சாதனை படைத்த எழுத்தாளர் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். தி. ஜானகிராமன் என்றால் அழகியல், ஆர். சூடாமணி என்றால் உளவியல், ஜெயகாந்தன் என்றால் விவாதக் கோணம், ராஜம்கிருஷ்ணன் என்றால் கள ஆய்வு, நா. பார்த்தசாரதி என்றால் தமிழ் நடை, அசோகமித்திரன் என்றால் நுணுக்கமான விவரணைகள், கி. ராஜநாராயணன் என்றால் வட்டார வழக்கின் நயம்… என்றிப்படி இன்னும் ஒவ்வொரு சாதனையாளரைப் பற்றியும் அவரது தனித்தன்மை சார்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்…..
அப்படிப் பார்த்தால், தற்காலத் தமிழ் இலக்கியத்தில் முத்திரை பதித்த இந்திரா பார்த்தசாரதியின் தனித் தன்மை என்ன?
இ.பா.வின் பலம் உரையாடல்தான். இ.பா. படைத்த பாத்திரங்கள் அறிவுசார்ந்த மிகக் கூர்மையான உரையாடல்களைப் பேசுபவர்கள். இந்த உரையாடல்கள் சிலநேரம் நம்மைத் திடுக்கிட வைக்கின்றன. பல நேரம் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. பாத்திரங்களின் ஆழ்மன வெளிப்பாடாக அமையும் இந்த உரையாடல்கள் நாம் வாசிக்கும்போது நம் ஆழ்மனத்தையும் கூட நமக்குப் புலப்படுத்தி விடுகின்றன. நம் மனம் பற்றியே நாம் அறியாமல் மறைந்துகிடக்கும் மர்மங்களையும் ரகசியங்களையும் தாம் படைத்த பாத்திரங்களின் உரையாடல் வழியே இ.பா. நமக்குக் காட்டிவிடுகிறார். நம் மனத்தின் ரகசியப் பகுதிகள் மீது, அவர் உரையாடல்கள் திடீரென வெளிச்சத்தைப் பாய்ச்சும்போது, அந்த ஒளி வெள்ளத்தில் நம் மனக்கண் சற்றுக் கூசத்தான் செய்கிறது. இதுதான் இ.பா. நிகழ்த்தும் ரசவாதம்.
இ.பா. சிறுகதை, நாவல், நாடகம் எனப் படைப்பிலக்கியத்தின் மூன்று துறைகளில் பங்களித்தவர். (கவிதை அவர் துறையல்ல.) மூன்று துறைகளில் அவர் ஈடுபட்டார் என்பது மட்டுமல்ல, அந்த மூன்று துறைகளிலுமே அவர் முத்திரை பதித்தார் என்பதுதான் வியப்பு. இந்த மூன்று துறைச் சாதனைக்குத் துணைநின்றது அவரது உரையாடல்கள்தான்.
ஆழ்ந்த இலக்கியவாதிகளில் நாடகத்தைப் பொறுத்த அளவில் மாபெரும் சாதனையாளர் என்று இ.பா.வைத்தான் கூறமுடியும். தி. ஜானகிராமன், `வடிவேலு வாத்தியார், நாலு வேலி நிலம்` ஆகிய நாடகங்களின் ஆசிரியர். கு. அழகிரிசாமியின் கம்பரின் வரலாற்றைக் கூறும் `கவிச்சக்கரவர்த்தி` நாடகம் புகழ் பெற்றது. கர்ணனைக் கதாநாயகனாகக் கொண்டு பி.எஸ். ராமையா எழுதிய `தேரோட்டி மகன்` என்ற மகாபாரத நாடகம் தமிழில் தடம் பதித்த நாடகம். சி.சு. செல்லப்பா, ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, ஆர். சூடாமணி போன்றவர்களும் சிற்சில சிறப்பான நாடகங்கள் எழுதியிருக்கிறார்கள்.
ஆனால் இவர்களெல்லாம் நாடகங்கள் ஓரிரண்டு எழுதினார்களே தவிர நாடகத் துறையில் எண்ணிக்கை சார்ந்து அதிகம் முயலவில்லை. அதனால் இவர்கள் நாவலாசிரியர்களாகவும் சிறுகதை ஆசிரியர்களாகவுமே வாசகர்களால் அறியப்படுகிறார்கள். இவர்களுக்கு இணையாக வைத்துச் சொல்லப்படக் கூடிய இன்னொரு மாபெரும் இலக்கிய ஆளுமையான இந்திரா பார்த்தசாரதி, நாவல், சிறுகதைத் துறைகளுக்கு மட்டுமல்லாமல், நாடகத் துறைக்கும் மிகப் பெரிய அளவில் பங்களிப்புச் செய்துள்ளார். தமிழின் ஆழ்ந்த இலக்கியவாதிகள் வரிசையில் நாடக ஆசிரியராகவும் அறியப்படும் எழுத்தாளர் இவர் மட்டுமே.
இ.பா. நாடக ஆசிரியர் என்ற வகையில் தமிழக அளவில் மட்டுமல்லாமல், அகில இந்திய அளவிலும் அறியப்படும் பெருமையைப் பெற்றுள்ளார். இவரது நாடகங்கள் பல இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தி மேடை நாடகங்களாக அரங்கேறி இந்தி நாடக ரசிகர்களிடமும் மதிப்பைப் பெற்றுள்ளன.
உரையாடல்தான் இ.பா.வின் பலம் என்பதால், பெரிதும் உரையாடல்களாலேயே ஆன நாடகத் துறையில் அவர் பெருவெற்றி பெற்றது இயல்பானதுதான். சிறுகதை, நாவல் ஆகிய இரு துறைகளிலும் கூட இவருடைய பலம் என்பது அவற்றில் வரும் உரையாடல்கள்தான் என்பதை அவற்றைப் படிக்கும்போது நாம் புரிந்துகொள்ள முடியும். எனவே உரையாடலையே பிரதானமாகக் கொண்ட நாடகத் துறையில் இவரால் அதிகம் சாதிக்க முடிந்ததற்கு இவரது பலம் எதில் என்பதை இவர் உணர்ந்து கொண்டது ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்து முஸ்லிம் நல்லிணக்கத்தைப் பிரதானப்படுத்தி இவர் எழுதிய `அற்றது பற்றெனில்` என்ற சிறுகதை இலக்கியச் சிந்தனை அமைப்பின் ஆண்டுப் பரிசைப் பெற்றது. அந்தச் சிறுகதை அமுதசுரபி மாத இதழில் வெளிவந்த கதை. பின்னர் அது இலக்கியச் சிந்தனை அமைப்பின் ஆண்டு விழா ஒன்றில் மேடை நாடகமாகவும் நடிக்கப்பட்டது.
இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துகள் பலவும் உளவியல் ரீதியாக மனிதர்கள் எப்படியெல்லாம் இயங்க நேர்கிறது என்பதையும் மனிதர்கள் எப்படிச் சூழ்நிலையின் கைதிகளாக உள்ளார்கள் என்பதையும் ஆராய்பவை. (சாகித்ய அகாதமி பரிசுபெற்ற குருதிப்புனல் நாவல் கூட கீழ்வெண்மணி படுகொலைச் சம்பவம் குறித்து உளவியல் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதுதான்.)
இ.பா.வின் நாடகங்கள் நவீன வாழ்வின் இறுக்கங்களைப் பேசுபவை. இன்றைய நடுத்தர வர்க்கத்தின் மன உளைச்சல்களைப் பதிவு செய்பவை. பத்து நாடகங்களுக்கு மேல் எழுதியுள்ளார் இ.பா. அவற்றை, பொதுவான சமூக நாடகங்கள், வரலாற்றுத் தொன்மத்தை நவீனப்படுத்தி எழுதிய நாடகங்கள், புராதனத் தொன்மத்தை நவீனப்படுத்தி எழுதிய நாடகங்கள் என மூன்று வகையாகப் பகுக்க முடியும். இந்த மூன்று வகை நாடகங்களிலும் சில பொதுவான அம்சங்கள் உண்டு. இழையோடும் மெல்லிய நகைச்சுவை, புத்திசாலித்தனமான விவாதங்கள், எந்த விஷயத்திற்கும் உளவியல் பரிமாணம் கொடுத்து ஆராயும் போக்கு, நாம் ஏற்கும் விதமாக எதையும் தர்க்க ரீதியாகப் பொருந்தும் வகையில் எழுதும் தன்மை, கவிதை மெருகேறிய வசனங்கள், பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லும் கலை நேர்த்தி என்றிப்படி அவரது இலக்கிய ஆளுமை எல்லா நாடகங்களிலும் புலப்படுகிறது.
`பசி, போர்வை போர்த்திய உடல்கள், கோயில், மழை, கால யந்திரங்கள்` ஆகியவை சமூக நாடகங்கள். இவை இன்றைய நகர வாழ்வின் சிக்கல்களைப் பேசுகின்றன. இவற்றில் இடம்பெறும் பாத்திரங்களின் சாயலுள்ள மனிதர்களை நாம் நம் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறோம். யாரும் அறிந்திராத உள்மனத்தின் அந்தரங்கமான சாளரங்களைத் திறக்கும் வேலையை இ.பா. திறம்படச் செய்கிறார். அந்தந்த நாடகங்களில் வரும் பாத்திரங்களே கூட தங்கள் மனம் திறக்கப்பட்டு தங்கள் முன் வெளிப்படுத்தப் படும்போது திகைக்கத்தான் செய்கிறார்கள்.

சத்திய வெளிச்சத்தில் புலப்படும் தங்களைப் பற்றிய உள்மன உண்மைகளைத் தாங்க இயலாதவர்களாய் அவர்கள் தவித்துத் தடுமாறுவதையும் இ.பா.வின் சமூக நாடகங்களில் நாம் நிறையப் பார்க்கிறோம்.
இ.பா. தனக்கே உரிய கலை நுணுக்கத்தோடு இன்றைய சமுதாய அவலங்கள் தெளிவாகப் புலப்படும் வகையில் பாத்திரங்களைப் படைத்துச் செல்கிறார். வாழ்க்கைக்கும் புனைவுக்கும் இடையே உள்ள இடைவெளியை இயன்ற அளவு குறைப்பதுதான் சிறப்பான படைப்பின் தன்மை என்றால் இந்த சமூக நாடகங்கள் அத்தகையவை.
`ஒளரங்கசீப், இறுதி ஆட்டம், ராமானுஜர்` ஆகியவை வரலாற்றை நவீனப்படுத்தி எழுதிய நாடகங்கள். இந்த வகையில் எழுதுவது சற்றுச் சிக்கலானது. வரலாற்று நிகழ்வுகளை நாம் மாற்ற இயலாது. அப்படியானால் இ.பா. செய்தது என்ன? வரலாற்றுச் சம்பவங்களை அப்படியே வைத்துக்கொண்டு அந்தச் சம்பவங்களின் பின்னணியில் இயங்கும் வரலாற்றுப் பாத்திரங்களுக்குத் தம் கண்ணோட்டத்தில் ஓர் உளவியல் பரிமாணம் கொடுக்கிறார் இ.பா. நாம் ஏற்றுக்கொள்ளும் வகையில் அந்தப் பரிமாணம் அமைவதுதான் அவர் நிகழ்த்தும் சாதனை.
`கொங்கைத் தீ, நந்தன் கதை` ஆகிய நாடகங்கள் புராதனத் தொன்மத்தை நவீனப் படுத்தி எழுதப்பட்டவை. இத்தகைய நாடகங்களில் சற்றுச் சுதந்திரம் உண்டு. தொன்மங்கள் (myth) பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அவை காலம் காலமாகத் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருபவை. ஏற்கெனவே வளர்ந்துள்ள தொன்மத்தை மேலும் வளர்த்தெடுப்பது மட்டுமே நாடக ஆசிரியரின் பணி.
பல நூறு ஆண்டுகளாக வளர்ந்துள்ள குறிப்பிட்ட தொன்மத்தின் வளர்ச்சியில் தன் அறிவுத் திறனைச் செலுத்தி இன்றைய காலகட்டத்திற்குப் பொருந்தும் வகைப்பட்ட மாற்றங்களை நாடக ஆசிரியர் சேர்க்கிறார். ஏற்கெனவே சேர்க்கப் பட்டுள்ளவற்றோடு சரியாகப் பொருந்தும் வகையில் இந்தப் புதுச் சேர்க்கைகள் அமைந்து அந்தத் தொன்மத்திற்கு இன்னும் அதிக அழகையும் காலப் பொருத்தத்தையும் ஏற்படுத்துகின்றன.
தொன்மம் இன்றைய நூற்றாண்டில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் புதுப் பரிமாணம் பெற்று சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கொங்கைத் தீயில் கண்ணகியின் கதையைச் சொல்வதன் மூலம் இன்றைய பெண்ணியச் சிந்தனைகளைத் தட்டி எழுப்புகிறார். மரபு வழிப்பட்ட சிலப்பதிகாரக் கதையில் இன்றைய பெண்ணியக் கருத்துகளுக்கான வேர்களைக் காண்கிறார் இ.பா. அவரது படைப்பு மனம் கண்ணகியை வேறுவகைப்பட்ட கண்ணோட்டத்தில் கண்டு தற்காலத்திற்குப் பொருத்தமான பல நவீனச் சிந்தனைகளை உள்ளடக்கி `கொங்கைத் தீ` என்ற புத்தம் புதிய நாடகத்தைப் படைக்கிறது.
நந்தன் கதையில் இறுதி முடிவை பக்தியின் அடிப்படையில் நேர்ந்த அற்புதமாக அமைக்காமல், உயர்சாதியினரின் சூழ்ச்சி என்ற வகையில் அறிவுபூர்வமானதாக மாற்றுகிறார். பெரியபுராண நந்தன் கதையில் கோபாலகிருஷ்ண பாரதியார் வேதியர் என்ற புதிய பாத்திரத்தைப் படைத்ததுபோல், இ.பா. தன் நந்தன் கதையில் அபிராமி என்ற நடனமணியைப் படைத்து நந்தன் கதைக்கு ஓர் அழகியல் தன்மையை உண்டாக்குகிறார்.
இந்திரா பார்த்தசாரதியின் நவீன நாடகங்கள், தற்கால நாடக வரலாற்றில் தனியிடம் பிடித்து முத்திரை பதிக்கின்றன. இ.பா. என்கிற ஒரு மாபெரும் படைப்பாளியின் நாவல் சிறுகதை நாடகம் என்ற மூன்று பரிமாணங்களில், அவரது நாடகப் பரிமாணம் பெரிதும் குறிப்பிடத்தக்கது என்பதில் சந்தேகமில்லை.

திருப்பூர் கிருஷ்ணன்
இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தீபம் இதழில் நா. பார்த்தசாரதியிடமும் தினமணிகதிர் இதழில் ஏ.என். சிவராமன், கே.ஆர். வாசுதேவன், கி. கஸ்தூரிரங்கன், ஐராவதம் மகாதேவன் ஆகியோரிடமும் முதல்நிலைத் துணையாசிரியராகப் பணிபுரிந்தவர். சுஜாதாவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட அம்பலம் இணைய இதழிலும் பின்னர் சென்னை ஆன்லைன் இணைய இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றியவர். தற்போது 79ஆம் ஆண்டை எட்டியிருக்கும் அமுதசுரபி மாத இதழின் ஆசிரியர். கணையாழியில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாதந்தோறும் இலக்கிய விசாரம் என்ற பத்தியை எழுதியவர். தம் சிறுகதைகளுக்காக இருமுறை ஆனந்த விகடன் முத்திரைப் பரிசு, இலக்கியச் சிந்தனை ஆண்டுப் பரிசு உள்படப் பல பரிசுகளைப் பெற்றவர்.
Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.

