ஒற்றைக் கண் பறவையின் வானம்

1
ஐம்பொன் விக்கிரகம் தீர்த்தமாடும்
சமுத்திரம்
ஒவ்வொரு காலடியாக எடுத்து வைத்து
குழந்தையைப்போல மணல் பரப்பில்
தவழ்ந்து விளையாடி,
உப்பு நீரில் பாதம் எடுத்து வைக்கையில்;
சமுத்திரத்தை ஒழித்த நிலவின் வெளிச்சத்தில்;
படிகளில் உயர்ந்து மேல் வரும் போதில்;
பரந்து நிறைந்து கிடக்கும் பூந்தோட்டங்களில்;
மலர்களை வாரி ஸ்பரிசித்து, முகர்ந்து பின்
வானத்தை அண்ணார்ந்து பார்த்திருக்க,
ஆகாயத்தை நிறைத்திருக்கும் படி
ஒரு பூரணைச் சந்திரன்


2

வெண்டித்தோட்டத்து வாசனை
தக்காளிப்பழத்தை தாங்கும் காம்பின் வாசனை
ஈர்ப்பின் மிகுதியாய் ஆழ் இரத்தத்தில் ஊறி இருக்கிறது.
இன்றெனது இரவுகளை தொலைத்தது போல்
கபட தந்திரத்தில் மாட்டிக்கொண்டிருப்பதால்
பூடகமாக என் வாசனையின் நெக்குருகும் கண்கள்
அலைந்து தொலைந்து கண்டடைந்தது
மாமிசத்தின் வாடை
சமையலறையின் கழிவுகள் நிரப்பப்பட்ட
கறுப்பு நெகிழிப்பையினுள் நிரம்பி இருக்கிறது நறுமணம்


3

மீனின் மொச்சையற்ற சிறு நதியில்
தேக வாசத்தை பருகக்கொடுத்து
வெளி நகருகையில்
தேகத்தில் ஒட்டி நதி கூடவே வருகிறது

மீனின் மொச்சையற்ற சிறு நதியையே
தேடுகிறது;
நதியில் மிதக்கும் என் தேக வாசத்தில்
மீன் குஞ்சுகளை பிரசவித்தபடி இருக்கும்
தாய் மீன்.


4
தடாகத்தில் ஒரு மதியத்தில் வானத்தை அண்ணார்ந்து பார்த்தபடி சூரிய வெளிச்சத்தில்
கூடு விட்டு கூடு வந்த பறவையினைப் போல
நீரில் மிதக்கும் பொழுதில்
நான் தொலைவில் எங்கோ பாலை வெளியில்;


5
வளர்பிறை நாட்களில் நிலவு
சூரியன் போலொரு பிரகாச நிலையினை
அடைந்து விடுவதாக;
பின் சூரியனாகவே மாறி விடுவதாக;
பின் ஒளி குன்றத் தொடங்குகையில்
சூரியன் நிலவாக மாறிக்கொண்டிருப்பதாக;


6
காடு ஒவ்வொரு இலைகளையும் சிறகாக அசைக்கிறது
நட்சத்திரங்களை கண்களாக்கி முகிலுடன் நகர்கிறது
இரவை போகும் தூரம் வரை கூட்டிச்சென்று
விரும்பிய இடத்தில் குடி கொண்டு
பகலில் இதோ இப்படி காடாகி விடுகிறது


7
ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டு எத்தனை தூரம் தான் பறப்பாய்;
தூறல் மழை வரக்கூடும், காற்று தாமதமாக வந்து சேரலாம்; உன்னைப் போலவே ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டு பறக்கும் மேலுமொரு பைத்தியக்காரப்பறவை குறி வைத்தது போல உன் மேலேயே வந்து மோதலாம்;


8
ஒரு கழுமரம் இரத்தவாடை தோய்ந்தது;
கூர் வாளால் யுத்தத்தில் வதம் செய்யப்பட்ட தேகத்தை அப்புறப்படுத்தாதபோது
குருதியை பெருக்கெடுக்க வைத்தது
ஆறாய் ஒடவைத்தது
வேள்வியில் அறுக்கப்படும் கிடாயின்
கழுத்தின் வழி பாய்ந்து ஓடி முடிகின்றது


9
புதிர் போன்ற கண்களால் இமைக்காது பார்க்கும்
அந்த சிறகுகள் கொண்ட பறவை ,
மேல் வானம்,கீழ் வானம், என இரண்டு துண்டுகளாய் பிரித்து முகிலினிடை விரிந்த இறக்கைகளை மரங்களிடை சுருக்குகிறது


10
கண்ணி வைத்ததில் கால்கள் சிக்கியதில்;
பேரிருளில் பெருங்குரல்
இமைகளை மூடி உறங்கும் இரவின் சர்ப்ப நிலையில்;
தொலைவாய் தூரமாய் உற்றதாய் இருந்தது
காடு,
செளித்திருந்த வனம் வேரோடு பிரண்டது
புதர் மண்டி பீறிட்டு அழும் ஓலத்தின் பிடியில்
உடல் கூடி உயிர் உலாவும் சபலங்கள்
ஒவ்வொன்றாய் வீழ்ந்தது
தொலைந்து போக; ஒளிந்து கொள்ள
பெரு வெளி தாண்டி, அடர் மலைதாண்டி
கால்கள் கண்டடைந்தது இந்த கண்ணி;


13
ஏதோ ஒன்றை உணருக்கிறேன்
சிலவற்றை விரும்பி அதற்குள் தொலைந்து போகிறேன்
காற்று குறைவான பொழுதில் படபடக்கும்
என் உடல் பற்றி, குழம்பிப்போன மனம் பற்றி
செய்வதறியாது ஒடுங்கிப்போகும் புலன் பற்றி


14
வெய்யிலில் ஒரு காலும் நிழலில் ஒருகாலும்;
பல்லண்டத்தில் ஒரு புல்வெளியில்,
வரும் வெம்மையை இம் மரங்கள் ஒளித்து வைத்தன
அத்தனை பாவங்களையும் சுமந்து போகத்தில்
திளைத்த பொழுதில்,
மரங்கள் முறியும் கணத்தில் நீண்டு அகன்ற காற்று கிளைகளை துலாவி இலைகளை கொட்டும் பொழுதில்;
இன்னும் ஊதிப் பெருத்திருக்காத பொலிஸ்டர்
பொம்மையாக தரையில் கிடக்கிறேன்


15
ஒரு பறவை முகட்டு முறிப்பில்
மேலும் ஒரு பறவை ஜன்னலின் வெளிப்புறத் தவாளிப்பில்
இரண்டும் சந்தித்துக்கொள்ள முடியாத
இரண்டு பருவங்களாயிருக்கின்றன;

எறிந்த கல் மேலே போய்க் கொண்டிருந்தது
மேலே மேலே மேலே;
எப்படியும் ஒரு கோளாக அல்லது நட்சத்திரமாக மாறிவிடும்,

கலவியின் உச்ச நொடியில்
எங்கிருந்தோ பறந்து வந்த காக்காய்
கத்து கத்தெனக் கத்தியதில்
இன்பம் நொடிந்தது


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.