அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு – அறிவின் புதிய போராட்டம்

மனித நாகரிகத்தின் மிகப்பெரிய செல்வம் பணமோ, கட்டிடங்களோ, தொழில்நுட்பமோ அல்ல. அது அறிவு மட்டுமே. ஆதிமனிதன் குகைச் சுவர்களில் தனது அனுபவங்களை வரைந்த காலத்திலிருந்து, இன்று கணினி சில்லுகளில் தகவல்களைப் பதிவு செய்யும் காலம் வரை, தான் கற்றதை அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்வது என்று சிந்தித்த மனிதன் உருவாக்கிய சாதனம் தான் புத்தகம்.

ஒரு நல்ல புத்தகம் என்பது வெறும் காகிதமும் மையும் மட்டுமே அல்ல. அதன் பக்கங்களுக்குள் ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவமும், பல ஆண்டுகள் சிந்தித்த ஒரு மனதின் தடமும், ஒரு காலத்தின் குரலும் இருக்கிறது. ஒரு தலைமுறையின் கனவுகள், கேள்விகள், கண்டுபிடிப்புகள், தோல்விகள், வெற்றிகள் அனைத்தும் அதற்குள் மறைந்திருக்கின்றன. அதனால்தான் உலகின் ஒவ்வொரு நாகரிகமும் சமுதாயத்தின் அறிவாக புத்தகங்களை மதித்தது. அந்தப் புத்தகங்களைப் பாதுகாக்கவே நூலகங்கள் உருவானது.

நூலகம் என்பது வெறும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்ட ஒரு கட்டிடம் அல்ல. அது ஒரு சமூகத்தின் நினைவகம். அறிவைத் தேடி வருபவர்களுக்கும் ஒரு தலைமுறை கற்ற பாடங்களை, அனுபவங்களை அடுத்த தலைமுறை மறந்துவிடாமல் பாதுகாக்கும் பொக்கிஷ அறையாக இருப்பதால் தான் உலகின் மிகப் பழமையான நூலகங்கள் இன்றும் மனித நாகரிகத்தின் பெருமையாகப் பேசப்படுகின்றன. இதில் பல நூலகங்கள் போர்களில் எரிந்தும் வெள்ளத்தில் அழிந்தும் காலத்தின் தாக்கத்தாலும் சிதைந்து போகும்போதெல்லாம் அறிவார்ந்த மனிதகுலம் வருந்தியது. ஏனெனில் எரிந்தது புத்தகங்கள் மட்டுமல்ல. மனித நினைவுகளின் ஒரு பகுதியும் கூட.

இவ்வாறு கண்ணும் கருத்துமாகப் பேணி காத்து ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்கள் இப்போது மனிதர்களால் உருவாக்கப்பட்ட புதிய, உயிரற்ற “மாணவனுக்கு” பாடம் சொல்லிக் கொடுக்கின்றன. ஆம். “செயற்கை நுண்ணறிவு”(Artificial Intelligence – AI) தான் அந்த மாணவன்! மனிதர்களைப் போலவே கணினியால் கற்றுக்கொள்ள முடியுமா என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால் யோசித்திருப்போம். இப்பொழுது சாத்தியமாகிவிட்டது!

இன்று நம்மால் ஒரு செயற்கை நுண்ணறிவிடம் கேள்வி கேட்க முடிகிறது. அது கதை, கவிதை, கட்டுரை எழுதுகிறது. கணினி நிரலை உருவாக்குகிறது. மருத்துவ ஆராய்ச்சிக்கு உதவுகிறது. மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறது. சில நேரங்களில் நம்மோடு நண்பனைப் போல உரையாடவும் செய்கிறது.

இவ்வளவு விஷயங்களை அதற்கு யார் கற்றுக்கொடுத்தது?

பிறந்த குழந்தை தன்னைச் சுற்றி நடக்கும் செயல்களிலிருந்தும் மனிதர்களிடமிருந்தும் கல்வியின் மூலமும் அறிவை வளர்த்துக் கொள்கிறது. ஆனால் உலகைப் பார்க்க முடியாத செயற்கை நுண்ணறிவோ மனிதர்கள் எழுதியவற்றிலிருந்து தான் கற்றுக் கொள்கிறது. “சாட்ஜிபிடி (ChatGPT) அல்லது கிளாட் (Claude) புத்தகங்களைப் படிக்கிறதா?” என்றால் இல்லை என்பது தான் பதிலாகும்.

ஒரு மனிதன் ஒரு நாவலைப் படித்தால் கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக் கொள்வான். சம்பவங்களை உணர்வோடு அனுபவிப்பான். ஆனால் செயற்கை நுண்ணறிவு அப்படிப் படிப்பதில்லை. அது புத்தகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான சொற்களைக் கணித ரீதியாக ஆராய்கிறது. எந்தச் சொல் எந்தச் சொல்லுடன் அதிகமாக வருகிறது? ஒரு கேள்விக்குப் பொதுவாக எப்படி பதில் எழுதப்படுகிறது? ஒரு விஞ்ஞானக் கட்டுரை எப்படி அமைக்கப்படுகிறது? ஒரு கவிதையின் மொழிநடை எப்படி இருக்கிறது? ஒரு வரலாற்றுப் புத்தகம் எப்படி தகவல்களை அடுக்குகிறது? இப்படிப் பல கோடிக்கணக்கான தொடர்புகளை அது கண்டுபிடிக்கிறது.

ஒரு விதத்தில் பார்த்தால், மனிதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு கற்றுக்கொள்கிறான். செயற்கை நுண்ணறிவோ, வடிவங்களையும் (patterns) தொடர்புகளையும் கண்டறிந்து கற்றுக்கொள்கிறது. இதற்கு Large Language Model (LLM) என்று பெயர். அதாவது, “மொழியின் அமைப்புகளையும் தொடர்புகளையும் கற்றுக்கொள்ளும் மாபெரும் கணினி மாதிரி.” அதனால் தான் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்க மிகப் பெரிய அளவிலான தரவுகள் தேவைப்படுகின்றன.

ஒரு சிறந்த ‘AI மாதிரி’யின் திறன் அதன் கணினி சக்தியால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அது கற்றுக்கொள்ளும் தரவின் “தரமும்” முக்கியம். ஒரு மாணவன் நல்ல ஆசிரியர்களிடம் கற்றால் அவன் அறிவு சிறப்பாக இருக்கும். அதேபோல் AIக்கும் தரமான மனித அறிவு தேவை. ஆனால் எல்லா தரவுகளும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களில் தவறான செய்திகள், உறுதி செய்யப்படாத தகவல்கள், தரமற்ற எழுத்துக்கள் இருக்கலாம். அதனால் மனிதர்கள் எழுதிய புத்தகங்கள் AI உலகில் முக்கியமானதாக மாறின.

புத்தகங்கள் என்பது ஆசிரியர்களின் பல ஆண்டுக்கால ஆராய்ச்சி, ஒழுங்குபடுத்தப்பட்ட தகவல்கள், பதிப்பாசிரியர்களின் திருத்தம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதனால் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு உயர்தரமான புத்தகங்கள் மிகவும் மதிப்புமிக்க பயிற்சி வளமாக மாறின.

அதற்காகத் தான் ‘Anthropic’ நிறுவனம் உலகம் முழுவதிலும் இருந்து புத்தகங்களை வாங்கியதோடு மட்டுமில்லாமல் பக்கங்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து, ஒவ்வொரு பக்கத்தையும் மின்னணு வடிவமாக மாற்றிய பின்னர் அந்தப் புத்தகங்களைத் தூக்கி எறிந்தது! AIக்கு அறிவை கற்றுக்கொடுக்க, மனித அறிவின் அடையாளமான புத்தகங்களையே நாம் அழிக்கிறோமா? மனிதர்கள் பல ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய புத்தகங்களைச் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தங்கள் மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தலாமா போன்ற அதிர்ச்சிகரமான கேள்விகள் தான் இன்று உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் “ஆன்த்ரோபிக் புத்தக சட்ட விவகார”த்தின் மையம் ஆகும்.

ஆனால் ஆன்த்ரோபிக்கின் பார்வையில், “ அழிக்கப்பட்டது காகிதம். பாதுகாக்கப்பட்டது அதிலிருந்த தகவல். ஒரு மாணவன் ஆயிரம் புத்தகங்களைப் படித்துவிட்டு ஒரு புதிய புத்தகத்தை எழுதுகிறான். அவன் ஒவ்வொரு வரியையும் நகலெடுக்கவில்லை. அவன் கற்றுக்கொண்ட அறிவை புதிய சிந்தனையாக மாற்றுகிறான். செயற்கை நுண்ணறிவும் அதைத்தான் செய்கிறது. அது புத்தகங்களைச் சேமிப்பதில்லை. அவற்றிலிருந்து மொழியையும் கருத்து அமைப்புகளையும் கற்றுக்கொள்கிறது. அதுவும் ஒரு வகையான கற்றல் தான்” என்று வாதிட்டது.

இந்த இரண்டு கருத்துகளுக்கும் இடையேதான் இன்று உலகின் மிகப் பெரிய சட்ட, நெறிமுறை, சமூக விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கான பதிலைத் தேடும் முக்கியமான சட்டப் போராட்டங்களில் ஒன்றுதான் ‘Bartz v. Anthropic’ என்ற வழக்கு. இது ஒரு நிறுவனத்துக்கும் சில எழுத்தாளர்களுக்கும் இடையிலான சாதாரண வழக்கு அல்ல. எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உருவாக்கப்படும்? எழுத்தாளர்களின் உரிமை எவ்வாறு பாதுகாக்கப்படும்? மனித அறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் எவ்வாறு பயன்படுத்தப்படும்? போன்ற மிகப் பெரிய கேள்விகளுக்கான ஒரு முக்கியமான முன்னுதாரணமாக மாறியது.

ஆகஸ்ட் 19, 2024 அன்று, அமெரிக்காவின் கலிபோர்னியா வடக்கு மாவட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தில் மூன்று எழுத்தாளர்கள், ஆண்ட்ரியா பார்ட்ஸ் (Andrea Bartz), சார்லஸ் கிரேபர் (Charles Graeber), கிர்க் வாலஸ் ஜான்சன் (Kirk Wallace Johnson) தங்களுக்காக மட்டுமல்லாமல், தங்களுடைய படைப்புகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கருதிய பல எழுத்தாளர்களின் சார்பாகவும் “Claude” என்ற செயற்கை நுண்ணறிவு உதவியாளரை உருவாக்கிய ஆன்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர்.

எழுத்தாளர்களின் முக்கிய குற்றச்சாட்டு, ஆன்த்ரோபிக் பல லட்சக்கணக்கான பதிப்புரிமை பெற்ற புத்தகங்களை உரிய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி தனது செயற்கை நுண்ணறிவு மாதிரியைப் பயிற்சி செய்துள்ளது. அது மட்டுமில்லாமல், சில காலகட்டங்களில் அனுமதியற்ற இணைய மூலங்களில் இருந்து பெறப்பட்ட மின்னூல்கள் ஒரு பெரிய டிஜிட்டல் தொகுப்பாக சேமிக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்பட்டன. “எங்கள் பல ஆண்டுகால படைப்பாற்றலும் உழைப்பும் எங்களிடம் அனுமதி பெறாமல் ஒரு வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படக் கூடாது.” என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.

இந்த விவாதம் மேலும் தீவிரமானதற்குக் காரணம், உலகம் முழுவதும் சில புத்தக விற்பனையாளர்கள் மிகப்பெரிய அளவிலான புத்தக ஆர்டர்களைப் பெற்றுள்ளனர். “யார் இவ்வளவு புத்தகங்களை வாங்குகிறார்கள்? எதற்காக வாங்குகிறார்கள்? AI நிறுவனங்களுக்காகவா” என்ற கேள்விகள் எழுந்தன. ISBNdb, Zoom Books போன்ற நிறுவனங்களின் பெயர்களும் பேசப்பட்டு உறுதி செய்யப்படவில்லை. AI உலகிற்கு மிகப்பெரிய அளவில் தரமான தரவுகள் தேவைப்படுகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

இருந்தாலும், கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து சட்டப்படி வாங்கி பயன்படுத்திய புத்தகங்களை ஏன் தூக்கி ஏறிய வேண்டும்? அவற்றைப் பாதுகாக்க வேண்டாமா? நூலகங்களில் வைத்து அடுத்த தலைமுறைக்காக காக்க வேண்டாமா? அவற்றை அழிப்பதில் என்ன அர்த்தம்? இது அறிவுக்கு எதிரான செயலா? அல்லது நம்மால் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு புதிய உலகின் தொடக்கமா? என்று பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி வில்லியம் ஆல்சப் (Judge William Alsup), 2025 ஜூன் 23 அன்று, இரண்டு விஷயங்களைத் தனித்தனியாகப் பார்த்து முக்கியமான தீர்ப்பை வழங்கினார்.

1. சட்டப்படி வாங்கப்பட்ட புத்தகங்களை AI பயிற்சிக்குப் பயன்படுத்துவது

“ஒரு நிறுவனம் சட்டப்படி புத்தகங்களை வாங்கி, அவற்றை உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்காகப் பயன்படுத்துவது Fair Use (நியாயமான பயன்பாடு) என்ற அமெரிக்கப் பதிப்புரிமை விதிக்குள் வருவதால் சட்டப்படி பெற்ற புத்தகங்களை AI கற்றலுக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதம் அல்ல” என்று ஆன்த்ரோபிக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. இது செயற்கை நுண்ணறிவு துறைக்குக் கிடைத்த மிக முக்கியமான வெற்றியாகக் கருதப்பட்டது.


2. திருட்டு மூலங்களில் இருந்து பெறப்பட்ட புத்தகங்கள்

அனுமதியற்ற மூலங்களில் இருந்து பெறப்பட்ட புத்தகங்களைச் சேகரித்தது “பதிப்புரிமை மீறல்” என்று இந்த முக்கியமான விஷயத்தில் நீதிமன்றம் எழுத்தாளர்களின் தரப்பை ஏற்றுக்கொண்டது. ஒரு தொழில்நுட்ப நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டாலும், திருட்டுத்தனமாகப் பெறப்பட்ட படைப்புகளுக்குச் சட்டப் பாதுகாப்பு கிடையாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இதனால் இந்த வழக்கில், சட்டப்படி பெறப்பட்ட புத்தகங்களை AI பயிற்சிக்குப் பயன்படுத்தலாம் என்ற முக்கியமான சட்ட ஆதரவு ஆன்த்ரோபிக்குக் கிடைத்த வெற்றியாகவும் அனுமதியற்ற முறையில் பெறப்பட்ட புத்தகங்களைப் பயன்படுத்துவது பதிப்புரிமை மீறல் என்ற அங்கீகாரம் எழுத்தாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்பட்டது. “AI பயிற்சியின் நோக்கம் சட்டபூர்வமாக இருக்கலாம். ஆனால் தரவைப் பெறும் வழியும் சட்டபூர்வமாக இருக்க வேண்டும்” என்பதே இந்த வழக்கின் தீர்ப்பாக அமைந்தது.

பதிப்புரிமை தொடர்பான பிரச்சினைகளை நீண்ட நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துச் செல்லாமல் ஆன்த்ரோபிக் சமரசத் தீர்வை ஏற்றுக்கொண்டது. சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டது. இந்தத் தொகை பதிப்புரிமை வழக்குகளில் உலகின் மிகப்பெரிய சமரசத் தொகைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது.

‘ஆன்த்ரோபிக் வழக்கு’ ஒரு நிறுவனத்தின் பிரச்சினை மட்டும் அல்ல. “மனித அறிவை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் செயற்கை நுண்ணறிவின் பலனில், அந்த அறிவை உருவாக்கிய மனிதர்களின் பங்கு என்ன” என்ற முக்கியமான கேள்வியையும் முன்வைத்தது.

AI, மனித அறிவின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அந்த வளர்ச்சி நியாயமானதாக இருக்க வேண்டுமானால், எழுத்தாளர்களின் உழைப்பு மதிக்கப்பட வேண்டும். அறிவின் மூலங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனித உரிமைக்கும் சமநிலை தேவை என்பதை இந்த வழக்கின் மூலம் உணர்த்தியுள்ளது.

ஒவ்வொரு தொழில்நுட்பப் புரட்சியும் ஒரு புதிய வாய்ப்பை மட்டுமல்ல, ஒரு புதிய பொறுப்பையும் மனிதகுலத்தின் தோள்களில் சுமத்துகிறது. தற்பொழுது செயற்கை நுண்ணறிவின் பார்வையில் புத்தகங்கள் வெறும் தரவுகளா என்ற ஆழமான கேள்வியையும் எழுப்பியுள்ளது.

ஒவ்வொரு புரட்சியும் பயத்தையும் நம்பிக்கையையும் ஒன்றாகக் கொண்டு வருகிறது. எனவே, “செயற்கை நுண்ணறிவு நல்லதா, கெட்டதா?” என்பது அல்ல. அதை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டியது மனிதர்கள்தான். 

அறிவுக்கு வழிகாட்டியாக இருப்பது அறம். எதைச் செய்ய முடியும் என்று அறிவு சொல்லும். எதைச் செய்ய வேண்டும் என்று அறம் சொல்லும். அது சட்டத்தின் பொறுப்பு. அரசுகளின், தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறுப்பு. அதைவிட முக்கியமாக, அறத்துடன் செயல்படவேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புத்தகங்கள் மனிதர்களின் ஆசிரியர்களாக, நம் முன்னோர்களின் குரல்களாக, நம் தவறுகளை நினைவூட்டி, வெற்றிகளைப் பதிவு செய்து, கனவுகளுக்கு இறக்கைகள் கொடுத்தன. இன்று, அதே புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு என்னும் புதிய மாணவனுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இந்த மாற்றத்தை நாம் பயத்தோடு பார்க்க வேண்டியதில்லை. கண்மூடித்தனமான உற்சாகத்தோடும் பார்க்கக் கூடாது. மாறாக, பொறுப்புணர்வுடன், சமநிலையுடன், தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும்.

ஏனெனில், புத்தகங்கள் காகிதத்தால் மதிப்புப் பெறவில்லை. அவற்றை எழுதிய மனிதர்களின் சிந்தனையால் மதிப்புப் பெற்றன.

அதேபோல, செயற்கை நுண்ணறிவு அதன் கணக்கிடும் திறனால் மட்டுமே உயர்ந்ததாக மாறாது. மனித அறிவையும், மனித மதிப்புகளையும், மனிதநேயத்தையும் மதிப்பதில் தான் அதன் உண்மையான மதிப்பு தீர்மானிக்கப்படும்.


Discover more from சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.