யுகமலர் தொடும் மானுட விரல்

"புராணம் எல்லா காலத்துக்கும் பொருந்துற உண்மைய சொல்லுது. இது தான் உங்க கருத்து, இல்லையா?"

“ஆமா”

“அந்த உண்மையை சொல்றவங்க சூப்பர் ஹியூமன் குணங்களோட இருக்கிறது பிரச்சனையா?”

“பிரச்சனையா ஆகுறதுக்கு நிறையா வாய்ப்புகள் இருக்கு”. அரவிந்தன் நீலகண்டன் தொடர்ந்தார். “ஒரு கதைல உங்களுக்கு ரிலேட் ஆகுற அந்த கதாபாத்திரம் தான் உங்க பிரயாணத் துணைவன். உங்க வாழ்க்கை முழுவதும்! அந்த கதாபாத்திரம் ரிலேட் ஆகலைனா அந்த புராணம் சிதையும். காணாம போகும்.”

“ஆமாம்”

அவனா நீ-னு வடிவேலு கேக்குறது உங்களுக்கும் எனக்கும் சிரிப்பு வரவைக்கும். ஆனா பாலினக் கவர்ச்சியை வேறு விதமா அணுகுறவங்களுக்கு அதே காமெடி சிரிக்க வைக்காது.”

“உண்மை தான்.”

“ஒரு சின்ன காமெடி பத்தின நம்ம பார்வை ஒரு பத்து வருஷத்துக்குள் எப்படி மாறுதுனு பாத்தீங்களா?”

“LGTBQ+ பத்தின உரையாடல் கடந்த பத்து வருஷத்துல ஜாஸ்தி ஆகியிருக்கு. அதோட தாக்கம் நம்ம ரசனைகள பாதிக்குது. அந்த காமெடி-க்கு அப்போ சிரிச்ச மாதிரி இப்போ சிரிக்க முடியாது.”

“ஆமாம். அப்படினா பல்லாயிர வருஷங்களுக்கு முன்னாடி உருவான புராணத்தை இந்த காலத்துக்கு கடத்துறதுல இருக்குற பிரச்சனை இன்னும் ஜாஸ்தி.”

“அவங்கள அவமானப்படுத்துற எண்ணத்துல வடிவேலு அதப் பண்ணல. ஆனாலும் அந்த காமெடி-க்கு அவர் பொறுப்பு, இல்லையா?”

“ஆமா. நாளைக்கு வடிவேலுக்கு யாரவது ஒருத்தர் மடம் அரம்பிச்சா இந்த காமெடிய அடுத்தவங்களுக்கு புரிய வைக்கிற பொறுப்பு அவங்களது.”

“நம்மகிட்ட தொன்மங்களும் நிறைய, மடங்களும் நிறைய.”

காலம் கடந்து நிற்கும் ஒரு உண்மையை, மலர்களை போல் பல நூறு இதழ்களால் மூடி வைத்தால் அது புராணம். காலமும் மனிதர்களும் இணைந்து சாத்தியமாக்கிய மேடு பள்ளங்களை கடந்து நிற்பது புராணம். இப்புராணங்களை ஏந்தி நிற்கும் பெருநாயகர்கள் விமர்சன சுழலில் சிக்கும்போது தொன்மங்களும் பாதிக்கப்படுவது இயல்பு. இங்கு ஒரு விஷயம். இந்த பெருநாயகர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமல்ல. அவர்கள் நம் கால நாயகர்களும். அகத்தியர் முதல் காந்தி வரை. அரவிந்தனின் “The Prophet Who Never Was” எனும் புத்தகம் இந்த பிரச்சனையின் தீவிரத்தை அறிந்து, சில சாத்தியக்கூறுகளை முன்வைக்கிறது. இந்த மனிதர்களை வேறு விதமாக அணுகுவதால் இந்த பிரச்சனை தீருமா?

அரவிந்தன் தொடர்ந்தார், “ஆதிசங்கரர் தங்க மழை பொழிய வெச்சு அந்த குடும்பத்தோட வறுமை தீர்ந்தது-னு சொல்றது தப்பே இல்லை. அது ஒரு இடம் வரைக்கும் நம்மள கொண்டு போகும். வறுமை அந்த ஒரு வீட்ல மட்டும் இருந்திருக்குமா? சுத்தி இருந்த வீடுகளுக்கு அந்த தேவை இருந்திருக்காதா? இது தெரியாம சங்கரர் அந்த தெருவுக்குள்ள போயிருப்பாரா? அந்த மழை அந்த ஒரு வீடு மேல மட்டும் தான் பொழிஞ்சிருக்குமா? இந்த கேள்விகள் நம்மள இன்னும் ஒரு படி மேல கொண்டு போகும்.”

“தனி ஒரு வீட்டுக்கு மட்டும் இல்லாம, ஒரு சமூக மாற்றத்தை அவர் செஞ்சிருக்கறத புரிஞ்சிக்க முடியும்னு சொல்றீங்க”

“ஆமாம். அந்த புராணத்த நீங்க விரிவுபடுத்தாம குறுகலான துளை வழியா மட்டும் பாத்தா அடுத்த தலைமுறை உங்களை தாண்டி போய்டும்.”

“பல சிந்தனை மாற்றங்கள், போர்கள், ஆட்கொல்லி நோய்கள்… அந்த யுகத்துல இருந்து நம்மள வெளிய தள்ளி வேற இடத்துல வெச்சிருக்கு”

“அப்போ அடுத்த கேள்வி, அவரு இத எப்படி சாதிச்சிருப்பாரு? இதுக்கான பதில் நமக்கு நாராயண குரு கிட்ட இருந்து கிடைக்கலாம். நாராயண குருவ ஒரு சீர்திருத்தவாதி, ஆன்மீகவாதினு மட்டும் பாக்காம, அவருக்கு ஒரு தொழில் முனையும் மைன்ட்செட் இருந்திருக்கு, அதை அற வழியில மக்களோட பிரச்சனைகளை தீர்க்க உபயோகப் படுத்தியிருக்கறத நம்மாள தெரிஞ்சிக்க முடியுது”

“ஒரு மீனவ குடும்பத்திற்கு, தேங்காய் நார் குடிசை தொழில் சொல்லிகுடுத்ததை பத்தி சொல்றீங்களா?”

“ஆமா. ஆனா இதை அவரு செய்யுனும்னா அவருக்கு ஆன்மீகத்த தாண்டி மற்ற விஷயங்கள் பத்தின பயிற்சியும் இருக்கணும். புராணத்தை பத்தின இந்த ஒரு பார்வை ஆன்மீகத்த பத்தின நம்ம புரிதலை இன்னும் விரிவுபடுத்தும்…”

“ரொம்ப சரி. தாழக் கிடப்பவரை தற்காக்கும் தர்மம். அவங்களோட அந்த கோணத்தை புரிஞ்சிக்க இந்த கால orthodox பார்வை பத்தாது”

“…குறிப்பா மத அமைப்புகளும் தங்களுடைய கடமைகளின் விரிவை இன்னும் சரியா புரிஞ்சுக்குவாங்க”

“so, ஒரு எளிய கேள்வி நமக்கு நம்ம பத்தின இன்னும் சரியான புரிதலை கொடுக்குது. நம்ம அடுத்த தலைமுறைக்கு தயார் படுத்துது.”

“ஆனா புராணங்களின் இந்த ஹியூமனைசேஷன், ஒரு அரசியல் கருவியா உபயோகப்படுத்தப்படுது இல்லையா? பல நவீன இலக்கியங்கள் இதை செய்யுது.”

“அவங்க நோக்கம் வேற. முத்து மாலையோட ஒரு மணிய மட்டும் எடுத்து உங்க கண் விழிக்கு ரொம்ப கிட்ட கொண்டு வைக்கிற வேல.”

“உங்களால வேற எதையும் பாக்க முடியாது. அந்த ஒரு முத்து மணியக் கூட முழுசா புரிஞ்சிக்க முடியாது”

“நான் சொல்றது, அருச்சுனனுக்கு அந்த யுத்த நாள் காத்தால கண்டிப்ப தோள் வலி இருந்திருக்கும். தேர் ஓட்டின கிருஷ்ணருக்கு அந்த வெயில்ல வியர்த்து கொட்டியிருக்கும். அதையெல்லாம் தொடச்சி எறிஞ்சிட்டு தான் அவங்க தேர் ஓட்டி, அம்பு எய்திருப்பாங்க. அப்படி தான் அந்த வெற்றி அவங்களுக்கு கெடச்சுது. இதை நாம புரிஞ்சிக்கணும். இல்லனா இந்த கால யுத்தத்தில்ல நாம தோத்துருவோம்.”


இந்த பெருநாயகர்கள் சாதாரணர்களாக உலவும் இப்புத்தகத்தில் அவர்கள் நின்ற மணலின் வெப்பத்தை நாம் உணர்கிறோம். அவர்கள் கண்ட தென்றலும் அனலும் நாமும் அறிகிறோம். அதன் வழியாக, கிரேக்க சக்ரவர்த்தியின் அதிகாரத்தை தூக்கி எறிந்து அக்னி நோக்கி நடந்த அந்த முனியின் பாதையும், ஆங்கிலேயரின் அதிகாரத்தை எதிர்த்து காந்தி நடந்த சத்தியாகிரக பாதையும் ஒன்றே என நமக்கு புரிகிறது. பெரும் பஞ்ச காலத்தில் ஆங்கிலேய அதிகாரத்தை எதிர்த்து கொடி பிடித்து நடந்த அந்த 73 வயது வங்காள பெண்ணின் வீர நடையை தமிழர்கள் தங்கள் மண்ணில் கண்டிருக்கிறார்கள்.

வானத்தில் வேர் பரப்பி பூமியின் தரை தொடும் அந்த பெருமரம், பல புராண மலர்களை நம் கையருகில் அமர்த்தியிருக்கிறது. அரவிந்தன் அந்த மலர்களை புது விரல்களால் தொடுகிறார். வாசகர்கள் அவருடன் இணைந்து கொள்ளலாம்.

புத்தகம் வாங்க : சுவாசம் பதிப்பகம், Amazon

  • வகை : Short Stories | சிறுகதைகள்
  • பக்கங்கள் : 232
  • வெளியீடு : 2025
  • மொழி : ஆங்கிலம்
  • விலை: Rs. 380.00

மேலும்: Celebrating Our Colleague, Aravindan Neelakandan


Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.