வகையறச் சூழ்ந்தெழுதல்

சென்ற பகுதியில் பிரத்யக்ஷம், அனுமானம், மற்றும் உபமானம் என்ற மூன்று பிரமாணங்கள் (அறிவைப் பெறும் வழிமுறைகள்) குறித்துப் பார்த்தோம். இன்னபிற பிரமாணங்கள் குறித்து இந்தப் பகுதியில் காண்போம்.

நான்காவது பிரமாணம் அர்த்தாபத்தி எனப்படுகிறது. அனுமானப் பிரமாணத்திலிருந்தும், சூழ்நிலைகளிலிருந்தும் ஊகித்தறிதலுக்கு அர்த்தாபத்திப் பிரமாணம் என்று பெயர். சமகாலத் தர்க்கவியலில் சூழ்நிலைசார் உய்த்தறிதல் (circumstantial implication) என்ற முறையுடன் இந்தப் பிரமாணத்தை ஒப்பிடலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் படகில் ஏறி ஆற்றைக் கடக்கும் பயணத்தை மேற்கொள்கிறார். ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு அவர் அடையும் நேரம் கடந்து விடுகிறது. இந்த நேரம் கடந்து விட்டதைக் கருத்தில் கொண்டு, அவர் மறுகரையை அடைந்து விட்டார் என்று அனுமானம் செய்து அறிந்து கொள்ளும் முறை அர்த்தாபத்தி ஆகும். பல இந்திய அறிஞர்கள் அர்த்தாபத்திப் பிரமாணத்தை செல்லாதது என்றும், பலவீனமான பிரமாணம் என்றும் கருதினர். படகு ஒரு கரையிலிருந்து மறுகரையை அடைவதற்குள் எது வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம். படகு காற்றின் போக்கில் திசை மாறியிருக்கலாம், வேறு இயற்கைச் சூழ்நிலை காரணமாக மறுகரையை அடைவதற்குத் தாமதமாகியிருக்கலாம். அல்லது கவிழ்ந்தே கூட இருக்கலாம். எனவேதான் இந்த முறையின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. 

எனினும், சூரியன் உதிக்கும் நேரம், அஸ்தமன நேரம் இவற்றைக் கணிப்பது போன்ற விஷயங்களில் அர்த்தாபத்திப் பிரமாணம் நம்பகமானது என்று அந்தப் பிரமாணத்தை ஆதரிப்பவர்களால் வலியுறுத்தப்படுகிறது. அர்த்தாபத்திக்கு பிரசித்தமான ஒரு உதாரணமாக பண்டைய இந்து நூல்கள் குறிப்பிடுவது இதுதான். “தேவதத்தன் பருமனாக இருக்கிறான்.” மேலும் “தேவதத்தன் பகலில் உணவுண்பதில்லை.” இவ்விரண்டு வாக்கியங்களுமே உண்மையாக இருக்க வேண்டுமெனில், “தேவதத்தன் இரவில் உணவுண்கிறான்” என்ற கூற்று உண்மையாக இருக்க வேண்டும். இந்த வகையான அனுமானமும், சூழ்நிலைகளிலிருந்து ஊகித்தறிதலும் சரியான உள்ளுணர்வையும், அறிவையும் பெறுவதற்கான வழி என்றே இந்து தத்துவ அறிஞர்கள் கருதுகின்றனர். அர்த்தாபத்தி அறிவு வழிமுறையை ஏற்கும் சில இந்து தத்துவப் பள்ளிகள், இந்த முறை ஒரு பொருளைப் பற்றிய நிபந்தனைக்குட்பட்ட அறிவை அடைவதற்கான சரியான வழிமுறை என்று கருதுகின்றனர். இந்த முறையை ஏற்காத சில பள்ளிகள், அனுமானம், புறச்செருகல் (extrapolation), மற்றும் சூழ்நிலைசார் உய்த்துணர்தல் (circumstantial implication) ஆகியவை மற்ற பிரமாணங்களிலிருந்து பெறப்படக்கூடியவை என்றும், இந்த வழிமுறையின் குறைபாடு காரணமாக, ஒருவர் ஒரு பொருள் குறித்த அறிவை அடைவதற்கு நேரடிப் புலனுணர்வு (பிரத்யக்ஷம்)  அல்லது அனுமானப் பிரமாணத்தையே சார்ந்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றன.

ஐந்தாவது பிரமாணம் அனுபலப்தி என்பதாகும். ஒரு பொருளின் புலப்படாத்தன்மையை உய்த்துணர்வதைப் பற்றிய அறிவை இந்தப் பிரமாணம் கொடுக்கிறது. ஒரு அறைக்குள் நுழைகிறோம். “அங்கு யானை இல்லை,” என்று கூறுகிறோம். யானை அங்கு புலப்படாமை குறித்த அறிவு அவருக்கு எப்படி வந்தது? அவர் புலன்களைப் பயன்படுத்தி அந்த அறிவை அடைந்திருக்க முடியாது. ஏனெனில், புலன்கள் ஒரு பொருளின் இருப்பைப் பற்றிய அறிவையே நமக்குத் தரும். ஒரு பொருள் ஓரிடத்தில் இல்லை என்று அவதானிக்கப்பட்டாலோ, அது இல்லாததற்கான சாத்தியக்கூறுகளை அளித்தாலோ, அல்லது அதன் புலப்படாமை நிரூபிக்கப்பட்டாலோ அங்கு அனுபலப்திப் பிரமாணம் செயல்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அத்வைத வேதாந்தம் மற்றும் குமாரில பட்டரின் பட்ட மீமாம்சம் ஆகிய இரு தத்துவப்பள்ளிகள் மட்டுமே அனுபலப்திப் பிரமாணத்தை சுதந்திரமான ஓர் அறிதல் வழிமுறையாக ஏற்றுக் கொள்கின்றன. இந்த முறையில் பெறப்படும் அறிவில் சத்ரூபம் (நேர்மறை) மற்றும் அசத்ரூபம் (எதிர்மறை) இரண்டுமே சரியானதும், செல்லுபடியாகக் கூடுவதுமாகும் என்பது அவர்களது கணிப்பு. பிற பிரமாணங்கள் தோல்வியுறும் இடங்களில் அனுபலப்திப் பிரமாணத்தைப் பயன்படுத்த முடியும் என்பது அவர்களது வாதம். ஆனால் நியாயம் போன்ற பிற தத்துவப் பள்ளிகள் அனுபலப்திப் பிரமாணத்தை நிராகரிக்கின்றன. ஒரு பொருளின் புலப்படாமையை அறிந்து கொள்வதற்கு பிரத்யக்ஷம் அல்லது அனுமானம் ஆகிய பிரமாணங்களே போதுமானவை என்று அவை வாதிடுகின்றன. 

அனுபலப்தி பிரமாணம் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. காரணம் (Cause) ஒன்றினுடைய புலப்படாமை, அதன் விளைவின் (effect) புலப்படாத்தன்மை, ஒரு பொருளின் (object) புலப்படாத்தன்மை, மற்றும் முரண்பாடுகளின் புலப்படாத்தன்மை ஆகியன அந்த நான்கும்.

அபாவம் (abhavam) என்னும் மற்றொரு சொல் உண்டு. இதற்கு இல்லாமை என்று பொருள். அனுபலப்தியும் (புலப்படாமை), அபாவமும் (இல்லாமை) ஒன்றே என்றும், இல்லை இரண்டும் வேறு வேறானவை என்றும் அறிஞர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்து தத்துவ நூல்களில் பதார்த்தம் (ஒரு சொல்லின் பொருள்) என்ற தலைப்பின் கீழ் அபாவப் பிரமாணம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சொல்லின் பொருள் (பதம்+அர்த்தம் = பதார்த்தம்​) என்பது ஒரே நேரத்தில்அஸ்தித்துவம் (இருப்பு), ஞேயத்துவம் (அறியக்கூடிய தன்மை), மற்றும் அபிதேயத்வம் (பெயரிடக்கூடிய தன்மை) ஆகிய மூன்று வகையான பண்புகளைக் கொண்டிருக்கிறது. 

திரவியம் (பொருள்), குணம் (பண்பு), கர்மம் (செயல்), சாமானியம் மற்றும் ஜாதி (பொது மற்றும் பகுப்புத் தன்மை), சமவாயம் (உள்ளார்ந்த தன்மை), மற்றும் விஷேஷம் (தனித்தன்மை) ஆகியன பதார்த்தத்துக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும். பதார்த்தம் அதைச் சுட்டும் பொருட்களை நேர்மறையாக வெளிப்படுத்துகிறது. அபாவம் எதிர்மறையாக வெளிப்படுத்துகிறது. எனவே அபாவம் அறியக்கூடியதும், பெயரிடக்கூடியதுமான தன்மை கொண்டதாகும் என்று அறிஞர்கள் வாதிடுகின்றனர். எதிர்மறை எண்கள் (Negative numbers), ஒரு வழக்கு நடக்கையில் சாட்சிகள் காட்டுகின்ற மௌனம் (பேச்சின் அபாவம்), பற்றாக்குறை குறித்த பகுப்பாய்வு ஆகியன அபாவத்துக்கான உண்மையானதும், செல்லுபடியாகக்கூடியதுமான எடுத்துக்காட்டுகளாகும். 

அபாவத்தை ஒரு பயன்மிக்க அறிவு வழிமுறையாக ஏற்றுக்கொண்ட இந்து தத்துவப்பள்ளிகள் அதை மேலும் நான்கு வகைகளாகப் பிரிக்கிறது. த்வம்சம் (இருந்த ஒன்றின் முடிவு), அத்யந்த அபாவம் (முழுமையான இல்லாமை, இருப்பதற்கு சாத்தியமே இல்லாத ஒன்று), அன்யோன்ய அபாவம் (ஒன்றுக்கொன்று மறுத்து இல்லாதிருத்தல்), மற்றும் பிராகபாவம் (முன்னிருந்த இல்லாமை).

(மேற்கண்ட பத்தியை வாசித்ததிலிருந்து ஒன்று புரிந்திருக்கும். வேதாந்தத்தினுடைய கலைச்சொற்களுக்கு வெறுமனே மொழிபெயர்ப்பில் தமிழ்ச் சொற்களை அளித்தால் அது போதுமானதாக இருக்காது. இறுதியில் குழப்பமே மிஞ்சும். எனவேதான் ஆசிரியரின் இருப்பு இங்கு அவசியமாகிறது. ஒவ்வொரு கலைச்சொல்லின் மீதும் மிகத் தீவிரமான ஆய்வும், விவாதமும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அத்வைத மரபில் வந்த ஆசிரியர் ஒவ்வொரு கலைச்சொல்லையும் எடுத்து அதன் பின்புலம், பொருள், போன்றவற்றைத் தெளிவாக எடுத்துரைப்பார். அப்போது கலைச்சொற்கள் ஒன்றோடொன்று இணைந்து மனதுக்குள் அத்வைதம் குறித்த ஓர் சித்திரத்தை அளிக்கும். இந்தத் தொடரிலும் அத்வைதக் கல்விக்குத் தேவையான சொற்கள் விரிவாக விளக்கப்படும். பிரமாணங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு பிரமாணமும் எங்ஙனம் “நான்” என்பதை விளக்குவதற்கு போதுமானதாக இல்லை என்பதை அறிந்து கொண்டால் போதுமானது.)

இறுதியாக வருவது சப்தப் பிரமாணம். சப்தம் என்பது இங்கு ஒலியைக் குறிக்கவில்லை. சொல்லைக் குறிக்கிறது. ஒரு பொருள் குறித்த அறிவை நாம் சப்தத்தின் மூலமாக, அதாவது சொல் அல்லது அதன் எழுத்து வடிவம் ஆகியவற்றின் மூலமாக அடைய முடியும். ஒரு மனிதன் வாழ்வின் எண்ணற்ற உண்மைகளை அறிய வேண்டியுள்ளது. அவனிடமுள்ள வரையறுக்கப்பட்ட நேரத்தையும் ஆற்றலையும் கொண்டு அந்த உண்மைகளின் ஒரு சிறு பகுதியை மட்டுமே அவனால் பிற பிரமாணங்களைப் பயன்படுத்திக் கற்றுக் கொள்ள முடியும். அவன் மற்றவர்களை, அதாவது தனது பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள், மூதாதையர்கள் மற்றும் சமூகத்தின் உறவினர்களை நம்பி, அறிவை விரைவாகப் பெற்றுப் பகிர்ந்துகொண்டு, அதன் மூலம் ஒருவருக்கொருவர் வாழ்க்கையை வளப்படுத்த வேண்டும். சரியான அறிவைப் பெறுவதற்கான இந்த வழி வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ இருக்கலாம், ஆனால் அது சப்தத்தின் (சொற்களின்) மூலமாகவே அமைகிறது. இங்கு அறிவைக் கொடுக்கும் சொற்கள் எங்கிருந்து வருகின்றனவோ அந்த மூலத்தின் நம்பகத்தன்மையும் முக்கியமானது. முறையான அறிவு என்பது நம்பகத்தன்மை கொண்ட மூலங்களில் இருந்து பிறக்கும் சப்தங்களிலிருந்து (சொற்களிலிருந்து) மட்டுமே வரமுடியும். மூலத்தின் நம்பகத்தன்மையை நிறுவும் சிக்கல் காரணமாக சார்வகம் போன்ற தத்துவப்பள்ளிகள் சப்தம் ஒரு முறையான பிரமாணம் அல்ல என்று நிராகரிக்கின்றன. பிற பள்ளிகள் அந்த நம்பகத்தன்மையை நிறுவுவதற்கான வழிகளைப் பின்பற்றி விவாதிக்கின்றன.

 பிரமாணங்களை மீண்டும் தொகுத்துக் கொள்வோம். பிரமாணங்கள் ஆறு வகைப்படும். பிரத்யக்ஷம் (நேரடிப் புலனுணர்வு), அனுமானம் (ஊகம்), உபமானம் (உவமை, ஒப்பீடு), அர்த்தாபத்தி (சூழ்நிலைசார் உய்த்தறிதல்), அனுபலப்தி (பொருளின் புலப்படாமை குறித்த அறிவு), மற்றும் சப்தம் (சொல்).

இந்த ஆறு பிரமாணங்களில் எந்த ஒன்றைப் பயன்படுத்தி ஒருவன் தன்னைப் பற்றிய அறிவை அடைய முடியும்? ஒவ்வொரு பிரமாணமாக எடுத்து இதைப் பரிசோதித்துப் பார்க்கலாம். நான் என்பவன் எல்லாப் பொருட்களையும் அறிபவன். அந்த அறிவை அடைய அவன் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தினாலும், இறுதியில் அறிபவன் “நான்” தான். பிரத்யக்ஷம் என்ற பிரமாணத்தைக் கொண்டு பொருட்களைத்தான் அறிய முடியுமே தவிர, அந்த அறிபவனை அல்ல. ஏனெனில் அவன் அந்தப் பிரமாணத்துக்கு ஓர் அறிபடுபொருளாக இல்லை.

“நான்” அனுமானத்துக்கும் அறிபடுபொருளாக இல்லை. அனுமானம் என்பது இரு பொருட்களிடையே உள்ள தொடர்பை நிர்ணயிப்பதன் மூலம் பெறப்படும் அறிவு (புகை-நெருப்பு). ஆனால் “நான்” என்பது அனுமானப் பிரமாணம் செயல்படாத எல்லாக் காலங்களிலும் இருப்பது (உறக்கம்-கனவு-விழிப்பு). அனுமானம் “நான்” என்பது பற்றிய குறிப்புணர்த்தலாமே தவிர, தன்னைப் பற்றிய உறுதியான அறிவைத் தர அதனால் இயலாது.

உபமானப் பிரமாணம் உவமைகளையும், ஒப்பீடுகளையும் சார்ந்தது. ஆனால் “நான்” என்பதற்கு எந்தவிதமான ஒப்பீட்டையும் நம்மால் அளித்து விடமுடியாது. இன்னொரு “நான்” என்பது கிடையாது.  (இல்லையே, ஒவ்வொருவரும் தன்னை நான் என்றுதானே அறிகிறார்கள்? எனவே பல நான்கள் இருக்க வாய்ப்புள்ளதே என்று கேட்கலாம். ஆனால் உடல்கள், மனங்கள், அகங்காரங்கள்தாம் வேறு, வேறு. உண்மையில் அவற்றுக்கு இருப்பு கிடையாது. ஒவ்வொருவருள்ளும் “நான்” என்று உணரும் அந்த எண்ணம் பொதுவானது. அந்த நான் ஒன்றுதான்).“நான்” என்பது தனித்துவமானதும், ஒப்பீடற்றதுமாகவும் இருப்பதால் அனுமானம் அதை அறிவதில் செயல்படாது.

அர்த்தாபத்தி சூழ்நிலைகளிலிருந்து உய்த்துணர்தல். ஆனால் “நானோ” எல்லாச் சூழ்நிலைகளிலும் இருப்பது. எல்லாச் சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டும் இருப்பது. எனவே அர்த்தாபத்தியும் இங்கு செல்லுபடியாகாது.

அனுபலப்தி ஒரு பொருளின் புலப்படாமை குறித்த அறிவைத் தருவது. ஆனால் “நானு”க்கோ புலப்படாமை என்பதே கிடையாது. ஒரு பொருள் இங்கு இருக்கிறது அல்லது இங்கில்லை என்று சொல்வதற்கு முதலில் அதை சொல்பவன் இருக்க வேண்டும். அதைச் சொல்பவன்தான் அந்த “நான்”.  அவனே இல்லாமல் போகும்போது அங்கு அனுபலப்தி மட்டுமல்ல, எந்தப் பிரமாணமும் செயலிழந்து போகிறது. “நான்” என்பதன் இருப்பு எந்த ஒரு உய்த்தறிதலுக்கும் முதன்மையான விதியாகும். எனவே அனுபலப்திப் பிரமாணத்தாலும் தன்னைப் பற்றிய அறிவை ஒருவன் அடைய முடியாது.

இனி மிஞ்சி இருப்பது சப்தப் பிரமாணம் மட்டும்தான். சப்தப் பிரமாணம் ஒன்றின் மூலமாக மட்டுமே தன்னை அறிதல் நிகழ இயலும் என்று அத்வைத தத்துவம் கூறுகிறது. அது எங்ஙனம் என்பதைப் பார்க்கலாம்.

உபநிஷத் “யதோ வாசோ நிவர்தந்தே” என்று கூறுகிறது. அதாவது “எதை விவரிக்க இயலாமல் சொற்கள் திரும்பி விடுகின்றனவோ” என்பது இதன் பொருள். சொற்களால் விவரிக்க முடியாது என்று உபநிஷத்துக்களே அறிவித்த பின்னர், அதை எப்படி சப்தப் பிரமாணத்தால் அறிந்து கொள்ள முடியும்? (இங்கு அது என்று உபநிஷத் குறிப்பிடுவதும் “நானை”த்தான். ஏனெனில் “தது த்வம் அஸி” என்ற வாக்கியம் நீயே அதுவாக இருக்கிறாய் என்று குறிப்பிடுகிறது.)

நான் என்ற அந்த உணர்வு எல்லாருக்குமே இயல்பாகவே இருக்கிறது. எனவே நான் என்பதைக் காட்டித்தர உண்மையில் புறக்கருவிகளின் அவசியமே இல்லை. எனில் சப்தப் பிரமாணத்தின் வேலை இங்கு என்ன? நாம் “நான்” என்று அறிந்து வைத்திருப்பதன் தவறுகளைச் சுட்டிக்காட்டி, உண்மையான “நானி”ன் இலக்கணங்களை எடுத்துரைத்து, நான் குறித்த தெளிவான அறிவைக் கொடுப்பதுதான். பொதுவாக நாம் “நான்” என்று புரிந்து வைத்திருப்பது இந்த அழியும் உடலையும், அதிலிலுள்ள வரையறுக்கப்பட்ட மனத்தையும் தான். ஆனால் நான் என்பதற்கான இலக்கணங்கள் நம்மை தூய இருப்பாக, தூய அறிவாக, அலகிலியாக வரையறை செய்கின்றன. இந்த இலக்கணங்களை அறிந்தால்தான் “நான்” என்பதை அறிந்ததாவோம். 

தன்னை அறிய இங்கு அத்வைத வேதாந்தமே சப்தப் பிரமாணமாக செயல்படுகிறது. நான் என்பதன் இலக்கணங்களையும், இவ்வுலகம், இறைவன், இவையெல்லாவற்றுக்கும் ஆதாரமான பிரம்மம் ஆகியவற்றின் இலக்கணங்களையும் எடுத்துரைத்து, எவ்வாறு நான் என்று அறியப்படுகிற ஆத்மாவும், எல்லாவற்றிற்கும் ஆதாரமாக விளங்குகிற பிரம்மமும் ஒன்றே என்பதையும், இவ்வுலகமும், அதன் உயிர்களும் மாயை என்பதையும் எடுத்துக்காட்டுகளுடனும், சரியான விளக்கமுறைகளுடனும் விளக்குகிறது. 

[தொடரும்]

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

நுண்பொருள் காண்பது அறிவு தூய்மணி சிந்திடும் தோய்ந்த நெருப்பு

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.