வினை முடித்தன்ன இனிமை

வாழ்வின் மிகப் பெரிய இன்பம் எது ? ஆனந்தம் எது ?

” நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவுதான் சாதித்த போதிலும், இறுதிக் கணத்தில் அவற்றில் எதையுமே எடுத்துரைக்க, கொடுக்க முடியாது. ஒன்றும் இல்லாமல்தான், நிர்வாணமாக இறக்க வேண்டும். இறுதி நேரத்தின்போது ‘விட்டுவிடுவது’ அன்றி, செய்வதற்கென்று உங்களுக்கு ஒன்றும் இராது.

இதிலிருந்தே நீங்கள் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வதில்தான்  மிகப்பெரிய சந்தோஷம் இருக்கிறது என்பது  தெளிவாகவில்லையா ?”

– Kodo Sawaki – Japanese Soto Zen Master in ‘ To You’

நாம் ’செய்ய வேண்டியதைச் செய்வதில்’தான் மகிழ்ச்சி இருக்கிறது. மிகப் பெரிய சாதனைகளைச் செய்யலாம். வெட்டி வேலைகள் என்று பின்னால் நினைத்து வருந்துபவைகளையும் செய்யலாம்.

கொஞ்ச நேரம் மகிழ்வும், பின்னர் கவலையும், துக்கமும், அலுப்பும் என்று மனமெனும் சட்டை மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் எல்லா நேரத்திலும் ’செய்ய வேண்டிய வேலை’ என்று ஒன்று இருக்கிறது, ஏதாவது செய்ய வேண்டுமே என்பதற்காக எதையாவது செய்வது என்றில்லாமல், சும்மா இருப்பது உட்பட.

செய்ய வேண்டியதைச் செய்வது, செய்து முடிப்பது  அளப்பரிய நிம்மதியைத் தரும். 

ஒரு வேலை முடிந்ததும் மனம் அடங்குகிறது. அதற்கு மேற்கொண்டு செய்ய ஒன்றும் உடனடியாக இல்லை. மனம் அடங்குகையில் நம் இயல்பான அமைதி மட்டுமே இருக்கிறது. அந்த அமைதியே பேரின்பம். இறைவன்.

இதில் முக்கியமானது என்னவென்றால் ‘என்ன செய்ய வேண்டுமோ’ அது. என்ன செய்ய வேண்டும் என்பதை நமது கவனமே காட்டும். அவசியமான ஒரு வேலையை செய்ய வேண்டி இருக்கையில், அதைச் செய்யாமல், ஏதோ முக்கியமில்லாத வேலையைச் செய்து காலத்தைக் கழிப்பது உண்மையான  மகிழ்ச்சியைத் தராது. செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். அது போதும்.

இத்தருணத்தில் ஏற்கனவே வேறொரு கட்டுரையில் எடுத்துக்காட்டிய இரண்டு மேற்கோள்களை மீண்டும் சொல்ல வேண்டி இருக்கிறது, அவற்றின் பொருத்தம் கருதி.

“ வாழ்க்கையின் நோக்கம் என்ன ? “ என்று கேட்டபோது “ கையில் இருக்கும் வேலை “ என்று பதிலளித்தார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. 

நாம் பணக்காரர் ஆக வேண்டும், உத்யோக உயர்வு பெற வேண்டும், ஆன்ம தரிசனம் அடைய வேண்டும் என்று பல குறிக்கோள்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால் கையில் இருக்கும் வேலைதான் முதல் அடி. அந்த அடியை எடுத்து வைத்தால்தான் அடுத்த அடிகளும், முடிவும் சாத்தியம்.

‘கையில் உள்ளது மிகச் சிறிய வேலையாக இருந்தாலும் அதைச் செய். இல்லாவிட்டால் மனம் வேறு பல திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கும். வாழ்க்கை முழுவதுமே அவ்வாறு வீணாகிவிடும்.’ – சுவாமி கல்யாணானந்தர் (சுவாமி விவேகானந்தரின் சீடர்) கங்கல், இராமகிருஷ்ண சேவாஸ்ரமம்.

இது ஒரு மகத்தான வழிகாட்டி அறிவுரை. நாம் கவனிக்கத் தவறி விடும் ஒன்று. மனம் நம் வாழ்க்கையை தன் கையில் எடுத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்து விடுகிறது? என் வாழ்விலிருந்தே இதற்கு ஓர் உதாரணம் சொல்லலாம். பள்ளிக் காலங்களில் நான் ஹிந்தி பிரசார் சபா நடத்தி வந்த வகுப்பில் சேர்ந்தேன். ‘பிராத்மிக்’ என்னும் முதல் பாட திட்டம்.

சுமார் ஆறு மாதமும் பின்னர் ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பாடத்திட்டங்களும். சேர்ந்த புதிதில், ”இந்த பாடத்திட்டம் ஆறு மாதத்தில் முடிந்துவிடும். அடுத்து மத்யமா, ராஷ்ட்ரபாஷா, பிரவேசிகா பின்னர் பிரவீண் – அனைத்தும் இத்தனை வருடங்களில் முடிந்துவிடும், நாமும் இந்த வருடத்திற்குள் ஹிந்தி பயின்று  விடுவோம் “ என்று மனம் கோட்டை கட்டிக் கொண்டு இருந்தது. அதன் பின்னர் என்ன என்னவோ காரணங்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டம். மனம் அதில் தோய்ந்து  ஹிந்தி  எதிரியாகத்  தோற்றுவிக்கப் பட்டது. பிறகு ஹிந்தி கற்கவே முடியவில்லை. பிராத்மிக்கையே  முடிக்கவில்லை. எதற்குச் சொல்கிறேன் என்றால் அதை முடிக்கவில்லையே என்பது பற்றி இல்லை. மனம் கட்டும் கோட்டைகள் வாழ்க்கை இல்லை. கையில் இருக்கும், செய்ய வேண்டிய வேலைதான் வாழ்க்கை என்பதற்காக.

கடமை என்கிற வார்த்தை ’மிகுந்த கடினமான ஒன்று; அலுப்பைத் தருகிற ஒன்று’ என்கிற தோற்றத்தைத் தருகிறது. அப்படியில்லை. கடமை என்பது செய்ய வேண்டிய வேலை. அதைச் செய்வதில்தான் உண்மையான இன்பம் உள்ளது.

’நாம் செய்ய வேண்டிய வேலை என்ன’ என்பது நமக்குத் தெரியும். பல சமயம் நாம் அதைக் கவனிப்பதில்லை. கவனமின்மையும், அசிரத்தையும், பயம், இன்பம் துய்த்தல் போன்ற உந்துதல்களும் நம் கண்களை மறைத்து விடுகின்றன. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால் அது தன்னைக் காட்டிக் கொள்ளும். அலை பாயும் மனம், அதைக் காணவொட்டது தடுக்கும். எனவேதான் அமைதி முக்கியம். செய்ய வேண்டிய வேலை சரியான வேலையாகவும் இருக்க வேண்டும். சரியானதைச் செய்தால் சரியானது நடக்கும், நமக்கும், அனைவருக்கும். அமைதியான கவனத்தில், கற்பனைக் கலப்பில்லாத நிஜம், ’எது சரி’ என்பதைச் சொல்லும். அந்த வினையைச் செய்தலே, செய்து முடித்தலே நம் அழியா இன்பம்.

’நற்றிணை’ பாடல் ஒன்றில், புலவர் இளங்கீரனார் மனைவியின் இனிய தன்மை எத்தகையது 

என்று குறிப்பிடுகையில் ‘ உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்’ என்கிறார். நினைத்த வேலையை நிறைவாக செய்து முடிக்கையில் கிடைக்கும் இன்பத்தைப் போல் இனிமையானவள் என்பது பொருள்.

மேற்கண்ட நற்றிணை உவமையை என் நண்பர் ஒருவரிடம் சொன்னபோது அவர் “ ஆமாம் சார், கன்ம வினை முடிவுறுவதைவிட இன்பம் ஏது “ என்று வேறொரு பரிமாணத்தை எதேச்சையாகக் கூறினார். 

மஹாகவி பாரதியார் கூறியதைப் போல் “கடமை புரிவோம். இன்புறுவோம்.” 


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “வினை முடித்தன்ன இனிமை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.