ப்பறவையின் குரல் கேட்டு உயிர் பிரியும் சந்திரா மாமியின் மரணத் தருணம் – கவித்துவமாக அமைகிறது. வலசை பறவைகள் கடவுச்சீட்டுகளும், பாஸ்போர்ட்டுகளும் இன்றி நாடுகளைத் தாண்டிப் பறக்கின்றன. அகதிகளுக்கு அன்றாடம் ஏதேனும் ஒரு நாடு அடைக்கலம் கொடுக்குமா எனக் காத்திருத்தலில், உயிர் விடவும் நேர்கிறது. இப்பெருவாழ்வில், அரை நொடிக்குள் எடுக்கும் முடிவுகளால் ஏற்படும் விளைவுகளின் பொறுப்பின் சுமை ஒருமனிதனுக்கு உண்டா? எனும் கேள்வி வாசகனுக்கு எழுகிறது.
மாறி மாறி விற்கப்பட்டபோதுதான் அகதிகள், ஏஜண்ட்டுகளுக்கு வெறும் சரக்கு என்பது அவனுக்குப் புரிகிறது. ஏஜண்ட்டுகள் மேலும் பணம் கேட்கிறார்கள். ரமேஷ் என்ற பெயரில் புதிய பாஸ்போர்ட் ஒன்றை தயாரித்து ஏஜண்ட் அவனை போலந்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார். கிளம்பும் நேரம் இன்னொரு அகதி ரமேஷ் இவனுக்குப் பதிலாகச் சென்றுவிடுகிறான். வேறொரு அகதிக்கு ஒழுக்கம் கற்பிக்கப்போன சண்டையில், நிஷாந்தை ஏஜண்ட் வீட்டுக்கு வெளியே அனுப்பிவிடுகிறான். நிஷாந் விரும்பிய காதலி, ரயிலில் அதிகாரிகள் இவனைப் பிடிக்கும்போது காணாதது போல் சென்று விடுகிறாள். ஏமாற்றங்களும், அவமானங்களும் பெற்று, விரக்தியில் தற்கொலை செய்ய முற்படுகிறான், நாடில்லாதவன் காதலிக்கலாம், உயிரோடு இருக்கக்கூடாதா என்று ஒரு ரஷ்யர் தேற்றி, மது வாங்கி கொடுக்கிறார். காட்சிகளை அருகருகே, உடனுக்குடன் வைத்து உருவாக்கும் ‘மாண்டாஜ்’ போல, வாக்கியங்களை அமைத்து அ.முத்துலிங்கம் மேலும் ஆழமாகவும், கூராகவும் உணர்வுகளை வாசகனுக்குக் கடத்துகிறார். வாக்கியங்களின் மாண்டாஜ் போல அகதிகளின் வாழ்க்கையை விவரிக்கும் அத்தியாயங்களிலும் அந்த அமைப்பை உணர முடிகிறது. ஒருவரின் அனுபவத்திலிருந்து மற்றொருவருக்குச் செல்லும்போது தொடர்ச்சிக்காக என எவையும் சேர்க்கப்படவில்லை, அத்யாவஸ்யமானவை மட்டுமே. அவை வேகமாக இழுத்துச் செல்லும் ஒரு காட்சி அனுபவத்தை, சிதறடிக்கும் ஓட்டமல்ல, எழுத்தின் வழியே ஒரு மாண்டாஜ் காட்சியைக் கட்டமைக்கும் யுக்தியாக அமைகிறது. அது அகதிகளின் ஓட்டத்தையும் சித்தரிப்பது, கதைசொல்லியின் மேதைமை என்றே கொள்ளலாம்.
அகதி அந்தஸ்தைப் பெறுவது வரை, அதிகாரப்பூர்வமாக வேலைச் செய்ய முடியாததால், அவர்கள் செய்ய நேரும் பலவகையான வேலைகளைப் பற்றி நாவல் விவரிக்கிறது. துருக்கியில் 1980களில் கார்கள் இறக்குமதி இல்லாததால், சுவிட்சர்லாந்துக்கு விமானத்தில் போய் காரை வாங்கி, ஓட்டிக்கொண்டு வந்து துருக்கியில் கள்ளச் சந்தையில் கார்களளை விற்கும் மாஃபியா கும்பலிடம் கொடுப்பவர். காப்பீட்டுத் தொகைக்காக, அழிக்கப்படும் கப்பலில் மாட்டிக்கொண்டவர். போதைப் பொருள் கடத்தும் கும்பலால் தான் சிறை செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டு (எனப் பின்னர் அறிந்த) சிறைத் தண்டனை அனுபவித்தவர் – எனப் பலரின் அனுபவங்களை நிஷாந் அறிகிறான். பெரும்பாலும் சூழலாலும், அதன் தீவிரத்தையும் அறியாமலேயே சிக்கிக்கொள்கிறார்கள்.
நிஷாந்தே பின்னர் கனடா அடைந்தவுடன், கடன் அட்டை மோசடியில் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது. அகதிகளின் பலவீனமான கையறு நிலையே, முடிவற்ற வட்டத்திற்குள் அவர்களை நிர்ப்பந்திக்கிறது. ஆனால் அதிலும் நேர்மையைத் தேர்ந்தெடுக்கலாம் என, நில அளவையாளராக இலங்கையிலிருந்து, பின் குழந்தைப் பிள்ளைபோல பாரிஸில் இருந்த கனகலிங்கத்தை மீண்டும் சந்திக்கும் பொழுது உணர்கிறான். “நில அளவையாளராக கனடாவில் வேலை செய்யப் பரீட்சை எழுத வேண்டும், அதனால் நாதஸ்வரம் வாசிக்கப் போகிறேன். என்ன கஷ்டம்? ஒருபக்கம் காற்றை ஊதினால் மறு பக்கம் வரப்போகிறது, கோவிலில் வாசித்தால் யாரும் தவறு சொல்ல முடியாது, என்ற கனகலிங்கம், 1000 வேலை இருக்கிறது நேர்மையாகப் பார்ப்பதற்கு, தங்கைக்குக் கல்வீடு கட்டிக்கொடுக்க முடியவில்லை, வாடகை வீட்டில் தங்கியிருக்கிறார்கள் “ஆனால் மழை வீட்டுக்கு வெளியே பெய்கிறது”, என்கிறார். அத்தருணம் நிஷாந்தை திருப்பிப் போடுகிறது.
நிஷாந் அணியும் கோட் கூட ஓர் இணைப்பயணம் செய்கிறது. அவன் இலங்கையிலிருந்து புறப்படும்பொழுது உக்ரைனிலோ, போலந்திலோ, உள்ள குளிரைப்பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது. உள்ளூர் சந்தையிலிருந்து ஒரு கோட் வாங்குகிறான், அவன் மாமாவின் நாய் அவனை அதில் அடையாளம் காணமுடியாமல் விமான நிலையத்திற்குக் கிளம்பும் பொழுது, அவனைக் கடித்துவிடுகிறது. அவன் அம்மா அதைச் சகுனக்குறைவாக நினைத்துக் கவலைப்படுகிறார். பின் மூன்று முறை போலந்து எல்லையில் கடக்க முற்பட்டுப் பிடிபட்டு விடுகிறான். குளிர் தாங்கக் கோட்டிற்குள் செய்தித்தாள்களை அடைத்து வைத்திருக்கிறான், அவனைச் சோதனை செய்யும் அதிகாரிகள் எள்ளி நகையாடுகிறார்கள். பின் கனடா குளிரில், மூன்று கோட்டுகள் அணிந்து உருண்டபடி, உணவகத்துக்கு வரும் ஆச்சியையும் நிஷாந் கவனிக்கத் தவறுவதில்லை. உடலைக் குளிரிலிருந்து பாதுகாக்கும் ஒரு கோட், அது நிஷாந் அடையும் மாற்றங்களின் குறியீடாக, முதலில் அதன் முக்கியம் அவனுக்குத் தெரியவில்லை, பின் அதை அறியும்போது நகையாடப்படுகிறான். கனடாவில் கனகலிங்கத்தை காணும்பொழுது, மிக நேர்த்தியான கோட்டும், ஸ்கார்பும் அணிந்து, “உன் பேச்சைக் கேட்டு இன்று நான் நன்றாக இருக்கிறேன்” என்னும் பொழுது, மாற்றம் தன்னிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பதுபோல்.
சிறகு அல்லது செட்டை, நாவல் முழுக்க ஒரு தொடர் படிமமாக, வடிவம் மாறும் பிம்பமாக வருகிறது. வலசை பறவைகள் பருவகாலத்தில் எந்த ஆவணமுமின்றி எல்லைகளைக் கடக்கின்றன, ஆள் மாற்றம் செய்து, நித்தம் பயத்துடன், பணம் செலவழித்து, சிறை சென்று, காத்திருந்து அகதிகளின் பயணத்தை ஆசிரியர் நேர் நிறுத்துகிறார். இங்கே யார் பரிணாம வளர்ச்சியடைந்த உயிரினம் எனத்தோன்றும் தருணம்.
பயணத்திற்கு எப்போதும் தயாராய், சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கு மாஸ்ரர் “டைனோசர்களுடன் வாழ்ந்த, நான்கு சிறகுகள் கொண்ட மைக்ரோராப்டர் வலிமையானது. அது இரண்டு சிறகுகள் கொண்ட பறவைகளை வேட்டையாடி உண்ணும். உயிர் வாழ்வதற்கு இரண்டு சிறகுப் பறவைகள் அதி வேகமாகப் பறக்கத் தொடங்க, மைக்ரோராப்டரால் அவற்றைப் பிடிக்க முடியவில்லை. பட்டினி கிடந்து அழிந்து போயின. முந்தியது பிந்தியது என்று இல்லை; திறமையும் மதியூகமும் தேவை” எனச்சொல்கிறார்.
தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் தொலைக்கும் சபாவின் அனுபவம், தலைகீழ் உருவகம். “எறும்புக்குச் செட்டை முளைத்ததும் சுதந்திரம் கிடைத்துவிட்டதென்று எம்பிப் பறக்கும். அதுதான் சாவு என்பது அதற்குத் தெரியாது.”
ஒரு நல்ல வாழ்க்கை அமையும்போது கீழிறங்க நினைக்கக் கூடாது, “செட்டை கிடைத்த புழு மறுபடியும் ஊர்வதுண்டா?” நேர்மைதான் தேவை எனக்கூறும் கனகலிங்கம்.
இந்த நான்கு பிம்பங்கள் வழியாக, ஆசிரியர் சிறகுகளுக்கும் விடுதலைக்குமான ஒரு பின்னலைக் கதை ஓட்டத்தில் சேர்க்கிறார். சிறகுகள் எப்போதும் சுதந்திரம் அல்ல, ஒவ்வொருவருக்கும் விடுதலை தருணம் அவர்களுக்கேற்ப அமைகிறது.
இதே பின்னலில், நினைவின் சிறகும் ஓர் இடம் பெறுகிறது. ‘‘தீங்குளவோ?’’ என முகமன் கூறும் வள்ளியம்மை ஆச்சி, தன்னிடம் இருக்கும் ஒரே செல்வம் நினைவுகள்தான், அவையும் மறந்துபோய் விடுகின்றன என வருத்தப்படுபவள். தேவாரம், திருவாசகம், கந்தசஷ்டி கவசம் என எல்லாம் நினைவில் உள்ளது, ஆனால் தன் பெயரை நினைவில் வைக்கவில்லை. ஒரு மணிநேரம் மட்டும் அம்மாவாக இருந்த அவர், அவர் அகதியாகப் பயணம் செய்யும் பொழுது கணவரையும் இழந்தவர், ஆனாலும் தீங்குளவோ? என ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடனும், உழைப்பாலும் துவங்கும் ஆச்சியாக நெஞ்சில் நிறைகிறார்.
அறியப்படாத அனுபவங்களுடன் நிஷாந், அகதியாக ஒரு நாட்டில் தஞ்சம் புக, தன் பயணத்தைத் தொடங்குகிறான். நாவலின் முதல் அடுக்காக, காதல் , மரணம், துயரம், துரோகம், பயம் எனப்பல அனுபவங்களையும், முடிவில் கனடாவையும் அடைகிறான். அவன் அனுபவங்கள் வழியே, அகதி வர்த்தகம், ஏஜண்ட்டுகள், கடத்தல் – மாஃபியா கும்பல்களின் இருள் உலகம் என, ஒரு ஒட்டுமொத்த அகதிகளின் பயணம் குறித்த அடுத்த தளம் திறக்கிறது. அது மேலே நகைச்சுவையும், கூர்மையும், கனமமும் கொண்டு, செறிவுற்று, அகதியின் பார்வையில் – அவன் தங்கிய நாட்டின் மக்கள், நிலப்பரப்பு என விரிகிறது. அதன் வழியே, மனிதனின் அடிப்படைக் கேள்விகளான இப்பெரும் வாழ்வில், மனிதன் கண்டடைவது என்ன, பொருள் என்ன, என நாயகன் உணர்ந்து, தன் புது வாழ்க்கையை, தேலொன் பள்ளத்தாக்கில் துவங்குவதாக முடியும் செறிவான நாவல்.
Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
