இயற்பியல் எனும் அழகும் மந்தணமும்

இயற்பியலின் ஏழு சுருக்கக் குறிப்புகள் நூலை முன்வைத்து

அறிவியல் என்பது தர்க்கப்பூர்வமாகவும், உணர்ச்சியற்ற நடையில் மட்டுமே எழுதப்பட வேண்டும் எனும் தவறான முன்னுதாரணம் இருந்துள்ளது. பல கடினமான அறிவியல் நூல்கள் இவ்வகைக் கூற்றுக்கு உரம் சேர்த்தன. சொல்லப்போனால் இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர் அறிவியல் கோட்பாட்டு நூல்களை மையப்படுத்தி எளிமைப்படுத்தப்பட்ட புத்தகங்கள் வெளியானதில்லை.

ஆங்கில புத்தகங்களில் பிரபல அறிவியல் நூல்கள் கடந்த நூறு வருடங்களாக ஆய்வு முடிவுகளையும் அறிவியல் கோட்பாடுகளையும் துறை சாரா ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றது. சிக்கலான சூத்திரங்களும் விளக்கங்களும் இல்லாத இவ்வகை நூல்கள் அறிவியல் பரவலாக்கத்துக்குப் பெரிதும் உதவியுள்ளன. சார்லஸ் டார்வினின் உயிரினங்களின் தோற்றம், ஐசக் நியூட்டனின் பிரின்சிபியா, கலீலி கலீலியோவின் இரண்டு உலக இயக்கங்களைப் பற்றிய உரையாடல் போன்றவை பரவலான வாசிப்புச் சூழலுக்குள் இன்று வந்திருந்தாலும் அவை மிகச் சிக்கலான விஞ்ஞான ஆய்வுகளை உள்ளடக்கிய ஒன்றாகவே அமைந்திருந்தன. கடந்த எழுபத்து ஐந்து வருடங்களாக ஆங்கிலத்தில் பல துறை சார்ந்த நூல்கள் அறிவியலில் அறிமுகமற்றவர்களுக்காக எழுதப்படுகின்றன. அன்றாட அறிவியல் துறைகள் தங்களுக்குள் பிரிந்து மிக நுண்மையான உண்மைகளை நோக்கி நகர்ந்த காலத்தில் அவற்றைப் பற்றிய விளக்க நூல்கள் சந்தைக்கு வர வேண்டிய கட்டாயம் இருந்தது. தத்துவத்திலிருந்து அறிவியல் பிரிந்தது போல, அறிவியலிலிருந்து கணிதமும், இயற்பியலிலிருந்து ரசாயனமும், உயிரியலிலிருந்து உளவியலும், உடற்கூறியலும், உடற்கூறு ரசாயனம் போன்ற துறைகள் நுண்மையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.

அறிவியல் துறைகளில் இயற்பியல் என்றும் ஒரு தனித்த இடத்தைத் தக்கவைத்துள்ளது. பெரிய கேள்விகளையும் சிறு கேள்விகளையும் மட்டுமல்லாது அரூப விஞ்ஞானத்தையும் தத்துவத்தையும் இணைக்கக்கூடிய பாதையை அறிவியல் முதலில் உருவாக்கியது. பல இயற்பியளாளர்கள் தத்துவ சிந்தனையிலும் சிறந்து விளங்கி உள்ளனர். ரிச்சர்ட் ஃபெயின்மேன் எழுதிய ‘ஆறு எளிமையான கட்டுரைகள் மற்றும் ஆறு எளிமையற்ற கட்டுரைகள்’, ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘காலத்தின் சுருக்க வரலாறு’, ‘காலத்தின் நெசவு’, பால் சென் எழுதிய ‘ஐன்ஸ்டீனின் குளிர்சாதனைப்பெட்டி’ போன்ற புத்தகங்கள் அறிவியல் ஆர்வலர்கள் மட்டுமல்லாது காலம், வெளி வெப்பம் போன்ற பெரிய தத்துவக் கேள்விகளை உள்ளடக்கிய துறை சார்ந்த வல்லுநர்களையும் ஈர்த்து வந்துள்ளன. ஆழமான அறிவியல் கருத்துகளைப் புரிந்துகொள்ள பல்முனை விளக்கங்கள் தேவைப்பட்டன. இன்று ‘இண்டர்ஸ்டெல்லர்’ திரைப்படத்தின் பின்புலத்தில் அமைந்த அறிவியல் பற்றி நோபல் பரிசு பெற்ற கிப் தார்ன் அவர்கள் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அத்திரைப்படத்தின் தொழில்நுட்பத்தில் அறிவியல் கோட்பாடுகள் எந்தளவு உபயோகமாக இருந்தன எனும் விளக்கங்கள் அந்த நூலில் எழுதப்பட்டிருந்தன. இந்த வரிசையில் கார்லோ ரொவெல்லி எழுதிய இயற்பியலின் ஏழு சுருக்கக் குறிப்புகள் நூல் பலதரப்பட்ட வாசகர்களைச் சென்று சேர்ந்த புத்தகமாக கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக இருந்துள்ளது. இதில் வரும் கட்டுரைகள் ஒரு பத்திரிகையில் எழுதப்பட்டவை. இவை ஏழு தனிப்பட்ட கட்டுரைகள் என்றாலும் இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கும் சரடு ஒன்று உள்ளது.

வந்துவிட்டோமா
வந்துவிட்டோமா நாம் அந்த இடத்திற்கு
எந்த உன்னதத்தை மறைத்து மறைத்து
நாம் இதுகாறும் பேசிக்கொண்டிருந்தோமோ
அந்த உன்னதம்
நம்மைத் தொட்டுத் தழுவிக்கொள்ளும் இடத்திற்கு

தேவதேவன் (தொட்டபெட்டா கவிதை)

இப்படி ஒரு பயணத்தை, இது போன்ற உன்னதத்தை நிதர்சனத்தின் முழுமையைக் காண்பதற்கான எத்தனம் எத்தனை எத்தனை பார்வைக்கோணங்களைக் கோர்த்துக் கோர்த்து வர வேண்டியிருக்கிறது. நவீன பெளதிகம் குறித்த குறிப்புகளில் முதல் கட்டுரை வெளி என்பதை விவரிக்கிறது. பொருட்களுக்கு இடையேயான ஈர்ப்புவிசை நம்மைச் சுற்றி இருப்பதைப் போல கோள்களையும் சுற்ற வைக்கிறது எனும் பொதுப்படையான விதியை உருவாக்கிய நியூட்டன் காலத்திலிருந்து வெளி என்பதன் அர்த்தம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை முதல் கட்டுரை காட்டுகிறது. இருப்பது ஒரு உண்மை தான் எனத் திட்டவட்டமாக நாம் நம்பும்போது, அந்த ஒன்றை எப்படி விளங்கிக்கொள்வது. பொருட்களிடையே ஈர்ப்பு விசை என்றால் அந்த இடைப்பட்ட இடம் என்பது என்ன? நியூட்டன் காலத்திலிருந்து அதற்கு ஒரு பெயரும் சூட்டப்படவில்லை என்றாலும், ஈதர் எனும் பொருள் வெளியெங்கும் வியாபித்து உள்ளது எனும் நம்பிக்கை இருந்தது. ஆனால் எந்த ஒரு பொருளுக்கும் அடிப்படை விஞ்ஞானம் காட்டும் நிரை, மணம், எடை போன்ற குணங்கள் இருக்குமல்லவா? அப்படி எவ்விதமான குணத்தையும் அவர்களால் காட்ட முடியவில்லை. நீரிலும் , வாயுவிலும் செலுத்தப்படும் போது ஒளியின் வேகமும், திசையும் மாறும் தன்மை பெறும் என்பதைப் போல அண்டத்தில் நிரம்பி இருக்கும் ஈதர் ஊடாகச் செல்லும் ஒளியில் மாற்றம் ஏதும் இல்லை. தூரத்திலிருந்து இயக்கும் விசைக்கான விளக்கம் தான் என்ன? அது வெளி முழுவதும் நிரம்பி உள்ளதா எனும் கேள்விகள் முதல் கட்டுரைக்கான பின்புலம்.

ஈர்ப்பு விசையைப் பற்றிய சார்புக்கொள்கை விளக்கத்தைக் கொடுக்கும் ஐன்ஸ்டீன், தனது ஆய்வில் பொருட்களின் நிரையினால் உண்டாகும் காலவெளி வளைவுகளை, புதன் கோளின் வட்டப்பாதை வளைவைக் கொண்டு நிரூபித்தார். ஈர்ப்பு விசை என்பது காலவெளி வளைவினால் உண்டாகும் விளைவு மட்டுமே எனும் புது கோணத்தை உருவாக்கினார். பிற்காலத்தில் பல ஆய்வுகளின் மூலம் இது நிரூபிக்கப்பட்டது என்றாலும் ஐன்ஸ்டீன் தனது சிறப்புச் சார்புக் கொள்கையை முப்பரிமாணக் கணிதங்கள் மூலம் நிரூபித்தார். காலவெளி என்பது பொருட்களின் நிரையினால் உண்டாகும் வளைவு எனும் எளிமையான கண்ணோட்டம் உருவானதும் பொருட்களின் நகர்வுப்பாதைக்கான விளக்கம் எளிமையாது. ஈதர் தேவைப்படவில்லை. இரு கோள்களுக்கு இடையே விசையை உருவாக்கும் காரணி வெளியிலிருந்து தேவைப்படவில்லை. சூரியனின் காலவெளி வளைவினால் கோள்களும், கோள்களின் காலவெளி வளைவினால் நிலாவின் சுழற்சியும் உருவாவதை எளிமையாக விளக்க முடிந்தது. உன்னதம் எனும் இடத்துக்கு வந்துவிட்டோமோ எனும் நப்பாசை உருவானது என்றாலும் இதன் மூலம் பல புது குழப்பங்களும் தோன்றின.

இப்படியான ஈர்ப்பு வெளியை விவரிக்க முற்பட, நீல் போர் உருவாக்கிய துளிமத் துறை உதவத் தொடங்கியது. கருப்புப் பொருளிலிருந்து வரும் கதிர்வீச்சு தொடர்ச்சியான இயக்கமாக இல்லை என்றும் அவை திட்டமிட்ட அளவிலான துளிமங்களாக வெளிப்படுகின்றன என்று நீல் போர் உருவாக்கிய தேற்றத்துக்கு ஐன்ஸ்டீன் ஒரு வரைபடம் உருவாக்கத் தொடங்கினார். ஒளியின் வீச்சையையும் அதன் அலை சமன்பாடுகளையும் பற்றிய ஆய்வில் ஐன்ஸ்டீன் அதை உறுதி செய்தார். துளிம இயல் எனும் துறை கண் காது மூக்கு என மெல்லத் துலங்கத்தொடங்கியது. அன்று முன்னணியில் இருந்த ஆய்வாளர்கள் பலரும் கதிர்வீச்சு இயல், காலவெளி எனும் முப்பரிமாண அமைப்பு, அணுவின் உள்கட்டமைப்பு போன்ற துறைகளின் முடிவுகளில் நீல் போர் உருவாக்கிய துளிமம் சார்ந்த முடிவுகளை தன்னிச்சையாக எட்டத் தொடங்கினர். அணுவின் அமைப்பில் அமைந்திருந்த எலக்ட்ரான் துகள் தனது வட்டப்பாதையிலிருந்து குதித்து அடுத்த பாதைக்குச் செல்லும்போது வெளியிடும் அலை தொடர்ச்சியாக இல்லாது துளிமப் பொட்டலங்களாக இருப்பதை நீல் போர் கண்டடைந்தார். ஒளியின் அலை பாய்ச்சலும் துளிமப்பொட்டலங்களாக அமைந்திருந்தது. இதுவரை திட்டவட்டமான நிலைபாடுகளை உருவாக்கிய இந்தத் துறை ஜெர்மன் மேதை வெர்னர் ஹைசன்பர்க் வரவால் நிகழ்தகவு இயலுக்குள்ளும், துளிமங்களின் இடம் திட்டவட்டமாக கூகிள் மேப் போட்டு சொல்லிவிட முடியாது எனும் சாத்தியக்கூறுகளின் தர்க்கத்துக்குள்ளும் நுழைந்தது. துகளின் இடத்தையும் வேகத்தையும் ஒரே நேரத்தில் கச்சிதமாகக் கூறிவிட முடியாது எனும் இடத்திற்கு துளிம இயக்கவியல் நகர்ந்தது. அதே நேரத்தில் அணுவின் துகள் அமைப்பு விரிவாகிக்கொண்டே போனது. எலக்ட்ரான் ப்ரோட்டான் மட்டுமே அடிப்படையான துகள்கள் எனும் கருத்திலிருந்து அவற்றைப் பிளந்து ஹாட்ரான், லெப்டான், குவார்க் எனும் மேலும் சில நுண்ணிய துகள்கள் அவை பற்றிய தேற்றங்கள் வழியாக வெளிப்படத் தொடங்கின. நேரடியான ஆய்வில் இவை உருவாவதற்கு முன்னர் கனிமங்களின் நிலை இன்மையால் உருவாகும் ஆல்ஃபா மற்றும் பீட்டா கதிர்வீச்சுகளில் சில மெல்லிய துகள்கள் உருவாவதைத் தேற்றங்கள் நிரூபித்தன. மணியோசையைத் தொடரும் யானை போல நிரூபண பெளதிகம் இவற்றைத் தொடர்ந்து மேலும் பல அடிப்படைத் துகள்களை கண்டடையத்தொடங்கியது.

துகள்கள் என்பவை கல் குண்டுகள் போன்றவை எனும் கருத்தை உடைத்து துளிம அறிவியல் சாத்தியக்கூறு சார்ந்த நிகழ்வாக அவற்றை வருணிக்கத் தொடங்கின. அதுவரையிலும் இத்துறையை ஆசிர்வாதம் செய்து வந்த ஐன்ஸ்டீன் முதல் முறையாகத் தன் அதிருப்தியைத் தெரிவிக்கத் தொடங்கினார். Deterministic எனும் திடமான தடத்தின் மீது பயணம் செய்து வந்த பெளதிகம் நிகழ்தகவு எனும் சாத்தியக்கூறுகளின் பொட்டலமாக தன்னை வடிவமைப்பதை அவர் விரும்பவில்லை. ஆனால் ஹைசன்பர்க், நீல் போர், ரிச்சர்ட் ஃபெயின்மேன் போன்ற இளம் தலைமுறையினர் முன்வைத்த வாதங்கள் ஒவ்வொன்றும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகத்தொடங்கியிருந்ததில் துளிம அறிவியல் வகுத்த பாதையை சற்றே கலக்கத்துடன் ஐன்ஸ்டீன் எதிர்கொண்டார்.

சில விஞ்ஞானிகள் அணுவுக்குள் பூதக்கண்ணாடி வைத்து துழாவிக்கொண்டிருந்தபோது, சில வானியல் ஆய்வாளர்கள் 1930களில் அண்டத்தின் விசித்திரத்தை ஆராய்ந்துவந்தனர். அண்டத்தின் கூரை எனும் பால்வீதி தாண்டி பல கோடான கோடி அண்டங்கள் இருப்பதை தொலைநோக்கிகள் வரைபடம் போடத் தொடங்கின. எட்வின் ஹப்பிள் எனும் ஆய்வாளர் நட்சத்திரங்களிலிருந்தும் பிற விண்மீன் திரள்களிலிருந்தும் வரும் மின்காந்த அலையை ஆராய்ந்தபோது இப்பேரடைகள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செய்வதை கண்டடைந்தார். அதாவது அண்டம் விரிவடைகிறது. எதிர்காலம் என்பது ஒரு பேரடையிலிருந்து மற்றொரு பேரடைக்கு இடையே இருக்கும் விரிவாகும் இடைவெளி எனவும் சொல்லலாம். அப்படி என்றால் இவை அனைத்தும் முன்னொரு காலத்தில் அருகருகே இருந்திருக்கும். மேலும் பின்னோக்கிச் சென்றால் ஒரு கட்டத்தில் எல்லாமே ஒரே இடத்தில் இருந்திருக்கலாம். அந்தப் பொட்டிலிருந்து பெரு வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் எனும் அண்டம் உருவாகும் அமைப்பு பற்றிய கருத்தாக்கத்தை ஆய்வாளர்கள் அடைந்தார்கள். துளிம இயல் தத்தித் தாவும் குழந்தை என்றால் வானியல் நடுத்தர வயதுக்காரி. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க அறிஞர்கள் கூட இந்த கருங்கொண்டைக்காரியை ஆய்ந்து ஒரு வரைபடத்தை உருவாக்கி உள்ளனர். சொல்லப்போனால், கார்லோ ரொவெல்லி அவர்களின் மற்றொரு நூலான ’அனாக்ஸிமேண்டர்’, 2600 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க தத்துவவாதியை மையமாகக் கொண்டது. உலகை மையமாகக் கொண்டு அவர் உருவாக்கிய விண்மீன்களின் வரைபடம் நமக்குக்கிடைக்கும் முதல் வானியல் கூகிள் மேப் எனலாம். அங்கிருந்து கிட்டத்தட்ட கி.பி 1600 ஆம் ஆண்டு வரை உலக மையப்பார்வை அறிவியலின் அடிப்படையாக இருந்துள்ளது. ரெண்டாயிரம் வருடங்கள்!! அங்கிருந்து அகன்று நம் உடனடி விண்மண்டலம் சூரியனைச் சுற்றுவது என்ற கருத்துக்கு, கெப்லர், கலீலியோ வழியே தொடங்கி, அண்ட பேரண்டத்தின் விரிவுப் பாதை பற்றிய எட்வின் ஹப்பிள் கருத்து வரை வருவதற்கு ஐநூறு ஆண்டுகளே ஆனது.

ஒரு மாணவன் தனது கல்லூரியில் துளிம இயல் மற்றும் காலவெளி இயக்கத்தையும் தனித்தனி வகுப்பாகப் படிக்கும்போது மிகவும் குழம்பிப்போவான். துளிம இயலில் எல்லா அடிப்படைத் துகள்களும் அவற்றின் அதிர்வுகளும் மிகச் சிறிய பொட்டலங்களாக இருக்கின்றன. அதே சமயம் அவற்றின் அதிர்வுகள் சாத்தியக்கூறுகளுக்கு உட்பட்டு திட்டவட்ட இடத்தில் கணக்கிட முடியாத வகையில் இருக்கும். இப்படி நுண்மையாகப் பார்க்கும்போது ஒவ்வொரு பொருளும் பல கோடி அதிர்வுத் துகள்களின் கூட்டமைப்பாகவே இருக்கின்றது. அதே சமயம் காலவெளி எனும் பிரம்மாண்டம் மிகத் தொடர்ச்சியான வெளியை உருவாக்குகிறது. கருந்துளைக்கு அருகே பயணம் செய்யும் ஒளி வளைகிறது. ஆனால் அவற்றின் வளைவின் தன்மை கருந்துளையின் ஈர்ப்பை விட அதிகமாகவும், கருந்துளை இல்லாத இடத்திலும் கூடுதலாக இருப்பதையும் சார்புக்கொள்கை கணிக்கிறது. அலையின் தன்மையை ஆராயும்போது ஆய்வாளர்களுக்கு முழுவதும் புரியாத இருளானபொருள்கள் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். இவ்விதம் நிலைத்த உலகுக்கு அடியில் நிகழ்தகவு சார்ந்த நிகழ்வுகளும், நம் தர்க்கத்துக்குப் புலப்படாத வெளிகளும் இருக்கின்றன. இந்தச் சிறு துகள் உலகையும், பெரிய காலவெளி சார்ந்த சார்புக்கொள்கைக்கு உட்படும் உலகையும் இணைப்பதற்கு வேறொரு அறிவியல் தேவைப்படுகிறது. வளைவுத் துளிம ஈர்ப்பியல் எனும் கோட்பாடு கொண்டு புது பெளதிகத்துறை 1970களில் உருவானது. நிதர்சனத்தின் அடியில் இயங்கும் மேற்கூறிய இருவேறு உலகங்களையும் இந்தக் கோட்பாடு இணைத்துவிடும் எனும் நம்பிக்கையுடன் விஞ்ஞானிகள் ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். இதன் மூலம் காலவெளி கூட தொடர்ச்சியான இழையல்ல, மாறாக துளிமங்களின் அசைவுகள் போல அவையும் சிறு பொட்டலங்களாக அமைந்துள்ளது எனும் அடிப்படை கொண்டு உலகை விவரிக்கத் தொடங்குகிறார்கள். இந்த இரு துறைகளையும் இணைக்கும் பாலத்தை Grand Unified Theory என ஸ்டீபன் ஹாக்கிங், ராஜர் பென்ரோஸ் போன்ற விஞ்ஞானிகள் விவரிக்கிறார்கள்.

மேற்கூறிய கோட்பாட்டை இன்னும் நுணுக்கமாகப் பார்க்கலாம். ஐன்ஸ்டீன் உருவாக்கிய பொது சார்புக்கொள்கையின் படி காந்தசக்தி அல்லது உராய்வுசக்தி போல ஈர்ப்புவிசை என்பது ஒரு விசையல்ல. ஈர்ப்புவிசை என்பது காலவெளியின் ஒரு பண்பு எனவும், காலவெளியின் இழை உருவாக்கத்தால் மட்டுமே ஈர்ப்பு உருவாகிறது என்பதையும் இந்த கோட்பாடு விளக்கியது. எப்படி காந்தவிசை தொடர்ச்சியான ஒரு விசையாக அமைந்திருக்கிறதோ அதன்படியே இந்த இழையும் ஒரு துணி போல அல்லது கடல் பரப்புப் போலத் தொடர்ச்சியான ஒன்று என அந்தக் கோட்பாடு உருவகித்திருந்தது. ஆனால் அடுத்து எழுந்த துளிம ஈர்ப்பியல் கோட்பாடு இந்த எண்ணத்தைச் சற்று மாற்றியது. மின்காந்த அலை போலச் சிறு பொட்டலங்களாக இந்த இழையை நாம் விளக்கும்போது காலவெளி என்பதே குவாண்டாக்களின் பொட்டலம் எனும் இடத்துக்கு நம்மால் சென்றடைய முடிகிறது. நமது துணிகள் மேற்பூச்சில் எவ்விதமான இடைவெளியும் இல்லாதது போல காட்சியளித்தாலும், நூலளவுக்கு நுணுகிப்பார்க்கும்போது சிறு சிறு முடிச்சுகளுக்கு இடையே இடைவெளி இருப்பதை நம்மால் உணர முடியும். துளிம ஈர்ப்பியல் உருவகிக்கும் காலவெளி எனும் இழையும் அப்படி சிறு சிறு பொட்டலங்களின் இணைப்பே என இக்கொள்கை வாதிடுகிறது. அது மட்டுமல்லாது கடினமானக் கணிதத்தேற்றங்கள் வழி அப்படி ஒரு கோட்பாடுகளை நிரூபித்தும் வருகிறது. எல்லா விஞ்ஞானக் கோட்பாடு அல்லது தேற்றங்கள் போல இதற்கும் ஒரு எல்லை இருக்கலாம். நூலாசிரியர் கார்லோ ரொவெல்லி இத்துறையின் வல்லுநராகக் கருதப்படுகிறார். நூலின் மிக முக்கியமான பகுதியாக இந்த ஐந்தாம் பகுதி அமைந்துள்ளது. ஒரு விதத்தில் நாம் காணும் உலகம் ஏதோ ஒரு மாயத்தை அதன் அடியில் வைத்துள்ளதை நாம் உணர்வதோடு மட்டுமல்லாது விஞ்ஞானத் தேற்றங்கள் மூலம் அவற்றை நம் அறிதல் தளத்துக்குள் சேகரமாக்கி வருகிறோம் என்பதும் நவீன அறிவியலின் மகத்தான சாதனைகளுள் ஒன்று.

வெப்பம் என்றால் என்ன எனும் கேள்வியிலிருந்து புத்தகத்தின் ஆறாவது பகுதி தொடங்குகிறது. வெளித்தோற்றத்தில் வெப்பம் மற்றும் வெப்ப இயக்கவியல் (thermodynamics) போன்றவற்றுக்கும் காலம் வெளி போன்ற கோட்பாடுகளுக்கும் எவ்விதமானத் தொடர்பும் இருக்கக்கூடாது. மாக்ஸ்வெல்லும் போல்ட்ஸ்மானும் வெப்ப இயக்கவியலை துகள்களின் அசைவினால் உண்டாகும் விளைவு என நிரூபித்ததுடன் இந்த இயலுக்குப் புது இறகுகள் முளைத்து, அது புதுத் திறப்புகளை உருவாக்கத் தொடங்கியது. ஒரு அறையில் வைக்கப்படும் சுடுநீர் மெல்ல தனது வெப்பத்தை இழந்து அறையின் வெப்பத்துக்கு நகர்வது என்பது நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வு. இது ஏன் குளிர்ந்த நீருக்கு ஏற்படுவதில்லை? குளிர்ந்த நீர் எவ்விதமான வெளிப்புற வெப்பமாணியும் இல்லாது வெப்பமாக மாறுமா? இதை வெப்ப இயக்கவியல் விளக்க முற்படும்போது வெப்பத்தின் துகள்கள் வேகமாக ஆங்காங்கே ஓடி தமது ஆற்றலை இழந்து வெப்பத்தை இழக்கின்றன எனக் கூறும். வெப்பம் குறைவான துகள்களின் வேகம் குறைவதால் அவை வெப்பத்தை மேலும் அதிகப்படுத்துவதில்லை. போல்ட்ஸ்மான் இந்த இயல்பை துகள்களின் சாத்தியக்கூறுகளைக்கொண்டு ஆய்வு செய்யும்போது வெப்பமில்லாத துகள்கள் மெல்ல நகர்வதன் சாத்தியம் அதிகம் ஆதலால் அவை நீரின் வெப்பத்தை ஏற்றுவதில்லை எனும் முடிவுக்கு வந்தார். வெப்பம் குறைந்தபின்னும் அதன் முந்தைய நிலையில் மாற்றம் அடைந்தது காலம் மட்டுமே. இப்படி மாறிய காலத்தை வெப்பத்தின் மாற்றம் கொண்டு நம்மால் விளக்க முடியுமா? அதாவது காலம் செல்லும் திசையில் என்ட்ரோபி அதிகமாகிறது வெப்பம் குறைகிறது. இந்த ஆற்றல் சிதறும் தன்மையை என்ட்ரோபி என வரையறுத்தால் வெப்பவியலின் சாத்தியக்கூறுகள் கொண்டு நம்மால் காலம் செல்லும் திசையை விளக்க முடியும். இப்போது துளிம ஈர்ப்பியல், சார்ப்புக்கொள்கை போன்ற கோட்பாடுகளோடு வெப்ப இயக்கவியலின் புள்ளியலும் இணைந்துகொண்டு நம் உலகை விளக்கப் புறப்பட்டுவிட்டது.

ஏழாவது பகுதி மனிதர்களாக நம்மையும் அறிவியல் பாய்ச்சல்களையும் ஒன்று சேர்த்துவிடுகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் உலகை முழுமையாக விளக்கிவிட முடியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்த உலகின் மையம் அல்ல எனும் அறிதலுக்கு வந்திருக்கிறோம். ஒரு ஆக்டோபஸ் மூளையை விட மனிதர்களின் சிந்தனைத் திறன் ஒற்றைப்படைத்தன்மையைக் கொண்டிருக்கிறது என நாம் உணர்ந்திருக்கிறோம். விண்ணிலிருந்து மழை போல துகள்களும், கதிர்களும், தூரக்கோள்களின் கார்பன் துகள்களும் நம் மண்ணோடும் நீரோடும் கலக்காவிட்டால் இன்று உயிர் எனும் அமைப்பு உருவாகி இருக்காது. நாம் விண்மீனின் தூசிகளிலிருந்து உருவானவர்கள் என கார்ல் சாகன் கூறியதை சற்றே தனித்துச் சிந்தித்துப்பார்த்தால் இதை விட அதிசயமான ஒன்றை நம்மால் உணர முடியாது எனத் தோன்றும். அண்டத்தின் கோடான கோடு விண்மீன்களைப் போல நம் ஒவ்வொரு உயிரின் மூளையிலும் தொடர்புகளைக் கொள்ளும் நியூரான் இணைப்புகள் உள்ளன. நாம் எனும் உயிர் ஒரு மகத்தான தோற்றப்பாடு. அதை வியக்கும் நேரத்தில் நம்மைச் சுற்றி இருக்கும் உலகை நமக்குப் புலனாகும் வகையில் உருவாக்கி அமைக்கிறோம். அதன் ஒவ்வொரு அடியும் நம்மைத் திகைக்க வைக்கும் மகத்தான பயணம் மட்டுமே.

வியக்கவைக்கும் எளிமையான விளக்கங்களோடு எழுதப்பட்ட இந்த நூல் பல பரப்பியல் அறிவியல் புத்தகங்களுக்கு இணையாக அமைந்திருப்பதில் ஆச்சர்யமில்லை. அறிவியல் கோட்பாடுகளை ஒரு தேர்ந்த தத்துவவாதி போலவும் கவிஞன் போலவும் விளக்க முடிபவர் மட்டுமே நவீன விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்ள முடியும். கற்பனையும் அழகியலும் சேரும் இடத்தை விஞ்ஞானம் அதன் மாயத்தன்மையால் அடைந்துவிட்டது. நெருப்பு ஏன் சுடுகிறது என நம் மூதாதையர் கேள்வியாகக் கேட்ட மாயத்தன்மையல்ல. மாறாக நிகழ்தகவுகளும், சிறு துகள்களின் இணைப்புகளும் சேர்ந்து இப்படி பிரம்மாண்ட பிரபஞ்சத்தைக் கட்டமைத்து அவற்றை உணர்ந்துகொள்ள உயிர்களுக்கு பல வழிகளை அமைத்துக்கொடுத்திருக்கும் மாயத்தன்மை இது. அப்படிப்பட்ட பல வழிகளில் மிகத் தெளிவான சாத்தியங்களை தனக்குள் அடக்கியிருக்கும் அறிவியல் துறை மிகப்பெரிய மாயம்.

இந்த நூலை கச்சிதமாகவும், மிகவும் சுவாரஸ்யமாகவும் மொழிபெயர்த்ததன் மூலம் சங்கரன் ரவிச்சந்திரன் தமிழில் எழுதப்படும் அறிவியல் துறை நூல்களுக்கு ஒரு பெரியதொரு திறப்பை அளித்துள்ளார். இது ஒரு நூல் எனும் இடத்திலிருந்து இந்த நூல் திறந்திருக்கும் சாளரங்கள் பல. ஒவ்வொரு பகுதியும் தனித்தனி பிரம்மாண்ட நூலாகும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது. தமிழில் நவீனத் துளிம அறிவியலுக்கான சிந்தனை போக்குக்கு அடிக்கோலிடப்போகும் ஒரு நூலாக இது அமையும். ஒவ்வொரு புதுக் கோட்பாடும், அறிவியல் விளக்கங்களும் மட்டுமல்லாது அறிவியலை அழகியலோடும் தத்துவத்தோடும் இணைந்துப் பார்க்கும் சாத்தியத்தையும் உள்ளடக்கியதால் இந்த சிறிய நூல் மிக முக்கியமான மொழியாக்கம் ஆகிறது. புதுச் சிந்தனை முறையையும், நவீன அறிவியலின் கலைச் சொற்களை உருவாக்கியதன் வழி பல துறை சார்ந்த வல்லுநர்களை இந்த நூல் ஈர்த்து வருவதையும் நாம் பார்க்க முடிகிறது. இதைச் சாத்தியப்படுத்திய மொழிபெயர்ப்பாளருக்கு மிக்க நன்றி. தொழில்நுட்பம் தாண்டி அறிவியல் காட்டும் அழகியலை ரசிப்பதற்கும் நவீன அறிவியல் கோட்பாடுகளை நமது சிந்தனையுடன் இணைத்துக்கொள்ளவும் மெய்த்தேடலின் சகபயணியாக உன்னதத்தைத் தொட்டுத் தழுவிக்கொள்ளும் அறிவியல் சாத்தியத்துக்கு ஒரு தொடக்கமாக இந்த நூல் அமையும்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.