எனக்குத் தெரிந்த இந்திரா பார்த்தசாரதி

ஒரே தெருவில் மூன்று ஜாம்பவான் எழுத்தாளர்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் : கஸ்தூரி ரங்கன் (கணையாழி), சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி. அம்புஜம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை.  மாதாமாதம் இலக்கியச் சங்கம் கூட்டம் வேறு அங்கு நடக்கும். 

மாதம் ஒருமுறை இலக்கியச் சங்கம் கூட்டத்திற்குக் கட்டாயம் போவேன். அதேபோல் கணையாழியில் வரும் கவிதைகள் தேர்ந்தெடுக்கும் கூட்டத்திற்கும் போவேன்.  டூ வீலரில் சென்னையில் எங்குக் கூட்டம் நடந்தாலும் சுற்று சுற்றுவேன்.

ஆழ்வார்பேட்டையில் முதலில் இந்திரா பார்த்தசாரதியைப் பார்ப்பேன். பின் சுஜாதாவைப் பார்ப்பேன்.  கடைசியில் கஸ்தூரி ரங்கனைப் பார்ப்பேன். 

ஒருமுறை தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் என் குறுநாவலைத் தேர்ந்தெடுத்து அதைச் சுருக்க முடியுமா என்று கேட்டபோது அவர் அலுவலகம் (ஆழ்வார்பேட்டையில்) சென்று சுருக்கினேன்.

3 பேர்களில் எனக்கு அதிகம் இணக்கமானவர் இந்திரா பார்த்தசாரதிதான்.  சுஜாதாவைப் பார்க்கப் போனால் ரொம்ப நேரம் பேச முடியாது. கஸ்தூரி ரங்கனையோ பார்க்கவே முடியாது.

இந்திரா பார்த்தசாரதியைப் பார்க்கும்போது நான் பெரும்பாலும் அவருடைய நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் படித்து விட்டேன். சுஜாதா எழுத்துக்களை அதை விட குறைவாகத்தான் படித்திருக்கிறேன்.

இ.பா அசோகமித்திரனின் நெருங்கிய நண்பர்.  அசோகமித்திரனைப் பார்க்கும்போது இபாவைப் பற்றி  அவர் குறிப்பிடுவார். அதேபோல் இபாவும் அசோகமித்திரனைப் பற்றி எதாவது சொல்வார்.

அசோகமித்திரனை விட பிரபலமானவர் இந்திரா பார்த்தசாரதி.  பலர் அவரை அறிந்திருக்கிறார்கள்.  ஒரு போதும் இதற்காக இ.பா கர்வப்பட்டதில்லை.  இ.பா எவ்வளவு பெரிய எழுத்தாளர். பொது வெளியிலும், தீவிரத் தன்மையுடன் எழுதும் ஆற்றல் படைத்தவர்.  

அவரைப் பார்க்கும்போது பல தகவல்களை என்னிடம் கூறுவார்.  பொதுவான விஷயம்தான்.  எழுத்தைப் பற்றியெல்லாம் அல்ல.  அவருடைய பேசிய சில சம்பவங்களை இங்குத் தொகுத்தளிக்கிறேன்.  ஒரு பொழுதும் என்னுடைய எழுத்து எப்படி இருக்கிறது என்று கேட்க மாட்டார்.  பெரிய எழுத்தாளர்களின் அழகு அப்படித்தான்.

அவருக்கு மூன்று  இலக்கியத்தில் ஈடுபட்ட மாணவர்கள், சம்பத், ஆதவன், அம்பை. இவர்களைப் பற்றியெல்லாம் என்னிடம் கூறியிருக்கிறார். அவருடைய மூன்று மாணவர்களான சம்பத் ஒருமுறை அவரிடம் அவர் நாவலை கையெழுத்துப் பிரதியாக இ.பாவிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.  இ.பா படித்துவிட்டு நாவல் சரியா வரவில்லை என்று சம்பத்திடமே கொடுத்து விட்டார்.  

உடனே இ.பா வீட்டு சமையல் அறையில் அந்த நாவல் எரிக்கிற சப்தம் கேட்டது.  சம்பத் அவர் நாவலை எரித்துக் கொண்டிருந்தார்.  இ.பா திகைத்து விட்டார்.  சம்பத் பற்றி பேசும்போது என்னிடம் இதைச் சொல்லாமல் இருக்க மாட்டார்.

கசடதபற என்ற சிற்றேடு வந்து கொண்டிருந்தபோது, வெங்கட் சாமிநாதன் மூலம் ஒரு இலக்கியச் சண்டை வந்தது.. அந்தச் சமயத்தில் இந்திரா பார்த்தசாரதியின் திரைகளுக்கு அப்பால் என்ற தொடர்கதை தினமணிகதிரில் வந்து கொண்டிருந்தது.   சாவி ஆசிரியர்.  அந்தக் கதை தொடராமல் நிறுத்தப்பட்டது.  அந்த நாவலின் சப்ஜெக்ட் அப்படி.  இதைக் கண்டு வெகுண்டெழுந்தார் வெங்கட் சாமிநாதன்.  அவர் கசடதபறாவில் இதைப் பற்றி எழுதி தினமணி கதிரின் திமிர்த்தனத்தைத் திட்டி எழுதினார். இந்தக் கட்டுரையைக் கசடதபற பிரசுரம் செய்திருக்கக் கூடாது.  இப்படி ஒரு வம்பை கசடதபற ஆரம்பத்தித்தால் ஜெயகாந்தனின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தது.  பிரயோசனமில்லாத இந்த இலக்கியச் சண்டை இறுதியில் அசோகமித்தரனுக்கும் வெங்கட் சாமிநாதனுக்கும் உள்ள சண்டையாக மாறிவிட்டது. மேலும் பத்திரிகைத் தொடர்ந்து வராமல் நின்று விட்டது.  ஆனால் இந்திரா பார்த்தசாரதி இவை எதிலும் தலையிடவில்லை.  

அழ வேண்டாம் வாயை மூடிக் கொண்டால் போதும் என்ற அசோகமித்திரனின் தேவை இல்லாத கட்டுரை கசடதபறாவில் பிரசுரமானது,  பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டது.   இந்திரா பார்த்தசாரதி சமர்த்தர்.   அவர் ஒன்றும் சொல்ல வில்லை.

என்னுடைய அங்கிள் என்ற கதையை 1998ஆம் ஆண்டு கதா விருதுக்கு இந்திரா பார்த்தசாரதி  தேர்ந்தெடுத்தார்.   இது மறக்க முடியாத அனுபவம். முதன் முறையாக தில்லி சென்று பரிசு வாங்கினேன்.  இந்திரா பார்த்தசாரதி எந்த வித இலக்கிய வம்பு தும்புக்கும் போகாமல் பல சாதனைகள் நிகழ்த்தி உள்ளார்.  அவைக் குறித்தும் பார்ப்போம்.

இயற்பெயர் பார்த்தசாரதி. மனைவி பெயரான இந்திராவை சேர்த்துக்கொண்டு இந்திரா பார்த்தசாரதி என்ற பெயரில் எழுதினார். ஜூலை 10, 1930-ல் சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. தி.ஜானகிராமன் இவருக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இலக்கிய பங்களிப்பு

சிறுகதைகள்

இந்திரா பார்த்தசாரதி தனது 15-ஆவது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை அது. முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்’. 1964-ல் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.

நாவல்கள்

இந்திரா பார்த்தசாரதியின் முதல் நாவல் ‘காலவெள்ளம்’ 1968-ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புகளைக் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடையே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். இந்திரா பார்த்தசாரதி டெல்லியில் குடியேறிய பின் அங்குள்ள அரசியல் சூழலை பகடியாக சித்தரித்து எழுதிய சுதந்திர பூமி, தந்திர பூமி ஆகிய நாவல்கள் அவருக்கு புகழ்தேடித் தந்தவை.

இந்திரா பார்த்தசாரதியின் சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா.வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவும் படைப்பு.

கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பண்புகளை வெறும் புறவய காரணியான பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை; பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நாவல் விவாதித்தது.

நாடகங்கள்

நாடகங்கள் மேல் தமிழ் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது அந்த படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இ.பா.வின் முதல் நாடகம் ‘மழை’. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார். போர்வை போர்த்திய உடல்கள் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் முதன்மையானது. இது இருத்தலியல் பார்வையை முன்வைக்கும் நாடகம். அவசரநிலைக் காலத்துப் பின்னணியில் வெளிவந்தமையால் இந்நாடகம் பெரிதும் விவாதிக்கப்பட்டது.

டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இந்திரா பார்த்தசாரதியின் பெரும்பாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதை விட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஒளரங்கசீப் மற்றும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் புகழ்பெற்றவை.

டில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராக பொறுப்பேற்று அங்கே நாடகத்துறை ஒன்று உருவாகக் காரணமாக இருந்தார்.

இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருது வழங்கப்பட்டது

விருதுகள்

சாகித்ய அகாடமி விருது ( குருதிப்புனல் நாவல் )

சரஸ்வதி சம்மான் விருது (ராமானுஜர் நாடகம்)

சங்கீத் நாடக அகாடமி விருது

பாரதிய பாஷா பரிஷத்

பத்மஸ்ரீ விருது (2010)

தி இந்து லிட் ஃபார் லைஃப் – வாழ்நாள் சாதனையாளர் விருது 2018

சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப் 2021


அழகிய சிங்கர்

எழுத்தாளர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர் மற்றும் பதிப்பாளர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ‘நவீன விருட்சம்’ என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி வருகிறார். இலக்கியம் தொடர்பான பல கூட்டங்களையும் விருட்சம் சார்பில் தொடர்ந்து நடத்தி வருகிறார். விருட்சம் சார்பில் நூல்களையும் வெளியிடுகிறார். இவருடைய சிறுகதைகள், குறுநாவல்கள், கவிதைகள் பல தொகுப்புகளாக வெளியாகியிருக்கின்றன. ‘அங்கிள்’ சிறுகதைக்காக் கதா விருதையும், யுகாந்தர் என்ற மொழி பெயர்ப்பு நூலுக்காகத் திருப்பூர் தமிழ் சங்க விருதையும் பெற்றவர்.


Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.