நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் என இலக்கியத்தின் பன்முகத் தளங்களில் நவீன தமிழ் இலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்புகள் செய்தவர் இந்திரா பார்த்தசாரதி. தமிழில் இலக்கியத்துக்காகவும், நாடகத்துக்காகவும் சாகித்ய அகாடமி மற்றும் சங்கீத நாடக அகாடமியின் தேசிய விருதுகளைப் பெற்றவர். பெருங்கதையாடல்களுக்குள் பொதிந்துள்ள எண்ணற்ற சிறுகதையாடல்களை நோக்கிய பார்வை இவருடையது. வரலாற்றின் மறுவாசிப்பு என்பதும், வரலாற்றுடன் உரையாடல் என்பதும் இவருடைய படைப்புகளில் மேலோங்கி நிற்கும் ஒரு அம்சம். வெளிப்படையாகத் தெரியும் வரலாற்று முகங்களுக்குள் பொதிந்துள்ள பண்பாட்டு சலனங்களில் வெளிச்சம் பாய்ச்சி கலாச்சார வரலாறு மற்றும் சமூக மனவியல் சார்ந்த பல்வேறு கருத்தோட்டங்கள் மூலம் நவீன தமிழ் இலக்கியத்துக்கு வளமை சேர்த்தவர். அதிகம் கவனிக்கப்படாத இலக்கியத்தின் உள்ளுறையான பல சுவையுணர்வுகள், அடிநாதங்கள், முரண்நிலைகள் மற்றும் விடுபடல்கள் குறித்த பார்வைகள் பெறவும் அவரது எழுத்துக்கள் இடமளிக்கின்றன.
கும்பகோணத்தில் பிறந்த இந்திரா பார்த்தசாரதி எழுத்தாளர் தி.ஜானகிராம னின் மாணவர். தமிழின் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளான மெளனி, கு.ப.ரா, கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் ஆகியோர் வாழ்ந்த இடம் கும்பகோணம். மணிக்கொடி காலகட்ட புத்திலக்கிய எழுச்சியை வடிவமைத்ததில் இந்த எழுத்தாளர்களுக்கு பெரும் பங்கு உண்டு. இத்தகைய பின்புலம் கொண்ட சூழலில் உருவாகி முதுகலை பயின்று பின்னர் டில்லி பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டுகாலம் பேராசிரியராகப் பணியாற்றயவர். பின்னர் போலந்தில் வார்சா பல்கலைக்கழகத்தில் `இந்தியத் தத்துவமும் பண்பாடும்` கற்பிக்கும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர். பின்னர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத் துறையில் இணைந்து சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியை உருவாக்கி அதில் பேராசிரியராகப் பணியாற்றியவர். நாடகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பல சிறப்பான நாடகப் படைப்பாளிகள் அப்பள்ளியிலிருந்து உருவாகி பல்வேறு கல்வி நிறுவனங்களில் நாடகப் பயிற்சியை முன்னெடுத்து வருகின்றனர். ஒரு இலக்கியப் படைப்பாளியாக இந்திரா பார்த்தசாரதி 17 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 2 கட்டுரைத் தொகுப்புகள், 10க்கும் மேற்பட்ட நாடகங்கள் என தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து இன்றுவரை இயங்கிக் கொண்டிருப்பவர். தீபம், கணையாழி போன்ற இலக்கிய இதழ்களில் பல ஆண்டுகள் எழுதிய இந்திரா பார்த்தசாரதி தற்போது உயிர்மை இதழில் தொடர்ந்து எழுதிவருகிறார்.
வைணவ பக்தி இலக்கியங்களில் ஈடுபாடும், மார்க்சீய சிந்தனைப் போக்கும் கொண்ட இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலை பேசுபவையாக உள்ளன. அலுவலக வேலை பார்க்கும் கதைமாந்தர்களைக் கொண்டு பெருநகர வாழ்வினை சித்தரிப்பவை. உளவியல் சிக்கல்கள், பிறழ்வு உறவுகள் மற்றும் நகர வாழ்க்கையின் பரிமாணங்களை சித்தரிப்பதின் மூலம் இன்றைய அடையாளம் இழந்த சிதறுண்ட மனிதனை முன்னிலைப்படுத்தி மாறிவரும் வாழ்க்கை மதிப்பீடுகள் குறித்த கவனத்தையும்,உரையாடலையும் வேண்டுபவை அவருடைய எழுத்துக்கள். இவ்விதம் தன்னுடைய குருதிப்புனல், சு தந்திர பூமி, வேர்ப்பற்று ஆகிய நாவல்களிலும், மழை, போர்வை போர்த்திய உடல்கள், ஒளரங்கசீப், நந்தன் கதை ஆகிய நாடகங்களிலும் பாத்திரங்களின் முரண்பட்ட நிலைகளின் மோதலாக தன்னுடைய புனைவுகளை அவர் வடிவமைத்துள்ள நிலையில் , தன்னுடைய அபுனைவு (Non fiction) எழுத்துக்களில் சமகால வரலாறு ,சமூக நிலைப்பாடு மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்களுக்கு அதிக இடம் அளித்துள்ளார். அவருடைய `கடலில் ஒரு துளி` தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அதற்கான குரலை முன்னெடுக்கின்றன.
மொழி அடையாளம் பற்றி பேசும்போது போலிஷ் மொழியிலிருந்து துவங்கி பல்வேறு மொழிக்குழுவினரிடமும் மொழி அடையாளம் என்பது என்பது தேசிய அடையாளமாக உருமாறியதின் வரலாற்றை நினைவுகூர்கிறார். நம்முடைய தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கனக விசயர் மீது போர் தொடுத்த சேரன் செங்குட்டுவனின் இன உணர்வு , கண்ணகி கோவில் பணிக்கு இலங்கை மன்னனையும் வரவழைத்த தென்திசை அரசியல், சமய விழிப்புணர்வுக்கு தமிழ் உணர்வை அடிநாதமாக முன்னெடுத்த பக்தி இயக்கம் ,சம்பிரதாயங்கள் கடந்த ராமானுஜரின் வெளிப்பாடு, ஆழ்வார்ப் பாசுரங்களின் இனிமை என தமிழ் அடையாளத்தோடு இணைந்த கூட்டுத் தமிழுணர்வின் சுவடுகளை அவற்றின் வரலாற்றுப் பின்புலத்துடன் பின்பற்றிச் செல்கிறார்.
உலக வரலாற்றில் மொழிப் போராட்டத்தின் காரணமாக விடுதலை பெற்ற பங்களாதேஷின் எழுச்சிக்கான காரணங்களை ஆராயும்போது மேற்குவங்க எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், சிந்தனாவாதிகள் எழுப்பிய மொழி உறவுக் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்த இந்திய அரசாங்கம் மொழி ஒருங்கிணைவின் பின்புலத்தில் ஈழ மக்களு க்கு ஆதரவான தமிழ் மக்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்து இலங்கை அரசின் இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு வெளிப்படையான ஆதரவு வழங்கியதை கடுமையாக சாடுகிறார். இந்தப் பின்புலத்தில் வடக்கு, தெற்கு பூகோளப் பிரிவினரிடையே உள்ள கலாச்சார இடைவெளிகள் குறித்த வரலாற்றுத் தொடர்ச்சியை நினைவுபடுத்துகிறார். அமெரிக்க ஒபாமாவின் ஏற்றத்துக்கு இணையாக இந்திய தலித் இங்கு ஏற்றம் பெறவில்லை என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால் எதிர்ப்புக்குரல்கள் தான் நம் இந்திய சிந்தனைப் பண்பாட்டின் இன்றியமையாத அம்சம் என்பதை வலியுறுத்துகிறார். பிராம்மணநெறிச் சடங்குகள், கடவுள் பற்றிய கருத்து, பிறவித் தொடர்ச்சி, ஆத்மாவின் இருப்பு போன்றவைகளை கேள்விக்குட்படுத்திய லோகாயவாதமும், சார்வாகக் கோட்பாடுகளும் இந்திய சிந்தனை மரபின் பகுதியாகவே கொள்ளப்பட்டதையும், நிறுவனங்களுக்கும் அவைகளை எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டங்கள் தொன்றுதொட்டு நடந்துவ்ருவதையும், இந்திய தத்துவ வரலாற்றில் பெரும்பாலான தத்துவப் போர்கள் தென்னாட்டில் நடைபெற்றதையும் தன்னுடைய கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். அத்துடன் இலக்கிய மனோதர்மத்திலும், அழகியல் ஆளுமையிலும் கம்பராமாயணம் வால்மீகி ராமாயணத்தைவிட கலைச்செறிவு கொண்டிருப்பதை உணர்த்தும் நிலையில் கம்பரின் ஒரு முக்கியமான விடுபடலையும் குறிப்பிடுகிறார். ராமன் வனத்தில் முனிவர் வேடம் தரித்திருக்கும் நிலையில் ஆயுதம் தாங்குவது பொறுத்தமற்றது என்று சீதை அறிவுறுத்துவது கம்பராமாயணத்தில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. உலக அமைதிக்கான பொறுப்பை சுமந்துகொண்டிருக்கும் அமெரிக்க நாட்டாண்மைக்கான எதிர்ப்புக்குரல் போல் அமைந்த சீதையின் இந்தக் கூற்று கம்பராமாயணத்தில் இடம்பெறவில்லை. தற்போது உயிர்மை பத்திரிகையில் பிரசுரமாகியுள்ள அவருடைய `மீதிக்கதை` சிறுகதையில் லவகுசர்கள் பாடிய இராம காதையில் இன்னுமொரு மீதிக்கதை இருப்பதை சீதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறாள். இலக்கியமும், வரலாறும் சொல்லப்படாத மீதிக்கதைகளாலேயே நிரம்பியுள்ளன.
அதேபோல் தமிழ் இலக்கிய வரலாறெங்கும் விரவிக் கிடக்கும் எண்ணற்ற பெருங்கதையாடல்களுக்கிடையே ஆங்காங்கே வெளிப்படும் சிறுகதையாடல்கள் குறித்த கவனத்தை வேண்டுகிறார். உதாரணமாக ஐவகைத் திணைக்கு உரியவர்களாகக் காட்டப்படும் உயர்குடித் தலைவன் தலைவியின் காதல் மற்றும் பிரிவுத் துயர்களுக்கு அப்பாற்பட்டு குற்றேவல் செய்யும் அடிநிலை மக்களின் உணர்வுகள் கைக்கிளை, பெருந்திணை போன்ற புறத்தே நிற்கும் ஒழுக்கமாக பொதுமரபுகள் கூறிவரும் நிலையில் ஒரு கூனியும் குள்ளனும் காதல் உறவாடும் மருதக்களிச் செய்யுள் இந்த பாகுபாடுகளை கேள்விக்குட்படுத்து வதைக் கவனப்படுத்துகிறார். இதேபோல் முல்லைப் பாட்டிலும் ஏவல் மகளிர் பற்றிய குறிப்புகளை நாம் காணமுடியும்.
அரசர்களின் வானளாவிய அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தும் அறச் செருக்கு கொண்ட புலமைமிக்க அறிஞர் கூட்டத்தின் இருப்பை கூலிக்கு மாரடிப்போர் இடையே காண்கிறார். ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ஒளவையார் போன்ற மனத்தடைகள் நீங்கிய பெண்குரல்களை கவனப்படுத்துகிறார். நம்முடைய கலாச்சார வரலாறெங்கும் நிறுவன எதிர்ப்புக் குரல்களும், மத வரையறைகள் கடந்த சமூக வரலாற்று ஆவணங்களும் விரவிக் கிடப்பதை காண்கிறார். ஆனால் இலக்கியம் என்பது நேரடியாகவும், வெளிப்படையாகவும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தாமல் தனக்குள் இன்னொரு அடித்தளப் பிரதியை (subtext) கொண்டிருப்பதை காண்கிறார். `நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்` என்று அப்பர் பாடியதுகூட தனக்குள் இன்னொரு நுண்ணிய எதிர்ப்பை உள்ளடக்கியது. ஆனால் மனித குலத்தின் கண்டுபிடிப்பையும், படைப்புணர்வையும் எதேச்சையானதாகப் பார்க்காமல், ஒரு தர்க்கபூர்வமான ஆக்கசக்தியின் தொடர்ச்சியாகப் பார்க்கும் இவர் இன்றைய கல்வியில் பிரமிப்பு மற்றும் விசாரணைக்கு இடமில்லாததை சுட்டிக்காட்டுகிறார்.
இவ்வாறு தம்முடைய புனைவு எழுத்துக்களில் யதார்த்தமும், கற்பனையும் கலந்த ஒரு முரண் உலகைப் படைக்கும் இந்திரா பார்த்தசாரதி தன்னுடைய அபுனைவு (nonfiction) எழுத்துக்களில் சமூக விமர்சனத்துக்கும், விசாரணைக்கும் இடமளித்து மறைபொருளாக உள்ள விலக்கப்பட்ட விஷயங்கள் குறித்த கவனத்தை வேண்டுகிறார். இவ்வகையில் அதிகம் பேசப்படாத அவருடைய அபுனைவு எழுத்துக்கள் குறித்த ஆழ்ந்த விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

வெளி ரங்கராஜன்
வெளி ரங்கராஜன் என தமிழ் இலக்கிய வட்டாரங்களில் அறியப்படும் இவரது இயற்பெயர் ரங்கராஜன். கணிதத்தில் முதுகலைப்பட்டமும் இந்தியில் எம்.ஏ. பட்டமும் பிரெஞ்சு மொழியில் பட்டயம் (டிப்ளோமா) பட்டமும் பெற்றவர். வங்கி அதிகாரியாகப் பணியாற்றிய இவர் தற்போது முழுநேர கலாச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இலக்கியம், நாடகம், நிகழ்கலைகள் குறித்த ஆழ்ந்த ஈடுபாடுகளுடன் அவைகளுக்கு இடையிலான ஊடாட்டம் குறித்த உரையாடல்களை தமிழில் முன்னெடுத்து வருபவர். தமிழில் நாடக இலக்கியங்களை உருவாக்கவும், நாடகச் சிந்தனைகளை முன்னெடுக்கவும் “வெளி” என்ற நாடக இதழை 1990இல் தொடங்கி 10 ஆண்டுகள் நடத்தியவர். புதிய நாடகப் பிரதிகள், நாடகக் கோட்பாடுகள் குறித்த விவாதங்கள், உலக நாடக இயக்கம் என தமிழில் செறிவான நாடகச் செயல்பாட்டிற்கான களமாகவும் ஆவணமாகவும் வெளி இதழ் பயன்பட்டது. நவீன இலக்கியம் சார்ந்து கணையாழி, கசடதபற, பிரக்ஞை, இன்று, படிகள், காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கியச் சிறுபத்திரிகைகளில் இலக்கியவிமர்சனம், கதை, கவிதை என பங்களிப்புகள் செய்தவர்.
Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.

