பிரார்த்தனை

மூலம் : லாரி லெவிஸ்

தமிழாக்கம் : ராமலக்ஷ்மி

இந்த மாடி ஜன்னல் வழியாக
வெளியே கவனிக்கும்போது
என் அம்மாவைக் காண்கிறேன்
உண்மையில் இப்போது முதுமையினால்
சற்றுத் தள்ளாடி நடக்கிறாள்
இரட்டைக் தூண்களைப் போல நிற்கும்
மங்கிப் போன பனை ஓலைகளின் கீழ்
அவளது தூய வெண் கூந்தல்
வீட்டில் செய்த ஒரு பாய்மரப் பாய் போல
தோற்றமளிக்கிறது.

லேசான காற்றில் ஆடும் ஒரு படகைப் போல
சரளை பரப்பிய பாதையின்
ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு
அவள் மெதுவாக அசைந்து செல்கிறாள்.
நான் ஒரு கணம், இது மத்தியதரை
கடற்கரைக் காட்சி என்று கூட நம்பி விடலாம்
ஏனெனில் இந்த ஜன்னல் விளிம்பில்
இன்னும் உடையாத, இரண்டு பழைய
பிரெஞ்சு தேநீர் கோப்பைகள் இருக்கின்றன
ஆனால் என் அம்மாவிடம்
திசைமாற்றும் சுக்கானும் இல்லை
இழுத்துப் பிடிக்கும் அடித்தண்டும் இல்லை
தான் எவ்வளவு தூரம்
கடலுக்குள் வந்துவிட்டாள் என்கிற
புரிதலும் இல்லை.

அவள் வெறுமனே கடிதங்களை எடுக்கப் போகிறாள்
அரை மைல் நடைப் பயணத்தின் முடிவில் இருக்கும்
பனை, சைப்ரஸ், ஆரஞ்சு மரங்கள் வழியாக.

இத்தாலியில், மாண்டோனே போன்ற
சிறிய மலைநகரங்களுக்கு வெளியே
சைப்ரஸ் மரங்களின் வரிசை
எப்போதும் ஒரு இடுகாட்டையும்
இறந்தோரின் உயிர்த்தெழுதலையும் குறிக்கும்.

இது சான் ஜோகுவின் பள்ளத்தாக்கு
இங்கே அவை எதையும் குறிக்கவில்லை
என் அப்பா இறந்துவிட்டார் என்றாலும்
என் மனைவியும் மகனும்
இரண்டு மலைத்தொடர்களுக்கு கிழக்கே
என் செவிகளுக்கு எட்டாத தொலைவில்
வாழ்ந்து வருகின்றனர் என்றாலும்.

இப்போது இதற்கு
காலம் கடந்து விட்டது என்று அவள் அறிவாள்
விரைவில் அவளும்
மறைந்து போவாள் என்பதையும்
பனைமரங்களை மட்டுமே தனக்குப் பின்னால்
விட்டுச் செல்வாள் என்பதையும் கூட
அவள் அறிந்திருக்கக் கூடும்.

வீட்டில் யாரும் இல்லை என்றாலும்
என் அம்மா இந்தச் சிறிய உடற்பயிற்சியை
இந்த நடைப்பயணத்தை
நிறைவேற்றத் தீர்மானித்திருக்கிறாள்.
நான் நினைக்கிறேன்
அவளும் கிட்டத்தட்ட இந்தத் தருணத்தில்
தனிமையில் இருக்கிறாள்
நான் எவ்வளவு
நண்பர்களற்றவனாக இருக்கிறேனோ
அதே அளவுக்கு.

அவள் சாய்ந்து நடக்கும் விதத்தைப் பார்த்தால்
அவளே இப்போது காற்றில் ஒரு பகுதியாக
மாறிவிட்டாளோ என்று எனக்குத் தோன்றுகிறது.
இப்போது கவனிக்கிறேன்
அவளுக்கு மேலேயிருந்த
வெளிறி மங்கிய பனை ஓலைகளின்
காக்கி நிறம்
என் அப்பா அணிந்த சட்டைகளின்
அதே நிறத்தில் இருப்பதை.
உடனே நினைவுக்கு வருகிறது
அவர் மருத்துவமனைக்குச் சென்ற நாளில்
அவரது மார்பில் படிந்திருந்த
அவளது கூந்தல்.

அவர் எங்கோ செல்ல வேண்டியிருந்தது
ஏனெனில் அவர் இறக்க வேண்டியிருந்தது
பார்கின்சன் நோயினால்.
அதையும் அவர் மிகுந்த சிரமத்தோடு செய்தார்
இயல்பாக
வழக்கமான அலட்சியப் பாணியில் அல்லாமல்.
அவர் எப்போதும் ஒரே நேரத்தில் பணிவானவராகவும்
யாரிடமும் சமரசம் செய்யாதவராகவும் இருந்தார்.
உம் முன்னிலையிலும் கூட.

அவரை நான் நினைவுகூரும் அளவுக்கு
நீரும் நினைவுகூர்வீர் அல்லவா?
ஆழ்ந்து நினைத்துப் பாரும், ஆண்டவரே
இந்தப் பாதையின்
ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு
அவள் நெளிந்து நடக்கும் விதத்தை
நான் நேசிக்கிறேன்.
தொடர்ந்து செல்ல வேண்டும் என்கிற
அவளது எளிய உறுதியை
நான் நேசிக்கிறேன்.

அவள் இவ்வாறு மெதுவாக ஒரு பக்கம்
பின்னர் மறுபக்கம் எனத் தள்ளாடி செல்லும்
நடைபாதையை நான்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போது
இழப்பின் இந்த இறுதி சீர்குலைவிலிருந்து
என் சொந்த மகனைக் கூட காப்பாற்ற முடியும் என்று
ஒரு கணம் நம்பத் தோன்றுகிறது.

நான் பார்க்கும் யாவும்
ஒருநாள் மறைந்துபோகும் என்பதை அறிவேன்.
இது வெறும் இரண்டு நிறங்களின்
எளிய இணைவு என்பதையும் அறிவேன்.
அவளது வெண்மையான கூந்தல்,
அதன் பின்னால் வாடி மங்கிக் கொண்டிருக்கும்
வெறுமனே காற்றில் அசையும் பனை ஓலைகள்.

ஆனால் எந்த வகையான நிலைத்தன்மையும்
என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது
எனவே, நன்றி.
நான் பார்க்கும் யாவும் மறைந்து போகும் முன்
நன்றி.


மூலம்: “Prayer” By Larry Levis 

*

லாரி பேட்ரிக் லெவிஸ் (1946–1996)

லாரி லெவிஸ் புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். கலிபோர்னியாவின் ஃப்ரெஸ்னோவில், செல்மா எனும் சிறிய நகரில் பிறந்தவர். சான் ஹோஆக்வின் பள்ளத்தாக்கின்  (San Joaquin valley) விவசாயச் சூழலில் வளர்ந்தவர். தனது குடும்ப திராட்சைத் தோட்டத்தில் மெக்சிகோவிலிருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றிய மற்றும் வயல்வெளிகளிலும் உழைத்த அனுபவங்களைத் தன் கவிதைகளில் பதிவு செய்தார். 

புகழ்பெற்ற கவிஞர்களான பிலிப் லெவீன் மற்றும் டொனால்ட் ஜஸ்டிஸ் ஆகியோரிடம் கல்வி கற்றவர். சிரகியூஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், அயோவா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். மிசோரி, யூட்டா மற்றும் வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். 

இவரது வாழ்நாளில் Wrecking Crew (1972) மற்றும் The Afterlife (1976) உட்பட ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளியாகின. இவரது மறைவுக்குப் பின் தொகுக்கப்பட்டு வெளியான Elegy (1997) மற்றும் The Darkening Trapeze (2016) ஆகிய நூல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. செறிந்த கற்பனை, இசைநயம் மிக்க மொழி, ஆழ்ந்த உணர்வுகள் மற்றும் சிந்தனைமிக்க பார்வைக்காகப் பரவலாகப் பாராட்டப்பட்டார். நினைவுகள், இழப்புகள், அன்பு, இயற்கை மற்றும் மனித வாழ்வின் சிக்கல்கள் இவரது கவிதைகளின் மையக் கருப்பொருட்களாக விளங்கின. பல விருதுகளை வென்றவர். மனச்சோர்வு மற்றும் போதைப்பொருள் பழக்கத்துடன் போராடியவர், 49_ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார். வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகம் இவரது நினைவாக ஒவ்வொரு வருடமும் ‘லெவிஸ் வாசிப்பு பரிசு’ வழங்கி வருகிறது.


Discover more from சொல்வனம் | இதழ் 369 | 28 ஜூன் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.