எந்த ஒரு நல்ல படைப்பினை நாம் ருசித்து அனுபவிக்கிற போதும் நம் வாழ்வின் அனுபவத்தோடு எங்கேனும் அது பொருந்திவிட்டால் நமக்கு இன்னும் மேலான ஒட்டுதலை அது தந்துவிடுவது இயல்பு. அப்படித்தான் ‘நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்’ என்ற தலைப்பில் அண்ணன் ரவிசுப்பிரமணியன் இயக்கிய ஆவணப்படத்தைக் கண்டபோது, நான் உணர்ந்தேன். படம் பார்த்தபோது எனக்கேற்பட்ட அனுபவம் வேறு எந்த எழுத்தாளருக்கும் இருக்காது. காரணம் இந்த ஆவணப்படத்தில் வரும் கீழ்வெண்மணி சம்பவம் நிகழ்ந்த களத்தின் அருகில் அதன் அக்கினிச்சூடு ஆறாத மூன்றாண்டுகள் கழித்து நாகை மாவட்டம் சாட்டியக்குடி என்ற கிராமத்தில் பிறந்தவள் நான்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மாவை நான் சின்ன வயதில் நேரிலேயே பார்த்திருக்கின்றேன். எங்கள் கிராமத்து வீட்டு வாசலில் வந்து சில தடவை அம்மா அமர்ந்திருந்திருக்கிறார்கள். எங்கள் வீட்டுக்கு எதிரில் செல்லம்மாள் என்ற ஒரு அம்மா இருந்தார்கள். அவர்கள் நம் அம்மாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். அந்தச் செல்லம்மாள் இப்போது இல்லை. அவர்கள் இருக்கும்போது, அம்மா அங்கு வருவார்கள். அம்மாவைப் பார்த்ததும், “கிருஷ்ணம்மா வந்திருக்காங்க, கிருஷ்ணம்மா வந்திருக்காங்க” என்று சொல்லி எங்கள் ஊர் மக்களையெல்லாம் கூட்டி வந்து, அம்மாவைச் சந்திக்க வைப்பார்கள். அந்த ஞாபகங்களை எல்லாம் மீட்டுக்கொண்டு வந்துவிட்டது இந்த ஆவணப்படம்.
இந்தப் படத்தில் இப்போது பழுத்த பழமாக, தளர்ந்த நடையோடு, பஞ்சாய் நரைத்த நடுங்கும் தலையோடு, அவர்களைப் பார்த்தபோது உண்மையிலேயே எனக்கு மிகுந்த கலக்கமாகிவிட்டது. அப்போது எங்கள் பகுதியில் இருந்த ஏராளமான பேர்களுக்கு விவசாய நிலங்களை அம்மா வாங்கித் தந்ததையெல்லாம் நான் பார்த்திருக்கின்றேன். யாரும் எதிரில் நின்று பேசவே பயப்படும் பெரிய பெரிய பண்ணையார்கள், மிராசுதார்கள் வீடுகளுக்கு நடையாக நடந்து அவர்களிடமெல்லாம் நாள்கணக்காகப் பேசி, நிலங்களை வாங்கி, அவற்றை – மிக முக்கியமாக – பெண்கள் பெயருக்கே பதிவு செய்து தந்தார்கள். இந்த விஷயம் படத்தில் பதிவாகவில்லை என்று எண்ணுகிறேன். ஆனால், அப்படித்தான் செய்தார்கள். இதனை நான் ரொம்ப முக்கியமான விஷயமாகப் பார்க்கிறேன். அந்த விவசாயப் பெண்களது பெயர்களில் நிலத்தைப் பதிவு செய்து அம்மா கொடுத்த பிறகு, அவர்களுக்கென ஒரு தனித் தெம்பு வந்தது. தைரியம் வந்தது. அதனை நான் கெளரவம், மதிப்பு என்றெல்லாம் சொல்லமாட்டேன். அதை ஒரு பலம் என்றுதான் சொல்வேன். காரணம் – அப்படி நிலம் தன் பெயரில் பெற்ற பெண்களில் பலரிடம் நான் நேரிடையாக உரையாடி இருக்கிறேன். இப்படி என்னுடன் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் நிறைந்த படமாக இந்தப் படம் அமைந்துவிட்டது. அதனால், இந்தப் படம் எனக்கு ஒரு செய்திப் படமாகவோ அல்லது ஒரு ஆவணப் படமாகவோ தோன்றவில்லை. மிகமிக நெருக்கமான, உணர்வு ரீதியாக என்னால் மறக்கவே முடியாத ஒரு குறும்படமாக மாறிவிட்டது.
எங்கள் கிராமத்தில் நான் வசித்த ஆண்டுகளில், ஒவ்வொரு டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் நாளிலும் சாரைசாரையாக மலர் வளையங்களோடு சிவப்புச் சட்டை போட்ட பெரிய மனிதர்களும், சிவப்புக் கொடி பிடித்தபடி செல்லும் இளம்தாரிகளும், சில பெண்களும் கூட்டம் கூட்டமாக சாலையில் செல்வார்கள். அதைப் பார்த்தபோது ஒருமுறை – பள்ளிக்குச் சென்று படிக்காத, அதே சமயம் நல்ல கதைசொல்லியாக விளங்கிய – என் அம்மாவிடம் சிறு வயதில் நான் கேட்டேன்.
“என்னம்மா இது, கிறிஸ்துமஸ் அதுவுமா, ஏன் இவ்ளோ வெளியூர் ஆளுங்க கூட்டம் கூட்டமா, இந்த மாதிரி பூ வளையமெல்லாம் எடுத்துக்கிட்டு போறாங்க?”
“நீயெல்லாம் அப்போ பொறக்கல, இங்க பக்கத்துல வெண்மணி கலகம்ன்னு ஒண்ணு நடந்துச்சு. விவசாயிவோ செய்ற வேலைக்கு, ஒரு அரைப்படி நெல்லு கூடக் குடுங்க சாமிகளான்னு கேட்டதுக்கு, அந்தக் கட்டயிலே போறவன், வெளியூர் ஆளுவளைக் கொண்டாந்து, வேலை செய்ய வச்சுப்பிட்டான். அவங்கள்ளாம் இங்க வெளிலேர்ந்து வேலைக்கு வரப்டாதுன்னுட்டு நம்ம பக்கத்து ஆள்ங்க சொல்லவும், முதலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும், பெரிய பிரச்சினையா போச்சு. கடைசியில குஞ்சு குளுவான்களை எல்லாம் சேத்து 44 உயிருங்கள குடிசையிலே வைச்சு, கொளுத்தியேபுட்டான்க. அது ஒரு பெரிய துயரம். அதுலேர்ந்துதான் வருஷாவருஷம் அந்த ஞாபகார்த்த நாளுக்காவ இவங்க எல்லாம் இப்படி போறாங்க.”
பின் அதன் முழு விவரங்களைத் தெரிந்துகொண்ட நான், ஒவ்வொரு வருஷமும் செல்லும் அந்த ஊர்வலத்தைப் பார்ப்பேன். உண்மையில் அந்த மெளன சோக ஊர்வலத்தைப் பார்க்கிறபோது, மனசு கனமாகிவிடும். நடந்து செல்லும் எல்லோர் முகத்திலும் ஒரு சோகம் உறைந்திருக்கும். ஒரு சிரிப்போ, உரையாடலோ அந்த ஊர்வலத்தில் இருக்காது. அதை இப்போது நினைக்கும்போது, அது அநீதிக்கெதிரான ஒரு மெளன வைராக்கிய நடை, என்றே படுகிறது.
நான் வளர்ந்த பிறகு அந்த இடத்துக்கு அடிக்கடி சென்று வருவேன். எங்கள் கிராமத்துக்கு மிக அருகமைந்த கிராமம் அது. ஆசிரியர்ப் பயிற்சி முடித்த பின், வேலை கிடைக்காமல் இருந்த காலத்தில், யாராவது விடுப்பு எடுத்தால் அதற்குப் பதிலாக வேலை பார்க்கலாம் என்ற நிலை, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அக்காலத்தில் இருந்தது. அப்போது எங்கள் ஊரின் பக்கத்து ஊர்களில் சென்று வேலை பார்த்து வந்தேன். அந்த வெண்மணி வழியாகத்தான் மிதிவண்டியில் அங்கெல்லாம் செல்வேன். அந்த நாட்களில் வெண்மணியிலேயே நிறைய நேரம் இருக்கும்படி நேர்ந்திருக்கிறது. அந்தச் சமயங்களில் நான் கேட்ட கதைகள் ஏராளம். ஒரு நாள் அந்தப் பகுதியின் ஒரு முதிய அக்காவோடு நான் நெடுநேரம் உரையாடிக்கொண்டிருந்தேன்.
“ஏங்க்கா… இங்க வெண்மணில சில பேரை ஏரிச்சிட்டதா சொல்றாங்களே… அப்ப நீங்க எங்க இருந்தீங்க?”
“அத ஏன் கேக்குற… எரிச்சாவளே… அதே வீட்டுக்கு நானும் போயி ஒரேதிரியா போயிச் சேர்ந்திருக்க வேண்டியவதான். அதுவோ என்னையும் இந்தா நீயும் வா வான்னு கூப்புடுதுங்க. அப்ப என்னவோ விறவடுப்புல எதோ ஒரு வேலையா இருந்தேன். நீங்க முன்ன போங்க, நான் கொஞ்ச நேரம் செண்டு வாரேன்னு சொல்லிப்புட்டேன். அப்பறம் கொஞ்ச நேரத்தில பார்த்தா அதுவோ இருந்த அந்தக் குடிசையே அப்படியே குபீர்ன்னு பத்திக்கிட்டு எரியுதுங்குறேன். அய்யோ மாரியாத்தா என்னடி இது கொடுமை என்ன பண்றதுனே தெரியலயேன்னு, தெருவுல இருந்த நாங்க ஆளும் பேருமா பயந்து அடிச்சுகிட்டு, திக்காலுக்கு ஒரு பக்கமா ஓடுறோம், நான் போய் என்ன பண்ணிட்டேன், தள்ளிப் போயி கதிர் வயல்ல போய் விழுந்து கிடந்தேன். நல்லா இருட்டினதுக்கப்புறமும் கூட எழுந்திரிச்சி வர பயம் எனக்கு. இடுப்புத் துணியை சொருவி மறைச்சு வைச்சிட்டு, அப்படியே நெல்லு வயலுக்குள்ளயே பயந்துக்கிட்டே கிடந்தேன். அம்மாம் பெரிய ஆளுவளுக்கே இந்த கதின்னா நாம எம்மாத்திரம்ன்னு கிடக்கேன். இதுல, என் வூட்டுக்காரரு எங்க போனாரு என்ன ஆனார்ன்னே தெரியாம திகீல்ங்குது. நான் என்ன பண்ணுவன் சொல்லு.
அப்புறம் அந்த ரா முழுக்க அந்தக் கதிர் வயல்லேயே கிடந்துட்டு பொழுது விடிஞ்சப்பறமா எழுந்திரிச்சி, எந்தப் பக்கம் போறோம் என்னா ஏதுன்னு ஒரு நிக்குநிகா இல்லாம அங்க இங்க திரிஞ்சு கடேசில மத்தியானமா வூடு வந்து சேர்றேன். வந்து பாத்தா என் வீட்டுகாரரைக்காணோம். அய்யோ இந்த மனுசனும் இப்படிப் போயி பொயிடிச்சேன்னு அழுது புலம்பிக்கிட்டு அங்க ஓடுறேன். போனா, அங்க ஒண்ணும் கண்டு புடிக்க முடியல. எல்லாம் கரிக்கட்டையா கிடக்குது. வாய்வுட்டு சத்தமா அழுவவும் பயமா இருக்கு. இப்படிக் கொஞ்ச நாள் போச்சு. நல்ல சீலை கட்டாம பொட்டுகிட்டுல்லாம் வச்சிக்காம என்னமோ வாழ்ந்துட்டு இருந்தேன். பெரிய சோகம்மா அது.”
“அடடா, உங்ககிட்ட அதைக்கேட்டு ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். மன்னிச்சிக்கங்க அக்கா.”
“இரு இரு. பாக்கிக் கதையைக் கேளு. அப்புறமா ஒரு நாளு, ரெண்டு மூணு மாசம் கழிச்சி எங்க தெருவுல நடந்து போயிக்கிட்டே இருக்கேன். எங்க வூட்டுக்காரரு எதுக்கால கிண்ணுகிண்ணுன்னு நடந்து வாராரு. அய்யோ. ஏதோ அவரு ஆவிதான் வந்துருக்கோன்னு பயந்து ஓடி வூட்ல போய்க் கதவைச் சாத்திக்கிட்டேன். அப்பறம் ‘ஏ… கதவ தொற’ங்கிறாரு. கதவைத் தொறந்து கீழ குனிஞ்சு கால்லாம் இருக்குதான்னு பாத்தேன். ஆமா. ஆவி இல்ல, அவரேதான். எப்படி இருக்கும் பாரு. அப்பறம் ரெண்டு பேருமா அழுது ஓய்ஞ்ச பிறகு சொன்னாரு.
எரிஞ்சதை நான் பார்த்தனா, அப்படியே பயந்து ஊரைவிட்டு ஓடியே போயிட்டேன். நீயும் பொயிட்டன்னுதான் நினைச்சேன். எங்கெங்கயோ அலைஞ்சேன். கடைசீல கும்மோணத்துல போயி உழவு வேலை பார்த்தேன். இத்தனை மாசம் ஆச்சே, இங்க கலவரம் எல்லாம் ஓய்ஞ்சு பொயிருக்கும்ன்னு நெனச்சிட்டு இன்னைக்கு வந்தேன்னாரு.”
எண்ணிப் பார்க்கிறேன். அப்போது அங்கு உயிரோடு இருந்தவர்களின் பலரின் மனநிலை, பதற்றம், எல்லாமே ரொம்பக் கொடூரமாக இருந்திருக்கும். அது ஒரு ஆறாத சமூக வடு.

அந்தக் காலத்தில் கொத்தங்குடி என்கிற பண்ணையில் எனது அப்பா உழவர்களை வேலை வாங்கும் காரியக்காரராக இருந்தபோது, அவருக்கு நான் தேநீர் எடுத்துக்கொண்டு செல்வேன். சில சமயம் சாப்பாடு எடுத்துக்கொண்டும் செல்வதும் உண்டு. அப்போது வெண்மணி பற்றி அந்த நடவு வயலில், நிறைய பாடல்களை பெண்கள் பாடுவார்கள். அம்மாவும் அக்காவும்கூட அந்த நாற்று நடும் பெண்களில் நடுபவர்களாக இருந்திருக்கிறார்கள். அங்கு வரப்பில் அமர்ந்தபடி அந்தப் பாடல்களையெல்லாம் நான் கேட்டு இருக்கிறேன். ஒரு முப்பது பெண்கள் நடவு நடுகிறார்கள் என்றால், அவர்களில் ரெண்டு மூன்று பேர்களாவது நன்றாகப் பாடத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஒருவர் பாட, மற்றவர்கள் அதை வாங்கிப் பாடுவார்கள். அதில் சில வரிகள் இப்போதும் மங்கலாக என் நினைவில் இருக்கின்றன.
வெண்மணி வீரர்கள் விவசாயத் தோழர்கள்
வெந்து மடிந்தார்களோ என் தலைவா!
வேதனை அடைந்தார்களோ?
நாப்பத்தி நாலு பேரை ஒரு வீட்டில் போட்டடைத்து
பெட்ரோலை வீசி விட்டான் என் தலைவா!
தீயைக் கொளுத்தி விட்டான்
செத்திட்டார் இன்னு சொல்லி சீமைக்கு ஆளு போக
சீமை திரண்டு வர, என் தலைவா
சேவை செய்வோர் கூட்டம் வர
மாண்டுட்டார் இன்னு சொல்லி
மதுரைக்கு ஆளு போக
மதுர திரண்டு வர என் தலைவா
மாதர் சங்க கூட்டம் வர
பாலும் அடுப்பினிலே பாலகனும் கையினிலே
பால இறக்கலையோ என் தலைவா
பாலகனைத் தூக்கலையோ
சோறும் அடுப்பினிலே சுந்தரனும் கையினிலே
சோற இறக்கலையோ என் தலைவா
சுந்தரனைத் தூக்கலையோ?
சம்பந்தப்பட்ட உறவுக்காரர்கள் அதில் யாரும் வந்து பாடும்போது உருக்கமாகப் பாடி, கண்ணீர்விட்டு அழுவார்கள். சரம்சரமாக இப்படிக் கேட்டு வாங்கி மற்றவர்கள் பாடும்போது, எல்லோருக்கும் அழுகை வர, அவர்கள் கண்ணீரெல்லாம் அந்த நெல் வயல் தண்ணீரோடு கலப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

இப்படி மனத்தில் தேங்கிக் கிடந்த எத்தனையோ நினைவுகளை இந்த ஆவணப்படம் கிளறிவிட்டுவிட்டது. அதனால் ஒரு பெரிய திரைப்படம் பார்த்த நிறைவை இந்த ஆவணப்படம் தந்துவிட்டது. ரொம்ப பர்சனலாக இருந்ததால், படம் முடிந்ததும் மனசு பாரமாகத்தான் இருந்தது.
ஒவ்வொரு காட்சியையும் சிற்பம் போலச் செதுக்கிச் சேர்த்திருக்கிறார்கள் அண்ணன். மிக முக்கியமான செய்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்ற அழகைப் பற்றி இன்னொரு கட்டுரை எழுதலாம். கட்டுக்கட்டாக நாங்கள் பேப்பரில் எழுதிச் சாதிப்பதைவிட, சின்னச் சின்ன நவநவமான காட்சிகளை முன்னிருத்தி, செய்திகளைக் கவித்துவமாக மனத்தில் இருத்திவிட்டார்கள்.
இந்த முதுதாயின் வாழ்க்கை எங்கே ஆரம்பித்து, எங்கெல்லாமோ ஓடி, அந்த ஓட்டம் எங்கே வந்து நிற்கிறது என்று பார்த்தால்…. இல்லை. நிற்கவில்லை. படத்தில், பேராசிரியர். க.பழனித்துரை சொல்வது போல, இந்த நூறாம் வயதிலும் இன்னும் அந்த வாழ்வு ஓடிக்கொண்டே இருக்கிறது. நினைத்தே பார்க்க முடியவில்லை அம்மா காந்தியைச் சந்தித்ததும், அவருக்கு மூன்று நாள் உறுதுணையாக இருந்ததும். ஜே.சி.குமரப்பா அம்மாவுக்குத் திருமணம் செய்து வைத்ததும் அப்படித்தான். பெரிய பெரிய விஷயங்கள் ரொம்ப எளிமையாக நடந்திருக்கின்றன. அது யாருக்கு எப்போது நடக்கவேன்டுமென ஏதோ காலம் தேர்ந்தெடுத்து, தேதி குறித்து, நடத்தி வைத்தது போல நடந்துள்ளன எல்லாம். இதையெல்லாம் படத்தில் பார்த்தபோது இந்தப் பாடல் வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வந்ததன.
“எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.”
ஒரு ஆசிரியையாக இந்தப் படம் பெண் பிள்ளைகளுக்கான ஒரு சிறந்த பாடம் என்று சொல்வேன். என்ன விதமான தைரியத்தோடு அம்மா அவர்கள் எல்லாவற்றையும் எதிர்கொண்டுள்ளார்கள் என்று பார்க்கும்போது இந்தக் காலத்துப் பிள்ளைகள் சின்னச் சின்ன விஷயங்களுக்கு ஏன் இவ்வளவு சோர்ந்து போகிறார்கள் என்று நினைக்கத்தோன்றுகிறது.
முக்கியமாக நான் இதில் சொல்ல விரும்புகிற ஒரு விஷயம், உழைத்து உழைத்து ஒன்றுமில்லாதவர்களுக்காக, வலி நிறைந்தவர்களுக்காக, காந்திய வழியில் வாழ்நாளெல்லாம் போராடிக்கொண்டிருக்கிற இந்த ஆளுமையை படத்தில் தரிசித்த நெகிழ்ச்சி இன்னும் எனக்குள்ளிருந்து மறையவில்லை. படத்தைப் பார்த்து முடித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. படம் இன்னமும் மனத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறது.
2. 4. ’26, வியாழன், காலை 7 : 40, சென்னை – 47.
*****
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

