’ஒரே ஒரு சிறுகதை விட்டல் ராவ் உரையாடல்கள்’ என்னும் கட்டுரை நூலை எழுத்தாளர் பாவண்ணன் படைத்திருக்கிறார். எழுத்தாளர் விட்டல் ராவ் அவர்களோடு பாவண்ணன் நிகழ்த்திய உரையாடல் இங்கே ஒரு நூலாகியிருக்கிறது. விட்டல் ஓர் கலைகளின் சுரங்கம் என்பதைத் தெரிவிக்கும் பலகணியாய் இந்நூல் வாசகனுக்கு அனுபவமாகிறது.

சந்தியா பதிப்பகம் இந்நூலை கொண்டு வந்திருக்கிறது. மணியான பத்தொன்பது கட்டுரைகளைக்கொண்ட இந்நூல் 262 பக்கங்களாய் விரிகிறது. இப்படைப்பின் பெரும்பாலான கட்டுரைகள் அம்ருதா இதழில் தொடர்ந்து வெளிவந்தவை. இந்த நூலை இவ்விரு இலக்கியப் பெருமக்களுக்கும் நண்பராய் இருந்த நாடறிந்த எழுத்தாளர் அமரர் அசோகமித்திரனுக்கு பாவண்ணன் வணக்கத்தோடு சமர்ப்பித்திருக்கிறார்.
பாவண்ணனும் விட்டல்ராவும் பெங்களூருவில் வசித்து வருகின்ற எழுத்தாளுமைகள். இருவரும் வெளியூர்களில் நிகழும் பல இலக்கிய நிகழ்வுகளுக்குச் சேர்ந்தே பயணித்திருப்பதும், வாழிடம் அண்மை என்பதால் இவரும் அடிக்கடி சந்தித்து உரையாடுவதும் இந்நூல் உருப்பெற உதவியிருக்கின்றது. இந்நூலை வாசிக்கின்றபோது பகவத்கீதையின் வினாவிடைப் பாணி காட்சியாவதாய் நான் உணர்ந்தேன். விட்டல்ராவ் கீதையின் விளக்கம் சொல்லும் கண்ணனாக, பாவண்ணன் வினா வைக்கும் பார்த்தனாக எனக்கு அனுபவமானார்கள். பாவண்ணன் வாசகர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு வினாக்கள் வைப்பதை நாம் உணரலாம்.
பாவண்ணன் தனது முன்னுரையில் மிகச்சிறப்பாக இந்நூலின் முக்கியத்துவம் பற்றிக்குறிப்பிடுகிறார்.
‘விட்டல் ராவுடன் உரையாடுவது ஒரு நூலகத்துக்குச்சென்று புத்தகம் படிக்கும் அனுபவத்துக்கு நிகரானது. அவர் உரையாடத்தொடங்கினால் எண்ணற்ற தகவல்கள் வந்துகொண்டேயிருக்கும். அவருடைய நினைவாற்றல் ஒரு பெரும்புதையல். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நம் கண் முன்னால் நிகழ்த்திக்காட்டும் ஆற்றல் அவருக்குண்டு. அவர் வழியாக எண்ணற்ற மனிதர்களைப் பற்றித்தெரிந்து கொண்டேன்.’
ஒவ்வொரு கட்டுரையிலும் பாவண்ணன் தனக்கு நேர்ந்த நிகழ்வுகளை எண்ணிப்பார்க்கிறார். அவைகளின் ஒரு முனையை விட்டல் ராவோடு பகிர்ந்து கொள்கிறார். விட்டல் அதனைப் பற்றிக்கொண்டு தனது சொந்த அனுபங்களை அருவியெனக் கொட்டுகிறார். அதனை வாசகப் பெருமக்களுக்குக் கடத்துகிறார் பாவண்ணன்.
முதல் கட்டுரைக்குக் கபாலி என்று பெயர் கொடுத்திருக்கிறார் பாவண்ணன். தினமணிக்கதிரில் அறுபது எழுபதுகளில் விட்டல் ராவ் தான் எழுதிய கதைகளை இரண்டு தொகுதிகளாக பைண்ட் செய்து வைத்திருக்கிறார். அதில் ஒரு தொகுதியை படிக்க வாங்கி வந்த பாவண்ணனுக்கு விட்டல் ராவின் சிறுகதைப்படைப்புகளில் ’ கபாலி’ என்னும் சிறுகதை மிகவும் பிடித்துப்போகிறது. கபாலி ஒரு பேட்டை ரவுடி. அதே ஊரில் வீரய்யா என்பவன் இன்னொரு ரவுடி. கபாலிக்கு கான்ஸ்டபிள் துரை வேண்டியவராகிறார். அதே ஸ்டேஷனைச்சார்ந்த கான்ஸ்டபிள் சாயிராம் வீரய்யாவுடன் நெருக்கமாகிறார். இருவேறு ரவுடிக் கும்பல்களுக்கிடையே சதா மோதல்கள் நடக்கின்றன. இரு வேறு கான்ஸ்டபிள்களுக்கு இடையேயும் பொறாமையும் போட்டியும் தொடர்கின்றன, அதிர்ச்சி அளிப்பதாய் கபாலியின் மரணம் நிகழ்கிறது. அவனது உடல் சாக்கடையை அடைத்துக்கொண்டு கிடக்க அதனை வெளியே எடுத்துப் போடுகிறார்கள். இந்தக்கதையை நண்பர் விட்டல் ராவோடு தொடங்குகிறார் பாவண்ணன். அந்தக் கபாலி கதைக்குள் இன்னும் பல கதைகள் இருப்பதாய் விட்டல் ராவ் ஆரம்பிக்கிறார். ஒரு சினிமா நடிகையோடு அவனுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அந்த நடிகை ஷூட்டிங்க் முடித்த கையோடு ஷாப்பிங்க் போகும் சமயம் கபாலி பார்த்து விடுகிறான். அவனுக்கு என்னமோ கிளு கிளுப்பு. அந்த நடிகையைக் கட்டிப்பிடித்து மார்பகத்தை கடித்தே விடுகிறான். அவனை யாராலும் பிடிக்கவே முடிய வில்லை. எங்கு போனான் என்றே தெரியவில்லை. ஒரு நாள் அவன் சவம் சாக்கடையில் அடைத்துக்கிடந்ததது. இந்த நிகழ்வைத்தான் விட்டல் நடிகை சமாசாரத்தை மட்டும் நீக்கிவிட்டு ’கபாலி’ என்னும் சிறுகதையாக எழுதியிருக்கிறார். அதற்கு தினமணிக்கதிரில் எழுநூற்றி ஐம்பது ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது. அதனை பெற்றுக்கொண்ட விட்டல் ராவ் ஆதம்பாக்கத்தில் தன் வீட்டுக் கழிப்பறையைப் பேசின் வைத்த நவீன கழிப்பறையாக மாற்றியிருக்கிறார். அதுவரைக்கும் கையில் காசில்லாததால் லெட்ரின் கழிவுகளை தானும் தனது மனைவியும் இரவில் யாருக்கும் தெரியாமல் வெகுதூரம் எடுத்துக்கொண்டு போய் கொட்டி சுத்தம் செய்து வந்திருக்கிறார்கள். எளிமை நேர்மை உண்மை இவைதானே விட்டல்ராவ்.
கபாலி கட்டுரையை இப்படி முடிக்கிறார் பாவண்ணன். ‘ ஒரு கதை,அந்தக் கதைக்குள்ள ஒரு கதை, அதுக்குப் பின்னணியா இன்னொரு ஒரு கதை எல்லாமே அருமை’
அடுத்த கட்டுரை இரண்டு ரோஜாப்பூக்கள். ஒரு சமயம் ’சர்வோதயம்’ மலர்கிறது இதழுக்காக லால் பகதூர் சாஸ்திரி பற்றி ஒரு கட்டுரையை பாவண்ணன் எழுதிக்கொண்டிருக்கிறார். விட்டல் ராவ் கை பேசியில் அவரை அழைக்கிறார்.’நீங்க சாஸ்திரியைப் பார்த்திருக்கீங்களா சார்?’ வினா வைக்கிறார் பாவண்ணன். தான் அவரை நேரில் பார்த்திருப்பதாகச் சொல்கிறார் விட்டல் ராவ். ‘உண்மையாவா சார்? யாராவது அழைச்சிட்டு போனாங்களா,,இல்ல நீங்களா பாத்தீங்களா” என்கிறார் பாவண்ணன். அதற்கு விடையாக ஒரு நீண்ட கதை சொல்கிறார் விட்டல் ராவ். பிரசன்ன வெங்கடேசன் என்னும் கும்பகோனத்துக்காரர் தன்னோடு ஆப்ரேட்டராக சென்னையில் பணியாற்றியவர். அந்த நண்பரின் வாழ்க்கையைச்சொல்கிறார் விட்டல் ராவ். பிரசன்னா தொலைபேசியில் இயங்கிய என் எஃப் டி இ தொழிற்சங்கத்தில் தீவிரப் பற்றோடு இருந்தவர். தொழிற்சங்கப் பணியாய் டில்லியில் தாதா கோஷ் பவனுக்கு அடிக்கடிச் செல்வார். அப்படிச் செல்கின்றபோது கோபண்ணா என்கிற காங்கிரஸ் காரரோடு அவருக்கு நெருங்கிய பழக்கம் உண்டாகிறது. அப்படியே சூழலியலாளர் பகுகுணாவோடும் நெருக்கமாகிறார். ஒரு சமயம் லால்பகதூர் சாஸ்திரிக்குத் தமிழ் நாட்டைப்பற்றி ஏதோ அய்யம் வர அதற்கு விடை சொல்லும் முகத்தான் பிரசன்னா அனுப்பப்பட்டிருக்கிறார். சாஸ்திரியோடு பிரசன்னா பேசியிருக்கிறார். அச்சந்திப்பு முடியும் போது இரண்டு ரோஜாப்பூக்களை சாஸ்திரி பிரசன்னாவிடம் வழங்கியிருக்கிறார். அதனைத் தேவலோகத்து மலர்களாய் நினைத்து பிரசன்னா தனது டைரியில் வைத்துப் பாதுகாத்திருக்கிறார். தனக்குத் தெரிந்த எல்லோருக்கும் அதனைப் பெருமையோடு காண்பிக்கவும் செய்தார். அவர்தான் விட்டல் ராவை பிரதமர் சாஸ்திரியின் கூட்டத்திற்கு அழைத்துச்சென்றவர்.
பிரசன்னா நல்ல புத்திசாலி. இலாகா தேர்வு எழுதி ஜே இ பதவிக்குத் தகுதியானார். மேலுள்ள அதிகாரிகள் பயிற்சி வகுப்புக்கு அவரை அனுப்பாமல் முடக்கிப்போட்டார்கள். அதனை எதிர் கொள்ள டிரிப்யூனலுக்குப்போனார். நீதிமன்றத்தில் வென்றார் ஆயினும் அவரை எதோ சாக்கு சொல்லி பயிற்சிக்கு அனுப்பாமல் அதிகாரிகள் காலம் கடத்தினார்கள். வெறுத்துப்போன பிரசன்னா தனக்கு எந்தப் பதவி உயர்வும் வேண்டாமென்று ஆப்ரேட்டராகவே பணி தொடர்ந்தார். வாழ்க்கைத்துணவியாய் ஒரு பெண்ணை மணந்தார். அதுவுமே விளங்கவில்லை. மண வாழ்க்கை முறிந்து போனது. கைக்குழந்தையோடு டில்லி சென்ற மனைவி அவரை முற்றாக மறந்து போனார். பிரசன்னாவைக் குடிப்பழக்கம் தொற்றியது. ஒரு நாள் அனாதையாய் இறந்து போனார். அவரின் இறப்பு நிகழ்வும், சவ அடக்கமும் சோக மயமானது. பிரசன்னாவின் வாழ்க்கையையே விட்டல் ராவ் காம்ரேட் என்கிற நாவலாக எழுதினார்.
‘த் ச் பாவம், பிரசன்னன்தான் பாதி சினிமாவுல எழுந்து போகிற மாதிரி அரை கொறயா வாழ்ந்துட்டு போயிட்டாரு’ என்று உரையாடலை முடிக்கிறார் விட்டல் ராவ்.
மூன்றாவதாக வரும் கட்டுரை எஸ்.வி.எஸ் என்னும் மாமனிதர். பாவண்ணன் சென்னையில் காந்தி கல்வி நிலையத்தில் அ. இராமசாமி எழுதிய ‘தமிழ் நாட்டில் காந்தி’ என்னும் நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்று பேசுகிறார். அது தக்கர் பாபா வளாகம். அவ்வளாகத்தைப் பல்வேறு கோணங்களில் நிழற்படமெடுத்து விட்டல் ராவுக்குக்காண்பிக்கிறார் பாவண்ணன். விட்டல் ராவ் அங்கிருந்த ராஜாஜி நூலகத்தை உருவாக்கிய எஸ்.வி.சுப்ரமணியம் பற்றி உரையைத் தொடங்குகிறார். எஸ்.வி.எஸ் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். காந்தியத் தொண்டர். விடுதலைப்போரில் சிறை ஏகியவர். கல்கியின் நண்பர். சிறு கதைகள் சில படைத்தவர். கல்கியில் துணையாசிரியர். இலக்கியச்சிந்தனை அமைப்போடு இயங்கியவர்.இசையரசி எம் எஸ், திகசி, அசோகமித்திரன் ஆகியவர்களோடு பழகியவர்.
‘ஒவ்வொரு செங்கல்லா வச்சி வீடு கட்டறதுமாதிரி சிறுகச்சிறுக பாடு பட்டு அந்த நூலகத்தை உருவாக்கினார் எஸ்வி. எஸ். துரதிருஷ்ட வசமா அவருடைய மரணத்துக்குப் பிறகு எதிர்பார்த்த அளவுக்கு அந்த நூலகம் சரியா இயங்கல.’ தன்ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார் விட்டல் ராவ்.
மைலாப்பூர் பாரதிய வித்யா பவன் இராஜாஜி பெயரில் ஒரு நூலகம் உருவாக்கி நடத்த முனைந்தார்கள். தக்கர் பாபா வளாகத்தில் இருந்த எஸ்.வி.எஸ் நூலகம் முழுவதுமாய் இராஜாஜி நூலகத்திற்கு இடம் பெயர்ந்து எஸ். வி. எஸ் நூலகம் காணாமல் போயிற்று.
அடுத்து வருவது’ நாற்பது ரூபாய் ’ என்று தலைப்பிட்ட கட்டுரை. விட்டல் ராவும் இயல்பாய் ஒரு ஓவியர். எழும்பூர் கலைப்பள்ளியில் பயின்றவர். பாவண்ணனும் ஓவியம் பற்றி நன்கு அறிந்தவர்தான். மாடலாக ஓவியம் வரைவதற்கு வந்து நிற்கும் எளிய பெண் அவள் உடன் வரும் அவளின் சிறு குழந்தை. மாடலுக்கு நிற்கும் அவள் கை ரிக்ஷா இழுப்பவனின் மனைவி அப்பெண்ணுக்குக் கூலி ஐந்து ரூபாய். அது பற்றி விபரம் சொல்கிறார் விட்டல்.
‘’பொண்ணா இருந்தாலும் சரி, ஆணா இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆர்டிஸ்ட் மனசுக்குள்ளயும் ஒரு பொண்ணுக்கான முகம்,ஒரு ஆணுக்கான முகம்னு தனித்தனியா இருக்கும். அந்த உருவம்தான் ஓவியத்துக்குள்ள வரும். அப்புறம் எதுக்கு மாடல்னு உங்களுக்குத் தோணலாம். அது அந்த குறிப்பிட்ட ஒரு கோணத்துக்காக ஒரு சாயலுக்காக. உடல் வளைவுக்காக. அந்த துல்லியத்தைப் புரிஞ்சிக்கறதுக்காகத்தான் மாடலை நிக்க வைக்கிறது .எந்த மாடலுடைய படத்தையும் எந்த ஸ்டுடியோவுலயும் எந்த ஆர்டிஸ்டும் வரையமாட்டான். அது ஒரு அறம். கண்ணால பார்க்கிற உருவத்துக்கு அவன் தன் நெஞ்சில இருக்கிற உருவத்தைத்தான் கொடுப்பான்’
என்கிற அரிய செய்தியை விட்டல் ராவ் வழி வாசகர்க்குச் சொல்கிறார் பாவண்ணன். அங்கிருந்த எல்லோரிடமிருந்தும் பணம் வசூலித்து ஒரு நாற்பது ரூபாயை அந்த மாடலுக்காக வந்த பெண்ணுக்குக் கொடுத்தனுப்புகிறார்கள் என்கிற நல்ல செய்தியும் கட்டுரையில் வருகிறது.
’பாலர் பாடல்கள்’ என்னும் தலைப்போடு வரும் அடுத்த கட்டுரையில் விட்டல் ராவ் தனது சிறுவயதில் கற்றுக்கொண்ட ஆங்கிலப் பாடல்களை அழகாக ஒப்பித்து அசத்துகிறார்.
‘Cocks crow in the morn
To tell us to rise
And he who lies late
Will never be wise
என்கிற சேவல் பற்றிய பாடல்,
‘Cock a doodle do
My dame has lost her shoe
என்கிற மற்றுமொரு சேவல் பாடல்
‘Her arms across her breast she laid
She was more fair than words can say
Barefooted came the beggar maid
Before the king Cophetua.
என்கிற கோமாளி ராஜா ஒரு பிச்சைக்காரப் பெண்ணை மணக்கும் பாடல் ஒன்று கூட வெளிப்படுகிறது விட்டல் ராவின் மனக்குகையிலிருந்து.
அடுத்து வரும் கட்டுரை’ ஒரே ஒரு சிறுகதை’. இந்நூலுக்குத்தலைப்பாய் அமைந்த கட்டுரை. தினமணியின் ஆழ்ந்த வாசகரான பாவண்ணன் தினமணியில் அம்ஷன் குமார் பற்றியும், சாகித்ய அகாதெமியின் சிறுகதைத்தொகுப்பு பற்றியும் கலாரசிகன் குறிப்பிட்டுள்ளது பற்றி விட்டல்ராவோடு பேச்சுத்தொடங்குகிறார். விட்டல் ராவ் கலைஞன் பதிப்பகத்து மாசிலாமணி யின் ஆலோசனையில் இந்த நூற்றாண்டு சிறுகதைகள் என்னும் தொகுப்பு வேலையை ஆரம்பித்த கதையைச் சொல்கிறார். எழுத்தாளர் ஜெயகாந்தன் மட்டுமே சிறுகதைத் தொகுப்பிலே சேர்ப்பதற்கு தன் கதையைத் தானே தேர்வு செய்தது சொல்கிறார். எழுத்தாளர்கள் பட்டியலை ஜெயகாந்தன் வாங்கிப்பார்க்கிறார். அதனில் இருவர் பெயர் விட்டுப் போயிற்று என்கிறார். பி. ச. குப்புசாமியும், பி. ஸ்ரீனிவாசனும் அந்த இருவர். குப்புசாமியின் கதை கங்கவரம், ஸ்ரீனிவாசனின் கதை திருமணம் என்கிற ஒரு குறிப்பும் தருகிறார். அந்த இருவரின் விலாசமும் தருகிறார். விட்டல்ராவ் ஒரு கடிதம் எழுதிட திருப்பத்தூரிலிருந்து குப்புசாமி கங்கவரம் கதையை அனுப்பி வைக்கிறார். சென்னையிலிருந்த ஸ்ரீனிவாசனை விட்டல் ராவ் நேரில் சென்று சந்திக்கிறார்.’ திருமணம்’ சிறுகதையைப் பெற்றுக்கொள்கிறார். இதுவரை ஒரு தொகுப்புமே போடாத எழுத்தாளர் ஸ்ரீனிவாசனிடமிருந்து இருபது சிறுகதைகளை வாங்கி வந்து அதனை ஒரு தொகுப்பாக்க முனைகிறார் விட்டல் ராவ். அதுதான் நடைபெறவேயில்லை. அந்தப்பதிப்பகத்தாரோ கதைகளைத் தொலைத்தும் விடுகிறார். பதிப்பாளரின் பெயரை விட்டல் ராவ் குறிப்பிடவும் இல்லை. விட்டல் ராவ் தொகுத்த நூறு கதைகளில் ஒன்றாக ஸ்ரீனிவாசனின் திருமணம் இடம் பெறுகிறது. ஆனால் தொகுப்பைக் கண்ணால் பார்க்காமலே மறைந்து விடுகிறார் ஸ்ரீனிவாசன்.
’’ஒரு தொகுப்புக்கான கனவு’ என்று தலைப்பிட்ட கட்டுரையில் பாவண்ணன் வி. கமலா ராவ் பற்றிக்குறிப்பிடுகிறார். கமலா ராவ் என்கிற பெயரில் இரண்டு சிறுகதைகள் ஒன்று ‘பாசம் பிரிவதில்லை’ மற்றொன்று ‘ எஞ்சின் தண்ணீர்’ இவ்விரண்டு கதைகளைப் பற்றி விரிவாகப்பேசுகிறார். பாவண்ணன் விட்டல் ராவிடம் கமலா ராவ் யாரெனக் கேட்கிறார். விட்டல் ராவின் மனைவிதான் அந்த கமலா ராவ். இதனை அறிந்த பாவண்ணன் வியந்து போகிறார். விட்டல் ராவ் தனது மனைவி கமலா ஏழு சிறுகதைகள் எழுதி அவை வெவ்வேறு இதழ்களில் பிரசுரமானதைப் பற்றிக்குறிப்பிடுகிறார். அவைகளைச் சரியாக பாதுகாத்து வைக்காதது பற்றி விட்டல் ராவ் வருத்தப்படுகிறார். அவைகளை எப்படியேனும் தேடிக்கண்டு பிடித்து ஒரு தொகுப்பாய்க் கொண்டு வரலாம் என்கிற உருப்படியானதொரு யோசனையை வைக்கிறார் பாவண்ணன்.
பாகவதரின் பாடல்கள் என்னும் கட்டுரையில் பாவண்ணன் தனது தந்தை பலராமன் தியாகராஜ பாகவதரின் பாடல்களில் எத்தனை ஈடுபாடு கொண்டிருந்தார் என்று தொடங்குகிறார். விட்டல் ராவ் அவரது குடும்பமே பாகவதரின் பாடல்களில் தோய்ந்து போயிருந்ததைக் குறிப்பிடுகிறார். ‘ பவளக்கொடிதான் பாகவதரு முதல் படம். அவருக்கு அதுல ’அர்ஜுனன் நானடி மானேன்னு’ ஒரு பாட்டக்கேட்டு கிறங்காத ஆளே அந்தக் காலத்துல தமிழ்நாட்டுல இல்லை. ஒரே படத்துல அவர் புகழ் உச்சிக்கே போயிட்டாரு’ என்று சொல்லிக்கொண்டே போகிறார்.
கிருஷ்ணகிரியிலேந்து சென்னைக்குப்போகிற வழியில் காட்னாம் பட்டி என்றொரு ஊர் உள்ளது. அங்கு ஒரு மலை முருகன் கோவில். அந்தக்கோவிலில் நிகழும் அன்னதானம், அங்கு ஒரு வாய் பேசாத சாமியார் இருந்தார். அவருக்கு சட்டி சாமியார் என்று பெயர். அன்னதான சட்டியைக் கயிற்றால் கட்டி அதனைத் தன் இடுப்பில் சுற்றியபடி அவர் முருகன் கோவிலை வலம் வருவார். வேறு ஒரு சிவாச்சாரியார் அந்தக்கோவிலுக்கு புதிதாய் வர சட்டி சாமியாருக்கும் அவருக்கும் பிரச்சனை எழுகிறது. அந்தப்புதியவர் சட்டி சாமியாரை விரட்டி அடித்தார். சட்டி சாமியார் ஒரு மலையில் ஏறி விழுந்து இறந்து போகிறார். பிறகு பாகவதர் பற்றிய விபரம் சொல்கிறார் விட்டல் ராவ்.
‘காட்னாம்பட்டியில் முதல் கச்சேரி எப்பவும் கே .பி. சுந்தராம்பாள் கச்சேரிதான்.அருமையா பாடி ஆரம்பிச்சி வைப்பாங்க.அடுத்த நாள் லோகநாதன் கச்சேரி. அதுக்கப்புறம் சி. எஸ். ஜெயராமன் பாடுவாரு. அதுக்கப்பறம் நம்ம தியாகராஜ பாகவதர் வருவாரு’
பாகவதருடைய இரண்டு பாடல்கள், ஒன்று ‘கைமாறு செய்வதுண்டோ- காந்திஜிக்கு கைமாறு செய்வதுண்டோ, மற்றும் ஒன்று ‘காந்தியைப் போலொரு சாந்த சொரூபனைக் காண்பதும் எளிதாமோ’ இவைகளைச் சிறப்பாக விட்டல் ராவ் பாடி முடிக்கிறார்.
’அந்தக்காலத்து நண்பர்கள்’ என்கிற கட்டுரை, விட்டல் ராவுடைய பள்ளிக்கூட நண்பர் சந்திரசேகர் பற்றிப் பேசுகிறது. அவருடைய இறப்பு செய்தியை அவருடைய பிள்ளையே விட்டலிடம் போனில் தெரிவிக்கிறார். அதிர்ந்து போகிறார் விட்டல் ராவ். பாவண்ணனிடம் சந்திரசேகர் பற்றிய முழு விபரமும் சொல்லப்படுகிறது. சந்திரசேகருடைய தந்தை ஸ்ரீகண்டையா. கன்னடம் பேசுபவர். அவருக்கு ஒன்பது குழந்தைகள். அவர்களின் பெயர்கள் தொழில் வாழ்க்கை அத்தனையும் வாசகர்க்குப் பட்டியல் போட்டுத்தருகிறார் விட்டல் ராவ்.
அடுத்த கட்டுரை ’ மகத்தான ரசிகர்’. அக்கட்டுரையில் க. நா. சு வுக்கு ஒரு சமயம் தொண்டை கட்டிப்போன செய்தியையும், அதற்குக் காரணமான நார்த்தங்காய் ஜூஸ் பற்றியும் க. நா. சுவின் மனைவியே அவரிடம் சொன்னதைப் பகிர்கிறார் விட்டல் ராவ்.அந்த மாமி க. நா. சு பற்றி,’ இவருக்குப் புத்தியே இல்லைங்க’ என்று சொன்னதையும், அதனையே யாரோ தனக்கு பெரிய விருது அறிவிப்பு செய்வது போல் க.நா.சு பாவித்துக்கேட்டதையும் அழகாய்ச் சொல்கிறார். வெளி நாட்டுப்பத்திரிகையில் ஆங்கிலத்தில் க. நா. சு எழுதிய கட்டுரைக்கு எழுபது டாலர் சன்மானம் வருகிறது. அதனை ரூபாயாக மாற்றி ஐந்து ரூபாயை மாமிக்குக்கொடுத்துவிட்டு மற்றதை க. நா.சு மசால் தோசை, காபி சாப்பிட்டே முடித்ததை நகைச்சுவையோடு சொல்லிப்போகிறார் விட்டல் ராவ்.
அடுத்த கட்டுரை ’அதிகாரத்தின் கதை’. புகழ்பெற்ற சம்ஸ்கார திரைப்படம் பார்த்த பாவணணன் மறுநாள் விட்டல் ராவைச் சந்திக்கிறார். விட்டல் ராவ் வீட்டில் ஒரு நோட்டுப்புத்தகத்தில் செய்தித்தாள்களின் நறுக்குகள் ஒட்டப்பட்டிருந்ததைக் கவனிக்கிறார் பாவண்ணன். இங்கிலாந்தில் லெய்செஸ்டர் என்னும் இடத்தில் ஒரு கழிவு நீர்க்கால்வாயைச் சுத்தம் செய்தபோது கிடைத்த ஒரு சவப்பெட்டியைப் பற்றிய செய்திக்குறிப்பு ஆர்வமூட்டுவதாக இருந்தது. அந்த சவப்பெட்டியில் இருந்த எலும்புக்கூடு மூன்றாம் ரிச்சர்ட் என்கிற அரசனுடையது என்பதை பல ஆய்வுகளுக்குப்பிறகு கண்டு பிடித்தனர். அதனைச்சகலஅரச மரியாதையோடுமீண்டும் அடக்கம் செய்கிறார்கள். மாபெரும் எழுத்தாளர் ஷே்க்ஸ்பியர் இந்த அரசனை வைத்து மூன்றாம் ரிச்சர்ட் என்கிற பேசப்பட்ட நாடகத்தைப்படைத்தார்.
தொடர்ந்து வருவது ‘தெரிந்ததும் தெரியாததும்’ என்னும் கட்டுரை. இக்கட்டுரை ஓவியம் வரைவோர் பற்றிய கட்டுரை. கல்கத்தா பம்பாய் கேரளம் சென்னை என்று பல்வேறு ஓவியப்பள்ளிகள் குறித்தும் விரிவாகப்பேசுகிறார் விட்டல் ராவ். சென்னை மெரினா கடற்கரையிலுள்ள தேவிபிரசாத் ராய் செளத்ரியின் உழைப்பாளர் சிலை பற்றியும் பேச்சு வருகிறது.சென்னையில் நாற்பத்தைந்து வருஷம் வாழ்ந்த விட்டல் ராவ் ஆர். சூடாமணி என்னும் எழுத்தாளர் மிகச்சிறந்த ஓவியரும் கூட என்பதை அறியாது போனதற்காக மிகவே வருத்தப்படுகிறார்.
விட்டல் ராவ் வாட்டர் கலர் ஓவியம் பற்றி ஒரு வரையறை தருகிறார்.‘வாட்டர் கலர் பெயிண்டிங்கறது சாதாரண விஷயமில்லை பாவண்ணன். ஒரே ஒரு சின்ன ஸ்ட்ரோக் தப்பா போனாலும் மொத்த படமும் வீணாயிடும். திருத்திப்போட வழியே இருக்காது. நாலஞ்சி மடங்கு உழைப்பைப் போட்டாத்தான் நல்லா வரும். அதுல சூடாமணியம்மா ரொம்ப திறமைசாலியா இருந்திருக்காங்க.ஒரே ஊருக்குள்ள ரொம்ப பக்கத்திலே இருந்துங்கூட தவற விட்டுவிட்டேங்கற எண்ணம்தான் வருத்தமா இருக்குது’
கலையின் வெற்றி என்கிற அடுத்த கட்டுரை இல்லுஸ்ட்ரேடெட் வீக்லி ஆஃப் இந்தியா ஆசிரியர் குஷ்வந் சிங்க் பற்றி விரிவாக அலசுகிறது. அவ்வார இதழை உயர்தட்டு மக்களுக்கானது என்பதிலிருந்தும் எல்லோருக்குமானதாக மாற்றியது அவர்தான். இதழில் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு பிரதான பங்களிப்பு தந்தவர் அவரே. யு . ஆர் . அனந்தமூர்த்தியின் சம்ஸ்கார நாவலை ஏ. கே ராமானுஜம் வழியாக மொழிபெய்ர்க்க வைத்து அவர் வெளியிட்டார். எம். டி வாசுதேவ நாயரின் ஒப்போள் என்கிற நாவலையும், தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் என்கிற நாவலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ப்ரிஞ்சால் ஸ்டோரி என்னும் ஒரு புதுமைக்கதையையும் அவர் வெளியிட்டார். ஒரு குண்டு கத்திரிக்காய் ஒருவர் கா;லில் மிதிபட்டுவிட அந்த மிதிபட்ட உருவம் அடுத்தவருக்கு பிள்ளையார் மாதிரி தெரிகிறது. அதுவும் ஒரு பிள்ளையார் கோவிலுக்குக் கொண்டு செல்லப்பட்டு வழிபடப்படுகிறது. பின்னர் அதுவே காய்ந்து குச்சியாகி சிலுவையில் அறையப்பட்ட ஏசுவாய் ஒருவருக்குத் தெரிய அப்படியேயும் வழிபடப்படுகிறது. பிறகு அதுவே ஒரு முஸ்லிம் பெரியவருக்கு, சூஃபி யின் உருவாய்த்தெரிகிறது. அதை எடுத்துப்போய் அவரும் வழிபடுகிறார். எத்தனை அடுக்கு அடுக்காய் கடவுள் பற்றிய சமூக விமரிசனம் செய்து பேசுகிறார் குஷ்வந்த் சிங்க் என்கிறார் விட்டல் ராவ்.
’இரண்டு ஓவியங்கள்’ என்கிற கட்டுரை தொடர்ந்து வருகிறது. எழுத்தாளர்கள் பலர் ஓவியம் வரைவதிலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். தாகூர் பாவண்ணன் விட்டல் ராவ் வே. சபாநாயகம் போன்ற எழுத்தாளர்கள் ஓவியம் வரைவதிலும் மிகுந்த ஆர்வமுடன் இருந்திருக்கிறார்கள். விட்டல் ராவ் ஓவியம் பற்றி மிக ஆழ்ந்த விஷயங்களை கற்றுத்தேர்ந்தவர். இதை அவருடைய படைப்புக்களே உணர்த்துகின்றன. விட்டல் ராவ் இரண்டு ஓவியங்களைப் பற்றிக் குறிப்பிட்டு இக்கட்டுரையில் பேசுகிறார். ஒன்று மெட்ராஸ் வெயில் பற்றிய அழகான ஓவியம். சென்னைக்கோடை வெயில். ஒரு பனை மரம். அதன் நிழலில் ஒரு தம்பதியர். குடை பிடித்துக்கொண்ட அவர்களின் குழந்தைகள் இருவர்.
மற்றொன்று மெட்ராஸ் மழை பற்றிய ஓவியம். ’சோன்னு கொட்டுற மழையில ஒரு தெருவுக்குள்ள பல பேரு சுத்தி சுத்தி நடக்கறாங்க. மழை பெய்யுதேன்னு மத்த ஊருல ஒதுங்கி நிக்கிறமாதிரி மெட்ராஸ்ல யாரும் ஒதுங்கி நிக்கற பழக்கமில்லை.’ என்கிறார். ‘கொட்டோ கொட்டுனு அடிக்குற மழையில ஏராளமான குடைகள் மட்டுமே தெரியற காட்சி அது. யாருடைய முகமும் ஓவியத்துல கிடையாது. அதெ மாதிரி எல்லாருடைய கால்கள்ளயும் விதம் விதமான ஹவாய் செருப்புகள். யாருடைய முகமும் ஓவியத்துல கெடையாது. எல்லாருமே முதுகுப்பக்கம் மட்டுமே தெரியற மனிதர்கள்.’ என்கிற ஓவியம் பற்றிய செய்தி வருகிறது.
’தற்செயல்களும் திருப்பு முனைகளும்’ என்னும் கட்டுரையில் இலங்க வானொலியின் பி. எச். அப்துல் ஹமீத் பற்றி பாவண்ணன் தொடங்கி வைக்கிறார். விட்டல் ராவ் வீணை. எஸ். பாலச்சந்தர் தொடர்பு அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பது பற்றியும், அவரால் ஒரு குடத்துள் இட்ட விளக்காய் இருந்த ஒரு நெல்லூர் மனிதர், விஜயவாடா வானொலியில் எப்படி நிலையக்கலைஞரானார் என்கிற வரலாறு பற்றியும் பேசுகிறார்.
’சிவாவும் ஹரியும் பழைய புத்தகங்களும்’ என்னும் அடுத்த கட்டுரை மவுண்ட் ரோடு கீதா ஹோட்டலுக்குப் பக்கத்தில் ஒரு சிறிய அறையில் பழைய புத்தகக்கடை வைத்திருந்த சிவா பற்றிப் பேசுகிறது. ஆதம்பாக்கத்தில் சூப்பர் மார்கெட் வைத்திருந்த ஹரி என்பவர் புராதனக் கோட்டை கொத்தளங்கள் பற்றி மிகுந்த ஈடுபாடு உடையவர். காமிராக்காரர். அவரும் விட்டலுக்கு நெருங்கிய நண்பரானார். இருவருக்கும் தொல் பொருள் பற்றிய மிகை ஆர்வம் உறவுக்குக் காரணமாகிறது. அந்த ஹரியே பழைய புத்தகக்கடைக்கு விட்டல் ராவை ஆற்றுப்படுத்தியவர்.
அடுத்த கட்டுரை ‘நினைக்கப்படும்’. இதனில் ஜெர்மானிய கதே கால்வி்ட்ஸ் பற்றி விவாதிக்கப்படுகிறது. கால்விட்ஸ் மிகச்சிறந்த ஓவியர். உலகப்புகழ் பெற்றவர். இவருடைய ஓவியங்களையும் அவரே தன்னைத்தான் செதுக்கிய சிற்பத்தையும், தீட்டிய ஓவியத்தையும் சென்னை மாக்ஸ்முல்லர் பவனில் 1967 வாக்கில் கண்டதாகச் சொல்கிறார் விட்டல் ராவ். ஜெர்மனியில் நடந்த இரண்டு உலகப்போர்களும் அவரை வெகுவாகப் பாதித்துவிட்டன. அக்கால ஜெர்மனி துக்கத்தைத்தான் அனுபவித்தது. அந்த துக்கத்தைக் கலையாக மடை மாற்றிய கலைஞர் கால்விட்ஸ். இறந்துபோன ஒரு குழந்தையின் உடலைத்தன் மார்போடு அணைத்திருக்கும் அவரின் ஓவியத்தைக்கண்டு மனம் பதைக்கிறார் பாவண்ணன்.
’அதிசய மனிதரும் அற்புத ஓவியங்களும்’ என்னும் அடுத்த கட்டுரை பிரதிவாதி பயங்கரம் அன்னங்கர ஆச்சாரியார் காஞ்சீபுரம் வீட்டில் காணப்பட்ட செராமிக் ஓவியங்கள் பற்றி வியந்துபேசுகிறது. பெல்ஜியத்திலிருந்து காஞ்சீபுரம் வீட்டுக்கூடத்திற்கு வந்த ராமாயண பீங்கான் ஒவியங்கள் பற்றிக்கேள்விப்பட நாம் வியந்து போகிறோம்.
இறுதியாக இப்புத்தகத்தில் வந்துள்ள கட்டுரை ‘விசித்திரமானவர்கள்’. இது மைசூரில் இருந்த ‘த்வன்யலோகா’ என்னும் கலைஞர்களை ஆதரிக்கும் அமைப்பு பற்றிப்பேசுகிறது. இந்த அமைப்போடு நெருக்கமாய் இருந்த விட்டல் ராவை எண்ணி வாசகன் பிரமித்துப்போகிறான்.’ ஒரு எழுத்தாளனுக்குத் தொடர்ச்சியா நாற்பத்தியஞ்சி நாட்கள் தங்கறதுக்கு த்வன்யலோகாவுல அறை ஒதுக்கிக் கொடுப்பாங்க. சிவராம கரந்த், ஐயப்ப பணிக்கர், ஏ.கே ராமானுஜம்,ஆர்.கே நாராயண். ஜயந்த் மகாபாதரா போன்றோர் அங்கு தங்கி கலைத்தவம் புரிந்திருக்கிறார்கள். ஆங்கிலக் கவி நிசிம் எழிக்கலும் அப்படி வந்து அங்கு தங்கியிருக்கிறார். அவர் விட்டல் ராவுக்கு நெருக்கமாகி இருக்கிறார். நூலகத்தில் படிக்க வாங்கிய புத்தகத்தைத் தன் அறையில் வைத்துவிட்டு மறந்து பம்பாய் போன நிசிம் எழிக்கல் திரும்பவும் மைசூர் த்வன்யலோகா வந்து அதனை நூலகரிடம் ஒப்படைக்கிறார். அவ்வறையில் அப்போது தங்கியிருந்தவர்தான் நண்பர் விட்டல் ராவ்.
’தமிழ் நாட்டுல இப்படி ஒரு அமைப்பு இருந்தா நல்லா இருக்கும். அந்தக்கனவு என்னைக்கு நிறைவேறுமோ தெரியல’ என்று தன் ஆதங்கம் சொல்கிறார் பாவண்ணன். தமிழ் மண்ணில் சாதியும் அரசியலும் அதனைச் சாத்தியமாக்க விடுமா என்ன? என்பது என் வினா.
இந்த நூலை வாசித்த போது இரு பெரு நதிகள் சந்தித்துக்கொண்டு பேசியமாதிரி அல்லவா நான் உணர்ந்தேன்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
