தெய்வங்களைக் கொல்லுதல் எனும் புனித சடங்கு

“அவருடைய கைகளில் ஆணிகளினால் உண்டான காயத்தை நான் பார்த்து, அந்தக் காயத்திலே என் விரலைவிட்டு, என் கையை அவருடைய விலாவிலே வைத்துப்பார்க்காமல் விசுவாசிக்கமாட்டேன்.”
— யோவான் 20:25

        1.      அலெக்ஸாண்டிரியா , கிபி 391

தீ என்பது ஒரு மொழி. அது எழுத்துக்கு முந்தியது, சொல்லுக்கு முந்தியது.

அன்று அலெக்சாந்திரியா அந்த மொழியில் பேசிக்கொண்டிருந்தது. செராப்பிஸ் கோவிலிலிருந்து மஞ்சள் நிறப் புகை எழுந்தது. பழைய கற்களில் தேங்கிய நூற்றாண்டுகளின் தூசி காற்றில் கரைவது போல இருந்தது. நகரம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தது. யாரும் அழவில்லை. யாரும் சிரிக்கவுமில்லை. ஒரு பழைய கடவுள் இறக்கும்போது மனிதர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாது. அவர்கள் வாழ்நாளில் கடவுள்கள் இறந்ததை பார்த்ததில்லை. இனி பார்ப்பார்கள் என்றும் நினைத்ததுமில்லை.

செராப்பிஸ் எகிப்திய ஓசிரிஸின் அமைதியும் கிரேக்க ஜீயஸின் கம்பீரமும் ஒன்று சேர்ந்த கலப்பினம். இரண்டு உலகங்களின் குழந்தை. இப்போது இரண்டு உலகங்களும் அவனை வேண்டாம் என்று சொல்கின்றன.

சிப்பாய் கோடாரியை வீசினான். முதல் அடி தாடையில் விழுந்தது. கல் பொடியாகி வெண்மையான தூசியாக கீழே விழுந்தது. இரண்டாவது அடி முழங்காலில். மூன்றாவது வயிற்றில். உடைந்த சிலைக்குள்ளிருந்து எலிகள் திரண்டோடின. கடவுளின் உடலை வீடாகக் கொண்டிருந்த சிறு உயிரினங்கள் திடீரென்று வீடிழந்தன. கும்பலில் சிலர் பின்வாங்கினார்கள். சிலர் சிரித்தார்கள். சிலர் அழுதார்கள். கடவுளுக்காக அல்ல. தங்கள் இளமைக்கால நினைவுகள் கைவிட்டு போவதால் அவர்கள் அழுதார்கள்.

தாமஸ் அந்தப் பெருங்கூட்டத்தில் இல்லை.

அவன் தொலைவில், பழைய நூலகத்தின் இடிபாடுகளுக்கருகில், ஒரு ரகசிய அறையில் இருந்தான். அங்கே யாரும் எரிக்கத் துணியாத சுவடிகள் இருந்தன. கேள்விகளால் நிறைந்த சுவடிகள். புதிய மதங்கள் எப்போதும் கேள்விகளை அஞ்சுகின்றன. இன்னும் உலராத சுண்ணாம்பில் விரலை வைத்தால் சுவர் உடைந்து விடும்.

சுவடிகளில் ஒன்றை விரித்தான். ஒரு வரி மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

“நம்பிக்கை என்பது சந்தேகத்திற்கு முந்தைய மௌனம்.”

தாமஸ் புதிய சுவடியை எடுத்தான். கை நடுங்கியது. எழுதுவது ஆபத்தானது என்று தெரியும். ஆனால் எழுதாவிட்டால் அந்த வரிகள் உள்ளத்தில் நின்று எரியும் என்றும் தெரியும். இரண்டு விதமான தீ. இதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும்.

அவன் எழுதினான்.

“தாமஸ் என்று ஒருவன் காயத்தைத் தொட விரும்பினான். அவன் குற்றவாளி அல்ல. அவன் மனித இனத்தின் முதல் அறிவியலாளன். தொட்டுப் பார். புலன்களால் உறுதி செய்த பிறகு நம்பு.”

சிறிது நேரம் நின்றான்.

பின்னர் மீண்டும் எழுதினான்.

“சந்தேகமே ஆன்மாவின் மூச்சு. நிச்சயம் என்பது சிறை.”

“ஒரு கடவுள் இறக்கும்போது, அவனுடைய கடைசிச் சொல் ஒரு கேள்வியாக மட்டுமே இருக்கும்.”

வெளியே கடைசி கல் விழுந்த சத்தம் கேட்டது. நகரம் நிசப்தத்தில் மூழ்கியது. அது வெற்றியின் அமைதி அல்ல. இழப்பின் அமைதி. ஏதோ ஒன்று இறந்துவிட்டது என்று நகரத்தின் ஆன்மா தெரிந்துகொண்டது. ஆனால் அது என்ன என்று சொல்ல முடியவில்லை.

தாமஸ் சுவடியை மண் பாத்திரத்தில் வைத்தான். அதை ஆழத்தில் புதைத்தான். சாளரத்தைத் திறந்தான்.

காற்றில் மஞ்சள் நிறப் புகையும் நைலின் மண்வாசனையும் கலந்திருந்தன. நதி இருளில் ஓடிக்கொண்டிருந்தது. புகை கரைந்தது. நதி கரையவில்லை.

அவன் அறையை விட்டு வெளியேறினான். திரும்பிப் பார்க்கவில்லை.

        2.      கெய்ரோ, கிபி 642

மொழி என்பது வீடு.

ஆனால் வீட்டை யாரோ இடிக்கிறார்கள் என்றால் மொழி என்பது வீடல்ல. அது பயணம். நிலையற்ற, முடிவற்ற, எல்லையற்ற பயணம்.

தாமஸ் மூன்று மொழிகளில் வாழ்ந்தான். எந்த மொழியிலும் முழுமையாக தங்கவில்லை. காப்டிக் அவனது தாய்மொழி, ஆனால் புதைந்துவரும் மொழி. கிரேக்கம் கல்வியின் மொழி, ஓடிப்போன மொழி. அரபி வெற்றியாளர்களின் மொழி, எதிர்காலத்தின் மொழி. இடையில் தாமஸ் ஒரு நிழல், ஒரு பாலம், ஒரு மொழிபெயர்ப்பு.

அல்-முஅல்லக்கா தேவாலயம் பழைய கோட்டை சுவரின் மேல் கட்டப்பட்டிருந்தது. கீழே நூறடி ஆழம். பூமியிலும் இல்லை, வானத்திலும் இல்லை, இடையில் தொங்கியது. தாமஸும் அப்படித்தான்.

அன்று காலை அவன் மேசையில் ஒரு சுவடி இருந்தது. அலெக்சாந்திரியாவிலிருந்து வந்திருந்தது. கருகிய விளிம்புகள். மண்ணில் நீண்ட காலம் புதைந்திருந்ததன் அடையாளங்கள்.

தாமஸ் அதைத் தொட்டான். பாபிரஸின் தொடுதல் காய்ந்து சுருண்டு தன்னைக் காத்துக்கொள்ள முயற்சிக்கும் தோலைத் தொட்டது போல இருந்தது.

அவன் படித்தான்.

“சந்தேகமே ஆன்மாவின் மூச்சு. நிச்சயம் என்பது சிறை.”

நெடுநேரம் அமர்ந்திருந்தான். அந்த வரிகள் அவன் உள்ளத்தில் இருந்தவை. ஆனால் ஒருபோதும் எழுதாதவை. ஒருபோதும் சொல்லாதவை. இருண்ட இரவுகளில் மட்டும் மனதில் ஓடியவை.

யாரோ ஒருவன் இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு, வேறொரு நகரத்தில் இருந்து, அவன் மனதில் இருந்ததை எழுதிவிட்டான்.

ஒரே காயம். வெவ்வேறு உடல்கள்.

மொழிபெயர்க்க வேண்டும். அதுவே அவன் வேலை.

“சந்தேகம்” என்ற சொல்லை அரபியில் எழுத வேண்டும். நேரடி மொழிபெயர்ப்பு எளிது.

ஆனால் தாமஸ் எழுதவில்லை.

புதிய மொழியில் சந்தேகம் என்பது பாவம். சந்தேகிப்பவன் குற்றவாளி. ஆனால் மௌனமாக இருப்பவன் இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறான்.

அவன் “சந்தேகம்” என்பதற்கு பதிலாக “மௌனம்” என்று எழுதினான்.

ஒரு சொல். ஒரு மாற்றீடு. ஒரு கவசம்.

சந்தேகத்தைக் கொல்லவில்லை. அதை மறைத்தான். மறைத்து உயிரோடு வைத்தான்.

அன்று மாலை தேவாலயத்தின் மேல் மாடியில் நின்றான். கெய்ரோ கீழே கிடந்தது. புதிதாகப் பெயர் பெறும் நகரம். பழைய பெயர்கள் மறக்கப்படும். புதிய பெயர்கள் வரும். மண் , அதே மண்.

நைல் தங்க நிறத்தில் மின்னியது. சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் நதி தங்கமாக மாறும். பாரோக்களும் பார்த்தது. அலெக்சாண்டரும் பார்த்தது. இப்போது அரபு வீரர்களும் பார்க்கிறார்கள். யாரும் அந்தத் தங்கத்தைச் சொந்தம் கொண்டாட முடியவில்லை.

தாமஸ் சுவடியைச் சுவரின் பிளவில் மறைத்தான். இரு கற்களுக்கு இடையில் சேறு பூசி மூடினான்.

கீழே நதி ஓடியது. மேலே பேரரசுகள் பெயரை மாற்றிக்கொண்டிருந்தன.

        3.      கெய்ரோ, 2026

கெய்ரோவில் மழை பெய்த அந்த இரவு, தாமஸ் தேசிய டிஜிட்டல் ஆவணகத்தின் அடித்தள அறையில் இரவுப் பணியில் இருந்தான்.

கான்கிரீட் சுவர்கள். உருகிய கம்பிகள். திரையின் குளிர் வெளிச்சம் மட்டும்.

மூன்று வருடங்களாக இறந்த மொழிகளின் குரல்களைக் கேட்டுக்கொண்டிருந்தான். கிரேக்கம். காப்டிக். பழைய அரபி. சில இரவுகளில் கனவுகளும் அந்த மொழிகளில் வந்தன. அவன் புரிந்துகொள்ள முயன்றான். முடியவில்லை. கேள்விகள் மட்டும் மனதில் தங்கி இருந்தன.

மேற்குப் பாலைவனத்திலிருந்து நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புதிய கோப்பு வந்திருந்தது.

திரையில் கருகிய எழுத்துகள் மெதுவாக உருவாயின.

கடவுள்.
சந்தேகம்.
நைல்.

திரை உறைந்தது.

சுட்டி சுழன்றது.

சுழன்றது.

சுழன்றது.

பின்னர் ஒரே பெயர் மூன்று முறை தோன்றியது.

தாமஸ். தாமஸ். தாமஸ்.

விசைப்பலகை திகைத்து நின்றது.

புதிய வரி தோன்றியது.

“ஒரு கடவுள் இறப்பதற்கு முன், அவன் தன்னுடைய நகரத்தை விட்டு வெளியேறுகிறான்.”

தாமஸ் பின்னால் சாய்ந்தான். மூன்று நாட்களாகச் சரியாகத் தூங்கவில்லை. AI hallucination என்று நினைத்தான்.

ஆனால் அந்த வரி எங்கிருந்து வந்தது?

திரையில் பெரிதாகப் பார்த்தான். கருகிய பாபிரஸின் மேல் ஒரு மங்கிய நீர்க்கறை. திரை அதை ஒரு படமாக மாற்றியிருந்தது.

நைல்.

பழைய நைல்.

மூன்றாம் நூற்றாண்டின் வரைபடம்.

அதே நேரத்தில் தரையிலிருந்து ஓசை கேட்டது.

நீர் ஓடும் ஓசை.

இருபது அடி கீழே பழைய நைலின் ஒரு கிளை இன்னும் ஓடிக்கொண்டிருந்தது. நகரம் அதன் மேல் கட்டப்பட்டது. ஆனால் நதி மறக்கவில்லை.

தாமஸ் தரையில் காதை வைத்தான்.

ஈரம்.

உண்மையான ஈரம்.

கைகள் நடுங்கின. அவன் கோட்டை போட்டுக்கொண்டு வெளியேறினான்.

மழை நகரத்தை ஒரு மெல்லிய படலமாக மூடியிருந்தது.

ஒரே சுவரில் ஏழாம் நூற்றாண்டின் கல் இருந்தது. அதன் மேல் பதினோராம் நூற்றாண்டின் சுண்ணாம்பு. அதன் மேல் புதிய விளம்பரத்தின் நீல வண்ணம் இன்னும் ஈரமாக இருந்தது.

ஒரு மினாரா. ஒரு சிலுவை. ஒரு யூத ஜெபக்கூடம்.

மூன்றும் ஒரே சந்தில். மூன்றும் ஒரே மழையில் நனைந்தன.

அல்-முஅல்லக்கா இன்னும் நின்றுகொண்டிருந்தது.

உள்ளே இருள்.

சுவர்களில் பழைய ஓவியங்கள்.

கூரையில் கிறிஸ்து.

அவன் பார்வை மட்டும் இன்னும் அங்கே இருந்தது.

மூலையில் ஒரு கல் பெட்டி இருந்தது.

தாமஸ் அதைத் திறந்தான்.

ஒரு சுவடி.

எரிந்த விளிம்புகள். கிரேக்கம் ஒரு பக்கம். அரபி இன்னொரு பக்கம். காப்டிக் மூன்றாவது பக்கம்.

மூன்று மொழிகள். மூன்று கைகளின் எழுத்துகள். மூன்று நேரங்கள்.

ஒரே வாக்கியம்.

“ஒரு கடவுள் இறப்பதற்கு முன், அவன் தன்னுடைய நகரத்தை விட்டு வெளியேறுகிறான்.”

தாமஸ் நெடுநேரம் நின்றான்.

கிரேக்கம் அவனுக்குத் தெரியும். அரபியும் தெரியும். காப்டிக் அவன் படிக்காத மொழி. ஆனால் அந்த வார்த்தைகள் அவனுக்குப் புரிந்தன.

ஒருவேளை சில வார்த்தைகளுக்கு மொழி தேவையில்லை.

அவன் சுவடியை எடுத்தான்.

நைல் கரைக்கு நடந்தான்.

மழை மெதுவாகப் பெய்தது. ஒரு தூறல். ஒரு யோசனை போல.

சுவடியின் மேல் மழைத்துளிகள் விழுந்தன.

கிரேக்கம் கரையத் தொடங்கியது.

அரபி கரைந்தது.

காப்டிக் கரைந்தது.

கருப்பு மை மெதுவாக நீரின் நிறமாக மாறியது.

அவன் சுவடியை நதியில் விட்டான்.

அது மிதந்து சென்றது.

நதி அதை அமைதியாக வாங்கிக்கொண்டது.

தாமஸ் கைகளைப் பார்த்தான்.

விரல்களில் கருப்பு மை மட்டும் இருந்தது.

        4.      நதியின் கரையில்

விடியற்காலை. மழை நின்றிருந்தது.

தொழுகை அழைப்பு ஒரு திசையிலிருந்து எழுந்தது. பின்னர் எல்லா திசைகளிலிருந்தும் பரவியது. தொலைவில் தேவாலய மணிகள் ஒலித்தன. இரண்டு ஒலிகளும் ஒரே காற்றில் கலந்தன. ஒன்று மற்றதை விழுங்கவில்லை. ஒன்று மற்றதை நிறுத்தவில்லை. இரண்டும் வெவ்வேறு திரிகளிலிருந்து எழுந்த ஒரே இருளின் வெளிச்சம் போல நகரத்தின் மேல் தங்கின.

தாமஸ் நைல் கரையில் உட்கார்ந்திருந்தான். கையில் ஒன்றும் இல்லை.

ஒரு மீனவன் படகில் வந்தான். இங்கிருக்கும் மீனவர்கள் காலையில் வருவார்கள். வரலாறு எத்தனை முறை மாறினாலும், மீனவர்கள் காலையில் வருவார்கள்.

“ஏன் இங்கே தனியாக?” என்று கேட்டான்.

தாமஸ் நதியைப் பார்த்துக்கொண்டே சொன்னான்:

“நான் எந்தக் கடவுளும் இல்லாத ஒரு இடத்தைத் தேடுகிறேன்.”

மீனவன் சிரித்தான்.  இந்தக் கேள்வி மனிதர்களைவிட பழமையானது என்று தெரிந்த சிரிப்பு.

“நதிக்குக் கடவுள் தேவையில்லை மகனே,” என்றான். “நதிக்குக் கரை மட்டும் போதும்.”

படகு மெதுவாக நகர்ந்தது. சில நிமிடங்களில் அது காலையின் மங்கலுக்குள் கரைந்தது.

அன்று மாலை மேலதிகாரி தொலைபேசியில் அழைத்தார்.

“புதிய கோப்பு வந்திருக்கு.”

“வேறொருவருக்குக் கொடுங்கள்.”

“ஆனால்—”

“நான் வேலையை விடுகிறேன்.”

நீண்ட அமைதி.

“ஏன்?”

தாமஸ் பதில் சொல்லவில்லை.

ஜன்னலுக்கு வெளியே நட்சத்திரங்கள் தெரிந்தன. மழைக்குப் பிறகு காற்று சுத்தமாக இருந்தது. சில நட்சத்திரங்கள் ஏற்கனவே அணைந்திருந்தன. ஒளி மட்டும் இன்னும் பயணித்துக்கொண்டிருந்தது. மூலத்திலிருந்து பிரிந்த ஒளி. யாரோ எழுதி மறந்துவிட்ட ஒரு மொழி இன்னும் உயிரோடு இருப்பது போல.

தாமஸ் படுக்கையில் மெதுவாக படுத்தான். கண்களை மூடினான்.

கனவில் மூன்று நிழல்கள் நைல் கரையில் நின்றன. யாரும் யாரையும் அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை. அவர்கள் ஒரே பெயர் கொண்டவர்கள் என்று மட்டுமல்ல, ஒரே காயம் கொண்டவர்கள் என்றும் அவர்களுக்கு தெரிந்திருந்தது.

முதல் நிழல் கேட்டது:

“நான் கொன்றது என்ன?”

இரண்டாவது நிழல் மெதுவாகச் சொன்னது:

“நிச்சயத்தை. கடவுளை அல்ல. கடவுளைப் பற்றிய மனிதர்களின் இறுக்கமான நம்பிக்கையை.”

சிறிது நேரம் அமைதி இருந்தது. பின்னர் முதல் நிழல் மீண்டும் கேட்டது:

“நீ கொன்றது என்ன?”

இரண்டாவது நிழல் சிரித்தது.

“அடையாளத்தை. பெயர்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த கடவுள் வெளியேறினார்.”

மூன்றாவது நிழல் நீண்ட நேரம் பேசவில்லை. பின்னர் தனது கைகளைப் பார்த்தது.

விரல்களில் கருப்பு மை இருந்தது.

அவன் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

மூன்று நிழல்களும் நதியைப் பார்த்தன.

நதி அவர்களைப் பார்க்கவில்லை.

அது ஓடிக்கொண்டிருந்தது. கனவிலும். கனவுக்கு வெளியிலும். இரண்டிற்கும் இடையிலும்.

தாமஸ் விழித்தான்.

அடர்ந்த இருளில் நகரம் தூங்கிக்கொண்டிருந்தது. எங்கோ ஒரு தெருவில் நாய் குரைத்தது. பின்னர் அமைதி.

அவன் எழுந்து சாளரத்தைத் திறந்தான்.

நைல் இருளில் ஓடிக்கொண்டிருந்தது. காலையில் அது தங்கமாகும். மாலையில் சிவப்பாகும். இரவில் இருளாகும். யார் பார்க்கிறார்களோ அவர்களுக்கு அது அவர்களின் நிறம். ஆனால் நதிக்கு தனது நிறம் தெரியாது. அதற்கு ஓட்டம் மட்டும் தெரியும்.

ஒரு பழைய எகிப்திய கல்வெட்டில் சொல்லப்பட்டது:

“மனிதர்கள் தங்களுடைய கடவுள்களை அடக்கம் செய்த இடங்களை நகரங்கள் என்று அழைத்தனர்.”

தாமஸ் சாளரத்தை மூடினான்.

சடங்கு முடிந்தது.

தெய்வங்கள் இறந்தன.

அவை மீண்டும் மீண்டும் பிறக்கின்றன.

அல்லது பிறக்கவில்லை.

அதைத் தீர்மானிப்பது உங்கள் சந்தேகம்.

நைல் நதி காலத்தின் மறுகரையில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.


Discover more from சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.