ஒரு நாட்டின் உண்மையான மேன்மை அதன் மக்களின் ஆரோக்கியத்திலேயே பிரதிபலிக்கிறது. பொதுவாக, பொதுநலம் என்பது தடுப்பூசி போடுவதோ அல்லது நோய் வந்த பின் சிகிச்சையளிப்பதோ என்று நாம் கருதுகிறோம். முன்னாளிலேயே ஏலாதி, இதனை அழகாகக் கீழ்வரும் பாடல் மூலம் விளக்குகிறது
கருஞ் சிரங்கு, வெண் தொழு நோய், கல், வளி, காயும்
பெருஞ், சிரங்கு, பேர் வயிற்றுத் தீயார்க்கு, அருஞ் சிரமம்
ஆற்றி, ஊண் ஈத்து, அவை தீர்த்தார் – அரசராய்ப்
போற்றி ஊண் உண்பார், புரந்து.
எல்லா காலத்திலும் மக்களின் ஆரோக்கியத்தை பேணுவது அரசின் முதலாய கடமைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.
உலக சுகாதார அமைப்பு (WHO) வரையறுப்பது போல, இது தனிமனித ஆரோக்கியத்தை விட ஒட்டுமொத்த சமூகத்தின் நல்வாழ்வை முதன்மைப்படுத்தும் ஒரு மாபெரும் அறிவியல் மற்றும் கலை. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், பொதுநலத்தின் 10 முக்கிய கடமைகளையும் உள்ளடக்கிய விரிவான பார்வை இதோ:
சமூகத்தின் துடிப்பை அறிதல்
பொதுநலத் துறையின் அடிப்படைப் பணி என்பது சமூகத்தின் சுகாதார நிலையைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதாகும். ஒரு பகுதியில் வாழும் மக்களின் உடல் மற்றும் மனநலத்தை அறிந்து கொள்வதுடன், அவர்களின் நல்வாழ்வைப் பாதிக்கும் காரணிகளை முன்கூட்டியே கண்டறிய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புதிய காரணிகளைத் தேடி கருத்துக்கணிப்புகளையும் ஆய்வுகளையும் நடத்துவது அவசியம். மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம், புதிதாகக் குடியேறுபவர்கள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் எனப் புதிய சவால்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் சூழலில், இந்தத் தரவுச் சேகரிப்பு மிக முக்கியமானது.
ஒரு சமூகத்தில் பலருக்கு ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பாதிப்பு ஏற்படும்போது, அதன் மூலத்தைக் கண்டறிவதில் ஒரு துப்பறியும் நிபுணரைப் போல இத்துறை செயல்படுகிறது. அந்த நோயின் தன்மை, அது பரவும் விதம் மற்றும் அதற்கான காரணிகளைத் துல்லியமாக ஆராய்ந்து, அந்த ஆபத்திலிருந்து மக்களைக் காப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை இது மேற்கொள்கிறது.
கண்டறியப்பட்ட சுகாதார அபாயங்களைப் பற்றி மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்ப்பதே மிகச்சிறந்த தடுப்பு மருந்து. தகுந்த தகவல்களை எவ்விதப் பரபரப்பும் இன்றி, மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் மொழியில் எடுத்துச் சொல்வது அவசியம். காரணிகளை எப்படித் தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஊட்டுவதன் மூலம், மக்கள் தங்கள் ஆரோக்கியத்தைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலையை உருவாக்குகிறது.
பொதுநலம் என்பது தனிப்பட்ட ஒரு துறையின் பணி அல்ல. இது அரசு இயந்திரங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளுக்கு இடையிலான ஒரு வலுவான பிணைப்பு. தொற்றுநோய் காலங்களில் இத்தகைய சமூகப் பிணைப்புகள் மூலமே உதவிகள் கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைந்தன. சமூக ஆரோக்கியத்தை வலுப்படுத்த இத்தகைய கூட்டணிகளைத் திரட்டுவது அவசியமான ஒன்றாகிறது.
நாட்டின் பொதுவான திட்டங்களை அந்தந்த சமூகத்தின் சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைப்பது ஒரு முக்கிய கடமையாகும். இதில் சிறு மாற்றங்களைச் செய்து, அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, சமூகத்தில் உள்ள விளிம்புநிலை மக்கள் உட்பட அனைவரையும் உள்ளடக்கிய சமதர்மக் கொள்கையுடைய திட்டங்கள் மற்றும் தரம்மிக்க சுகாதார மையங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சமூகத்திற்குச் சேவை செய்ய அர்ப்பணிப்புள்ள பொதுநலப் பணியாளர்களை உருவாக்குவது ஒரு துறையின் முதுகெலும்பாகும். இவர்களுக்குக் காலத்திற்கேற்ப உயிர்வேதியியல் கருவிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். நவீனத் தரவு முறைகள் மற்றும் ஆராய்ச்சி மூலம் புதிய தீர்வுகளைக் கண்டறிந்து, சுகாதாரச் சேவைகளின் தரத்தைத் தொடர்ந்து மதிப்பிட்டு மேம்படுத்துவதே இத்துறையின் இறுதி இலக்காகும்.
பொதுநலம் என்பது ஒருமுறை செய்துவிட்டு ஓய்வெடுக்கும் செயல் அல்ல; அது ஒரு சுழற்சி. காலமாற்றத்திற்கு ஏற்ப உருவாகும் புதிய நோய்க்கிருமிகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை எதிர்கொள்ள, இத்தகைய விரிவான கட்டமைப்பே ஒரு சமூகத்திற்குப் பாதுகாப்பு அரணாக அமைகிறது. மேலே சொன்ன பத்து கட்டலைகளும் மூன்று பொது குழுக்களில் அடங்கும். அதை ஒரு சக்கரத்தில் மூன்று முக்கிய பிரிவுகளாகக் குறிப்பார்கள். இதனை உலகளாவிய ரீதியில் “பொதுச் சுகாதாரச் சக்கரம்” (The Core Public Health Functions Steering Committee Framework) என்று அழைக்கிறார்கள்.

முதல் பகுதி மதிப்பீடு செய்தல் (Assessment) என்னும் சக்கரத்தின் முதல் பகுதி சமூகத்தின் தற்போதைய நிலையைத் துல்லியமாகக் கணக்கிடுவதாகும். இது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணிகள், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் புதிதாக உருவாகும் கிருமிகள் குறித்துத் தரவுகளைச் சேகரிப்பத என்ற கண்காணிப்பைக் கொண்டது. மேலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நோய் பரவினால், அதன் மூலக்காரணத்தையும் பரவும் தன்மையையும் ஒரு துப்பறியும் நிபுணரைப் போலக் கண்டறிவது என்ற புலனாய்வுப்பிரிவையும் கொண்டது.
இரண்டாம் பகுதி, கொள்கை உருவாக்கம் (Policy Development) என்ற பகுதியின் வேலை தரவுகள் கிடைத்தவுடன், அவற்றைச் தீர்வுகளாக மாற்றுவது ஆகும்.. இதில் கண்டறியப்பட்ட உண்மைகளை மக்களிடம் எளிய மொழியில் கொண்டு சேர்த்து, அவர்களை விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வது அடங்கும். மேலும், அரசு, தனியார் மற்றும் பொதுநல அமைப்புகளை ஒன்றிணைத்து ஒரு வலுவான பிணைப்பை உருவாக்குவதும், நல்ல திட்டமிடலுடன் கூடிய சமூகத்தின் தேவைக்கேற்பச் சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு, சமதர்மக் கொள்கையுடைய புதிய சுகாதாரத் திட்டங்களை வடிவமைப்பதும் முக்கிய கடமைகளாகும்..
மூன்றாம் பகுதியில் எல்லாவற்ற்கும் மேலாக மக்களுக்கு நல்ல உடல்நலனை உறுதி செய்தல் (Assurance) முக்கியமானது.
உருவாக்கப்பட்ட திட்டங்கள் சரியாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் இறுதிப் பகுதி இது.இதில், மூன்றூ மூக்கிய செயல்பாடுகள் உண்டு. அவையாவன: ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்தல்; நவீன தொழில்நுட்பங்களையும், உயிர்வேதியியல் கருவிகளையும் கையாளத் தெரிந்த தகுதியான பொதுநலப் பணியாளர்களை உருவாக்குவது; ஒருமுறை திட்டத்தைச் செயல்படுத்திவிட்டு ஓய்வெடுக்காமல், அதன் விளைவுகளைத் தொடர்ந்து ஆராய்ந்து மேம்படுத்துவது.இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன. ஒரு பகுதியில் நோய் குறைந்தவுடன் பணி முடிந்துவிடுவதில்லை; மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம் மற்றும் புதிய சூழலியல் காரணிகளால் மீண்டும் முதல் படியான “மதிப்பீடு” தொடங்குகிறது. இந்தச் சக்கரம் தடையின்றிச் சுழலும் போதுதான், தொற்றுநோய்க் காலங்களிலும் கூட உதவிகள் தடையின்றி மக்களைச் சென்றடைகின்றன
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
