“ஏல சங்கரா, இப்பதான் வரியா?”
தன் வீட்டுக்குள் நுழையப் போன சங்கரய்யரை எதிர்த்த வீட்டுத் திண்ணையில் இருந்து கிட்டாமணி ஐயர் வரவேற்றார்.
“ஆமாம், நேத்திக்கு ராத்திரி மெட்றாஸில் வண்டி ஏறினேன்வோய். கார்த்தால சீக்கிரமே ஜங்க்ஷனில் இறக்கி விட்டுட்டான். அப்படியே செங்கோட்டை பாசஞ்சரில் ஏறி வரேன்.” கிட்டாமணி ஐயரைத் தாண்டிப் போக முடியாமல் சங்கரய்யரும் நின்று பதில் சொன்னார்.
“சீசனெல்லாம் பலம்தான் போல. என்னாலதான் இந்த வருஷம் வர முடியலை. நீ வந்தா எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்ன்னு இருக்கேன். உள்ள போயிட்டு வா, பேசுவோம்” என்று சங்கரய்யருக்கு உத்தரவு தந்தார்.
பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்ட பின் திண்ணையில் சீட்டுக் கச்சேரியோடு சம்பாஷணை தொடர்ந்தது. சீட்டுக்கட்டைக் கலைத்துக் கொண்டே “கேண்டீனெல்லாம் எப்படி இருந்தது?” என்று ஆரம்பித்தார் கிட்டாமணி ஐயர். செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்றார் வள்ளுவர். ஆனால் செவியில் விழுந்தது எத்தனையோ இருக்க, வயிற்றில் விழுந்ததைப் பற்றித்தான் பேச்சு ஆரம்பித்தது.
“எல்லா சபாவிலும் கேண்டீனில்தான் கூட்டம். கல்யாண சாப்பாடு தோத்துது. அப்படி அமர்க்களமா தலைவாழை இலை போட்டுப் பந்திதான் எல்லா இடத்திலும். இருவது முப்பது ஐட்டம் போட்டு அசத்தறா. என்ன மத்தவா கிட்ட இருந்து வித்தியாசப்படுத்திக்கணும்ன்னு என்னென்னவோ பண்ணிப் பார்க்கறா. ஒரு பக்கம் அம்மணிக்கொழுக்கட்டை, அடை நோன்பு, மோர்களின்னு பழைய ஐட்டங்களை எல்லாம் போடறா. இன்னொரு பக்கம் மேத்தி பூரி, டேட்ஸ் கேசரி, வால்நட் அல்வான்னு வித்தியாசமா என்னென்னவோ வரது. ஆனா கார்த்தால அகாடமி போனோமா பொங்கல், இட்லி, வடை சாப்பிட்டுட்டு ஒரு காப்பியை குடுச்சோமா, அப்படியே லெக்டெம் நடக்கிற மினி ஹாலுக்குப் போனோமான்னு இருக்கிறதுதான் எனக்குப் பிடிச்சது.”
“அவாதான் பெஸ்ட் கேண்டீன் அவார்ட் கூட வாங்கி இருக்கான்னு படிச்சேன். அதான் ஒரு சுத்து பெருத்துட்ட.”
“நான் என்ன பண்ண. சாப்பாடு கேண்டீனோட நிக்கலையே, சபாவுக்குள்ளவும் நுழைஞ்சுடுத்தே.”
“என்னடே சொல்லற? சபாக்குள்ள தண்ணி பாட்டிலை எடுத்துண்டு போனாலே என்னமோ அணுகுண்டு எடுத்துண்டு போற மாதிரி முறைப்பாளே. சாப்பாடே நுழைஞ்சுடுத்தா?”
“சாப்பாடுன்னா சாப்பாடே இல்லைவோய். உப்புமா பத்தி ஒரு பாட்டு. கேட்டவா எல்லாரும் ரொம்ப ரசிச்சா!”
“உப்புமாப் பத்திப் பாட்டா? ஸ்வாமி பத்திப் பாடலைன்னா கர்நாடக சங்கீத சம்பிரதாயமே கெட்டுப் போச்சும்பாளே. அவா வாய்க்கு எல்லாம் அவல் உப்புமாதானா?”
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. எல்லாரும் ஆகா ஓஹோன்னுட்டா. அது மட்டுமில்லை. அகாதமி முதல் நாள் விழாவில் தலைமை தாங்கின ஏ.ஆர். ரஹ்மானைக் கூப்பிட்டதுக்கு நிறைய பேர் கண்டனம் தெரிவிச்சா. அவருக்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் என்ன சம்பந்தம்ன்னு எல்லாம் கேட்டா. ஆனா கச்சேரில ஸ்வரம் பாடும் போது சினிமாப் பாட்டைக் கனெக்ட் பண்ணினவாளுக்கு அவ்வளவு கைதட்டு. அது மட்டுமில்லைவோய். ஒரு கச்சேரியில் சினிமாப் பாட்டு ஒண்ணே பாடிட்டான்னா பார்த்துக்கும்.”
“நிஜமாவே சினிமாப் பாட்டா பாடினா?”
“ஆமாம். நமக்கெல்லாம் காந்தான்னா ரத்தக் கண்ணீர்ல எம் ஆர் ராதா காந்தா காந்தான்னு பேசின வசனம்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா இப்போ எல்லாம் காந்தான்னு ஆரம்பிக்கற மலையாள சினிமாப் பாட்டு ஒண்ணுதான் எல்லா இடத்திலேயும். அது கர்நாடக சங்கீத மேடை வரைக்கும் வந்தாச்சு. பாடகாள் மேடையில் இருந்து பாடறதும், அதுக்கு ரசிகாள் எதிர்ப்பாட்டு பாடறதுமா கச்சேரி நல்ல ஜமா கட்டித்துவோய். ”

சும்மா உட்கார்ந்திருந்த சங்கரய்யர் பையன் மஹாதேவனையும் வம்புக்கிழுத்தார் கிட்டாமணி ஐயர். “ஏல மஹாதேவா, எல்லாத்துக்கும் எதாவது கருத்து வெச்சிருப்பியே. உங்கப்பா இவ்வளவு சொல்லறார். பேசாம கம்முன்னு இருக்க..”
“நான் எதாவது சொல்லுவேன். இந்தக் காலத்துப் பசங்களே இப்படித்தான், உங்களாலதான் சம்பிரதாயம் அழியறதும்பீர். எதுக்குன்னுதான் சும்மா இருக்கேன்.”
“ஆமாண்டா. நீ ஒருத்தன் சொல்லறதுனாலதான் உலகமே மாறப் போறது. சும்மாச் சொல்லுடா.”
“அப்பா முதலில் உப்புமாப் பத்திப் பாட்டுன்னா. அதுல எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. எதைப் பத்தி வேணுமானாலும் பாடலாம்ன்னுதான் நான் சொல்லுவேன். ஆனாப் பாட்டு கேட்கும் படியா இருக்கணும். வார்த்தைகள் ரசிக்கும்படியா இருக்கணும். இந்த ரெண்டு விஷயத்திலும் அந்தப் பாட்டு தேறலைன்னுதான் நான் நினைக்கறேன். அன்னிக்குக் கேட்டவா எல்லாரும் ரொம்பப் பிரமாதம்ன்னு பேசினா. அப்போதான் எனக்குச் சிரிப்பு வந்தது.”
“அதுக்கு எதுக்குடா சிரிப்பு. அவாளுக்குப் பிடிச்சிருக்கு நன்னா இருக்குங்கிறா”
“இருக்கட்டும். பிடிக்கட்டும். ரசிக்கட்டும். அதுல எனக்கு என்ன, ஆனா இதே வாய்தான் வேற யாராவது மத்த விஷயங்களைப் பாடும் போது நம்ம சங்கீதம் ரொம்ப உசத்தி, அதுல கிருஷ்ணா ராமான்னு பாடறதை விட்டுட்டுக் கண்டபடி பாடறதுகள்ன்னு சொல்லிட்டு இன்னிக்கு உப்புமாவைக் கிண்டி வையடின்னு கூடப் பாடறது பாருங்கோ. அங்கதான் உதைக்கறது.”
“சங்கீதத்துல பக்தி வேண்டாங்கறியா?”
“நான் அப்படியா சொன்னேன்? ஒரு தடவை வேதவல்லி மாமி சொன்னா, பக்திங்கிறது நாம பாடற விதத்தில் வரணும். ராமரைப் பத்திப் பாடும் போது கேட்கறவாளுக்கு என்ன பக்தி வரதோ அதே பக்தி நான் டேபிள் சேரைப் பத்திப் பாடினா வரணும். அதுதான் சங்கீதம்ன்னு சொன்னா. அதுதான் சரிங்கறேன். பக்தி சங்கீதத்தில் இருக்கணும்.”
“நீதான் பாட்டு எல்லாம் எழுதறியே. பேசாம அவாளோட உக்காந்து நீயே எழுதிக் குடு. உப்புமா போகட்டும். இந்த சினிமாப்பாட்டை எல்லாம் ஸ்வரம் பாடும் போது காமிக்கறாளே. அதுவாவது நல்ல சங்கீதம்தானா?” அவர் பங்குக்குச் சங்கரய்யர் அடுத்த வெடியைக் கொளுத்திப் போட்டார்.
“நானும் சினிமாப்பாட்டு கேட்பேன். இளையராஜா பாட்டுக் கேட்டு வளர்ந்தவன்தான். ஆனா அதையும் இதையும் கலக்கணுமான்னு எனக்குத் தெரியலை. அந்தக் காலத்தில் சினிமாவில் வந்த பாட்டுகளை மேடையில் பாடலையான்னு கேட்கலாம். ஆனா அந்தப் பாடல் எல்லாம் ராக அடிப்படையில் அமைஞ்சது. அதைக் கச்சேரிக்கு ஏத்த மாதிரி பாடிண்டா. இப்போ ஒரு பாட்டுக்கு நடுவுல வர ஒரு சங்கதியை மட்டும் எடுத்து வேற கிருதி பாடிண்டிருக்கும் போது நுழைக்கிறது எனக்குப் பிடிக்கலை.
ஒரு உதாரணம் சொல்லணும்ன்னா, எனக்கு நூடில்ஸ் பிடிக்கும். தோசைன்னா உசிரு. அதுக்காக மசால் தோசை மாதிரி இன்னிக்கு நூடில்ஸ் தோசைன்னு தரது எனக்குப் பிடிக்காது. ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் என்று பாடிவிட்டு ஸ்வரம் பாடும் போது நடுவில் வேற சினிமாப் பாட்டைத் தொட்டுக் காமிக்கிறது ரெண்டு பாட்டுக்குமே மரியாதை இல்லைன்னு நினைக்கிறேன். அந்த சினிமாப்பாட்டை இசையமைத்த இளையராஜாவே கச்சேரியைக் கேட்டாலும் கூட. ஒரு க்ஷண நேர ஆஹாவுக்காக பாடற பாட்டோட கலர், டெக்ஸ்ட்சர் எல்லாமே மாறணுமான்னு கேட்கறேன். அவ்வளவுதான்.”
“பலே. பெரிய பிரசங்கமே பண்ணிட்டியேடா. அதுவாவது எதோ ஸ்வரம் பாடும் போது கொஞ்சம். இந்த வருஷம் எதோ சினிமாப் பாட்டையே பாடிட்டாளாமே. அதுக்கென்ன சொல்லப் போற?” கிட்டாமணி ஐயர் மீண்டும் நாரதர் அவதாரமெடுத்தார்.
“ஒண்ணுஞ்சொல்லப் போறதில்லை. அவாளுக்குச் சரின்னு பட்டா பாடட்டும். கேட்கறவா கேக்கட்டும். சினிமாப் பாட்டைப் பாடிட்டு நடுவுல நாலு ஸ்வரம் பாடிட்டா அது கர்நாடக சங்கீதம் ஆகிடும்ன்னா நான் ஒத்துக்க மாட்டேன். இதைப் பாடினவாளும் சரி, கேட்டவாளும் சரி வேற யாராவது கர்நாடக சங்கீதத்திலேயே அவாளுக்குப் பிடிக்காத சப்ஜெக்ட்ல பாடினப்போ அவ்வளவு பேசினாங்க. தனக்குன்னா ஒரு ரூல் அடுத்தவாளுக்குன்னா ஒரு ரூல்ன்னு இருக்கிறதைப் பார்த்தால்தான் சிரிப்பா இருக்கு.
இன்னும் ஒண்ணையும் சொல்லியாகணும். ரொம்பப் பிரபலமான வித்வான், பிராடிஜி. அவர் வசந்தாவில் ஸ்வரம் பாடிக் கேட்டேன். ரேஸ் கார் ஓடறது, ப்ளேன் பறக்கறது, ஆட்டோ ஓடறது ஆனா வசந்தாவை மட்டும் காணும். அன்னிக்குக் கச்சேரிலேர்ந்து வந்து எம்டிஆர் பாடின வசந்தாவைத் திரும்பத் திரும்பக் கேட்டேன். என் கண்ணில் தண்ணியே வந்துடுத்து. அந்த வசந்தாவை அப்படி இல்லாமப் பண்ணிட்டாரேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்.
கர்நாடக சங்கீதத்தில் எதேதோ பண்ணனும்ன்னு பேசறாளே. அவா கிட்ட நான் ஒண்ணு கேட்கறேன். இன்னிக்குத் தேவை இன்க்ளூசிவிட்டி, டைவேர்சிட்டின்னு எல்லாம் பேசறேளே. அதெல்லாம் வேணும்தான், இல்லைன்னு சொல்லலை. ஆனா மத்ததைப் பண்ணறதுக்கு முன்னாடி மியூசிகாலிட்டின்னா என்னான்னு பாடம் எடுங்கோ. இசைத்தன்மையே இல்லைன்னா இன்க்ளூசிவிட்டியும் டைவேர்சிட்டியும் இருந்து என்ன புண்ணியம்.”
சற்றே அமைதி நிலவியது. வீட்டுக்கு உள்ளிருந்து “காபிக்கு வரலையா?” என்ற குரல் கேட்கத் திண்ணைக் கச்சேரி கலைந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
