கவிதையில் வரலாற்றுணர்வு

1919ல் வெளிவந்த டி. எஸ். எலியட்டின் ‘மரபும்,தனித்துவத் திறனும்’ என்ற கட்டுரை இலக்கிய உலகில் ஏற்படுத்திய பாரிய பாதிப்பு அனைவரும் அறிந்ததே. குறிப்பாக நீண்ட இலக்கியப் பாரம்பரியம் கொண்ட இந்திய மொழிகளின் கல்விப் புலத்திலும், இலக்கிய வாசகர்களின் மத்தியிலும் அதற்கு இருந்த செல்வாக்கு மிகக் கணிசமானது என்றே சொல்ல வேண்டும். தமிழ்ப் புதுக்கவிதையின் ஆரம்ப கால கட்டக் கவிஞர்களில் குறிப்பிடத் தக்கவரான சி.மணியின் மீது அதன் தாக்கம் இருந்ததாகத் தெரிகிறது. அந்தக் கட்டுரையின் கருதுகோள்களில் முதன்மையானதான வரலாற்று உணர்பு என்பது, கடந்த காலத்தின் கடந்த தன்மையை மட்டுமல்லாது அதன் இருப்பை நிகழ்காலத்திலும் உணர்வதை உள்ளடக்கியதாகும். அந்த வரலாற்றுணர்வு என்பது இருபத்தைந்து வயதுக்குப் பின்னரும் கவிஞனாக இருக்க விரும்புபவனுக்கு அவசியமானது என்றும், தான் எழுதும் மொழியின் பாரம்பரியம் முழுவதையும் கவிஞன் தன் எலும்பில் உணர வேண்டும் என்றும் எலியட் வலியுறுத்துகிறார். அதே சமயம் பாரம்பரியம் என்பது ஸ்வீகரித்துக் கொள்ளமுடியாத ஒன்று என்பதையும், கடுமையான உழைப்பின் மூலமே அதைப் பெற முடியும் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறுவதில்லை.

எலியட்டின் இந்தக் கட்டுரையின் சாரத்தைத் தமிழ் வாசகர்களுக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே பேராசிரியர் ரா.ஶ்ரீ. தேசிகன் எளிமையாக அளித்திருக்கிறார். “சம்பிரதாயம் ஒரு கடல் போலக் காட்சி அளிக்கின்றது. ஆனால் அதில் அடிக்கிற அலைகள் ஒரு புதிய அழகைப் போர்த்துக் கொண்டு தாவி வருகின்றன. இந்த அலைகளுக்கு ஒரு பொருள் கூறுவதாயிருந்தால், கடலை மனத்தில் வைத்துக் கொண்டுதான் சொல்ல வேண்டும். கடலுக்கு ஒரு தனிச் சிறப்பு வருவது கூட மாறிமாறி அடிக்கின்ற அலைகளின் மூலமே என்று மொழியலாம்.” 

பழைய மரபும், புதிய படைப்பும் ஒன்றின் மீது மற்றது ஏற்படுத்தும் தாக்கத்தைத் தமிழில் கம்பரைக் கொண்டு விளக்குகிறார் பேராசிரியர். ‘கம்பரைப் படிந்தோமானால் அவருக்கு முன்பு சென்ற அத்தனைக் கவிஞர்களின் படைப்புகளையும் அறியும் பேறு நமக்குக் கிடைத்ததாகும்’ என்று சொல்லும் பேராசிரியர், சங்கக் கவிதை, ஆழ்வார் பாசுரம், சீவக சிந்தாமணிக் காப்பியம் முதலான முன்மரபுகள் எல்லாம்

இடையறாத ஜீவநதி போல் கம்பரின் கவிதையில் ஓடிக்  கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். இராம காதையால் பழைய மரபு பெறும் புத்துயிர்ப்பையும் அவர் விளக்குகிறார். கம்பருக்கு    முன்பாகவே, நம்மாழ்வாரின் திருவிருத்தத்தில் சங்க இலக்கிய மரபைத் தனதாக்கிக் கொள்ளும் தன்மையைக் காண்கிறோம். விருத்தம் என்ற சொல்லுக்குச் செய்தி என்பது பொருள். ஆழ்வார் பெண்மை நிலையைத் தம்மேல் ஏறிட்டுக் கொண்டு, திருமால் மீதான காதலை நமக்குச் செய்தியாக நூறு பாசுரங்களில் விரித்துரைக்கிறார். சங்க இலக்கிய அகத்திணை மரபை ஒட்டியே தாய்ப் பாசுரம், தலைவிப் பாசுரம், தோழிப் பாசுரம் என்ற வகைகளும், அறத்தொடு நிற்றல், நலம் பாராட்டல், மதி உடம்படுத்தல், நெஞ்சொடு கிளத்தல், கால மயக்கு – முதலான அகத்துறைகளும் திருவிருத்தத்தில் இடம் பெறுகின்றன. சங்க அகத்திணை மரபை ஒட்டியே திருவிருத்தப் பாசுரங்களில் வெளிப்படைப் பொருளும் உள்ளுறைப் பொருளும் பொருந்தி வருகின்றன. அவை முறையே அந்யாபதேசம் என்றும், ஸ்வாபதேசம் என்றும் அழைக்கப்படுகின்றன.

மரபின் இந்த மடை மாற்றத்தை, வெறி விலக்கு என்ற அகப் பொருள் துறை, குறுந்தொகையில் இருந்து திருவிருத்தத்துக்கு இடம் பெயர்கிற போது ஏறிட்டுக் கொள்கிற உரு மாற்றத்தால் உணரலாம். வெறி, வெறியாட்டு என்பன காலம் காலமாகப் பயின்று வரும் சொற்கள் மட்டும் அல்லாது, நடைமுறையில் இன்று வரை தொடர்ந்து வரும் நம்பிக்கைகளும் ஆகும். தலைவியின் உடல் மெலிவிற்கான காரணம் தெரியாத தாய், முருகக் கடவுளின் படிமத்தனாகிய வேலனை அழைத்துப் படையலிட்டு, மறி அடித்து, வெறியாட்டு எடுப்பாள். அருள்வரப் பெற்ற வேலன் நோய்தீர வழி சொல்வான் என்பது நம்பிக்கை. ஆனால் வெறியாடும் வேலன் நம் நோய்க்கு மருந்து அறிய மாட்டான் என்பதைத் தாய்க்கு உணர்த்தி விட வேண்டும் என்று தோழியிடம் தலைவி கூறுவதாக அமைவது, மதுரை ஈழத்துப் பூதன் தேவனின் குறுந்தொகைப் பாடல். 

வெறி என உணர்ந்து வேலன் நோய் மருந்து
அறியான் ஆகுதல் அன்னை காணிய

என்று வெறிவிலக்காகத் தலைவி கூறுவதைச் சில நூற்றாண்டுகளுக்குப் பின் மேலெடுத்துச் செல்கிறார் நம்மாழ்வார்.

சின்மொழி நோயோ கழிபெருந் தெய்வம் – இந் நோயினதென்
றின்மொழி கேட்க்கு மிளந்தெய்வ மன்றிது – வேல நில்நீ
என்மொழி கேண்மினென் அம்மனை மீர்உல கேழுமுண்டான்
சொல்மொழி, மாலயந் தண்ணந்து ழாய்கொண்டு சூட்டுமினே.

என்ற திருவிருத்தப் பாசுரத்தில் வெறியாடுதலைத் தவிர்க்க வேண்டுகிறாள் தோழி. பிரிவுத்துயரால் வாடும் தலைவி

சில பேச்சுகளே பேசுபவள். இவளது நோயோ, மிகப் பெரிய கடவுளான எம்பெருமான் மீது கொண்ட காதலால் உண்டானது. ‘வெறியாடும் வேலனே! நீ சற்று விலகி நிற்பாயாக! தாய்மார்களே ! என் சொற்களைக் கேளுங்கள். பிரளய காலத்தில் ஏழு உலகங்களையும் தன் திருவயிற்றில் வைத்துக் காத்த பெருமானுடைய திருந்துழாய் மாலையை இவளுக்குச் சூட்டுங்கள்’ என்று தாயரிடம் வேண்டுகிறாள் தோழி, அகப்பாடலில் பெயர் சுட்டப் படுவதில்லை என்ற மரபுக்கு மாறாக இங்குத் தலைவராக உலகுண்ட பெருமான் சுட்டப் படுகிறான். நோய் மட்டும் சொல்லும் அகப் பாடலுக்கு மாறாக நோயின் தீர்வும் இங்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அகப்பாடல் மரபு நூற்றாண்டுகள் கழிந்த பின்னும் தன்னை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டுள்ளதைக் காண்கிறோம். அகத்துறைகள் பலவும் உலா, தூது, கலம்பகம் என்று பல்வேறு சிற்றிலக்கியங்களாகப் பிற்காலத்தில் கிளைத்தன. பாரதியாரின் ‘கண்ணன் பாட்’டில் சில

பாடல்கள் அகத்துறை தழுவியவையே. நகுலனின் ‘நாய்கள்’ நாவலில், தேரை சொல்வதாக வரும் கவிதை, நவீனத்துவப் பார்வையில் அகத்துறையைப் பகடி செய்வதாக அமைகிறது.

அகத்துறை

நாலுகால் நாயகனவன்
தன்னிருகால் தரையில் பதிய
இருகால் கைகளாகப் பரவ
நேராக நின்று
தன்புட்டம் புடைத்து நிற்க
தன் வீர்யமும் செளரியம் காட்ட
பரவிய கைகளும்
பரிவுடன் தன் நாயகியை தழுவி நிறுத்த
அதுவும் சலனமற்று வகையாக நிற்க
கூடிய பின்
அவன் வாடி நிற்க
அவளும் ஒருதிசை செல்ல
இவனும் மறுதிசை செல்ல
காதலில் சிக்கிய பின்
அவை கழன்று சென்ற காட்சி கண்டு
கண் விரித்துக் கண்டவரும்
நாயகனாம் நாயகியாம்
நாய் பட்ட பாடு தான்
நாம் பட்ட பாடு;
அவளும் தான்; நானும் தான்
என்று சொல்லிச்
சென்று மறைந்தார்.

தமிழ்க் கவிதை சில குறிப்புகள் - ந.ஜயபாஸ்கரன்

மருதத் திணை

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.