தமிழ் நாடகப் படைப்புலகில் இந்திரா பார்த்தசாரதியின் புதிய தடம்

அப்படி ஓர் நாள் வரும்! 

அந்தப் புது உலகில் நானும் இடம் பெறுவேன் ! என்று துளிப்பொழுதும் நினைத்ததில்லை. தாயுள்ளம் போல் பெருக்கெடுக்கும் எங்கள் நரசிங்க காவேரி ஆற்று வயல்வெளி நடுவே ஒரு குக்கிராமத்தில் பிறந்த நான், படிப்பெனும் காலவெள்ளத்தில் மிதந்து புதுவைக் கடற்கரைப்பட்டினக் கரையிலேறி என் குருநாதர் இந்திரா பார்த்தசாரதி அவர்களைச் சந்தித்தேன்.

மகாகவி கம்பரின் பெயர் உலகச் செம்மொழி மாநாட்டு பாடலில் இடம்பெறவில்லை என்று கோபங்கொண்ட என் பேராசிரியரின் கலை மனதிற்கும், கம்பர் கோவில் எனும் சிற்றூரில் பிறந்த எனக்கும், ஏதோ இனம்புரியாத பந்தம் என்று நினைக்கிறேன்.

சின்னஞ்சிறுவயதில் எதிர்பாராதவிதமாக என் தந்தையை இழந்ததால் கரையில்லா கடலில் மிதக்கும் ஓர் துன்ப ஓடத்தின் பயணமாகவே என் கல்விக்காலம் இருந்தது.

1988ஆம் ஆண்டு, தட்டுத்தடுமாறி இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்ற பின், மேற்படிப்புக்காக அலைந்து திரிந்த வேளையில், புதுவைப் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தலைமையில் நாடகத்திற்கென புதிதாக நிகழ்கலைப் பள்ளி தொடங்கப்படுகிறது என்ற விளம்பரத்தை ஒரு நாளிதழில் கண்டேன். அதை என் அம்மாவுக்கும் அண்ணனுக்கும் காட்டினேன். கல்லூரி நாட்களில் நான் பெற்ற நாடகப் பரிசுகளை நினைவில் கொண்டு, நான் ஒரு பெரிய திரைப்பட நடிகனாக வருவேன் என்ற நம்பிக்கையில் அவர்கள் என்னை அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்க்க விரும்பினார்கள்.

எப்போதும் முப்போகம் விளையும் காவேரிப்படுகை ஏனோ அந்நாளில் வறண்டு போயிருந்ததால், வறுமை எங்களைச் சூழ்ந்திருந்தது. அம்மா யார் யாரிடமோ கடன் வாங்கி, எங்கள் மீனாட்சிசுந்தரம் மாமாவுடன் என்னை புதுவைக்கு அனுப்பினார். 

பிறந்தது முதல் உடற்காயங்களுக்கு பெயர்போன என் உடலில், தொடைப்பகுதியில் செய்யப்பட்டிருந்த சிறிய அறுவைச் சிகிச்சை தையலுடன் (என் ஆசிரியர் இபா  போதித்த மகாகவி பாசனின் “ஊருபங்கம்” எனும் நாடகம் நினைவில் வருகிறது) பயணமானேன். 

அன்று, சீராக அலைக்காற்று வீசும் கட்டுமாவடியில் வண்டியேறி நாகப்பட்டினம் வழியாக உறங்காத வலிகளுடன் புதுவை எனும் என் எழிலுலகை அடைந்தேன்.

நினைத்தால் அழுகை வருகிறது…

எங்கள் கிராமத்தின் தென்னைமர ஓலைகளின் நறுமணச் சாரல் வீசும் இளங்காலை வேளையில் கம்மாய்நீரின் சம்புக் கோரைகளுக்கு இடையே பழுக்க வைத்திருந்த ஈச்சம் பழக் குலைகளை என் நாய்க்குட்டி “சூட்டி”யோடு தேடி விளையாடிய என் சிறுவயது நினைவுகளும் என்னுடன் பயணித்தன.

மகாகவி இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 150வது பிறந்தநாள் விழாவுக்காக ஆரோவில் கவிஞர் மீனாட்சி அக்கா “ரஸாக்காலம்” என்ற தாகூரின் கதையை மேடையேற்றச் சொல்லி வாய்ப்பளித்தார். மகாகவி பாரதி மொழிபெயர்த்த அந்தக் கதையில், ‘பாடிக் சக்கரவர்த்தி’ எனும் 12 வயதுச் சிறுவனாக நடித்தேன்.  அந்த ஏழைச் சிறுவன் தாயைப்பிரிந்து, படிப்புக்காக தனது மாமாவுடன் கல்கத்தா செல்லும் பயணத்தைப் போலவே என் ஆசிரியரைச் சந்திக்க வந்த என் பயணமும் இருந்தது. அது ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாக அமையப் போகிறது என்பதை அப்போது நான் உணரவில்லை. 

அன்று அதிகாலை, நானும் மாமாவும் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவைத் தட்டினோம். தும்பைப்பூ நிற இடுப்புத்துண்டுடன் ஒரு பெரியவர் கதவைத் திறந்தார். “இந்திரா பார்த்தசாரதி அம்மாவைப் பார்க்க வந்தேன் ” என்று சொன்னேன். வீட்டிலிருந்து கிளம்பும் போது, ‘அந்த அம்மா சொல்வதை கேட்டு நன்றாகப் படிக்க வேண்டும்’ என்று  என்னிடம் அம்மா சொல்லியனுப்பியிருந்தார்.

இலக்கிய வாசிப்பு பழக்கம் இல்லாத நானும் அம்மாவும் இந்திரா பார்த்தசாரதி ஒரு ‘அம்மா ‘ என்றே நினைத்திருந்தோம். ஆனால் கதவைத் திறந்த அந்தப் பெரியவர், ‘ இந்திரா பார்த்தசாரதி அம்மா இல்லை, அப்பா ! ‘ என்று சற்றே கடுமையான அன்போடு சொன்னார். மேலும் புதுவைப்பல்கலைக்கழகத்தின் நூலகம் ராம் இன்டர்நேஷனல் கட்டிடத்தில் இருப்பதாகவும் அங்குதான் உன் ஆசிரியர் இருக்கிறார், உங்களுக்கு அங்குதான் நேர்முகத் தேர்வு நடக்கப் போகிறது என்று வழிகாட்டினார். அந்த பெரியவர் புகழ்பெற்ற இலக்கிய மேதை ஒருவரான க.நா. சுப்பிரமணியம் என்பதை பின்னாளில்தான் தெரிந்து கொண்டேன்.

என் பள்ளிக்காலத்திலிருந்து கல்லூரி நாட்கள் வரை நான் அறிந்திராத புத்தகத்தின் முதல் பக்கத்தை முதன்முதல் வகுபபில் திறந்தார் என் ஆசிரியர் இபா. அன்று முதல்  மணம் மிகுந்த ஓர் புது மொழியின் எழுத்துக்களை நான் கற்க ஆரம்பித்தேன்.  கடினமானதாகவும், 

புரிந்து கொள்ள முடியாத புதிய பாடமாகவும் நாடகப்பாட வகுப்புகள் தொடர்ந்தன.  ஆனால் நாடகக்கலையின் உயிர் மெய் எழுத்துகளை கற்பிக்க இபா எனும் படைப்புலக மலர் தினமும் நிகழ்கலைப்பள்ளியில் மலர்ந்து கொண்டே இருந்தது.

பேரா.இரா.இராசு, பேரா.வ.ஆறுமுகம், தமிழ்த்துறை பேரா.அறிவுநம்பி, குழலிசை மற்றும் யோகா மாஸ்டர் வெங்கடேசன், இசை ஆசிரியர் சரஸ்வதி ஆகியோருடன்  தமிழ் நாடக உலகில் தனது புதிய தடத்தை ஆரம்பித்தார் இந்திரா பாராத்தசாரதி.

சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் கடுமையான நாடகப் பயிற்சிகளுக்குப்  பின்புலமாக இருந்த இபாவின் வசிப்பிடம், எங்களுக்கு ஓர் அலாதியான பறவையின் கூடாக குருகுலமாக இருந்தது. நேரங்கிடைக்கும் போதெல்லாம் இபா வீட்டில் தான் இருப்போம். 

எனக்கும் என் அம்மாவுக்கும் தெரிந்திருந்திராத அம்மா(மாமி) “இந்திரா அம்மாவின் ” சுவைமிகு சோறு, தேனமுதப் பாடல்கள், நாங்கள் வாடகைக்கு-CD எடுத்து வந்து அம்மாவுடன் பார்க்கும் புதிய திரைப்படங்கள். அவரது ரவாரனபு வார்த்தைகள் எல்லாம் மறக்க முடியாத கனவுமயச்சூழலை எங்களுக்குத் தந்தது.

“புல்லாகிமரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்” 

என இந்திரா அம்மா பேரா.வ.ஆறுமுகத்தின் “கருஞ்சுழி” நாடகத்தின் இறுதிக்காட்சியில் பாடும் பாடல் நடித்துக்கொண்டிருக்கும் எங்கள் விழிகளில் கண்ணீர் அருவியாய் சுரக்கும்.

கிராமர் அன்ட் ஏஸ்தெடிக்ஸ்,ப்ளே அனாலிஸிஸ் என இபா நடத்திய பாடங்கள் இன்றும் பசுமரத்து ஆணியாக மனதில் இருக்கிறது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், நாட்டிய சாஸ்திரம், அரிஸ்டாட்டிலின் கவிதையியல் என அவர் வகுப்பின் அழகியல் கூடுவிட்டு கூடுபாய்வது போலிருக்கும். வேத்தியல்- பொதுவியல், சாந்திக்கூத்து- வினோதக்கூத்து, நாட்டியதர்மி- லோக்தர்மி, விதூஷகா-தீரா- தீரதத்தா, ரஸா- சுவை, கண்ணகி-மாதவி, ஐரனி- கதார்சிஸ், தான்சேன்-அகம் பிரம்மாம்ஸ்மி, கம்பன் இளங்கோ, ஷேக்ஸ்பியர், ஐன்ஸ்டீன், இப்சன், ஆர்தர் மில்லர், மீரோஜெக் என அவர் உச்சரிக்கும் வார்த்தைகள் எங்கள் காதுகளில் ஏராளமாக நிறைந்தன. என்னைவிட வகுப்புக் கூட்டாளிகள் இலக்கியம் ம‌ற்றும் நாடக அனுபவம் பெற்றவர்களாக இருந்ததால் அவரோடு நன்றாக உரையாடி  விவாதம் செய்வார்கள். திக்குத்தெரியாத ஆட்டுக்குட்டி போல அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். நாடகக்கல்வி பயில உலகளாவிய நூல் வாசிப்பு இருக்க வேண்டும் என்று அவர் வகுப்பில் உணர்ந்து கொண்டேன்.

ஒருநாள் எங்களிடம் வகுப்பு தவிர வேறு என்ன புத்தகங்கள் படித்தீர்கள் என்று கேட்டார். என்னைத் தவிர அனைவரு‌ம் தாங்கள் படித்த, படிக்கின்ற புத்தகங்களைப் பட்டியலிட்டனர். பாடப்புத்தைக்கூட படம் பார்க்க மட்டுமே திறக்கும் நான் எந்த புத்தகமும் படிக்கவில்லை என்றேன். உடனே அவர் தனது அலுவலக உதவியாளரிடம் நூலக பதிவுப் புத்தகத்தை எடுத்துவரச் சொன்னார். அதில் என் பெயர் இல்லை அவர் சொன்னதும். இனி நீயும் உன் நண்பர்களைப் போல படிக்கவேண்டும் என்று கூறியதுடன் இனி நீங்கள் அனைவரும் நூலகத்திலிருந்து வாரம் தலா ஒரு தமிழ் மற்றும் ஆங்கில நாடக நூல் படித்து அடுத்து வரும் வகுப்பில் அதைப்பற்றிய எண்ணங்களை கூற வேண்டும் என அறிவுறுத்தினார்.

அன்றுதான் முதன்முதலாக என் பெயர் ஒரு நூலக பதிவேட்டில் எழுதப்பட்டது. வேறு வழியில்லாமல் நூலகத்தில் சாத்தரின்(Jean-Paul Satre) தமிழ் மொழிபெயர்ப்பான “மீளமுடியுமா – No Exit “, ஆங்கில மொழி பெயர்ப்பான பிரெக்டின் (Bertolt Brecht) “Mother Courage and Her Children” ஆகிய நாடக நூல்களை அதன் அட்டைப்பட நேர்த்தியை வைத்து எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் அந்த நாடகங்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை, எப்படியோ என் கூட்டாளிகள் உதவியோடு இபாவின் வகுப்பில் அந்த நாடகங்கள் பற்றி ஒப்பித்தேன்.

இபா சிறுபிள்ளைத்தனமான என் முயற்சியைப் பாராட்டியதுடன் திரும்பத்திரும்ப படித்தால்தான் ஒரு இலக்கிய படைப்பின் ஆத்மா விளங்கும் என்ற அறிவுறுத்தினார்.

நாடகப்பாடத்துடன் இலக்கிய உலகையும் எங்களுக்காக உருவாக்கி மகிழ்ந்த இபா ஓராண்டுக்குள் மேலும் இரு புதிய ஆசிரியர்களை நியமிக்கச் செய்தார் அதில் ஒருவர் புகழ்பெற்ற நாட்டுப்புற இசைமேதை கே.ஏ.குணசேகரன் மற்றவர் நாடக ஆசிரியர், இலக்கிய விமர்சகர் அ.ராமசாமி.   இருவரும் இபாவுடன் எங்கள் வாசிப்புத்திறனை மேம்படுத்தினர்.  அத்துடன் திடீரென ஒருநாள் புகழ்பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களையும் எங்கள் ஆசியர்களில் ஒருவராக அறிமுகம் செய்தார்.  அப்போது தமிழகம் அறிந்திராத ஓர் புதிய தமிழ் நாடக தலமாக புதுவைப் பல்கலைக் கழகத்தின் நிகழ்கலைப்பள்ளி உருவாக்கப்பட்டது.

தன்னை தமிழ்த்துறை பேராசிரியர் பணிக்கு  அழைத்த பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தமிழ்த்துறை எனக்குப் பழக்கமானது, நாடகத்திற்கென ஒரு துறை ஆரம்பித்தால் வருவதாக இபா கூறியதால் ஆரம்பிக்கப்பட்டது தான் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளி. 

புதுவைப் பல்கலைக்கழக புதுமைக்கு அடையாளமாக விளங்கும் அந்த உன்னத உலகில் எழுத்தாளர் கிரா, நாடக இயக்குநர் சே.இராமானுஜம், நாடக வடிவமைப்பு மேதை எஸ்.பி.சீனிவாசன், ஒளி இயக்குநர் சே.இரவீந்திரன், கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி எனப் பன்முக வல்லுநர்களின் நேரடி பயிற்சிகள், யோகா, இசை, நடனம், களரி, தெருக்கூத்து, நாடக ஒத்திகைகள் என காலை முதல் இடைவிடாத பயிற்சிகள் எங்களைத் தொடர்ந்தன. திரெளபதி வஸ்திராபகரணம் எனும் பாஞ்சாலி சபதம் மரபுவழி தெருக்கூத்து பயிற்சிப் பட்டறையின் போது பெண் மாணவிகளுக்கு வாய்ப்பளிக்க முடியாது எனத் தயங்கிய புரிசை கண்ணப்பன் தம்பிரானிடம் பேசி முதல் முறையாக பெண்களை தெருக்கூத்தில் பங்கேற்கச் செய்தார் இபா.  இன்று வரை அது தொடர்கிறது. உலகப்புகழ்பெ ற்ற பீட்டர் ஃப்ரூக் போன்ற இயக்குநர்களின் பயிற்சி முகாம்களிலும் நாங்கள்  கலந்து கொண்டோம்.

புதுவைப்பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைப்பள்ளி பாடத்திட்டத்தில் நாடக எழுத்தாக்கத்திற்கென தனியாக ஓரு பாடப்பிரிவு இல்லை, அது ஏன் ? என ஒரு மாணவர் இபாவிடம் கேட்டார். நாடகம் எழுதுவது ஒரு தனிப்பட்ட படைப்பாளியின் கற்பனை விளைவு அதற்கான வரைமுறைகளையும் வரம்புகளையும் கற்பிப்பது சரியாக இருக்காது என்பதால் நாடக எழுத்தாக்கம் பாடத்திட்டத்தில் இடம்பெறவில்லை என பதிலளித்தார். என்றாலும், ஏற்கனவே ஒரு நேர்த்தியான நாடகத்தின் அங்கங்கள் எத்தனை காட்சிகள் எப்படி அமைந்திருக்கும் என்பதை வகுப்புகளில் குறிப்பிடுவார்.  ஒரு நல்ல நாடகம் எப்படி இருக்கும் என்பதை அ.ராமசாமியும் ஒரு நல்ல நாடகத்தின் பிறப்பு எப்படி இருக்கும் அதை எப்படி எழுத வேண்டும் என்பதை பிரபஞ்சனும் விளக்குவார்கள்.

ஒருநாள் வகுப்பில் நீங்கள் ஏன் ஒரு நாடகம் எழுதக்கூடாது எனக்கேட்ட இபா எங்களை நாடகம் எழுதுமாறு உற்சாகப்படுத்தினார்.

என் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த போது நான் எங்கள் காவேரிப்படுகையின் காய்ந்து போன வயல்வெளி பற்றியும் பசி தாங்க முடியாத உழவர்கள் பிணங்களைச் சாப்பிடுகிறார்கள் என்றும் அந்த இரவில் ஒரு நாடகத்தை எழுதினேன்.  மறுநாள் அதை இபாவிடம் கொடுத்த போது வாசிப்பும் அனுபவமும் உள்ளவர்கள் இந்த அசைன்மென்ட்டைச் செய்யவில்லை என்றபடி என் நாடக எழுத்தாக்கத்தை வாங்கிக் கொண்டார்.  அதற்கு மறுநாள் தன் வீட்டிலிருந்து கால்நடையாக வந்து என்னை என் கூட்டாளிகளுக்கு முன் பாராட்டிய அந்தத்துளிப் பொழுதில் எழுதுதல் எனும் மனக்கணக்கை எனக்குத் தந்தார்.  அப்போது முதல் ஒரு பத்துப் பதினோரு வயதுச் சிறுவனாக என் கற்பனைகளை எழுதப்பழகினேன்.  நான் எழுதுவதை மற்றவர்கள் வாசிப்பார்கள் என்பதைப் பற்றியெல்லாம் நான் நினைக்கவில்லை.

இபாவின் அறிவுறுத்தலில் நான் எழுதிய “யாரதிவனம்” எனும் நாடகம் கணையாழியில் பிரசுரமான போது என்னையே என்னால் நம்ப முடியவில்லை.அப்போது நாடக உலக உயிர் மெய் அரிச்சுவடியாக இருந்த என் ஆசிரியரின் பேரன்பின் விளைவே அந்த நாடகப்பிரதி என்று உணர்ந்தேன்.

அக்காலத்தில் பத்திரிக்கைகளில் எங்கள் நாடக முயற்சிகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்த போதும், குறிப்பாக இளம் வயதில் சங்கீத நாடக அகாடமி விழாவிற்கு நான் தேர்வு பெற்ற போதும், எல்லாம் இபா தனது மாணவர்களுக்கு கொடுக்கும் வெளிச்சம் என விமர்சனங்கள் வந்தன. அது உண்மையாகக்கூட இருக்கலாம்.  ஆனால் அது ஓர் உயர்ந்த ஆசிரியரின் கடமை என்று இப்போது  நினைக்கிறேன்.  அது போலவே சங்கீத நாடக அகாடெமியின் நாடக எழுத்தாக்க பயிற்சிப் பட்டறைக்கு நான் எழுதிய “இலைவீடு” தேர்வு பெற்றதற்கும் இபாதான் காரணம் என்று கூறினார்கள்.  நானும் கூட அதை நம்பினேன்.  ஆனால் இலைவீட்டை தேர்வு செய்தது பூர்ணம் விஸ்வநாதன் எனும் பழம்பெரும் நாடக ஆளுமை என்பதை பயிற்சிப்பட்டறையின் போது அறிந்த போது வியந்து போனேன்.  அந்த மேடையில் பூர்ணம் விஸ்வநாதனே இபாவிடம் என்னைப் பாராட்டிய போது “தாகூரின் மனோபாவத்தோடு (பாடிக் சக்கரவர்த்தியின் நினைவு வருகிறது) மிக அழகாக இவன் எழுதிய நாடகத்தை நான் பரிந்துரைக்கவில்லை.  நான் பரிந்துரைத்தது முருகேச பாண்டியன் எழுதிய “ராஜபார்ட்” எனும் நாடகத்தை என்றார் . அப்போது என் அன்புக்கூட்டாளிகளுடன் ஆர்ப்பரித்தேன்.  என் ஆசிரியரின் அந்த வார்த்தைகளை விட வேறென்ன பரிசு இருக்கிறது !

எங்கள் நிகழ்கலைப்பள்ளியின் முதல் நாடகத் தயாரிப்பும் அதன் அரங்கேற்றமும் மறக்க முடியாத பயணத்தின் உன்னதச் சுவடுகள். இபா எழுதிய “ஒளரங்கசீப்” நாடகத்தை எங்கள் ஆசிரியர்களில் ஒருவரான பேரா. இரா .இராசு இயக்கினார்.  தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவரான அவர் புகழ்பெற்ற நவீன தமிழ் நாடக இயக்குநர்களில் ஒருவர்.  மிகவும் கண்டிப்புடன் கடுமையான பயிற்சிகளையும் அளிப்பவர்.  அவரிடம் பணிபுரிவது அவ்வளவு எளிதானதல்ல. பால்வடியும் முகத்தோடு இருந்ததால் எனக்கு அந்த நாடகத்தின் பிரதான பாத்திரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

எனக்கு முக்கியமான பாத்திரங்கள் கொடுத்தால் இளஞ்சிறார்களின் பள்ளிக்கூட நாடகம் போலாகிவிடும் என்று இபா வழக்கம் போல் புன்னகை செய்தார்.ஆனால் மாபெரும் திரைப்பட நடிகனாக வரவேண்டும் என்ற கனவோடு வந்த நான் அதை மிகப்பெரிய ஏமாற்றமாக நினைத்தேன்.

ஒளரங்கசீப் அரங்கேற்றத்திற்கு பெற்றோர்களுக்காக எங்களுக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழை வாங்க மறுத்தேன்.  என் பிடிவாத குணத்தை பெரிது படுத்தாத இபா “உனக்கான வாய்ப்பு வரும்” என்றபடி பத்து அழைப்பிதழ்களை என்னிடம் கொடுத்தார்.  வேறு வழியில்லாமல் அந்த அழைப்பிதழ்களைப் பெற்று என் கல்லூரி வார்டனுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பினேன். மேடையில் என்னைப் பார்க்க முடியாது என்பதால் வீட்டிற்கு அனுப்பவில்லை.  அதுபோல பல்வேறு மாணவர் கோரிக்கைப் போராட்டங்களில் இபாவிடம் வாக்கு வாதங்களும் செய்திருக்கிறேன்.  ஒருமுறை முரண்பட்ட பல்கலைக்கழக அணுகுமுறையால் வாழ்க்கை வீணடிக்கப்பட்டதாக அவரிடம் வாதிட்டேன். அந்த நேரங்களில் “நீ இளையவன் உன் வாழ்க்கையை யாராலும் வீணடிக்க முடியாது” என்று மீண்டும் மீண்டும் புன்னகைப்பார்.  அதில் ஏனோ நிம்மதி அடைந்தவனாக யாவற்றையும் மறந்து விடுவேன். 

அப்போதெல்லாம் , மிக மெல்லிய தேகம் உடைய நான் “நாய்களுக்கு வேண்டிய எலும்புத்துண்டுகளை தூக்கி எறிந்து விட்டால் நாய் ஏன் குரைத்துப்பழக வேண்டும்”,

 “அன்பு என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது  அதை யாரும் எனக்குக் கற்றுத் தரவில்லை”  

                                      – ஒளரங்கசீப்

“மும்தாஜ் நீ அந்தக்கரையில்

நான் இந்தக்கரையில்”

                               – ஷாஜஹான்

” அகம் பிரம்மாம்ஸி…ஒரு பேரரசின் மகாராணியாய் இருக்க வேண்டியவள் பாலைவனத்தில் அனாதையாய் இறந்து கிடக்கிறாள்”                                            – தாரா

போன்ற ஒத்திகையின் போது நடிப்பவர்கள் மறக்கும் வசனங்களை இபா வீட்டில் அம்மாவிடம் நடித்துக் காண்பிப்பேன்.  அவரும் இவந்தாண்டா உண்மையான ஒளரங்கசீப் என்பார்.  ஆனால் அந்த நாடகத்தில் ஒளரங்கசீபின் மகனாக ஒரே ஒரு காட்சியில் வந்து  “ஹஹஹஹா சித்தப்பா மூரத்தின் கதை முடிந்துவிட்டது” எனச் சொல்விட்டு அரங்க வடிவமைப்பாளர் எஸ்.பி.எஸ் சாரிடம் ஓடிவிடுவேன்.   அந்த நாடகத்தில் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் அந்நாடக வசனங்களை படிக்காமலேயே மனப்பாடம் செய்து விட்டதாக அதன் இயக்குநர் இராசு இபாவிடம் என்னைப் பாராட்டும் போது ஏதோ ஹீரோ ஆனது போல் ஒரு மகிழ்ச்சி எனக்குள்  ஏற்படும்.  புதுவை கம்பன் கலையரங்கில் கோலாகலமாக அரங்கேற்றப்பட்டது ஒளரங்கசீப்.  அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர் இபாவின் செறிவான நாடக பாணி மற்றும் அதில் நடித்த மாணவர்களின் நடிப்பு பற்றி மிகவு‌ம் சிலாகித்துப் பாராட்டினார்.  பி்ன்னர் சென்னையிலும் ஒளரங்கசீப் மேடையேற்றப்பட்டது.

தந்தையின் கனவுகளுக்கும் பிள்ளைகளின் செயல்வினைகளுக்குமான முரண்களால் ஆன அந்த நாடகத்தை 2018 ஆண்டு எங்கள் நிகழ்கலைப்பள்ளியில் நானே இயக்கி மகிழ்ந்தேன்.  தொடர்ந்து இபாவின் நாடகங்களுடன் பிற தமிழ், இந்திய, மேற்கத்திய நாடங்களை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தயாரித்து அளித்தனர். படிப்படியாக என்னுடன் பயின்றவர்களுக்கு நடிகராக, இயக்குநராக, பல்துறை வடிவமைப்பாளராக, ஆய்வாளராக, தற்போது துணைவேந்தராக (டாக்டர் அனந்தகிருஷ்ணன், துணைவேந்தர் ,கலாமண்டலம்) இபாவின் நாடகத்தடம் மூலம் புதிய பாதைகள் பிறந்தன. ஒரு பால்வாடிச் சிறுவனாக நான் அவர்களுடன் இருந்தேன். அந்நாளில் வாரந்தோறும் வியாழனன்று மாலை மாணவர்கள் தங்கள் நாடகத்திறன்களை அளிப்பதற்கான பரீட்சார்த்த களத்திற்கு நேரம் வழங்கப்பட்டிருந்தது.  அதில் ஒவ்வொரு மாணவரும் ஆய்வுக்கட்டுரைகள், நாடகம் மற்றும் திரை விமர்சனங்கள், குறுநாடகங்கள் எனத் தொடர்ந்து வழங்கி வந்தனர். என் முறை வந்த போதுதான் ” கடல் பூதம்” ஏனும் கதையை நடித்தேன். மிகுந்த கூச்ச சுபாவம் கொண்ட நான், இல்லாத கடலில் ஒரு கட்டுமரமேறி மீன்களைத் தேடினேன். வானத்து விண்மீன்களிடம் கடல் மீன்களிருக்கும் திசைகளைக்கேட்டேன்.  என் ஆசிரியர்களும் அன்புக்கூட்டாளிகளும் ஆர்ப்பரிக்க “கீழேயும் நீலநிறம் மேலேயும் நீலநிறம், ஒரு நீலநிறப் பந்தலுக்குள் இருப்பது போலிருக்கே!” என ஆழ்கடலில் இருக்கும் பரவசத்தில் வசனம் பேசினேன்.  நாடகம் முடிந்ததும் எல்லோரும் என்னைப் பாராட்டினர்.  கிரா, பிரபஞ்சன் போன்ற இலக்கிய ஆளுமைகளும் என்னைப்பாராட்டினார்கள் என்றால் எப்படி இருக்கும்!  கடைசியாக நிகழ்கலைப்பள்ளி இயக்குநர் இபாவிடம் சென்றேன்.  அவர் சில்லிடும் என் விரல்களைப் பிடித்து

 “நல்லா நடிக்கிறே, நீ சிறுவர் நாடகம் நடிக்கலாமே! ” என்றார். இபாவிடம் நான் பெற்ற முதல் பாராட்டும் ஆசியும் அதுதான். உற்சாகத்தோடு தூள்ளியோடும் சிறார் உலகம் எனக்குள் வந்ததற்கான அந்த “ஆசி”ஆழ்மனதில் மனதில் அப்படியே இருக்கிறது.

இபா தான் எழுதிய “வீடு” நாடகத்தை தானே இயக்கினார்.அதில் சர்வேசன் எனும் பாத்திரத்தில் டெல்லியிலிருந்து கும்பகோணம் வரும் சர்வேசன் தன் வீட்டில் வசிக்கும் மூதாட்டியிடம் பேசும் வசனங்களை எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார்.  நான் அவர் கண்களைப் பார்ப்பேன்… ஓர் உயர்ந்த உள்ளம் தன் படைப்புகளில் எப்படியெல்லாம் வருகிறது என்பதை உணர்வேன். நான் நடித்த சர்வேசன் ஒரு சிறுவனின் பாத்திரமல்ல, அது இபாவின் பாத்திரம் என்று தெரிந்ததும் நண்பர்களிடம் திரும்பத்திரும்ப நடித்துக்காட்டி மகிழ்வேன்.

அடுத்த கட்டமாக இபாவின் காலயெந்திரங்கள் உருவானது.  பேரா.  இராமானுஜம் அந்த நாடகத்தை இயக்கினார்.  அதில் நடிக்க வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் இயக்குநரோடு பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.  நுட்பமான மனோபாவத்தோடு எழுதப்பட்ட அந்த நாடகத்தை ரசித்துச்சுவைத்து இயக்கிய இராமானுஜத்தின் உத்தி முறைகளோடு பயணித்ததும் மிகப்பெரிய அனுபவம்.

பசி, மழை எனத் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருந்த நிலையில் ஷேக்ஸ்பியரின் ‘கிங் லியர்” நாடகத்தை இபா “இறுதியாட்டம்” எனும் தனது பாணி தமிழ் நாடகமாக எழுதினார்.  இபாவின் ஆய்வு மாணவரான சேர்ந்த தேசிய நாடகப் பள்ளி முன்னாள் மாணவர் தாமஸ் என்பவர் பிரமாண்டமாக படைப்பாக நிகழ்கலைப்பள்ளியின் தயாரிப்பில் இயக்கினார். முதுகலைப்பட்டம் நிறைவடைந்த நிலையிலும்  நானும் நாடக விமர்சகர் அண்ணாமலையும் இபாவுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த நாடகத்தில் அரண்மனைக் காவலர்களாக நடித்தோம்.

நாடகப்படிப்பு நிறைவடைந்ததும் எல்லா நண்பர்களும் தங்கள் ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.  நான் மட்டும் புதுவையில் தங்கி சிறுவர்களுக்கான நாடகங்கள் நடித்துப் பிழைத்துக் கொண்டிருந்தேன்.  ஒருநாள் ஒரு நர்சரி பள்ளியில் நாடகம் நடிக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.  அப்போது நான் தங்கியிருந்த “கிருஷ்ணா இளைஞர் விடுதி”க்கு வந்த ஆறுமுகம் சார் மாமி போயிட்டாங்கடா என்று கண்ணீர் விட்டார். திடுக்கிட்டேன்.அன்றைய நாடக நிகழ்ச்சியை மறுதினத்திற்கு மாற்றி வீட்டு இபாவின் வீடு சென்றேன்.  இந்திரா அம்மா புன்னகையோடு படுத்திருந்தார்.  இபாவின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.

பல முறை அம்மாவின் சுவையான தின்பண்டங்களை சாப்பிட்டுக் கொண்டு அவரின் சுவாரஸ்யமான பேச்சுகளுக்கிடையே வேடிக்கை செய்வோம். ஒரு முறை திருமணம், பெண் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்த போது “கல்யாணம் கட்டிக் கொள்ளும் பெண்ணை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அடிப்பேன் ” என்று  சொன்னேன். அடுத்த நொடியே “என்னது கட்டிய பொண்டாட்டிய அடிப்பியா ? என்ன திமிருடா இவனுக்கு, கொன்றுவேன்” என்றார் அம்மா. 

“எங்க ஊரில எல்லா ஆம்பிளைகளும் அப்படித்தானே செய்றாங்க”

என்றேன்.

“அவங்க படிக்காதவங்கடா…நீ படிச்சிருக்கே..அப்படியெல்லாம் நடந்துக்கக் கூடாது என்று சொன்ன அந்தத் தாயுள்ளம்

 “செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 

எல்லாப் பிறப்பும் பிறந்து…”

 எனப்பாடி எங்கள் குருநாதரையும்  எங்களையும் பிரிந்து சென்றது. அவருக்கு இறுதிச்சடங்குகள் முடிந்த பின் வந்த இபாவின் மகன் முகுந்தன் அண்ணன் “அம்மாவுக்கு நீங்கதான் உண்மையான பிள்ளைகள்” எனக் கதறிய போது இதயமே நொருங்கியது. இபா மட்டுமல்லாது அவரது குடும்பமும் எங்கள் மீது மறக்க முடியாத அன்பு கொண்டிருந்தனர்.

அம்மாவின் பிரிவுக்குப் பின் இபா புதுவையையும், புதுவைப் பல்கலைக்கழகத்தையும் பிரிந்து சென்னை சென்றுவிட்டார்.ஆனாலும் அவரது மாணவர்களாக அவரோடும் அவரது நாடகங்களொடும் தொடர்ந்து பயணிக்கிறோம்.

2010 ஆண்டு கவி. மீனாட்சி அக்கா பெரியோர்களுக்காக நீ ஒரு நாடகம் தயாரிக்க வேண்டும் என்று ஒரு வாய்ப்பு வழங்கினார். நாடகப்படிப்பு முடிந்ததும் வாழ்க்கையில் சிறார்களுக்காக மட்டுமே நாடகங்கள் தயாரிப்பது, நடிப்பது என்றிருந்த என்னிடம் பெரியோர்களுக்காக ஏன் நடிக்கக் கூடாது என்று  பலரும் கேட்பது வழக்கம். அதை மீனாட்சி அக்காவும் கேட்டதாலும், அவரது தொடர் சிறார் இலக்கிய, நாடக உலக வழிகாட்டல் எனக்கு இருந்ததாலும் ஒப்புக் கொண்டேன்.

மறுநாள் இபாவிடம் அது தொடர்பாகப் பேசினேன். சரி வேண்டுமானால் ஷேக்ஸ்பியர் நாடகம் செய் என்றவர் “தி டெம்பெஸ்ட்” நாடகத்தை சூறாவளி எனும் தமிழ்நாடகமாக எழுதியிருக்கிறேன். இன்னும் அது நூலாக வரவில்லை,  இதுவரை யாரும் அரங்கேற்றமும் செய்யவில்லை, பெரியவர்களுடன் சிறுவர்களுக்கும் அந்த நாடகம் பிடிக்கும் என்று அதன் தட்டச்சுப்பிரதியை அனுப்பினார். நவீன நாடக எழுத்தாளர்களில் இபாவின் நாடகங்களுக்கு ஓர் சிறப்புண்டு. அவர் எழுதும் நாடகங்கள் உடனே அரங்கேறிவிடும். அதுதான் சரியான தருணம் எனறு யாரும் மேடையேற்றாத சூறாவளியை எங்கள் புதுவை ஆழி குழந்தைகள் நாடகக்குழு சார்பாக தயாரித்து ஆரோவில் பாரத் நிவாஸ் அரங்கேற்றினோம். புதுவை கலை இலக்கிய அன்பர்களும் எங்களுடன் அந்த நாடகத்தில் நடித்தனர். புதுவை நாடககலைச் சங்கத் தலைவர் புதுவைதாசன், புதுவை கவிஞர் தேவதாஸ், தமிழ்ச்சங்க செயலாளர் கவி. மு.பாலசுப்பிரமணியன், புதுவைச் சிவம் அவர்களின் மகன் சிவ இளங்கோ, பேரன் இளங்கோ கோவலன், நாடக நடிகர் ராபெர்ட் ஆகியோர் எங்களுடன் நடிக்க புகழ்பெற்ற இசை ஆசிரியர் ஜெகதீசன், பராங்குசம் முத்து ஆகியோர் இசை வழங்கினர். பலத்த கரவொலிகளோடு நாடக நிறைவில் மீனாட்சி அக்கா இபாவை மேடைக்கு அழைத்தார்.  சிறுவர் நாடகம் மட்டுமே எனக்குத் தெரியும் என்பதை நன்றாக அறிந்த என் ஆசிரியர் இபா என்ன சொல்லப் போகிறாரோ என்று காத்திருந்தேன்.  அதிசய மலர் போல் சிரித்தபடி மிகமிக நன்றாகத் தயாரித்திருக்கிறாய் என்று கரங்கொட்டி பாராட்டினார்.  அவரைத் தொடர்ந்து பேசிய கவி. மீனாட்சி வேலு தயாரித்த மிகச்சிறந்த சிறார் நாடகங்களில் ஒன்று “சூறாவளி” என்றதும் பார்வையாளர்களும் “ஆமாம்” என்று பாராட்டளித்தனர்.  பின்னர் சேலத்தில் சேஷாஸ் பள்ளியின் ஆண்டு விழா தயாரிப்பில் சுமார் 150 மாணவர்களை நடிக்க வைத்து இயக்கினேன்.

“உண்மைதான்.. குழந்தையாகவே பிறக்கிறோம்.குழந்தையாகவே வாழ்கிறோம், வயது வேறுபாடுகளைத் தவிர பெரியவர் என உலகில் யாரிருக்கிறார்…! ஆச்சரியமாக இருக்கிறது .  இபாவின் மலர்ச்சிரிப்பில் அழகான ஓர் குழந்தைமையைப் பார்த்தேன்.

என் அன்பான ஆசிரியரின் 96 பிறந்தநாளிலும் அந்த புத்தம் புதிய மலர்சிரிப்பைப் பார்த்தேன்.


வேலு சரவணன்

ஆழி என்ற நாடகக் குழு மூலம் நாடகம் நடத்தி வரும் வேலு.சரவணன், சிறுவர்களுக்கான நாடக அரங்கு பற்றிய சிந்தனையுள்ளவர். இன்று தமிழகத்தில் சிறுவர் அரங்கு பற்றியோ, பள்ளி நாடகங்கள் பற்றியோ பேசினால் உறுதியாக வேலு. சரவணன் பெயர் இடம்பெறும். கிராமம், கிராமம் சார்ந்த கதைகளில் தனக்கேயான நிகழ்த்து முறைகளை உருவாக்கியவர். பாண்டிச்சேரியில் பல்கலை – நாடகப் பள்ளியில் பகுதி நேர விரிவுரையாளராக உள்ளார். இவருடைய கடல் பூதம், குதூகல வேட்டை என்னும் இரு சிறுவர் நாடகங்களும் இரண்டாயிரம் தடவைக்கு மேல் மேடையேறியுள்ளன.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிகழ்த்துகலை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், பல சிறுவர் நாடக நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் பதிப்பித்திருக்கிறார்.  2017-ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமியின் பால புரஸ்கார் விருதையும் 2016-ஆம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் ஒன்றமைப்பான ஃபெட்னாவின் விருதையும் பெற்றிருக்கிறார். 


Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.