புறவயமாக நமக்குத் தென்படும் உலகம் என்று ஒன்று இருக்கிறது அகமுகமாக நம்முள் ஒரு இயக்கம் இருக்கிறது. செயல்படு கருவிகளும், உணர்தல் தன்மை உள்ள கருவிகளும் மனிதனிடத்தே இருக்கின்றன. அக்கருவிகளும் கூட கண்கள் அறியாத ஒரு செயலை அல்லது செயல்களை நம் உள்ளே நடத்துகின்றன.
முன்னொரு காலத்தில் அறிதல் என்பது தத்துவம் சார்ந்து இயங்கி வந்தது. அந்தத் தத்துவம் பல பிரிவுகளாகப் பிரிந்து, பல கேள்விகளைக் கேட்டு, பல சிந்தனைகளை விதைத்து, மனிதன் எவ்வாறு தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டியது. ஆனால், அது தன்னிடமும் பிறரிடமும் கேட்ட வினாக்களை அறிவியல் வேறொரு கோணத்தில் அணுகியது. ஆரம்ப கால அறிவியல், புறப்பொருட்களுக்கு, அதன் ஆய்விற்கு, இந்த உலகம் தோன்றிய விதங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தனி ஒரு மனிதனுக்கோ, மனிதக் குழுக்களுக்கோ அல்லது மற்ற உயிரினங்களுக்கோ கொடுக்கவில்லை; தன்னைத்தானே அறிவதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை.
மெய்யியலையும் அறிவியலையும் இவ்வாறாகப் பிரித்ததில் பல சிந்தனைகள் எல்லைகளை மீறிக் கலப்பதும், அவற்றின் தீவிரமான நோக்கங்கள் என்ன என்ற தெளிவின்மையும் அதிகமாக எஞ்சுகின்றன. உதாரணமாக, சைதன்யம், புத்தி, மனது, தகராகாசம் இவற்றைப் பற்றி அறிவியல் பேச முனையும் போது நான்குமே ஒரு கலவையாகத்தான் வெளிப்படுகின்றது. மூளை என்பது சைதன்யம், மூளை என்பதே இயக்கம், மூளை என்பதே மனம் என்று சொல்லும் அறிவியல், தன் நினைவில்லாமல் இருக்கும் ஒரு கோமா நோயாளியினிடத்தில் மூளையின் செயல்பாடுகள் பற்றி இதுவரை திட்டவட்டமாக அளக்க முடியவில்லை. அளத்தல் அறிவியலுக்கு முக்கியம் (கலீலியோ உலகை இரண்டாகப் பகுத்தார். எடை, அடர்த்தி,, வேகம் போன்ற அளவிட முடிந்தவைகள் முதலிடத்தைப் பெற்றன. நிறம், சுவை இவையெல்லாம் இரண்டாம் இடத்திற்குச் சென்றுவிட்டன.) ஒரு கோமா நோயாளி மூச்சு விடுகிறார், அவருக்கு உணவு உட்செலுத்தப்படுகிறது, அவர் மூளையின் இயக்கம் ஈஈஜியில், மற்றும் fMRI ல்அலைகளாகப் பதிவாகிறது. இது பெரும்பாலும் சிலருக்கு விசேஷ தேர்ந்தெடுத்த ஞாபக மறதியில் (Special Selective Amnesia!)சற்று தெளிவாகப் பதிவாகிறது. ஆனால், அது சொல்லும் செய்தி என்ன? அவருக்கு மனது என்ற ஒன்று செயல்படுகிறதா, தனது இந்த நிலையை அவர் அறிந்து கொண்டும் சொல்ல முடியாமல் தவிக்கிறாரா, மூளையின் நியூரான்கள் ஏன் திடீரென்று செயல்படவில்லை? சைதன்யம், மனம், தகராகாசம் என்பது உடம்புக்குள் எங்கே இருக்கிறது? உதாரணமாக இதயம் நேரடியாக நம் கண்களுக்கு தெரியவில்லை என்றாலும் அது இருக்கும் இடம் நமக்குத் தெரியும் உள்ளே இருக்கும் உறுப்புகள் அமைந்துள்ள இடங்களை பற்றி பொதுவில் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மனம், சித்தம், எங்கே இருக்கிறது? இந்தியத் தத்துவங்களின் படி தகராகாசம் உடம்பிற்குள் இதயத்தின் அருகில் இருக்கும் மிகச் சிறிய வெற்றிடம். அதில் தான், மனம், அகங்காரம் என்பவை தோன்றுகின்றன.

தோற்றவியல்/ நிகழ்வியல்
ஹெரால்ட்ஏ வில்ஷ் (Harald A. Wiltsche)என்ற அறிஞர், இயற்பியலிற்கும், தோற்றவியலிற்கும் (Phenomenology) இடையே அடிப்படை வேறுபாடுகளில்லை என்று சொல்கிறார். கான்ஷியஸ்னெஸ் தான் இயற்பியலிற்கும், குவாண்ட இயற்பியலிற்கும் அடிப்படையாக ஆனால் மறைந்துள்ள கட்டுமானம். உணர்வில் முகிழ்க்கும் கட்டுமானங்களில் குவாண்ட இயற்பியலும், ‘ரிலேடிவிடி’யும் அமைகின்றன; அதனிடமிருந்து தள்ளியோ, வெளியேயோ இல்லை. நம் அனுபவங்களில் நாம் பார்க்கும் பொருட்கள், கேட்கும் இசை, சுவைக்கும் உணவு, நுகரும் நாசி, தட்ப வெப்பத்தை உணரும் உடல் இவையெல்லாமே, தன்னுணர்வு என்பது நமக்குக் கண்ணாடியில் காட்டுவது. எங்கிருந்தோ பார்ப்பது இல்லை, முறைப்படுத்திச் சொல்வது அது. அதைத்தான் இயற்பியலிலும், அதன் சில துறைகளிலும் தள்ளி வைத்திருக்கிறோம்.
தோற்றவியல் அல்லது காரண காரியக் கோட்பாடு என்பது, தன்னுணர்வில் புறம் என்பது எப்படி பொருளாகிறது என்பதைப் பற்றி ஆய்வு செய்கிறது. ஒரு கோணத்தில் தென்படுவதை, மேலும் ஒழுங்குபடுத்தி, தொடுவானில் அதன் அனைத்துக் கோணங்களையும் துலங்கச் செய்வது தன்னுணர்வு. ஒரு திறன்பேசியின் ஒரு பக்கத்தை நீங்கள் பார்க்கும் போதே, உள்ளார்ந்து அது மற்றொரு கோணத்தில் எவ்விதம் தென்படும் என்பதும், அது ஒரு நீடித்த முழுமையான பொருள் என்றும் அறிகிறீர்கள். இங்கே புறவயப் பார்வை என்பது, ‘பார்ப்பவரை தவிர்ப்பது’ (observer-free) என்பதல்ல; தன்னுணர்வு அல்லது உணர்வு அனுபவத்தினால் ஏற்படும் நிலைத்த மாறிலிகளின் (invariants) சாத்தியங்களைக் காட்டும் ஒன்று. காலவெளி பற்றி சொல்லும் இயற்பியல், ‘பார்வைகளின் மாறிலிகளின்’ (invariants across perspectives) வடிவை எடுத்துக் கொண்டு, அதைக் கணித வடிவில் சொல்கிறது. ‘மரபு இயக்கவியலும், சார்புக் கோட்பாடும்’ ஒருங்கிணைப்புச் சட்டகங்களை (coordinate frames) எடுத்துக்கொண்டு, அவற்றிற்கிடையேயான மாற்றம் (Galilean or Lorentz transformations)) இயற்கை விதிகளின் படி, செல்லுபடியாக வேண்டும் எனச் சொல்கின்றன. இந்த சட்டகங்களின் இடையே நாம் மாற்றத்தை அளவிடும் போது எது உண்மை என்று புலனாகிறதோ, அது அந்த மாறிலிகளால் அமைகிறது. மேலே கண்ட திறன்பேசியை எடுத்துக் கொள்வோம். அது பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுவது, அவரவர் பார்வை. அதை தொலைவில், அருகில், சாய்கோணத்தில், கவிழ்த்து வைத்து, நிமிர்த்தி வைத்து பார்ப்பதென்பது சட்டகங்களின் இடையே அதை நாம் பரிசீலிக்கும் ஒன்று. அது ஒரு திறன்பேசியாகத் தென்படுவது முழு முதல் உண்மை.
எனவே, இயற்பியல், தன் பார்வை என்ற ஒன்றில்லாமல், முழு விளக்கத்தைத் தருகிறது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்க ஒன்றா என்று வில்ஷ் கேட்கிறார். இயற்பியல் ஏதோ ஒன்றைச் சார்ந்து, அதிலிருந்து தொடங்கி தன் ஆய்வுகளை, அதன் கணித மாதிரியைக் கண்டெடுக்கிறது. பல கோணங்களில் காணக்கிடைக்கும் வடிவம் என்ன என்று ஆராய்வதற்கும் சார்ப்புப் பொருள் ஒன்று வேண்டும். இதற்குப் பொருள் என்னவென்றால், இயற்பியலும் ‘ஸப்ஜெக்டிவிடியை’ மறுதலிக்கவில்லை. அது இங்கிருந்து தொடங்கி, ‘ஆப்ஜெக்டிவிடியை’ கட்டமைக்கிறது.
தோற்றவியல் முதன்மையாக அனுபவங்களை இப்படிச் சொல்கிறது. “அனுபவம் என்பது ‘எதிர்பார்க்கும் சாத்தியங்களை’ நோக்கிச் செல்வது.” (Experience is always oriented toward anticipated possibilities.) குவாண்ட இயக்கவியலில், பொருளோ, நிகழ்வோ அதன் தன்மையை எப்படி அறிகிறோம்? அவை அங்கே சும்மா காத்துக்கொண்டிருக்கவில்லை. குறிப்பிட்ட அளவுக்கருவிகள்/ முறைகள் இவற்றைப் பயன்படுத்தி அந்தப் பொருள் அல்லது அந்த நிகழ்வின் தன்மையை அறிகிறோம். மேலும் அந்த விதிகள்/ முறைகள் மீண்டும் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும். QBism, இந்தக் குவாண்ட நிலையை எப்படிக் கையாள்கிறது? அதைப் பொறுத்தவரை குவாண்ட நிலை என்பது ‘பயன்படுத்துவோரின் எதிர்கால அனுபவ எதிர்பார்ப்புகளின் குறியாக்கம்.’(the quantum state as encoding an agent’s expectations about future experiences)

குவாண்ட இயக்கவியல்
‘கான்ஷியஸ்னெஸ்ஸ்’ பற்றி இவ்வாறு சொல்கிறது.
- ந்யூரானில் இருக்கும் நுண்ணிய குழாய்களில் நிகழும் குவாண்ட கணக்கீடுகளில் உணர்வு உதயமாகிறது.
- அது உருக்கொண்டு உணர்வுபூர்வ அனுபவமாகிறது.
- Stapp, Kafatos போன்ற இயற்பியலாளர்கள் குவாண்ட வெற்றிடத்தில் உணர்வு பிறந்து பின்னர் அனுபவமாகிறது என்று சொல்கிறார்கள்.
மேவு நிலை, (superposition) பிணைத்தல், (entanglement) குறிப்பிட்ட இடம் என்று சொல்லமுடியாதிருத்தல் (non-locality) குவாண்டத்தின் சிறப்பியல்புகள். இந்த இயல்பை வைத்து குவாண்டம், உணர்வைப் பற்றி சொல்கிறது. (Orch-OR (Penrose–Hameroff)
சார்பிற்கும், புறத்திற்கும் இடையே ஆழமான தொடர்பும், பிணைப்பும் இருக்கிறது. இரண்டின் கட்டுமான அடிப்படையும் ஒன்றுதான். தோற்றவியல் இதை ஆராய்கிறது. இதன் ஆய்வுகள், கட்டப்பட்ட அல்லது புலப்படும் தோற்றங்கள், மாறுதலுக்கு உள்ளாகும் பார்வைக் கோணங்கள், மாறிலிகளாக எழுபவை என்று இயங்குகின்றன. இயற்பியல் இந்த விளைவுகளை சீராக்குகிறது, விரித்தெடுக்கிறது, ஆனால், இதிலிருந்து தப்பவில்லை. அனுபவங்கள் பொருள் படுவதே, உணர்தலைக் காட்டும் அக உணர்வினால்தான். உணர்வு பூர்வ அனுபவக் கட்டமைப்பு என்பதை அகற்றி இயற்பியல் செயல்பட முடியாது; ஏனெனில், அது அதில் தான் கட்டப்பட்டுள்ளது. அகத்தில் பிரதிபலிக்கும் புறம். அகம் இல்லையெனில் புறமிருந்தும் எந்தப் பிரதிபலிப்புமில்லையல்லவா? கடலில் அலைகள் உண்டு; அலைகளில் கடலில்லை.
கணினியும், உணர்வும்
தகவல்களைப் பதிந்து கொள்வதால், தக்க கேள்விகளுக்கு தக்க பதிலாகத் தரும் திறமை இருப்பதால், தன்னுடைய தவறுகளை ஓரளவிற்குக் கண்டறிந்து சொல்லும் திறன் இருப்பதால் கணினிகளுக்கும் தன் உணர்வு இருக்கிறது என்று நரம்பு அறிவியல் பொதுவாக சொல்லத் தொடங்கியுள்ளது. அந்த்ரோபிக்கின் ‘க்ளாட் சானெட் 4.5’ ஏறத்தாழ 170 உணர் திசையன்களை அறிகிறது. அதாவது, மூளை போன்ற அங்கம் இன்றியேகூட ஒரு இயந்திரம் உணர்ச்சியை அடையாளம் காண்கிறது. அதன் வலைப்பின்னல்கள் மூளையை ஒத்துத்தான் அமைக்கப்படுகின்றன என்ற போதிலும், அதற்கு விழிப்புணர்வு என்பது அதை நாம் இயக்கும்போது, கேள்விகள் கேட்கும் போது அதைப் புரிந்து கொண்டு செயலாற்றுவது மட்டுமே. ( திரு. ரவி அண்ணாசாமியின் முக நூல் பதிவிற்கு நன்றி) செயற்கை நுண்ணறிவு என்பது இயற்கையைப் ‘போலச் செய்வதே’ தவிர அது இயற்கையானது அல்ல. அந்த செயற்கை நுண்ணறிவுக்கு எந்தவித உணர்ச்சிகளும் கிடையாது- மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, கண்ணீர், துயரம், வலி, வேதனை ,சலிப்பு போன்ற உணர்வுகள் செயற்கை நுண்ணறிவிடம் இன்று கிடையாது. மனித மூளையின் நரம்பியல் இணைப்புகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள புத்தம் புதிய செயற்கை நுண்ணறிவு கருவிக்கு கூட உணர்வுகள் ஏற்படவில்லை என்றால் அந்த உணர்ச்சிகளை மனிதர்களோ விலங்குகளோ தாவரங்களோ மற்றைய விஷயங்களோ எங்கிருந்து பெற்றன? தற்போது ட்ரைப் வி 2 என்ற உணர்திறன், மனித மூளை கேட்டல், பார்த்தல் போன்ற சில உணர்வுகளுக்கு எந்த வித ந்யூரான் செயல்படும் என்பதைக் கணித்தறியும் வண்ணம் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், எண்ணங்கள் போன்ற நழுவும் ஒன்றை அதனால் கணித முறையில் மாதிரியாக்க முடியவில்லை. (திரு.அருணாசலம் ரமணன் தன் கட்டுரையில் ஒரு அற்புதமான செய்தியைச் சொல்கிறார்: ‘மரபுசாரா கணினிவியல் துறையில் சிலர் பரிசோதனை முயற்சியாக நேரடியாகப் பூஞ்சை மைசீலியத்தை கணினி மாதிரி பயன்படுத்துகிறார்கள். பூஞ்சைகள் தாவர இனமில்லை. ).அறிவியல் இதை சாதாரணமாக தன்னை காத்துக் கொள்ளும், தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளும், தான் வாழ இச்சை கொள்ளும் பொதுப்பண்பு என்று சொல்லிவிடுகிறது.
தன்னை உயர்வாக எப்போதும் முன்னிறுத்தும் அந்த அகங்காரத்தையும் மனது கொண்டுள்ளது என்பதை அறிவியலால், தத்துவத்தைப் போல் இன்று வரை விளக்க முடியவில்லை.
கான்ஷியஸ்னெஸ் எங்கெல்லாம் விரவி இருக்கிறது?
நமது மாபெரும் அறிவியலாளர் ஜகதீஷ் சந்த்ர போஸ் தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்று ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்தார். அவைகள் தன் வேர்களை சரியான திசையில் பரப்பி நீரை இனம் கண்டுகொள்கின்றன ;தன்னை வெட்டவரும் மனிதரிடமிருந்து வரும் உடல் உஷ்ணம் அவர் காலடி ஓசை என நினைவில் பதித்துக் கொண்டு, தன் இனத்தார்க்கும் எச்சரிக்கை செய்கின்றன. அவை தங்களுக்குள் நாம் அறியாத மொழியில் உரையாடுகின்றன என்பதை இன்றைய நியூரோ பயாலஜி ஏற்றுக் கொண்டுள்ளது. இவற்றைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்
| கருது கோள் | தாவரங்கள் | மற்ற விலங்குகள் | மனிதன் |
| சைதன்யம் | ஆம் | ஆம் | ஆம் |
| விழிப்புணர்வு | ஆம் | ஆம் | ஆம் |
| அறிவாற்றல் | இல்லை | ஆம் | ஆம் |
| மனம் | இல்லை | ஆம் | ஆம் |
| அகங்காரம் | இல்லை | ஆம் | ஆம் |
தோற்றம் தரும் உலகு
கேத்லீன் ஸ்டாக் (Kathleen Stock) தனது பிப் 2026 கட்டுரையில் சொல்கிறார்: இந்த உலகம் அர்த்தமற்றதாகவும், ஈர்ப்பு குறைந்ததாகவும் தென்படுகிறது. அப்படியென்றால், நம் அனுபவங்களின் மர்மமென்ன? A World Appears என்ற புத்தகத்தைப் பற்றிய கட்டுரையில் கேத்லீன் மேலும் சொல்கிறார். அறிவியல் இதழலாளரும், பல்துறை வித்தகருமான Michael Pollan என்பவர் எழுதியுள்ள இந்த நூல் உணர்வைப் பற்றி பேசுகிறது. கவிஞர்கள் காணும் உலகை நாமும் அறிய வேண்டுமென்றால், கவிதைகளில் தோய வேண்டும்- நீலச்சுடரில் காற்றில் மெல்லிய நடமிடும் அந்த தீபத்திடம் உங்களை ஒப்படைக்கையில் கம்பனோ, காளிதாசனோ, பாரதியோ, இசையோ உங்களுக்கு இயற்கையைக் காட்டி உணர்வு என்பதைச் சுட்டுவார். இந்த தன்னுணர்விற்கு ஒரு உள்ளார்ந்த முகம் இருக்கிறது. பலகணியின் வழியே நீங்கள் பார்ப்பது அதன் சட்டகங்களா, அல்லது வெளி உலகா? தாமஸ் நேகல் தனது கட்டுரையான ‘ஒரு வௌவாலாய் இருப்பது என்பது என்ன?’ என்பதில் ஒரு அரிய கருத்தைச் சொல்கிறார். ‘ஒரு உயிரினமாக இருப்பதே எத்தகையது என்பது குறித்து ஒரு அனுபவம் இருக்குமானால்,- மற்றும் இருந்தால் மட்டுமே உயிரினம் என்ற உணர்வு வசப்படும்.’
மைக்கேல் போலனின் (Michael Pollan) “A World Appears: A Journey Into Consciousness” (2026) புத்தகத்தில் அவர் மனித அனுபவத்தின் மிக அடிப்படையான மற்றும் மர்மமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்: அதுதான் உணர்வுநிலை (Consciousness)
இந்தப் புத்தகம் 1998-ல் நரம்பியல் விஞ்ஞானி கிறிஸ்டோஃப் கோச் மற்றும் தத்துவஞானி டேவிட் சால்மர்ஸ் ஆகியோருக்கு இடையே நடந்த ஒரு பந்தயத்துடன் தொடங்குகிறது. மூளையின் இயற்பியல் செயல்பாடுகள் எவ்வாறு ‘உணர்வு’ அல்லது ‘உயிர் இருப்பின் உணர்வை’ உருவாக்குகின்றன என்பதை அறிவியலால் இன்னும் விளக்க முடியவில்லை என்பதை போலன் சுட்டிக்காட்டுகிறார்.

முக்கியக் கருத்துக்கள்
தாவர நுண்ணறிவு* (Plant Intelligence): தாவரங்கள் கற்றல், நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் கொண்டவை என்று போலன் கூறுகிறார். தாவரங்களை வெறும் ஜடப்பொருட்களாகப் பார்க்காமல் அவற்றின் நுணுக்கமான அறிவை அவர் விவரிக்கிறார்.
*செயற்கை நுண்ணறிவு (AI) மாயை : AI என்பது தகவல்களை வேகமாகச் செயலாக்கும் திறன் கொண்டது, ஆனால் அதற்கு ‘உணர்வு’ (feeling) கிடையாது. ‘நுண்ணறிவு’ (Intelligence – சிக்கல்களைத் தீர்ப்பது) மற்றும் ‘உணர்வு நிலை’ (Sentience – அனுபவங்களை உணர்வது) ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அவர் விளக்குகிறார். நாம் இயந்திரங்கள் மீது தேவையில்லாமல் உணர்வுகளைக் கற்பிப்பதாக அவர் எச்சரிக்கிறார்.
கவனத்தின் மீதான “முற்றுகை”: நவீன தொழில்நுட்பமும் அல்காரிதங்களும் மனிதர்களின் கவனத்தைச் சிதறடிக்கின்றன. ‘டோபமைன் லூப்கள்’ (Dopamine loops) மூலம் தொழில்நுட்ப நிறுவனங்கள் நமது விழிப்புணர்வைக் கவர்கின்றன. இதனால் நம்மால் ஒரு விஷயத்தில் முழுமையாகக் கவனம் செலுத்த முடிவதில்லை.
விலங்கு மற்றும் மனித விழிப்புணர்வு : விலங்குகள் உயிர்வாழ எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியுள்ளது. ஆனால் மனிதர்கள் தொழில்நுட்பத்தின் உதவியால், விழிப்புணர்வற்ற நிலையிலும் (absent-minded) வாழப் பழகிவிட்டனர் என்று அவர் கூறுகிறார்.
தன்னிலை மற்றும் மேலாண்மை (The Self and Transcendence): தியானம் மற்றும் கலைகளின் மூலம் மனிதர்கள் எப்படித் தங்கள் ‘சுய’ அல்லது ‘நான்’ என்ற எண்ணத்திலிருந்து விடுபட முயல்கிறார்கள் என்பதைப் பற்றி போலன் ஆராய்கிறார்.
தி கார்டியன் விமர்சகர் எட்வர்ட் பாஸ்னெட், இந்தப் புத்தகத்தை மிகவும் தெளிவான மற்றும் உணர்ச்சிகரமான படைப்பு என்று பாராட்டுகிறார். உணர்வுநிலை என்பது விஞ்ஞானிகள் தீர்க்க வேண்டிய ஒரு புதிர் மட்டுமல்ல, அது நாம் எவ்வாறு விழிப்புணர்வோடு வாழ வேண்டும் என்பதற்கான ஒரு பயிற்சி என்று போலன் இந்தப் புத்தகத்தை நிறைவு செய்கிறார்.
பல மெய்யியலாளர்கள், புறத்தைவிட அகம் அத்தனை உண்மையுடன் தென்படுவதில்லை என்று சொன்னார்கள். அளவீடுகளில் கிடைத்த நிரூபணம் இயற்பியலிற்குத் தேவையாக இருக்கவே, அது வடிவ மாற்றத்தில் ‘மீ இயற்பியல்’ என்று முகிழ்த்தது என்று மைக்கேல் போலன் சொல்கிறார். கணித இயற்பியல், அனைத்தையுமே ‘மாதிரிகளாகச்’ செய்ய முடியும் என்று திடமாக நம்பியதால், உணர்வுகளுக்கென்று ஒன்றை இன்றுவரை அமைக்க முடியாமல் தவிக்கிறது. மனித மற்றும் அனைத்து மூளைகளின் தனிச்சிறப்பே அவை கொண்டிருக்கும் சிற்சில குறைபாடுகள் தான். வெறும் 30,000 மரபணுக்களைக் கொண்டு 3 ட்ரில்லியன் ந்யூரான் வலைப்பின்னல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் பதிவதை நினைவு என்றும் அதை மீட்டெடுப்பதை நினைவுகூரல் என்றும் சொல்கிறோம். உறங்குகையிலும், மூளை, தேவையான அளவு விழிப்புடன் இருக்கிறது என்பது சரிதான். அந்த உறக்கத்தில் நாம் காணும் கனவுகள் நம் ஆழ் மனதில் தோன்றும் ஒன்று என்றும், அந்தக் காட்சிகள் நீங்கள் முன்பு காணாத ஒன்றாக இருப்பதற்கு ஆழ் மனது நீங்கள் அறியப்படாத ஒன்றாக இருப்பதால் என்றும் சொல்லப்படுகிறது.
‘தற்சார்பு’(Self or Subjective inference) என்ற அடைமொழியை நீக்கி, ‘தற்சார்பில்லா விழிப்புணர்வு’ (self-less awareness) என்று சில மர்ம மெய்யியல் சிந்தனையாளர்கள் சொல்கிறார்கள். தாமஸ் மெட்சிங்கர் (Thomas Metzinger) என்ற ஜெர்மானிய அறிஞர், இது ‘ சைதன்யத்தை/ உணர்வை விவரிக்கும் ஒன்று என்று போலனிடம் சொல்கிறார். தியானத்தில் வெகுவாக ஈடுபட்டு, மனவிரிவாக்கத்திற்கு உதவும் (ஒரு வகை போதைப் பொருள்- நான் கடவுள் சினிமா?) பொருட்களுக்கு திறனேற்றினால், விழிப்புணர்வு மேம்படும்! ஆயினும், போலனுக்கும் இப்படி தற்சார்பில்லாத விழிப்புணர்வு ஒருமுறை ஏற்பட்டிருக்கிறது. ஒருவகை காளான் போதை அவரை நீலக்குட்டையாகக் காண்பித்திருக்கிறது- இதுவரை காணாத கோணம், அனுபவமில்லா நிலை, விகாரமற்ற, ஆர்வமூட்டாத, சிதறடிக்காத, முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்று போலன் அதை விவரிக்கிறார். கட்டுரையாசிரியருக்கு, தானற்றுப் போன இந்த விழிப்பு விசித்திரமாகத் தென்படுகிறது.
உலக நேரடி அனுபவமில்லாமல், திரையை மட்டும் பார்த்துக்கொண்டு, கைமண்ணளவு அறிவை வைத்துக்கொண்டு, ஆணித்தரமாக பேசுபவர்களை அலிசன் காப்னிக்(Alison Gopnik) ‘பேராசிரிய உணர்வு’ என்று கேலி செய்கிறார்.
முன்னரே பார்த்தது போல், தகவல் பகுப்பாய்வு செய்யும் கணினி இருக்கையில் மூளை எதற்கு? சரி, அப்படியென்றாலும், அந்தக் கணினியை வடிவமைக்கும் சிறு குழுவிற்கு மட்டுமே மூளை போதும்; அப்போ அதை பயன்படுத்துபவர்க்கும் மூளை தேவைதான் இல்லையா? இந்தப்பக்கமே வராதவரை மூளையற்றவர் எனச் சொல்லிவிடலாமா? மூளையும், திறனும் இணந்திருந்தாலும், அவையிரண்டுமே சைதன்யம் ஆகாது. அது என்றும் இருந்தது, எப்போதும் இருப்பது, அனைத்து அசைவன, அசையாதன என்று அனைத்திலும் இருப்பது.

மூளையும், திறனும் சைதன்யம் இல்லையெனில், உணர்ச்சிகள் சைதன்யம் ஆகுமா? ‘ஒவ்வொரு பூவுமே தான் எதிர்கொள்ளும் காற்றினை அனுபவித்து மகிழ்கிறது’ என்று வேர்ட்ஸ்வொர்த் சொன்னது இதைத்தானா? உணர்ச்சிகள் நிறைந்த தாவர இனம், தன் பரம்பரை அறிவால் தன்னை தக்க வைத்துக் கொள்கிறது. இது மட்டுமே கான்ஷியஸ் என்பதை விளக்குமா? இந்தக் கேள்வி எழுந்து, இந்தக் கவிதையைப் படித்தாலும், போலனுக்கு முழு உருவம் கிடைக்கவில்லை. அவர், பெர்க்லீயில் மனவிரிவாக்கப் பொருள் சார்ந்த அறிவியல் மையத்தின் துணை நிறுவனர். உணர்ச்சிகள், உணர்வுப் பதிவுகள், வார்த்தைகள், படிமங்கள், பகற்கனவுகள், மன அலைபாய்ச்சல்கள், அசைபோடுதல், கவனிப்பது, கருத்துக்கள், உள்ளுணர்வுகள், திடீரென்று தோன்றும் மின்னல் கீற்றுகள், அற்பமான சிந்தனைகள், சிறு சிறு பொருட்கள் வலம் வரும் மிதக்கும் சிதறல்கள் என எல்லாவற்றையும் கொண்டு வர நினைக்கிறார்.
பல மாறுபடும் பார்வைகள், பலவித கோட்பாடுகள் இருக்கும் ஒன்றைப்பற்றி எப்படி தெளிவாகப் புரிந்து கொள்வது, புரிந்து கொண்டு விளக்குவது? அது, ஒவ்வொருவரையும் சார்ந்துள்ளது- அதாவது அது ஒவ்வொருவரிலும் இயல்பாகவே அமைந்துள்ளது; நிலையற்ற ஒன்றாக மயக்குகிறது; குழப்புகிறது. இதைத்தான் ந்யூரோ உயிரியலாளர்கள் ‘கான்ஷியஸ்னெஸ்ஸின் கடினச் சிக்கல்’ என்று சொல்கிறார்கள். போலனின் புத்தகத்தின் மையக்கரு இது. ‘இலையுதிர்க்காலம் முடிந்து துவங்கும் பனிக்கால முதல் நாள் அழகியல் அனுபவத்தை, எந்த அறிவியலாளரும், மெய்யியல்வாதியும் இதுவரை நம்பத்தகுந்த விதத்தில் சொல்லவில்லை’ என போலன் எழுதுகிறார். டேவிட் சால்மர்ஸ் முதலில் ‘கான்ஷியஸ்னெஸ்ஸின் கடினச் சிக்கல்’ (The hard Problem of Consciousness) என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். உண்மைத் தோற்றத்தின் எல்லையை அடையும்வரை, கற்பனை என்பதுதான் சுவையும், ஆர்வமும். அது இரு துறைகளிலும் இருக்கிறது.
அனுபவங்களை பௌதீக நிலையில் விளக்க முடியுமா? நம் இருவர் கையிலும் இருக்கும் அதிரசம், நம் இருவருக்கும் ஒரே தரத்திலான இனிப்புச் சுவையைக் கொடுக்கிறதா? எனவே போலன் சொல்வது போல். கான்ஷியஸ்னெஸ்ஸை பௌதீக வடிவில், மாதிரியாக, வரைபடங்களாக ஏன் கவிதைகளாகக் கூட உணர்த்திவிடமுடியாது. ‘என் அனுபவத்தை நான் ஒளிந்து கொண்டு பார்க்கிறேன்’ என்று சொன்னால், அதுவும் அனுபவத்தின் பகுதியாகி விடுகிறதே? குறுமனிதனென நம்மை பொய்யாக மறைத்துக்கொண்டு நம் அனுபவங்களை நாம் ஊடுருவிப் பார்ப்பது எதைக் காட்டுகிறது? செயலற்று, செய்திப்பட்டையை பார்ப்பது போல, நேரலை நிகழ்ச்சியைப் பார்ப்பது போல இயங்குவது, சைதன்யமா? பார்ப்பவருக்கும், பார்க்கப்படுவதற்கும் இடையிலிருக்கும் வெளி தெளிவான ஒன்றில்லை. அப்படித்தான், வன் பொருளுக்கும், மென்பொருளுக்கும் இடையே புலப்படும் இடைவெளியைச் சொல்ல முடியாது என்று சொல்லும் போலன், ‘அனுபவம் என்பது அந்த மின் சுற்றுச் சுருளை மீண்டும், மீண்டும் மறு சீரமைத்தல் தான்’ எனச் சொல்கிறார்.
இந்த மர்மம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நம்முடைய மொழிகளும், கணித மாதிரிகளும்,மெய்யியலோ, அறிவியலோ இந்த ஆதி மர்மத்தை விளக்கவில்லை- இது விளக்கக்கூடியதுமில்லை. வேர்ட்ஸ்வொர்த்தை தெய்வீகக் கவி என்று கொண்டாடும் போலன் அவரது கவிதை ஒன்றை மேற்கோள் காட்டுகிறார்: “நாம் வெறும் தூசு; அழிவில்லா ஆத்மா வளர்கிறது; இசையின் ஒத்த இசைவு போல; இருளாகவும் இருக்கிறது; புரியாத புதிர் ஒன்று இணைத்து நெய்கிறது, ஒழுங்கற்றவைகளையும் சேர்த்து.”
ஆனால், அறிவியலாளர்கள் இதை ஒரு மர்மமாக நினைக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு எண்ண அலையையும் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை; பரிமாண வளர்ச்சியில் கான்ஸ்ஷியஸ்னெஸ்ஸின் பங்கு என்ன என்று புரிந்தால் போதுமானது. கார்ல் ஃப்ரிஸ்டன்,(Karl Friston) அன்டோனியோ டமாசியோ, (Antonio Damasio) மார்க் சோம்ஸ் (Mark Solms) இந்த அணியைச் சேர்ந்தவர்கள். கான்சியஸ் என்பது அதன் அடிப்படைத் தேவையான உடல் சம நிலையை ஊக்குவித்து வளர்த்து, உள்ளுக்குள்ளும் சம நிலையைப் பேண வழிவகை செய்யும் ஒன்றே. அதற்கு மேல் அதில் சிந்திக்க என்ன இருக்கிறது என்பது அவர்களின் கேள்வி. சோம்ஸ் போலனிடம் சொல்கிறார் : ‘மூளையின் இறுதியான குறிக்கோள் என்பது, கான்ஷியஸ்னெஸ்ஸை தேவையற்றதாக்குதல்; அதற்காக நிரந்தரமற்ற தன்மையை, பூஜ்யம் என்றாக்கி, வாழ்க்கை தானே நடக்க வழி செய்தலில் நம் கவனம் இருக்க வேண்டும். (Giuliotononi) கிய்லோ டோனி என்ற அறிவியலாளர் மூளையின் மேற்பரப்பில் சில மின் சாதனங்களைப் பொருத்தி, ‘உணர்வைக் கண்டுபிடிக்கும் கருவி’ என்ற ஒன்றைச் செய்தார். அவரது கருத்தின்படி மூளையில் தான் உணர்வு இருக்கிறது. ஆனால், இந்தக் கருவியால் உணர்வுத் தன்மையை அளக்க முடியவில்லை. இன்றைய பல நரம்பியல் அறிஞர்கள், ‘தன்னுணர்வு என்பது மூளையில் தான் இருக்கிறது என்று திடமாக நம்புகிறார்கள். அதை நிரூபிக்கும் வகையில், மூளையில் அடிபட்டவர்கள் அல்லது மூளை சேதமடைந்தவர்களின் மூளை வரைபடங்களைக் காட்டுகிறார்கள். தலாமஸ்-புறணி, இயல்பாகச் செயல்பட வேண்டிய நரம்புப் பின்னல், முன்பக்க பக்கவாட்டு வலைப் பின்னல் இவைகள் பாதிக்கப்பட்டு, அந்த நபருக்கு விழிப்புணர்வு குறைகிறது என்றும் இந்த மின் அலைகளின் வரைபடப் பதிவுகள் இதை விளக்குகின்றன என்றும் சொல்லி, அதனால், மூளை ஆபத்தில் இருக்கையில் அதிலுள்ள உணர்வு செயல்படுவதில்லை என்பதால் ‘உணர்வு’ மூளையில்தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டியது ஒன்றிருக்கிறது- மூளை உணர்விற்குத் தேவை அல்லது உணர்விற்கு மூளை தேவை என்று எப்படிச் சொன்னாலும், அதுதான் இறுதி மூலம் என்று அறிவியலாளர்கள் இதுவரை எதையும் சொல்லவில்லை. டிவி பார்த்துக்கொண்டிருக்கிறோம்; அது பழுதாகி நின்று விடுகிறது. அதிலில்லை நாம் பார்த்துக் கொண்டிருந்த, இன்னும் தொடர வேண்டியகாட்சிகள். அது ஒரு சாதனம், அவ்வளவே. எனவே, மூளையில் இருக்கிறது உணர்வு என்பது சரியில்லை என்று வாதிடுவோரும் இருக்கிறார்கள். சமீபத்திய சில ஆய்வுகள் “மூளை மட்டுமே உணர்ச்சிகளுக்கு காரணம்” என்ற கருத்தை கேள்விக்குள்ளாக்குகின்றன; மூளையும் உடலும் இணைந்து செயல்படுவதால்தான் உணர்ச்சி நிலைகள் உருவாகின்றன என்று கூறுகின்றன. மெய்யியலாளர் பெர்னார்ட் காஸ்ட்ரப் (Bernard Kastrup) போலனிடம் சொல்கிறார்: ‘மனது கொடுக்கப்பட்டுள்ளது; பொருள், அதன் ஊகமே.’

இந்தியா
சித்தம் என்பது அடிப்படை. மூளை அதன் கருவி என்று நமது முறைகள் சொல்கின்றன.
இந்திய ஞானம், அது ப்ரபஞ்சத்திற்கு முன்னரே தானே தன்னில் ஒளிர்ந்தது, பின்னர் மாயையின் மூலம் தோற்றத்தை உண்டாக்கியது, அது தன் இயல்பால் எங்கும் எப்போதும் இருப்பது, தன்னுள் இருக்கும் அதை ஒருவன் உணரும் போது அந்தப் பெரு ஒளியுடன் இணைகிறான் என்று சொல்கிறது.
உலகில் இருமை காணக்கிடைக்கிறது- இரவு, பகல், நன்மை-தீமை இவைகளைப் போலவே இயற்கை அழகிய முகமும், கோர முகமும் காட்டுகிறது. இயற்கைக்கு எந்த நோக்கமுமில்லை- செயல்படுவதைத் தவிர. நம் விழிப்புணர்வு, இயற்கையின் செயல்களுக்கு உணர்ச்சி முலாம் பூசுகிறது. ஒன்றுக்கொன்று எதிராக இருப்பதால்தான் இயக்கம் நடைபெறுகிறது. இந்தியத் தத்துவம் சிவனின் ஐந்து தொழில்களாக படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று அற்புதமாகச் சொல்கிறது. முரணியக்கம் இல்லையேல், விழிப்புணர்வு தட்டையாக இருக்கும். ஆனால், தீமையும் நன்மையும் ஒரே சக்தியின் வெவ்வேறு வெளிப்பாடுகள். நாமே நமக்குப் பகையாவதையும், நண்பராவதையும் நம் வாழ்க்கையில் கண்டுகொண்டுதானிருக்கிறோம். ‘தீதும், நன்றும் பிறர் தர வாரா’ என்பது கணியன் பூங்குன்றனாரின் அமுத மொழியன்றோ?
ஒரு நிகழ்வு அல்லது பொருள் பிரதிபலிக்கும் விதத்தால் உணர்ச்சிகள் தோன்றுகின்றன. ஆனால், நல் உணர்வோ, கடும் உணர்வோ எந்த மனிதனை பாதிக்காமல் இருக்கிறதோ, அந்த மனிதனுக்கே திட சித்தமிருக்கிறது என்றும், தன் கடமைகளைச் செய்பவன் அதன் விளைவுகள் எவ்வகைத்தாயினும், அதை ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டும் என்றும் கண்ணன் கீதையில் சொல்கிறான். எப்படி சைதன்யம் அல்லது ஆன்மாவில் கறை படியாதோ, குறை தோன்றாதோ, எப்படி அது பரத்தின் ஒரு சுடராக உன்னுள் ஒளிர்கிறதோ, அப்படித்தான் அது அனைத்து உயிரினங்களிலும் பிரகாசிக்கிறது என்று உணர்ந்தால் உலகெங்கும் நிறைந்திருக்கும் அந்த பேரொளியைக் கண்டு கொள்வாய். அதை ஐம் பூதங்கள் அழிப்பதில்லை. தோற்ற மயக்கமான மாயா விளைவிக்கும் காட்சிகளின் பின்னே நித்ய உண்மை இருக்கிறது. அந்த சைதன்யம் எந்தவித அனுபவங்களுக்கும் ஆட்படுவதில்லை. அந்தப் புலத்தில் உதித்தாலும் தென்றலும்,. சூறாவளியும் அதைத் தொடுவதில்லை. இயற்கையாகவே அது ஒளிர்கிறது. அந்த ஒளி பிரபஞ்சம் முழுதும் உள்ள ஒளி; என்றும் குன்றாத ஒன்று. இந்தப் பண்பினால்தான் அதை உணர்ச்சி என்று சொல்வதில்லை. உணர்ச்சி அதில்பட்டு பிரதிபலிக்கிறது. கண்ணாடியில் நம் முகம் பிரதிபலிக்கிறதே தவிர கண்ணாடி நம்மை உள்ளே வைத்துக் கொள்வதில்லை. மேலும், உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி ஒருவர் அழகு, மற்றவர் அவ்வளவு அழகில்லை என்றெல்லாம் சொல்லாது. அது அளவுகோல் என்ற நம் உணர்ச்சியைச் சார்ந்தது. எனவேதான் அனுபவத்தையும் தாண்டிய ஒன்றாக சைதன்யம் சொல்லப்படுகிறது.
அத்வைதம், சைதன்யத்தை ‘ப்ரு(ஹ்)ம்மன் என்று குறிப்பிடுகிறது- தூய விழிப்பு நிலை என்று விளக்குகிறது. அது அனுபவிப்பவரில்லை, அது அனுபவம் நிகழும் ஒரு உண்மையாக இருக்கிறது. எமெர்சன், ‘அது உள்ளது’ என்று சொல்கிறார். ‘அது பார்த்துக் கொண்டிருக்கலாம், ஆனால், பங்கேற்பாளர் இல்லை.’
சுருக்கமாகத் தொகுத்துக் கொள்வோம்:
சைதன்யம்- தனி நபரிடம் இருக்கும் தன்னுணர்வு. அதுவே, உலகளாவியதாக இருக்கிறது. தானே ஒளிர்வதும், தன்னில் ஒளிர்வதும் இதுவே. அறிவியல் பெரும்பாலும் இதை அப்படியே ஏற்கவில்லை. மூளையில் ‘உணர்வு’ தோன்றுகிறது என்பதால் மூளையில் அது வாசம் செய்கிறது என்று சொல்கிறது. வசிப்பதும், உணர்வு நிலையை உற்பத்தி செய்வதும் ஒன்றாகுமா என்ற கேள்விக்கு விடையில்லை. நாம் அனுபவிப்பது என்னவென்று மூளை சொல்கிறது. நீ அனுபவிக்கிறாய் என்று சைதன்யம் பிரதிபலிக்கிறது.
மனம்- இது இந்தியச் சிந்தனையின் படி தகராகாசத்தில், உணர்வின் உதவியுடன், எண்ணம், நினைவு, அடையாளம், தீர்மானம், என்ற உள்ளடக்கத்துடன் உள்ளது. ஆகாசம் என்ற சொல் சுட்டுவதைப் பாருங்கள்- எல்லையற்றது, பரந்து விரிந்தது. ந்யூரோ அறிவியல் தகராகாசம் என்ற ஒன்றை அறியவில்லை. தொல்காப்பியம் எண்வகை உணர்வுகளைச் சொல்வதாக திரு பி கே சிவகுமார் சொல்கிறார் “நகை அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப.”
அறிவு- மனம் சிக்கல் : இது சிக்கல் என்பதால் எளிய மொழியில் சொல்லிவிடலாம். ‘மூளை களைத்துப் போகும், சோர்வடையும். ஆனால், மனம் விரும்பும் நபரைப் பார்த்தால் மயிலிறகு போல் எடையற்றதாகிவிடும்; துயரச் சூழலில் கனத்துப் போகும். மனம் சோர்வுறும் போது எதிலும் நாட்டமில்லாமல் போகும். இதை நடைமுறையின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
விழிப்புணர்வு- சூழலை அறிந்து கொண்டு விரைந்து செயல்படுவது அல்லது செயல்படாதிருப்பது. சில சூழ்நிலைகளில், மனம் கொந்தளித்தாலும், வாய் திறவாதிருப்பதும் விழிப்புணர்வினால் தான்.
“ஆன்ம யோகத்தில் அகம் வெளிப்படும்
திருமூலர் திருமந்திரம்
ஆன்ம யோகத்தில் அகிலம் வெளிப்படும்
ஆன்ம யோகத்தில் அருள் வெளிப்படும்
ஆன்ம யோகத்தில் ஆனந்தம் வெளிப்படும் ஆன்மா அறிந்தால் அருள் பெருகுமே
ஆன்மா அறிந்தால் அறிவு பெருகுமே
ஆன்மா அறிந்தால் அன்பு பெருகுமே
ஆன்மா அறிந்தால் ஆனந்தம் பெருகுமே ஆன்மா சிவனே, சிவன் ஆன்மாவே”
உசாவிகள்:
- டாக்ஜட்ஜில் திரு. பாலாஜியின் புலனப் பதிவுகள்
- திருமூலர் திருமந்திரம்
- https://unherd.com/2026/02/why-scientists-should-read-more-poetry/?edition=us
- https://iai.tv/articles/consciousness-is-the-hidden-architecture-behind-fundamental-and-quantum-physics-auid-3523
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.

அருமையான தலைப்பு, ஆழமான சிந்தனைகள். எளிதில் புக இயலாத ஒரு துறையின் ஒரு பரிமாணம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட உண்மைகளை அறிவியல் ரீதியாகக் கண்டு உணர்ந்தறியும் திறமை மிக நன்றாகப் புலனாகிறது. இத்தனைக்கும் ஒரு விரைவுப்பார்வை மட்டுமே கொடுக்க முடிந்தது. ஆயினும் சிறிது பரிச்சயப்பட்ட விஷயம். ஆதலால் மறுபடி ஆழமாகப் படிக்கிறேன். எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத இந்தத் தளம் வியப்பையும் நிறைவையும் ஒருசேர அளிக்கிறது. இத்தளத்தின் எழுத்தாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் வாழ்த்துகள்.