மூலம் : டிம் பார்க்ஸ்
தமிழாக்கம்: வெங்கட பிரசாத்
தொமெனிக்கோ ஸ்தர்னோனேயின் கடல் அருகே முதியவன் நாவலில், எழுத்தாளன் ஒருவன் தன் முதுமை காலத்தில் தான் கடந்து வந்த வாழ்வைத் திரும்பிப் பார்க்கிறான் — பேரார்வத்தைவிட இடைவெளியையும் கட்டுப்பாட்டையுமே எப்போதும் நாடிய வாழ்வு அது.
மதிப்புரை செய்யப்பட்ட நூல்: கடல் அருகே முதியவன் — தொமெனிக்கோ ஸ்தர்னோனே; இத்தாலியிலிருந்து ஊனா ஸ்ட்ரான்ஸ்கியின் ஆங்கில மொழிபெயர்ப்பு. யூரோபா பதிப்பகம், 147 பக்கங்கள், $17.00 (காகித அட்டை).

தொமெனிக்கோ ஸ்தர்னோன் தனது முதல் நாவலான Il salto con le aste (1989) மூலம், நேபிள்ஸ் நகரின் கொந்தளிப்பான பின்னணியில் இருந்து தப்பித்து, உலக அரங்கில் எழுத்தாளர்களாகவும் சுதந்திரமான ஆன்மாக்களாகவும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கும் இரண்டு சிறுவர்களை அறிமுகப்படுத்தினார். இத்தாலிய மொழியில் ‘Asta’ என்றால் ‘கோல்’ (pole) என்று பொருள், எனவே ‘il salto con l’asta’ என்பது போல் வால்ட் (pole vault) விளையாட்டை குறிக்கும். ஆனால், ‘aste’ என்ற பன்மைச் சொல் எழுத்துக்களின் நிமிர்ந்த கோடுகளையும் குறிக்கும்.அந்தச் சிறுவர்களின் மாபெரும் பாய்ச்சல், மொழியின் வழியாகவே நிகழ உள்ளது. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்தர்னோனின் எண்பது வயதில் வெளியான கடல் அருகே முதியவன் நாவலில் ஸ்தர்னோனை போலவே எண்பது வயதைக் கடந்திருக்கும் எழுத்தாளன், பேரார்வத்தைவிட, எப்போதும் ஒருவித இடைவெளியையும் கட்டுப்பாட்டையுமே விரும்பி வந்த தனது வாழ்வைத் திரும்பிப் பார்க்கிறான் – “நாம் உயிரோடு இருக்கும்போது நடக்கும் அர்த்தமற்ற விஷயங்களுக்கு, சரியான சொற்களைக் கொண்டு அர்த்தம் தேடும்” எழுத்தாளனின் தொழிலோடு பிணைந்திருக்கும் கட்டுப்பாடு அது.
எழுத்து, மொழி, உணரப்படும் யதார்த்தம் – இவற்றுக்கு இடையேயான உறவை மையப்படுத்திய ஆரம்ப கால மற்றும் பிற்கால படைப்புகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தொமெனிக்கோ ஸ்தர்னோன் சமகால இத்தாலிய இலக்கியத்தில் மிகவும் வெற்றிகரமான, அதிக படைப்புகளை உருவாக்கிய ஒருவராகத் திகழ்கிறார். அவர் இருபதுக்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைகள், புனைவு அல்லாத கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்; அதுமட்டுமின்றி சினிமா, தொலைக்காட்சி, நாடகத் துறையிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். (சில மொழியியல் ஆய்வுகள், குறிப்பாக புகழ்பெற்ற மொழியியலாளர் மிக்கேலே கோர்தெலாஸோவின் ஆய்வு, எலினா பெர்ரான்தே என்னும் புனைப்பெயரில் எழுதியதும் இவர் தான் என்று கூறுகின்றன)
எனினும், ஸ்தர்னோனின் எழுத்துப் பயணம் சற்று தாமதமாகவே தொடங்கியது. 1943 இல் நேப்பிள்ஸில் பிறந்தவர் ஸ்தர்னோன் – தாய் துணிகள் தைக்கும் தொழில் செய்தவர், தந்தை ஓவியக் கலையில் ஆர்வமும் திறமையும் உள்ள ரயில்வே ஊழியர். ஸ்தர்னோன், பள்ளி ஆசிரியராக தனது பணிவாழ்வைத் தொடங்கினார். பள்ளி என்பது ஒரு சோதனைக்கூடம் போன்றது; அங்குதான் குழந்தைகளின் இயல்பான துடிப்பும், சமூகத்தின் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. அதே சமயம், பண்படாத வாழ்க்கைக்கு கலாச்சார செழுமையைக் கொண்டுவரும் இடமாகவும் அது அமைகிறது. அந்த இரு உந்துசக்திகளுக்கு இடையிலான பதற்றம், குறிப்பாகக் கல்வி (மற்றும் இலக்கியமும்) வாழ்வை மேம்படுத்துவதைவிட வாழ்விலிருந்து தப்பித்தலாக மாறிவிடக்கூடிய ஆபத்து குறித்த கவலை — இவை ஸ்தர்னோனேயின் படைப்புகளில் மீண்டும் மீண்டும் வரும் கருப்பொருள்கள். கடல் அருகே முதியவன் நாவலில் வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் கதாபாத்திரம் – “வரலாறு, புவியியல், மக்கள் எப்போது பிறந்தார்கள், எப்போது இறந்தார்கள் , இன்ன பிற பல விஷயங்களையெல்லாம்” தான் கற்றுக் கொடுத்து வந்ததாகவும், ஆனால் “தீவிரமாகச் சிந்திக்கும் இயல்பை சமாளிக்க” தன்னால் இயலவில்லை என கூறுகிறது. பிறரது சொற்களுக்கு விளக்கம் சொல்வது பாதுகாப்பு உணர்வைத் தந்தாலும், வாழ்வின் கொடூரங்களைச் சந்திக்கக் குழந்தைகளுக்கு அது உதவாது.
1980 களின் நடுப்பகுதியில் ஸ்தர்னோனே, இடதுசாரி நாளிதழான Il Manifesto இல் பள்ளி குறித்துத் தொடர்ந்து எழுதத் தொடங்கினார். அந்த தொடர்பு சிறுகதைகளாக மலர்ந்தது, பிறகு ஆரம்பகால நாவல்களாக விரிந்தது. ஆனால் அவரை இத்தாலிய இலக்கிய உலகில் முன்னணி எழுத்தாளராக நிறுவியது ஜெமித்தோ வீதி வீடு (2000) – புனைவும் சுயசரிதையும் கலந்த குடும்பக் கதை. அந்த நாவல் இத்தாலியின் மிகவும் மதிக்கப்படும் இலக்கிய விருதான ஸ்த்ரேகா பரிசையும் வென்றது.
தந்தை, தாய் மற்றும் அவர்களது மூத்த மகனுக்கு இடையிலான அந்த முக்கோண உறவுதான் இந்த வியக்கத்தக்க புத்தகத்தின் மையக்கரு. ஏமாற்றங்களும், அதே சமயம் வசீகரமும், ஆபாசமும், வீண் பெருமையும் கொண்ட தந்தை, சிறுவன் மிமியை ஒரே நேரத்தில் அச்சத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறான். தந்தையின் கலை லட்சியங்கள் நிறைவேற எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் மிமி, அந்தப் புத்தகத்தின் அட்டையில் இடம்பெற்றுள்ள ‘The Drinkers’ ஓவியத்திற்காக நீண்ட நேரமும் வலியுடனும் முழங்காலிட்டு போஸ் கொடுக்கிறான். தாய், புனித சைரஸ் மீதான தனது தீவிர பக்தியைத் தாண்டி, மிகச்சிறந்த நடைமுறைவாதியாக இருக்கிறாள்; மற்றவர்களுக்கும், முக்கியமாகத் தனக்கும் அழகான உடைகளைத் தைக்கிறாள். அவள் தன்னை அலங்கரித்துக் கொள்வதையும் வெளிப்படுத்திக் கொள்வதையும் விரும்புகிறாள், இது காமத்தில் ஊறிய தந்தைக்குக் கட்டுக்கடங்காத பொறாமையைத் தூண்டுகிறது.
பெற்றோருக்கு இடையே நிகழும் வன்முறைத் தருணங்களை இந்த விவரிப்பு ஒருவிதத் தீவிரத்தோடு மீண்டும் மீண்டும் அணுகுகிறது, இது அந்தச் சிறுவனைப் பீதியடையச் செய்கிறது. அவன் தன் தந்தையை ஒரே நேரத்தில் வியக்கவும், வெறுக்கவும் செய்கிறான்; தாயின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தாலும், அவளது பகட்டான பக்கத்தைக் கண்டு அஞ்சுகிறான் – தந்தை அஞ்சுவதைப் போலவே, அவள் தங்களைக் கைவிட்டுச் சென்றுவிடுவாளோ அல்லது துரோகம் இழைப்பாளோ என்ற பயம் அவனுக்குள் இருக்கிறது. தாயின் நோய்மையைத் தந்தை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்துகிறார், ஆனால் இறுதியில் அவளது அந்த அவநம்பிக்கையான நிலையை சிறந்த ஓவியமாகத் தீட்டுவதற்காகச் சரியான தருணத்தில் கவனித்துவிடுகிறார்; அவளது அந்த அகால மரணம் மிமியை முற்றிலும் திசைதெரியாத நிலையில் ஆழ்த்துகிறது. அவர்களின் அந்தத் தற்கொலைக்கு நிகரான போராட்டங்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள, ஒருவிதத் தனிமையையும் சுயக்கட்டுப்பாட்டையும் அடைய அவன் ஏங்குகிறான். அதே நேரத்தில், அவர்கள் ஒருவரை ஒருவர் உண்மையிலேயே நேசித்தார்கள் என்பதைத் தீவிரமாக உணர்ந்திருக்கும் அவன், அவர்களின் அந்த ஆற்றலால் ஈர்க்கப்பட்டே இருக்கிறான். ஸ்தர்னோன் தனது ஜெமித்தோ வீதி வீடு நாவலைத் தன் தாய்க்கு அர்ப்பணித்தார்; தன் தாய்க்கும் கிடைக்காமல் போன அந்தப் பெண்மைக்கான மரியாதை, ஆண்களின் காம உணர்வோடு சந்திக்கும் போராட்டமே ஸ்தர்னோனின் எழுத்துக்களில் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஸ்தர்னோனின் Trust (2019) நாவல் குறித்த விமர்சனத்தில், இத்தாலிய விமர்சகர் மார்கோ பெல்போலிட்டி, எழுத்தாளரின் முதிர்ந்த காலப் படைப்புகளான Ties (2014), Trick (2016) மற்றும் Trust ஆகியவற்றில் ஜெமித்தோ வீதி வீடு நாவலின் பல ஒற்றுமைகள்/பிம்பங்கள் இருப்பதைக் குறிப்பிடுகிறார். மேலும், அந்தப் புத்தகத்தை “ஆசிரியரின் பிந்தைய கதைகள் அனைத்தும் எழும் ஊற்றாகவும், அதே சமயம் கருந்துளையால் ஈர்க்கப்படுவது போல அவை அனைத்தும் மீண்டும் வந்து விழும் ஒரு புள்ளியாகவும்” என்று அவதானிக்கிறார். வயது கூடிக்கொண்டே செல்லும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், புத்திஜீவிகள் என ஆசிரியரின் பிம்பங்களாக வரும் தொடர்ச்சியான கதாநாயகர்கள், தங்கள் காதலிகள் மற்றும் மனைவிகளுடனான உறவுகளின் மூலம் நிலையான அடையாளத்தைக் கண்டடைய முயன்று, பெரும்பாலும் அதில் தோல்வியடைகிறார்கள். அவர்கள் ஆற்றல்மிக்க, சுதந்திரமான, புரட்சிகரமான பெண்களுடனான உணர்ச்சிவசப்பட்ட உறவுகளுக்கும், அடக்கமான, நடைமுறைவாதிகளான துணைகளுடனான நீண்டகால மணவாழ்க்கைக்கும் இடையே ஊசலாடுகிறார்கள். இருப்பினும், இந்தத் திருமணங்கள் கணவர்களின் அமைதியற்ற தன்மை, அந்நியப்படுதல், எழுத்தாளர்களாக அவர்கள் சொற்களின் உலகிலேயே மூழ்கிக் கிடப்பதன் மூலம் சிதைந்து போகின்றன- இது தூய கற்பனையாக மாறும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது அல்லது அவர்களைத் துரோகத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. ஸ்தர்னோன் இந்தப் பெண்களைச் சித்தரிப்பதில் அபாரமான ஆற்றலையும் திறமையையும் காண்பிக்கிறார்; எப்போதும் அனுதாபத்துடன் அவர்களை அணுகி, அவரது ஆண் கதாநாயகர்களிடம் இல்லாத தெளிவையும் ஒருமையையும் அவர்களுக்கு வழங்குகிறார். ஆண்களின் பிடிவாதமான ‘கற்பனை செய்தல்’ என்பது பெரும்பாலும் அப்பட்டமான பொய் சொல்லுதலாகவே சிறுமைப்படுத்தப்படுகிறது.
கடல் அருகே முதியவன் நாவலில் (எர்னஸ்ட் ஹெமிங்வேயின் The Old Man and the Sea நாவலுக்கான தொடர்பு இதில் மிகத் தெளிவு), எண்பதுகளில் இருக்கும் கதாநாயகனை வைத்துக்கொண்டு ஸ்தர்னோன் இந்த அணுகுமுறையை எப்படித் தொடர்ந்து வளர்த்தெடுக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. நாவலாசிரியர் நிகோலா (நிக்கோ) கமுர்ரா, அக்டோபர் மாதத்தின் தனிமையான விடுமுறையைக் கடற்கரையில் கழிக்கிறார். அவர் விக்டர் ஹியூகோவின் The Toilers of the Sea நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறார். இந்த இரண்டு புத்தகங்களுமே கடல்வாழ் உயிரினங்களுடனான வாழ்வா-சாவா போராட்டங்களை விவரிக்கின்றன; அந்த நாடகங்களில் கதாநாயகர்கள் வெற்றி பெறுவது போல தோன்றினாலும், மற்றொரு வகையில் தோற்றுப் போகிறார்கள். ஹெமிங்வேயின் சாண்டியாகோ தனது மாபெரும் மார்லின் மீனைப் பிடிக்கிறான், ஆனால் அது சுறாக்களால் தின்னப்படுவதால் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமல் போகிறான்; ஹியூகோவின் கில்லியாட், கர்ன்சி தீவில் கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்திய ராட்சத ஆக்டோபஸைக் கொல்கிறான், ஆனால் வாக்குறுதி அளித்தபடி தான் காதலிக்கும் பெண்ணை கைப்பிடிக்க முடியவில்லை. வழக்கத்திற்கு மாறான வெப்பம் நிலவும் இலையுதிர் காலத்தில், அமைதியான மத்திய தரைக்கடலின் ஓரத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து, வெறும் பழக்கத்தின் காரணமாக தனது நோட்டுப் புத்தகத்தில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்கும் ஸ்தர்னோனின் இந்த இதமான, நோயுற்ற எண்பது வயது முதியவரின் சாதாரண அன்றாட வாழ்க்கையோடு, அந்த வீரதீரக் கதைகள் எவ்விதத்திலும் பொருந்தவில்லை.
ஸ்தர்னோனின் தீவிர வாசகர்களுக்கு நினைவிருக்கலாம் – நிக்கோலா கமுர்ர என்பது Labilità (2005) நாவலில் வரும் அதே இளம் எழுத்தாளனின் பெயர்தான். கதையை விவரிக்கும் எழுத்தாளனின் மோசமான கூறுகளை அப்பட்டமாகப் பிரதிபலித்து வெற்றிகண்டவன் அவன்; புனைவை யதார்த்ததோடு பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தைப் பற்றிய கவலை ஏதுமற்றவன். கடல் அருகே முதியவன் நாவலில், கடற்கரையில் நடக்கும் அறுபது வயது மதிக்கத்தக்க எவலினா, நிக்கோவை தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு நீதிபதி என்று கருதும் போது, அவளை ஏமாற்ற விரும்பாமல் நிக்கோ அதையே ஏற்றுக்கொள்கிறான். “மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி” என்று அவளை மேலும் நம்பவைக்கிறான். “நான் என் வாழ்நாள் முழுவதும் பொய்களைச் சொல்லிக்கொண்டும் கற்பனை செய்து கொண்டுமே இருக்கிறேன்” என்று பின்னாளில் அவரே ஒப்புக்கொள்கிறார். ஸ்தர்னோனின் எழுத்துக்கள் முழுவதிலும் ஒருவித நையாண்டி கலந்த ஏளனம் விரவியிருக்கிறது. The New Yorker இதழில் வெளியான “Tortoiseshell” என்ற சமீபத்திய சிறுகதையில், அதன் கதையாசிரியர் தான் பொய் சொல்வதில் எப்போதுமே பெறும் அளப்பரிய மகிழ்ச்சியைப் பற்றி ஒப்புக்கொள்கிறார்: “அவை என் உதடுகளிலிருந்து விழுந்தன, நான் அவற்றைப் பொய் என்று தெரிந்தே சொல்லவில்லை; மாறாக, நான் அவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவை பொய்கள் என்ற புரிதல் என்னுள் மங்கிப்போய், சட்டென்று உண்மையாகவே ஒலிக்கத் தொடங்கின.
எவலினாவுடனான அந்த உரையாடலுக்கு முன்பே, நம்புதற்கரிய ஒன்று நிகழ்கிறது. கடற்கரை மணல் மேடுகள் வழியாக நடந்து செல்லும்போது, நிக்கோ “தங்க நிறத்தில் மின்னும் சிறிய உருவத்தைக்” காண்கிறார்: அது உடலோ, தூசிப் படலமோ அல்லது ஒளிக்கீற்றோ அல்ல, மாறாக அது ஒரு ‘இருப்பு’. அது அவரைத் தாண்டிப் படிக்கட்டுகளில் ஓடிச் சென்று மணலுக்குள் புதைந்து கொள்கிறது. அவர் ஆச்சரியப்படவில்லை; இத்தகைய மாயத்தோற்றங்கள் அவருக்கு (அல்லது ஸ்தர்னோனின் பிற கதாநாயகர்களுக்கு) புதியவை அல்ல. அந்த “மின்னும் தங்கச் சிலையுருவம்” மீண்டும் நீர்க்கரையில் தோன்றும் போது, மணலில் தடுமாறியபடி அதைத் பின்தொடர அவர் முயல்கிறார். அது காலைப் பனிமூட்டத்திற்குள் மறைந்து, கப்பல்துறையின் கருங்கோடு நோக்கி, ஒரு இளம்பெண் மற்றும் ஒரு சிறுவனை நோக்கி ஓடுகிறது. மீண்டும் தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து, தனது முன்னாள் மனைவிகளில் ஒருவர் இத்தகைய தோற்றங்களை “பைத்தியக்காரத்தனம்” என்று குறிப்பிட்டதை அவர் நினைவு கூர்கிறார்; “சிலையுருவம்” என்ற சொல் மரண பயத்திற்கு எதிரான தற்காலிக மருந்தா என்று அவர் வியக்கிறார். கடல் அமைதியாக இருக்கலாம், ஆனால் அது மரணத்தை நினைவூட்டும் வலிமையான குறியீடு: பூச்சிகளின் வரிசைகள் அலைகளால் அடித்துச் செல்லப்படுகின்றன; மத்தி மீன்களின் சிறிய பிணங்கள் அந்த மாய உருவத்தைப் போலவே மணலில் மின்னுகின்றன. மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் அந்த எழுத்தாளனுக்கு ஒரு திசைதிருப்புதல் தேவைப்படுகிறது.
தன் மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதற்காக எப்போதும் நிக்கோவின் சாய்வு நாற்காலி அருகே வந்து நிற்கும் எவலினா, அந்தச் சிறிய கடற்கரை நகரத்தில் ஒரு துணிக்கடை வைத்திருக்கிறார். இது நிக்கோவிற்கு உற்சாகத்தைத் தருகிறது. ஏனெனில், 1954-இல் அவரது தாயும் ஒரு துணிக்கடையைச் சிறுகாலம் வைத்திருந்தார், “ஆனால் அவர் வாடிக்கையாளர்களை விட தனக்காகவே அதிக ஆடைகளைத் தயாரித்துக் கொண்டார்… ரொட்டி அல்லது பழம் வாங்க வெளியே செல்லும்போது கூட, எங்களது குறைந்த வருமான குடியிருப்பு கட்டிடத்திலிருந்து பணக்காரத் திரைப்பட நடிகையைப் போலவே அவர் வெளியே வருவார்.” (இந்த வகையில் அவர் ஜெமித்தோ வீதி வீடு நாவலில் வரும் ருஷினே (Rusinè) எனும் தாய்க் கதாபாத்திரத்தை ஒத்திருக்கிறார்; ரோசா என்பது அவரது செல்லப்பெயர்). கடற்கரையில் ஒரு இளம்பெண் – “அவளுக்கு இருபது வயது இருக்கலாம்” – ஒரு படகை கடலுக்குள் இறக்குவதைப் பார்க்கும்போது, நிக்கோ அவளை ரோசாவாகவே கற்பனை செய்கிறார்: “பல தசாப்தங்களாக, என் தாயை அவர் இருக்க முடியாத, இருக்க வாய்ப்பே இல்லாத இடங்களில் எல்லாம் நான் மனக்கண்ணால் உருவாக்கி அமரவைத்துக் கொண்டிருக்கிறேன்.”
அந்தப் பெண்ணால் ஈர்க்கப்பட்ட நிக்கோ, துடுப்பு ஓட்ட கற்க முடிவெடுத்து, துறைமுகத்திற்கு அருகிலுள்ள விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைக்குச் செல்கிறார். அங்குள்ள விற்பனையாளர், கயாக் படகை அவரிடம் விற்க தந்திரமாகப் பேசுகிறார். அப்போது அந்தப் பெண் அந்த விற்பனையாளரைப் பார்த்துத் தலையசைத்துவிட்டுச் செல்ல, நிக்கோ அவளைப் பின்தொடர்ந்து அவசரமாக செல்கிறார். இப்போது அவர் தன்னைத் தன் தந்தையாகவே கற்பனை செய்து கொள்கிறார்- தன் தாயை முதன்முதலில் பார்த்துப் பின்தொடர்ந்த தந்தையின் நிலையில் தன்னை இருத்திப் பார்க்கிறார்: “என் உடலுக்குள் என் தந்தையின் கூறுகள் மிக அதிகமாக இருக்கின்றன; அதனால்தான் கிட்டத்தட்ட அறுபது வருட கால இடைவெளி இருந்தாலும் இப்போது உன்னைப் பின்தொடர்கிறேன், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.” லூ என்ற அந்தப் பெண், தான் வேலை செய்யும் பெண்கள் ஆடை விற்பனை நிலையத்தை திறப்பதற்காக நிற்கிறாள். நிக்கோ உள்ளே நுழைகிறார். தான் ஒரு ஆடை வாங்க விரும்புவதாகவும், “சிறிய மஞ்சள் பூக்கள் கொண்ட பச்சை நிற” உடையைத் தேர்ந்தெடுத்து, அதை அவளை அணிந்து பார்க்கச் சொல்கிறார். “இது என் தாய்க்காக” என்று அவர் பொருத்தமில்லாமல் கூறுகிறார். லூ மறுக்கவே, அந்த ஆடையை விலைக்கு வாங்கியும், அதை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கிறார். “இது உன் சிரமத்திற்காக” என்று அந்தப் பெண்ணிடம் கூறிவிட்டு நகர்கிறார்.
எல்லாமே மிகச் சரியாகப் பொருந்துவது போலவும், அல்லது எதுவுமே பொருந்தாதது போலவும் வாசகருக்குத் தோன்றலாம். அந்த ஆடை நிலையம் எவலினாவினுடையது. நாவலின் ஆரம்பப் பக்கங்களில் நிக்கோவை வழிநடத்திச் சென்ற அந்த மின்னும் உருவம், இப்போது லூவிடம் வந்து முடிகிறது; அவளுக்கு நினி என்ற ஏழு அல்லது எட்டு வயது மதிக்கத்தக்க மகன் இருக்கிறான். அப்படியென்றால் அவளுக்கு எப்படி இருபது வயது இருக்க முடியும்? கடற்கரையில் நினியைச் சந்திக்கும் நிக்கோ, கடல் ராட்சதர்களைப் பற்றிய கதைகளைக் கூறி அவனை உற்சாகப்படுத்துகிறார் – ராட்சத ஸ்குவிட் மீனைத் துவம்சம் செய்த கில்லியாட் என்ற மனிதரைத் தனக்குத் தெரியும் என்று கூறுகிறார். ஆனால் லூ இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறாள்; ஸ்தர்னோனின் நாவல்களில் வரும் பல பெண்களைப் போலவே, இவளும் தன் மகன், பாதங்களைப் பூமியில் ஊன்றி வைத்திருக்க வேண்டும் என்றும், ராட்சதர்களைக் கொல்லும் கனவுகளில் மிதக்கக் கூடாது என்றும் கவலைப்படுகிறாள்.
விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையில் இருந்த அந்தத் தந்திரமான விற்பனையாளர் சில்வெஸ்ட்ரோ, உண்மையில் எவலினாவின் ஏமாற்றுக்கார கணவன் என்பது தெரியவருகிறது. அவன் “தன் சொந்தத் தாயையே விற்கக்கூடிய” ரகம். உண்மையில் அவன் தாய் இறந்துவிட்டார், ஆனால் “அவள் உயிரோடு இருப்பதாகக் கதை சொல்லி உங்களை நம்பவைத்துவிட அவனால் முடியும்.” இது நீக்கோவே செய்த ஒன்றுதான். கடற்கரையில் நிக்கோவைக் கடந்து செல்லும் ஒரு மனிதன் – உலோகத்தைக் கண்டறியும் கருவியுடன் மணலை ஆராய்பவன் – மௌரிசியோ ; அவன்தான் லூவின் முன்னாள் கணவன், பரிதாபத்திற்குரிய முன்னாள் ஆசிரியர். சில நேரங்களில் அவன் நினியுடன் காணப்படுகிறான்; சிறுவன் அவனைத் தந்தை என்று அழைக்கும்போது, “நான் உன் தந்தை இல்லை” என்று இருமுறை கூறுகிறான். அப்படியென்றால் தந்தை யார்? இந்த இடத்தில் நாவல் ஒரு விசித்திரமான துப்பறியும் கதையின் வடிவத்தை எடுக்கிறது, இதில் நிக்கோ/ஸ்தர்னோன் ஒரே நேரத்தில் ஆசிரியராக, துப்பறிவாளனாக, குற்றவாளியாகவும் இருக்கிறார். நினி அப்படியே தன் தந்தையைப் போலவே இருக்கிறான்” என்று எவலினாவின் தோழி ஒருத்தி சொல்ல, நிக்கோ “அது நான்தான்” என்று பதிலளிக்கிறார். பிறகு அதைத் திருத்தி, “நான் ஏழு வயதில் மிகுந்த மகிழ்ச்சியின்றி இருந்தபோது எப்படி இருந்தேனோ, அப்படியேதான் நினியும் இருக்கிறான்” என்கிறார்.
கதையின் போக்கை திசைதிருப்ப அந்தச் சிறுவனும் அவனது தந்தை என கருதப்படுபவர்களும் முக்கியமாகத் தோன்றினாலும், ஸ்தர்னோனின் கவனம் எப்போதும் பெண்களின் மீதே இருக்கிறது. நிக்கோ காணும் ஒரு நீண்ட கனவு விவரிக்கப்படுகிறது; அதில் கடல் அலைகளால் கரை ஒதுக்கப்பட்ட பெண்களின் உடல்களை அவர் மிகுந்த கருணையோடு குனிந்து பார்க்கிறார். உயிருடன் இருப்பவர்கள் மணல் மேடுகளில் உள்ள செடிகளைப் பிடுங்கித் தின்று தங்களை மீட்டெடுத்துக் கொள்கிறார்கள். நிக்கோவும் அதையே செய்கிறார், “நான் விழித்தபோது, நான் ஒரு பெண்ணாக மாறியிருந்தேன்” என்கிறார். அடுத்த நாள் கடற்கரையில், நிக்கோ பரிசளித்த அந்த ஆடையை அணிந்தபடி வரும் லூ, எவலினாவிடமிருந்து வந்த அழைப்பைத் தயக்கத்துடன் அவரிடம் சொல்கிறாள்; எவலினாவின் துணிக்கடையில் அவளது தோழிகள் சிலர் தங்களது இலையுதிர் கால ஆடைகளைத் தேர்ந்தெடுக்கக் வந்திருந்தார்கள். ஒரு துணியால் மறைத்துக்கொண்டு லூ இயல்பாகத் தனது பிகினி உடையை மாற்றும் போது, நிக்கோ “என் தாய் இது போன்ற ஒன்றை பிற ஆண்கள் முன்னிலையில் செய்திருந்தால்… அவர்கள் என்னைப்போன்ற முதியவர்களாக இருந்தாலும் கூட, என் தந்தை அவளைக் கொன்றே இருப்பார்.” என்று எண்ணுகிறார். தன் தாயை அவளின் இயல்புதன்மையோடு அணுக முடியாமல், தந்தையின் பொறாமை கலந்த கற்பனையின் உருவமாகவே பார்த்துப் பழகிய தன் சிக்கலை உணர்ந்து, அவர் ஒரு முடிவுக்கு வருகிறார்: “ரோசா (தாய்) இந்த லூவைப் போன்றவள் என்றால்… அந்த ‘போன்றவள்‘ என்பதைத் தாண்டி, உண்மையில் அவளைச் சந்திக்க முடியுமா என்று பார்ப்போம்.”
இதற்கான வாய்ப்பு அந்தத் துணிக்கடையில் கிடைக்கிறது. எவலினாவின் தோழிகளான டாக்டர் மார்டானோ, இர்மட்ராட், மெலனியா மற்றும் சிபில்லா ஆகிய நான்கு முதிய பெண்கள், “மிதமிஞ்சிய பாராட்டுக்கள், ஏக்கம், போட்டி மற்றும் பொறாமை” ஆகியவற்றுடன் ஆடைகளை அணிந்து பார்க்கிறார்கள். அவர்கள் நீண்ட கால உறவுகளையோ அல்லது பிரசவங்களையோ தவிர்த்த விதவைகள் அல்லது தனிப்பெண்கள் போலத் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், நிக்கோவின் பார்வைக்கு அவர்கள் தங்களது தேவைகளுக்காக வளைத்த ஆண்களைப் பொருட்படுத்தாதவர்களாகவும், குழந்தைகளை ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்பட வேண்டிய விஷயமாகக் கருதுபவர்களாகவுமே தோன்றுகிறார்கள்.
சோபாவில் அமர்ந்து, கையில் நோட்டுப் புத்தகத்துடன், அவர்களின் இமை அசைவைக் கூட விடாமல் நிக்கோ கவனிக்கிறார்; கண்ணாடி முன் அவர்கள் விதவிதமான ஆடைகளை அணிந்து உலா வருவதையும், அவர்களின் போட்டி கலந்த அந்த நெருக்கத்தையும் அவர் ரசிக்கிறார். “தட்டில் வைத்து எதையோ சமர்ப்பிப்பது போல, வலது உள்ளங்கைகளை நீட்டியபடி” அவர்கள் வலம் வருகிறார்கள். அந்தப் பெண்களைப் பற்றிய அனைத்தும் “அழகானது” என்று அவர் முடிவு செய்கிறார்; அதேபோல் ஆடை அலங்காரத்தின் கலைச்சொற்களும் – “taffeta, bordeaux-colored shantung silk, lace tulle, royal blue synthetic satin”- அவருக்குப் பிடித்திருக்கின்றன. சிறு வயதில் தன் தாயிடமிருந்து கற்றுக் கொண்ட அந்தச் சொற்களை, “அவளை பற்றிய நினைவை இழந்துவிடக் கூடாது” என்பதற்காகவே அவர் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்.
தன் தாய் ஒரு காலத்தில் செய்த “மண் வரை முதுகு வளைந்த” கீழ்ப்பணியும் வேலையை, மிகவும் இளையவளான லூ செய்வதைக் காண்கிறார்- அவள் மண்டியிட்டு அமர்ந்து, வாடிக்கையாளரின் ஆடை விளிம்பைச் சரிசெய்து ஊசி குத்திக் கொண்டிருக்கிறாள். அந்த ஆடை மாற்றங்களுக்கு இடையே, “வாழ்க்கையின் வாசனையை மிகத் தீவிரமான வன்முறையுடன்” அவர் திடீரென உணர்கிறார். அப்போது அவரது தாய் அவர் முன் தோன்றுகிறாள்; அவர் இவ்வளவு காலம் தேடிக்கொண்டிருந்த அந்தப் பகட்டான இளம் பெண்ணாக அல்ல, மாறாக “அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ” அப்படியே தோன்றுகிறாள். தன்னை குணப்படுத்தியதற்காகப் புனித சைரஸுக்கு நன்றி சொல்ல, போர்டிசியில் உள்ள ஆலயத்திற்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு கேட்கிறாள். மரணத்தின் விளிம்பில் இருக்கும் அந்தத் தாய், எவலினாவின் வாடிக்கையாளர்களுக்கு முன்னால் மண்டியிட்டு, லூவின் வாயிலிருந்து மென்மையாக ஊசிகளை வாங்கி, ஒரு பெரிய ஆடையின் கூடுதல் துணியைச் சரிசெய்து இணைப்பதைப் பார்த்து நிக்கோ திகைத்துப் போகிறார்.
அந்த ஆடை வாங்கும் நிகழ்வு முடிவுக்கு வரும் வேளையில், சில்வெஸ்ட்ரோ அங்கு வருகிறான். தன் மனைவியை விட பத்து வயது இளையவனான, கரடுமுரடான அதேசமயம் கலகலப்பான இந்த மனிதன், வந்தவுடனேயே தனது இரட்டை அர்த்தப் பேச்சுகளால் அங்கிருக்கும் பெண்களின் கவனத்தை ஈர்க்கிறான். அவர்கள் அனைவருமே அவனது காதலியரோ என்று நிக்கோ வியக்கும் அளவிற்கு அது இருக்கிறது. நிக்கோவின் தந்தை எத்தகைய வேட்டைக்காரக் குணம் கொண்ட பெண் பித்தரைத் தனது போட்டியாளராகக் கருதி அஞ்சினாரோ, அதே போன்ற ஒருவன் தான் இந்த சில்வெஸ்ட்ரோ. அங்கிருப்பவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய நிக்கோ, தனது பேத்திக்கு ஆடைகள் வாங்கப் போவதாகக் கூறி, லூவை அவற்றை அணிந்து பார்க்கச் சொல்கிறார். அந்த முதிய பெண்கள் அனைவரும் லூ ஒவ்வோர் ஆடையாக அணிந்து வருவதைப் பார்க்குமாறு அவர் கட்டாயப்படுத்துகிறார்; லூவும் மிகுந்த மிடுக்குடன் அதைச் செய்கிறாள். “அவள் தனது உள்ளாடையைக் கழற்றிவிட்டாள்” என்று ஒரு கட்டத்தில் நிக்கோ வியக்கிறார். அப்போது அந்த முதிய பெண்களின் எரிச்சலையோ அல்லது தனது தந்தையின் பொறாமையையோ பிரதிபலிக்கும் விதமாக, “அவள் தன் கண்களுக்கு மையை இட்டு இருக்கிறாள் !” என்று நிக்கோவின் எண்ணம் மாறுகிறது. “தனக்குரிய இடத்தில் இருக்க” மறுக்கும் லூ, அந்த முதிய பெண்களின் விலையுயர்ந்த கனவுகளைத் தனதாக்கிக் கொண்டு எவ்விதப் பாகுபாடுமின்றி அவற்றை வெளிப்படுத்துகிறாள். லூ விதவிதமான நவீன ஆடைகளை அணிந்து வரும்போது, நிக்கோ அவளது உடலிலிருந்து “உயிருள்ள, துடிப்பான தனது தாயை” வெளிக் கொண்டுவர முயல்கிறார்; அதே சமயம், தன்னை “கிழட்டு முட்டாள்” என்று ஒதுக்கித் தள்ளிய மற்றவர்களிடம் பழிவாங்கவும் அவர் இதைப் பயன்படுத்துகிறார் என்பதை வாசகர் உணர்ந்து கொள்கிறார்கள்.
இந்த விளையாட்டான, அதேசமயம் செழுமையான தருணத்திலிருந்து பல கதைச் சிக்கல்கள் பின்னப்பட்டு நாவல் ஒரு நாடகத்தனமான முடிவை நோக்கிச் செல்கிறது. ஆனால் அடிப்படை உண்மையான ஸ்தர்னோனின் தரிசனம் என்பது இங்கேதான் இருக்கிறது. சொற்களுக்கும் பொருட்களுக்கும் இடையே, கொடுக்கப்பட்ட வாழ்க்கைக்கும் புனையப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே நடக்கும் அந்த நுணுக்கமான ஆட்டம் அது. எல்லாவற்றிற்கும் மேலாக, படைப்பாற்றலுக்கும் மறுதலிப்புக்கும், சூழ்ச்சிக்கும், அவலத்திற்கும், போட்டிக்கும் இடையே கோடு ஒன்றை வரைவது எவ்வளவு கடினம் என்பதில்தான் அவரது கலை இருக்கிறது. நிக்கோ தன்னைச் சுற்றியுள்ள உலகை உருவாக்கித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ‘ப்ரோஸ்பெரோ’ (Prospero) கதாபாத்திரமாகத் தோன்றினாலும், அதே சமயம் அவர் பரிதாபகரமான மனிதராகவும் இருக்கிறார். எல்சா மொராண்டேயின் கடைசி நாவலான Aracoeli (1982) இல் வரும் கதாநாயகனைப் போலவே இவரும் இருக்கிறார்; அந்த நாவலில் முதிர்ந்த வயதில் தனது நீண்ட காலத்திற்கு முன்பு இறந்த தாயின் சிறு தரிசனத்தையாவது கண்டுவிட வேண்டும் என்று பயணத்தைத் தொடங்குவான். (மொராண்டே தான் தனது முதன்மையான ஊக்கசக்தி என்று ஃபெரான்டே குறிப்பிட்டிருக்கிறார்). மொராண்டேயின் Lies and Sorcery (1948) நாவலின் கதைசொல்லி, “ஏமாற்று வேலையின் பக்தனாகவும் சீடனாகவும் மாறுவது! உனது ஒவ்வொரு சிந்தனையையும், அறிவையும் பொய்களின் மேல் நிலைநிறுத்துவது!… அதுவே எனது இருப்பு!” என்கிறார். வியக்கத்தக்க வகையில், மொராண்டேயின் நான்கு நாவல்களில் இரண்டு, ஆண்களின் பார்வையில் விவரிக்கப்படுகின்றன; தான் சிறுவனாக இருக்கவே எப்போதும் விரும்பியதாக அவர் கூறியிருக்கிறார். ஃபெரான்டேயின் The Story of the Lost Child (2014) நாவலின் கதாநாயகி, தன்னை “ஆண்களால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் கற்பனையால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு எழுத்தாளர்” என்று குறிப்பிடுகிறாள்.
லூவுடன் கயாக் படகில் செல்லும்போது, அவருக்குப் பின்னால் அமர்ந்து, அவளின் ஒரு கை அவரது இடுப்பைச் சுற்றி இருக்க, மற்றொரு கை துடுப்பில் இருந்த அவரது கைகளை பற்றியிருக்க, அவர்களது உடல்கள் இணைந்து ஒரு விசித்திரமான கடல் அரக்கனாக உருமாறுவதாக நிக்கோ கற்பனை செய்கிறார்:
“இப்படித்தான் என் தாய் இருந்திருக்க வேண்டும் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் நான் அவளை ஒருபோதும் இப்படிப் பார்த்ததில்லை, என் தந்தை அவளை இப்படிப் பார்த்ததில்லை, ஒருவேளை யாருமே அவளை இப்படிப் பார்த்ததில்லை. மற்றவர்களின் பார்வையில் தன்னை ஒருபோதும் பிரதிபலிப்பவளாகக் காணாததால், என் தாய் ஒருபோதும் தான் உண்மையில் யார் என்பதைத் தானே உணர்ந்திருக்க மாட்டார்.”
ஊனா ஸ்ட்ரான்ஸ்கியால் மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கடல் அருகே முதியவன் , ஸ்தர்னோனின் முந்தைய தலைசிறந்த படைப்பான ஜெமித்தோ வீதி வீடு நாவலின் ஒரு நையாண்டி கலந்த, துக்ககரமான பின்னிணைப்பாகவே வாசிக்கப்படுகிறது.
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
