கல்வெட்டுகள்

This entry is part 2 of 3 in the series கலிங்கம்

“எல்லோரையும் கருணையுடன் பார்ப்பவன் என்ற பெயர் பெற்ற நான் ஆட்சிக்கு வந்த எட்டாம் ஆண்டில் கலிங்க யுத்தம் நடந்தது. ஒரு லட்சம் மக்கள் மடிந்தனர், ஒன்றரை லட்சம் பேர் கைதானார்கள். நிலத்தை ஆக்ரமிப்பதற்காக செய்யப்பட்ட இந்தக் கொலைகள் எனக்கு பெரும் வேதனையை அளித்தன. இந்தக் கொடும்பாதகங்களுக்கு பிராயச்சித்தமாக, துயரம் தோய்ந்த இந்தப் பூமியை மீட்டெடுக்க, தர்மத்தின் பாதையை நிறுவினேன். கருணை மட்டுமே  உலகங்களை வெல்லும் என்ற செய்தியை எனது சந்ததியினர் அறியட்டும் என்பதற்காகவே தேவர்களுக்கு பிரியமானவனான நான் இந்த சாசனங்களை கற்களில் பொறித்து வைத்திருக்கிறேன்”.  

– அசோகசக்ரவர்த்தியின் பதிமூன்றாவது சாசனம்  

ஒடிஷா மாநிலத்தின் தலைநகர் புபனேஸ்வர் அருகே உள்ள தவுளி என்ற இடத்தில் ஒரு சிறு குன்றின் மேல் நின்றிருந்தேன். இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய வணிக நகரமாக இருந்தது. தக்காணத்தில் இருந்து பருத்தியும், வடக்கில் இருந்து தானியங்களும், பட்டும் இந்த நகரத்தின் சாலைகள் வழியே பல திசைகளுக்கு சென்றன. ஆனால், வரலாற்றில் இந்த ஊரின் பெயர் நீங்கா இடம் பெற்றது இக் காரணங்களுக்காக அல்ல. 

இன்று தவுளி அறியப்படுவது இங்கு நடந்த ஒரு பெரும் போரின் காரணமாகவே. கி. மு. 261 ஆம் ஆண்டு மௌரிய சக்ரவர்த்தி அசோகர் பெரும் படை ஒன்றை திரட்டி வந்து ஊழிப் பெருங்காற்றை போல் கலிங்கத்தின் படைகளை நிர்மூலமாக்கியது இங்கு தான். தன்னால் ஏற்பட்ட பேரழிவை கண்டு மனம் வெதும்பியதும் இங்கு தான். அன்று நடந்த இந்தப் பெரும் துன்பியல் நிகழ்வின் எச்சங்கள் இன்று நினைவு சின்னங்களாக இங்கே நின்று கொண்டிருக்கின்றன. 

மன்னன் அசோகன் மனம் மாறி, பௌதத்தை தீவிரமாகத் தழுவி, மௌரிய சாம்ராஜ்யத்தின் எல்லைகளைத் தாண்டியும் பௌத்தம் வளர்வதற்கு வித்திட்ட இடத்தில் இன்று சாந்தி ஸ்தூபி உள்ளது. இது 1972 ஆம் ஆண்டு ஜப்பானியர்களின் உதவியுடன் கட்டப்பட்டது. ஐந்து சிறு குடைகளை கலசங்கள் போல் சுமந்து நிற்கும் வெள்ளை குவி மாடம், நான்கு திசைகளிலும் தோரணவாயில். குவிமாடத்தின் அடிப்பட்டையில் தங்க நிற வண்ணம் பூசப்பட்ட சிற்பங்கள்; அமர்ந்த கோலத்தில், தியானத்தில் மூழ்கியிருக்கும் புத்தர் சிலைகள், தர்ம சக்கரம், போதி மரம் போன்றவை வெள்ளை பின்புலத்தில் இருந்து கூர்மையாக புடைத்து நின்றன. 

ஸ்தூபியை சுற்றி செல்லும் சலவை கல் பிரகாரத்தில் தங்களையும், பந்துக்களையும், பின்புலத்தில் தூரத்தில் மிதமான மதிய வெயில் உண்டாக்கிய மயக்கத்தில் அரை தூக்கத்தில் கிடக்கும் புபனேஸ்வர் நகரையும் அலைபேசியின் புகைப்பட சட்டகத்திற்குள் அடைக்கத் திணறி இங்குமங்கும் நகர்ந்து கொண்டிருந்தனர் சிலர்.  கலிங்கப் போரில் சிந்திய ரத்தம் நிலத்தில் வடிந்தோடி சென்று கலந்ததால் சிவப்பாக மாறியதாகக் கூறப்படும் தயா நதி, வண்டல் மண் சுமந்து பழுப்பு நிறத்தில் குன்றை சுற்றி சாந்தமாக ஓடிக் கொண்டிருந்தது.

‘இங்கு அசோகர் காலத்து கல்வெட்டு எங்கே இருக்கிறது’ என்று வாயில் பிகிலும், கையில் கழியும் வைத்திருந்தக் காவலரைக் கேட்டேன். சாந்தி ஸ்தூபியின் பிரகாரத்தில் பெரிய அளவில் வடிக்கப்பட்டிருந்த புத்தர் மடியிலேயே உட்கார்ந்து ஒரு புகைப்படத்தை எடுக்க ஆவலாக இருந்த இளைஞர்கள் சிலரை தடுத்து நிறுத்தி விட்டு அதே வேகத்தில் அவர் கையில் உள்ள கழியாலேயே நாங்கள் போக வேண்டிய திசையைக் காற்றில் வரைந்தார். அவரின் சங்கேத மொழி சுமாராகப் பிடிபட்டது. மிக அருகே, குன்றின் அடிவாரத்தில் தான் கல்வெட்டு உள்ளது என்று அவர் கம்பு சுழற்றுவதிலிருந்து புரிந்தது.


கீழே நடக்கத் தொடங்கினேன். போகும் வழியில் நீலப் பிளாஸ்டிக் கூரைகளுக்கு அடியே முளைத்திருந்தப் பெட்டி கடைகளில் கரடி பொம்மைகளும், பூரி ஜகந்நாதர் ஆலயத்தின் சிறு வடிவமும், சிப்ஸ் பொட்டலங்களும் நிறைந்திருந்தன.

‘தந்த்ரா செக்ச், ஒன்லி பைவ் டாலர்ஸ்’ என்று கோனார்க் சூரியன் கோவிலின் சிருங்கார சிற்ப வடிவ மாதிரிகளை, வைக்கோல் நிற முடி காற்றில் ஆடும் ஒரு வெளிநாட்டவருக்கு, காண்பித்து, சிற்பத்தின் நுணுக்கங்களை விளக்கி, விற்க முயன்று கொண்டிருந்தார் கடைக்காரர். என்னை பார்த்ததும் பக்கத்தில் சிறு கூடையில் தேங்காய் அளவு இருந்த கொய்யாப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி சாட் மசாலா தூவி என் கையில் நீட்டினார், அவரவர் தேவைகளை நன்கு புரிந்து கொண்ட வியாபாரி. கொய்யாவில் சுவையே இல்லை. சாட் மசாலா எதற்கு என்று புரிந்தது. திறமையான வியாபாரி தான்.

கல்வெட்டு குன்றின் அடிவாரத்தில் இருந்தது. அங்கே பெரும் பாறை ஒன்றின் உச்சியில் யானையின் முன்பகுதி மட்டும் செதுக்கப்பட்ட சிற்பம் ஒன்று நின்றிருந்தது. மத்தகம் புடைத்து நிற்க, சிறு தந்தங்களும், கொழுத்த துதிக்கையும் கொண்ட யானை கல்லில் இருந்து வெளிவருவது போல் வடிக்கப்பட்ட மிக அழகிய சிற்பம். இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு இருந்த மௌர்யர்களின் கலைத் திறனுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.  

பௌத்த மதத்தில் யானைக்கு முக்கியத்துவம் உண்டு. அது தூய்மை, சக்தி போன்றவற்றின் குறியீடாகக் கருதப்படுகிறது. தாமரை ஏந்தி வந்த வெள்ளை யானை ஒன்று தனது கர்ப்பத்தில் நுழைவதாகக் கனவு கண்ட மாயா தேவிக்கு பிறந்தவர் கௌதமர். ஆகவே, புத்த மதத்தை தழுவிய ஒரு மா மன்னனின் சாசனங்கள் இங்கே தான் இருக்கின்றன என்று சொல்வது போல் இருக்கிறது பாறையின் மேல் உள்ள யானையின் சிற்பம். 

1837 ஆம் ஆண்டு, வரலாற்றில் ஆர்வம் கொண்டவரும், பிரித்தானிய அரசாங்கத்திற்காக இந்தியாவின் நிலக்கரி வளங்களை அனுமானிக்க அனுப்பப்பட்ட மார்க்கம் கிட்டோ (Markham Kittoe) தான் இந்தக் கல்வெட்டை கண்டடைந்து உலகிற்கு பிரகடனப்படுத்தினார். எதேச்சையாக காசிக்கு அருகில் உள்ள மிர்சாபூரில் ஒரு பைராகி மூலமாகத் தான் இந்தப் பகுதியில் ஒரு கல்வெட்டு இருப்பதைப் பற்றி அறிந்து கொண்டார் கிட்டோ. ஆனால், அதைக் கண்டடைவது அவருக்கு அத்தனை சுலபமாக இல்லை. 

ஒரிய மக்கள் அவர்கள் புனிதமாகக் கருதும் இடங்களுக்கு நம்மை இட்டு செல்வதை முற்றிலும் வெறுக்கிறார்கள் என்று Journal of the Asiatic Society of Bengal இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் கிட்டோ. புதர்களும், சிறு மரங்களும் மண்டி, மறைத்திருந்தக் கல்வெட்டிற்கு மிக அருகில் வந்தவரை  நைச்சியமாகப் பேசி, அங்கே கல்வெட்டு ஏதும் இல்லை என்று அவரை நம்ப வைத்து வேறு திசையில் அனுப்பி விட்டனர் மக்கள். பின்னர் அந்தி சாயும் வேளையில் மற்றொருவரின் வழிகாட்டலில் அதே இடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்து, கல்வெட்டை மறைத்திருந்த புதர்களுக்கு தீ வைத்து சுத்தம் செய்த பின் தான், தீவட்டிகளின் ஒளியில், பாறையில் செதுக்கப்பட்ட எழுத்துக்களை முதன் முதலாகக் கண்டார் கிட்டோ. 

ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன் அசோகரின் கல்வெட்டை மறைத்திருந்த சிறு காடு இன்று ஒரு பூங்காவாக உருவெடுத்திருக்கிறது. இயற்கையிடமிருந்து பாதுகாக்க ஒரு மண்டபமும், மனிதனிடமிருந்து காக்க இரும்புக் கம்பி தடுப்புகளையும் தாங்கி நிற்கிறது இன்று. சுற்றிலும் அலங்காரப் புல் தரை. விளிம்பில் இருந்த புதர்களை செதுக்கிக் கொண்டிருந்தார் முண்டாசு கட்டியத் தோட்டக்காரர். ஒரு சிறு பாறையில் சாய்ந்து நின்ற அலைபேசியில் இருந்து ஹிந்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

தவுலியில் இருக்கும் கல்வெட்டை பார்ப்பதென்பது அசைவற்ற ஒரு மிருகத்தை கூண்டிற்கு வெளியே நின்று பார்ப்பதைப் போன்றது. இந்த அனுபவம் எனக்கு புதிதல்ல. தமிழகத்தில் பல ஜைனப் படுகைகளையும், சிற்பங்களையும் இவ்வாறே கண்டிருக்கிறேன். கூண்டுகள் இல்லாத சில வரலாற்று சின்னங்கள் படும் பாடை ஒப்பிடுகையில் இந்த மிருகக் காட்சி சாலை அமைப்பும், தோற்றமும் எவ்வளவோ மேல்.

இரும்புத் தடுப்பிற்கு வெளியே இருந்து பார்க்கும் பொழுது பாறையின் அடர் பழுப்பு நிற பின்புலத்தில், கல்வெட்டின் எழுத்துக்கள் தெளிவாகத் தெரியவில்லை. அவை துல்லியமாகத் தெரிந்தாலும் என்னால் அவற்றை படிக்க இயலாது என்பது வேறு விஷயம். நேர் கோடுகள், வட்டம், அரை வட்டம், கூட்டல் குறி என்று பாறையெங்கும் வியாபித்திருக்கும் இவை பிரக்ரித் மொழியில் எழுதப்பட்ட ப்ராஹ்மி எழுத்துக்கள். இந்தியாவெங்கும் காணப்படும் இத்தகைய எழுத்துக்கள் நமக்கு விளங்கியது 1838ல் தான்.

இந்திய வரலாற்றின் மீது தீராதக் காதல் கொண்ட இன்னொரு ஆங்கிலேயரான ஜேம்ஸ் பிரின்செப் (James Prinsep) தான் ப்ராஹ்மி எழுத்துக்கள் என்ற புதிரை முதலில் அவிழ்த்தார். கிட்டோ போன்றவர்கள் நாடெங்கிலும் சென்று இது போன்ற லிபிகளை பிரதியெடுத்து கொடுத்ததால் தான் பிரின்செப்பினால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அசோகர் என்ற சக்கரவர்த்தி இந்தியத் துணை கண்டத்தின் பெரும் பகுதியை ஆண்டார் என்று உலகிற்கு சொல்ல முடிந்தது. ஆயிரம் ஆண்டுகள் தான் இந்தியாவின் வரலாறு என்று அன்றிருந்த  சிந்தனையை உடைத்தன இந்தக் கல்வெட்டுகள்.

நாட்டின் பிற பாகங்களில் கண்டெடுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுகளில் காணப்படும் சாசனங்கள் தவுலி கல்வெட்டிலும் உண்டு. ஆனால், சில விடுபடல்களும் உண்டு. இந்தக் கட்டுரையின் முதல் பத்தியில் கொடுக்கப்பட்டுள்ள கலிங்கத்து போர் பற்றிய பதிமூன்றாவது சாசனம் இங்கில்லை. ஏன் என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரத்தம் சிந்தப்பட்ட கலிங்க மண்ணிலேயே அந்தத் துன்பியல் நிகழ்வை மீண்டும் நினைவூட்ட வேண்டாம் என்ற எண்ணத்தில் அதை கல்லில் செதுக்காமல் விட்டிருக்கலாம் என்கின்றனர் சிலர். அசோகர் ஆண்ட பெரும் சாம்ராஜ்யத்தில் எந்தெந்த பகுதிகளுக்கு என்னென்ன தகவல்கள் தேவையோ அதை மட்டும் செதுக்கியிருக்கிறார்கள் என்கின்றனர் சிலர்.

இந்த விளக்கங்களின் அக்கப்போர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால்,  என்னை பொறுத்தவரை இரும்பு தடுப்புகளுக்கப்பால், மென் வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்த அந்தப் பாறையில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் மனம் மாறிய ஒரு பெரும் மனிதனின் வாக்குமூலம். போர், ரத்தம், ஆதுரம் என்று ஊரித் திளைத்த ஒருவன் அறம், அன்பு, ஆதரவு என்று முழுதும் மாற முடியும் என்பதற்கான ஒரு அழியாச் சான்று.


கலிங்கத்தில் பௌத்த மதம் போலவே ஜைனமும் ஆழ வேரூன்றியிருந்தது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பார்ஸ்வநாத், மஹாவீரர் போன்ற ஜைன தீர்த்தங்கரர்கள் கலிங்கத்தில் தங்கி ஜைனத்தை நிலை நிறுத்தினர் என்று ஜைன ஏடுகள் குறிப்பிடுகின்றன. ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னால். கலிங்கத்தில் இந்த மதம் ஒரு பெரும் சக்தியாக இருந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அப்பொழுது இந்தப் பகுதியை ஆண்டு வந்த மன்னன் கார்வேலா. இவரைப் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவு. ஒரே ஒரு கல்வெட்டு மட்டுமே உண்டு. ஹாத்திகும்பா அல்லது யானை குகை கல்வெட்டு என்று அறியப்படும் இது புபனேஸ்வருக்கு அருகே உள்ள உதயகிரி மலையில் உள்ளது.

உதயகிரி மலையின் அடிவாரத்தில் அனுமதி சீட்டு வாங்குமிடத்தில், பணம் செலுத்த சுவற்றில் ஒட்டப்பட்ட QR கோடுகள் தென்பட்டாலும், அலைபேசியின் திரையில் அவை துலங்கமாட்டேன் என்று அடம் பிடித்தன.  

‘ஆபீசுக்கு சொல்லியிருக்கு, சரி பண்ணிடுவாங்க. இப்ப கேஷ் குடுத்துருங்க’ என்றார் கௌண்ட்டருக்கு உள்ளே இருந்தவர்.

‘இதையே தான் நீங்க போன மாசம் சொன்னீங்க’ என்று என் பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது. சற்று தூரத்தில் குழுமி நின்ற வடக்கத்தியர்கள் என் பின்னால் நின்றவரை பார்த்து என்ன என்ன என்று கையால் வினவ, ‘பைசா தேனா ஹை’ என்றார் இவர், எரிச்சலுடன். அந்தக் குழுவை வழிநடத்தும் கைடு போலிருக்கிறது. கவுண்டரில் இருந்தவர் இதையெல்லாம் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.

‘சில்லறை இல்லையே’ என்று நான் நீட்டிய நோட்டை பார்த்தபடி சொன்னார். உள்ளே சென்று உதயகிரியை யாரும் பார்த்து விடக் கூடாது என்ற தீர்மானத்துடன் அவர் இருப்பதாக எனக்கு பட்டது. தேடித் துழாவி சில்லறை நோட்டுகளை கொடுத்து நுழைவு சீட்டு பெற்றேன்.


உதயகிரி சிறு குன்று தான். எளிதாக ஏறி விடலாம். படிகளும், பாதைகளும் உள்ளன. குன்றின் பல இடங்களில் மன்னன் கார்வேலா அமைத்ததாகக் கருதப்படும் குகைகள். அத்தனையும் ஜைன துறவிகள் தங்குவதற்காக பாறையில் குடையப்பட்டவை. அலகாபுரி கும்பா, தாகுராணி கும்பா, கணேச கும்பா என்று குகைகளின் வாயில்களில் சிவப்பு சாயம் தோய்ந்தக் கல்லில் எழுதப்பட்டிருந்தன. சில குகைகள் மிகச் சிறிது. உள்ளே, கல்லை நன்கு தேய்த்து, வழவழப்பாக ஆக்கப்பட்ட படுகைகளில் காலை நீட்டி படுத்துக்கொள்ளும் அளவு மட்டுமே. புரண்டு படுத்தால் கை பாறையில் இடிக்கும்.

சில குகைகள் அடுக்கு மாடி குடியிருப்புகள் போல் பல்வேறு தளங்களில் குடையப்பட்டிருந்தன. இதற்கு ஒரு உதாரணம் ராணி குகை. பெரிய முற்றத்தின் மூன்று பக்கங்களிலும், இரு தளங்களில், வரிசையாகக் குகைகளின் வாயில்கள் வகுப்பறைகள் போல் திறந்து கிடந்தன. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு பள்ளியில் நிற்பது போல் தோன்றியது. அதுவும் ஒரு விதத்தில் சரி தான், ஜைனர்கள் வழிபடும் இடத்தின் பெயரும் பள்ளி தானே.

ராணி குகையின் வாயில்கள், தாழ்வாரங்களின் இடுக்குகள், தூண்கள் முழுதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பரிவட்டங்களுடன் செல்லும் ராஜ ஊர்வலம், நாட்டியமாடும் பெண்கள், இசைக் கருவிகள், காடு, வன விலங்குகள், அல்லி பூத்திருக்கும் குளத்தில் இறங்கும் யானைகள் என்று பல. இவற்றில் பல காலத்தாலும், இயற்கையாலும் அரிக்கப்பட்டு சிதைந்திருக்கின்றன. முகங்களும், அங்கங்களும் மொண்ணையாக வெறித்தன. எஞ்சி இருக்கும் சிற்பங்கள் சொல்லும் கதைகள் கால வெள்ளத்தில் கரைந்து விட்டன. மன்னர் போல் இருப்பவர் கார்வேலா என்றும், அவர் அருகில் இருக்கும் பெண்கள் அவரின் மனைவிகள் என்றும், யானைகளும், மனிதர்களும், வன தேவதைகளும், வில்லேந்திய வீரர்கள் அணிவகுத்து செல்லும் காட்சிகள் தொலைந்து விட்ட தொன்மக் கதை என்றும் பல கருத்துக்கள் உள்ளன. 

சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தக் குகைகள் ஆங்கிலேயர்களால் கண்டெடுக்கப்பட்ட போது (அசோகரின் கல்வெட்டை கண்டடைந்த மார்க்கம் கிட்டோவிற்கும் இதில் பங்குண்டு) இவை பௌத மதம் சார்ந்த வழிபாட்டு தலம் என்றே எண்ணப்பட்டது. ஆனால், அதை மாற்றியது ஹாத்திகும்பா கல்வெட்டு.

ராணி குகைக்கு சற்று மேலே உள்ளது ஹாத்திகும்பா அல்லது யானைக் குகை. இது மனித கரங்களால் உருவாக்கப்பட்டதல்ல, இயற்கையாக உருவானது. தரையில் படுகைகளைத் தவிர அலங்காரங்களோ, சிற்பங்களோ அற்ற வெற்று குகை. ஆனால், யானையின் வயிறு போல் வீங்கி, தொய்யும் அதன் விட்டத்தில் 17 வரிகள் ப்ராஹ்மி எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. கலிங்கத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை வரையறுப்பதில் இந்த எழுத்துக்களுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கும் முதலாம் நூற்றாண்டிற்கு மத்தியில் கலிங்கத்தை ஆட்சி செய்த மன்னன் கார்வேலாவை பற்றி குறிப்பிடும் ஹாத்திகும்பா கல்வெட்டு இது தான்.

சேடி வம்சத்தின் புகழை நான்கு திசைகளிலும் நிலைநாட்டிய மஹாமேகவாகனின் வழித் தோன்றலான மன்னன் கார்வேலா எல்லா முனிகளையும், சித்தர்களையும் வணங்குகிறேன் என்று ஜைன மதத்தின் மூல மந்திரத்துடன் தொடங்கும் இந்தக் கல்வெட்டு அக் காலத்தைப் பற்றிய ஒரு சிறு கோட்டோவியதை சில வரிகளில் சுட்டிக் காட்டுகிறது. 

பதினைந்து வயது வரை விளையாட்டு பிள்ளையாக இருந்தவர், அதற்கு பின் அரசாங்க சூட்சமங்களை கரைத்து குடித்தார் என்கிறது ஒரு வரி. ஆட்சிக்கு வந்த பின் புயலால் பாதிக்கப்பட்ட நகரத்தை பெருத்த செலவில் சீர் செய்தார் என்கின்றன மற்ற சில வரிகள். தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள பராபர் மலை பகுதிகளை ஆக்ரமித்து அதன் சுற்றுவட்டாரத்தில் ஆட்சி செய்த யவன மன்னரை ஓட வைத்தார் என்று வெற்றி முழக்கம் இடுகின்றன சில வரிகள். ஜைன முனிவர்களின் மேல் உள்ள அபரிமிதமான பற்றினால் மன்னன் செய்த பெரும் தானங்களை சுட்டுகின்றன மேலும் சில வரிகள். 

கார்வேலாவின் கீர்த்திகளை அலங்காரமாக விவரிக்கும் இந்த கல்வெட்டில் தான் பாரதவர்ஷா, உத்தரப்பதா போன்ற வார்த்தைகள் முதன் முதலாக காணக்கிடைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இதையெல்லாம் தாண்டி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகத்துக்கும் கலிங்கத்திற்கும் தீராத பகை எரிந்து கொண்டிருந்ததை இந்த கல்வெட்டு காண்பிக்கிறது. தமிழ் மன்னர்களின் கூட்டணியை (த்ராமிரா தேசங்கள்) போரில் கார்வேலா வென்றதையும், அவரின் உக்கிரத்தை தணிக்க பாண்டிய மன்னன் கப்பல்கள் நிறைய ரத்தினங்களும், யானைகளும், குதிரைகளையும் கப்பம் கட்டியதாக தெரிவிக்கிறது இது. பதினேழு வரிகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த அரசியல் சூழலைப் பற்றிய ஒரு ஹைக்கூ சித்திரம் தான் ஹாத்திகும்பா கல்வெட்டு     

வெளியே வந்த போது, சரிந்திருக்கும் குகையின் விட்டத்தை அவர்கள் தான் தாங்கிப் பிடித்திருப்பது போல் கைகளை மேலே தூக்கி நின்றிருந்த ஒரு ஜோடி புகைப்படம் எடுக்க என்னை அழைத்தது. அவர்களின் அலைபேசியில் அந்த ‘அட்லஸ் ஜோடி’ சித்திரத்தை பதிவு செய்து அவர்களிடம் கொடுத்து விட்டு, சிசிபஸ் போல் பாறையை உருட்டி அதைப் புகைப்படம் எடுக்க கேட்பதற்குள் அங்கிருந்து அவசரமாக நகர்ந்தேன்.

உதயகிரியின் உச்சியில் அரைவட்ட வடிவில் ஸ்தூபி ஒன்றின் அடித்தளம் உண்டு என்று முன்பு படித்திருந்தேன். அது ஜைனர்களின் வழிபாட்டுத் தலமாகக் கூட இருந்திருக்கலாம். மகத தேசத்தை (தற்போதைய பீகார் மாநிலம் மற்றும் அதை சார்ந்த பகுதிகள்) ஆண்ட நந்த வம்சத்தினர் மீது படையெடுத்து சென்று, கலிங்கத்திலிருந்து அவர்கள் எடுத்து சென்ற தங்கத்தால் வடிக்கப்பட்ட ஆதிநாதரின் சிலையை மீட்டெடுத்து வந்தான் கார்வேலா என்கின்றது ஹாத்திகும்பா கல்வெட்டு. அந்தக் கலிங்க ஜீனர் சிலையை உதயகிரியின் உச்சியில் தான் கார்வேலா பிரதிட்டை செய்தான் என்கின்றனர் சிலர். அந்த சிதிலங்களை பார்க்க மேலே செல்லும் ஆசையை மழை தடுத்து நிறுத்தியது.

யானை குகையிலேயே உட்கார்ந்து கொண்டேன். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மழையில் கரைந்து விட்டனர். நீரில் நனைந்த பாறைகள் வழவழப்பு கூடி மிருதுவாக மிளிர்ந்தன. நிலத்தின் வாசம் நாசியை வருடியது. மழை வலுப்பெற்றது. குகையின் விளிம்பில் இருந்து வழிந்த நீர் சரடுகள் ஒன்று கூடி திரை போல் இறங்கி புற உலகை மறைத்தது. குகைக்குள் சம்மணம் இட்டு அமர்ந்தேன். மந்திரம் போல் மழை பெய்யும் ஓசை மட்டும் தான் காதில் ஒலித்தது.

(கலிங்கம் தொடரும்…)

கலிங்கம்

ஜெய் ஜகந்நாத்! ஈரநிலம்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.