
பெரியவர்கள் முன்னால் வேட்டியை மடித்துக் கட்டக் கூடாது என்பது போல் தமிழ் இலக்கிய உலகில் எழுபதுகள் எண்பதுகளில் ஓர் அறிவிக்கப்படாத ஆசாரம் இருந்தது. அது, இலக்கியவாதிகள் அரசியல் பின்னணியில் புனைவுகளை எழுதக் கூடாது என்பது. எழுதினால் அது படைப்பிலக்கியமாக மதிக்கப்படாது என்று ஓர் நிலை நிலவிவந்தது. காரணம், பாரதி அரசியல் பின்னணியில் ஆறில் ஒரு பங்கு, ஸ்வர்ணகுமாரி என நாவல்கள் எழுதியிருந்தாலும், கல்கி அலைஓசை எழுதியிருந்தாலும் அவை காதல் கலக்கப்பட்ட காக்டெயில்கள். மற்றொன்று பாரதி கல்கியெல்லாம் வெகுஜன எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் அல்ல என்ற மேட்டிமைத்தனம். புதுமைப்பித்தன் ஹிட்லர், முசோலினி பற்றியெல்லாம் கட்டுரை எழுதினார், நாவல் எழுதினாரா? மெளனி எழுதினாரா? லாசரா எழுதினாரா? அதுதான் அளவுகோல். காந்தியுகக் கதைகள் எழுதிய செல்லப்பா கூட ஜல்லிக்கட்டைத்தானே குறுநாவலுக்கு பொருளாக எடுத்துக் கொண்டார்?அரசியலில் உழன்று கொண்டிருந்த ஜெயகாந்தன் கூட எழுதவில்லை. நம்பிக்கை வறட்சி, நிறைவேறாத மனோரதங்கள், செளந்தர்ய உபாசனை, வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற வாழ்க்கையின் அவசங்கள், இவையன்றி வேறெதையும் இலக்கியவாதி எழுதலாமோ? அபச்சாரம், அபச்சாரம்!
இந்த ஆசாரத்தை உடைத்தவர் இந்திரா பார்த்தசாரதி. காதல் கலக்காமல் நம்முடைய அரசியல் கலாசாரத்தைப் பற்றி உரையாடும் (discourse) ‘சுதந்திர பூமி’யை எழுபதுகளின் தொடக்கத்தில் (1972 அல்லது 1973 என்று ஞாபகம்) அவர் எழுதினார். அப்போது அட்லாஸ் உலக உருண்டையை தோள் மாற்றிக் கொள்ளும் போது ஏற்படுகிற பிரளயத்தைப் போல, இந்திய அரசின் சுமை நேருவிடமிருந்து இந்திராவின் தோளுக்கு மாறியதில் அரசியல் கலாசாரம் ஒரு கொந்தளிப்பை எதிர்கொண்டது. சுருக்கமாகச் சொன்னால் இந்திராவின் பிடியில் இந்தியா இருந்தது.
அறிவுஜீவிகளின் அவைகளில் சோஷலிசம் என்ற சொல் காயத்ரி மந்திரம் போல் புனிதத்தோடும் சமயச் சடங்கு போலவும் ஒலிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்திராவை எதிர்ப்பவர்கள் எல்லோரும் தேசவிரோதிகளாக – இன்றைய பாஷையில் சொன்னால் Anti National- கருதப்பட்டார்கள்.
நான் அன்றைய நாள்களில் கல்லூரிக் குட்டிச் சுவர்களில் அமர்ந்து வகுப்பறை நண்பர்களோடு இந்திராவின் அரசியலை விமர்சிக்கும் ஒரு ‘தேசவிரோதி’யாக காமராஜர் பக்கம் நின்றிருந்தேன். அப்போது ஓகோ என்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த செம்மீனின் தாக்கத்தில் என் நண்பர்கள் என்னை ‘கொச்சு முதலாளி’ என ஏசிக் கொண்டிருந்தார்கள்.
அந்த மனநிலையில்தான், கல்லூரியை விட்டு வெளிவந்த பின்பு, இ.பா.வின் சுதந்திர பூமியைப் படித்தேன். அதுதான் நான் படித்த அவரது முதல் நாவல். அவருக்கும் அதுதான் முதல் நாவல் என்று நினைக்கிறேன். அன்றைய மனநிலையில் அது உன்னதமான நாவல் என்று தோன்றியது.
இன்று அதை நான் உன்னதங்களின் பட்டியலில் வைக்கவில்லை என்றாலும்கூட அது ஒரு காலத்தின் ஆவணப்படம் என்பதால் அது எனக்கு இன்றும் ஒரு முக்கியமான நாவல்தான். ஒரு முன்னோடி முயற்சி. இன்றும் சுத்த இலக்கிய ஆசாரங்கள், மடித்துக் கட்டிய வேட்டியிலிருந்து அரை டவுசருக்கு மாறிவிட்டாலும், இருக்கத்தான் செய்கின்றன. நம் சமகால சமூகத்தில் காதலை விட, குடும்ப உறவுகளை விட, முறிந்த கனவுகளை விட, நம் அரசியல் அமைப்பின் தாக்கங்கள் வலிமையானவை, பேசப்பட வேண்டியவை, என்ற நம்பிக்கையில் அரசியல் புதினங்கள் எழுதும் எனக்கு இ.பா. ஒரு முன்னத்தி ஏர்.
வேலை தேடி தில்லிக்கு வந்த இளைஞன் முகுந்தன் பேராசிரியர் மிஸ்ரா என்ற சாதுர்யம் மிக்க பிரம்மச்சாரி அரசியல்வாதியிடம் சமையல்காரனாகச் சேர்ந்து பின் ‘எல்லாவுமாக’ ஆகி நீர்வழிப் படும் புணை போல அரசியல் நீரோட்டத்தில் மிதந்து தன் சாதுர்யத்தால் மத்தியில் அமைச்சராக ஆகி, இறுதிவரியில் தமிழகத்திற்குத் திரும்புவதுதான் கதை. இதில் சரளா என்ற ஓர் ஜரிகை இழையும் உண்டு.
பேராசிரியர் இ.பா.வின் மாணவர்கள் யார் யார் எங்கிருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்ற விவரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் இ.பா யாருடைய மாணவர் என்பதை இந்த நாவல் நமக்கு உணர்த்துகிறது. இ.பா. மார்க்ஸ், ஃபிராய்ட் இருவரின் மாணவர். (அவருக்குள் ஓர் ஓரத்தில் எலியா கசானும் ஆழ்வர்களும் கூட இருக்கிறார்கள்) குருதிப்புனல் கூட இதை நிரூபிக்கும். பேனாவைத் திறந்து மூடுவது ஃபுட்பாலில் கோல் போடுவது என மனிதர்களின் எல்லாச் செயல்களின் பின்னால் இணை விழைச்சின் தேடல், பாலியல் நாட்டம் இருக்கிறது எனக் கருதுகிற ஃபிராய்டைப் போல இ.பா.வும் அரசியல் செயல்பாடுகளுக்குப் பின் ஊக்கம் பெறவோ, இளைப்பாறவோ தனிமனிதர்களின் செக்ஸ் உந்துதல் இருக்கிறது என நம்புகிறார் என நாவல் வழி புரிந்து கொள்ள முடிகிறது.
நாவல் நெடுக சோஷலிசம் -அதாவது அன்றைய இந்திராவின் சோஷலிசம்- எள்ளலுடன் பேசப்படுகிறது. சோஷலிசம் என்ற கோட்பாடு அரசியலில் வாக்கு வங்கிக்காக உச்சரிக்கப்படுகிறது என்ற மார்க்ஸிய கோபத்தின் வெளிப்பாடு அந்த எள்ளல். உலகமெங்கும் அரசியலில் வறுமை என்பது ஒரு முதலீடு. அதை வைத்து பணக்காரர்களின் அறக்கட்டளைகளில் கருணையைச் சுரக்கச் செய்யலாம். ஏழைகளின் தோழமையைப் பெறலாம். நடுத்தர வர்க்கத்தின் அறச் சீற்றத்தை சம்பாதிக்கலாம்.
“டில்லியை அழகுபடுத்த வேண்டுமென்று இப்படி வண்ண வண்ணமான நீரருவிகளும், கண்ணைக் கவரும் மலர்ப் பூங்காக்களுக்கும் பணத்தை வாரி இறைக்கிறார்களே, டில்லியின் வறுமை அழகு தேவதையைக் கண்டு அஞ்சி ஓடிவிட்டதா? நான்கைந்து நாள்களுக்கு முன்பு அவன் தியாகராஜநகர் நல்லா அருகே போய்க் கொண்டிருந்தான்.அப்பொழுது அவன் கண்ட காட்சி அவன் மனதைவிட்டு என்றுமே அகலாது. சாக்கடையை ஒட்டியிருந்த கைப்பிடிச் சுவரருகே அந்தக் குடும்பம் வசித்தது. ஒரு தள்ளு வண்டியின் நுகத்தடியைக் கட்டையினால் பாரம் கொடுத்து நேராக நிறுத்தியிருந்தார்கள்.வண்டியின் மேற்புறத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தில் ஒரு கட்டில். கயிற்றைப் பார்க்கும் போது கட்டிலுக்கு க்ஷயரோகம் என்று சொல்ல வேண்டும்.அது நின்றிருந்த நிலையைப் பார்த்தால் பாரிச வாயு என்று தோன்றியது. கட்டிலில் ஒர் ஆறுமாதக் குழந்தை கத்திக் கொண்டே இருந்தது. அதைவிடச் சற்றுப் பெரிதான குழந்தை அதை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தது. வண்டிச் சக்கரத்தினருகே -அதை வீட்டின் டிராயிங்ஹால் என்று சொல்லலாமா?-ஒரு நாய் கண்ணத் திறக்காமலும் திறந்தும் அறிதுயில் கொண்டிருந்தது.’வீட்டின்’ பின்புறத்தில் இரண்டு சிறுமிகள் -ஆறுவயதிற்குள்ளிருக்கும்- ரொட்டி சுட்டுக் கொண்டே ஏதோ பாடியவாறு இருந்தனர். பஞ்ச பூதங்களின் அரவணைப்பில் வளர்ந்து வரும் அந்தக் குழந்தைகளைப் பார்க்கும் போது யோஜனா பவனில் மலை போலக் குவிந்து வரும் பைல்களை எடுத்துக் கப்பல் விடலாமென்று முகுந்தனுக்குத் தோன்றியது.காலம் ஸ்தம்பித்து நிற்கும் இவ்விடங்களுக்கு என்றுமே எதிர்காலம் இல்லையா? அசோகா ஹோட்டலில் காப்ஸ்யூல்களாக வழங்கப்படும் பாரதப் பண்பாட்டை ரசிக்கும் விருந்தினர்களே, இங்கு வந்து பாருங்கள். பாரதத்தின் நிகழ்காலம் சாக்கடையருகே ரொட்டி சுட்டுக் கொண்டிருக்கிறது”
இந்த அறச்சீற்றத்திற்கு ஏதேனும் பிரயோசனம் உண்டா? ‘அவன் மனதை விட்டு என்றுமே அகலாத இந்தக் காட்சியை’ மாற்ற மந்திரியான பின்பு முகுந்தன் என்ன செய்தான்? நாவலில் தகவல் இல்லை. ஏனெனில் இ.பா பேச விரும்புவது அதை அல்ல. வறுமையை முதலீடாகக் கொண்டு அதிகாரத்தைப் பிடிக்கும் அரசியல் அமைப்பில் அவனும் உள்வாங்கப்பட்டான் என்பதுதான் அவரை உறுத்தும் விஷயம்..
அவரை உறுத்தும் இன்னொரு விஷயம் தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரம். ‘அரசாங்கத்தின் நட்சத்திர ஹோட்டல்களில் காப்ஸ்யூல்களாக வழங்கப்படும் பாரதப் பண்பாட்டில்’ மக்களின் வறுமையும் ஓர் அம்சம் எனக் கருதும் இ.பா.வின் குரல் தமிழ்நாட்டிற்கு வரும் போது ஏளனமாக மாறிவிடுகிறது. பேராசிரியர் மிஸ்ராவிற்கும், முகுந்தனுக்கும் இடையே ஓர் உரையாடலில் அது மறைவின்றி வெளிப்படுகிறது
“நம் நாட்டு இக்கால நாஸ்திகர்கள் கோமாளிகள். விஞ்ஞானத்தையும் தர்க்கத்தையும் அரைகுறையாகப் புரிந்து கொண்ட முட்டாள்கள்.”
“கோமாளிகள் என்பது வாஸ்தவந்தான். இங்கு பெரியார் ராமசாமி என்று ஒருவர் இருக்கிறார். அவர்….”
“ஐ நோ, ஐநோ, அவர் தமிழ்நாட்டின் டான்க்விக்ஸாட் என்று எனக்குத் தெரியும். அவர்தான் உங்கள் பெரியார் என்றால் நீங்கள் வெட்கப்பட வேண்டும்” ……
“காரிக்கண்ணன் இருவரையும் அழைத்துக் கொண்டு போனபோது பேசிக் கொண்டே சென்றார்.’அண்ணாவைப் போன்றவர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தோன்றக் கூடியவர்கள். வள்ளுவத்தின் இலக்கணமாக, தமிழ்ப் பண்பாட்டின் உருவமாகப் பிறந்த அண்ணா, வரலாறே கண்டறியாத அளவுக்கு எவ்வளவு தூரம் தமிழர் எழுட்சிக்குக் காரணமாக இருந்தார் என்பதை நாடறியும், நல்லவர் அறிவர்”
முகுந்தன் அதை மொழிபெயர்த்துச் சொன்ன போது மிஸ்ரா சிரித்துக் கொண்டே கூறினார்: “அண்ணாவை எனக்கு நன்றாகத் தெரியும், ரம்மி விளையாடுவதில் நல்ல கெட்டிக்காரர். அவர் ராஜ்யசபா அங்கத்தினராக இருந்த போது ஓர் இரவு முழுவதும் விளையாடியிருக்கிறோம்”
இந்த வரிகளைப் படிக்கிற ஒரு தலைமுறை எளிதாக இ.பா.வை சங்கி என்று முத்திரை குத்திவிட முயலும். ஒரு காலத்தில் அவருக்கு திமுக மீது கடும் விமர்சனங்கள் இருந்தன என்பதற்கு கணையாழியில் அவர் ‘பரகால ஜீயர்’ என்ற பெயரில் எழுதிய அரசியல் கட்டுரைகளே சாட்சி. அந்த நாள்களில் அவர் எழுதிய நாடகம் ஒன்றில் தோளிலிருந்து தரையைத் தொடும் அளவிற்கு துண்டணிந்த ஒரு பாத்திரத்தின் பெயர் இளவழகன். ஆனால் அவரைக் கூப்பிடுபவர்கள் எல்லோரும் இளவு, இளவு என்றுதான் கூப்பிடுவார்கள்.
இன்று இ.பா.வின் அரசியல் நோக்கு மாறிவிட்டது. அவர் திமுகவை கடுஞ்சொற்களால் விமர்சிப்பதில்லை. எழுபதுகளில் இருந்த அவரது அறச்சீற்றம் இன்று ஆறிப்போய்விட்டது. அது பாஜக மீதான எள்ளலாக மாறியிருக்கிறது. இன்றைய அறிவுஜீவிகளின் அடையாளம் மோதியை விமர்சிப்பது, பாஜகவை தாக்குவது.
இன்றும் இ.பா. அறிவுஜீவிதான்.

மாலன்
திசைகள்,குமுதம், தினமணி, இந்தியா டுடே (தமிழ்), குங்குமம், புதிய தலைமுறை, புதியதலைமுறை கல்வி ஆகிய தமிழகத்தின் முன்னணித் தமிழ் இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றிய மாலன் தனது எழுத்துலகப் பயணத்தை இலக்கியச் சிற்றேடுகளில் துவக்கியவர். இவரது கதைகள் ஆங்கிலத்திலும் மற்ற இந்திய மொழிகளிலும், சீனம், மலாய், பிரன்ச் ஆகிய சில அயல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள் A Phantom Tiger and other stories என்ற நூலாகவும், இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள் சங்கீத் வித்வான் என்ற நூலாகவும் வெளியாகியுள்ளன. இவரது புகழ் பெற்ற நாவல் ஜனகணமன ஆங்கிலம் ,இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர்களில் இவர் ஒருவர்.லலித் கலா அகாதெமி பொதுக்குழு உறுப்பினர். ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளையின் அறங்காவலர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை தமிழ் இலக்கியப் பாடத் திட்டக்குழு உறுப்பினர். சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பரிசு, பாரதிய பாஷா விருது, தட்சிணபாரத் இந்தி பிரசார சபாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
Discover more from சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.

