விட்டல் ராவின் ’போக்கிடம்’: வேர்களின் விடைபெறல்
எழுத்தாளர் விட்டல்ராவ் எழுதிய ‘போக்கிடம்’ நாவல் 1976 ல் இலக்கியச் சிந்தனைப் பரிசைப் பெற்றிருக்கிறது. இதுவே இலக்கியச் சிந்தனையின் முதல் ஆண்டு பரிசுத்தேர்வு. விட்டல்ராவை வைத்து இலக்கிய அமைப்பில் ஒரு நல்ல துவக்கம். கையெழுத்துப் பிரதியாக நாவலை அனுப்பிப் போட்டியிலே வென்றிருக்கிறார் விட்டல் ராவ்.
சேலம் மாவட்டத்தில் மாக்னசைட் இரும்புத்தாது சேர்வராயன் மலையை அடுத்துப் புதைந்து கிடப்பதை நாம் கேள்வியுற்றிருக்கிறோம். சேலம் ஜில்லாவிலே ஒரு குக்கிராமம் டேனிஷ் பேட்டை.. அங்கே இரும்புத்தாதுவை சுரங்கம் வைத்து வெட்டி எடுக்க அரசு திட்டமிடுகிறது. அரசின் ஆணைக்கிணங்க கிராமத்தைக்காலி செய்து மூட்டை முடிச்சுகளோடு கிராமத்து மக்கள் வேறு ஒரு இருப்பிடம் நோக்கிப் பயணமாகிறார்கள். அந்தச் சிறிய கிராமத்தில் ஆசிரியப்பணி செய்யச் சென்ற சுகவனம் இந்தப்புனைகதையின் நாயகன். அவ்வாசிரியன் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் நமக்குக் கதைப்பொருளாகின்றன.
சிறுவாணி வாசகர் வட்டம் வெளியிட்ட இப்புதினத்தின் மூன்றாம் பதிப்புக்கு மதிப்பிற்குரிய எழுத்தாளர் பாவண்ணன் முன்னுரை வழங்கியிருக்கிறார். அம்முன்னுரை இப்படிப்பேசுகிறது.

‘போக்கிடம் நாவலின் பேசுபொருளான இடப்பெயர்வே அதன் இளமைக்கும் புதுமைக்கும் காரணம் என இப்போது புரிகிறது. மானுடகுலம் உருவான காலத்திலிருந்தே இடப்பெயர்வுகளும் உருவாகிவிட்ட சூழலில் இடம்பெயர்தல் தொடர்பான ஒரு படைப்பு ஒரு போதும் தன் இளமையை இழப்பதில்லை. காலம்தோறும் வாழ்வதற்கான வழிகளைத்தேடி அமைதியைத்தேடி பாதுகாப்பத்தேடி வெற்றியைத்தேடி சுதந்திரத்தைத்தேடி மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள்.’
சேலத்து மக்கள் பேசும் மொழியை அப்படியே அந்த மண்ணின் மணத்தோடு எழுத்தில் வழங்கியிருக்கிறார் விட்டல்ராவ். அவரும் சேலத்துக்காரர்தான்.’ உங்களுடன் கொஞ்சநேரம்’ என்று தலைப்பிட்டு ஒரு சிறு கட்டுரையை இப்புத்தகத்தில் விட்டல்ராவ் கொடுத்துள்ளார். அதனைப்படித்து நாம் மெய்சிலிர்த்துப் போகிறோம்.
‘’சேலம் ஜில்லா என் ஜில்லா. நான் பிறந்து வளர்ந்து ஆளான ஜில்லா. அதன் மண்ணை, அதன் மனிதர்களை, அவர்களின் விஷயங்களையெல்லாம் இலக்கியமாய்ப்படைத்து என் ஜில்லாவைத் தமிழ் இலக்கியத்தில் ஓர் உன்னத ஸ்தானம் பெற வைக்கவெண்டும் என்பது எனது தீராத ஆசை. அந்த ஆசையை ’போக்கிடம்’ தீர்த்திருக்கிறதென்று நான் அறியும் நேரமே எனக்கு மிக உன்னதமான நேரம்’
பாவண்ணன் விட்டல்ராவை நேர்காண்பதுவும் நூலின் கடைசிப் பகுதியாய் இணைக்கப்பட்டுள்ளது. விட்டல்ராவை மேலும் விஸ்தாரமாய் வாசகர்கள் அறியக்கூடும்.
டேனிஷ்பேட்டைக்காரனுக்கு சேர்வராயன்மலை ஓர் உயிருள்ள பொருள். அவன் இப்படிப்பேசுகிறான்.
.போனவாட்டி பாத்ததுக்கு இந்தவாட்டி பாக்கிறப்போ வளர்ந்திருக்கு மலை…இந்த மலை இப்படியே வளந்து கினே போவும்.. வளந்து மானத்தைத்தொடும் தோ அது கீதே அதுதான் அப்பா மலை. இது ஆத்தா, தொலைவுலே தெரியிது பாரு புளூவ்வா அதெல்லாம் புள்ளிங்க’
போக்கிடம் புதினத்தில் ‘பேச்சி’ என்பவளின் பாத்திரப்படைப்பு உச்சம் எனலாம். கதைப்பின்னலில் அவளைச்சுற்றியே அனேகமாக அத்தனை பாத்திரங்களும் சுழன்று வருவதைப்பார்க்க முடிகிறது. பேச்சி கணவனை இழந்தவள். பெற்ற பிள்ளை ஒருவன் அவளோடு கூடவே இருக்கிறான். பேச்சிக்கு இருபது வயது. ஆடுகளை வைத்து அவள் பிழைப்பு நடக்கிறது. டேனிஷ்பேட்டையின் பஞ்சாயத்து போர்டு தலைவர் மாரிமுத்துக்கவுண்டர். அவருக்கும் பேச்சிக்கும் உள்ள பாலியல் தொடர்பு ஊரே அறிந்த ரகசியம். மாரிமுத்துக்கவுண்டர் பேச்சிக்கு உதவிசெய்து ஆதரிக்கும் நோக்கத்தில் எல்லாம் பழகவில்லை. அவரின் பாலியல் இச்சைக்கு வடிகாலாக மட்டுமே அவள் காட்டப்படுகிறாள். சுகவனமும் அவளோடு எப்போதேனும் தொடர்பு வைத்துக்கொள்கிறான். பாலுணர்வு என்னும் பிசாசு யாரையும் விட்டு வைப்பதில்லை. சுப்புருவுக்கு அவளை அனுபவித்துவிடவேண்டும் என்கிற உணர்வு மட்டுமே பிரதானமாக உள்ளது.
டேனிஷ் பேட்டைக்கிக்குப் புதிய தார்ச்சாலை அமைக்க வரும் ரோட் ரோல்லர் டிரைவர் பீர் முகம்மது பேச்சியை அழைத்துக்கொண்டு வேறு எங்கோ ஒரு இடத்துக்குச் சென்றுவிடுகிறான். அவர்களோடு சிறுவன் பையப்பனும் சென்றுவிடுகிறான்.
மொரப்பூர் என்கிற சற்று பெரிய ஊரில் பிளாக் டெவலப்மன்ட் அலுவலகம் இருந்தது. அந்த அலுவலகத்திற்குச் சென்றுதான் சுகவனம் ஆசிரியர் வேலையில் சேர்ந்ததற்கான அறிக்கை தரவேண்டும். அந்தப் பள்ளிப்பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வலுவலகம் பற்றி விட்டல்ராவ் அழகாக எழுதுகிறார். அதில்தான் எத்தனை எள்ளல். அத்தனையும் பாந்தமான எள்ளல்.
‘பிளாக் டெவலப்மெண்ட் அலுவலகம் மிகவும் சிறியது. நான்கைந்து குமாஸ்தாக்கள் கடை விரித்திருந்தனர். மாநில அரசு அலுவலகங்களுக்கே உரிய லட்சணத்தோடு , சாண நிறத்து காகிதக்குவியல்களும், காவி நிற ஃபைல்களும், ஒரு தலைமுறைக்கால புழுதி படர்ந்து, மனித சக்தியையும் சாதனையையும் நம்பிக்கையையும் மீறிப்போய்க் கிடந்தன. எடை போட்டாலுங்கூட அலுவலகத்துச் சிப்பந்திகளின் எடையைவிடக் காகிதங்களின் எடையே கூடுதலாக இருக்கும்.’
சுகவனம் ஜாயினிங் ரிபோர்ட்டை எழுதி ஒரு குமாஸ்தாவிடம் நீட்டிவிட்டு சர்வீஸ் ரெஜிஸ்டருக்காக ஒரு அரை ரூபாய் நாணயத்தை எடுத்துவைத்தான். இந்த வரியில் நீட்டிவிட்டு, எடுத்து வைத்து, என்பன ’ஆகப்பொருத்தமாக வார்த்தைகள். அந்த குமாஸ்தா சுகவனத்திடம் என்ன பதில் சொல்கிறார் பாருங்கள்.
’இன்ஸ்பெக்ஷனுக்கு டெபுடி பால் கிருபைநாதன் வரும்போது கோழியடிச்சு கவனிச்சுக்கோங்க…ஒங்களுக்கு எந்தத்தொந்தரவும் கிடையாது..’ சொல்லிவிட்டுச் சிரித்தான் அந்த குமாஸ்தா. தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு எழுதுகிறார் விட்டல் ராவ்.
மாரிமுத்துக்கவுண்டருக்கு ஒரு மகன் தீர்த்தகிரி. பள்ளியிறுதி வகுப்பில் மார்ச்சில் தோற்றுவிட்டு அக்டோபருக்குத் தயாராகிறான். அவன் தன் பாட்டி வீட்டிலே தங்கி படிக்கிறான். சுகவனத்திடம் தீர்த்தகிரி உரையாடுகிறான். அவன் ஆங்கிலத்திலே மிக மிகப் பலஹீனமானவன். ஆனால் இந்தி மொழியைத்தான் எதிர்த்தானாம். படிக்கவும் மாட்டானாம். இந்தியில் முப்பது மார்க் வாங்கியிருக்கிறான். அதெப்படி சாத்தியமாயிற்று என்கிறார் சுகவனம். அதற்கு தீர்த்தகிரி சரியாகப் பதில் தருகிறான்.
‘ஆமா சார். பரீட்சைக்கு படிச்சிட்டெல்லாம் போவுறதில்லே. படிக்கவுந்தெரியாதே.ஆனா இந்திப்பரீட்சையிலே தர்ராங்களே கொர்ச்சின் பேப்பரு. அந்த கொர்ச்சின் பேப்பரை அப்பிடியே ஆன்ஸ்ர் பேப்பர்லே காப்பிப் பண்ணித் தந்தாப் போதும். எங்க இந்தி மாஸ்டரு முப்பதை போட்டிருவாரு’
இந்தப்படிக்கு அண்ணன்மார்கள் படித்த அதே இந்தியை எதிர்த்துத்தான் தமிழ் நிலத்தில் தொடர் போராட்டங்கள் ரயில் மறியல் கல்லடி துப்பாக்கிச்சூடு தீயிடுதல் தற்கொலை தொடர்ந்து ஆட்சிமாற்றம் அத்தனையும் அரங்கேறியது. வாசகர்களில் சிலருக்கேனும் இச்செய்தி சிந்தனையைக் கிளறக்கூடும்.
சுகவனம் பணியாற்றும் பள்ளிக்கூடம் பற்றி அறிய வேண்டாமா? ஒன்று முதல் ஐந்து வரை வகுப்புகள். ஐந்து வகுப்புகளிலும் சேர்த்து மொத்தமாய் எழுபது மாணவர்கள். ஐந்து வகுப்புக்களுக்கும் ஒரே ஆசிரியர். அது சுகவனம்தான். பள்ளிக்குப் பாதி மாணவர்கள் தாமதமாக வருவார்கள். அல்லது வராமல் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள் என்று சுகவனம் கேள்வி வைக்கிறான். மானவர்களின் பதில்கள் இப்படி வருகின்றன.
‘காட்டுக்கு வெறகு பொறுக்கியாறப் போயிருப்பாஞ் சார்’
‘கம்மங்கொல்லையிலே குருவி முடுக்கிக்கினு கீறாஞ்சார்.’
‘சந்தைக்குப் பூ எடுத்துக்கினு போயிருப்பாஞ் சார்’
பேச்சியின் மகன் பையப்பனை பிரம்பால் அடித்து விடுகிறார் ஆசிரியர் சுகவனம். பேச்சி பள்ளிக்கூடத்திற்கு வந்து சத்தம் போடுகிறாள்.
‘நீங்க மனுசந்தானா? இந்த மாதிரி பச்செ புள்ளையைப் போட்டுக் குச்சியாலே அடிச்சிருக்கீங்களே அப்பனில்லாத பயன்னா அனாதயாப் போய்ட்டானா என்ன..? பாருங்க இவுத்தெ’ என்றாள். பையனை முன்பக்கமாய் இழுத்து உள்ளங்கையைத் திருப்பிக் காட்டுகிறாள்.
‘மன்னிச்சுக்கோம்மா.. வேணுமின்னு அடிக்கல்லே. பையனைத் திருத்தோணுமின்னுதான்’ தடுமாறிப்பதில் சொல்கிறான் சுகவனம்.
‘நல்லாக்கீது ஒங்க நடவடிக்கெ’ சொல்லிய பேச்சி சுகவனத்தை ஒருமுறை முறைக்கிறாள்.
இரும்புக்கனிமம் தேடி வந்த மத்திய அரசு அதிகாரிகளோடு சுகவனம் அவர்கள் இலாகா வண்டியில் இங்கும் அங்கும் போய் வருகிறான். டேனிஷ்பேட்டையில் இரும்பு இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஊர் மக்கள் சுகவனத்தைக் கேள்வி கேட்டுத் திணற அடிக்கின்றனர். சுகவனம் ஓடையிலிருந்து பிடி மணலை எடுத்து வருகிறான். ஒரு பேப்பரில் கொட்டிக்கொள்கிறான். தன் ஜேபியிலுள்ள லாடக்காந்தத்தை அதன் மீது எடுத்து வைக்கிறான். லாடக்கந்தத்த்தைப் பிறகு உயரே தூக்கிக்காட்டுகிறான். லாடக்காந்தத்திற்கு தாடி முளைத்துத் தொங்குகிறது. இரும்புத்துகள் தாடி போல் காந்தத்தில் ஒட்டிக்கொண்டு காட்சியாகிறது. இந்த ஊர் முழுவதும் இரும்பு இருப்பது உறுதியாகிறது. ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டு சுகவனத்தையே பார்க்கிறார்கள்.
ஒரு மணியார்டர் வாங்குவதற்கு கையெழுத்துப்போடவேண்டும். சுகவனத்திடம் பேனா கடன் கேட்கிறாள் பேச்சி. எப்படி
‘ரவூண்டு பேனா குடுங்க சார் மணியார்டரு வந்துக்கீது. ஒப்பம் போடணும்’
பேனாவை வாங்கிப்போனவள் போனவள்தான். பேனாவைத்திரும்பக் கேட்டு வாங்கப் பேச்சி வீட்டை விசாரித்துக்கொண்டு நடக்கிறான் சுகவனம் . பையப்பனின் தாய்தான் அந்தப்பேச்சி. இளம்பெண். கைம்பெண். பேச்சி வீட்டில் ஒதுங்கி இருந்த கவுண்டர் வெளியே வருகிறார். அவர் காபி குடித்துவிட்டுச் செல்வதாயும் இந்த ஊரில் காபி போடத்தெரிந்த ஒரே நபர் தான்தானென்றும் சுகவனத்திடம் கொசுறு செய்தி சொல்கிறாள். பையப்பன் நாவிதன் கடைக்குச் சென்றிருக்கிறான். அவன் முடி வெட்டிக்கொண்டு வீடு திரும்புகிறான். ஊர் ச்சிறுவர்கள் அவன் முடிவெட்டிக்கொண்டு வருவதால்’ தீட்டு ’ என்று சொல்லி அவனிடமிருந்து தூரம் தூரமாய்ப் போகின்றனர்.
‘ஓடுங்க எல்லாரும். பையப்பன் நாசுவங்கடையிலேந்து வர்ரான்’ என்று அச்சிறுவர்கள் கூச்சலிடுகின்றனர்.
‘யம்பேரு மானம்.என்னியேத் தொட்டா பாவம். யம்பேரு மானம் என்னியேத் தொட்டா பாவம்’ என்று பாட்டுப்பாடுகிறார்கள். வலக்கையால் தம் தலையைத்தொட்டுக்கொண்டு தரையில் அமர்கிறார்கள். அப்படிச் சொல்லிவிட்டு அமர்ந்தவர்களைத் தீட்டுக்காரர்கள் தொடக்கூடாது என்கிற கிராம ஐதீகத்தை நமக்குச் சுட்டிச்செல்கிறார் விட்டல்ராவ். அக்குக்கிராமத்தில் நிகழும் சிறு சிறு அசைவுகளையும் எப்படி கூர்ந்து நோக்கியிருக்கிறார் எழுத்தாளர் என்று வாசகன் மலைத்துத்தான் போகிறான்.
இந்தப்பாட்டைப்பாடி தரையில் அமர்ந்தவர்களை விட்டு விட்டு மற்றவர்களைத் துரத்திக்கொண்டு ஓடினான் பையப்பன் என்று போகிறது கதை.
சுகவனம் பள்ளியில் பிள்ளைகளுக்கு நிறைய கதைகள் சொல்லுகிறான். அவர்கள் போடும் கூச்சலை அடக்க வேண்டும் என்றால் கதை சொல்லியே ஆகவேண்டும். ராஜா ராணிக் கதை, ஈசாப் கதை, தெனாலி ராமன் கதை, பேய்ப்பிசாசு கதை, மந்திரவாதிகள், துப்பாக்கிக் கதை, சாகசக் கதை இப்படி அடுக்கடுக்காய் கதைகள் சொல்லி மாணவர்களை கட்டுக்குள் கொண்டு வருகிறான். ஒவ்வொரு கதையும் சொல்லி முடித்தபின் இதனால் நீ அறிந்து கொள்லும் நீதி என்ன? என்ற கேள்வியைக் கட்டாயம் வைப்பான். அப்படிக் கேட்பது சுகவனத்திற்கு பிடிக்காதுதான். வேறு வழியில்லையே. அந்தக்கேள்வி மட்டுமே பிள்ளைகள்’ இன்னும் இன்னும் கதை சொல்லுங்கள் சார்’ என்று அவனைத் தொல்லைப்படுத்தாமல் இருப்பதற்குக் கட்டை போடும்.
மாரிமுத்துக் கவுண்டர் வீட்டில் பூசை நடக்கிறது. நல்ல கூட்டம். சுகவனத்திற்கு மட்டும் ஒரு நாற்காலி போட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் தரையில் அமர்ந்து கொள்கிறார்கள். சுகவனத்தைத் தன் பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்க வேண்டிப்பேசுவதற்காக சுப்புரு அழைக்கிறான். சுகவனம் வெளியில் சென்று வரக் கவுண்டரிடம் சொல்லிக்கொள்கிறார். உடனே கவுண்டர் சுகவனத்திடம் சொல்கிறார்,
‘ஏங்க… நம்பூட்லயே கக்கூசு கீதே . நம்பூடு ஒங்கூடு மாதிரி இருக்கு. ஏன் வெளில போவுறது’
’அதுக்கோசரம் போவல்லே கவுண்டரே. சும்மா’ சுகவனம் சமாளித்துப் பதில் சொல்லுகிறான்.
சுப்புரு சுகவனத்திடம் தன் பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்க சுகவனத்திடம் பேசுவதைப்பாருங்கள். ரீங்கரிக்கும் சேலத்து பாஷையைத்தான் விட்டல்ராவ் எத்தனை ரம்மியமாய் நம் காதுகளில் கொண்டு சேர்க்கிறார்.
‘நம்ம பசங்க நல்லாவேப் படிக்கறதில்லே சார். கொஞ்சம் அதுங்களுக்கு புரவேட்டு டீ்ஸன் சொல்லிக் குடுக்கலாமுனுதான் ஒங்களை கூட்டியாறச்சொன்னது. நம்ப தொளிலு கீதே கரும்பி கிஸ்ஸுரு , அதுக்கு ஏகமாப் போட்டி.வெவசாயம் சரியில்லே. கெவுருமெண்டும் சரியில்லே.இன்னிக்கி கீற சட்டம் நாளைக்கு வேற. அது நமக்குக் கட்டுப்புடியாகல்லே. பசங்களையாச்சி நல்லா படிக்கவுட்றலாமுனா வேதில போவுறதுங்க படிக்கவே மாட்டேங்குது. அதனாலே நீங்க கொஞ்சம் அதுங்களுக்கு வூட்லே கண்டிப்பு கறாரா புரவேட் டீஸன் சொல்லிக்கோணும். மாசம் எவ்வளவு கேக்கறீங்க?’
ஊரில் கர்ண மோட்சம் கூத்து நடக்கிறது. கர்ணனாக சின்னக்காளி நடிக்கிறான். பொதுவசனத்தோடு மேடை இயக்கம் தொடங்குகிறது. ‘ அகோதெப்படி யென்றால் , இந்தப்பிரகாரமாக துரியோதனன் அரசு செய்து வாராநின்ற அஸ்தினாபுரி பட்ணத்தில் விளங்கியிராநின்ற வினாயகமூர்த்தி சபைக்கி வருகிற விதங்காண்க’ கர்ணன் சின்னகாளி தான் வருவதை சபைக்கு எப்படி அறிவிக்கிறான் பாருங்கள்.
‘தேரின் மீதிலேறி வந்தேனே
கர்ண பூபதி
மண்டலம் தானதிர டங்கா
மாரியடிடா ஜெயமென்று
சல்ல ராஜனே
நீ யெந்தன் சமர்த்தையும் பார்
வில்லினில் வல்லவனாய் வந்து
விளங்கும் விஜயனை
நானுமிப்போ ஒரு கணையால் சிரசை
பாரில் புரண்டிடச் செய்குவேன்.
துருசாய் குதிரைகளை
போகத்தூண்டி நடத்துவீர்
தந்தின தின தின நம்’
சின்னகாளி பாடுகிறான். சுழல்கிறான். ஊரே கூத்து கண்டு களிக்கப் பேச்சி சுகவனத்தோடு ஒரு ஆனந்தக் கூத்துக்குத் தன்னைத் தயார் செய்து கொண்டு கிளம்புகிறாள். பையப்பன் உறக்கத்தில் இருக்கிறான். அவன் கூத்துக்கு வரவில்லை என்று படுத்துக்கொள்கிறான். பேச்சி கூத்துக்குப்போவதாய்க் கிளம்பி சுகவனம் அறைக்கு வந்து சேர்கிறாள். அறைக்கதவை ஒரு தட்டு தட்டுகிறாள். சுகவனம் கதவைத் திறக்கிறான். அதிர்ந்து போய் நிற்கிறான். இனி நடப்பதை விட்டல்ராவ் எப்படிச்சொல்கிறார் பாருங்கள்.
‘விலகி நின்று அவளைப்பார்த்து ரசித்து மனத்துக்குள்ளாகவே சுகமயமான பிரம்மச்சாரிக் கற்பனைகளையெல்லாம் அவளுக்கும் தனக்குமாக சேர்த்துவைத்து உண்டாக்கிக் கொண்ட பொய்மைக்கும் இப்போது அவளே தனிமையில் தன்னிடம் வந்து நிற்பதிலுள்ள உண்மைக்கும் இடையே இருந்தான் சுகவனம். தைரியமற்று நடுங்கினான்,குழறினான், பின் என்ன நடந்தது. அவனுக்கும் அவள் ஆசிரியை ஆனாள், அவன் ஒன்றும் அடங்காப்பிடாரி மாணவனல்ல.
எத்தனை செய்நேர்த்தி எழுத்தாளரின் இந்த வரிகளில்தான்.
சுகவனத்தின் அறையில் பேச்சி விட்டுச்சென்ற சவுரி முடியை , அவளிடம் தான் சேலத்தில், பேரு பெற்ற வில்வாத்திரி பவனில் வாங்கி வந்த ’ பாதாமி அலுவா’ வோடு கொண்டு கொடுக்கிறான்.
பால்கிருபைநாதன் டெபுடி இன்ஸ்பெக்டர் பள்ளித் தணிக்கைக்கு வருகிறார். பிள்ளைகள் எல்லோரும் சீவி சிங்காரித்துக்கொண்டு பள்ளிக்கு வந்திருந்தனர். அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சுகவனம் சொல்லிக்கொடுத்தபடியே மாணவர்கள் பதில் சொல்கின்றனர். நடக்கின்ற எல்லா தில்லு முல்லுகளும் பால்கிருபைநாதன் அறிந்தவையே. மாரிமுத்துக் கவுண்டர் வீட்டில் டெபுடிக்கு நல்ல சாப்பாடு ஏற்பாடாகிறது. ஆய்வறிக்கையை சபாஷ் என்கிறபடிக்கு டெபுடி எழுதி வைக்கிறார். அவருக்கு ஊரிலிருந்து பை பையாக சீர் வந்து சேர்கிறது. ஒரு வாழைக்குலை,இளநீர்க்காய்கள், ஒரு சில தானிய வகைகள், வெற்றிலை, துலுக்கசாமந்திப்பூ ஒரு கூடை, பலவித காய்கறிகள், இரண்டு பப்பாளி பழங்கள், இருபத்தைந்து மக்காச்சோளக் கதிர். இவைகளை மூன்று மூட்டையாகக் கட்டி மூவர் தூக்கிகொண்டு டெபுடி பின்னால் செல்கின்றனர்.
‘முன்னாலே அவர்களை நடக்கச்சொல்கிறார் டெபுடி.
‘வாணாம் வாணாம்னாலும் எங்கே கேக்கறாங்க. ஒவ்வொரு தபா வரும்போதும் இப்படித்தான் எதையாச்சி குடுத்து சொமக்க வைக்கிறாங்க’ என்று ஒப்புக்குப் பேசுகிறார் டெபுடி பால்கிருபைநாதன். சுகவனத்திடம் மறக்காமல் ஒரு பிளாஸ்டிக் பையில் பால் பவுடரைக் கேட்டு வாங்கிக் கொள்கிறார் அந்த டெபுடி. யதார்த்தத்தை சித்திரமாக்குவதில் விட்டல்ராவ் அதி சாமர்த்தியர்தான்.
சுரங்கம் தோண்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா. மத்திய மந்திரி வந்திருக்கிறார். அவருக்கு இந்தியும் ஆங்கிலமும் தெரியும். தமிழ்நாடு என்பதால் ஆங்கிலத்தில் பேசுகிறார். அது தமிழில் மொழிபெயர்த்து தரப்படுகிறது. அந்த உரையைக் கேட்ட பொதுமக்கள் தலையை ஆட்டுகின்றனர். அது எப்படி இருக்கிறது. சந்தைப்பேட்டையில் ஆந்திர வேடுவ ஜோசியன் சுரைக்காய் துந்தனாவை மீட்டி சொல்லும் ஜோசியம் சொல்வார். அது எப்படி?
‘அண்ண தம்புடு குருநாதண்ணாகேளியே ஜீவி.. ஜீவி நீ போட்ட பிளானு சரியாருக்கும் பார்த்துக்கோ ஜீவி ராமோவ் ராமா ராமோவ் ராமா… என்பார். அந்த ஜோசியம் கேட்கக் காசு கொடுத்தவன் காசு கொடுத்த கருமத்திற்காக தலை தலையை ஆட்டுவது போல் மக்கள் தலையை ஆட்டினார்கள் என்கிறார் விட்டல் ராவ். எத்தனை ஆழமான எள்ளலும் நகைச்சுவையும் பளிச்சிட்டுபத்தான் காட்சியாகிறது இங்கே.
கூத்துக்கட்டும் சின்னக்காளி இந்த சுண்ணாம்புக்கல்லும் இரும்புக்கனிமமும் இந்த சேலம் பகுதிக்கு எப்படி வந்தது என்பதை நமக்கு விளக்குகிறான். அதிகம் படிக்காதவன் என்றாலும் அனுபவம் கொண்டு பேசுகிறான்.
‘ராமியாணக் கதையிலே வர்ர எத்தினியோ விசயங்கல்லாம் நம்ப ஜில்லாவுலேதான் நடந்திச்சாம். சேலத்துக்கு அஞ்சு மைல்லே அயோத்தியா ப் பட்டணமினு ஒரு ஊரு கீது . அவுத்தெ ராமரோட பாதம் கல்லுலே கீது. திருச்சி ரோட்லேதான் பொய்மாங்கரடு கீது, பச்செப்புள்ளைக்குக் கூடத்தெரியும்.ராமரு மாரீச்சனை அடிச்ச எடமே அது தான். மைத்தபடி ராவுணே்ஸ்பரன் சீதையோட போவையிலே ஜடாயுக் களுவு வந்து மறை கட்டிச்சா. ராவுணேஸ்பரன் அதை வெட்டிப்போட்டான். அந்தக் களுவு எம்மாம் பெரிசுனு ஒங்களுக்குத் தெரியும். அது உளுந்து அதனோட எலும்பெல்லாந்தான் அம்மாசி மலைக்கிப் போற தடத்திலே இந்த சுண்ணாம்புக் கல்லா போயிருச்சி. அதைத்தாந்தோண்டி எடுக்கிறானுங்க… இது நாஞ் சொன்னதில்லே. நம்ப சரித்திரத்திலேயே கீது.’
சுகவனம் பள்ளியில் மாணவி அலமேலு வயசுக்கு வந்துவிடுகிறாள். அவளை அவளின் தாய் வீட்டுக்கு அழைத்துப்போகிறாள். சுகவனத்தையும் சடங்கு விசேஷத்துக்கு அழைக்கிறார்கள். பின் ஒரு நாள் சுகவனத்திற்கு அக்கி என்கிற நோய் வந்துவிடுகிறது. அவர் குலாலர் வீட்டுக்குச் செல்கிறார். சிங்க படம் சுகவனம் முதுகில் செம்மண்ணால் வரையப்படுகிறது. மூன்று நாட்களில் சுகவனம் அந்த பேர் சொல்லக்கூடாது என்கிற அந்நோயிலிருந்து மீள்கிறார்.
சுகவனத்தின் தாய் இறந்துபோகிறாள். காரியத்திற்காக மீசையைச் சிறைத்துக்கொள்கிறான் சுகவனம். பேச்சிக்கு சேதி சொல்கிறான். தனது மாமா பெண்ணைத் திருமணம் செய்ய இருப்பதாகக்கூறுகிறான். தன் தாயிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டதாய் பேச்சியிடம் சொல்கிறான். பேச்சி நொந்து போகிறாள். பேச்சியும் சுகவனமும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு காதலை ருசிக்கின்றனர். அப்போதும் அது நிகழ்ந்தது எ ன்கிறார் விட்டல்ராவ். சுப்புருக்கும் இந்த நிகழ்வு தெரிய வருகிறது. சுப்புரு பேச்சியை மிரட்டுகிறான். கவுண்டரிடம் சேதியைச் சொல்லிவிடுவேன் என்கிறான். பேச்சி காலில் விழுந்து கெஞ்சுகிறாள். சுப்புருவும் பேச்சியை அனுபவித்து முடிக்கிறான். அந்தப் பேச்சிக்கு வேறு வழிதான் ஏது.
ஊருக்கு சுரங்கம் வருகிறது. நல்ல சாலை போட ரோடு ரோலர் எஞ்சின் வருகிறது அதனை இயக்கும் பீர் முகம்மது வருகிறான். அவன் காய்ச்சிய தாரில் பேச்சியின் ஆடு விழுந்து விடுகிறது. மண்ணெண்ணெய் விட்டு அந்த ஆட்டைத் தாரின் பிடியிலிருந்து முகம்மது விடுவிக்கிறான். பையப்பனும் முகமதுக்கு ந்ல்ல நண்பனாகிறான். முகம்மது கெட்ட வார்த்தை பேசுவதில் ஹாஸ்யம் கொப்பளிக்கிறது. ஆண்களும் பெண்களும் அதனை மிகவும் விரும்பிக் கேட்கின்றனர். பேச்சியும் முகம்மதுவும் ஒருவருக்கொருவர் தொடர்பானார்கள். பாலுணர்வு எதனையும் விஞ்சி விடுகிறது.
நெடுநாளைய புங்க மரம் சாலை போடுவதற்காக வெட்டப்படுகிறது. அந்த மரத்தில்தான் கன்று போட்ட பசுவின் எச்ச உறுப்பு வழக்கமாய்க் கட்டப்படும். அப்படிக்கட்டினால்தான் அப்பசு அடுத்து சினை பிடிக்கும். அந்த பசுவின் நஞ்சுக்கொடியைத் தரையில் புதைத்துவிட்டால் குள்ள நரிகள் பிடிங்கித்தின்றுவிடும் ஆக அதுவும் கூடாது. இப்படியொரு பழக்கம் அங்கு நிலவியது.புங்கங் காய்களை ஆண் குழந்தைகளின் அரைநாணில் முன் பக்கமாய்க் கட்டி இரு தொடைகளுக்கிடை நிற்குமாறு வைப்பதுவும் அவ்வூரில் பழக்கமாயிருந்தது. ஊருக்கு இரும்புச் சுரங்கம் வருகிறது. வண்டிகள் ஏகத்துக்குச் செல்ல வேண்டும். சாலை அமைக்க வேண்டுமே ஊரில் அந்த புங்க மரமும் இல்லாமல் போகிறது.
ரோடு எஞ்சின் பீர் முகம்மது குடித்து விட்டுக் கீழே விழுந்து கிடக்கிறான். இரவு நேரம். பேச்சியும் பையப்பனும் அவனைத்தூக்கிக்கொண்டு தம் வீடு செல்கின்றனர். அவனைச் சுத்தப்படுத்துகின்றனர். குளிப்பாட்டி விடுகின்றனர். அவன் மகிழ்ந்து போகிறான். பையப்பன் உறங்கி விடுகிறான். பேச்சியும் முகம்மதுவும் அன்றிரவில் இணைந்து மகிழ்கின்றனர்.
டேனிஷ்பேட்டை மனிதர்கள் புதிய டேனிஷ்பேட்டைக்குக் குடி மாறுகிறார்கள். ஆடு மாடு கோழி சகிதமாய் பிரயாணம் தொடர்கிறது. ஒவ்வொரு குடும்பமும் ஆறேழு குழந்தைக் குட்டிகளோடு புறப்படுகிறது. கூட்டம் கூட்டமாக லாரியில் ஏறிக்கொள்கிறார்கள். அழுக்குப்பாய்,தலையணை, துணிமணிகள், சட்டி முட்டிகள் எல்லாமும் பயணிக்கின்றன. சுகவனம் துக்கத்தோடு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே நிற்கிறான். பிள்ளைகள் ஈடுபாட்டோடுத் தன் பள்ளிக்கு வரவில்லை. ஆனாலும் அவர்கள் ஊரைவிட்டுப் பிரிகிற போது அவன் மனம் பாரமாகிவிடுகிறது.
சனிக்கிழமை அவ்வூரில் சந்தை கூடுகிறது. சுகவனம் சந்தைக்குப்போகிறான். சந்தையில் காய்கறிகள்,இறைச்சி,மீன், கருவாடு, கவுச்சை தினுசுகள், தோல், கால் நடைகள், கோழிகள் அனைத்தும் போணியாவதற்குத் தயாராக வந்திருந்தன. சந்தையில் சுங்க வரி வசூலும் மும்முரமாக நடக்கிறது. பிச்சை எடுப்பவர்களின் வெவ்வேறுவிதமான வேட அலங்காரங்கள் அழுகைகள் புலம்பல்கள் கதறல்கள். ஒரு மனிதன் எதிர்ப்படும் மனித மனத்தை அசைத்துப்பார்க்க எத்தனை வேடம் போட வேண்டியிருக்கிறது. சுகவனம் எண்ணிப்பார்க்கிறான். ஓரிடத்தில் ஒரு மு்ஸ்லிம் மாடுகளுக்கு லாடம் அடிக்கிறார். மாடுகள் படும் துன்பத்தைக்கண்டு சுகவனம் என்ன வாழ்க்கை இது என்று எண்ணிப்பார்க்கிறான். ஒரு சாயுபு வேறு ஓரிடத்தில் அமர்ந்து சாமான்களுக்கு ஈயம் பூசிக்கொண்டிருக்கிறார். அவரோடு ரோடு ரோலர் டிரைவர் பீர்முகமது பேசிக்கொண்டிருக்கிறான். அவனருகில் பேச்சி கையில் ஒரு கூடையோடு காட்சி தருகிறாள். சுகவனம் அவர்களை கண்டுகொள்ளாமல் தள்ளியே போகிறான்.
கட்டில் கடையும் காக்காய் ஹோட்டல்களும் நமக்கு விட்டல்ராவ் அறிமுகப்படுத்துகிறார்.
டேனிஷ்பேட்டையிலிருந்த கெங்கம்மனை புதிய இடத்திற்கு கொண்டு போக முடிவு செய்கிறார்கள்:.’
‘நம்பளோடயே நம்ப கெங்கம்மந்தாயும் வருது.அவுத்த புதுசா கோயிலு கட்டி சாமிய வச்சிருவோம்’ என்கிறார் கவுண்டர். உட்னே பேச்சி கேட்கிறாள்.’ மனுசனை ஊரு வுட்டு வூரு மாத்தி குடி வெக்கிற மாதிரி சாமியையும் குடி மாத்தலாமா?’
‘செய்யிலாம்.தொள்சம்பட்டி அய்யிரு கூட ஆமான்னுப் போட்டாரு. நாம்பளா தொட்டு எடுத்துகினுபோயி வக்கிறோம்.அய்யிரல்லே வரப்போறாரு? அதெல்லாம் ஒண்ணும் தோசமில்லே புள்ளே’ மாரிமுத்துக் கவுண்டர் விடை தருகிறார். ஆனால் தொல்பொருள் இலாகாவினர் கெங்கம்மன் கோயிலை ஆய்ந்து சுத்தம் செய்து வண்ணமடித்து கம்பி போட்டு அது அரசாங்க தொல் பொருள் சொத்து என போர்டு எழுதி வைக்கிறார்கள். அவர்கள் தங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கோயிலை எடுத்துக்கொண்டார்கள்.
பேச்சி, பையப்பன், பீர்முகமது மூவரும் ஊரைவிட்டே சென்றுவிடுகின்றனர்.
‘அந்த துலக்கனோட ஓடிப் போயிட்டா’
‘துலக்கம் பின்னால ஓடிப்போட்டா பேச்சி’
ஊர் பேசிக்கொள்கிறது. கவுண்டரின் மனைவி ஆராயி கெங்கம்மனின் அருள் தனக்கு கிடைத்துவிட்டதாய் கணக்குப்போடுகிறாள். கவுண்டரோடு இனிமேல் தான் அவள் நிம்மதியாக படுத்துக்கொள்வாள்.
ஒடிப்போன பேச்சி மட்டுமே கவுண்டரின் வலு. கவுண்டரைத் தேர்தலில் இனி தோற்கடிப்பது சுலபம் என்று ஒரு கணக்குப்போடுகிறான் சுப்புரு. கவுண்டரின் கம்பீரம் கர்வம், வீரியம்,நம்பிக்கை, சுறுசுறுப்பு எல்லாமே பேச்சிதான். பேச்சிதான் போய்விட்டாளே. பேச்சியின் வீட்டு நாய் கரியன் பட்ட அவல சோகத்தைச் சிறப்பாகச்சொல்கிறார் விட்டல்ராவ்.
தீர்த்தகிரிக்கு சுரங்க கார்ப்பரேஷனில் குமாஸ்தா வேலை கிடைத்துவிட்டது. அவன் அலுவலகம் செல்லும் வழியில் சித்தப்பா சின்னகாளியைப் பார்க்கிறான். சித்த சுவாதீனம் இழந்த தன் சித்தப்பாவை பரிவோடு நோக்குகிறான்.
‘’போய்க்கினேக் கீறியேடா பியா….. காப்பிக்கி எட்டணா குட்றா…. ஒண்ணு குடுக்கறேன்னு சொல்லு…. போய்க்கினேருந்தா எப்படியாம்?’ என்கிறான் சின்னகாளி. சித்தப்பன் கேட்கும் பிச்சைக்குக் காசு போட அவன் தன்மானம் மறுக்கிறது. நம் சித்தப்பனுக்கு இப்படியும் ஒரு நிலமையா என்று மனம் வெதும்புகிறான். . தீர்த்தகிரியின் கண் கலங்குகிறது.
புதிய டவுன்ஷிப் சுரங்கத்தில் வேலை செய்யும் ஆட்களுக்கு அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்கா, உயர்நிலைப்பள்ளி,ஆங்கில நர்சரி,சிறப்பு அங்காடி,மருத்துவமனை, கடைத்தெரு,தண்ணீர்த்தொட்டி, குழாய் நீர் வசதி, விளையாட்டு மைதானம் ,நூல் நிலையம் குடியிருக்காலனிகள் எல்லாமும்தான் அங்கு வந்து விட்டன.
சேர்வராயன் மலை எப்போதும் போலத்தானிருந்தது.’ சிவனே’ என்று அசையாமல் நிற்கிறது அந்தச் சேர்வராயன் மலை.
‘தோ அது அப்பா அது ஆத்தாள் அதெல்லாம் புள்ளெங்க’ பேரக்குழந்தைகளுக்கு மலைத்தொடர்கள் காட்டப்படுவது வழி வழித் தொடர்கிறது.. போக்கிடம் என்னும் புதினம் வழி விட்டல்ராவின் எழுத்தாளுமையை நாம் நிறைவாய்த் தரிசிக்கிறோம். அவரின் கூரிய காமிராக் கண்கள் சேலத்துக் கிராமத்தை எப்படி எப்படியெல்லாம் பார்த்தன என்பதை நமக்குச்சொல்லும் ஆவணம் ‘போக்கிடம்’.
Discover more from சொல்வனம் | இதழ் 369 | 28 ஜூன் 2026
Subscribe to get the latest posts sent to your email.
