சிவப்பின் பின்னிருளில்: ‘பலி பீடம்’ ஒரு வாசிப்பு

1909-1915-க்கு இடையில் மூன்று பகுதிகளாக Yama நாவலைக் குப்ரின் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட நாவல் வெளிவந்து ஒரு நுற்றாண்டுக்கும் மேல் ஆகிறது. தெற்கு ரஷ்ய நகரமான ஒடெஸாவின் யமஸ்காயா என்றழைக்கப்படும் யாமா பகுதியைச் சேர்ந்த பாலியல் தொழிலாளிகளின்/விடுதிகளின் வாழ்க்கையை/அன்றாடங்களை இந்நாவல் விவரிக்கிறது. அன்னா மார்க்கோவ்னா என்ற பெண்ணுக்குச் சொந்தமான பாலியல் விடுதியை மையமாகக் கொண்ட இந்த நாவல் தொடராக வெளிவந்த போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  

பாலியல் தொழில் அந்த நாட்களில் ரஷ்யாவில் அங்கீகரிக்கப்பட்ட, முறைப்படுத்தப்பட்ட தொழிலாக இருந்தது. இதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. வாரம் ஒருமுறை மருத்துவர் நேரில் வந்து பரிசோதனைகளை மேற்கொள்வார். நோயுற்ற பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இலக்கிய உலகில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய ‘யாமா’ எனும் இந்நாவல் உலகெங்கிலும் 25 மொழிகளில் வெளியாகி இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றிருக்கிறது. மூன்று முறை திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. புதுமைப்பித்தனின் தமிழ் மொழிபெயர்ப்பு…ஆஹா! அவர் ஏன் மாஸ்டர் என்பதை மீண்டும் நிரூபித்தது. புதுமைப்பித்தனின் ஒரு புதினத்தை வாசிப்பது போன்றே, ஒரு கறுப்பு நகைச்சுவை உணர்வு, ஒரு மெல்லிய பகடி/எள்ளல் சரடு நாவல் வாசிப்பின் நெடுகிலும் நீடித்தது. இது புதுமைப்பித்தனின் ஒரு நாவலோ என்று மயங்க வைத்தது. Yama-விற்கு ‘பலிபீடம்’ என்ற தலைப்பிட்டதே அவரின் மேதமையைக் கண்டு வியக்கவைத்தது.

குப்ரினின் இலக்கிய மனத்தின் கரிசனமும், கருணையும், அபாரமான எழுத்தின் பலமும், நுண்மையான அவதானிப்புகளும், நாவலின் கதாபாத்திரங்களும், புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்பு எழுத்து நடையும் இந்நாவல் வாசிப்பை சிறப்பானதாக்கின. வேலூர் லிங்கம் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். குப்ரினின் ‘செம்மணி வளையல்’, ‘ஒலேஸ்யா’ குறுநாவல்கள் படித்துவிட்டு அதன் வாசிப்பனுபவங்களை வேலூர் லிங்கம் சாருடன் பகிர்ந்து கொண்டபோது அவர்தான் ‘பலிபீட’த்தை தவறாமல் வாசிக்கச் சொன்னார். 

காலம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள். ஒரு காலத்தில் பள்ளமாக இருந்த ரஷ்ய தென் நகரமான ஒடெஸாவின் அப்பகுதிக்கு, ஜனங்கள் வசிக்க ஆரம்பித்த பிறகு ‘யாமா’ என்றே பெயரிட்டார்கள் (ரஷ்ய மொழியில் ‘யாமா’ என்ற வார்த்தைக்கு ‘பள்ளம்/கிடங்கு’ என்பது பொருள்). இப்போது யாமா ​பாலியல் தொழிலுக்கு பிரபலம். சர்க்கார் அனுமதியின் பேரில் உத்தியோகஸ்தர் கண்காணிப்பின் கீழ் கண்டிப்பான விதிகளுக்குட்பட்டு ​மேனி வணிகம் இப்பகுதியில் நடக்கிறது. 

யாமா இரண்டு தெருக்கள் கொண்ட பகுதி. இந்த இரண்டு தெருக்கள் முழுவதையுமே பாலியல் தொழில் பிடித்துக்கொண்டு விட்டது. இத்தொழிலின் உபகரணங்களாக சாப்பாட்டுக் கடைகள், மதுக் கடைகள், மளிகைக் கடைகள் முதலியவை முளைத்து அதன் சாயலிலே ஜீவிக்கின்றன. இங்கே சுமார் முப்பத்தி இரண்டு பாலியல் விடுதிகள் செயல்படுகின்றன. அனைத்திலும் நடப்பது ஒன்றே என்றாலும், சமூகத்தின் பல படிநிலைகளுக்கேற்ப/பொருளாதார வசதிக்கேற்ப விடுதிகள் வெவ்வேறு தரம் வாய்ந்தவை. அங்கு வரும் ஆண்கள் தங்களின் பண இருப்பிற்கேற்ப விடுதிகளையும், பெண்களையும் தேர்ந்தெடுப்பார்கள்.

யாமாவின் பெரிய தெருவில் இடதுபக்கம் முதல் வீட்டுக்குடிக்கு டிரெப்பல் என்று பெயர். டிரெப்பல் அப்பகுதியில் முதல் தரமான விடுதி. டிரெப்பலில் வேளைக்கு மூன்று ருபிள்களும், ராத்திரி முழுவதும் தங்குவதென்றால் பத்து ரூபிள்களும் வாடிக்கை. இரண்டு ரூபிள் விடுதிகள் யாமாவில் மூன்றுண்டு. ஒன்று ஸொபிவாஸிய்வனா நடத்துவது. மற்றொன்று அன்னா மார்க்கோவ்னா நடத்துவது. மூன்றாவதற்கு ‘பழைய கியெவ்’ என்று பெயர். இவற்றைத் தவிர மற்ற யாவும் ரூபிள் வாடிக்கை ஸ்தலங்கள். யாமாவின் சின்னத் தெருவில் இருப்பவை தரம் குறைந்த ஐம்பது கோப்பெக் விடுதிகள்.

விடுதிகளின் தரத்திற்கேற்ப ​அமைந்த அதன் அலங்காரங்கள், அதில் நடைபெறும் சிகரெட், மது, உணவக வணிகங்கள், இசை நடன கேளிக்கைகள், இவ்விடுதிகளுக்கு விஜயம் செய்யும் விதவிதமான வாடிக்கையாளர்களின் பாவனைகள்/நடவடிக்கைகள் ஆகியவற்றை முதல் அத்தியாயத்திலேயே அறிமுகப்படுத்தி விடுகிறார் குப்ரின். 

நாவல், அன்னா மார்க்கோவ்னா நடத்தும் இரண்டு ரூபிள் 

விடுதி​யின் செயல்பாடுகளில் நகர்கிறது. பகல் பொழுதுகளிலும், இரவுகளிலும் அவ்விடுதியின் முகங்கள், பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட அவ்விடுதிப் பெண்களின் அன்றாடங்கள் என குப்ரினின் நுணுக்கமான விவரணைகளால் காட்சிப்படுத்தப்படுகிறது. சிறிதும் ஆபாசம் கலக்காத, அப்பெண்களின் மேல் இரக்கமும், வாஞ்சையும் கொண்ட மனதொன்றின் அற்புதமான எழுத்து நம்மை கட்டிப்போடுகிறது.

அந்த விடுதி/வீடு, அன்னா மார்க்கோவ்னா பெயரில் பதிவாகியிருக்கிறது. அவளுக்கு அறுபது வயது. அவள்தான் அங்கு எஜமானி. அவள் கணவனின் பெயர் ஐஸாயா. அவன் பிடில் வாசிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறான். அன்னாவின் கீழ் இரண்டு நிர்வாக ஸ்த்ரீகள். பெரியம்மா, சின்னம்மா என்று. பெரியம்மாவின் பெயர் எம்மா எட்வர்டோவ்னா, 46 வயது. சின்னம்மாவின் பெயர் ஜோஸ்யா. லியூப்கா, நியூரா, மான்யா (சின்ன மங்கா), ஜோ, பாஷா, புத்தகங்கள் வாசிக்கும் ஜென்னி, தமாரா (முன்பு ஒரு மடாலயத்தில் கன்னியாஸ்திரீயாக இருந்தவள்), உணவின் மேல் பிரியம் கொண்ட நீனா, கிட்டி, வீரா, ஸோங்கா (இவர்களனைவரின் உண்மையான பெயர்கள் வேறு. இவை யாமாவின் தர்மப்படி இங்கு வந்து சேர்ந்ததும் வைக்கப்பட்ட புனைப்பெயர்கள்)… அனைவரும் அன்னா வீட்டின் இளம்பெண்கள். இவர்களுள் ஜென்னி-தான் விடுதியிலேயே மிகுந்த அழகானவள். வீட்டு வேலைக்காரி பெயர் ஜோஸ்யா. அமூர் விடுதியில் வளர்க்கப்படும் வேட்டை நாய். வீட்டுக் காவல்காரன் பெயர் ஸிமியோன் (நியூரா, ஸிமியோனின் முன்னாள் ஆசை நாயகி). ஸ்தல ஜில்லா இன்ஸ்பெக்டரான பெர்க்கேஷ் அடிக்கடி லஞ்சம் வாங்குவதற்காக விடுதிக்கு வந்து போவான். இரவுகளில்தான் விடுதி சுறுசுறுப்பாக இயங்கும். பகல்களில் தூங்கி வழியும். விடுதியில் மாலை ஆறு மணிக்குத்தான் பிரதான உணவு. நால்வகைக் கறிகளுடன் வயிறாரச் சாப்பிட வேண்டிய பிரதான போஜனம்.

விடுதிக்கு வருகை தரும் மனிதர்கள் சமூகக் கட்டமைப்பில் பல்வேறு அடுக்குகளில், பல்வகை உத்தியோக வேலைத் தளங்களில் இருப்பவர்கள். சுவாரஸ்யமான, முக்கியமான சில கதாபாத்திரங்களை மட்டும் இங்கு குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். பதினோரு கலகக்காரர்களை இரண்டே நாளில் தவணை வைத்து சுருக்கிட்டுத் தூக்கிய பூர்ஷ்வா டையசெங்கோ, தன் உண்மையான பெயரை மறைத்து போலிக் கடவுச் சீட்டை எஜமானிக்குத் தந்து ஏமாற்றி, தானே சுயமாய் வந்து விடுதியில் சேர்ந்து, தனக்கு மக்தாள் என்று பெயர் சூட்டிக்கொண்டு, விடுதியில் பயிற்சி பெற்ற பிறகு விடுதி நீங்கிப் போன புரட்சிப்படையைச் சேர்ந்த, செல்வக் குடும்பம் ஒன்றின் இருபத்தாறு வயது சங்கீத ஆசிரியப் பெண் (பின்னாள் வெவ்வேறு துறைமுகப் பட்டினங்களில் ​பாலியல் விடுதிகள் ​துவக்கி, மறைமுகமாக சர்க்காருக்கு எதிராக புரட்சிப் படையின் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாள்), தான் இளமையில் காதலித்த யூதப்பெண் சந்தர்ப்ப வசத்தால் விடுதிக்கு வந்து மாட்டிக்கொள்ள, அவ​ளைப் பார்ப்பதற்கென்றே தினமும் மாலையில் விடுதிக்கு வரும் சுத்த, தீவிர மத நம்பிக்கை கொண்ட யூதன் நீய்மென், அன்று முழுதும் வசந்தத் திருவிழாவைக் கொண்டாடிவிட்டு புது அனுபவத்திற்காக இரவில் விடுதிக்கு வரும் கல்லூரி மாணவர்கள் எட்டு பேர், அவர்கள் வற்புறுத்தி அழைத்து வந்த அவர்களின் உதவிப் பேராசிரியர் ஒருவர் (யார்ச்செங்கோ), மாணவன் ரமேசஸ்-க்குப் பரிச்சயமான ‘எதிரொலி’ பத்திரிக்கையின் நிருபர் ஸெர்ஜிச் இவனாவிச் பிளேடனாவ், உள்ளூரின் பிரபல நாடக நடிகன் வோலோடியா பாவ்லோவ்…

ஸெர்ஜிச் அன்னா விடுதியின் வழக்கமான வாடிக்கையாளன். அவன் உடல் சுகத்திற்காக அவ்விடுதிக்கு வருவதில்லை. வந்து உணவருந்தி, சிறிது மது குடித்து பொழுதைப் போக்குவான். அந்தச் சிறு உலகுடன் நெருக்கமாகப் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது அவனது ஆசை. விடுதி இளம்பெண்களுக்கு அவன் பேரில் மிகுந்த மரியாதை. அவனும் அவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துவான். ஸெர்ஜிச்-சிற்கு விடுதியின் இளம்பெண்கள் தரும் முக்கியத்துவம் மாணவன் போரிஸ் ஷோபோஷிக்கு எரிச்சல் உண்டாக்குகிறது. விடுதி அறையில் முன்னால் மாணவன் லிக்கோனின், உதவி பேராசிரியர் யார்ச்செங்கோ, பத்திரிக்கையாளன் ஸெர்ஜிச் இடையில் நடக்கும் உரையாடல்கள் ரசமானவை. ஸெர்ஜிச்-சின் பேச்சு லிக்கோனின் மனதில் ஒரு மாற்றத்தை உண்டாக்குகிறது. அவன்​, இரவு முடிந்த இருள் பிரியும் அந்த வைகறையில் ஒரு முக்கியமான முடிவெடுக்கிறான்.

முன்னுரையில் குறிப்பிட்டது போல் இருளைத்தான் எழுதியிருக்கிறார் குப்ரின். தன் காலத்தின் ஓர் இருளை, சிவப்பின் பின்னே உறைந்த கருமையை தன் கருணை மனதின் கனிவோடு எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். வாழ்க்கையில் வழி தவறி பாதாளத்தில் வீழ்ந்து மீண்டும் கரையேற முடியாத எண்ணற்ற​ அப்பெண்களுக்குத்தான் இந்நூலைச் சமர்ப்பித்திருக்கிறார்.

‘பலிபீடம்’ (குறுநாவல்) – அலெக்ஸாண்டர் குப்ரின்
(தமிழில்: புதுமைப்பித்தன்)
ஆங்கிலத்தில்: ‘Yama: The Pit’
தேசாந்திரி பதிப்பகம்


Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.