உண்மை கஃபே

ஆங்கிலம் : ஹெலன் ஃபிலிப்ஸ்
தமிழாக்கம் : மைத்ரேயன்
முன்னுரை

இலக்கிய வடிவுகளில் எனக்குப் பிடித்த வடிவமைப்பாகச் சிறுகதையைச் சொல்வேன். தமிழில் சிறுகதைகள் நிறைய இருக்கின்றன என்றாலும், தற்காலத்தில் சிறுகதைகளைப் புத்தகமாக வெளியிட்டால் வாங்கிப் படிப்பவர்கள் அதிகம் இல்லை என்று பிரசுரகர்த்தர்கள் சொல்கிறதை நான் கேட்டிருக்கிறேன். சொல்வனம் பத்திரிகைக்கு நிறையச் சிறுகதைகள் தொடர்ந்து வருகின்றன, அது ஏன் என்பது எனக்கு விளங்கவில்லை. ஒருக்கால் எழுதத் துவங்குகையில் கவிதையில் ஆரம்பித்து, சிறுகதைக்கு மாறி, அதற்குப் பிறகு நாவல்களை எழுதத் தொடங்குகிறார்கள் எழுத்தாளர்கள் என்றிருக்கலாம்.

மொழிபெயர்ப்பாளனாக நான் இயங்கி வந்திருக்கிற சில பத்தாண்டுகளில் இதுவரை ஒரு நாவலைக் கூட நான் மொழி பெயர்க்க முயன்றதில்லை.

நான் நிறையப் படிப்பவையும் சிறுகதைத் தொகுப்புகளே.

தற்கால அமெரிக்க இலக்கியத்தில் (அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இலக்கியத்தைச் சொல்கிறேன்) சிறுகதைகளைத் தொடர்ந்து தருபவை பல இலக்கியப் பத்திரிகைகள். அனேகமாகக் காலாண்டிதழ்களாக வெளிவரும் இவை, சில பத்தாண்டுகளாக எனக்குப் பற்பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கின்றன. அறிமுகம் என்பதால் அவர்கள் எல்லாரும் புதிதாக எழுத வந்தவர்கள் என்று பொருளல்ல. எனக்குத் தெரிய வருவது இப்போது என்ற வகையில் அறிமுகமாகிறவர்கள் இவர்கள்.

சமீபத்தில் நான் படித்த காலாண்டிதழான ப்ளௌஷேர்ஸ் (Ploughshares) என்ற பத்திரிகை பாஸ்டன் மாநகரில் உள்ள எமர்ஸன் கல்லூரியிலிருந்து பிரசுரமாகிறது. 1971 இலிருந்து பிரசுரமாகும் பத்திரிகை, வருடத்தில் நான்கு இதழ்களில் இரண்டு இதில் வேலை செய்யும் பதிப்பாசிரியர்களால் நடத்தப்படுகின்றன. மற்ற இரண்டு இதழ்கள் வெளியிலிருந்து அழைப்பின் பேரில் பொறுப்பேற்று நடத்தும் எழுத்தாளர்கள்/ பதிப்பாசிரியர்களால் கொணரப்படுகின்றன.

இங்கு மொழிபெயர்க்கப்பட்டு அளிக்கப்படும் ‘உண்மை கஃபே’ என்கிற சிறுகதை ப்ளௌஷேர்ஸ் பத்திரிகையின் 2025 ஆம் வருடத்துக் கோடை இதழில் பிரசுரமானது. அழைப்பின் பேரில் பதிப்பாசிரியராக இயங்கிய விக்டர் லாவாலி (Valley என்ற இங்கிலிஷ் சொல்லைப் போல இந்த வாலியை உச்சரிக்க வேண்டும் என்று சொல்கிறார் இவர்.)

இதில் வெளியான இக்கதையை ஹெலன் ஃபிலிப்ஸ் (Helen Phillips) என்பவர் எழுதி இருக்கிறார். ஹெலன் ஃபிலிப்ஸ் பற்றி இப்பத்திரிகை தரும் குறிப்பு சொல்வன இவை: ஹெலன் ஃபிலிப்ஸ் ஆறு புத்தகங்களை எழுதியுள்ளார். சமீபத்துப் புத்தகம் ஹம் (Hum) என்கிற நாவல். முந்தைய நாவல்களில் ஒன்றான ‘த நீட்’ (The Need) என்பது நாட்டின் புத்தகப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒன்று. பல பரிசுகளை வென்றவர். அதிபுனைவுகளுக்கான இடாலோ கால்வினோ பரிசையும் பெற்றிருக்கிறார். நியூயார்க்கர், த அட்லாண்டிக், நியூயார்க் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளில் எழுதியவர். நியூயார்க் மாநகரத்தின் ப்ரூக்லன் கல்லூரியில் (Brooklyn college) பேராசிரியராகப் பணி புரிகிறார். இவரது இரு சிறுகதைத் தொகுப்புகள் பெயர் பெற்றவை. அதிபுனைவுகள் என்று கருதப்படத் தக்க இந்தக் கதைத் தொகுப்புகள்- ஸம் பாஸிபில் சொல்யூஷன்ஸ் (Some Possible Solutions) மற்றும் ’அண்ட் யெட் தே வேர் ஹாப்பி’ (And Yet They Were Happy) எதார்த்தத்தை மீறிய கதைக் களன், மாந்தரைக் கொண்டவை. ஆனால் இவரது தொடர்ந்த கவனிப்புகள் எதார்த்தத்தின் பொக்கை போறைகள் கொண்ட விளிம்புப் பகுதிகளைப் பற்றியவை என்பதால் ஒரு கால் எதார்த்தத்திலும் மற்றது மாற்று எதார்த்தங்களிலும் கொண்டதான விவரணைகள் நிரம்பிய கதைகள் இவை.

இங்கு அளிக்கப்படும் கதை, ‘உண்மை கஃபே’ என்பதும் அப்படிப்பட்ட விளிம்பு நிலை எதார்த்தம்/ மாற்று எதார்த்தம் என்ற தடம் மாறி மாறி இயங்கும் கதையாகவே உள்ளது. இவரது இதர எழுத்துகளை முன்பு படித்திராத எனக்கு, அதிபுனைவுகளை விரும்பிப் படிக்கும் எனக்கு இந்தக் கதை உடனடியாகப் பிடித்திருந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

ஆனால் இந்தக் கதைக்கு அதிபுனைவு என்ற குணத்தைத் தவிர வேறு சில குணாதிசயங்கள் உண்டு. அவற்றைப் பற்றி ஒரு சிறு கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன். அது 351 ஆம் இதழில், இந்த மாத இறுதியில் வெளியாகும்.

இப்போதைக்கு இந்தக் கதையைப் படித்து உங்கள் மறுவினை ஏதும் இருப்பின் எழுதுங்கள். எழுத வேண்டிய முகவரி: solvanam.editor@gmail.com

மைத்ரேயன் (ஆகஸ்ட்/ செப்டம்பர் 2025)


உண்மை கஃபே

பல வருடங்களாகத் துணிவைத் திரட்டிக் கொண்ட பிறகுதான் என்னால் அந்த உண்மை கஃபேக்குப் போக முடிந்தது. ஆனால், ஒருவாறாக நான் அங்கே போய்ச் சேர்ந்த பிறகு, என் வாழ்வில் தெரிய வந்திருந்த பெண்களில் ஒருத்தியை என்னோடு சேர்ந்து கொண்டு அங்கே போக ஒத்துக் கொள்ளச் செய்ய சில வாரங்கள்தான் ஆயின.

வசந்தத்தின் ஒரு காலை நடுவில்,  நானும் அவளும், அந்த கஃபேயின் வெளியே காத்திருந்த பிற ஜோடிகளுடன் நின்றோம். அவளுடைய அடையாளம் வெளிப்படாமல் காப்பதற்காக, அவள் யாரென்பதை – என் சகோதரியா, கணவரின் சகோதரியா, அல்லது தோழியா, ஒன்று விட்ட சகோதரியா, இல்லை வேலையில் சக ஊழியரா?- நான் சொல்லப் போவதில்லை. அவளோடு நெருக்கமாக இருக்க நான் விரும்பினேன், மற்றவர்களோடும் அப்படி இருக்க ஆசைப்பட்டேன்; வழக்கமானதால் சலித்துப் போன என் வாழ்வுப் பாணிகளிலிருந்து விடுபட விரும்பினேன். நிச்சயமாக நாங்கள் கலக்கத்தோடுதான் இருந்தோம், புதிதாக எங்களுக்கிடையே ஒரு கூச்சம் எழுந்திருந்தது, அங்கே நின்ற இதர ஜோடிகளைப் போலவே, ஒருவரொருவர் முகம் நோக்குவதையும் தவிர்த்தபடி நின்றோம். 

மனதிற்கு ஆறுதலளிக்கும் ஃபெர்ன் செடிகளை,  நீண்ட ஃபெர்ன்களை, கஃபேயின் முன்வாயிலருகே குள்ளமான மரத் தொட்டிகளில் யாரோ நட்டிருந்தார்கள், ஆனால் அவற்றில் எனக்கு நிம்மதி கிட்டவில்லை. 

பச்சை நிறத்தில், வட்டவடிவில், தேவதைகளின் கதைகளில் வருவது போலிருந்த கதவு திறந்தபோது, நாங்கள் பார்த்த இடம் சாதாரணமான கஃபே போலத்தான் இருந்தது. வலுவான மரத்தாலான தரைத் தளங்கள், காஃபிக் கறை படிந்த பத்திரிகைகள், தகரத்தால் ஆன மேல்தளங்கள், பழைய பால் குடுவைகளில் வாடிக்கொண்டிருந்த டெய்ஸிப் பூங்கொத்துகள்.  வழங்கு மேடையின் பின்னே இருந்த பெரிய அறிக்கைப் பலகையில் கூட்டெழுத்துகளில் உணவுப் பட்டியல் இருந்தது. பானம் வழங்கும் பெண்ணிடம் மின்னும் கண்கள், கச்சிதமாகத் தோல் துளைக்கப்பட்டு அணியப்பட்ட ஆபரணங்கள், பச்சை குத்தல்கள். 

அவள் என்ன வாங்குவாள் என்று எனக்குத் தெரிந்திருந்ததோ அதையே சரியாக என் தோழி கொணரச் சொன்னாள், நான் என்ன வாங்குவேன் என்று அவளுக்குத் தெரிந்திருந்ததையே சரியாக நானும் கொணரச் சொன்னேன். 

சாதாரணமான விலைகளை விட விலைகள் மிகவுமே அதிகமாக இருந்தன. நாங்கள் குறையேதும் சொல்லாமல் கொடுத்தோம், எங்கள் ரசீதுகளில் கையொப்பமிட்டோம்.

நீல நிற அடித்தட்டுகள் மீது வைத்த நீல நிறக் கோப்பைகளில் எங்கள் பானங்களை, அவை ஆடி விழுந்து விடாமல் கவனமாகத் தாங்கியபடி (உண்மை கஃபேயில் நாம் கையோடு எடுத்துப் போகும் கோப்பைகள் இல்லை), ஒரு குறுகிய கூடத்தின் வழியே இன்னொரு பச்சை நிறக் கதவைப் பார்க்க நடந்தோம், அது ஒரு வெளி முற்றத்திற்குத் திறப்பு வாயில். 

வெளி முற்றம் சிறியது, அதைச் சுற்றி ஐவி கொடிகள் படர்ந்திருந்தன, இருவர் அமரும் மேஜைகள்- வானத்து நீல நிறம் பூசப்பட்டவை- இருந்தன. அதன் நடுவில் ஆந்தை உருவச் சிலையோடு நீரூற்று இருந்தது, ஓடுகிற தண்ணீரின் ஒலி கேட்டது. பேச்சேதுமில்லாது ஒரு மேஜையை இருவரும் தேர்ந்தெடுத்து அமர்ந்தோம். உண்மை கஃபேயின் முன்னால் சந்தித்ததிலிருந்து இது வரை இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசியிருக்கவில்லை. மேஜை மீது கொண்டு வந்த பானங்களை வைத்து விட்டு, எங்கள் நாற்காலிகளில் அமர்ந்த போதும், ஒரு வார்த்தை கூடப் பரிமாறிக் கொள்ளவில்லை. 

‘அப்புறம்,’ என்றேன் கடைசியாக. 

‘அப்புறம்,’ என்றாள் அவள். 

ஒருவரோடொருவர் சகஜமாக இருந்தோம், பல வருடங்களாகவே இப்படி இருந்திருக்கிறோம், ஆனால் இப்போது அப்படி இல்லை. 

அவள் தன் பானத்தை உறிஞ்சினாள், நான் என் பானத்தை உறிஞ்சினேன்.

அவள் முகபாவத்தைப் புரிந்து கொள்ள முயன்றேன். முன்னொரு தடவை, வலைவெளியில் கிட்டிய சோதனைப் பயிற்சி ஒன்றை முயன்றிருந்தேன். பிற நபர்களின் முகபாவங்களைக் கொண்டு, அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிவதில் எத்தனை தேர்ச்சி இருக்கிறது என்று சோதிக்கும் பயிற்சி அது. அதில் பத்துக்கு ஏழு கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்திருந்தேன்.  மீதி 30 சதவீத நேரம் விடை தெரியாமல் தத்தளித்தேன். 

நான் மறுபடி உறிஞ்சிக் குடித்தேன், அந்த பானத்துக்கு என் மீது ஏதோ தாக்கம் இருந்ததாகவும், என் பார்வையில் பிரகாசம் கூடியதாகவும், என் ரத்த ஓட்டத்தில் விறுவிறுப்பு ஏறியதாகவும் கற்பனை செய்து கொண்டேன், அது கற்பனை மட்டுமே. 

நாங்கள் எங்காவது ஆரம்பிக்க வேண்டியிருந்தது, அதனால் ஒருவர் பெயரைச் சொல்லி அவரைச் சமீபத்தில் பார்த்திருந்தாளா என்று கேட்டேன்.

மறுவினையாக அவள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள், அதற்கு நான் ஒரு எண்ணிக்கையைத்தான் விடையாகக் கொடுக்கத் தேவையாக இருந்தது. 

நான் பதிலுக்கு இன்னொரு கேள்வி கேட்டேன், அதற்கு விடையாக ஒரு ஒலிப்பு போதுமானதாக இருந்தது. 

இப்படியே தொடர்ந்தோம், நாங்கள் தொடர்ந்து உரையாடத் தெரியாமல் தத்தளித்த போது, மற்ற ஜோடிகள் என்ன முன்னேற்றத்தை அடைந்தார்கள் என்று வியந்தபடி, அவர்களுடைய உரையாடல்களைக் கேட்க இருவரும் உன்னிப்பாக இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ளாமல் இருக்க இருவரும் முயன்றோம். 

எங்களுக்கு மேலே சூரியனின் கோணம் மாறியது. 

நாங்கள் முன் போலவே பேசிக் கொண்டிருந்தோம், நான் பாதியைத்தான் செவி கொடுத்துக் கேட்டேன், ஆனால் அவள் திடுமென்று எதையோ சொல்லத் துவங்கினாள், அது ஒரு ரகசியம், என் சலிப்பு போன இடம் தெரியாமல் மறைந்து விட்டது. 

அவள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு மோசம் செய்ய முடியாது, எனவே கீழே உள்ளதில் அவளை எங்கோ ஒளித்திருக்கிறேன். அவளுடைய குழந்தைகள் இருவரும் ஆறு வயதுக்கும் குறைவானவர்களாக, சிறியவர்களாக இருக்கையில், அடங்காமல் கூட்டாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்ததால், இருபது நிமிடங்கள் அவர்களைத் தனியே வீட்டில் விட்டு விட்டு, தெருக்கோடியில் இருந்த பார் ஒன்றில் பியர் அருந்தப் போயிருக்கிறாள். பதின்மூன்று வயதாயிருக்கையில் உடல் எடைபற்றிய மனவியாதி பீடிக்கப்பட்டு உணவு மீது துவேஷம் கொண்டிருந்தவளான அவள், காரட்களை மட்டும்தான் சாப்பிட்டாள்; ஏகப்பட்ட காரட்களைச் சாப்பிட்டதால் அவளுடைய தோல் நிறமே சிறிது ஆரஞ்சு நிறமேறி இருந்தது; உடனே காரட்கள் சாப்பிடுவதை நிறுத்தினாள், ஆனால் இன்று வரையும் தன் தோலின் நிறம் ஆரஞ்சு சாயமேறி இருக்கிறதா என்று அச்சத்தோடு சோதிக்கிறாள்; சில நேரம் ஓரிரண்டு காரட்களைச் சாப்பிடவும் செய்கிறாள். அவளுக்குப் பதினோரு வயதிருக்கும்போது அவளுடைய செல்லோ ஆசிரியர் அவளுடைய இன்னும் வளர்ச்சியேதும் அடைந்திராத மார்பையும், அவளுடைய பிருஷ்டத்தையும் இரண்டு அடுத்தடுத்த செவ்வாய்க் கிழமைகளில் தொடுகிறார்; அவள் யாரிடமும் இது பற்றிச் சொல்லவில்லை என்றாலும், செல்லோ வாசிப்பதை நிறுத்தி விடுகிறாள், அப்படி நிறுத்தியதைப் பற்றி அவளுடைய பெற்றோர் இன்னமும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஏனெனில் அந்த வாத்தியத்தை திறமையாக வாசிக்க அவளுக்கு முடிந்திருந்தது. அவளைப் போதையடிமையாகச் சித்திரிக்கும் ஒரு முழுதும் பொய்யான வரலாற்றை அவள் உருவாக்கக் காரணம் அது அவளை சுவாரசியமானவளாகக் காட்ட உதவியது என்பதுதான்; போதைப் பழக்கத்திலிருந்து விடுபட முயல்பவர்கள் பரஸ்பரம் உதவிக் கொள்ளக் கூடும் கூட்டங்கள் நடந்த மாலைகளில் அவள் சுரங்க ரயிலில் இலக்கின்றி அங்குமிங்கும் பயணம் செய்து கொண்டிருந்தாள். அவளுடைய ஆண் நண்பன் எப்போதும் அவளைச் சகிக்க முடியாதவளாகவும், போலியானவளாகவும், சுய நம்பிக்கை இல்லாதவளாகவும் பார்த்து வந்திருந்தான். அவளுடைய கணவனோ என்னை அடைய விரும்பினான், அவளுடைய முலைகளைச் சுவைக்கும்போது என் முலைகளைச் சுவைக்க விரும்புவதாக அவளிடம் சொல்வான், அது ஒவ்வொரு தடவையும் அவளை உச்ச நிலையை அடைய வைக்கும். மிருக வைத்தியரான ஒரு பெண்ணை அவள் காதலித்தாள், அவள் வேலை நிமித்தம் போவதாகச் சொல்லிச் செய்த பயணங்கள் எல்லாமே அந்தப் பெண்ணோடு போன குதூகலத் தப்புதல்கள்தாம்; கணவனை விட்டு நீங்கவே அவள் முயன்றாள், ஆனால் நாயைத் தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்பினாள்; பூமியில் வேறு யாரையும் விட அந்தப் பெண்ணைத்தான் அவள் அதிகம் விரும்பினாள். சில நேரம், அவளுடைய மனக் கவலை அளவு மீறிப் போகும்போது,  சமையலறையில் எரிவாயு அடுப்பை அணைத்திருக்கிறோமா என்று சோதிக்க ஐந்து தடவையாவது திரும்பத் திரும்ப வீட்டுக்குள் ஓடிப் போய்ச் சோதித்த பிறகே அவளால் கட்டடத்தை விட்டுப் போக முடியும். அவளுடன் கூடி வாழ்கிறவனை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்பது அவளுக்கு நன்கு தெரியும்- தன் முடியை அவன் தடவிக் கொண்டே இருப்பதும், எளிதில் புரிபடாத தொழில் முறைச் சொற்களை அவன் விரும்பிப் பயன்படுத்துவதும், பிறகு அவற்றுக்கு விளக்கம் கொடுக்க நேர்வதும்- அவனை வசீகரமானவன் என்று என்னால் பார்க்க முடியாதது அவளுக்குப் பல வருடங்களாக மனவருத்தம் தந்திருந்தது. என் கணவனின் நடத்தை, ஏதோ மற்றவர்கள் யாருடனும் தொடர்பற்ற வேறொரு தளத்தில் இருப்பவனைப் போல, தொலை தூரத்தையே துளைத்து நோக்கும் அவன் பார்வை, அடிக்கடி அவன் கடைப்பிடிக்கும் மௌனம், அதெல்லாம் அவளுக்கு எப்போதுமே எரிச்சலூட்டி இருக்கிறது. அவர்கள் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம், வந்திருப்பவர்களை லட்சியம் செய்யாதவளைப் போல ஒவ்வொரு தடவையும், கடையில் வாங்கி வரும் பீட்ஸாவையே சாப்பிடக் கொடுக்கிறேன் என்பது பற்றி அவள் வெறுத்துப் போயிருந்தாள். என் குழந்தை வளர்ப்பு முறையை அவள் பாராட்டியபோதெல்லாம் நிஜத்தில் அவள் அதை விமர்சனம் செய்யவே நினைத்திருந்தாள்- கிண்டர்கார்ட்டன் பள்ளிக்குப் போகிற குழந்தைகளிடம் சாவு என்பது உண்மையில் என்ன என்று சொல்லி அவர்கள் மனத்தைக் களங்கமாக்குவோர் என்ன மாதிரி மக்கள்? அவளுடைய சகோதரன் இறந்த பிறகு, தன் துக்கத்தை என்னிடம் சொல்லக் கூட அவளுக்கு முடியவில்லை, ஏனெனில் அவளுடைய துயரத்தைப் பற்றி நான் அவளைக் கேட்டபடியே இருந்தது, அதைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் மட்டு மீறிய ஆர்வம் கொண்டிருப்பது போல, அதை என்னுடைய துக்கத்துக்குத் துணையாக்கலாம் என நான் நினைப்பது போல அவளுக்குத் தெரிந்திருக்கிறது. என் மகனின் கோரிக்கைகளும், அவனுடைய பொறுமையற்ற குணமும் அருகாமையில் அவன் இருப்பதையே விரும்பாதவளாக அவளை ஆக்கி இருந்தன. 

இப்படியே பலதும்.

ரகசியங்கள், புரிகிறதில்லையா?

அப்புறம் நானும், அதே போலப் பேசினேன். நானும் செய்ய வேண்டி வந்தது. 

அதைப் பற்றிப் பேச இது இடமில்லை. 

எங்கள் பானங்களின் கடைசி சொட்டுகள் வரை குடித்திருந்தோம். 

ஒரு வழியாக நாங்கள் வந்த வேலையை முடித்தோம். 

நான் கொஞ்சம் புண்பட்டிருந்தேன், தவிர சிறிது ஏமாற்றமும் அடைந்திருந்தேன். 

நான் எதிர்பார்த்திருந்த மாதிரியான தளையுடைத்து உயர்வடையும் நிலைக்கான அறிகுறியேதும் கிட்டவில்லை.

வெளிமுற்றத்திலிருந்து குறுகிய நடைக்குள் நுழைந்து, அந்தக் குறுகலான நடையிலிருந்து கஃபேயின் உள்ளே சென்று, கஃபேயிலிருந்து தெருவுக்கு நடந்த போது நினைத்தேன், ஒருக்கால் நான் ரொம்பவே காலம் தாழ்த்தி விட்டேன், நிறைய வருடங்கள் ஆகி விட்டன போல என்று. மிக அதிகமாக எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டிருந்தேன் போல. 

நடைபாதையில் நாங்கள் விடை பெற்றுக் கொண்டோம். ஒரு முறை அணைத்துக் கொள்ளலாமா? மிகச் சிறிய தயக்கத்துக்குப் பிறகு, சரியென்று செய்தோம். உண்மை கஃபேயில் கட்டணத்துக்கான ரசீதில் கையெழுத்திடும்போது நாம் பொறுப்பு விலக்கத்திலும் கையெழுத்திட வேண்டும். மனத்தாங்கல் ஏதும் கொள்ளக் கூடாது. வெறுமனே எழிலான உண்மையை மட்டுமே. அவளிடம் என்னால் ஒருக்கால் எழுப்பப்பட்ட உறுத்தல்கள், வெறுப்புகள் எல்லாம், அவை நியாயமானவையாக இருந்தாலும், ஒதுக்கப்பட வேண்டும்.

‘குட் பை,’ என்று என் வாழ்வில் முக்கியமானவளான அந்தப் பெண்ணிடம் சொன்னேன். 

 ‘குட் பை,’ என்று அவளும் சொன்னாள், ஏதோ எங்கள் உறவு எந்த மாற்றமும் இல்லாமல், அல்லது அனேகமாக ஏதும் மாற்றமில்லாமல் தொடரும் என்பதைப் போல. 

ஏமாற்றமடைந்த உணர்வு தொடர்ந்தது. அவளுடைய ரகசியங்கள் காயப்படுத்துவதாக இருந்தன என்பது. அவை மிகவும் சகஜமாக நடக்கக் கூடியவையாக இருந்தன என்பது. என் ரகசியங்களை நான் வெளியே சொன்னதால் எனக்கு அவற்றிடமிருந்து விடுவிப்பு ஏதும் கிட்டவில்லை என்பது. முன்பு இருந்ததை  விடக் கூடுதலாக அவளோடு நெருங்கி விட முடியவில்லை என்பது. நாங்கள் இருவரும் பரஸ்பரம் திறந்த மனம் கொண்டவர்களாக ஆகி விடவில்லை என்பது. 

சில தினங்கள் கழித்து இன்னொரு பெண்ணோடு வேறொரு கஃபேக்கு நான் சென்றேன். சாதாரணமான கஃபேதான். பானங்களின் விலை எக்கச் சக்கமாக இல்லை, வெளி முற்றம் ஏதுமில்லை, ஆந்தை நீரூற்று இல்லை. நாங்கள் சந்தித்துப் பல மாதங்கள் ஆகி இருந்தன. அவளுக்கு ஏற்பட்டிருந்த தர்ம சங்கடமான நிலை ஒன்றைப் பற்றி அந்தப் பெண் நீளமாகப் பேசிக் கொண்டிருந்தாள், பேசும்போது சிறு வெள்ளி ஸ்பூனால் உலோக மேஜை மீது தட்டியபடி இருந்தாள், அவள் பேசியதைக் கவனித்துக் கேட்க என்னால் முடிந்த மட்டில் முயன்று கொண்டிருந்தேன், ஆனால் என் கவனம் அவளுடைய உதடுகளின் அசைவுகளால் கலைக்கப்படுவதை நான் அறிந்தபடி இருந்தேன், அவற்றை நான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன், அவை உண்டு பண்ணிய ஒலிகளைக் கவனித்தேன், வெளிப்பட்ட வார்த்தைகளை என்னவோ லட்சியம் செய்யவில்லை.  

எதுவும் நடக்கவில்லை, ஊஷ் என்று சத்தம் ஏதும் எழவில்லை, பெரிய துளையினுள் சறுக்கிக் கொண்டு விழுவது போலவெல்லாம் இல்லை. 

என்னவென்றால் நான், திடுமென அவளுக்குள் இருந்தேன். அல்லது அவளாக    இருந்தேன். 

என் (அவள்) உதடுகள் முன்போலவே அசைந்தன. என் (அவள்) விரல்கள் வெள்ளிக் கரண்டியைத் தட்டின. என் (அவள்) வயிறு அமிலத்தால் கடையப்பட்டுக் கொண்டிருந்தது. 

அந்தச் சிறு மேஜையின் எதிர்ப்புறம், எனக்கு (அவளுக்கு) எதிரே, என் உரு. என் வெற்றுப் பார்வை என் (அவள்) தாடைக்குச் சற்று மேலே பதிந்திருந்தது. என் கண்ணிமைகளின் மேல், தினம் காலையில் கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கும்போது கொஞ்சம் கவலையைக் கொடுத்த, பல மாதங்களாக அகற்ற வேண்டுமென்று நான் நினைத்திருந்த, மூன்று சிறு வெண்கொப்புளங்கள் தெரிந்தன. என் முகம் நான் உத்தேசித்ததை விடக் குறைவாகவே கனிவாகத் தெரிந்தது. என் தோல் என்னுள்ளிருந்து புலப்பட்டிருந்ததை விடக் குறைவாகவே வழவழப்பாகத் தெரிந்தது. என் உடல் அமைப்பு இன்னும் கொஞ்சம் மேலானதாக இருந்திருக்கலாம், என் சட்டையில் சிவப்பான சிறு கறை ஒன்று இருந்தது, அது எனக்கு (அவளுக்கு) கொஞ்சம் அருவருப்பைத் தந்தது. 

அது என்ன கறையாக இருந்தாலும், அவளுக்குள்ளிருந்து அவளுடைய கையை நீட்டி, அந்தக் கறையை அகற்ற எழுந்த விருப்பத்தை என்னால் தடுக்க முடியவில்லை.  

(அவள்) என்னைத் தொட்ட போது, நான் எந்த மறுவினையும் காட்டவில்லை. நான் வெற்றாக இருந்தேன், என் தோழி அதைக் கவனித்தாளா என்று யோசித்தேன், எதிரே இருந்த பாவமான வெறும் கூட்டை விட்டு விட்டு அவளுக்குள் நான் நுழைந்திருக்கிறேன் என்று அறிந்தாளா?

ஆனால் நல்ல வேளையாக, அவளுடைய சங்கடநிலை அவளுடைய எல்லா எண்ணங்களையும், கவனத்தையும் இழுத்துக் கொண்டது, இன்னும் சொன்னால் அவள் கூடுதலாக அந்தப் பிரச்சனையைப் பற்றித் தீர யோசிக்க முனைந்திருந்தாள். 

அவளுக்குள் இருந்த நானும், அவளுடைய பிரச்சனை கவனிக்கப்பட வேண்டும் என்ற உந்துதலைக் கூடுதலாக உணர்ந்தேன், அதாவது அவளுக்கு வெளியே இருந்தபோதை விடக் கூடுதலாக. இப்போது நானும், அந்த மின்னஞ்சலை (ஃபோனைத் திரும்ப எடுத்துக் கொண்டு, அவளுடைய மின்னஞ்சலைத் திறந்து, ஃபோனை மறுபடி மேஜை மீது நான் அதைப்  ‘பார்ப்பதற்காக’ வைத்து), அந்தப் பிரதியின் சரியான அர்த்தத்தைப் பிரித்து மேய விரும்பினேன் (மேஜை மீதிருந்த அவளுடைய செல் ஃபோனை, என்/ அவள் கை நான் இத்தனை காலம் குடியிருந்த அந்தக் கூட்டிடம் நீட்டிக் கொண்டிருந்தது). அவளுடைய தாடையில் ஒரு இறுக்கத்தை, அவளுடைய தொண்டையில் அடக்கப்பட்டிருந்த அழுகையை, நான் உணர்ந்தேன் (எனக்கு அது பற்றி முன்பு ஏதும் தெரிந்திருக்கவில்லை). 

ஒரு எச்சரிக்கையும் இல்லாமல், திடீரென்று நான் அவளிடமிருந்து வெளியேற்றப்பட்டு விட்டேன். என் உடலுக்குத் திரும்பியிருந்தேன், நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் கண்ணிமையில் இருந்த மூன்று வெள்ளை முடிச்சுகளைத் தொட்டுப் பார்த்தேன். அவளுடைய செல்ஃபோனில் இருந்த மின்னஞ்சலைப் படித்தேன். அந்தப் பிரதியை மறுபடி பார்க்கக் கேட்டேன். அவளோடு சேர்ந்து அதைப் பற்றி கருத்து ஆய்வு செய்தேன். அவளுடைய தொண்டை அடக்கப்பட்ட அழுகையால் இன்னமும் இறுகியே இருந்ததா என்று யோசித்தேன். நாங்கள் எழுந்த போது, அவளைச் சிறிது நேரம் கூடுதலாக அணைத்து நின்றேன், என் விரல்கள் அவள் முதுகில் உணர்ச்சிப் பெருக்கோடு விரிக்கப்பட்டிருந்தன, அவள் திமிறி விலகும் வரை அப்படி இருந்தேன். 

அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு இந்த சம்பவத்தைப் புரிந்து கொள்ள நான் முயற்சித்தேன். இது எப்படி நடந்தது என்று எனக்குப் புரியவில்லை, அல்லது அது நடந்ததா என்பது கூட உறுதியாக இல்லை. ஆனால் அவளுடைய தாடையின் இறுக்கம் என்னுள் தேங்கி இருந்தது. 

நான் சிந்தனையில் மூழ்கி இருப்பதை என் குடும்பம் கவனிக்காமல் இல்லை. என் கணவர் என் கவனத்தை ஈர்க்க முயன்றார், முதலில் சீண்டிப் பார்த்தார், பின் கிண்டல் செய்தார். என் மகனோ அதிகப்படுத்திய சலிப்போடு பெருமூச்சு விட்டான், அந்தச் சைகையைச் சமீபத்தில் கச்சிதமாக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய அப்பாவைப் போல நான் உளைச்சலில் சிக்கி இருப்பதை அப்படியே விட அவன் தயாராக இல்லை, வீட்டுப் புழங்கு அறையில் அவனோடு ஆரஞ்சுப் பந்து ஒன்றை வீசி விளையாடும்படி கெஞ்சி நான் இணங்கும்வரை விடவில்லை. 

ஆனால், வேறேதும் நடக்கவில்லை. இருந்தபோதும், திடீரென்று அவனுடைய கைகளால் நான் பந்தைப் பிடிக்கத் தொடங்கினேன், அவன் கைகளால் பந்தைப் பிடிப்பதில் தத்தளித்தேன். என்னுள் பந்துக்காக ஆவேசமான ஆசை எழுந்தது, அம்மாவுக்காகவும் ஆசை, பந்தும் அம்மாவும் எப்போதும் என் திக்கில் குறி வைக்கா விட்டால் நான் உருத் தெளிவில்லாமல் போவேன், கண்ணுக்குத் தெரியாமல் போவேன், என் உடலின் வெளி உரு கரைந்து விடும், பூமியின் மேலிருந்து நான் விழுந்து எங்கோ போய் விடுவென் என்ற அச்சம் என்னுள் எழுந்தது. நான் (அவன்) ஆரஞ்சுப் பந்தை மீட்டெடுத்து, வெறும் கூடாக இருந்த என்னை நோக்கி காஃபி மேஜையைத் தாண்டி வீசினேன், பந்து என் (அவன்) கையை விட்டுப் போகும்போது என்னை நானே வெறுத்தேன், ஏனெனில் என் உடல் வெறுமையாக இருந்தது, அது பந்தைப் பிடிக்க முடியாதிருந்தது, பந்து அங்கு ஒரு மேடையில் இடித்து விழுந்தபோது, உலர்ந்த யூகலிப்டஸ் இலைகளால் நிரப்பப்பட்டு இருந்த, ஒரு பழமையான வஸ்துவாக சேமிக்கப்பட்டிருந்த கோகொ கோலா பாட்டில் நொறுங்கி விழுந்தது. 

‘அம்மா!’ நான் (அவன்) இரைந்தேன். 

அப்போது நான் மறுபடி என்னுள் வந்து விட்டேன், பந்தைச் சரியான நேரத்தில் பிடித்தேன், அவனை ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரித்தேன், சில எட்டுகள் எடுத்துப் பின்னே போய், ஒரு துடைப்பத்தை எடுத்து வந்து, நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேன், அவனுடைய உருவத்தின் விளிம்புகள் உறுதியாகத் தெளிவாக இருக்கின்றன, அவன் பூமியிலிருந்து விழுந்து விடமாட்டான் என்று சொன்னேன். 

அச்சமூட்டும் விதத்தில் அடிக்கடி இதெல்லாம் நடக்க ஆரம்பித்தது. என் மகனின் உடலில், அவனுடைய இரு நண்பர்களுடன், புல் தரையில் நான் கிடந்தேன், நான் (அவன்) என் (அவன்) விருப்பப் பாடல் ஒன்றை அறிவித்தபோது, அவர்கள் இருவரும் அந்தப் பாடலைக் கேலி செய்தார்கள். அப்போது கடுமையான வெட்க உணர்வு எழும்போது நான் வெளியேற்றப்பட்டிருந்தேன். 

என் கணவரின் உடலில், யாரும் இல்லாத என் உடலை உச்சநிலைக்குக் கொணர நான் முயன்று கொண்டிருந்தேன், எனக்கு உச்ச நிலை வர முடியாது என்பது தெரிந்து என் (அவருடைய) சலிப்பைத் தீவிரமாக உணர்ந்தேன் 

மிக நெருக்கடியான ஒரு தெருவில் பஸ்ஸை வேகமாகத் திருப்பிக் கொண்டிருந்த ஒரு பஸ்ட்ரைவருக்குள் நுழைந்தேன், அவளுடைய பசியை, யாருடைய வாசனைத் தைலத்தாலோ (அவள்) பட்ட அவதியை, வேலை முடிந்ததும் அவள் அம்மா வீட்டுக்குப் போய் ஒரு கொடியை மேலே தொங்க விட வேண்டி இருப்பதைப் பற்றிய (அவளுடைய) எரிச்சலை உணர்ந்தேன். ஒரு தோல் சிகிச்சை நிபுணருக்குள் சில வினாடிகள் நுழைந்தேன், கவலையோடு, ஆனால் வேறேதும் உணர்ச்சியில்லாமல் கீழே எதிரே படுத்திருந்த ஒரு பெண்ணின் கண்ணிமையில் இருந்த மூன்று வெள்ளைக் கொப்புளங்களை நீக்குவதற்காக, ஒரு கூர்மையான கருவியை எடுக்கக் கை நீட்டும்போது, என்னுள் (அவளுள்) இருந்த பெருஞ்சலிப்பையும், ஆனால் மரியாதை கருதி நான் (அவள்) முகத்தில் தரிக்க வேண்டிய புன்சிரிப்பையும் உணர்ந்தேன். தெருவில் நடைபாதையின் மீது ஒரு ஸ்கூட்டரை ஓட்டிப் போன ஒரு குழந்தைக்குள் நுழைந்தபோது,வலது காலால் தரையில் அழுத்தி உந்தி, எதிர் காற்றை உருவாக்கியபடி, உச்ச நிலைக் குதூகலத்தை உணர்ந்தேன், ஆனால் அந்தக் குழந்தைக்குள்ளிருந்து நான் வெளியேறி என் உடலுக்குத் திரும்பியபோது ஏதோ நடந்தது, அந்த ஸ்கூட்டர் எதிலோ சிக்கியது, கவிழ்ந்தது, ரத்தக் காயமான முழங்கால், தூரத்தில் கூவிய அப்பா, ஆனால் நான் அந்த வழியே கடந்து போகும் ஒரு பயணியாக மட்டுமே இருந்தேன். 

என் அம்மா என் வீட்டுக்கு வருவதைத் தவிர்க்க முயன்றேன், ஆனால் அவள் பிடிவாதமாக வரவே விரும்பினாள். அவள் வந்து இருபத்தி ஐந்து நிமிடங்களில், நானும் அவளும் எதிரெதிராக ஆகியிருந்தோம், ஒரு மேஜையின் இரு புறங்களில் அமர்ந்திருந்தோம், நடுவில் தேநீர் கோப்பைகளில் ஆவி பறந்தபடி இருந்தது; நான் வளர்க்கும் முறையால் என் மகனை உதவாக்கரையாக ஆக்குகிறேன், நான் என் முறையை முற்றிலும் மாற்ற வேண்டும் என்று அவள் நினைத்தாள், அதை ஐயத்துக்கு இடமில்லாதபடி சொல்லவும் செய்தாள், அதுதான் அவள் வழி. அப்போது நான் அவளுக்குள் சென்றேன். 

என்னுள் (அவளுள்) பரிதவிப்பு இருந்தது, தாங்க முடியாத நிராசை, எதிரே நான் வெளியேறி விட்டிருந்த கூட்டை நான் (அவள்) சொற்களால் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தேன். எல்லாம் உடனடியாக மாறா விட்டால், என் பேரனின் வாழ்க்கை சொல்ல முடியாத திசைகளில் போய் முடியும் என்ற பேரச்சம் என்னைப் பீடித்திருந்தது.  என் மகள் ( வெடிகள் வெடித்ததால் பயந்து போய், கட்டிலின் அடியில் ஒளிந்து கொண்டு, அவங்களை நிறுத்த வைங்க, நிறுத்தச் சொல்லுங்க என்று கதறும் இரண்டு வயதான அவளின் -என் – உரு, மனதில் மின்னி மறைகிறது) இப்போதே, காலம் கடந்து போகுமுன், சில விதிகளை நடைமுறைப்படுத்தா விட்டால், அவள் வாழ்வில் எல்லையற்ற சோகத்தை அனுபவிப்பாள். என் மகள் என்னை நேசித்ததை விட அவள் மகன் அவள் மீது அபார பிரியத்தை வைத்திருக்கிறான் என்பதை இங்கு கவனிக்கத் தேவையில்லை; அவளை அவன் பார்த்த விதத்தை, அதில் இருந்த நம்பிக்கையை, அதில் இருந்த கண்ணுக்குத் தெரியாத அந்த உறுதியான தொடர்பை  (பொறாமையோடு) கவனித்தேன்; அவள் அவனை எடை போடவேயில்லை. அதில்தானே பிரச்சனை ஆரம்பிக்கிறது? என் பேரன் போகிற போக்கில் எத்தனையோ ஆபத்தான சபலங்களும், பின்னடைவுகளும், புயல்களும், நெருப்பும் கடுஞ்சூடும்,     வெள்ளங்களும் வரவிருக்கின்றன; அவனுடைய குணாம்சங்களின் திடத்தன்மைதான் பூமியில் அவனுக்கு ஏற்படப் போகிற சோதனைகளைத் தாங்கிக் கொண்டு மீண்டு வர வழி செய்யும், ஆனால் இவள், என் மகள், என் பேரன்புக்கு உரிய மகள், அப்படி ஒரு வலுவான குணநலன்களை வளர்த்தெடுக்க என்ன செய்கிறாள்? 

 “… எங்கே அந்த வலுவான குணாம்சம்?” அவள் என்னிடம் சுள்ளென்று எரிந்து விழுந்தாள், நான் இப்போது எனக்குள் திரும்பி இருந்தேன். “நீ அவனை நோஞ்சானாகத்தான் ஆக்கிக்கிட்டிருக்கே. நோஞ்சான்!நோஞ்சான்! நோஞ்சான்!”

நோஞ்சான் என்று சொல்கிற போதெல்லாம் மேஜை மீது அடித்துத் தட்டினாள், இந்த முறை தான் அப்படிச் செய்தது அவளுக்கே ஆச்சரியமாய் இருந்திருக்க வேண்டும். அடுத்ததாக என்ன நடக்குமென்று அவளுக்குத் தெரியும், அது எங்கள் இருவருக்குமே தெரியும், பல பத்தாண்டுகளாக இந்தச் சடங்கு நடந்து வந்திருக்கிற ஒன்றுதான். அவளைச் சபித்தபடி நான் எழுந்தோடிப் போவேன்; பிறகு என் நடத்தைக்கு வெட்கப்பட்டு, நான் திரும்பி வந்து மன்னிப்புக் கோரினால், அவள் சில மணிகளுக்கு என்னோடு பேச மறுப்பாள்; ஒரு வழியாக, வேறு எந்த பேச்சும் இல்லாமல், பரஸ்பர புரிதலும் மேம்படாமல், சங்கடமான சமாதானத்துக்கு வருவோம், அதுதான் எங்களுக்குச் சாதாரண நிலை. 

ஆனால் இந்த முறை நான் கோபமாக எழுந்து போய் விடவில்லை. நோஞ்சான் என்று கடைசியாக அடித்துச் சொன்னவளின் கை மேஜை மீதே இருந்தது, நான் என் கையை அவள் கை மீது வைத்தேன். அவள் என்னைப் பார்த்தாள், பார்வையில் அதிர்ச்சி தெரிந்தது, இந்த முறை அவள் கண்களில் எனக்குத் தெரிந்த பீதி, அவள் உடலில் பரவி இருந்ததாக நான் உணர்ந்திருந்த அதே அச்சம்தான். 

எனக்குள் மட்டு மீறி குமட்டல் உணர்வு எழுந்ததால், நான் குளியலறைக்கு ஓடினேன்.  டாய்லெட் மீது நான் குனிந்து நிற்கையில் என் அம்மா என்னருகே நின்றாள், என் முன் நெற்றியில் வைத்துக் கொள்ள ஒரு ஈரத் துணியைக் கொடுத்தாள், ஆனால் நான் அவளுடைய கையைத் தட்டி விட்டேன், பேசக் கூட முடியாத அளவு நான் சுகமில்லாமல் உணர்ந்தேன், என் உடலின் பாதைகளெங்கும் அமிலம் பரவி வந்த மாதிரி இருந்தது. 

அந்த உண்மை கஃபேயிற்கு திரும்பிப் போகலாம் என்று நினைத்தேன்.  மறுக்க முடியாதபடி பொறுப்பு துறப்புக்கான ஓர் ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திட்டிருந்தேன் என்றாலும், நான் கொடுத்த கட்டணத்தையும், என் சமன நிலையையும் திரும்பித் தரச் சொல்லிக் கேட்க வேண்டுமென்று என் நினைப்பு.

அதற்குப் பதில், வேலை செய்யுமிடத்தில் என்னுடைய தடுப்பறையின் கதவை மூடி வைத்துக் கொள்வதும், நீண்ட நடைகளில் போவதும், மற்றவர்களுக்கு அருகில் இருப்பதைத் தவிர்ப்பதும், என் கணவருடனும், மகனுடனும் நெருங்கிப் பழகுவதை முடிந்த மட்டில் குறைப்பதும், தெருக்களில் யாரும் எதிர்ப்பட்டால் தவிர்த்து மறு சாரிக்குப் போவதும், பூங்காவில் யாரும் அதிகம் வராத உள்புறப் பாதைகளை நாடுவதும் வழக்கமாக்கிக் கொண்டேன். 

அப்படி ஒரு நடையிலிருந்து ஒரு நாள் திரும்பி வந்து கொண்டிருந்தேன். ஒரு புறா கூரையிலிருந்து மிதந்தபடி நடைபாதையில் வந்திறங்கியது, மிதந்து இறங்குகையில்  என் இறக்கைகள் விரிந்து, என் சமநிலை தவறி, ஒரு கண்ணில் பார்வை சரியில்லாமல், பாதி தூரம் அதில் இருந்தேன், சட்டென்று எனக்குள் திரும்பியிருந்தேன், நடைபாதையில் நடுங்கியபடி இருக்கையில், நான் நுழைந்திருந்த அந்த உடலின் நிஜ நிலையை அறிந்தது என்னை அமிழ்த்தித் தத்தளிக்கச் செய்தது. 

வீட்டில், சமையல் மேடை மீது நான் வேண்டுமென்றே சில ரொட்டித் துகள்களை விட்டுவைத்திருந்தேன், அதை நோக்கி ஓர் எறும்பு ஊர்ந்து போய்க் கொண்டிருந்தது. மிகவும் காலதாமதமாக வீட்டுக்கு வரப் போகிற என் கணவரிடம் ஏதோ காரணம் காட்டி சமையல் மேடையைச் சுத்தம் செய்யச் சொல்ல வேண்டி அந்தத் துகள்களை விட்டு வைத்திருந்தேன். (அவர் எங்கிருந்து வருகிறார்? எனக்குத் தெரியவில்லை; அதற்காக அவரை அந்த கஃபேக்கு அழைத்துப் போயிருக்கலாம். ஆனால் தம்பதிகளுக்கு இன்னும் கூடுதலாக பொறுப்பு துறத்தல் ஒப்பந்தமும், கட்டணமும் இருந்தன.)  ஆனந்தத்தைப் போன்ற ஓர் உணர்வு அந்தப் பெரிய துகளை நெருங்கும்போது என்னுள் உயர்ந்து எழுந்தது, உயரே இப்போது மரத்துப் போயிருந்த ஒரு விரல், சில வினாடிகள் முன்பு, என்னை நசுக்கத் தயாராக இருந்தது என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 

***

காலை 2.37க்கு அவர் திணறலாக என்னிடம் கேட்கிறார், “அப்ப, நீ நிஜமா இங்கேயே -”

நான்கே வார்த்தைகள், நான் அதற்குள் அவருக்குள் இருந்தேன், என்னிடம் சலிப்படைந்து, என்னால் புண்பட்டு,  கவனம் பிசகி இருப்பதுதான் என் இயல்பு என்றாலும், சமீபத்தில் மிகவுமே கவனமில்லாமல் இருக்கிறதால், என்னால் குழப்பமடைந்து – இல்லையா? அவருள்ளிருந்து அந்தச் சொல்லை நான் எடுத்துக் கொடுத்தேன். 

“இல்லையா,” என்றார் அவர். “நான் சொல்றது உனக்குப் புரியறதா?”

ஆனால், என் உடல், கைவிடப்பட்ட நிலையில் பதிலேதும் சொல்லியிருக்காது. யாரும் வசிக்காமல், என் உடல் வினோதமானது, பரிதாபமானது, ஒரு விதத்தில் சவம் போலத்தான். 

“இதைப் போல!” என்கிறார் அவர். “இதைத்தான் நான் சொல்கிறேன்!”

“தயவு செய்!” அவர் ஆத்திரப்படுகிறார். “என் கிட்டே கொஞ்சம் பேசு! எனக்கு நீ வேணும்! என்னை நீ புரிஞ்சுக்கணும்!”

அவருடைய ஆத்திரத்தில் நான் இருந்தேன். நான் தான் அவருடைய ஆத்திரமே. என்னைப் பார்த்து அவர் அச்சப்படுவதால்தான் அவர் வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வந்திருக்கிறார். மேலும் மேலும் என்னை ஆக்கிரமிக்கும் அந்த வெறுமையால் அச்சம்.

“நீ என்ன மாதிரி இருக்கேனுட்டுத் தெரியுமா, ஒரு,” அவர் சொல்கிறார், “ஒரு, ஒரு-”

அவர் சொல்வதற்கு முன்பே எனக்கு அந்த வார்த்தை தெரிந்திருக்கிறது, ஒருக்கால் நானே அந்தச் சொல்லை அவருக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறேன். 

“நடைப்பிணம்.” (ஜாம்பி)

அவருக்குள் என்னுடைய ஒவ்வொரு துகளும் ஜீவனோடு இருக்கிறது. எங்களுடைய நிர்வாணமான உடல் மீது போர்த்திய விரிப்பு. அதன் கீழ் அந்த ஆத்திர வெறிக்குக் கீழே தனிமை, அதற்குக் கீழே ஏக்கம், ஏக்கத்துக்குக் கீழே நம்பிக்கையுள்ள எதிர்பார்ப்பு, நம்பிக்கைக்குக் கீழே என்னால் பிரியத்தை உணர முடிகிறது. 

எனக்குத் தெரிகிறது, என்று அவரிடம் சொல்ல நான் விரும்பினேன், அதைச் சொல்ல எனக்குத் தீவிரமான ஆசை இருந்தது, ஆனால் அவரிடமிருந்து என்னை விடுவித்துக் கொள்ள எனக்கு ஒரு வழியும் தெரியவில்லை. அவருக்குள் மிதந்திருக்கும் நான் செயலற்ற நிலையில் இருக்கிறேன். 

அதனால் அவர் என்னுடைய வெற்றான உடலிடமிருந்தும், என் உயிரற்ற பார்வை கொண்ட கண்களிடமிருந்தும், விலகிப் போகிறார். அருகே படுக்கையில் தொய்ந்து போய், ஒரு அக்கறையுமில்லாமல் கிடக்கிற உடலைப் பார்த்து அவருள் எழும் உக்கிரமான மூச்சடைக்க வைக்கும் வலியை, பாரியமான ஏமாற்ற உணர்வை நான் பகிர்ந்து கொள்கிறேன். 

கடைசியில் ஒரு வழியாக அவரிடமிருந்து விடுபெற்று நான் எனக்குள் திரும்பியபோது, தூங்குகிற அவர் உடலின் முதுகெலும்பின் உச்சியிலிருந்து அடிவரை நான் தடவிக் கொடுக்கிறேன், அதை மறுபடி மறுபடி செய்கிறேன். 

பிறகு ஒரு அற்புதமான அரை- வினாடி நேரம் நான் இரண்டு உடல்களிலும் இருக்கிறேன் – நான் தடவிக் கொடுக்கிறேன், தடவப்படுகிறேன். 

“அவளுக்கு என்னைப் புரியவே இல்லை, அதற்கு அவள் ஒரு முயற்சியும் செய்வதுமில்லை,” அடுத்த நாள் யாரிடமோ அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். 

சரியாக அந்த க்ஷணத்தில், நான் பூங்காவில் ஒரு நாயுடன் இருக்கிறேன், என் ரோமமடர்ந்த உடலின் சிறு இதயத்தில். அவனைப் பற்றி நான் இதுவரை ஏதும் சொல்லவில்லை, அவனை நான் இதை (முடிவில் சொல்ல) சேமித்து வைத்திருந்தேன். அவன் புல்லை முகர்கிறான், முதலில் அது அடர்ந்தும், புதியதாகவும் உள்ள புல் என்பதால் என்று நான் நினைத்தேன், ஆனால் நான் நெருங்கும்போது, அவன் ஏதோ ஒன்றை முகர்கிறான் என்று தெரிந்து கொண்டேன், ஒரு சிறு உடல், சிறு செத்த உடல், நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை, ஒரு பறவை அல்லது சுண்டெலி அல்லது அணில், ஆனால் எனக்குத் தெரியத்தான் செய்கிறது, ஏனெனில் நான் அவனுக்குள் இருந்தேன். என்னுடைய புத்தியற்ற பெரிய உடம்பு உறைந்து, அருவருப்போடு எங்களைக் குனிந்து பார்த்தபடி நிற்க, நான் முன்பு எப்போதும் முகர்ந்ததை விடத் தீவிரமாக, 100,000 தடவைகள் தீவிரமாக முகர்கிறேன். நல்ல மணத்திற்கும் கெட்ட மணத்திற்கும் வேறுபாடு ஏதும் இல்லை, மணங்களின் கூட்டிசை அது, என்னால் சாவையும், மண்ணையும், மண்ணாகிச் சேறாகிப் போன ஒரு கையளவு எம் அண்ட் எம் மிட்டாய்களையும், கர்ப்பமாகத் தயார் நிலையில் உள்ளவளாக ஒரு பெண்ணையும், ஒரு ஆணின் புற்று நோயையும், பதினான்கு மாதங்கள் முன்பு இந்த மண்ணில் மக்கிப் போன க்ளோவர் செடியின் ஒரு துண்டையும், இன்னும் ஒன்பது மணி நேரத்தில் வரவிருக்கிற மழையையும், நான் முகர்கிறேன், முகர்கிறேன், முகர்கிறேன். 

**** 

அடிக்குறிப்புகள்:

“Truth Café” first appeared in the Summer 2025 issue of Ploughshares. Reprinted by permission of Ploughshares.

Solvanam magazine thanks Helen Phillips, the author of this story, and Ploughshares magazine for granting us permission to publish this translation in our 350th issue. 

Translator Maitreyan thanks Helen Phillips and Ploughshares magazine for permitting him to translate and publish this story in Solvanam magazine. 

Our readers are informed hereby that any reproduction or reprinting of this translation is not permitted. For any further action they need to contact Ploughshares magazine and Helen Phillips. 

இங்கிலிஷ் மூலம்: ஹெலன் ஃபிலிப்ஸ்

தமிழாக்கம்: மைத்ரேயன்- (ஜூன் – ஆகஸ்ட் 2025)

இங்கிலிஷ் மூலக் கதைக்கான தரவு: 

ப்ளௌஷேர்ஸ், கோடை 2025 இதழ், 51, எண் 2. அமெரிக்க இலக்கியக் காலாண்டிதழான ப்ளௌஷேர்ஸின் 2025 ஆம் ஆண்டு கோடைப் பருவ இதழில் பிரசுரமான கதை. 

இந்தக் கதையை மொழிபெயர்த்து சொல்வனம் பத்திரிகையில் பிரசுரிக்க அனுமதி அளித்த ஹெலன் ஃபிலிப்ஸ் அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளரின் சார்பிலும், பத்திரிகையின் சார்பிலும் நன்றி தெரிவிக்கிறோம். 

கதையை மொழிபெயர்த்துப் பிரசுரித்துக் கொள்ள அனுமதி அளித்த ப்ளௌஷேர்ஸ் பத்திரிகைக்கும் எங்கள் நன்றி. 

தொடர்புடைய பதிவுகள்


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.