வரைபடத்தில் இருக்கும் இருண்ட வெளிகள்

அஞ்சலி ஸச்தேவா

[தமிழாக்கம்: மைத்ரேயன்]

மூன்று பரிமாணமுள்ள, அடர்த்தியாக உள்ள உலகின் அர்த்தம் பொதிந்த உறவுகளை, தட்டையான காகிதத் துண்டிலோ அல்லது ஒரு விடியோ திரையிலோ சித்திரிக்க வேண்டுமானால், அந்த ஒரு வரைபடம், எதார்த்தத்தை வக்கிரமாக்கியே தீர வேண்டும். …[ஒரு] வரைபடம் என்பது, அதே தகவல்களைக் கொண்டு அல்லது அதே நிலைகளைக் கொண்டு தயாரிக்கப்படக் கூடிய, முடிவில்லாத எண்ணிக்கை கொண்ட பற்பல வரைபடங்களில் ஒன்றே ஒன்றுதான்…

 மார்க் மொன்மனியேர், ‘ஹௌ டு லிவ் வித் மேப்ஸ்’

ருங்காலத்தில், இளைஞர்கள் உங்கள் நினைவுகளை உங்களிடமே திரும்பச் சொல்வார்கள், நீங்கள் கேட்பீர்கள். உங்களுக்கு வயது 15 ஆக இருந்த போது, வசந்த காலத்தில் பளீரென்று ஒளி நிறைந்த ஒரு நாளைப் பற்றி நீங்கள் அவர்களிடம் சொல்ல முனைந்தால், அவர்கள் உடனே அதைத் தேடிப் பார்த்து, இல்லை, அன்று மழை பெய்தது, வெளிச்சமான நாள் இல்லை, இப்போது ஞாபகம் வருகிறதா?  என்பார்கள். கொஞ்ச நாட்களில் நீங்கள் மௌனமாக இருக்கக் கற்றுக் கொள்கிறீர்கள், அவர்கள் அதைப் பற்றிச் சொல்லட்டும் என்று விடுகிறீர்கள். நீங்கள், “என் பிறந்த நாள் எப்படி இருந்தது?” என்று கேட்கலாம். அவர்கள் அதைத் தட்டச்சியதும், வினாடிகளில் ஒரு அறிக்கை கிட்டுகிறது: உங்களுக்கு ஆறு வயதான போது, உங்கள் நெருங்கிய நண்பர்களில் இருவரை, சமையலறையில் ஒரு சிறு விருந்துக்கு உங்கள் அம்மா அழைத்தார். அங்கு சப்ஜியும், ரொட்டியும், செந்நெல்லி கேக் ஒன்றும் இருந்தன. உங்களுக்கு ஒரு பொம்மை கிடைத்தது. நீங்கள் அதைப் பிடித்தபடி இருக்கும் காட்சி இந்தப் படத்தில் இருக்கிறது; அந்தப் பெட்டியை நீங்கள் திறக்கும் காட்சி இந்த விடியோவில் உள்ளது.

அவர்களால் பார்க்க முடியாதவற்றைப் பற்றி அவர்களுக்கு எந்த நினைவும் இருப்பதில்லை, அல்லது அந்த விஷயங்கள் ஏன் முக்கியம் என்பதும் அவர்களுக்குப் புரிவதில்லை. அந்த பொம்மையின் ஆடை நீல நிறமில்லை, மாறாக பச்சை நிறம் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறது, ஏனெனில் அந்த வயதில் நீங்கள் இருக்கையில், உங்கள் அம்மாவிடம் இருந்த ஒரு பச்சை நிற ஆடைக்கு அந்த பொம்மையின் லேஸ் காலர் போன்ற ஒரு காலர் இருந்தது. அந்த ஆடையை அவர் ரொம்பவே விரும்பினார், அதனால் அடிக்கடி அணிந்தார், அதனால் நீங்களும் அதை மிகவும் விரும்பினீர்கள். இல்லை, இல்லை, அந்த பொம்மையின் ஆடை நீல நிறம்என்று அவர்கள் உங்களிடம் சொல்கிறார்கள், அவர்கள் சொல்வது சரியாக இருக்கும், ஆனால் நீங்கள் உணர்வதை, உங்கள் அம்மாவின் ஆடையுடைய சிறு எதிரொலியும், உங்கள் அம்மாவிடம் நீங்கள் வைத்த அன்பின் சிறு எதிரொலியும், அந்த பொம்மையுடன் இணைந்திருப்பதை, அவர்களால் உணர முடியாது. எல்லா இடங்களுக்கும் அந்த பொம்மையை நீங்கள் தூக்கிக் கொண்டு போனதை, அதன் நிறம் சாம்பல் நிறமாகி, அதன் ஆடைகள் கந்தலாகும் வரை வைத்திருந்ததை- அதை அவர்கள் உங்களிடம் சொல்லக் கூடும், ஆனால் ஏன் என்பதை உண்மையில் அவர்கள் ஒருநாளும் தெரிந்து கொள்ளப் போவதில்லை.

இதே போலவே, பழைய நாட்களில் இருந்த ஆண்களை அவர்கள் பின்னால் நோக்கிப் பார்க்கும்போதும் (ஆகும்); அதை அவர்கள் எப்போது பார்த்தாலும் செய்கிறார்கள், அதில் தீராத வியப்பு அவர்களுக்கு: தன்னிச்சையாகத் திரியும் ஆண்கள்! உங்கள் அப்பா உங்களைத் தன் மடியில் வைத்திருப்பதை அவர்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்; அவரிடம் வீசும் வறுத்த மாட்டுக் கதுப்பும் சிகரெட்டும் கலந்த வாடையின் ஒரு சிறு அலையைக் கூட அவர்கள் முகரலாம், அந்த வாடை அவர்களைக் குழப்புகிறது. ஆனால் அவர்களால் அவரை உணர முடிவதில்லை, ஒரு கோப்பை தேநீரைத் தயாரிப்பதையோ, அல்லது காரை ஓட்டுவதையோ உங்களுக்கு என்ன ஒரு பாசத்தோடும், பொறுமையோடும் அவர் சொல்லிக் கொடுத்தார் என்பதையோ, அவருடைய உடல் வலுவையோ, நாள் முழுதும் உழைத்துத் திரும்பும்போது அதன் களைப்பையோ (அவர்களால் உணர முடிவதில்லை). அவர்கள் சொல்கிறார்கள், அவர் ஒரு நல்ல அப்பா மாதிரிதான் தெரிகிறார், ஆனால் அவர்களுக்கு இதெல்லாம் அனுபவங்கள் இல்லை, கற்பதற்கான வாய்ப்புகள் போலத்தான். ஒரு நாளில் எத்தனை நிமிடங்கள் அவர் உங்களோடு செலவழித்தார், எத்தனை புத்தகங்கள் படித்துக் காட்டினார். அவர் கோபப்படும்போது எத்தனை டெஸிபல்களுக்கு அவர் குரல் உயர்ந்தது- இப்படித்தானே தவிர, முக்கியமானது எதுவும் அதில் இல்லை.

வெளியில் எத்தனை தகவல் கிடைக்கிறது. ஒளிப்படங்கள், விடியோக்கள், ரசீதுகள், சமூக ஊடகப் பதிவுகள், மருத்துவ ஆவணங்கள், பள்ளிக்கூட மதிப்பெண் அறிக்கைகள், வலையில் தேடிய வரலாறுகள். அவர்களெல்லாம் பிறப்பதற்கு எத்தனையோ பத்தாண்டுகள் முன்பே முடிந்து போன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து எந்தக் கதாபாத்திரம் உங்களைப் போல இருக்கிறது என்று கேட்டு வினா-விடை நிகழ்ச்சிகள். மின்னணு பொம்மைகளும், ஸ்மார்ட் ஸ்பீக்கர்களும் கள்ளத்தனமாகப் பதிவு செய்த உரையாடல்கள், இதெல்லாம், உங்களோடு குறிப்பாக ஏதும் சம்பந்தமில்லாத தகவல்களை, நீங்கள் சொல்லாமல் அவர்களுக்குக் கிட்டியவை: (மேலும்) காற்றின் தரம் பற்றிய அறிக்கைகள், செய்திக் கட்டுரைகள், போக்குவரத்தைக் கண்காணிக்கும் காமெராக்களின் பதிவுகள், பில்போர்ட் பத்திரிகையின், சூடாக விற்பனையாகும் முதல் நூறு இசைக் குழுக்களின் பட்டியல்கள். எல்லாம் சேகரிக்கப்பட்டு, வகைக் கூறுகளில் சேமிக்கப்பட்டு, உள்ளுக்குள் குறுக்கு நோக்காக வரிசைப்படுத்தப்பட்டு, ஒன்றொடொன்று தொடர்பு படுத்தப்பட்டு  ஒழுங்கமைவு பெற்றவை. தகவல்களில் மிகவும் இடைவெளிகள் விழுந்து ஓட்டைகள் காணப்பட்டு, அவர்கள் இக்கட்டான நிலையிலிருப்பதாக உணர்ந்தால், மீட்டெடுக்கப்பட்ட நினைவுகளைத் தேடிப் போகிறார்கள், அப்படித் தகவலைப் பெறுவதில் உள்ள துன்பங்களும், செலவுகளும் நிறைய என்பதால் அவற்றுக்கான நியாயங்களை அவர்கள் காட்ட வேண்டி வரும். அவர்கள் தம்மால் ஆன மட்டும் அப்படி நியாயப்படுத்துவார்கள். எவ்வளவு அதெல்லாம் பொருந்தி வருகின்றன, நீங்கள் அறிக்கையாகத் தரும் நினைவுகள் எத்தனை தூரம் நரம்புகளிலிருந்து ‘அறுவடை’ செய்யப்பட்ட தகவல் புனல்களோடு ஒத்துப் போகின்றன, அல்லது இல்லை என்பதைக் காண அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். பல நேரங்களிலும் அவர்கள் அப்படிப் பொருத்தமின்மையைக் காண்கிறார்கள், ஆனால் எப்போதுமே உங்களுடைய மூளைதான் போதாததாக இருக்கிறது, பிழை செய்வதாக இருக்கிறது.

உங்களோடு பேச வந்திருக்கும் குமரி புத்திசாலியாக இருக்கிறாள், கூர்ந்து கவனிக்கிறாள். ஃபாத்திமா என்பது அவள் பெயர். அவளை  “குமரி” என்று சொல்வதை அவள் வெறுப்பாள் என்று உங்களுக்குத் தெரியும், ஆனால் உங்களுக்கு ஆன வயதில் அனேகமாக யாருமே சிறுவர் போலத்தான் தெரிகிறார்கள். உங்களுக்குக் குழந்தைகள் ஏதும் இருக்கவில்லை, ஆனால் இப்போது இவள் வந்திருக்கிறாள்.

அவள் பணி புரியும் செயல்திட்டத்தை நீங்கள் முழுதுமாக ஏற்கவில்லை. அது மிகவும் சுய-திருப்தி அடைந்ததாகத் தெரிகிறது: இன்றைய இருப்பைத் தூக்கிப் பிடிக்க நடத்தப்படும் ‘உண்மை-அறியும்’ குழு, ஆண்கள் சகிக்க முடியாதவர்களாக இருந்தார்கள் என்பதை புத்தம்-புது, அறிவியல் பூர்வமாக மிக முன்னேறிய வழியில் நிரூபிக்கவென்று ஏற்படுத்தப்பட்டது, அதே நேரம் அப்படி ஆய்வு செய்பவர்கள் தமக்கே சொல்லிக் கொள்கிறார்கள்,  தாம் சிறிதும் ஒருதலைப்பட்ட முடிவுகளைச் சாராதவர்கள் என்று. ஆனால் இதே செயல்திட்டம் இவளை உங்களிடம் உரையாட, மறுபடி மறுபடி கொணர்கிறது. ஃபாத்திமா உங்களை வெறும் ஆய்வு இலக்கான நபர் என்று பார்க்கிறாள் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் பல மாதங்களாக உங்கள் வாழ்வை ஒருவரிடம் பேசிப் பகிர்வது என்பது சாமானிய விஷயமில்லை, அதுவும் மிகக் கவனமாகக் கேட்டறியும் இவளைப் போன்ற நபரிடம் பகிர்வது எளிதானதல்ல.

நீங்கள் இருவரும் பேசுகையில் அவள் தன் தலைமுடியின் மீது முக்காட்டின் சுருக்கம் நீக்கி இழுத்து விடுகிறாள், சிறு கணத்துக்கு உதடுகளை இறுக்கிக் கொள்கிறாள், பிறகு முடிவில்லாது நீளும் கேள்விகளாகச் சரம் தொடுக்கிறாள். இந்நாட்களின் மீது எப்படி இருக்கீங்க என்று கேட்க ஆகும் வினாடிகளுக்கு மேல் நேரம் செலவழிப்பதில்லை அவள், ஏனெனில் அவளுக்கு நிஜமாகவே தெரிய வேண்டிய விஷயம் உங்களுடைய கடந்த காலம்தான். “வாழ்ந்த வரலாறு” என்பதை அவள் மெய்யாகவே மிகத் தீவிரமாக, மனதுக்கு நெருக்கமாக எடுத்துக் கொள்கிறாள்.  வரலாறு வாழ்வது போலவே மரிக்கிறது, அதை உருவாக்குபவர்களின் சாவாலும், மறதியாலும், வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட பயனழிந்த தன்மையாலும் ஒவ்வொரு நாளும் அதன் ஒரு பகுதி தேய்ந்தழிந்து போகிறது, என்று நீங்கள் அவளிடம் சொல்ல விரும்புகிறீர்கள். அவள் எத்தனை தகவலையும் காட்டுப் பூக்களைச் சேகரிப்பது போலச் சேகரிக்கலாம், தன் பாவாடையில் நிரப்பிக் கொள்ளலாம், ஆனால் அது வரலாற்றின் பூஞ்சைத் தன்மையைச் சற்றும் மாற்றாது என்று சொல்ல விரும்புகிறீர்கள்.

இன்று உங்களுடைய அப்பாவின் சகோதரர் பாக்ஸ்டன் சிற்றப்பாவைப் பற்றி அவள் கேட்கிறாள். நீங்களும், உங்கள் அம்மாவும், உடன் பிறந்தோரும் ஒரு பொது நீச்சல் குளத்தில் நீந்துவதற்கு அவரோடு போனதைப் பற்றிக் கேட்கிறாள். உங்கள் அப்பாவும் கூடவே வருவதாக இருந்தது, ஆனால் அவர் முதலில் தன் அலுவலகத்தில் தாமசிக்க வேண்டி வந்தது, வரும் வழியில் அவர் நகர மையத்திலிருந்து வெளியே போகும் போக்குவரத்தில் நேர்ந்திருந்த ஒரு விபத்தால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார்.

“ஆமாம்,” என்றாள் ஃபாத்திமா. “கோழிகளை ஏற்றிக் கொண்டு போன ஒரு அரை ட்ரக் கவிழ்ந்திருந்தது. நான் அந்த செய்திச் சுருளைப் பார்த்தேன்.”

“அவர் கூப்பிட்டுத் தான் வர இயலாது என்று சொன்னபோது அம்மாவுக்குக் கோபம் வந்திருந்தது.”

“அவருக்கு ஏன் கோபம் வந்தது என்று சொன்னாரா?”

சிரிக்காமல இருக்க நீங்கள் சற்றுப் பாடுபட வேண்டி இருந்தது. ஃபாத்திமா தன் கேள்விகள் நுட்பமானவை என்று நினைக்கிறாள், ஆனால் உங்களுக்கு அவள் ஏதோ குறிப்பிட்ட ஒரு விவரத்தைப் பெறச் சுற்றி வளைத்து வருகிறாள் என்பது உடனே தெரிந்து விடுகிறது. இந்த நாள் பற்றி அவளுக்குக் கிட்டியிருக்கிற ஒரு தகவலை உங்களிடம் பெற அவள் முயல்கிறாள். உங்கள் சிற்றப்பாவும் நீங்களும் இருக்கிற விடியோக்கள், அவர் உங்கள் அருகில் நிற்கையில் உங்கள் முகத்தில் தெரிகிற இலேசான பயம். மின்னஞ்சல்களிலும், சமூக ஊடகங்களிலும், அவரைப் பற்றி நீங்கள் எழுதும்போது சொற்களில் போகப் போகக் கூடிவரும் எதிர்மறையான உள்ளர்த்தங்கள், அவருடைய பதிவுகளில் இல்லாத ‘லைக்’ மற்றும் இதயக் குறியீடுகள்.  அவள் பின்புலத்தை வைத்துக் கொண்டு என்ன தொகுத்திருக்கிறாளோ அதை வெளிப்படுத்துமாறு உங்களை மென்மையாக உந்தப் பார்க்கிறாள்.

நீங்கள் அதை அலட்சியம் செய்கிறீர்கள். அவள் என்ன தேடுகிறாள் என்று உங்களுக்குத் தெரியும். உங்களிடம் சரியான கேள்வியைக் கேட்டால் நீங்கள் என் சிற்றப்பா என்னைத் தொடக்கூடாத இடத்தில் ஒரு முறை தொட்டார் என்றோ, அல்லது என் அப்பா அம்மாவிடம் சொல்லி இருந்தார் பாக்ஸ்டனுக்குப் புத்தி சரியில்லை என்றோ சொல்வேன் என அவள் நினைக்கிறாள். தகவலில், அந்தத் திக்கில் சுட்டும் சிறு துப்புகளை, அவளால் பார்க்க முடிகிறது.

ஆனால் நீங்கள் அவரைப் பற்றி ஏதும் எதிர்மாறாகச் சொல்லப் போவதில்லை, ஏனெனில் அப்படிச் சொல்லும்படி துலக்கமாக ஏதும் இல்லை. உங்களுக்குத் தெரிகிற வரை அவர் யாருக்கும் ஏதும் கெட்டது செய்யவில்லை. நீங்கள் நினைவு வைத்திருப்பதை மட்டும் சொல்வது அவருக்கு நியாயம் செய்வதாகாது: அவரிடம் நம்மை உறைய வைக்கும் ஏதோ ஒன்று இருந்தது. அவரைப் பார்த்தாலே அவரிடம் ஏதோ விபரீதமாக, காயப்படாத தோலுக்கு அடியில் ஏதோ எலும்பு உடைந்திருப்பது போல இருப்பதாக உங்களுக்குத் தோன்றும். உங்கள் அம்மாவுக்கு அது தெரியும், அப்பாவுக்கும் தெரிந்திருந்தது. அவர்கள் உங்களையோ உங்கள் உடன் பிறப்புகளையோ அவரிடம் தனியே ஒரு போதும் விட்டு விட்டுப் போனதில்லை. அவரைப் பற்றிப் பதிவு செய்யவோ, அவரைக் குற்றம் சொல்லவோ ஏதும் இல்லை, ஆனால் சிற்றப்பா பாக்ஸ்டனைப் பொறுத்தவரை ஒரு போதும் சொல்லப்படாத ஏதோ இருக்கவே செய்தது.

“என் அம்மா எங்களுக்கு எல்லாம் ஐஸ்க்ரீம் வாங்கினார்,” நீங்கள் இப்போது சொல்கிறீர்கள். ”அவள் எப்போதும் சொல்லி இருக்கிறாள், நீச்சல் குளத்தருகே ஐஸ்க்ரீம் மிகவும் விலை அதிகம் என்று, ஆனால் நாங்கள் எல்லாரும் அன்று எங்களுக்கான ஐஸ்க்ரீமைப் பெற்றோம், அவள் ஒரு முறை கூட குறை ஏதும் சொல்லவில்லை.”

ஃபாத்திமா தலையசைக்கிறாள், உங்கள் கோப்பில் ஒரு குறிப்பைச் சேர்க்கிறாள். ஏதோ விரும்புகிறாள் என்று தெரிய வைக்கும் ஒரு இறுகலான புன்னகை செய்கிறாள்- இந்த விருப்பத்தைத் திருப்தி செய்யத் தேவையான அளவு தகவல் ஒரு போதும் இருக்காது – பிறகு வேறு வகைக் கேள்விகளைக் கேட்கத் துவங்குகிறாள்.

இத்தனை மணிகள் பேச்சிலேயே கழிந்தன என்றாலும், ஃபாத்திமாவிடம் நீங்கள் இன்னும் சிலவற்றைச் சொல்லவில்லை. துன்பம்தரும் வகையில் மிகச் சாதாரணமாகத் துவங்கிய ஒரு இரவு உங்களை எப்படி மாற்றியது; நீங்கள் உங்களுடைய அன்பனுடன் உள்ள உறவை உடைக்க நினைத்தீர்கள். உங்களுக்கு வயது 22, இன்ன்ம் ஆறு வருடங்களில் நீங்கள் முற்றிலும் வேறொரு உலகில் வாழ இருந்தீர்கள், ஆண் அன்பர்களே இல்லாத ஓர் உலகு அது, ஆனால் அப்போது அது உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்த இரவுக்கு இட்டுச் செல்லும் தகவல் புனல்களை ஃபாத்திமா அலசினால், அவளுக்கு அந்தப் பிரிவு நிறைய நாட்கள் முன்பே துவங்கிப் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தது என்பது தெரிந்து விடும். ஜனவரியின் தகவல்: பனிச்சறுக்கு அரங்குக்கு இரண்டு நுழைவுச் சீட்டுகள்; மாநிலப் பூங்கா ஒன்றில் ஒரு தனி வீடு, கூடவே ஸாமன் மீனுக்கும் சாக்லேட்டுக்கும் ஆறு புட்டிகள் செந்நிற வைனுக்குமான ரசீது; பனித் துகளால் செய்யப்பட்ட ஒரு பெரிய பூனை உருவின் படம், அது அவனுடைய கை உறைகளையும், உன் கழுத்து உருமாலையும் அணிந்திருக்கிறது; மார்ச்: நல்ல இடம் என்று அறியப்பட்ட, நாடெங்கும் பரவியிருந்த ஒரு தொடர் உணவு விடுதியில் இரவுச் சாப்பாடு; மளிகைக்கடை ரோஜாப் பூக்கள்; உங்களுக்குப் பிடிக்குமென்று அவன் நினைத்த ஒரு புத்தகத்தின் பிரதி, ஆனால் அதை நீங்கள் ரசிக்கவில்லை. ஜூன்: அடைசலாக வரிசையில் நின்ற சண்டைப்பட விடியோக்கள், ஒரு டஜன் லைட் பியர் புட்டிகளையும் தவிர வேறேதும் பதிவாகவில்லை; ஆகஸ்ட் மாத முடிவின் போது நீங்கள் பிரியத் தீர்மானித்தாயிற்று, அவனிடம் இன்னும் சொல்லவில்லை அவ்வளவுதான்.

அன்று இரவு கசகசப்பாக, சூடாக, புயல் வரப் போகிறதென்ற அறிகுறிகளோடு இருந்தது, ஆனாலும் நீங்கள் வெளியே போகிறீர்கள். உங்கள் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் ஒரு பூங்கா இருந்தது, மரங்களடர்ந்த குறுகிய பள்ளத் தாக்குகளும், சந்துகளும் வரிசையாக இருந்தவை, அடிவாரங்களில் சமதளமாகி பயணிகள் இருந்து இளைப்பாறும் இடங்களாகி இருந்தன, சந்தியா காலத்தில் புல்வெளி முழுதும் மின்மினிப் பூச்சிகள் நிரம்பி இருந்தன. நீங்கள் உங்கள் தொலைபேசியை வீட்டில் விட்டு விட்டுப் போனீர்கள், ஒரு பாதிக் காரணம் அது மழையில் நனையாமல் இருக்க வேண்டும் என்பது, இன்னொரு காரணம் யாரிடமுமிருந்து அழைப்பை நீங்கள் விரும்பவில்லை. நீங்கள் நினைவுகளை அசை போடுகையில் உங்கள் அன்பன் உங்களைக் கூப்பிடக் கூடாது. உங்கள் பெற்றோர் அல்லது உடன்பிறப்புகள் அல்லது உங்கள் நண்பர்களோடு கூட நீங்கள் பேச விரும்பவில்லை. வெறுமனே யோசிக்க விரும்பினீர்கள். அன்று என்ன நடந்ததோ, பிறகு அப்படி யோசிக்க உங்களுக்கு நிறையவே இருந்தது.

ஃபாத்திமா ஒரு ஆய்வு நிலை மாணவி. முதலில் நீங்கள் இன்னும் கொஞ்சம் ஆய்வனுபவம் கொண்டவர் அனுப்பப்பட்டால் நல்லதென்று நினைத்தீர்கள். ஆனால் சீக்கிரமே இப்படி ஒருத்தியை அனுப்புவதன் பின்னே இருந்த தர்க்கத்தைப் புரிந்து கொண்டீர்கள். உங்களிடம் அவள் செலவழிக்கும் அளவு நேரத்தை ஒரு மாணவியைத் தவிர வேறு யாராலும் செலவழிக்க முடியாது. அல்லது அத்தனை ஆர்வத்தை அவர்கள் காட்டி இருக்க மாட்டார்கள். அவளுக்கு சுவாரசியமாகத் தெரிகிற அளவுக்கு, உங்கள் வாழ்வு உங்களுக்கே அத்தனை ரசிக்கவில்லை, ஆனால் உங்களுக்குத் தெரியும் அந்த ஈடுபாடு எல்லாம் உங்களைப் பற்றியதே இல்லை.

ஆண்கள் எல்லாரும் அனுப்பப்பட்ட போது, அவர்களின் கதைகளும் அவர்களோடு சென்று விட்டன – அவர்களின் கவிதைகள், திரைப்படங்கள், கூட்டிசைகள் (ஸிம்ஃபொனிகள்), ஓவியங்கள் எல்லாம். பிறகு ஒரு அரை நூற்றாண்டுக்கு புத்தகக் கடைகளும், திரை அரங்குகளும், நாடக அரங்குகளும் பெண்களின் கலை என்பனவற்றைத் தவிர வேறேதும் இல்லாததாக இருந்தன. உங்களைப் போன்ற பழைய காலத்தவர்கள், தடை செய்யப்பட்ட ஹிப்ஹாப் இசை அடங்கிய ட்ரைவ் தட்டுகளையும், மூலைகள் இற்று உதிர்ந்த நாவல்களையும் கள்ளத் தனமாக கை மாற்றிக்கொண்டிருந்தனர்,  ஆனால், நாளாவட்டத்தில், கட்டுப்பாடுகள் தளர்ந்தன. இந்தப் புதுத் தலைமுறை, ஃபாத்திமாவின் தலைமுறை, சாதுரியம் நிறைந்தது, அவர்களுக்கு ‘பொது யுகம்’ என்பதை உண்மையில் நினைவு வைத்திருக்கும் தலைமுறைப் பெண்கள் அனேகமாக எல்லாரும் மறைந்து விட்டனர் என்பது தெரியும். இதர பிரச்சாரங்களை எல்லாம் தாண்டி, அது நிஜமாக எப்படி இருந்தது என்பதை அவளும் அவளுடைய சகாக்களும் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவர்கள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தனர்.

செயல்படுத்தும் நோக்கத்தைப் பொறுத்தவரை, இதனால், அவள் எப்போது உங்களுடைய காப்பு இல்லத்தில் தோன்றுவாள் என்பது உங்களுக்கு முன்கூட்டி எப்போதுமே தெரியாது. இரவு பத்து மணி ஆகி இருந்தது, நீங்கள் அமரும் அறையின் கண்ணாடியில் அவளுடைய பிம்பம் உங்களுக்குப் பின்புறம் தோன்றுகிறது. அவள் சற்றுச் சோகமாக இருக்கிறாள், வழக்கமாக இருக்கும் விறுவிறுப்பான தோற்றம் இல்லை. அவளுடைய தலை மேலங்கி கசங்கி இருக்கிறது. நீங்கள் திரும்பிப் பார்த்து ஹெலோ என்று சொல்கிறீர்கள்.

“எல்லாம் சரியா இருக்கா?” என்கிறீர்கள்.

அவள் தலையசைத்து ஆமோதிக்கிறாள், அது சும்மா வேலை அழுத்தம்தான், அவளுக்கு மேலே உள்ள ஆய்வாளர்கள் இன்னும் நல்ல விளைவுகளைக் கொண்டு வர வேண்டுமென்று அழுத்தம் கொடுக்கிறார்கள், இல்லாவிடில் அவர்களுக்கும் ஆய்வுக்கான நிதி ஒதுக்கீடு ரத்தாகி விடுமாம். அவள் உங்கள் அருகே அமர்கிறாள், தொடர்புக்காகத் தன் கையில் கட்டி இருக்கும் பட்டியில் தன் கட்டைவிரலைத் தடவுகிறாள், இளைஞர்கள் சர்வ சாதாரணமாகச் செய்வது போலவே அவள் என்ன உணர்கிறாள் என்பதைப் பற்றிய ஒரு சுவையின் ஒரு சிறு பங்கை உங்கள்பால் அனுப்புகிறாள், நீங்கள் அவர்களின் உணர்ச்சிகளைச் சிறிது கூட உணர விரும்ப மாட்டீர்கள், ஒரு கணம் கூட வேண்டாம் என்பீர்கள் என்பது அவர்களின் புத்தியில் ஒருபோதும் எழவே இல்லை என்பது போல இருக்கிறது அதெல்லாம். அவளுடைய தொடர்புப் பட்டியோடு உங்கள் தொடர்புப் பட்டி ஒருங்குபடும் அந்தக் கணத்தில் உங்களுக்குச் சிறு துடிப்பு கிட்டுகிறது, அந்தப் பட்டி சில நரம்பு ரசாயனப் பொருட்களை உங்கள் உங்கள் மணிக்கட்டில் உள்ள தமனிக் குழாயில் பரவ விடுகிறது, ஃபாத்திமாவின் கவலையும், மனத் தளர்ச்சியும் ஒரு க்ஷண நேர அலையாக உங்களூடே பரவுகின்றன. நீங்கள் அவளுடைய தொடர்புப் பட்டியைச் சிறிது எரிச்சலுடன் பார்க்கிறீர்கள், ஆனால் சொல்கிறீர்கள், “உனக்கு நான் ஏதாவது உதவ முடியுமா?”

ஃபாத்திமா புன்னகைக்கிறாள். கொஞ்சம் பிரியமும், கொஞ்சம் கருணையான பார்வையும் உங்கள் விஷயத்தில் அவள் கொண்டிருப்பது அவளுக்குத் தடையாகிறது. உங்களுடைய பழைய பாணி பாவிப்புகள் அவளுக்கு இனிமையானவையாகத் தெரிந்தாலும், அவற்றை விடக் கூடுதலாக அவளுக்கு வேண்டுவதென்னவோ உங்களிடம் இருப்பதுதான், இத்தனை பத்தாண்டுகளாக உங்கள் உடலில் நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் நினைவுகள்தான். அவற்றைப் பாதுகாத்து வந்திருப்பதற்காக அவள் உங்கள்பால் நன்றி கொண்டவளாக இருக்கிறாள், ஆனால் உங்களுக்கு அவற்றின் மதிப்பு ‘புரிந்திருக்கிறது’ என்று அவள் அவ்வளவு நம்பவில்லை. (அவளைப் பொறுத்தவரை) அவளிடம் அவற்றைக் கொடுத்து விட்டு, அவள் அவற்றைக் கையாள விடுவது மேலான வழியாக இருக்கும்.  சரிதான், நீங்களும் இளம் வயதில் மேலானவராக இருந்திருக்க மாட்டீர்கள், 107 வயதான ஒரு பெண் பயனுள்ள எதையும் சொல்லக் கூடியவர் என்று நம்பி இருக்க மாட்டீர்கள். அப்படி வயதான உங்களை, நம்ப முடியாத அளவு வயதானவள் என்பதைத் தவிர வேறு எப்படியும் பார்த்து இருக்க மாட்டீர்கள்.

அவளை உங்களோடு நடக்குமாறு கேட்கிறீர்கள், அவள் ஒத்துக் கொண்டு தலையசைக்கிறாள், எழுந்திருக்க உங்களுக்குக் கை கொடுக்கிறாள். சமையலறையை அடைந்ததும், நீங்கள் அவளை ஒரு சாண்ட்விச் செய்து தரச் சொல்கிறீர்கள், அவளுக்கும் ஒன்றைச் செய்து கொள்ளச் சொல்கிறீர்கள். அவள் அதைச் செய்கையில், மறுபடி உட்கார்கிறீர்கள், அவள் அலமாரிகளில் குடைகிறாள், ப்ரெட், மயோன்னிஸ், காளான்களால் செய்யப்பட்ட வில்லைகளை எல்லாம் எடுக்கிறாள், அவற்றை அடுக்கி குறுக்கே வெட்டுகிறாள். உங்களிடம் ஒரு தட்டைக் கொடுக்கிறாள்.

“என் அப்பா எனக்கு நடு ராத்திரியில் சாண்ட்விச்களைத் தயாரித்துக் கொடுப்பார்,” என்கிறீர்கள். “அவர் சத்தம் போடாமல் கீழ்த் தளத்துக்குப் போய் தனக்கு ஒன்றைத் தயாரிப்பார், ஆனால் நான் எப்போதும் அவரைக் கண்டு பிடித்து விடுவேன். நள்ளிரவுக்குப் பிறகு எல்லாமே நல்ல சுவையாகத் தெரிகிறதாக அவர் சொல்வார்.”

நீங்கள் “அப்பா” என்று சொல்லும்போதெல்லாம், அவள் அந்தச் சொல்லைத் தனக்குள் மறுபடி சொல்லிப் பார்க்கிறாள், அந்தச் சொல்லின் உணர்வைத் தன் வாயில் உணரப் பார்க்கிறாள். அது என்ன என்று அவளுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பவில்லை. “அவர் சமைப்பாரா?” ஃபாத்திமா கேட்கிறாள். உங்களால் ஏற்கனவே பட்டியலாக வரிசையில் புள்ளியிட்ட கருத்துகள் அவளுடைய மனதில் உருவாவதை ஊகிக்க முடிகிறது- பொது யுக வீட்டு வேலைப் பிரிவினை. உறவுமுறை அமைப்பு. பொது யுகத்தில் பரவலாக இருந்த உணவுத் தயாரிப்பு முறைகள்.

“அவர் செய்தார். அவர் ஒரு நல்ல சமையல்காரர். என் அம்மாவும் சமைப்பார், ஆனால் அவர் அதை விரும்பிச் செய்யவில்லை.”

அவள் இந்தத் தகவலை கோப்பிலிடுகிறாள், அவளுடைய இறுக்கம் தணிவதை உங்களால் பார்க்க முடிகிறது, கொஞ்சம்தான் அந்தத் தளர்வு. தன் நேரம் பயனுள்ள விதத்தில், அவசியமான விதமாகச் செலவழிந்ததாக அவள் உணர்கிறாள்,

“சொல்லு, உன் ஆராய்ச்சி எப்படிப் போகிறது?” நீங்கள் கேட்கிறீர்கள்.

ஃபாத்திமா பெருமூச்சு விடுகிறாள். அவளுடைய துறை புதியது, உடல் வேதியலும், பண்பாட்டு மானுடவியலும் இணைந்த ஒன்று. நரம்புகளின் மூலம் அறுவடை செய்வது தக்க நேரத்தில் தோன்றியதும், பெரும் தாவல்கள் அத்துறையில் சாத்தியமாயின, அவர்கள் கற்பனை செய்ய முடியாத விதங்களில் இடைவெளிகளை நிரப்பின. ஆனால் இதெல்லாம் நேர விரயம் என்றோ ஏற்கப்பட்ட நெறிகளுக்கெல்லாம் எதிர் என்றோ நினைப்பவர்கள் இன்னும் பலர் இருந்தனர். பழசைப் பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும்? நமக்கு அதெல்லாம் எத்தனை மோசமாக இருந்தது என்பது ஏற்கனவே தெரியும்; மேலும் கேள்விகள் கேட்பதில் என்ன பொருள் இருக்கிறது?

“தொழில் நுட்பம் அத்தனை வேகமாக வளர்ந்து வருகிறதா, எங்களிடம் அதோடு ஈடுகட்ட எங்களுக்கிருக்கும் நிதி போதாது. நினைவுகளை வைத்திருப்பவர்களால் தம் விருப்பத்தால் எட்டி நினைவு கூர முடியாதவற்றை, எங்களால் அடைய முடியும் என்று நாங்கள் தெரிந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் மிகச் சிறு குழந்தையாக இருந்தபோது நீங்கள் கேட்ட உரையாடல்கள், அந்தக் கட்டத்தில் உங்களுக்குப் புரிந்திருக்காதவற்றை எங்களால் மீட்க முடியும். நீங்கள் வேறேதோ காரியத்தில் ஈடுபட்டிருக்கையில், பின்புலத்தில் நடந்ததைக் கண்டு விட முடியும். இவற்றின் தரம் அத்தனை பிரமாதமாக இல்லை, ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட ஏராளமாகக் கூடுதலான தகவல் இவற்றில் கிட்டுகிறது.”

“இதைச் செய்ய வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்?”

ஏதும் புரியாமல் திகைப்பில் அவள் நிமிர்ந்து பார்க்கிறாள். ”இதன் சாத்தியப்பாடுகளை யோசியுங்கள்! இதெல்லாம் ஒரு முழுத் தலைமுறைக்கு முந்தையவை. உங்கள் பெற்றோர்கள், ஒருகால் பெற்றோரின் பெற்றோர் பற்றிக் கூடத் தகவல்கள் கிட்டும்.”

சாண்ட்விச்சில் இன்னொரு வாய் கடிக்கிறீர்கள். “நினைவு வைத்திருப்பவர் என்றுதான் என்னை உன் அறிக்கையில் வர்ணிக்கிறாயா?” நீங்கள்  நினைவுகளை, மிருதுவான, சாம்பல் நிற நூல் பந்துகள் போல, உங்களுடைய நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பவராக உங்களையே காட்சிப் படுத்திப் பார்க்கிறீர்கள்.

”நாங்கள் ஆராயும் அனைவரையும் அப்படித்தான் அழைக்கிறோம்.”

நாடெங்கிலும் சிதறி இருக்கும் முதிய பெண்களைப் பற்றி நினைத்தபடி உங்கள் தலையை அசைத்து அதை ஏற்கிறீர்கள். பொது வருடம் முடிகையில் உங்களுக்கு 28 வயதாகி இருந்தது. வளர்ந்தவள்தான், நிச்சயமாக, ஆனால் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை அதற்கு முன் கழித்திருந்தவர்கள், இந்த உலகை விட அந்த உலகையே சேர்ந்தவர்கள், எல்லாம் ஏற்கனவே இறந்து விட்டார்கள். அதனால் ஃபாத்திமாவும் மற்றவர்களும் தமக்குக் கிட்டுகிறவர்களைக் கொண்டுதான் ஆராய்ச்சி நடத்த முடியும்: உங்களையும், உங்களைப் போன்ற சிலரும்தான் அவர்கள். அவர்களுக்கு முந்தைய தலைமுறை அத்தனை குதூகலத்தோடு நொறுக்கிய ஒரு வரலாற்றை, கிட்டுகிற தகவல்களிலிருந்து துண்டு துண்டாக ஒட்டி, ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வர முயல்வார்கள். அவர்கள் தொல்பொருள் ஆய்வாளர்களைப் போல, உடைந்து நொறுங்கிய பானைகளின் துண்டுகளிலிருந்து தூசிகளை மென்மையான புருசுகளால் அகற்றுபவர்கள் போலச் செயல்படுகிறார்கள். விரிசல்களும் ஒட்டுகளும் நன்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு ஏதோ ஒன்று கிட்டும், முன்பு எப்படி இருந்தது என்பது பற்றிய அருங்காட்சியகத்துக் கருத்து போல ஒன்று, அதுதான் நிச்சயம் இருந்தது என்று முடிவுக்கு வருவார்கள். ஏதோ வரலாறு என்பது அத்தனை தெளிவாக இருக்க முடியும் என்பது போல.

அந்த இரவில் நீங்கள் எடுத்திருக்கக் கூடிய மாற்று முடிவுகள் பற்றிய யோசனை உங்களை வாட்டியது உண்டு. நீங்கள் மட்டும் உங்கள் ஃபோனை எடுத்துக் கொண்டு போயிருந்தால்? உங்களுடைய கட்டடத்தைச் சுற்றியிருந்த நடைபாதைகளில் மட்டுமே போய், ஒளிரும் நீல விளக்கொளியோடிருந்த தொடர்புத் தொழில் நுட்பத்தின் வீச்சு வட்டத்துக்குள்ளேயே இருந்திருந்தால்? அப்போது என்ன ஆகியிருக்கும்? ஆனால் இன்று நீங்கள் அதை வெறு விதமாகப் பார்க்கிறீர்கள். இப்போது அந்த இரவு அவர்கள் உங்களிடமிருந்து உருவி எடுக்க முடியாத ஒன்றாகி விட்டிருக்கிறது. அவர்களுக்குத் தெரியாது ஒரே ஒரு முக்கியமான நினைவு மட்டுமே உங்களிடம் இருப்பது கூட உங்களுக்குக் கொஞ்சம் திருப்தி தருகிறது. அவர்கள் நரம்புகளிலிருந்து அதை உறிஞ்சக் கூடும், உங்களை அதைப் பற்றி எண்ணும்படி கட்டாயப்படுத்தக் கூடும், ஆனால் இப்போதைக்கு நினைவுகளை அகழ்ந்தெடுப்பதில் இன்னமும் கலைக்கு ஒரு பங்கு இருக்கிறது. ஒரு நாள், இது பற்றி உங்களுக்கு ஏதும் ஐயம் இல்லை, அவர்கள் உங்களுடைய மொத்த வாழ்க்கையை கண் சிமிட்டும் நேரத்தில் துழாவி எடுத்து விடக் கூடும், ஆனால் இப்போதைக்கு அவர்களுக்கு உங்களிடம் அப்படி உறிஞ்சி எடுக்க ஏதும் இருக்கிறதா என்பது தெரியாது- எதைத் தேடுகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாதென்றால்- அவர்களால் அதைக் கண்டு பிடிக்க முடியாது.

அன்று அந்தப் பூங்காவுக்குள் நுழைந்த பிறகு, நீங்கள் எங்கே போகிறோம் என்பதைப் பற்றி அதிகம் கவனம் செலுத்தவில்லை. பகல் நேரத்தில் அந்த இடம் பற்றிய உங்கள் பரிச்சயம்- பிக்னிக்குகள், சூரிய ஒளிக் குளியல், உங்கள் வீட்டில் கூட வசிப்பவரோடும், அவருடைய நாயோடும்  ஃப்ரிஸ்பீ விளையாட்டுகள் ஆகியன – அந்த இடம் பற்றிப் பாதுகாப்பான இடம் என்ற பொய்யான உணர்வைக் கொடுத்திருந்தன. எல்லாப் பாதைகளும் அந்தக் கால்பந்தாட்ட மைதானத்துக்குத்தான் இட்டுச் செல்லும் என்று தோன்றியிருந்தது.  அங்கிருந்த நிழல்களின் ஆழமும், இலைகளிடையே இருந்த இடைவெளிகள் மூலம் குத்தீட்டியாக இறங்கிய நிலவொளிக் கீற்றுகளும் கலந்த இருள் ஏனோ வசீகரமானதாகத் தெரிந்தது. நீங்கள் மான்கள் ஓடும் தடத்தை விடச் சற்று அகலமான பாதையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள், அது போகிற போக்கில் போகிறீர்கள், அப்போதைக்கு எது முக்கியம் என்று தோன்றியதோ அதையே மறுபடி மறுபடி யோசித்தவண்ணம் போகிறீர்கள், அது உங்கள் அன்பனைப் பற்றியதாக இருந்தது. “நாம் பிரிய வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்று எப்படிச் சொல்வது என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தது, ஆனால் அவன் நிச்சயம் அது ஏன் என்று கேட்பான், ஆனால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது எளிதாக இல்லை, அதுவும் அவனைப் புண்படுத்தக் கூடாது என்று நீங்கள் நினைத்தால் மேலுமே கடினமாக இருக்கும். நீங்களோ அதை விரும்பவில்லை. ஏன் பிரியவேண்டும் என்பதில் ஒரு பகுதி அவனோடு நீங்கள் உருவாக்கி இருந்த வாழ்வின் சலிப்பூட்டும் தன்மைதான்: உங்களுடைய கல்லூரி வாழ்வின் முதல் வருடத்தில் கிட்டி இருந்த அதே நண்பர்களுடன், கூட்டமாக இருந்த அதே மதுக்கடைகளில் ஒவ்வொரு வார இறுதியிலும் போய் அடைந்திருப்பதும், சில்லறை வியாபாரக் கடைகளில் விற்பனைக்காரர் வேலையைச் செய்து கொண்டு, மேலாளர் வேலைக்கு விண்ணப்பித்துக் கொண்டிருப்பதும், அவனையும் அப்படியே செய்யுமாறு வற்புறுத்துதலும்- இப்படி எல்லாமும் சலிப்பு. அவை எல்லாமே நீங்கள் தனியொரு நபராக இருந்தால் மாற்ற எளிதாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றி இருந்தது.

கடைசியில், நீங்கள் வெகு நேரம் நடந்து விட்டீர்கள் என்பதும், அந்த கால்பந்து மைதானம் எங்குமே கண்பார்வையில் இல்லை என்பதும், நீங்கள் அப்போது எங்கே இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை என்பதும் உங்களுக்குப் புலப்பட்டன. காடு அந்த இடத்தில் அடர்த்தியாக இருந்தது, அந்தப் பாதை செடிகள் வளர்ந்து மூடிப் போயிருந்தது, அந்தப் பாதையில் கொஞ்சம் வெளிச்சத்தைக் காட்டவென்று உங்கள் கைகள் ஃபோனை எடுக்கத் தன்னிச்சையாக நீண்டன, ஆனால் அது உங்களிடம் இல்லை என்பது தெரிந்தது. அப்போது உங்களுக்கு யாரோ அழுவது கேட்டது.

அந்த சத்தம் உரக்கக் கேட்டது, பின் மெல்லக் கேட்டது, பின் திடீரென்று தெளிவாக வீறிட்டுக் கேட்டது. ஒரு பெண், அதிக தூரத்தில் இல்லை அவள், அவளுடைய விம்மல்களுக்குக் கீழான ஒலியில் குரல்கள் கேட்டன. ஒரு கணத்துக்குப் பிறகு, ஃப்ளாஷ்லைட்களின் ஒளிக்கற்றைகள் உங்களை நோக்கி வந்தன, சிறிதும் யோசிக்காமல் நீங்கள் சத்தமின்றிப் பாதையை விட்டுச் சில எட்டுகள் வைத்து விலகினீர்கள், அங்கிருந்த அடர்ந்த புதர்களுக்குப் பின்னே தரையருகில் குந்தி அமர்ந்தீர்கள். இலைகளூடே நோக்கியதில் உங்களுக்கு அழுகிற ஒரு பெண்ணின் கைகளைப் பிடித்திருக்கிற ஒரு ஆண் தெரிகிறான், இன்னொரு ஆண் கிட்டத்தில் பின்னே பாதையில் வருகிறான், அவன் அந்தப் பாதையின் சரிவு அதிகமாக இருப்பதைப் பற்றிக் குறை சொல்லியபடி வருகிறான். அவ்வப்போது கையைப் பிடித்திருக்கிற ஆண் அந்தப் பெண்ணை வாயை மூடு என்கிறான், அல்லது தரதரவென்று முன்னே இழுத்துப் போகிறான், அல்லது தணிந்த குரலில் தன் நண்பனிடம் ஏதோ சொல்கிறான். மூவரும் முதலில் 50 அடி தூரத்தில் இருந்தாகள், பிறகு 20, அப்போது இரண்டாவது ஆண் தன் விளக்கை திருப்பிய போது அது அந்தப் பெண்ணின் முகத்தை ஒளியூட்டுகிறது. அவளுடைய கண்கள் கருரத்தம் கட்டி இருக்கின்றன, உதடு வீங்கி இருக்கிறது, பல் தெரியும்படி கிழிந்திருக்கிறது, அவளுடைய தாடையிலிருந்து பளபளப்பான ரத்தம் அவளுடைய மார்பில் சொட்டுகிறது. விளக்கு அவள் முகத்தைக் கடக்கும் ஒரு வினாடியில் அவள் தன் கண்களை கூச வைக்கும் ஒளியால் இறுக்க மூடிக் கொள்கிறாள், நீங்களும் அப்படியே செய்கிறீர்கள், ஆனால் விளக்கு உங்கள் முகத்தைத் தொடவில்லை. நீங்கள் கண்களை மறுபடியும் திறக்கவே இல்லை. அந்த விளக்கு உங்கள் முகத்தில் பட்டு உங்களைக் காட்டிக் கொடுப்பதாக நீங்கள் கற்பனை செய்கிறீர்கள். “ஐ’ம் ஸாரி, ஐ’ம் ஸாரி,’ என்று அந்தப் பெண் சொல்கிறாள், இரண்டாவது ஆண் சொல்கிறான், “இன்னும் கொஞ்ச நேரத்தில் இதைவிடக் கூடுதலாக வருந்தப் போகிறாய்.”

நான் ஏதாவது செய்யணும், நீங்கள் நினைத்தீர்கள், ஆனால் நீங்கள் முன்னை விட இன்னும் கூடுதலாக உங்கள் உடலுக்குள் ஒடுங்குகிறீர்கள், பிரார்த்திக்கிறீர்கள், ஏனென்றால் அவர்கள் இன்னும் உங்களைப் பார்க்காமலா இருப்பார்கள், அதை எப்படி அவர்கள் தவற விட முடியும்? ஆனால், என்னவோ அவர்களுக்கு உங்களைத் தேட வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. பிறகு அந்த அழுகை குறைந்த ஒலியாயிற்று, குரல்கள் கரைந்து மௌனம் நிலவியது, கடைசியாக நீங்கள் உங்கள் உடலை நேராக் நிமிர்த்திக் கொள்கிறீர்கள். மறுபடியும் பாதையில் காலெடுத்து வைக்க ஆரம்பிக்கையில், கிட்டத்தட்ட கீழே விழ இருக்கிறீர்கள், உங்கள் கால்கள் மரத்துப் போயிருக்கின்றன, பத்தடி தூரம் நொண்டிக்கொண்டு போனபின் உங்கள் பாதை இன்னொரு சிறு தடத்தோடு சேர்வது தெரிகிறது, அதுதான் அவர்கள் சென்ற வழி. அங்கே ஒரு கணம், வரைபடத்தில் ஒரு இருண்ட இடத்தில் நிற்கிறீர்கள், அந்தப் பெண்ணையும், பீதியில் மூழ்கிய அவள் கண்களையும் பற்றி யோசிக்கிறீர்கள்.

அந்த இரு ஆண்களும், பெண்ணும் போன வழிதான், மேல் நோக்கிப் போகும் அதுதான் வீட்டுக்குப் போக மிகத் துரிதமான வழி என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் கீழ் நோக்கிச் செல்கிறீர்கள். முதலில் ஒரு கிளைப் பாதையில் போய், பின் இன்னொன்றில் திரும்பி, எப்போதும் கீழே போவதற்கான மிகச் சரிவான பாதையையே தேர்ந்தெடுத்தபடி செல்கிறீர்கள். கடைசியில் மரங்களின் கூட்டத்திலிருந்து விடுபட்டு வெளியே வருகிறீர்கள், அங்கே அந்தக் கால்பந்து மைதானம் இருக்கிறது. அங்கிருந்து வழி உங்களுக்குத் தெரியும், அந்த சிறு வனத்தை விட்டு வெளியே போய், ஒளியூட்டப்பட்ட தெருக்கள் வழியே நடந்து போகலாம். அந்த மலைச் சரிவுத் தடத்தில் மேல் நோக்கிப் போவதை விட இது ஒரு மணி நேரம் கூடுதலான நடையாக இருக்கும், ஆனால் அந்த மணி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குக் கூடுதல் மதிப்புள்ளது. காங்க்ரீட்டில் நடந்து வீட்டுக்குப் போகிறீர்கள், இரவின் ஒவ்வொரு ஒலியும் உங்கள் உடலில் அதிர்வைக் கொணர்கிறது.

உங்கள் அடுக்ககத்திற்குப் போய்ச் சேர்கையில் உங்கள் வீட்டுத் தோழர் உறங்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் நேராக உங்கள் அறைக்குப் போகிறீர்கள், சார்ஜரிலிருந்து ஃபோனைக் கழற்றுகிறீர்கள். 911 (எமெர்ஜென்ஸி உதவிக்கான எண்) ஐக் கூப்பிட எண்ணுகிறீர்கள். ஆனால் என்ன சொல்வீர்கள்?

நான் ஒரு பெண்ணையும், இரண்டு ஆண்களையும் பார்த்தேன், அவர்களில் யாரையும் என்னால் அடையாளம் காட்ட முடியாது, அவர்களைப் பார்த்த இடத்தையும் என்னால் காட்டவியலாது. அவர்கள் எங்கே போனார்கள் என்று எனக்குத் தெரியாது. அது பல மணிகளுக்கு முன்னால் நடந்தது. அவளுக்குக் காயம்பட்டிருந்தது. அவள் எப்படிக் காயப்பட்டாள் என்று எனக்குத் தெரியாது. நான் எந்தக் குற்றம் நடப்பதையும் பார்க்கவில்லை. அவள் மிகவும் பயந்து போனவளாகத் தெரிந்தாள்.

நீங்கள் உதவ வேண்டுமென்று நிஜமாக நினைத்திருந்தால், அந்தக் காட்டில் அந்த நேரத்திலேயே, அந்த விளக்கொளி அவள் முகத்தில் பளிச்சிட்டு நகர்ந்தபோதே செய்திருக்க வேண்டும்- ஆனால் அது நடக்க முடியாத ஒன்று, ஏனெனில் நீங்கள் என்ன செய்திருக்க முடியும்? அதனால், அந்த ஃபோனைக் கீழே வைத்து விட்டு, பற்களைத் துலக்கி விட்டு, தூங்கப் போனீர்கள். காலையில் ஒரு கோப்பை காஃபியைத் தயார் செய்து கொண்டு விட்டு, உங்களுடைய அன்பனைக் கூப்பிட்டுச் சொன்னீர்கள், “நாம் பிரிய வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.”

நீங்கள் உங்களுடைய கை வைத்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்கள், உங்களுடைய தொடர்புக் கைப்பட்டியைத் துருவுவது போலத் தோற்றம் தருகிறீர்கள், ஆனால் நீங்கள் ஃபாத்திமாவும் அவளுடைய அன்புச் சகியும் உங்கள் வசிப்பு இல்லத்தின் கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால் நின்று பேசுவதைக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒருகால் “பேசுவதாக’ச் சொல்வது தவறான வார்த்தையாக இருக்கலாம். அவர்கள் மிகக் கொஞ்சமாகத்தான் ஏதும் சொல்கிறார்கள், தம் உணர்ச்சி வெளிப்பாடுகளைத் தங்கள் தொடர்புக் கைப்பட்டிகளிடையே பரிமாறிக் கொள்கிறார்கள், அவற்றின் தாக்கங்கள் அவர்களின் முகங்களில் அலைகளாய் மோதுவதை உங்களால் பார்க்க முடிகிறது. இருவருக்கும் முகங்கள் சிவந்திருக்கின்றன, கோபம் தெரிகிறது, இருவரும் கண்ணீர் சிந்தும் தருவாயில் இருக்கிறார்கள். உங்களைப் புரிந்து கொள்ளவோ, உங்களுடைய கண்கள் இடுங்குவதை, உங்கள் சிரிப்பு உதடோரங்களில் சுருங்கி மடிவதைக் கொண்டு உங்கள் உணர்ச்சிகளைத் தெரிந்து கொள்வதோ ஒருவர் இருப்பது உங்களுக்கு எத்தனை அவசியமாக இருந்தது என்பதை நினைவு கூருகிறீர்கள். ஒன்று எத்தனை தூரம் விரும்பப்படுகிறது என்பது அதை எத்தனை எட்டாததாகவும் ஆக்குகிறது என்று யோசிக்கிறீர்கள்.

கடைசியில் அந்த அன்புச் சகி போகிறாள், தன் முகத்திலிருந்து வியர்வையைத் துடைத்தபடி, கண்களைத் துடைத்தபடி ஃபாத்திமா, இன்றைய பேட்டியைத் துவங்குவதற்காக உள்ளே வருகிறாள்.

“கஷ்டமான நாளா?” நீங்கள் கேட்கிறீர்கள்.

அவள் பெருமூச்சு விடுகிறாள். “என் அன்புத் தோழியிடமிருந்து பிரிவது தேவையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.”

இதுவரை உங்களிடம் அவள் பகிர்ந்து கொண்டதில் இதுதான் அவளுடைய மிக அந்தரங்கமான தகவல். நீங்கள் உங்கள் கையை அவளுடைய தோள் மீது வைக்கிறீர்கள். “ஒருகால் அவளுக்குக் கொஞ்சம் ஒதுங்கல் தேவைப்படுகிறதோ. கைப்பட்டி இல்லாமல் அவளோடு பேசிப் பார்த்திருக்கிறாயா?”

உடனே அவள் பின்னொதுங்கி விடுகிறாள், கண்கள் கறார் தன்மையைக் கொள்கின்றன, உதடுகள் சற்று கோணி இருக்கின்றன.  “ஓ, அப்படி ஒரு யோசனை உண்டோ?” அவள் கேட்கிறாள், ஆனால் அவள் சொல்ல நினைப்பது வேறு: இது வேறொரு நூற்றாண்டின் யோசனை, நகைப்புக்குரிய வகையில் காலங்கடந்தது. உங்கள் பாட்டி உங்களிடம் ஒரு இனிப்பு அப்பத்தை வேகவைத்து எடுத்துப் போய் உங்களுடைய அன்றைய அன்பனுடன் சமரசம் செய்து கொள்ளச் சொன்னபோது, நீங்கள் இதேபோலத்தான் மறுவினை செய்தீர்கள். எப்போதாவது நாம் குறைவான தகவல் கிட்டினால் போதும் என்று நினைப்போமா? உலகத்தின் எல்லாக் குறைகளுக்கும் தகவல் போதாமைதானே காரணம், இல்லையா? ஒருகால் அவள் சொல்வது சரிதானோ என்னவோ. பார்க்கப் போனால், நீங்கள் எப்போது உரையாடுவதை விரும்பியிருக்கிறீர்கள்?

உங்களோடு குடியிருந்தவரிடம் காட்டில் இருந்த அந்தப் பெண் பற்றி நீங்கள் சொல்லவே இல்லை. யாரிடமும் சொல்லவில்லை. உள்ளூர் செய்தித்தாளை தினமும் படித்தீர்கள், காணாமல் போன நபர்கள் பற்றி, கொலைகள், தாக்கல்கள் பற்றிச் செய்திகள் இருந்ததைத் தேடினீர்கள். நீங்கள் பார்த்ததற்கு எங்காவது செய்தியில் ஏதாவது அறிகுறி இருந்தாக வேண்டும் என்று தோன்றி இருந்தது. அப்படி ஏதும் இருந்திருந்தால், உங்கள் தலைக்கு வெளியே இருந்த உலகில், அப்படி எதையும் உங்களால் காண முடியவில்லை.

தலைக்குள், என்ன சொல்ல, அது வேறாக இருந்தது. நீங்கள் அவளைப் பற்றித் தினமும் நினைத்துக் கொண்டீர்கள். ஆனால் வெளி உலகத் தகவல் நம்ப முடியாததாக இருக்கிறது. அந்தத் தகவல் காட்டுவதன்படி, நீங்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு குறைவாகச் சாப்பிட்டீர்கள். வழக்கமாகச் செய்வதை விடக் குறைவாகவே வீட்டை விட்டு வெளியே போனீர்கள். உங்கள் இசையை வழக்கத்தை விட அதிக ஓசையோடு கேட்டீர்கள், அதே சோகப் பாடல்களைத் திரும்பத் திரும்ப ஒலிக்கச் செய்து கேட்டீர்கள். தகவல் ஆனால் இதையும் காட்டுகிறது, நீங்கள் உங்கள் அன்பனோடு இருந்த உறவை முறித்துக் கொண்டிருந்தீர்கள். அந்த முறிவுக்கு முன்னாலும் அவன் மீது உங்களுக்கு அத்தனை பிடிப்பு இருந்திருக்கவில்லை, ஒருகால் உங்களுடைய உணர்ச்சிகளை நீங்கள் தவறாகக் கணித்திருந்தீர்களோ என்னவோ. வாய் கிழிந்து சொட்டும் ரத்தத்தோடு இருந்த ஒரு பெண்ணின் வடிவில் கருப்பாக ஆக்கப்பட்ட ஓர் உருவைச் சுற்றித் தகவல் சுழல்கிறது.

அது இப்போது நேருமானால், தொடர்புக்கான கைப்பட்டி உடனே உங்களைக் காட்டி விடும். ஏதோ அற்புதம் நடந்து நீங்கள் பதிவாக்கப்படாமல் விடுபட்டிருந்தாலும், மொத்த சம்பவத்தின் போதும் யாருமே எதையும் பேசி இருக்கவில்லை என்றாலும், ஃபாத்திமா உங்களுடைய தகவல் ஆவணங்களை அலசிப் பார்த்துச் சொல்லி இருப்பாள், ‘இங்கே ஏதோ கோளாறாகி இருக்கிறது. இத்தனை கோர்ட்டிஸாலும், அட்ரினலினும் ஏன் சுரந்தன? உங்கள் இதயத் துடிப்பு ஏன் அத்தனை உயர்ந்திருந்தது? ஏதோ நடந்திருக்க வேண்டும்- என்ன ஆயிற்றென்று என்னிடம் சொல்லுங்க.” அவள் உங்களிடமிருந்து அந்த சம்பவத்தை தீட்டப்படாத வைரத்தை வெட்டி எடுப்பது போல தோண்டி எடுத்திருப்பாள்.

ஆனால் அன்று யாரும் அப்படி ஏதும் செய்யவில்லை. நீங்களாக முன்வந்து அந்தத் தகவலைக் கொடுக்கவில்லை. உங்களுடைய துக்கத்தோடும், வெட்கத்தோடும் ஒதுங்கி இருக்கவே விரும்பினீர்கள். அந்த மௌனத்தில், ஏதும் செய்யாததைப் பற்றிய உங்கள் குற்ற உணர்வால், ஏதோ செய்ய வேண்டும் என்ற உறுதி உங்களிடம் வளர்ந்தது. நீங்கள் உங்கள் விற்பனை வேலையை விட்டீர்கள், பெண்களுக்குப் புகலிடம் தரும் ஒரு அமைப்பில் வேலை தேடினீர்கள், அப்படிச் செய்தது இரவு நேரங்களில் ஷிஃப்ட் வேலை செய்ய வேண்டி இருந்த போதும் பரவாயில்லை என்று அதை ஏற்றீர்கள், மதுவிடுதிகளில் போய் வார இறுதி நாட்களில் குடிப்பதைக் கைவிட வேண்டி வந்த போதும், (நீங்கள் தயங்கவில்லை). சில வருடங்களுக்குப் பிறகு நீங்கள் ஒரு மேலாளராக ஆனீர்கள், ஆனால் முதலில் புது வரவுகளை அனுமதிக்கப் பதிவராக நுழைவாயிலருகே ஒரு மேஜையில் அமர்ந்திருந்தீர்கள். ஒவ்வொரு நாளும் அந்த வாயில் வழியே உள்ளே நுழையும் பெண்கள், நுழைகையில் அப்படியே காணாமல் போய்விடத் தயாராக இருப்பவர்களைப் போலத் தோன்றினார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று யாருமே கவலைப்படமாட்டார்கள் என்று நினைப்பவர்களாகத் தெரிந்தார்கள்.

வனத்தில் இருந்த அந்தப் பெண்ணின் பெயரையாவது தெரிந்து கொண்டிருந்தால், நீங்கள் அவளைப் பற்றிப் பேசி இருப்பீர்கள், ஒருகால் அந்தச் சம்பவத்தைப் பின்னே விட்டு நகர்ந்திருப்பீர்கள். ஒருகால், பொது யுகம் முடிகையில், நீங்கள் இன்னும் கூடுதலாக முயற்சி செய்து நீங்களும் போய் விட முயன்றிருப்பீர்கள், வேறு எந்த நாட்டில் நிலைமை கிட்டத் தட்ட எப்போதும் போல இருந்திருக்குமோ, எங்கே ஆண் அன்பர்களும், சகோதரர்களும், அப்பாக்களும், மேலும் இதர ஆண்களும் இருட்டில் ஃப்ளாஷ் விளக்கோடு இன்னமும் போய்க் கொண்டிருக்கிறார்களோ அங்கே செல்ல முயன்றிருப்பீர்கள். ஆனால் நீங்கள் அதையெல்லாம் செய்யவில்லை. மாறாக அந்த இருண்ட திட்டுடைய பளு, உங்கள் வாழ்வை மாற்றிய விதத்தைப் போல, ஒளியும், உண்மையும் ஒருகாலும் மாற்றியிருக்க முடிந்திராது.

மூன்று வாரங்களுக்குப் பிறகு ஃபாத்திமா மேஜையில் உங்களுக்கு எதிரே அமர்ந்திருக்கிறாள், ஒரு கோப்பை காஃபியைக் குனிந்து அருந்துகிறாள். தன்னுடைய பிரிய சகியுடன் தன் உறவை அவள் முறித்துக் கொண்டு விட்டாள், ஆனால் இப்போது அவள் தோற்றத்தில் தெரிகிற சிறு சரிவைத் தவிர மற்றபடி அவள் அந்த இழப்பைச் சரியாகக் கையாண்டு விட்டாள் என்று தோன்றுகிறது. உங்களை ஒரு மணி நேரமாக அவள் பேட்டி கண்டு கொண்டிருக்கிறாள். உயர்நிலைப்பள்ளியில் நீங்கள் செலவழித்த வருடங்களைப் பற்றி, உங்களுடைய ஆண் ஆசிரியர்களைப் பற்றிக் கேட்டு வருகிறாள். இந்தத் திக்கில் போகிற அந்தக் கேள்விகள் மீது உங்களுக்குச் சலிப்பாக இருக்கிறது, நீங்கள் இருவரும் ஏதோ சலிப்பூட்டுகிற நடனம் ஒன்று ஆடுவது போல இருக்கிறது. அவளுடைய கேள்விகளோடு சம்பந்தப்படாததாக, அவளிடம் என்ன சொல்வது என்பதைப் பற்றி நிறைய யோசித்து வைத்திருக்கிறீர்கள்.

அவளுடைய இப்போதைய கேள்வியை இடைமறித்து, நீங்கள் கேட்கிறீர்கள், “நாம் வேறெங்காவது போய்ப் பேசலாமா?”

ஃபாத்திமா கண்களைக் கொட்டிக் கொள்கிறாள். நீங்கள் அவளை ஒருபோதும் இடை மறித்ததில்லை. பெரும்பாலும் நீங்கள் ஒரு மரியாதை நிறைந்த மூதாட்டி.

“அந்த நாற்காலி சௌகரியமாக இல்லையா?”

“என்னோடு வா. உன்னுடைய கைப்பட்டியை இங்கேயே விட்டு விட்டு வா.”

“இப்ப என்ன செய்யணும்?” சிரித்தபடி அவள் கேட்கிறாள். நீங்கள் உங்களுடைய தொடர்புக் கைப்பட்டியின் கொக்கிகளோடு சிறிது திண்டாடுகிறீர்கள். அந்தப் பட்டியைத் தளர்த்தி விட்டு, கழற்றி மேஜை மீது வைக்கிறீர்கள். அதற்கருகில் உள்ள இடத்தைத் தட்டுகிறீர்கள்.

“அப்படி எல்லாம் நான் செய்யக் கூடாது,” அவள் சொல்கிறாள். “நான் நம் உரையாடலைப் பதிவு செய்தாக வேண்டும்.”

“நான் கட்டாயப்படுத்திக் கேட்கிறேன்.” அவள் ஏதோ கணக்குப் போடுவதை நீங்கள் கவனிக்கிறீர்கள். அவளுடைய முகம் அந்தக் கணக்கிடலை ஒளிவின்றிக் காட்டுகிறது. அவளைக் கண்ணை மூடிக் கொண்டு நட என்று நீங்கள் கேட்டது போல அவள் உணர்கிறாள்: இது விசித்திரமான வேண்டுகோள், ஆனால் சந்தேகப்படும்படி உள்நோக்கு ஏதும் தெரியவில்லை. “உன்னிடம் நான் ஒன்று சொல்ல வேண்டும். நாமிருவர் மட்டும் தனியே அதைப் பற்றிப் பேசணும் என்று விரும்பினேன்.”

கருணை காட்டும் தோற்றத்திற்கு அவள் மாறி வருகிறாள். அவள் சிறிது இறுக்கம் தளர்ந்தவளாக ஆகிறதை நீங்கள் பார்க்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய ரகசியங்களைப் பாதுகாக்கிறீர்கள், அதைக் கொஞ்சம் நாடகார்த்தமாக ஆக்குகிறீர்கள்.  வயதானவர்களும், ரகசியங்கள் பற்றி அவர்களுக்கு இருக்கிற மன உளைச்சல்களும், ரகசியங்கள் இன்னும் இருந்த ஓர் உலகின் எச்ச சொச்சங்கள். இந்த ஒரு தடவை அவள் உங்கள் விருப்பத்துக்கு இணங்கிப் போய் இரக்கம் காட்டலாம்.

அவள் தன் கைப்பட்டியின் பூட்டைத் திறக்கிறாள், கையிலிருந்து நழுவ விடுகிறாள், மேஜையில் தயக்கம் தெளிவாகத் தெரிந்தபடி வைக்கிறாள். அருகருகே அமர்ந்திருக்கும் இரண்டு கைப்பட்டிகளும் ஏதோ வினோதமான நெருங்கிய உறவில் இருப்பது போலத் தோன்றுகின்றன.

நீங்கள் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு, அந்த பெரிய அறையின் நடையோடு போகிறீர்கள். இந்த உரையாடல் எங்கே நடைபெற வேண்டுமென்பதைப் பற்றி நீங்கள் நிறைய யோசித்திருக்கிறீர்கள். செடி கொடிகளுக்கான அந்தப் பசுமை அறை கிழக்குப் புறம் உள்ளது, அல்லது பூர்த்தியாகும்போது அங்கே இருக்கும். இப்போது அது பெரிய கண்ணாடி அறை, துணிகளால் மூடப்பட்ட பிரம்பு ஆசனங்கள், காலியாக இருக்கும், செடிவளர்ப்புக்கான கல் தொட்டிகள், பதிக்கப்பட்ட கற்களால் ஆன பாதைகளைத் தவிர வேறேதும் அங்கு இல்லை. ஒரு செடி கூட இல்லை. அல்லது ஒரு காமெரா கூட இல்லை. இவை இன்னும் சில வாரங்களில் இங்கு சேர்க்கப்படும். துணி போர்த்திய ஒரு சோஃபாவில் அமர்கிறீர்கள், அலங்காரமான சைகையில் ஃபாத்திமாவை உங்கள் அருகில் உட்கார அழைக்கிறீர்கள். தன் சிரிப்பை அடக்கியவண்ணம், அவள் அமர்கிறாள். பேசுவதற்கு, அவள் புறம் சாய்கிறீர்கள்.

“உன்னிடம் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது. உனக்குத் தெரியுமில்லையா, அது அந்தக் காலத்தைப் பற்றியது.”

அவள் உடனே தெளிவாகிறாள், அவளுடைய சிரிப்பு முகத்தில் இன்னமும் தெரிகிறது, அது தெரிந்து கொள்ள அவளுக்கு இருக்கும் ஆசையை மறைக்க முடியவில்லை.

“நான் இதை யாரிடமும் சொன்னதில்லை. அது நடந்த போது கூடச் சொல்லவில்லை. ஆனால் இது எந்த இலக்கியத்திலும் அல்லது, உன் ஆய்வறிக்கைகளிலும் சேர்க்கப்படுவதை நான் விரும்பவில்லை. இது பதிவுகளில் சேர்க்கப்படாமல் இருக்க வேண்டும்.”

ஃபாத்திமாவின் முகத்தில் சுளிப்பு. அவள் இதற்கு ஒத்துக் கொண்டால், அவள் நியாயமாக அப்படியே நடக்க வேண்டும்; அவள் எந்தத் தகவலையும், கதைகளையும், உங்கள் அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது, இதுவரை அப்படி அனுமதியை நீங்கள் எளிதாக அவளுக்குக் கொடுத்திருக்கிறீர்கள்.

அவளுடைய இளமையைப் பயன்படுத்தி அவளை நீங்கள் முடக்குகிறீர்கள் என்று தெரிந்து வைத்திருக்கிறீர்கள். அவளுக்கு உடனடிப் பிரச்சனைகள் தெரிகின்றன, ஆனால் நீங்கள் அவளுக்கு தூண்டில் இரையாக, தகவலறிவை முன் வைக்கிறீர்கள். ரகசியங்களை வெளியில் கொணரவே தன் வாழ்க்கையைச் செலவழித்திருக்கிறவளும், தனக்கென்று ரகசியங்களே இல்லாதவளுமான இந்த இளம்பெண்- அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. அதுதான் எப்படி முடியும்? வெளியில் சொல்லவில்லை என்று அவள் உறுதி கொடுக்கும்போதே, அவள் தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறாள், தான் தெரிந்து கொள்வதே போதும் என்று.

நீங்களும் அது போதுமானதாக இருக்கும் என்றுதான் நம்புகிறீர்கள். யாரிடமும் சொல்லாமல் தெரிந்து வைத்திருப்பதும், அதனால் வரப்போகிறவையும். அவற்றை அவளுக்குச் சொல்லித் தரலாம் என்று நம்புகிறீர்கள்.

***  ***

அஞ்சலி ஸச்தேவாவின் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளி வந்திருக்கிறது. ’ஆல் த நேம்ஸ் தே யூஸ்ட் ஃபார் காட்’ என்பது அந்தப் புத்தகம்.

இந்த மொழிபெயர்ப்பு அஞ்சலி ஸச்தேவா அவர்களின் அனுமதி பெற்றுப் பிரசுரமாகிறது. இதன் மீள் பயன்பாடு எதற்கும் அஞ்சலி ஸச்தேவா அவர்களின் அனுமதி தேவை.

***

இந்தக் கதை டெக்னாலஜி ரிவ்யூ என்ற பத்திரிகையின் ஜன/ஃபிப்ரவரி 2021 இதழில் பிரசுரமானது. இங்கிலிஷ் மூலக்கதை: ’டார்க் ஸ்பேஸஸ் ஆன் த மேப்’ என்ற தலைப்பில் வெளியானது.

தமிழாக்கம்: மைத்ரேயன்

One Reply to “வரைபடத்தில் இருக்கும் இருண்ட வெளிகள்”

  1. மிக நுட்பமான கரு. ஒரு நிகழ்ச்சி நடை பெறும் போதே அதைப் பற்றிய மாறுபாடுள்ள விவரங்கள் உருவெடுக்கும். சிறிது காலத்திற்குப் பிறகு அது வரலாறு என உருவாகுகையில் அதன் உண்மை மதிப்பினை அதாவது அந்த நிகழ்வின் உண்மைத்தன்மையை பெரும்பாலும் பார்க்க முடியாமல் தான் ஆகும். அதிலும் சம்பந்தப்பட்டவர்களின் மனம் சிலவற்றை அரூபமாகப் பதிவு செய்து வைத்திருப்பதும் அவருக்கு கூடத் தெரியாமல் போய்விடும். இதில் மனித நினைவுகளின் நரம்பு அறுவடையும், அதன் உணர்ச்சிகளை அறிய முயலும் முன்னெடுப்புகளும் சிறப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.