I have seen the birds swirling symbolically in the sky and I cannot go to church with my mother, Stephen declared. Nor can I be myself. I must to France.
– Don’t go, his friends begged. Save both yourself and us from Ulysses and Finnegans Wake.
1. March, At last I have a voice, a voice I have, a voice that is mine a scutting, smugging, oozing voice.
2. April, Icarus can crash and burn! I don’t give a Simian’s whether any of you understand a sourfavoured word.
3. May, My clarity lies in my opacity, my penetrability in my impenetrability. And you, poor suckers, have fallen for my myth of genius.
John Crace, Digested Reads
The biografiends and the grisly old Sykos who have done their bit on alices with their eatupus complex when they were yung and easily freudened.
Chester G Anderson, James Joyce
நீண்ட காலமாக எனக்கு டப்ளின் புவியியலைவிட இலக்கியமாகவே இருந்தது. (எப்போதுமே அப்படித்தான் இருக்கும் என்றும் தோன்றுகிறது.) ஒரு வரைபடத்தில் சித்தரிக்கப்பட்ட இடத்தைவிட, ஒரு உரையின் அடையாளங்களைச் சித்தரிக்கும் ஒரு இலக்கிய வரைபடமாக அது இருந்தது. ஜாய்ஸின் களமாக மட்டுமே அது இருந்தது. மார்டெல்லோ டவர் (Martello Tower), 7 எக்லஸ் ஸ்ட்ரீட் (Eccles Street), கிளாஸ்நெவின் கல்லறை (Glasnevin Cemetery), ஃபீனிக்ஸ் பார்க் (Phoenix Park), பார்னி கியர்னன்ஸ் பப் (Barney Kiernan’s Pub), நைட் டவுன் (Night town), லிஃபி நதி (Liffey river) என்று அதன் புவியியலின் பெரும்பகுதி சென்னையிலுள்ள எனது வீட்டின் வரண்டாவிலும், எனது ஹாஸ்டல் அறையிலும் என்னால் கற்பனை செய்யப்பட்டது, எப்போதும் அலைந்து திரியும் அவரது கதாபாத்திரங்களுடன் நான் டப்ளினின் குறுக்கு மறுக்கான தெருக்களில் நடந்தபோது. வெப்பமான மெட்ராஸின் வெய்யிலால் வாட்டப்பட்டு, ‘டெட்’ (Dead) கதையின் முழு கருத்தையும் தவறவிட்டு, கிரஷாம் ஹோட்டலில் (Gresham) ஒரு ஜன்னல்லுக்கு முன்னே காப்ரியல் கான்ராய் (Gabriel Conroy) அருகே நின்றபடி, வெள்ளிப் பனித்துளிகள் “இருண்மையாக” பிரபஞ்சத்தினூடே சாய்வாகவும் மங்கலாகவும் விழுவதைப் பார்த்து, விசித்திரமாக, அந்த வெறுமை இழையோடிய காட்சியிலிருந்து எனது தனிமைமிக்க ஏக்கத்திற்கு, ஒரு வகையான நிவாரணமாக, ஆறுதல் பெற்றேன். என்ன நினைப்பிலிருந்தேன் என்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன். ஒருவேளை, காப்ரியல் போல மேற்கிற்குச் சென்று என்னைக் கண்டறியப் போவதாகவா? யாருக்குத் தெரியும், ஆனால் டப்ளின், ஜாய்ஸின் முடங்கிய மூச்சுத்திணறவைக்கும் டப்ளின், அவரும் அவரது கதாபாத்திரங்களும் எப்போதும் அதிலிருந்து வெளியேற ஏங்கிக் கொண்டிருக்கும் டப்ளின், அது எனக்கும் ஒரு ஆதர்சமான ‘வேறு இடமாக’ (elsewhere) இருந்தது. இலக்கியக் கற்பனையும் சில சமயங்களில் தவறான தன்னுணர்வாக முடியலாம். எது எப்படியிருந்தாலும், நான் இந்தக் குறிப்பிட்ட வேறு இடத்திற்குச் செல்ல ஒருபோதும் முயலவில்லை; இருந்தும் நான் மேற்கு நோக்கி அமெரிக்காவுக்கே சென்றேன். கற்பனையில் ஜாய்ஸின் இரட்டிக்கும் டப்ளினில் (doublin-Dublin) இவ்வளவு நேரம் செலவழித்தபோதிலும், நான் ஒருபோதும் அங்கே செல்வதற்கான ஒரு பயணத்தைக் கற்பனையில்கூட திட்டமிடவில்லை. சமீப காலம்வரை…
எங்கள் குடும்பத்தில் பயணங்கள் தற்செயலாகவே நடக்கும். நானோ ஒரு சோம்பேறிப் பயணி. என் மனைவிக்குப் பயணங்களில் பெரும் ஆசை உண்டென்றாலும் அதை நிகழ்த்துவதற்கான தயாரிப்பு வேலைகளை அவளும் வெறுத்தாள். எனவே நாங்கள் பிரபஞ்சம் ஒன்றிணைந்து, சாதகமான சூழ்நிலைகளின் சங்கமத்திலிருந்து எங்களுக்கு ஒரு பயணத்தை உருவாக்குவதற்காகக் காத்திருக்கிறோம். ஒருவேளை, உறவினர் எவரேனும் எங்களை அவர்கள் மகளின் டெஸ்டினேஷன் வெட்டிங்குக்கு அழைக்க மாட்டார்களா? டப்ளினில் யார் இலக்குத் திருமணங்கள் வைத்துக் கொள்கிறார்கள், நாங்களும் ஐரிஷ் கத்தோலிக்கர்கள் இல்லையே! யாரும் அழைக்கவில்லை, ஆனால் ஒருவரின் மகள் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பட்டம் பெறவிருந்தார். இந்த ஒருவருடனோ அவரது மகளுடனோ தொடர்பே இல்லாதிருந்த இருந்த எங்கள் மகன் திடீரென்று ஆல்பர்ட் ஹாலில் (Albert Hall) நடக்கவிருந்த இந்தப் பட்டமளிப்பு விழாவுக்குத் தன் தோழியுடன் செல்லப்போவதாக ஒற்றைக் காலில் நின்றுகொண்டிருந்தான். அதுவே என் மனைவிக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது. ஒருவேளை நாங்கள் எல்லோரும் பட்டமளிப்புக்குப் பின் ஐரோப்பாவில் எங்காவது, ஒருவேளை ஸ்பெயினிலோ அயர்லாந்திலோ சந்திக்கலாமா என்று மும்முரமாகக் குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்தாள். நான் பலகாலமாக ஸ்பெயினுக்குச் செல்ல விரும்பினேன் என்றாலும் எனது ஜாய்ஸிய ஆசைகள் தராசைச் சாய்க்கப் போதுமானதாக இருந்தன. எனவே அயர்லாந்துதான் என்று முடிவானது.
எதிர்பார்ப்புகள் மிக்க இப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன், நான் என் நூலகத்துக்குச் சென்று என் ஜாய்ஸ் பரிச்சியத்தைப் புதுப்பித்துக் கொண்டேன் என்று நீங்கள் கற்பனை செய்தால், உங்களைக் குறைசொல்ல மாட்டேன். நானும் அதைத்தான் எதிர்பார்த்திருப்பேன். ஆச்சரியமாக, நான் அதைச் செய்யவில்லை; என் நூலகத்துக்கு ஓடியதென்னவோ உண்மைதான், ஆனால் ஜாய்ஸுக்காக அல்ல, மகத்தான எச்.வி. மார்ட்டனின் (H.V. Morton), மகத்தான இன் சர்ச் ஆஃப் அயர்லாந்து (In Search of Ireland) என்ற புத்தகத்தைக் கண்டெடுப்பதற்காக. நகலிக்கவும் மிஞ்சவும் முடியாத, நான் மிகவுமே மெச்சும் ஜான் மோரிஸ் (Jan Morris) ஒருமுறை “பயண எழுத்துத் துறையின் ஆசான், அடிக்கடி நகலிக்கப்பட்டவர், ஆனால் ஒருபோதும் மிஞ்சப்படாதவர்” என்று அழைத்த மார்ட்டன் ஒரு நிகரற்ற பயண எழுத்தாளர் என்பதில் சந்தேகமில்லை. எனது முந்தைய இங்கிலாந்து பயணங்களுக்கு முன், ஒவ்வொரு முறையும், ஒரு சடங்காகவும் அஞ்சலியாகவும் அவரது தலைசிறந்த படைப்பான இன் சர்ச் ஆஃப் இங்கிலாந்து –ஐ (In Search of England) ஒரு கடமையாக மீள்வாசிப்பு செய்திருக்கிறேன். மார்ட்டன் எழுதுவதில் பெரும்பாலானவை ஏற்கனவே மறைந்துவிட்டன என்பதை அனுபவத்திலிருந்து நான் அறிந்திருந்தேன், ஆனால் அவரை ஒரு பயண வழிகாட்டியாக நான் நாடவில்லை. மனதுக்குவந்த சிறப்புத்தன்மை விரும்பத்தகாத பொதுத்தன்மையாக மாறும் தருணத்தில், ஒரு இடம் மறையப் போகும் தருவாயை, அதன் இறக்கும் வீழ்ச்சியை, மறக்க முடியா வாக்கியங்களின் ஓசைநயத்தில் எக்காலத்துக்கும் நிலைக்கச் செய்யும் மாயாஜாலத்தைத்தான் நான் நாடினேன். ஒரு இடத்துக்க “ஏங்க” வைக்கும் அந்த எதிரொலியைதான் நான் தேடினேன்; அன்பான ஸ்டீபன் டெடலஸ்ஸின் (Stephen Dedalus) வார்த்தைகளில், “மரணம், இல்லாமை, நடத்தைகளின் மாற்றம் மூலம் உணரமுடியாமையாக மங்கிவிட்ட” பேய்களுக்காக. எதிர்பார்த்தது போலவே எச்.வி.எம். ஏமாற்றவில்லை; நான் புத்தகத்தை மூடியதும், என் மனம் அயர்லாந்து விஷயங்களால் நிரம்பியிருந்தது, ஒருவகையான கெல்டிக் அந்தி வெளிச்சத்தில் பெரிய கடற்கரைகள், பாறைகள், ஏரிகள், மணிகள், கல்லறைகள், கிரிப்ட்கள், டிராப்பிஸ்ட் மடாலயங்கள், பண்டைய ஒளிரும் கையெழுத்துப் பிரதிகள், மூடநம்பிக்கை முத்தங்களால் ஈரமான பாறைகள், கடலில் இருந்து வரும் சா(ல்)மன் மீன்கள் குதிரைகள் /ஸ்டட் பண்ணைகள், புற்கரி சதுப்புகள் (Peat bogs), டர்ப்-ஃபயர்கள் (Turf-fires), ஹெலன் ஆஃப் ட்ராய் அச்சுகளில் தாங்கள் வார்ப்படிக்கப்பட்டதை அறிந்திராத ஏவாளைக் காட்டிலும் புராதனமான பெண்கள், என்றென்றைக்கும் குருதி படிந்திருக்கும் ஒரு வரலாற்றின் பருக்கைகள், கிராமப்புற ஆரோக்கியத்துடன் இருக்கும் நகரங்கள், அனைத்துக்கும் மேலாக கேலிக் (Gaelic) ஆங்கிலத்தில் பிரகாசிக்கும் ஒரு பேச்சுமொழி… இப்படிப்பட்ட மாயாஜாலத்தைப் படிக்க முடிகையில் பயணத்தின் அனைத்து தொல்லைகளையும் மீறி யார்தான் பயணிப்பார்கள்? அட்லாண்டிக் கடலில் சூரியன் மறையும் விதம் முல்ராணிக்கு (Mallaranny) மேலே வீற்றியிருக்கும் நீல மலைகளைச் சொர்க்கத்தின் வரைபடத்தில் எவ்வாறு இருத்துகிறது என்பதைப் பற்றி மார்ட்டன் எப்படி விவரிக்கிறார் என்பதற்கான ஒரு சிறு உதாரணம்:
இவ்வளவு நெஞ்சை உருக்கும் நீல சிம்ஃபனியை உலகில் அரிதாகவே காணக் கிடைக்கிறது. அதில் துக்கம் உள்ளது, எல்லா தீவிர அழகிலும் இருப்பது போல, கடற்பறவைகள் கிறீச்சிட, வானம்பாடிகள் வானில் நடுநடுங்க, பதர்களினூடே காற்று வீச, அங்கே நிற்கும் ஒருவன் அதன் அழகில் சில்லிட்டு, தனியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறான்…
மேலும் மகத்தான இசை சில சமயங்களில் தாங்கிக்கொள்ள முடியாதாக ஆகும் வரையில் இதயத்தைத் துழாவுவது போல, முல்ராணி மீது கவியும் இந்தச் சூரிய அஸ்தமனம் நிமிடத்துக்கு நிமிடம் அழகை அதிகரித்தபடியே செல்கிறது, அதைத் தாங்க முடியாமல் அதனிடமிருந்து விலகிச் செல்லப் பார்க்கிறீர்கள், உலகத்தில் ஏதேனும் ஒரு அற்பமான விஷயத்தைத் தேடுகிறீர்கள்: ஒரு குடிசையிலிருந்து வெளியேறும் வெள்ளைப் புகை, புற்கரி சதுப்பு நிலத்தில், (peat bog) பச்சை ஒளி, குளங்களை நிரப்பும் விதம், வெண்சாலையில் மெதுவாக நடந்துசெல்லும் உருவம், உள்வரும் அலைகளின் வீச்சு.
வாசகர்களாக நாம் மேலும் கேட்கிறோம், நமக்கது தரவும்படுகிறது:
சூரியன் மெதுவாகக் கடலுக்குள் மறைகிறது. ஒரு நிமிடம்தான், அதன் விளிம்புக்கும் நீருக்கும் இடையேயிருக்கும் விரலளவு இடைவெளி மறைய; தண்ணீரைத் தொடும் வரை விளிம்பு தாழ்கிறது, சூரியன் மூழ்கி மறைகிறது. சிம்ஃபொனியின் கடைசி இயக்கம் இப்போது ஆரம்பிக்கிறது. மேகங்கள் நிறம் மாறி வானில் தீப்பிடித்து. இளஞ்சிவப்பாகுகின்றன. கவனிக்கப்படாத சிறு மேகத் தீற்றுகள் வெள்ளையிலிருந்து சிவப்பாக மாறி, கணபொழுது துடிப்புடன் வாழ்கின்றன. ஆனால் மலைகளுக்குப் பின்னாலுள்ள பச்சை ஒளி இறக்கவில்லை, மலைகளின் நீலமும் இறக்கவில்லை: அவை மேலும் ஆழமாகவும், தீவிரமாகவும் ஓளிர்கின்றன.
பின்னர் முழுக் காட்சியின் தொனி சற்றே மங்குகிறது, அதன் பின்னணி இசை ஒரு அஷ்டமம் குறைகிறது; ஆனால் அனைத்து வண்ணங்களும் விடைபெறாது இன்னமும் அங்கேயே நீடிக்கின்றன, பூமிக்குள் மூழ்கி, வானத்துள் விலகிச்செல்வது போல். கண்களில் நீர் மல்க அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், இரவின் முதற்காற்று உங்கள் கேசத்தை வருடி, முகத்தில் குளிர்ச்சியாக…..
இம்மாதிரியான அற்புத எழுத்தைப் படிப்பதில் ஒரு பெரிய ஆபத்து உள்ளது, நாற்காலிப் பயணியாகும் ஆபத்து. பயணத்தில் எதிர்கொள்ளப் போவது அதன் மகோன்னதங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு மட்டு குறைவாகவே இருக்கும் என்று நாம் அஞ்சுகிறோம். யதார்த்தத்தால் களங்கப்படுவதைவிட முல்ராணியின் சூரிய அஸ்தமனம் எச்.வி.எம்மின் உரைநடையால் பாதுகாக்கப்பட்டு மனதில் நிரந்தரமாக ஒளிர்வதையே நாம் விரும்புகிறோம். மார்ட்டன் நூற்றாண்டின் திருப்பத்தில் உதித்த ஒரு ஃபான் டே சியெக்கள் (Fin de Siècle) ரொமான்டிசிஸ்ட். அவரது இனிமையான உரைநடையின் மோகமான பாடலில் முழுமையாக மயங்காமலிருக்க நாம் உண்மையில் முயற்சி செய்ய வேண்டும். புத்தகத்தில் ஒருமுறை மார்ட்டன் “அயர்லாந்தின் கவர்ச்சி என்ன?” என்று கேட்கிறார். அதற்கு “ஆன்மீக ரீதியாக பதினெட்டாம் நூற்றாண்டில் வாழும் ஒரு நாட்டின் கவர்ச்சியே அதன் கவர்ச்சி” என்று பதிலளிக்கிறார். இதைத்தான், அதாவது இருபதாம் நூற்றாண்டு டப்ளினின் பழக்கவழக்கங்களிலும் பேச்சுவழக்குகளிலும் பதினெட்டாம் நூற்றாண்டின் எச்சங்கள் நீடிப்பதைத்தான், ஜாய்ஸ் டப்ளினர்ஸ் (Dubliners) முதல் ஃபினிகன்ஸ் வேக் (Finnegans Wake) வரையிலான தனது அனைத்து படைப்புகளிலும் கேலி செய்தார். “சைரன்” மோர்ட்டனின் மயக்கும் அழைப்பிற்கு எதிராக. காவிய நாயகன் யூலிசிஸ் (Ulysses) போல, ஜாய்ஸின் நிதானமான உரைநடையின் பாய்மரத்துடன் என்னைப் பிணைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நான் அறிந்திருந்தேன்; இயல்பாகவே டோவர் பதிப்பில் வந்த எனது மெல்லிய டப்ளினர்ஸ் பிரதியை நாடினேன். (ஜாக்சன் மெக்கின்லியின் (Jackson & McGinley) அபாரமான விளக்கப்படங்கள் நிறைந்த கனமான பதிப்புக்குச் செல்லவே மனம் ஏங்கினாலும் பயணத்தை மெனக்கிட்டு பாழாய்ப்போன இந்த சல்லிப் பதிப்பையே எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது.)
——————————————

ஜாய்சின் படைப்புகலளிலேயே டப்ளினர்ஸ் சிறுகதைத் தொகுப்பே தமிழ் வாசகர்களுக்கு எளிமையாகவும் அவர்கள் பரவலாக வாசிக்கும், படைப்பாக இருக்கும். அவ்வப்போது, இந்த அல்லது அந்தத் தமிழ்க் கதை டெட் ஐவிட (Dead) சர்வநிச்சயமாகச் சிறந்தது என்று யாராவது பறைசாற்றி, அதன் நிலைத்தன்மைக்கு அறியாமலே சாட்சியமளிப்பார்கள். அது ஒரு பெரும் கலைஞனின் படைப்புத் திட்டத்தின் ஒரு பகுதி என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். 1905ஆம் ஆண்டளவில் ஜாய்ஸ் டப்ளின்ர்ஸ் -இன் பெரும்பாலான பகுதிகளை எழுதிமுடித்திருந்தார், அதன் நோக்கம் ஜாய்ஸின் வார்த்தைகளிலேயே கூறுவதானால்: “எனது நாட்டின் தார்மீக வரலாற்றில் ஒரு அத்தியாயத்தை எழுதவே நான் விரும்பினேன், மேலும் அந்த நகரம் எனக்கு முடக்கத்தின் மையமாகத் தோன்றியதால் டப்ளினைக் கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தேன். அதன் அக்கறையற்ற பொதுஜனத்திற்கு, நான்கு அம்சங்களில் கதைகளை வழங்க முயற்சித்தேன்: குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதிர்ச்சி, பொது வாழ்க்கை. கதைகள் இந்த வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. இதைப் பெரும்பாலும் ஒரு துல்லியமான நேர்மையுடன் சிக்கனமான நடையில் எழுதியுள்ளேன்…”
புத்தகம் எவ்வாறு படிக்கப்பட வேண்டும் என்பதற்கான துப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம். கிட்டத்தட்ட தன்னுணர்வு ஒரு நாவலில் வெளிப்படுவது போல, டப்ளினே இன்னமும் உணர்ந்துகொள்ளாத டப்ளினைக் குறித்த தன்னுணர்வு. புத்தகத்தின் குழந்தைப்பருவக் கதைகளை எடுத்துக்கொள்வோம், ஆம், தீயருகே நாற்காலியில் அமர்ந்திருக்கும் பக்கவாதத்தால் உறைந்திருக்கும் பாதிரியாரின் படிமம், பாதிரிமார் நிறைந்த ஐரிஷ் வாழ்க்கையில் நிலவும் சமூகப் பக்கவாதத்தின் “குறியீடாகும்” என்பது வெளிப்படை. ஆனால் கதையின் சுவாரஸ்யம் இதுவல்ல, அது குறியீடு கதையில் வரும் சிறுவனின் உணர்வில் நுழையும் விதத்தில் இருக்கிறது. அவன் அதைக் கையாள முடியாமல், (ஒருவேளை அவன் பெரியவனானதும், ஸ்டீஃபன் (Stephen) பிற்காலத்தில் போர்ட்ரெய்ட் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் அஸ் எ யங் மேன் (Portrait of the Artist as a Young Man) என்ற படைப்பில் சொல்லிக் கொள்வதைப் போல, “நான் பயப்படுவதாகச் சொல்லும் விஷயங்களுக்குப் பின்னால் உள்ள தீமை” என்று தனக்குத்தானே வெளிப்படுத்திக் கொள்ளக்கூடும்). அதை வெளிப்படுத்த முடியாமல், தனது தன்னுணர்வை நானியின் (Nanie) ஆடையின் முதுகுப்புற ஊக்குகள் எவ்வளவு கோணலாக போடப்பட்டிருந்தன அல்லது அவளது துணியாலான காலணிகள் ஒருபுறமாக எவ்வளவு தேய்ந்திருந்தன என்பதைப் போன்ற பௌதீக விஷயங்களை நோக்கித் திருப்புகிறான்; அதாவது “காலணி-குதிகால் உலகின்” “அனுபவ உண்மைகளை” நோக்கி, என்று எனக்கு மிகவும் பிடித்த ஹியூக் கென்னர் (Hugh Kenner) ஒருமுறை மறக்க முடியாதபடி கூறியது போல. இந்த வெளிப்படுத்த முடியாத, அரசல் புரசலாக ஊகிக்கப்படும் தீமை, “அவரது மரணத்தால் நான் எதிலிருந்தோ விடுவிக்கப்பட்டதைப் போல ஒரு சுதந்திர உணர்வை என்னுள் கண்டறிந்து எரிச்சலடைந்தேன்” என்பதை நாம் வாசிக்கையில் ஒரு பயங்கரமான தொனியைப் பெறுகிறது. எதிலிருந்து அவன் விடுவிக்கப்பட்டான்? பாதிரியாராவதற்கான எதிர்கால அழைப்பிலிருந்தா? (புனைவில் அவனது பரிணாம வளர்ச்சியான ஸ்டீஃபன் வேறு புத்தகத்தில் செய்வது போல). மதம்/பாதிரியார் தந்தை பதிலிகள் இவை டப்லினர்ஸ் -இன் பிற குழந்தைப்பருவக் கதைகளிலிலும் உள்ளன – “புறா-வீட்டிற்கான” (Pigeon-house) பையன்களின் பயணம், தேநீர்கெண்டித் தொப்பியை (tea cozy) தலையில் போட்டுக்கொண்டு ஒரு தகரப் பெட்டியை தன் கையால் அடிக்கும் ஜோ டில்லன், “காதலில் உள்ள சிறுவர்களை தான் எப்படி அடிப்பேன்” என்று ஒரு மர்மத்தை அவிழ்ப்பது போலக் கூறும் அவர்கள் சந்திக்கும் பிறழ்காமர் என்று அடுத்த கதையான என்கவுண்டர்-இன் (Encounter) படிமங்கள் சிஸ்டர்ஸ் கதையின் வெளிப்படுத்தப்படாத மர்மத்திற்கு ஒரு பாலியல் சாயலைத் தருகின்றன. அதற்கேற்றபடி, அடுத்த கதையான அரபி (Araby) பாலியல் உணர்வுகளின் விழிப்பையும அவற்றின் தவிர்க்க முடியாத ஏமாற்றங்களையும் விவரிக்கிறது. இங்கும் பாதிரியார் உருவகம் வலுக்கட்டாயமாகத் தன் இருப்பை நிலைநாட்டிக் கொள்கிறது: பையன் தெருக்களில் “தன் நற்கருணை வழிபாட்டுக் கிண்ணத்தை (Chalice) எதிரிகள் கூட்டத்தின் நடுவே பத்திரமாக எடுத்துச் செல்வதைப்” பற்றி கற்பனை செய்கிறான். முதல் கதையில் ஃபாதர் ஃப்ளின் தனது கிண்ணத்தை உடைத்ததாலே மனப்பிறழ்வுக்கு அளானார் என்பதால்தான் அவன் கூடுதல் கவனமாக இருக்கிறானா?
கதைகள் சாதாரண வாழ்க்கையின் பல்வேறு அடுக்குகளைத் தாண்டிச் செல்கின்றன, நிச்சயமாக அவை அந்தச் சாதாரணத்துவதையும் அது ஏற்படுத்தும் விரக்திகளின் பட்டியல்கள் மட்டுமே அல்ல. ஜாய்ஸ் குறிப்பிட்ட “scruplously mean” மொழி , கட்டுப்பாடு, துல்லியம், நடையின் சிக்கனம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது, அழகியலும் தார்மீகத் துல்லியமும் அவற்றில் பொதிந்திருந்தன. ‘எபிஃபனீஸ்’ (epiphanies) என்ற விஷயத்தைப் பேசிவிட்டு, இந்த உரைநடை பாணிக்கு வருகிறேன். இது ‘டப்ளினர்ஸ் -இன் புகழ்பெற்ற அடையாளமாக மாறிவிட்டது. பின்னர் கைவிடப்பட்டு, போர்ட்ரெய்ட்டின் முன்னோடியாக அமைந்த ஸ்டீபன் ஹீரோ (Stephen Hero) என்ற படைப்பில், ஸ்டீஃபன் அதைப் “பேச்சு அல்லது சைகையின் தரக்குறைவான வெளிப்பாடுகளில் அல்லது மனதின் ஒரு மறக்க முடியாத கட்டத்தில் ஏற்படும் திடீர் ஆன்மீக வெளிப்பாடுகள்” என்று வரையறுக்கிறான். இவ்வெளிப்பாடுகளில் பதிவாகும் மெல்லிய நிலையற்ற தருணங்களின் வெளிச்சத்தில் கதைகள் வாசகரின் மனதில் நுட்பமாகவும் முழுமையாகயும் படிகின்றன என்பதே அதன் உட்கருத்து.
இதையெல்லாம் பேசுகையில், அந்த கவனமான, சீர்கேடுகளைத் துல்லியமாகக் கைப்பற்றும், உரைநடை பாணியைப் பற்றியும் பேசிவிடுவோம். “பேச்சின் / வாழ்வின் தரக்குறைவான வெளிப்பாடுகளிலிருது” கணப்பொழுது புரிதல்கள் வெளிப்படுத்துவதே இக்கதைகளின் நோக்கம் என்றால் அத்தரக்குறைவுகளைச் சிதைக்காமல் முகஞ்சுளிக்காமல் இலக்கியத்தில் எப்படி முன்வைப்பது என்பதே அவற்றின் சவால். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாதாரண டப்ளின் குரல்களை ஒரு இலக்கியக் கதைச் சூழலில் எவ்வாறு வழங்குவது என்பதே பிரச்சினை. இதற்காக ஜாய்ஸ் ஃப்ளாபெரை (Flaubert) நாடினார், குறிப்பாக அவரது free indirect discourse என்ற தடையிலா படர்க்கை நுட்பத்தைப் பயன்படுத்தினார். இது ஒரு கதாபாத்திரத்தின் பேச்சையும் எண்ணங்களையும் அதன் சொந்த நடையில் வழங்குகையில் கதைசொல்லலின் காலத்தையும் படர்க்கைத் தன்மையையும் தக்கவைத்தபடியே, “அவன் சொன்னான், அவள் சொன்னாள்” போன்ற உத்திகளைத் தவிர்ப்பது. ஃப்ளாபேரின் படைப்புகளில் அவரது கதாபாத்திரத்தின் மனப்பேச்சிற்கும், கதைசொல்லியின் இலக்கியப் பேச்சுக்கும் இடையே ஒரு எல்லைக்கோடு இருந்தது. ஜாய்ஸிலோ கதாபாத்திரத்துக்கும் கதைசொல்லிக்கும் இடையிலான திரைச்சீலை துளையிடப்படுகிறது. டெட் கதையின் ஆரம்பம் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்: “Lily the caretaker’s daughter was literally run of her feet.” ‘literally’ என்ற வார்த்தையின் தவறான பிரயோகம் லில்லியினுடையது, ஆனால் கதைசொல்லியால், அவரது நனவு அவளது உணர்வின் தொடர்ச்சி போல, மிமிக்ரி செய்யப்படுகிறது. கென்னர் (Hugh Kenner) இதை சார்ல்ஸ் மாமா (Uncle Charles) கோட்பாடு என்று வரையறுத்தார், ஒரு பிரபலமான விமர்சகர் தேய்வழக்கு என்று குற்றம்சாட்டிய போர்ட்ரெய்ட்டின் ஒரு வாக்கியத்துக்கு வக்காளாத்து வாங்கியபடி:
“Every morning, therefore, uncle Charles repaired to his outhouse but not before he had creased and brushed scrupulously his black hair and brushed and put on his top hat…”
குரல் கதைசொல்லியின் குரல், ஆனால் மொழி சார்ல்ஸின் மொழி, ஏனெனில் சார்ல்ஸ் மாமா உலகில் கௌரவமான மக்கள் தங்கள் அவுட்ஹவுசுக்கு சாதாரணமாகப் “போக” மாட்டார்கள், அவர்கள் எழுந்தருளுவார்கள் (repaired), தலையை எல்லோரையும் போல் அல்லாது “scrupulously brush” செய்து கொள்வார்கள். இந்தப் பேச்சுவழக்குகள் வேறு காலத்தின் வெற்று ஓடுகளாகும், அவற்றை அர்த்தப்படுத்தும் சூழல்கள் நவீன டப்ளினிலிருந்து மறைந்துவிட்டன, ஆனால் அந்த ஒடு-வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பழைய சூழலும் அதனுடன் தொடர்புடைய மதிப்புகளும் தானாகவே அவை தற்போது விவரிக்கும் விஷயத்துக்கு வழங்கப்படுவது போல அவை தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. கதைசொல்லி கதாபாத்திரத்திடமிருந்து அபகரித்துக் கொள்ளும் பிற உதாரணங்களுக்காக நாம் மற்ற கதைகளைத் தேடலாம், அங்கு டப்ளின் கதாபாத்திரங்களின் அன்றாட மொழியில் விரவியிருக்கும் ஆராயாமல் பெறப்பட்ட சிந்தனைகளும், மேற்கோள்களும், தேழ்வழக்குகளும் கதைப்பரப்பை ஊடுருவுகின்றன. எ மதர் (A Mother) கதையில் கேத்லீனின் ஆடையின் விலை பற்றிய கதைசொல்லியின் குறிப்பில் “pretty penny” என்ற வழக்கு இடம்பெறுவதற்கான காரணம் இதுதான். லிட்டில் கிளவுட் (Little Cloud) கதையில் லிட்டில் சாண்ட்லரின் மனைவி ஆனியின் புகைப்படமும் முகமும் “pretty” என்றும் அவளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறைகலன்கள் “prim and pretty” என்றும் அடைமொழியப்படுகின்றன. கிளே‘ (Clay) கதையில் மரியாவின் உலகம் “nice” மக்களால் நிறம்பியிருக்கும் அவர்கள் அளிக்கும் விருந்துகளும் “nice”ஆக இருக்கும், அவற்றில் குழந்தைகள் பாடுவார்கள், அதே குழந்தைகள் விருந்தின் முடிவில் “சோர்வாகவும் தூக்கமாகவும்” இருப்பார்கள், ஏனெனில் மரியாவே தனது கதையைக் கூறினாள் என்றால், தனது வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும்படியான நிகழ்வுகள் ஏதும் இல்லை என்றாலும், அது ஆறுதலானதாகவும், “nice”ஆகவும் இருப்பதாகத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ள அவள் அப்படிப்பட்ட வார்த்தைகளில்தான் அதைக் கூறுவாள். எலியட்டின் ப்ரூஃப்ராக்கின் வரிகள் நினைவுக்கு வருகின்றன: The eyes that fix you in a formulated phrase / And when I am formulated, sprawling on a pin, ஜாய்ஸ் தன் புத்தகத்தின் பக்கங்களில் மொழியெனும் ஊசியைக் கொண்டு இந்த டப்ளினர்களைத் தன் கதையின் பக்கங்களில் குத்தி வைத்து அவர்களின் எபிஃபானிகளை வெளிப்படுத்துகிறார் என்று சொன்னால் இந்தத் தடையிலாப் படர்க்கை உத்தியானது அவர்களைத் தங்களைத் தாங்களே ஊசியின் மேல் விழ வழிவகுக்கிறது

——————————————————-
டப்ளினில் காலை 9:00 மணியளவில் தரைதட்டினோம். ஹோட்டலில் அறைக் குழப்பத்தைச் சரிசெய்து, ‘லியோபோல்ட் ப்ளூமின் (Leopold Bloom) கால்தடங்களில்’ என்ற யூலிசிஸ் நாவல் சார்ந்த நடைப்பயணத்திற்கு ஜேம்ஸ் ஜாய்ஸ் மையத்திற்குச் செல்ல எங்களுக்குப் போதுமான நேரம் மட்டுமே இருந்தது. ஹோட்டல் லிஃபி நதிக்குத் தெற்கே ஃப்ளீட் ஸ்ட்ரீட்டில் (Fleet Street) புகழ்பெற்ற டெம்பிள் பார் (Temple Bar) பகுதியில் இருந்தது. கவுண்டர்பார்ட்ஸ் (Counterparts) கதையில் “பப்களின் ஆறுதலுக்காக ஏங்கும் பெரிய உடல்” கொண்ட ஃபார்மிங்டன் (Farmington) டெம்பிள் பாரின் குறுகிய சந்துக்குள் விரைந்து செல்கிறான், அது ஃப்ளீட் ஸ்ட்ரீட்டிலிருந்து டெர்ரி கெல்லியின் (Terry Kelley) அடகுக் கடைக்கு அவனை இட்டுச் செல்கிறது, அங்கு அவன் தனது வாட்ச்-செயினை ஆறு ஷில்லிங்களுக்கு அடகு வைக்கிறான். ஆனால் இது டப்ளினர்ஸ் துணுக்குகளைத் தோண்டி எடுப்பதற்கான நேரம் அல்ல, யூலிசிஸ் வடக்கு ஜார்ஜ்ஸ் ஸ்ட்ரீட்டில் (North Georges street) எங்களுக்காகக் காத்திருந்தது, அங்கு கால் நடையாகச் செல்ல 20 நிமிடங்கள் மட்டுமே இருந்தன. அடித்துப் பிடித்து சென்றடைந்தோம்; மையம் பதினெட்டாம் நூற்றாண்டு செங்கல் முகப்புடைய ஜார்ஜியன் டவுன்ஹவுஸ் ஒன்றில் அமைந்திருந்தது, உள்ளே நுழையும் முன் நான் இடதுபுறம் திரும்பி, வடக்கு கிரேட் ஜார்ஜ்ஸ் ஸ்ட்ரீட்டின் வடமுனையில் பெல்வெடேர் கல்லூரியின் (Belvedere College) ஐந்து பகுதி நான்கடுக்கு ஜார்ஜியன் முகப்பைக் கண்டபோது ஜாய்ஸும் அவரது கதாபாத்திரம்/மாற்று சுயமான ஸ்டீபன் டெடலஸும் அங்குதான் படித்தார்கள் என்று என் மனைவியிடம் கூறினேன். பயணம் டப்ளின் தெருக்களிலிருந்து எனது வாசிப்பு நினைவுகளின் தாழ்வாரங்களுக்கும், எனது நூலகத்துக்கும், குறிப்பாக எனது நூலகத்தின் ஒரு கீழ் அலமாரிக்கும், ஒரு தொடர்ச்சியான வருகையாக இருக்கப் போகிறது என்பதை நான் உடனடியாக அறிந்து கொண்டேன், தசாப்தங்களுக்கு முன் ஜாய்ஸ் மீது வெறிபிடித்து, ஒரு வருடமாக அவரைத் தவிர வேறெவரையும் படிக்காத காலத்திலிருந்து அந்த அலமாரி ஜாய்சின் / அவரைக் குறித்த, நான் சேகரித்த அனைத்து விசித்திரமான புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் காலாண்டு வெளியீடுகளைக் கொண்டிருந்தது.
எங்கள் வழிகாட்டியும் சுற்றுலாக் குழுவின் சில நபர்களும் இன்னும் வரவில்லை என்பதால் மையத்தைப் பார்ப்பதற்கு எங்களுக்கு நேரம் கிடைத்தது. தரைத் தளத்தில் உள்ள அலுவலகத்துக்கு எதிரே மஜின்னி அறை (Maginni Room) இருந்தது, சுவர்ப்பூச்சு வேலைப்பாடுகளுடனும் நடனக் காட்சிகளின் பதக்கங்களுடனும் அழகாக இருந்தது. மேலும், யூலிசிஸ், ஃபினிகன்ஸ் வேக்கின் பல்வேறு பதிப்புகளை அங்கே பார்வைக்கு வைத்திருந்தார்கள்: Anna Livia Plurabelle-இன் ஒரு கையெழுத்திட்ட பிரதி, Our Examination Round His Factification for Incamination of Work in Progress என்ற அற்புதமான தலைப்பைக் கொண்ட வேக்கின் ஒரு ஆரம்பப் பிரதியைக் குறித்த கட்டிரைகளைத் தொகுக்கும் ஷேக்ஸ்பியர் & கம்பெனி பதிப்பு, புகழ்பெற்ற ஜாய்ஸ் அறிஞர் டேவிட் ஹேமன் (David Hayman) அவர்களால் குறிப்புகளுடன் தொகுக்கப்பட்ட A First Draft Edition of the Wake, ஃபிராங்க் பட்ஜன் (Frank Budgen) சேகரிப்பிலிருந்து The Mime of Mick, Nick and the Maggies என்ற மற்றொரு அற்புதமான தலைப்பு), படைப்புகளின் விசித்திரமான ஆனால் தற்போது புனிதமாகிவிட்ட வெளியீட்டு வரலாற்றை அவை நினைவுகூர்ந்தன. அறைக்குத் தன் பெயரை அளித்த மஜின்னி கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஒரு பிரபலமான “நடனப் பேராசிரியர்” (Denis J Maginni); ஆடம்பரங்களுக்குப் பேர் போனவர். இந்தக் கட்டிடத்தில்தான் அவர் கற்பித்தார், ப்ளூமின் அலைபாயும் கற்பனையில் லெஸ்ட்ரிகோனியன்ஸிலும் (Lestrygonians) ‘எயோலஸ்’ (Aeolus), ‘வாண்டரிங் ராக்ஸ்’ (Wandering Rocks) அத்தியாயங்களிலும் சுருக்கமாகத் தோன்றுகிறார், இறுதியாக பெல்லா கோஹனின் வால்பர்கிஸ் இரவைப் போலிருக்கும் கனவுச் சாகசமான ‘கீர்கே’ (Circe) அத்தியாயத்தில், ஒரு நடனத்தை ஒருங்கினைத்து, நாளின் வெவ்வேறு மணிநேரங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கும் நடன அசைவுகளை ஸ்டீஃபனுக்கு பிரெஞ்சில் உறக்கமாகப் போதிக்கிறார்.
நான் விரைவாக உள்ளே நுழைந்து, ஜாய்ஸின் கொள்ளு மருமகன் பால் ஜாய்ஸ் (Paul Joyce) யூலிசிஸ்-இன் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் வரைந்த சுவரோவியங்களைக் கொண்ட அதன் அற்புதமான முற்றத்தையும், 7 எக்லஸ் தெருவின் (யூலிசிஸ்-இல் ப்ளூமின் முகவரி) புகழ்பெற்ற கதவையும், அதன் தட்டுவாணையும், அதைச் சுற்றியுள்ள கற்களையும் பார்க்கச் சென்றேன். அநேகமாக இலக்கியத்தில் மிகவும் பிரபலமான முகவரி இதுவாகத்தான் இருக்கும். அது ஜாய்ஸ் வாழ்க்கை வரலாற்றின் புனிதத்துடன் கலந்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஜாய்ஸின் நண்பர் ஜான் பிரான்சிஸ் பர்ன் (John Francis Byrne) இந்த முகவரியில்தான் வசித்தார், மேலும் தனது மனைவி நோரா (Nora) தனக்கு விசுவாசமாக இருக்கிறார் என்ற உறுதிமொழியை ஜாய்ஸ் இந்த வீட்டில்தான் பெற்றார். நாடு கடந்து புத்தகம் எழுதிய ஜாய்ஸ் பர்னின் விருந்தோம்பலை நினைவுகூரும் வகையில் ப்ளூமுக்கு இந்த முகவரியையும், பர்னின் சில உடல்ரீதியான குணாதிசயங்களையும் அளித்ததோடு மட்டுமல்லாது, சில கூடுதல் வாழ்க்கை வரலாற்றுத் துணுக்குகளையும் – உதாரணமாக தனது வீட்டுச் சாவியை மறந்துவிட்டு, கம்பி வேலி மீது ஏறி அடித்தளக் கதவு வழியே நுழைந்து ஜாய்ஸை உள்ளே அனுமதித்தது போன்றவை – புத்தகத்தில் பொதித்து வைத்தார். 1904ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி அனைத்து சாமான்யர்களின் பிரதிநிதியான எவ்ரிமேன் ப்ளூம் தனது அன்றாட ஆடிஸியை (Odyssey) மேற்கொள்வதற்காக வெளியேறிய அந்தக் கதவு, நம்மில் பலருக்கு ஒரு நவீனத்துவ கண்டுபிடிப்பு வாயில், அதனால் இயல்பாகவே ஒரு கணம் என் தலை, ஒரு பிரார்த்தனையை நிறைவேற்றுவது போல், குனிந்தது. இந்தக் கதவு தற்செயலாகவே 1967ஆம் ஆண்டு எக்லஸ் தெரு இடிப்பிலிருந்து தப்பியது; கவிஞர் பாட் கவானா (Pat Kavanaugh), நாவலாசிரியர் ஃப்ளான் ஓ’ப்ரையன் (Flann O’Brien – அவரது At Swim Two Birds நாவல் நகைச்சுவை திறனில் யூலிசிஸுக்கே போட்டியாக இருக்கும்) மற்றும் பெய்லி பப் உரிமையாளர் ஜான் பெய்லியின் (John Bailey) முயற்சியால், இந்தக் கதவு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு அம்மதுகூடத்தில் நிலைத்திருந்தது. அதன் பின்னரே அதன் மங்களகரமான தற்போதைய இடத்திற்குப் பெயர்ந்தது. டப்ளினின் எவ்ரிமேன் வசித்த வீட்டின் கதவு, அவன் வழக்கமாக பருகும் ஒரு பொது இடத்தில் இருந்தது எவ்வளவு பொருத்தமானது என்று நான் நினைத்துக் கொண்டேன்.
சுற்றுலா வழிகாட்டி ஓர் ஐரிஷ் இளைஞர் (நான் சரியாகக் கேட்டிருந்தால், ஒரு இலக்கியப் பட்டதாரி), அவர் யூலிசிஸ்-இன் பழைய காகித அட்டைப் பதிப்பின் தேய்ந்த பிரதியொன்றைக் கையில் வைத்திருந்தார், அதிலிருந்து ஒரு கொத்து மஞ்சள் போஸ்ட்-இட் நோட்ஸ் வெளியே துருத்திக் கொண்டிருந்தன. கலவையான சுற்றுலாக் குழுவைத் தெருவைக் கடக்கும்படி வழிநடத்தி பெல்வடேர் கல்லூரியைச் சுட்டிக்காட்டினார். பின்னர் சுற்றுலா ‘லெஸ்ட்ரிகோனியன்ஸ்’ அத்தியாயத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதை எங்களுக்குத் தெரிவித்தார். எனக்கு அது வேடிக்கையாகத் தோன்றியது; தரையிறங்கிய பிறகு ஒரு சரியான காலை உணவுக்கு நேரம் கிடைக்காததால் நான் பசியுடன் இருந்தேன், மேலும் ‘லெஸ்ட்ரிகோனியன்ஸ்’ என்பவர்கள் ஹோமரின் ஆடிஸி-இல் ஒடிஸியஸ் (Odysseus) சந்திக்கும் மனித மாமிசம் உண்ணும் பழங்குடியினர். உண்மையில் முழு அத்தியாயமும் உணவு உண்ணுதல், செரிமானம், கழிவுநீக்கம் போன்ற உணவு தொடர்பான விஷயங்களால் கட்டமைக்கப் பட்டிருந்தது, ஒவ்வொரு பக்கத்திலும் உணவைப் பற்றிய குறிப்புகள் விரவிக் கிடந்தன. என் பசிக்கு ஏற்ற அத்தியாயம்தான் என்று நினைத்துக்கொண்டேன்.

பார்னெல் தெரு (Parnell St) வழியாகச் சில நிமிடங்கள் நடந்து, 49 ஓ’கானல் ஸ்ட்ரீட் லோயருக்குச் சென்றோம் (O’Connell St Lower), அங்கு கிறித்துவ சகோதரர் ஒருவரை லெமன்ஸ் இனிப்புக் கடையில் ப்ளூம் பார்க்கிறான், மத மறுமலர்ச்சி கூட்டத்திற்கான ஒரு விளம்பரம் அவன் கையில் திணிக்கப்படுவதிலிருந்து அத்தியாயம் தொடங்குகிறது (புத்தகத்தின் பிந்தைய பகுதிகளில் பல நகைச்சுவையான பின்விளைவுகளுடன்). லெமன்ஸ் கடைக்குப் பதிலாக இப்போது ஒரு ஃபுட்லாகர் (Footlocker) கடையின் (‘tastes like leather’ என்ற வழக்கு எங்கிருந்து வந்திருக்கும் என்று ப்ளூம் யோசித்திருப்பார்) இருண்ட முகப்பே எங்களை வெறித்தது (குறைந்தபட்சம் அதன் பெயராவது சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கிறதே என்று நான் எனக்கே சொல்லிக்கொண்டேன், நிறத்திற்கு இரத்தச் சிவப்பும், கலைக்குக் கட்டிடக்கலையும் என்ற இந்த அத்தியாயத்திற்கான, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு நேரம், நிறம், கலை அல்லது துறை என்று வரையறுக்கும் திட்டமான, லினாடி ஸ்கீமாவை (Linati schema), நினைவுகூர்ந்தபடி), ஆனால் பழைய கடையின் “கன்பெக்ஷனர்ஸ் ஹால்” (Confectioner’s Hall) என்ற பெயர்ப்பலகை இன்னும் பாதுகாக்கப்பட்டிருந்தது எழுத்துப்பிழையுடன். மேலும் யூலிசிஸ்-இல் அதன் இருப்பை ஃபுட்லாகர் கடைக்கு முன்னால், நடைபாதையில், ஒரு வெண்கலத் தகடு இன்னமும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. ராபின் பியூயிக் (Robin Buick) உருவாக்கிய 14 தகடுகள் டப்ளின் தெருக்களில், அந்தந்த இடங்களுக்குப் பொருத்தமான புத்தக மேற்கோள்களுடன் பொதிக்கப்பட்டிருக்கின்றன. வழிகாட்டி தனது யூலிசிஸ் பிரதியைத் திறந்து, அத்தியாயத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்தார், டப்ளின் தெருக்களில், யூலிசிஸ்-இன் எப்போதும் அலைந்து திரியும் கதாபாத்திரங்கள் அலைந்து திரிந்த அதே தெருக்களில் டப்ளின் உச்சரிப்பில் அவர்களைக் கேட்பது மிகச்சரியாகவே இருந்தது.
அடுத்த ஒன்றரை மணிநேரம் அவர் எங்களை ‘லெஸ்ட்ரிகோனியன்ஸ்’ அத்தியாயத்தின் அத்தியாயத்தின் வழித்தடத்தில் அழைத்துச் சென்றார், முக்கியமான அடையாளங்களைக் குறிப்பிட்டு, புத்தகத்தின் சுவையான பகுதிகளை வாசித்துக் காட்டினார்: பேச்சலர்ஸ் வாக் (Bachelor’s Walk) (அங்கு டில்லி டெடலஸ்ஸை (Dilly Dedalus) ஒரு கிழிந்த உடையில் பார்த்த ப்ளூம் – அவளது தந்தையும் சகோதரனும், சைமனும் ஸ்டீஃபன் டெடலஸும் அருகில் உள்ள ஓவல், மூனிஸ் மதுக்கூடங்களில் அலட்சியமாகப் பேசிக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உபரி தகவல் – அவளது உருளைக்கிழங்கு, மார்ஜரீன் உணவைக் கற்பனை செய்கிறான்), ஓ’கானல்ஸ் சிலை (எப்போதும் தலையில் ஒரு தனித்து நிற்கும் கடற்பறவையுடன்), ஓ’கானல்ஸ் பிரிட்ஜ், (கின்னஸ் (Guinness) படகுகளில் இருந்து வரும் புகைப்பந்துகள், கடற்காகங்களுக்கு உணவளித்தல்), பலாஸ்ட் ஹவுஸ் கட்டிடம் (Ballast House building) (ப்ளூமின் காலத்தில் ஜி.எம்.டி 1.00 மணிக்கு அதன் கூரையிலிருந்து ஒரு செப்பு கோளம் இறங்கும்), கலைக்கப்பட்டதற்கு முன் பாராளுமன்றக் கட்டிடமாக இருந்த பேங்க் ஆஃப் அயர்லாந்து (Bank of Ireland), ஒருகாலத்தில் சிறுநீர் கழிக்கும் இடமாக இருந்த இடத்தில் தாமஸ் மூரின் (Thomas Moore) சிலை அதன் “குறும்புக்கார விரலுடன்” (“நீர்களின் சந்திப்பு” என்று ப்ளூமின் நகைச்சுவை கற்பனை பொருத்தமாக வெளிப்படுத்துகிறது, மூரின் பிரபலமான மெலடிகளின் தலைப்பையும் சிலையின் சூழலையும் பிணைத்து), அதன் “கடுமையான முகப்புடன்” ட்ரினிட்டி கல்லூரி (Trinity College), கிராஃப்டன் தெருவும் (Grafton Street) இன்னமும் நிலைக்கும் புகழ்பெற்ற பிரவுன் தாமஸ் (Brown Thomas) கடையும் (ஆனால் ப்ளூமின் எண்ணங்களை அவன் மனைவி மாலிக்கு இட்டுச் சென்ற பெட்டிக்கோட்டுகளும் ஸ்டாக்கிங்குகளும் இப்போது சாளரத்தில் இல்லை), ப்ளூம் இறுதியாக தனது மதிய உணவைச் சாப்பிட்டு அதன் முற்றத்தில் சிறுநீர் கழிக்கும் டேவி பர்ன்ஸ் (Davy Byrne’s) (இன்றும் கொர்கன்சோலா சாண்ட்விச் (Gorgonzola Sandwich) பரிமாறப்படுகிறது! – எனது பசியோ இன்னும் அதிகரித்துக் கொண்டிருந்தது) பர்ட்டன் ஹோட்டல் (அதன் காட்சிகளும் துர்நாற்றங்களும் ப்ளூமை, இலக்கியத்தின் மிக அருவருக்கத்தக்க உணவுண்ணும் காட்சியொன்றில், வெறுப்படையச் செய்கின்றன:
A man spitting back on his plate: half masticated gristle: no teeth to chewchewchew it… reek of plug, spilt beer, men’s beery piss, the stale of ferment…scoffing up stew gravy with sopping sippets of bread. Lick it off the plate man! Get out of this., )

மோலஸ்வொர்த் ஸ்ட்ரீட்டில் (Molesworth Street) உள்ள ஃப்ரீமேசன் ஹால் மற்றும் இறுதியாக சூரிய ஒளியின் பிரகாசத்தில் ஒரு வைக்கோல் தொப்பியும், உயர்த்தப்பட்ட கால்சட்டையும் அணிந்த ஒருவனை மனைவியுடன் கள்ள உறவு வைத்திருப்பதாகச் சந்தேகிக்கும் ப்ளேசஸ் பாய்லனெனத் (Blazes Boylan) தவறுதலாக நினைத்து, அவனைத் தவிர்ப்பதற்காக, பிரபலமான இலக்கியப் பதுங்கல்களொன்றில் நேஷனல் மியூசியம் வாயிலுக்குத் வலதுபுறம் திரும்பும் (பழைய விளம்பரமொன்றைக் காப்பகங்களில் தேட அருகில் உள்ள தேசிய நூலகத்துக்கு இடதுபுறம் திரும்புவதற்குப் பதிலாக) கில்டேர் ஸ்ட்ரீட் (Kildare Street) வரையிலும் உலா நீடித்தது.

அவன் முன்னதாகவே அந்த அத்தியாயத்தில் நூலகத்தில் உள்ள தேவதைகளின் சிலைகள் உடற்கூறியல் ரீதியாக சரியானதா, குறிப்பாக அவற்றிற்கு ஆசனவாய்கள் இருக்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்கத் தீர்மானித்திருந்தான்! அடுத்த அத்தியாயமான ஸ்கில்லாவும் ஷரிப்டிஸ்சும்-இல் (Scylla &Charybdis) மல்லிகன் அவனை அருங்காட்சியகத்தில், வீனஸ் கேலிபிகி (Venus Callipyge) சிலையின் பின்புறத்தை ஆராய்ந்து கொண்டிருக்கையில் கையும் களவுமாகப் பிடித்து, அவனுக்கு ஓரினச்சேர்க்கை உணர்வுகள் இருக்கலாம் என்ற வதந்தியை முன்வைக்கிறான்: “ஓ! எனக்கு பயமாக இருக்கிறது, கிரேக்கர்களைவிட கிரேக்கன் அவன். அவனது வெளிறிய கலிலேயக் கண்கள் அவளது நடுப்பகுதிப் பிளவை உற்றிருந்தன.”

தேசிய நூலக வாயிலுக்கு முன்னால் சுற்றுலா வழிகாட்டி எங்களிடம் விடைபெற்றார்; நாங்கள் புறப்படுவதற்கு முன் அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் யேட்ஸ் (Yeats) கண்காட்சியை விதந்தோதினார். ஜாய்ஸ் மட்டுமே ஐரிஷ் இலக்கிய மேதை அல்ல என்பதற்கான ஒரு நல்ல நினைவூட்டலாக அது அமைந்தது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இலக்கியம், சரிதை, கட்டிடக்கலை, கிசுகிசு, வரலாறு காலனித்துவ துயரம் என்று ஒரு கதம்பமாக அந்த இலக்கியச் சுற்றுலா சுவாரஸ்யமாக இருந்தது என்றே கூறவேண்டும். ஒரு புத்தகத்தின் பக்கங்களினூடே நடப்பது விசித்திரமாக இருந்தது, மேலும் ஜாய்ஸ் தனது புத்தகத்தின் நம்பகத்தன்மைக்காக, மிகச் சிறு விவரத்துக்காகக் கூட ஏன் அவ்வளவு மெனக்கெட்டார் என்பதை நான் புரிந்துகொண்டேன். அங்கு “யாரையாவது” குடியேற்றுவதற்காக எக்லஸ் தெரு வீடு காலியாக இருக்கிறதா என்று சரிபார்க்க 1904ஆம் ஆண்டு தாம்ஸ் டைரக்டரியை (Thom’s directory) தேடுவது, அல்லது தனது அத்தை ஜோசஃபைனிடம் ‘ஒரு சாதாரண 7 எக்லஸ் ஸ்ட்ரீட் வீட்டின் வேலியைத் தாண்டிக் குதிக்க முடியுமா’ என்று கேட்டெழுதுவது போன்ற மெனக்கெடல்கள். நாங்கள் நடந்து வந்த வழியை மறுபரிசீலனை செய்தபோது, ஓ’கானல் ஸ்ட்ரீட் பகுதி உணவுக்குழாய் போலவும், வெஸ்ட்மோர்லேண்ட், கிராஃப்டன் தெருப் பகுதிகள் வயிறு போலவும், டேவி பர்ன் மற்றும் மோலஸ்வொர்த் தெருவில் இருக்கும் பகுதிகள் குடல்கள் போலவும், கில்டேர் தெருவில் அருங்காட்சியகம் ஆசனவாய் போல முடிவடைவதையும் காண முடிந்தது. ஜாய்ஸ் கட்டிடக்கலையையும் உணவுச் செரிமானத்தையுமே இந்த அத்தியாயத்துக்கான திட்டமாகக் கொண்டிருந்தார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள கம்பீரமான கட்டிடங்கள் ஆடிஸியின் லெஸ்ட்ரிகோனியன் துறைமுகத்தின் பாறைகளை நினைவூட்டும் வகையில் அத்தியாயம் கட்டமைக்கப்பட்டிருப்பதையும் நாம் ஊகிக்கலாம். டப்ளினின் இந்தப் பகுதியின் நெரிசலான தெருக்களில் டப்ளினர்கள் நின்று நகர்வது செரிமானத்தில் ஈடுபடும் குடல்சுருக்க அலைவுகளையும் (peristalsis), அவர்கள் தங்கள் நகரத்தின் கடுமையான யதார்த்தத்தால் மென்று துப்பப்படுவதையும். இதைப்போல் நாவலில் ஜீரணிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும், என் பசி அதன் பொறுமையை இழந்தது; நாங்கள் டியூக் ஸ்ட்ரீட்டை நோக்கி நடந்தோம். துரதிர்ஷ்டவசமாக டேவி பர்ன்ஸ் (ப்ளூமின் அடைமொழியில் – “The moral pub”) நிரம்பி இருந்தது, நாங்கள் அதற்கு எதிரே இருந்த உணவகத்தில் வயிறு நிரம்ப சாப்பிட்டோம். மதிய உணவுக்குப் பிறகு எங்கள் விடுதிக்குத் திரும்பி, மிகவும் தேவையான, ஒரு தூக்கத்தைப் போட்டோம். மாலையில் காப்பி, பேஸ்ட்ரிக்களைத் தேடி டெம்பிள் பார் பகுதியைச் சுற்றித் திரிந்தபோது, ஆலிவர் கோகார்ட்டியின் டெம்பிள் பார் (Oliver Gogarty’s Temple Bar) விடுதியின் பக்கத்தில் பக் முல்லிகன் என்ற கோகர்டியையும் கிஞ்ச் டெடலஸ் என்ற ஜாய்ஸையும் (Buck Mulligan / Kinch Dedalus) சந்தித்தோம், மேலும் அருகில் உள்ள ஆங்கில்சீ தெருவில் (Anglesea) உள்ள ப்ளூம்ஸ் ஹோட்டலில் ப்ளூம், மாலி மற்றும் ஸ்டீஃபனின் கண்கவர் சுவரோவியங்களைக் கண்டோம். டப்ளினில் ஜாய்ஸிடமிருந்து தப்பிக்க முடியாது என்று தோன்றியது.
எதிர்பார்த்தது போல் மனைவி ஜாய்ஸ் குறித்த மிகைப் புனிதமயமாக்கலையும் ஆரவாரத்தையும் பற்றி என்னிடம் கேட்டாள், நான் அவளுக்கு கிளிஃப் கோனாறுகளின் பாணியில் பதிலளித்தேன். ட்ரோஜன் போருக்குப் பிறகு, பத்து ஆண்டு நாடு கடத்தலை முடித்துவைக்கும் வழியில், இதகாவில் (Ithaca) தனது மனைவி பெனலபி மகன் டெலமாக்கஸ்சுடன் (Penelope /Telemachus) இணைவதற்காக யூலிசிஸ் வீடு திரும்புவதிலிருந்து ஹோமரின் ஆடிஸி தொடங்குகிறது. பகலில் நெய்ததை இரவில் அவிழ்ப்பதன் மூலம் பெனலபி தான் நெய்து கொண்டிருக்கும் திரையை முடிக்காது, சூட்சுமமாக தடுத்து வைத்திருக்கும் அவள் கரம்பற்ற விரும்புவர்களால் தன் வீடு நிரம்பியிருப்பதை யூலிசிஸ் காண்கிறான். உடனடியாக அவர்களைப் படுகொலை செய்து, இல்லறத்தில் இன்புற்றிருக்க முயல்கிறான். ஆனால் அவனோ குடும்ப வாழ்க்கைக்கு முற்றிலும் பொருந்தாதவன். தனது குறைகளையும் மீறி சாமர்த்தியமான யூலிசிஸின் அலைந்து திரியும் விருப்பத்தைப் பற்றிய தனது பெரிய கவிதையின் தொடக்கத்தில் “லான் டென்னிசன்” (Lawn Tennyson) இதை மிகச் சரியாகப் படம்பிடித்தார் (பயன்பாட்டு ரீதியான கிளிஃப் வழிகாட்டியை நகலிப்பதுதான் எவ்வளவு கடினம்!).
It little profits that an idle king,
By this still hearth, among these barren crags,
Match’d with an aged wife, I mete and dole
Unequal laws unto a savage race,
That hoard, and sleep, and feed, and know not me.
I cannot rest from travel; I will drink
Life to the lees.
பாவப்பட்ட டெலமாக்கஸ்ஸுக்கு மிகவும் மூர்க்கமான இடக்கரடக்கல்மிக்க இடது கை பாராட்டு கிடைக்கிறது.
Of common duties, decent not to fail
In offices of tenderness, and pay
Meet adoration to my household gods,
When I am gone. He works his work, I mine.
சாகசங்களை நாடி முதிய தந்தை மீண்டும் ஒரு பயணத்துக்குப் புறப்படுகிறார், பாவம் அந்தப் பையன், எதிர்கால மனநல மருத்துவர்களையும் சோஃபாக்களையும் கனவு காண்கிறான் என்றே நாம் கற்பனை செய்துகொள்ள வேண்டும். காலங்களை வேகமாகக் கடந்து இருபதாம் நூற்றாண்டு டப்ளினுக்கு விரைந்தோமானால், பப் பப்பாக அலைந்து திரியும் சைமன் டேடலஸ் – திறமையான பாடகர், குடிபோதை உரையாடல்களின் வித்வான், மறக்க முடியாத நகைச்சுவைத் துணுக்குகளின் சேகரர் – என்று சுவாரசியமான பொதுஜன ஆளுமையையும் ஸ்டீபன் டெடலஸ் என்ற சிந்தனைகளால் மூழ்கடிக்கப்பட்டு, நினைவுகளால் ஒடுக்கபடும், கலையார்வங்களால் அந்நியப்பட்டிருக்கும் அவர் மகனையும் – சுருக்கமாக ஜான் ஸ்டானிஸ்லாஸ் ஜாய்ஸையும் (John Stanislaus Joyce) ஜேம்ஸ் ஜாய்ஸையும் சந்திக்கிறோம். ஸ்டீபன் டெடலஸ் யூலிசிஸ்சில் “தந்தை ஒரு அவசியமான தீமை” என்று கூறுகிறான், மேலும் ஒரு வகையில், முல்லிங்கர் பப் (Mullingar pub) உரிமையாளரான ஹெச்.சி.இ-ஐ (HCE) (Humphrey Chimpden Earwick/(Here Comes Everybody/ Haveth Childers Everywhere) கதாநாயகனாகக் கொண்ட ஃபினிகன்ஸ் வேக் (அதன் பெயரிலிலிருந்தே அதன் வார்த்தை விளையாட்டுகள் தொடங்கி விடுகின்றன – ஃபினிகனின் ‘வேக்” என்ற சாவு-ஊர்வலம் அல்லது உறக்கம் என்ற சாவிலிருந்து ஃபினிகன் குடும்பம் உயர்த்தெழுவது. நான் மிகவும் ரசித்தது அதன் Ricorso பகுதியில் வரும் சமஸ்கிருத வார்தை விளையாட்டை: Svadesia Salve! We Durbalanars theeadjure – தன்னைத் தானே நிர்ணயித்துக் கொள்பவனே (ஸ்வதேசி) எங்களைக் காப்பாற்று. நாங்கள், வலுவிழந்த (துர்பாலா) டப்லினர்கள், உன்னிடம் முறையிடுகிறோம்!) முழுவதுமே ஜான் ஜாய்ஸ் சாப்பலிசாடிலுள்ள (Chapelizod) டப்ளின் மது வடிசாலையில் முதலீட்டாளராகவும் நிறுவனச் செயலாளராகவும் மேற்கொண்ட சாகசங்களால் தனது குடும்பத்தை நிதி ரீதியாக அழிப்பது பற்றியது என்றும் வாசிக்கலாம். ஆனால் புனைகதைகளில் வாழ்க்கை வரலாற்றை அதிகமாகப் படிப்பதில் அபாயங்களும் இருக்கின்றன. ஏனெனில் மகன்-ஜாய்ஸ் தந்தை-ஜாய்ஸின் மரணத்தைப் பற்றிக் கூறியதையும் நாம் அந்த சரிதையில் வாசிக்கிறோம்: “அவர் தனது கடைசி மூச்சுவரை என்னைப் பற்றி நினைத்துப் பேசினார். எப்போதும் அவரை மிகவும் விரும்பினேன், நானும் ஒரு பாவி என்பதால்.” அவர் தனது தந்தையின் உருவப்படம் இல்லாமல் இருந்ததில்லை என்பதையும் நாம் அறிவோம், மேலும் எக்கே புவர் (Ecce Puer – அந்தோ சிறுவன்) கவிதையின் இறுதி வரிகளில் ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலியையும் வாசித்திருக்கிறோம்:
A child is sleeping:
An old man gone.
O, father forsaken,
Forgive your son!
இருப்பினும், யூலிசிஸ்சில் ஒரு மகன் (ஸ்டீஃபன்) தனது உயிரியல் தந்தையிடமிருந்து அந்நியப்பட்டு, ஒரு மாற்றுத் தந்தையைத் (ப்ளூம்) தேடும் ஒரு சித்திரம் நிச்சயமாகக் கிடைக்கிறது. டப்ளின் தெருக்களில் அருகருகே அலைந்து திரிந்தாலும், புத்தகம் அவர்கள் ஒருவருக்கொருவர் நாவலின் முதல் பகுதிகளில் சந்தித்துக் கொள்வதைக் கவனமாகத் தவிர்க்கிறது (இரண்டு முறை அவர்கள் அருகே கடந்து சென்றாலும்). ப்ளூம் அதற்கு ஏற்றாற் போல், தனது மகன் ரூடியை (Rudy) இழந்ததற்காக துக்கப்படும் ஒரு தந்தை, எனவே ஒரு மாற்று மகனைத் தேடிக்கொண்டிருப்பதாகக் அவனை நாம் கற்பனை செய்துகொள்ளலாம். இருவரும் டப்ளினின் வெவ்வேறு மூலைகளிலிருந்து (ஸ்டீபன் மார்டெல்லோ டவரிலிருந்தும் ப்ளூம் 7 எக்லஸ் தெருவிலிருந்தும்) அன்றாடப் பணிகளை (பள்ளித் தலைமை ஆசிரியர் டீசி (Deasy) foot & mouth நோயைப் பற்றிய தனது நீண்ட கடிதத்தை டப்ளின் செய்தித்தாள் ஒன்றில் வெளியிடுவதற்கு ஸ்டீபனின் உதவியை நாடியுள்ளார், ப்ளூம் நூலக ஆவணக் காப்பகங்களில் ஒரு விளம்பரத்தைத் தேடச் செல்கிறான்) நிறைவேற்றும் வெளிப்படையான நோக்கத்துடன் இருவரும் புறப்படுகிறார்கள். அவர்களின் பாதைகள் குறுக்கிடுகின்றன, ஆனால் ‘சிர்கே’ (Circe) அத்தியாயத்தில்தான் முதன்முதலாக சுருக்கமான உரையாடல் நடைபெறுகிறது, அதைத் தொடர்ந்து ‘யூமேயஸ்’இல் ப்ளூம் ஸ்டீஃபனுக்கு ஆலோசனை கூறுகிறான், இறுதியில் ‘இத்தகா’வில் ப்ளூமின் வீட்டில் உரையாடல் என்று சொல்லத்தக்க சம்பாஷனை நிகழ்கிறது. இதற்கிடையில் மாலி நாள் முழுவதும் வீட்டில் தனது மேனேஜர்/ காதலன் (அவள் ஒரு பாடகி) ப்ளேசஸ் பாய்லனை எதிர்பார்த்து, தனது நினைவுகளைப் பெனலபியைப் போல் நெய்து /அவிழ்த்துக் கொண்டிருக்கிறாள்; அது யூலிசிஸ்ஸை முடித்துவைக்கும் அந்தப் புகழ்பெற்ற மோனோலாக் என்ற உள்ளுரைக்கு இட்டுச் செல்கிறது. பாரம்பரிய கதைக்களம் (அல்லது அதன் இல்லாமை?) என்று பார்த்தால் இவ்வளவுதான், ஆனால் யூலிசிஸ் என்ற தலைப்பை (அத்தியாயத் தலைப்புகளை ஜாய்ஸ் நீக்கிவிட்டார், விமர்சக வசதிக்காக மட்டுமே அவை குறிப்பிடப்படுகின்றன) ஒட்டிக்கொண்டால், இந்தச் சாதாரணமான அன்றாடக் கதை அதற்கே உரிய புராணச் சுட்டுதல்களைப் பெறுகிறது. ப்ளூம் யூலிசிஸ்சாகவும், ஸ்டீபன் டெல்மாக்கஸ்சாகவும் மாலி பெனலபியாகவும் அத்தியாயங்கள் ஹோமரின் ஆடிஸி அத்தியாயங்களுடன் (நான் முன்னதாக உணவு/நரமாமிச உண்ணும் சுட்டுதல்களைப் பற்றிப் பேசினேன், சிர்கேவில் புகழ்பெற்ற விபச்சார விடுதி காட்சியையும், இத்தாகாவில் (Ithaca) வீடு திரும்புவதையும் காண்கிறோம்) ஒத்திருக்கும் வகையிலும் நாவல் திட்டமிடப்பட்டிருக்கிறது. நீங்கள் யூலிசிஸ்சுக்கு முதல் முறையாக வருகிறீர்கள் என்றால், இந்தக் கட்டமைப்பில் நாவலை, ஸ்டூவர்ட் கில்பர்ட் (Stuart Gilbert) அல்லது ஹாரி பிளேமர்ஸின் (Harry Blamires) புத்தகங்களைத் துணை வழிகாட்டிகளாகக் கொண்டு தொடங்கலாம். மிகவும் மும்முரமான சாகச ஆர்வமுள்ள (கர வலிமையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!) வாசகர்களுக்கு டான் கிஃபோர்ட் (Don Gifford) தொகுத்தளித்துள்ள சிறந்த குறிப்புகளையும் சாம் ஸ்லோட் (Sam Slote) துணையாசிரியர்களுடன் தொகுத்திருக்கும் பெரிய ஆக்ஸ்ஃபோர்ட் நூலையும் பரிந்துரைக்கிறேன்.
ஆனால் யூலிசிஸ்சின் அசல் கதையும் நாடகமும் அதன் உரைநடையில் நடைபெறுகிறது, ஏனெனில் யதார்த்தத்தின் மெய்ம்மையிலிருந்து முற்றிலும் விடுபட்டிருக்கும் அன்றாட மொழியே அதன் உண்மையான அக்கறை: அம்மொழியின் எந்த அர்த்தமுள்ள அடிப்படையோ சூழல் சார்ந்த அறிவோ இல்லாத ஒரு பரவலான மேலோட்டத் தன்மை, பெறப்பட்ட கருத்துகளை அர்த்தமற்ற முறையில் அனிச்சையாகத் திரும்பத் திரும்பக் கூறுவது, டப்ளினர்கள் அனைவரும் இப்போது ஃப்ளாபேரின் போவர்ட், பெக்குசெட் (Bovard & Pecuchet) போல இருப்பது, போன்றவற்றையே அந்நாவல் பகடி செய்கிறது. இதுவே டப்ளினர்ஸ்-இன் முதல் கதையிலேயே நாம் சந்தித்த உண்மையான பக்கவாதம். நான் தடையிலாப் படர்க்கை பற்றி சற்றுமுன் பேசினேன், அதில் கதைசொல்லும் குரல் கதாபாத்திரத்தின் பேச்சின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பேச்சுவழக்குகள் தாமே கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் டப்ளின் சமூகத்திலிருந்து கடன் வாங்கப்பட்டவை, அச்சமூகமே வேறு ஒரு நூற்றாண்டிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொல்லாட்சியையே பயன்படுத்த்திக் கொண்டிருந்தது. அந்நூற்றாண்டின் சூழலும் பின்புலமும் இப்போது மறைந்துவிட்டன. கதை சொல்லும் குரல், டப்ளினர்கள் பிரக்ஞையே இல்லாது கடன்வாங்கும் ஒரு விதமான மேடைப் பேச்சுமுறையையும் நாடகீயத்தையும் கேலி செய்கிறது, பேச்சாளர்களோ இறந்துவிட்டார்கள், ஆனால் அவர்கள் சொல்லாட்சி யதார்த்தத்தில் எந்த அடிப்படையும் இல்லாமல் தொடர்கிறது. ‘டப்ளினர்ஸ்-இல் அது கேலி செய்யப்பட்டாலும்கூட ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குரலையும் நம்மால் நம்ப முடிகிறது, அது சொல்லும் கதை அதன் அடிப்படை யதார்த்தத்தை வெளிப்படுத்தும் என்று. ஆனால் யூலிசிஸ்சின் கதை சொல்லும் குரல், நாவல் முன்னேறுகையில் அதன் கதாபாத்திரங்களிடமிருந்து விலகிச் செல்கிறது.
கதைசொல்லியின் குரல் கதாபாத்திரத்திலிருந்து கதையாடலுக்கு வாசகரைப் பதைபதைக்கும் வகையில் தனது கவனத்தைத் திசைதிருப்புகிறது. பல வாசகர்கள் இன்றும் கலை பாவனைகள் மிக்க கேப்ரியல் கான்வே, ஸ்டீபன் டெடலஸ் போன்ற பாத்திரங்களுக்குப் பொருத்தமான முறையான குறிப்பொருள் மற்றும் உணர்வெழுச்சி மிக்க லிரிக் கலவையையே அதிகம் விரும்புகிறார்கள், அந்த ஆரம்பகாலப் படைப்புகளில் கலைஞனின் சித்திரம் அவனது பாணியின் சித்தரிப்பாகவும் அமைகிறது. மேலும் ஸ்டீஃபன் குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்வயதுக்கு முன்னேறுகையில் பாணியும் பரிணாம வளர்ச்சி அடைவதை நாம் உணர்கிறோம் (“He was baby tuckoo. The Moocow came down the road” என்பது “He stood still in deference to their calls and parried their banter with easy words.” போன்றவற்றிற்கு மாறுகிறது என்ற அர்த்தத்தில்). இந்தப் பாணி யூலிசிஸ்சின் ஆரம்ப அத்தியாங்களான டெலமாக்கியாடிலும் (Telemachiad) தொடர்கிறது. அவற்றில் ஒரு கதை தனக்குச் சொல்லப்படுகிறது என்றும், அக்கதை ஒரு கதாபாத்திரத்தின் மனதின் அடிப்படைக் குணத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்றும் வாசகர் நம்புகிறார். ஆனால் புத்தகத்தின் இரண்டாம் பாதியில் (ஏயோலஸ்-Aeolus முதல்) பாணி கதாபாத்திரத்திலிருந்து விலகி தன்னையே சுட்டிக்கொள்ளும் தன்மைக்கு மாறுகிறது. கதையைச் சொல்வதிலிருந்து, கதை எவ்வாறு சொல்லப்படுகிறது என்பதில் கவனம் செலுத்துகிறது. நாவல் இதற்கு முன் சொன்னதை எடுத்துக்கொண்டு அதைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் தனது கடந்த காலத்தை உடைக்கிறது. ஒருக்கால் இப்படிக் கூறினால் எப்படியிருக்கும் என்று கேட்கத் தொடங்குகிறது. கதையை இரண்டு பாணிகளில் (சைக்லப்ஸ்-Cyclops), தேய்வழக்குகளில் (யுமேயஸ்-Eumaeus), இசைக்கு ஒத்த பாணியில் (சைரன்ஸ்-Sirens), எனது இலக்கிய முன்னோர்களின் பாணியில் (ஆக்ஸன் இன் தி சன்-Oxen in the Sun) கூறினால் என்ன ஆகும்? என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறது. பாணியின் தன்னிச்சையான எதேச்சைத்தனத்தின் நிரூபணமே இங்கு முயற்சிக்கப்படுகிறது. ஃப்ளோபேரின் “மெய்மையைக் கண்டரிவதற்கான ஒரு முழுமையான வழி” என்ற பீடத்திலிருந்து பாணி இப்போது அனுபவத்தை ஒழுங்குபடுத்துவதற்கான பல வழிகளில் ஒன்றாக மட்டுப்படுத்தப்படுகிறது. பிளாட்டோனிக் மெய்மையை மாயாஜாலமாக வெளிப்படுத்தும் சலுகை இப்போது அதற்கு அளிக்கப்படவில்லை. அத்தியாயங்கள் மேலும் மேலும் பெரிதாகி கதையைக் கதாபாத்திரத்திலிருந்து கதைசொல்லிக்கு மடைமாற்ற வழிவகுக்கின்றன. சோதனை முயற்சிகள் கதையின் முக்கிய உந்துதலை மேடையிலிருந்து புறன்தள்ளுகின்றன: மாலி பாய்லன் உடலுறவு கொண்டார்களா இல்லையா என்பதைத் தெளிவாக்க நாவல் மாலியின் உள்ளுரை வரையிலும் ஒத்திப்போடுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிந்தைய அத்தியாயங்களில் (உதாரணமாக ஆக்ஸன் இன் த சன்) ஒரு தலைகீழ் சவ்வூடுபரவல் நிகழ்கிறது, அங்கு கதைசொல்லி கதாபாத்திரத்தின் பாணியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, கதாபாத்திரம் இப்போது கதைசொல்லியின் பாணியைப் பின்பற்றுகிறது. நாவலால் கண்டுபிடிக்கப்படும் ஒரு புது உண்மை மெதுவாகவும் சீராகவும் நிரூபிக்கப்படுகிறது: பாணியே கதாபாத்திரம் என்பதே அவ்வுண்மை. முதல் அத்தியாயத்திலேயே பக் முல்லிகன் இதற்குக் கட்டியங்கூறுகிறான்: “God, we’ll simply have to dress the character. I want puce gloves and green boots” என்று அவன் வேடிக்கையாகக் கூறுகிறான். மேலும் பாணி மாறும்போது கதாபாத்திரமும் அதற்கேற்றாற் போல் மாறுகிறது. கதை சொல்லும் பாணிக்கும் கதாபாத்திர பாணிக்கும் இடையிலான எல்லைக்கோடு மெதுவாக அழிக்கப்படுகிறது, இது வாசகரிடம் ஒரு நிலையின்மையை உருவாக்குகிறது.
அதனால்தான், கதாபாத்திரத்திற்கும் கதைக்கும் இடையிலான சமநிலைக்குத் திரும்பும் நௌசிகா (Nausicaa) அல்லது பெனலபி (Penelope) போன்ற அத்தியாயங்கள், அடிப்படையில் பின்னோக்கிப் பார்க்கும் அத்தியாயங்களாக இருக்கின்றன. நம்முடைய இந்நாவல் வாசிப்பின் பழங்காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. நம்மை ஆசுவாசப்படுத்துவதற்காக நாவல் நமக்களிக்கும் உறுதிமொழியாக அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். உதாரணமாக நௌசிகாவில் நாம் தடையிலாப் படர்க்கைக்குத் திரும்புகிறோம், ஆனால் இப்போது கெர்டி மெக்டவலின் (Gerty Macdowell) நடையில் (அதுவோ மில்ஸ் அண்ட் பூன் வகைப் புத்தகங்களின் நடைக்கு நெருக்கமானது). அது மட்டுமல்லாது ப்ளூமின் உட்-தனியுரைக்கும் திரும்புகிறோம். சைரன்கள் (Sirens) மற்றும் சைக்லாப்ஸ்-இல் (Cyclops) நம்மைத் திடுக்கிட வைத்த பெயர்வுகள் ஆசிரியரின் ஒரு தற்காலிக பிழை என்ற பாவனையுடன் நௌசிகாவின் நடையில் பெருமூச்சுடன் ஆறுதல் கொள்கிறோம். பரிச்சயமான நாவல் களத்தில் ஸ்திரமாகக் கால் ஊன்றுகிறோம் ‘ஆக்ஸன் அண்ட் தி சன்’ (Oxen and the Sun) அத்தியாயத்தின் மிகைப் பாணிகள் அக்கால்களை அடியறுக்கும் வரை. நாவலின் முதன்மை கவனம் மொழியின் தரக்குறைவும் பாணியின் எதேச்சைத்தனமும்தான் என்பதைத் தாமதமாகவே உணர்ந்து கொள்கிறோம். ஜாய்ஸ் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால், கதையாடலின் குரல் ட்விட்டர் பாணியை இயல்பாகவே சுவீகரித்துக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பேச்சு மொழியின் தரக்குறைவு நம்மை எங்கு இட்டுச் செல்கிறது என்பதை ஜாய்ஸ் தொலைநோக்குடன் எதிர்பார்த்தார் என்பதற்கு யூலிசிஸே சான்று; அதன் மிகப்பெரிய சாதனையும்கூட.
வலிமை, வெறுப்பு, வரலாறு எல்லாம். அவமானமும் வெறுப்பும் நிறைந்த வாழ்க்கை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்றதல்ல. அதற்கெல்லாம் முற்றிலும் எதிரானதுதான் உண்மையான வாழ்க்கை என்று எல்லோருக்கும் தெரியும்… — அன்பு…வெறுப்புக்கு எதிரானது என்று நான் சொல்கிறேன்.
நேசம் நேசத்தை நேசிக்க விழைகிறது. செவிலி புதிய வேதியியலாளரை நேசிக்கிறாள். … இந்த நபர் அந்த மற்றொரு நபரை நேசிக்கிறார், ஏனென்றால் எல்லோரும் யாரையாவது நேசிக்கிறார்கள், ஆனால் கடவுள் எல்லோரையும் நேசிக்கிறார்.
மற்றும்
அவளது காதல் கனவையும், அவன்தான் அவளுக்கு எல்லாம், அவளுக்கு உகந்தவன் உலகில் அவன் ஒருவன் மட்டுமே என்று போதிக்கும் அவளது இதயத்தின் கட்டளைகளையும் அவள் பின்தொடர்வாள், ஏனெனில் அன்பே தலையாய வழிகாட்டி என்பதால்...
இம்மூன்று பத்திகளும் சமமானவை, கேலி செய்வதற்கு ஏற்றவை என்றால், எதார்த்தத்தை ஆராயும் திறனை இழந்த மொழியின் மேற்பரப்பு மட்டுமே எஞ்சியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகால டப்ளினில் நாம் சமூக ஊடக உலகின் எதிர்காலத்தில் ஆழமாக இருத்தப் படுகிறோம்.

——————————————–
ஜாய்ஸ் ஜாஸ்தியாகிவிட்டதால் முதல் நாளிலேயே மனைவி கடுப்பாகி விட்டாளோ என்று நான் ஜாக்கிரதையாகிக் கொண்டிருக்கையில் (ஸ்டீஃபனின் Agenbite of inwit -குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்பு), அதிர்ஷ்டவசமாக என் மகனும் அவனது தோழியும் எங்கள் மருமகளுடன் லண்டனில் அவள் பட்டமளிப்பு விழாவை முடித்துக்கொண்டு வந்தனர். எங்கள் சுற்றுப்பயணத்தின் மீதிப்பகுதியை அவர்களிடம் விட்டுவிட்டோம். இனி ஒரு புத்தகக் காதலனின் வெறித்தனமான தேர்வுகளின்றி பயணம் மிகவுமே மாறுபட்டதாக இருக்கும். இலக்கியப் பிரியர்கள் உலகத்தைப் புத்தகத்தின் நீட்சியாகக் காண்கிறார்கள், ஆனால் மற்றவர்களோ பொதுபுத்தியின் சமயோஜிதத்துடன் புத்தகங்களை உலகம் வழங்கக்கூடிய பல விஷயங்களில் ஒன்றாகப் பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் முதல் நாளில் சற்று ஆசுவாசமாக இருக்க முடிவு செய்திருந்ததால் அந்த நாளுக்கு ஒரே ஒரு திட்டமிடப்பட்ட நிகழ்வு மட்டுமே இருந்தது; ட்ரினிட்டி கல்லூரி (Trinity College) நூலகத்திற்குச் சென்று புக் ஆஃப் கெல்ஸ்-ஐப் (Book of Kells) பார்ப்பதே அன்றைய திட்டம். (குழந்தைகள் நம்மைவிட கனிவானவர்கள்!). கெல்ஸ் அப்பாயிண்ட்மண்ட் நேரம் வரை டப்லின் தெருக்களில் உலாவினோம். நான் குழந்தைகளை ஜாய்சிய துணுக்குகள் சொல்லி சலிப்பூட்டினேன்.
இவ்வளவு காலத்துக்கு (கி.பி. 800) முன் உருவாக்கப்பட்ட ஒளிரும், லத்தீன் மொழியில் அமைந்த, ஒரு கெல்டிக் (Celtic) நற்செய்தி புத்தகத்தை அதன் அசல் அழகில் (கடவுளே! அந்த மஞ்சள், துரு நிறங்கள்) ஐரிஷ் வரலாற்றின் கொடூரமான ஏற்ற இறக்கங்களையும் மீறி பார்க்க முடிந்தது, மனதைத் தொட்டது. ஜாய்ஸ் தனது வாழ்நாள் முழுவதும் அதை தன்னுடன் வைத்திருந்தார் என்பதை நினைவுகூர்ந்தேன். எழுதுவது குறித்து நண்பர் ஆர்தர் பவர் (Arthur Power) அவரிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் கெல்ஸ் புத்தகத்தையே சுட்டிக்காட்டினார். “நான் சென்ற அனைத்து இடங்களிலும், ரோம், சூரிச், ட்ரியஸ்ட்டில் அதை என்னுடன் எடுத்துச் சென்றிருக்கிறேன், அதன் வேலைப்பாடுகளை மணிக்கணக்காக உற்றிருப்பேன். நம்மிடம் இருக்கும் ஐரிஷ் வஸ்துக்களில் அதுவே மிகத் தூய்மையானது. மேலும் நம்மைச் சட்டென வசீகரிக்கும் அதன் பெரிய ஆரம்ப எழுத்துகள் யூலிசிஸ் அத்தியாயங்களின் அடிப்படைத் தரத்தைக் கொண்டுள்ளன. உண்மையில், எனது படைப்புகளில் பெரும்பாலானவற்றைச் சிக்கலான ஒளியூட்டல்களுடன் ஒப்பிடலாம்.” கெல்ஸ் புத்தகத்தின் புகழ்பெற்ற டங்க் (Tunc) பக்கம் (டங்க் – லத்தீன் மொழியில் சிலுவை) வேக்கின் முடிவின்மைகளிலும் இடம் பெறுகிறது: ‘I’ve read your tunc’s dismissage’ , ‘the tenebrous Tunc page of the Book of Kells’. மேலும் தன் காலஞ்சென்ற கணவர் எச்.சி.இ-ஐ (HCE) நினைவுகூரும் வேக்கின் பெண் மூலப்படிவமான ஏ.எல்.பி (ALP – அன்னா லிவியா ப்ளூரபெல்லின் – Anna Livia Plurabelle) மாமாஃபெஸ்டா (Mamafesta) அறிக்கைக் கடிதம் சர் எட்வர்ட் கெல்ஸ் (Sir Edward Kells) கெல்ஸ் புத்தகத்தைப் பற்றி எழுதிய புத்தகத்தின் மொழியை கேலி செய்கிறது; “the sudden sputtered petulance of some capItallIsed MIddle; a word as cunningly hidden in its maze of confused drapery as a fieldmouse in a nest of coloured ribbons” என்பது டங்க் பக்கத்தையும் வேக்கையும் ஒருங்கே விவரிக்கக்கூடியதாக இருக்கலாம். அதன் உன்னத மூதாதையரைப் போலவே, இந்தக் கடிதமும் புதைக்கப்பட்டு மீண்டும் கண்டுபிடிக்கப்படுகிறது. குடும்ப நலன் கருதி நான் இத்தகவல்களை என் குடும்பத்தாரிடம் குறிப்பிடவில்லை.
பழைய நூலகத்தின் புகழ்பெற்ற நீண்ட அறை (Long Room) புத்தகப் பிரியர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு அழகிய ஆதர்சம். 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, 65 மீட்டர் நீளமும், பீப்பாய்-கவிகை மாடக் கூரையுடனும் (barrel vaulted ceiling), தத்துவஞானிகள், எழுத்தாளர்களின் பளிங்கு மார்பளவுச் சிற்பங்களுடனும் அது பொலிந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டனிலும் அயர்லாந்திலும் வெளியிடப்பட்ட ஒவ்வொரு புத்தகத்தின் பிரதியையும் கோரும் உரிமை அதற்கு வழங்கப்பட்டிருந்தது. நீண்ட அறையின் மையத்தில், அதன் இருண்ட கவிகை மாடக் கூரையின் கீழ், உருண்டையாக, பூமியின் மேற்பரப்பின் விரிவான NASA படங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கலைஞர் லுக் ஜெர்ரமின் (Luke Jerram) கலைப்படைப்பான கேயா (Gaia) தொங்கிக் கொண்டிருந்தது. மெதுவாகச் சுழலும் அந்தக் கோளத்தில் இந்தியாவைத் தேட முயன்றபோது, உலகம் அதன் அனைத்து மகத்துவத்துடனும் ஒரு நூலகத்தின் எல்லைக்குள் அடைக்கப்பட்டிருப்பது எவ்வளவு பொருத்தமானது என்று நான் எனக்கே சொல்லிக் கொண்டேன். வேக்கின் அன்னாவே கேயாவின் ஒரு அவதாரம்தானே. வேக்கே பல நூலகங்களை அதன் இரு அட்டைகளுக்கு இடையே பொதிந்து வைத்திருக்கும் ஒரு மறை தானே?
அடுத்த நாள் நாங்கள் மோர் மலைகள் (Cliffs of Mohr), பர்ரன் (Burren) கால்வே (Galway) ஆகிய இடங்களுக்கு ஒருநாள் பயணத்தில் புறப்பட்டோம். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் மலைகளை அடைந்தபோது வானம் மூடியிருந்தாலும் மழை பெய்யவில்லை, பனிமூட்டமும் இல்லை. நடைபாதையில் அட்லாண்டிக் பெருங்கடலின் பிரம்மாணடத்தையும், மேற்கு க்ளேர் (Clare) கடற்கரையின் கரடுமுரடான உயரங்களையும் பார்த்தபடியே உச்சியைச் சென்றடைந்தோம். ‘சப்லைம்’ (Sublime / உன்னதம்) என்பது அதற்கான சரியான வார்த்தையாக இருக்கலாம், மணற்கல், வண்டற்கல், களிக்கல் அடுக்குகளின் விளைவாக சாம்பல், பழுப்பு, கருப்பு, வெள்ளை, பழுப்பு மஞ்சள் வண்ணங்களாலான ஒரு நிறமாலை அங்கு உருவாகி இருந்தது. மாஸ் செடிகளும் லிச்சன் பாசியும் திட்டு திட்டாகப் பச்சை சாயம் அளித்தன. மேகமூட்டமாக இருந்ததால், நீர் ஸ்லேட்-சாம்பல் நிறத்தில் இருந்தது, மலையடிவாரங்களில் நீர் நீலப்பச்சை கலந்த வெள்ளியாக நுரைத்தது. நிச்சயமாக யூலிசிஸ்-இன் சளிப்-பச்சைக் கடல் அல்ல. காற்று – “Airs romped around him nipping, and eager airs” – ஸ்டீஃபனா ஹாம்லெட்டா யாருடைய வரி அது என்று குழம்பினேன். ஆழங்களை உற்றிருந்தபோது போர்ட்ரெய்ட்டில் மோர் மலைகள் குறிப்பிடப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் சரியாக நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. நினைவில் வந்ததோ வாலஸ் ஸ்டீவன்ஸ்சின் (Wallace Stevens) வரிகள், அவை தந்தைமையைப் பற்றியதாக இருந்தது விசித்திரமே!
Who is my father in this world, in this house,
At the spirit’s base?
My father’s father, his father’s father, his–
Shadows like winds
Go back to a parent before thought, before speech,
At the head of the past.
They go to the cliffs of Moher rising out of the mist,
Above the real,
Rising out of present time and place, above
The wet, green grass.
திடீரென்று, சுற்றுலாப் பயணிகளுக்கு நடுவே, அங்கே நின்று கொண்டிருந்தது விசித்திரமாக இருந்தது. பூமி, நீர், காற்று இவற்றின் அமைதியான சாஸ்வத சிம்ஃபொனியியை இடைமறித்ததைப் போன்ற ஒரு உணர்வு. அதிர்ஷ்டவசமாக கடற்பறவைகளின் (ஃபுல்மார்ஸ் (fulmars), கிட்டிவேக்ஸ் (kittiwakes) , கோஃப்ஸ் (coughs), ஆனால் பிரசித்தி பெற்ற அந்த பாராஃபின்கள் (paraffins) எங்கே?) கூச்சல்கள், என் ஆதர்ச மயக்கங்களைக் கேலி செய்தன. புறப்படும் நேரம் வந்துவிட்டது. கிளம்புகையில் மார்ட்டன் தனது அற்புதமான அயர்லாந்து பயணக்குறிப்பில் மோர் செங்குத்துகளை ஏன் குறிப்பிடவில்லை என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.
கால்வேக்குச் செல்லும் வழியில் பர்ரனில் இருபது நிமிடங்கள் நிறுத்தம் செய்தோம். பர்ரன் (ஐரிஷ் ‘போரன்’ (boíreann) என்பதிலிருந்து வந்தது, அதாவது “பாறை மாவட்டம்”) என்பது க்ளேர் மாவட்டத்தில் உள்ள ஒரு கர்ஸ்ட் (karst) நிலப்பரப்பு. களிமண் மற்றும் களிப்பாறைப் பட்டைகள் ஊடுருவும் விரிசலுற்ற பனிப்பாறை காலத்துச் சுண்ணாம்புக் கற்களின் மீது நடந்து (தடுமாறி என்பதே பொருத்தமாக இருக்கும்), கடலுக்கருகே சென்றோம். மற்றொரு சுண்ணாம்புக் கல் நிலப்பரப்பைப் பற்றி, பிறப்பிட நிலப்பரப்பைக் குறித்த ஏக்கத்துடன் ஆடன் (Auden) ஒரு கவிதையில் புலம்பினார்:
குறைபாடற்ற காதலையோ வரவிருக்கும் வாழ்க்கையயோ
கற்பனை செய்ய முயற்சிக்கையில் நான்
செவிப்பதோ நிலத்தடி நீரோடைகளின் முணுமுணுப்பை
பார்ப்பதோ சுண்ணாம்புக்கல் நிலப்பரப்பை
ஹீனியின் (Seamus Heaney) ஃப்ளாகி கரை (Flaggy Shore) அன்னங்களுடன் மிளிரும் அதன் ஸ்லேட்டுச் சாம்பல் ஏரியுடன் (“lit by the earthed lightning of a flock of swans”) அருகிலிருந்ததை அறிந்திருந்தேன், டோல்கியனின் தளங்களும்கூட (Tolkien). ஆனால் எங்களுக்கு அளிக்கப்பட்ட இருபது நிமிடக் கெடுபிடி முடிந்துவிட்டன, கால்வேக்குப் புறப்பட்டோம்.
பேருந்து கடைகள் நிறைந்த ஒரு கூழாங்கல் சந்தில் எங்களை இறக்கிவிட்டார்கள்; பெரும்பாலானவை விசித்திரத்தைத் தேடி அலையும் வெறித்தனமான சுற்றுலாப் பயணிகளுக்குச் சேவை செய்பவை. ஹை ஸ்ட்ரீட் ஆக மாறும் ஷாப் ஸ்ட்ரீட் வழியே நடந்து, நீர்ப்பகுதிக்கு இட்டுச் செல்லும் க்வே ஸ்ட்ரீட்டை எட்டினோம். மோர்ட்டன் மிகவும் விரும்பிய, “தன்னுணர்வற்ற அழகின் வெற்றி” என்று அழைத்த கிளாடகில் (Claddagh) இருக்கிறோம் என்பதை உணர்ந்தபோது இயல்பாக வந்த வறண்ட சிரிப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை. முன்னூறு சிறிய பொம்மைக் குடிசைகளை ஒரு நாற்றங்கால் தரையில் தாறுமாறாகப் புரட்டினால், கிளாடகை உருவாக்கிவிடலாம் என்று அவர் வேடிக்கையாகக் கூறியது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் இருபத்தியோராம் நூற்றாண்டின் கிளாடகை அவர் விரும்பமாட்டார் என்றே நினைக்கிறேன், ஏனெனில் அவர் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியிலேயே கால்வேயின் “பயங்கரமான நவீன இடுக்குமுடுக்கு இல்லங்களைப்” பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தார் என்பதால், “சசெக்ஸின் பயங்கரமான பங்களாக்களை”விட அவரது கண்களுக்கு அவை வெறுப்பாக இருந்தன. ஆனால் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையில், முற்றிலும் வேறு ஒன்றாக மாறிக் கொண்டிருந்த தருணத்தில் அவர் அதைக் காண நேர்ந்தது நம் அதிர்ஷ்டமே:
“திறந்திருந்த ஒவ்வொரு சிறிய கதவுக்குப் பின்னாலும், பீட்டர் டி ஹூச்சின் (Peter de Hooch) உட்புறம் போல தெளிவாக, அவ்வப்போது ஒண்சிவப்பு ஆடைகளில் மிளிர, ஒரு பெண் ஏதோவொரு பணியில் குனிந்திருப்பதை உங்களால் பார்க்க முடிகிறது; எப்போதாவது ஒரு குழந்தை அழும், ஒரு பெண்ணின் மென்மையான குரல் அதைத் தேற்றும், கடலோரத்தில் சிறிய அலைகள் கரையில் சன்னமாகும் தொனியில் ஐரிஷ் தாலாட்டொன்றைப் பாடும்; புட்கரி தீக்கள் கதகதக்கும் அறைகளில், சாம்பலில் வெட்டுக்கிளிகளின் கிறீச்சொலியுடன், புனித இதயத்திற்கு முன் ஒரு சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும்.”
மார்ட்டனின் கால்வே மறைந்துவிட்டது, அவரது அன்புக்குரிய இங்கிலாந்தைப் போல, ஆனால் அவை ஏதோ ஒரு வகையில் இருந்துகொண்டும் இருக்கின்றன. அவரது புத்தகங்களில் அவரது மாயாஜால உரைநடையின் அமுதத்தால் நிரந்தரப்படுத்தப்பட்டு, வாசகரின் கற்பனைப் புவியியலில் புத்துயிர்ப்பதற்காகக் காத்திருக்கின்றன.
காரிப் (Corrib) நதி கழிமுகம் கால்வே விரிகுடாவில் கலக்கும் இடத்தையே அவர்கள் வாட்டர்ஃபிரண்ட் என்று அழைத்தார்கள். கழிமுகத்தின் இடது கரையில் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்பானிஷ் வளைவு (Spanish Arch) தூரத்திலிருந்து தெரிந்தது. அது கால்வேயின் இடைக்கால பாதுகாப்புச் சுவர்களின் ஒரு பகுதியாக இருந்தது. அதற்குச் செல்லும் பாதை நெடுக, பெரும்பாலும் எண்ணெய் நிறைந்த ஆரோக்கியமற்ற பொருட்களை விற்கும் உணவுக் கடைகளை வரிசையாக அமைத்திருந்தனர். அதைத் தவிர்ப்பதற்காகவே நீர்நிலையை நோக்கி நடந்தேன், ஹீனியின் அன்னங்கள் எனக்காகக் காத்திருந்தன. “Unwearied still, lover by lover /they paddle the cold / companionable streams or climb the air” என்று யேட்ஸ் அவரது பிரசித்தி பெற்ற காட்டு அன்னங்கள் கவிதையில் பாடியிருக்கிறார். ஜாய்ஸின் மனைவி நோரா கால்வேயிலிருந்து வந்தவர் என்பது நினைவுக்கு வந்தது. டெட் கதையின் கெட்டா கான்ராயும்கூட என்பதும். மைக்கல் ஃபியூரி (Michael Furey) இங்கெங்கோதான் மழையில் பிடிவாதமாக சாவைக் தழுவிக்கொண்டிருப்பான். ஒருவேளை இந்த அன்னங்கள் இவ்வுலகின் மைக்கேல் ஃபியூரிஸ்களின் ஆவிகளாக இருக்கலாம் என்ற எண்ணம் மின்னி மறைந்தது. வெற்றிபெற்றும் கோட்டைவிடும் காபிரியல் கான்ராய்களைக் தோற்கடித்த ஆணவத்தில் அவை ஒய்யாரமாக உலா வருகின்றனவா? திடீரென அவற்றில் ஒன்று ‘லாஸ் ஆஃப் ஆக்ரிம்’ (Lass of Aughrim) பாடலைப் பாடினால் எப்படியிருக்கும் என்ற கற்பனை நவிற்சியில் ஆழ்ந்திருந்தேன். எப்போதும்போல, யூலிசிஸ் தனது கூர்மையான திருத்தத்துடன் காப்பாற்றியது. ஆனா லிஃபியிலிருந்து (Anna Liffey) வரும் ஒய்யார அன்னங்களைப் பற்றி ப்ளூம் யோசிக்கிறான்: “அன்ன இறைச்சியின் சுவை என்னவாக இருக்கும்? ராபின்சன் க்ரூசோ (Robinson Crusoe) அதைச் சாப்பிட்டுத்தானே உயிர் வாழ வேண்டியிருந்தது. அவனவனுக்கு அவன் அவன் சுவை, என்னத்த சொல்ல” “யூலிசிஸ் நாசமாகப் போகட்டும்!” என்று கோபமாக முணுமுணுத்தபடியே, குடுமபத்தினருடன் சுற்றுலாப் பேருந்தைப் பிடிக்க விரைந்தேன்.
அதிகாலையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்ததால், நாங்கள் சோர்வாக இருந்தோம், இரவு உணவுக்குப் பின் ‘காபுள்ஸ்டோன் பப்பில்’ (Cobblestone) இளைப்பாற முடிவு செய்தோம், அது தன்னை ஒரு “drinking pub with a music problem” என்று விளம்பரப்படுத்திக் கொண்டது. பப் உரிமையாளரின் பெயர் மல்லிகன் (Mulligan) ஆகவும், அவரது வாழ்நாள் இலக்கு “ஐரிஷ் இசையைத் தனக்கு விடப்பட்டதைக் காட்டிலும் சிறந்த நிலையில் விட்டுச் செல்வது” ஆகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் என்ன? என்று நான் சிரித்தபடி யோசித்தேன். ‘காபுள்ஸ்டோன்’ ஒரு தனித்துவமான கலாச்சார நிறுவனமாக அதன் புகழுக்கு ஏற்ப இருந்தது அந்த இனிய நாளுக்கு முத்தாரமாக அமைந்தது; அன்றிரவு நாங்கள் ஐரிஷ் நாட்டுப்புற இசையின் பின்னணியில் கின்னஸ் (Guinness) ஞானஸ்நானம் பெற்ற அசல் டப்ளினர்களாக மாறினோம்.

—————————————————–
உதைகால்கள் வலியுறுத்தும் சுவர்களுடனும் கோபுரங்களுடனும் புனித பாட்ரிக் (St. Patrick) தேவாலயத்தின் கம்பீரமான சாம்பல் காதிக் (Gothic) கட்டிட அமைப்பு இது கடவுளின் கோட்டை என்ற உணர்வை இயல்பாகவே தருகிறது. அதன் தோற்றம் 12-13ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தையது, ஆனால் கின்னஸ் குடும்பத்தின் தாராளத்தால், குறிப்பிடத்தக்க விக்டோரிய சேர்த்தல்களும் உள்ளன. பல வண்ணமயமான ஸ்டெயிண்ட் கிளால் ஜன்னல்களும் அக்கோட்டையை மெருகூட்டின – புனித பாட்ரிக் ஜன்னல் 39 அத்தியாயங்களில் அவரது வாழ்க்கையை வேல்ஸில் கடத்தப்பட்டதிலிருந்து அவரது அடக்கம் வரை விவரித்தது, வடக்கு டிரான்செப்ட்ஸில் (transepts) உள்ள ஜன்னல்கள் முதல் உலகப் போர், கிரிமியன், தென்னாப்பிரிக்க, போயர் போர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. நான் மிகவும் விரும்பியது சவுத் கொயர் ஐலின் (South Choir Aisle) முடிவில் இருந்த ஒரு கின்னஸ் ஜன்னல், பெஞ்சமின் கின்னஸின் (Benjamin Guinness) மகளை நினைவுகூரும் வகையில், அதில் பதியப்படிருக்கும் மத்தேயு நற்செய்தி 25:35 வாசகம் ஆன்மீகத்தையும் அன்றாடத்தையும் நகைச்சுவையாக ஜன்னலின் பின்புலத்தின் வழியே ஒருங்கிணைக்கிறது: “தாகமாக இருந்தேன், நீங்கள் எனக்கு குடிக்கக் கொடுத்தீர்கள்.” குடியும் மதமும் டப்ளினுக்கு மிகப் பொருத்தம் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் நான் பேட்டிஸ் (Patty’s) கதீட்ரலுக்கு ஒரு காரணத்தோடுதான் சென்றேன், அது அதன் தென்மேற்குத் தாழ்வாரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்தது: பதினெட்டாம் நூற்றாண்டின் தலைசிறந்த நையாண்டி வித்தகரான எழுத்தாளர் ஜொனாதன் ஸ்விஃப்ட் (Jonathan Swift) அங்கு அவரது பெரும் காதலுக்கு உரியவரான ஸ்டெல்லாவுக்கு (Stella) அருகே புதைக்கப்பட்டிருந்தார். மேலே ஒரு கண்ணாடிப் பெட்டியில் ஸ்விஃப்ட் நினைவுச் சின்னங்கள் – அவரது மண்டை ஓடும் மரண முகமூடி (death-mask) எனப்படும் அவர் முகத்தின் பூச்சுவார்ப்பும் – காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இடதுபுற சுவரில் கல்வெட்டு வாசகம் பதிக்கப்பட்டிருந்தது:
‘Here is laid the body of
Jonathan Swift, Doctor of Divinity,
Dean of this cathedral Church,
Where fierce indignation can no longer
Rend his heart.
Go, traveller, and imitate if you can
This earnest and dedicated
Champion of Liberty.’
என் அகந்தை சிரம் தாழ்த்தியது, யூலிசிஸ்-இல் “Cousin Swift, you will never be a poet” என்ற டிரய்டனின் வரியில் ஸ்டீஃபன் தன்னைப் பொருத்திப் பார்க்கிறான். ஸ்விஃப்டாகவும் ஜானதனாகவும் புனித பேட்ரிக் ஆலயத்தில் அவரது பணியைக் குறிக்கும் டீனாகவும் ஷ்விஃப்ட், ஷ்விப்ஸ் அல்லது ஷ்வீப்ஸாகவும் (Schwift / Schwipps/ Shweeps) “Jonas in the Dolphin’s barncar” அல்லது “The godolphing-lad in the Hoy’s Court” போன்ற புதிர்மையான அடையாளத்துடனும், (Hoy’s Court ஸ்விஃப்ட்டின் பிறப்பிடம் சிட்னி கோடால்ஃபின் (Sidney Godolphin) ஸ்விஃப்ட் நையாண்டி செய்த கருவூலர்.) வேக் நெடுகிலும் அவர் நிறைந்திருந்தார் என்பதையும் நினைவுகூர்ந்தது. ஆலயத்திலிருந்து இருந்து வெளியே வருகையில் மகனும் மருமகளும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தபடி அழுக்கு படிந்த, நாடோடியைப் போல், காட்சியளித்த ஆளுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருந்தார், என் மகனை டெம்பிள் பார் போன்ற கேவலமான இடங்களில் நேரத்தை வீணாக்காமல், ஸ்மித்ஃபீல்டில் உள்ள அசலான மதுக்கூடமான காபுள்ஸ்டோனுக்கு செல்லுமாறு அறிவுறுத்திக்கொண்டிருந்தார்!

———————————————-
ஹூத் ஹெட்டிற்கு (Howth Head) ரயிலில் சென்று, ஹூத் கிளிஃப் ட்ரெயிலில் (Howth Cliff trail) செல்ல முடிவு செய்தோம், அது கிராமத்திலிருந்து பால்ஸ்காடென் (Balscadden) விரிகுடா கடற்கரையைக் கடந்து மலைவழியே எங்களை அழைத்துச் சென்றது. இரண்டரை மணிநேரப் பாதையில் பல கோணங்களில் ஹூத் தீபகற்பத்தின் அற்புதமான காட்சிகள் எங்களுக்காகக் காத்திருந்தன. ஸ்டீஃபனின் “காணக்கூடியதின் தவிர்க்க முடியாத முறையை” (Ineluctable modality of the visible) நான் இன்னும் தெளிவாகப் புரிந்துகொண்டேன். மேலே செல்லும் வழியில் பால்ஸ்காடென் ஹவுஸை (Balscadden House) கண்டோம், அதன் சுவர்களில் ஒரு தகடு அது ஒரு காலத்தில் திரு. டபிள்யூ.பி. யேட்ஸ் (W.B. Yeats) அவர்களின் இல்லமாக இருந்ததை அறிவித்தது. ‘ஜிஞ்சர் மேன்’ என்ற நாவலின் ஆசிரியர் ஜே.பி. டான்லீவி (Ginger Man, J.P Donleavy) கூட அங்கு தற்காலிகமாக வசித்தார் என்பதை நான் பின்னர் அறிந்துகொண்டேன். என் மனைவி நானும் அதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறினாள். ஒரு மாதத்திற்கு மலைமுகடுகளில் இருக்கும் ஏர் பி & பி (Air B&B) ஒன்றில் தங்கி, மேலும் லாபகரமான புத்தகமொன்றை எழுத எனக்கு உத்வேகம் கிடைக்குமா என்று சோதித்துப் பார்க்க வேண்டும் என்று கூறினாள். அவள் என்னை ஊக்குவித்தாளா அல்லது கேலி செய்தாளா என்பதை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் மீண்டும் ஆழங்களை நோக்கினேன், அதற்கேற்ப வாசிப்பு நினைவுகள் எழுந்தன, இம்முறை போர்ட்ரெய்ட்டிலிருந்தல்ல, யூலிசிஸிலிருந்து: ப்ளூமும் மாலியும் ஹூத் ஹெட்டில் பிக்னிக் செல்கிறார்கள், ப்ளூம் அவளைக் கரம்பிடிக்க முன்மொழிகிறான். புத்தகத்தில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெறும் இருவரின் மோனோலாக்களில் நினைவுகூரப்படும் அந்த அடையாளக் காட்சி யூலிசிஸ்-இல் நான் மிகவும் விரும்பும் மகிமையான பகுதிகளாகும். ‘லெஸ்ட்ரிகோனியன்ஸ்’ அத்தியாயத்தில் ப்ளூம்:
எங்களுக்கு கீழே, ஹூத்தில், காட்டுப் பரணிகளுக்கு அடியே மறைந்திருந்த விரிகுடா உறங்குகிறது: வானம். சத்தமின்றி… ம்ம்ம். மென்மையாக அவள் என் வாயில் இட்டாள், மிதமான சூட்டுடன், மெல்லப்பட்ட சீட்கேக் துண்டங்களைக். அவளது முணுமுணுக்கும் வாய் எச்சிலுடன் இனிப்பாக வழங்கியது புளித்த கூழை. இன்பம்: நான் அதை உண்டேன்: இன்பம். இளமையை அவள் ததும்பும் உதடுகள் வழங்கின. மென்மையான, மிதச்சூட்டுடன், பசபசக்கும் உதடுகள். அவள் கண்கள் பூக்கள் போல, எடுத்துக்கொள், என்னை, விழுங்க விழையும் கண்களே.

பெனலபியில் மாலி
சூரியன் உனக்காக ஒளிர்கிறது என்று அவன் சொன்னான், நாங்கள் ஹூத் ஹெட்டில் ரோடோடென்ட்ரான்களுக்கு (rhododendrons) இடையில் படுத்திருந்த நாளன்று, சாம்பல் ட்வீட் சூட்டும் வைக்கோல் தொப்பியும் அவன் அணிந்திருந்த நாளன்று, … என் கரம் கேட்டு அவனை எனக்கு முன்மொழிய வைத்தேன், ஆம்! … அதற்கு முன் முதலில் என் வாயிலிருந்த சீட்கேக் (seedcake) துண்டங்களை அவனுக்கு வழங்கினேன், இப்போது போலவே அப்போதும் லீப் வருடம், ஆம் 16 ஆண்டுகளுக்கு முன், கடவுளே, அந்த நீண்ட முத்தத்திற்குப் பிறகு என் மூச்சு கிட்டத்தட்ட நின்றே போய்விட்டது, ஆம் நான் மலையின் மலர் என்று அவன் சொன்னான், ஆம், ஆக நாம் அனைவரும் மலர்கள் பெண்ணின் உடல்கள் பூக்கள், ஆம் அவன் தன் வாழ்க்கையில் சொன்ன ஒரே ஒரு உண்மையான விஷயம் அதுதான், மேலும், சூரியன் இன்று உனக்காக ஒளிர்கிறது, ஆம், அதனால்தான் அவனை விரும்பினேன், பெண் என்றால் என்ன என்பதைப் அவன் புரிந்துகொண்டான் அல்லது உணர்ந்திருந்தான் என்பதை நான் உணர்ந்துகொண்டேன், அவனை எப்போதும் வழிக்குக் கொண்டுவர முடியும் என்பதையும், முடிந்த வரையிலும் அவனுக்கு அனைத்து இன்பங்களையும் அளித்து நான் ஆம் என்று சம்மதிக்கும் தருணத்திற்கு ஏங்கும் வரையிலும் அவனை இட்டுச் சென்றேன்.

மலையிலிருந்து திரும்பும் வழியில், ஊருக்குள் நுழைவதற்கு முன் என் மகன் மார்டெல்லோ டவரைக் காட்டினான், அதற்குள் செல்ல விரும்பினேன் என்று அவனுக்குத் தெரியும். ஒரு பலகை புதுப்பிக்கும் பணிகள் நடந்து கொண்டிருப்பதை அறிவித்தது. ஐயோ! நான் சோகமாக முணுமுணுத்தேன், அதைக் கடந்து செல்வதற்கு முன் திரும்பி ஏக்கத்துடன் ஒரு கடைசிப் பார்வை பார்த்தேன். விசித்திரமாக, நான் கற்பனை செய்ததை விட அது மிகவும் குட்டையாக இருந்தது. டப்ளின் முழுவதும் பல மார்டெல்லோ டவர்கள் இருந்தன என்பதை மிகத் தாமதமாகவே நான் தெரிந்துகொண்டேன். மேலும் யூலிசிஸ்-இன் முதல் அத்தியாயத்தில் இருந்த மார்டெல்லோ டவரோ சான்டிமௌண்டில் (Sandymount) இருந்தது! ஆம், சான்டிமௌண்ட்! அதை நான் எப்படி மறந்தேன். போகட்டும்! பக்கின் நகைச்சுவையான நையாண்டித் திருப்பலி அடுத்த முறை டப்லின் வரும் வரையிலும் அவனது மிகவும் தீவிர பக்தனின் கற்பனை தேவாலயத்தில் ஒரு குறையுமில்லாமல் தொடரும் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

அடுத்த நாள் நாங்கள் சற்று ஓய்வாக இருக்க முடிவு செய்து, டப்ளினின் பூங்காக்களிலும் அருங்காட்சியகங்களிலும் உலாவினோம். இடையே தேசிய நூலகத்தில் நுழைந்து யேட்ஸ் கண்காட்சியைப் என்னால் பார்க்க முடிந்தது. தகுதியான மனிதனுக்கு ஏற்ற தகுதியான அஞ்சலி, ஒரு தேசம் தனது இலக்கிய பாரம்பரியத்தை, தனது தேசியக் கவிஞரை எவ்வாறு மதிக்கிறது என்பதற்கான ஒரு அளவுகோல். ‘பிசான்டியம்’ (Byzantium) மற்றும் ‘ஈஸ்டர் 1916’இன் (Easter 1916) கையெழுத்துப் பிரதிகள் நெகிழ்வூட்டின, சரியான வார்த்தையைத் தேர்ந்தெடுப்பதில் அலைந்து திரிந்து தவறான தேர்வுகளை அடித்துத் திருத்தும் கைவிரலின் அனைத்து சான்றுகளுடன். ஒரு இந்தியனாகவும் பாஸ்ஸ்டோனியனாகவும் யேட்ஸ் அறிமுகத்துடன் பதிக்கப்பட்ட தாகூரின் ‘கீதாஞ்சலி’யின் 1913ஆம் ஆண்டு பதிப்பையும், அதன் முதல் பக்கத்தில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்த தொரூவின் ‘வால்டன்’ (Thoreau, Walden) பிரதியையும் பார்த்தபோது மகிழ்ச்சியடைந்தேன். அவரது நாடகமான ‘கவுண்டஸ் கேத்லீன்’ (Countess Cathleen) பதிப்பைப் பார்த்தபோது, எனது ஜாய்ஸ் (குட்டிச்சாத்தான் அதன் விஷமத் தலையை உயர்த்தி, பக் மல்லிகனை நினைவூட்டினான். எப்போதும் போலவே இங்கிதமற்ற பக், ஸ்டீஃபனை (குறிப்பாக அவன் தாயைப் பற்றி) சிந்தனைவயப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தி கவுண்டஸ் கேத்லீனிலிருந்து யேட்ஸ் வரிகளை மேற்கோள் காட்டுகிறான்: “மேலும் விலகிச் சென்று துக்கப்பட வேண்டாம் / காதலின் கசப்பான மர்மத்தைப் பற்றி.” ஐரிஷ் இலக்கியத்தின் இரு பெரிய ஜாம்பவான்களின் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட முதல் சந்திப்பும் அங்கு நினைவுக்கு வந்தது. அதில் 20 வயது இளைஞன் கிட்டத்தட்ட 40 வயது எய்திவிட்ட முதிய கலைஞரிடம் “நான் உங்களை மிகத் தாமதமாக சந்திக்கிறேன். உங்களுக்கோ வயதாகி விட்டது. என்னால் இனி உதவ இயலாது!” என்று கூறுகிறான். வேக்கில் (Doubblinbbayyates என்று யேட்சை வேடிக்கையாக அழைத்த வேக்கில்) காட் ஹெச்.சி.இ- யிடம். (Cad /HCE) ஆஸ்கார் வைல்டின் (அவரையுமா மறந்தேன்?) மேலோட்டங்களுடன் கூறுவது போல: “I have met with you, bird, too late, or if not too worm and early.”

ஆனால் ஜாய்ஸ் இங்கு சற்று பாவனை செய்கிறார், மேலும் ஜாய்ஸின் உதவியால் உய்க்க வேண்டிய கட்டாயமும் யேட்ஸிற்கு இருந்ததாக எனக்குப் படவில்லை. இளைய ஜாய்ஸ் ஏற்கனவே ஆரம்பகால யேட்ஸ்ஸை உள்வாங்கிக் கொண்டு, அவரால் கவரப்பட்டிருந்தார் என்பதையும், உடன்படித்தவர்கள் ‘கவுண்டஸ் கேத்லீன்னுக்கு’ எதிராக விடுத்த அறிக்கையில் கையெழுத்திட ஜாய்ஸ் மறுத்துவிட்டார் என்பதையும் நாம் சரிதையிலிருந்து அறிவோம். ஸ்டீஃபன் ஹீரோவின் ஸ்டீஃபன் யேட்ஸ்ஸின் டேபிள்ஸ் ஆஃப் தி லா (Tables of the Law) கதையில் வரும் ஓவன் அஹர்னின் (Owen Aherne) பிரச்சினையைத் தவறாகப் புரிந்துகொள்வதன் மூலம் தனது “கலையின் மதத்திற்கான” சிந்தனைகளைத் திரட்டிக் கொள்கிறான் என்பதும் வெளிப்படை. இது போர்ட்ரெய்ட் வரையிலும் நீடிக்கிகிறது, அங்கு ஸ்டீஃபன் தன்னை “நித்திய கற்பனையின் பாதிரியாராக” கற்பனை செய்துகொள்கிறான். மதத்துக்கும் கலைக்கும் இடையே நிலவும் முரண்பாடே அஹர்னின் மையப் பிரச்சனை, இதுவே ஸ்டீஃபனின் பிரச்சனையும்கூட. மேலும் ஜாய்ஸின் முதல் கவிதைப் புத்தகமான ‘சேம்பர் மியூசிக்’ (Chamber Music) யேட்ஸின் தி விண்ட் அமங் த ரீட்ஸ்-ஐ (The Wind among the Reeds) நிச்சயமாகப் பிரதிபலிக்கிறது, கற்பனைப் பெண் காதலர்கள், மிளிரும் புற்கள், “உலகிலிருந்து நீண்ட காலமாக மறைந்துவிட்ட அழகு” போன்றவற்றால் இருவர் கவிதைகளும் நிறைந்திருந்தன. இருவருமே தங்கள் முந்தைய வரிகளை மறுத்து, மங்கிப்போன அல்லிகளையும் ரோஜாக்களையும் மிதித்தே புதுப்பாதையொன்றை உருவாக்க முயன்றனர். ஜாய்ஸ் டப்ளினர்ஸ்’ எழுதினார், யேட்ஸோ ‘பிசான்டியம்’ (Byzantium) போன்றவற்றை எழுதத் தொடங்கினார். ரிச்சர்ட் எல்மனின் (Richard Ellman) அற்புதமான வாழ்க்கை வரலாற்றிலிருந்து (அதைத் தவறவிடாதீர்கள்!) ஜாய்ஸ் பரீயில் தனது நண்பர்களிடம் யேட்ஸின் கவிதைகளை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார் என்பதையும், அழகையும் உண்மையையும் தேடுவதில் ஒரு முன்னணி வழிகாட்டியாக இருந்ததற்காக யேட்ஸுக்கு நன்றி பாராட்டினார் என்பதையும் நாம் அறிவோம். திடீரென்று, எனது தொலைபேசி ஒலித்தது, எனது சிந்தனைகளைக் கலைக்கும் வகையில், எனது இனத்தாரால் அருகிலுள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு அழைக்கப்பட்டேன்.
அவர்கள் இரண்டாவது தளத்தில் இருந்தனர், நான் படிக்கட்டிலிருந்து திரும்புகையில், 15 மீட்டர் நீளமுள்ள பெரும் லர்கன் (Lurgan) படகைக் கண்டேன், இது காலத்தின் மூடுபனியிலிருந்து (கி.மு. 2200) நமக்குக் கிடைத்த மரத்தைத் தோண்டி செய்யப்பட்ட ஓர் படகு. அதைக் கடந்து க்ளான்டார்ஃப் (Clontarf) போர் குறித்த கண்காட்சிக்குச் சென்றேன். க்ளான்டார்ஃப் நிச்சயமாக ஐரிஷ் நினைவில் இன்னமும் நிலைக்கும் ஒரு அடையாளப் போர், இதில் கிறிஸ்தவ மன்னர் ப்ரயன் போரு (Brian Boru) புறமத வைக்கிங்குகளை (Vikings) தோற்கடித்து அவர்களை அயர்லாந்திலிருந்து வெளியேற்றினார் என்பது ஐதீகம். காரிப் (corrib) கோடரிகள், இரும்பு ஈட்டி முனைகள், படையெடுத்த சிட்ரிக்கின் (Sitric) படைகள் பயன்படுத்திய வைக்கிங் அம்புகள் போன்றவை, கண்காட்சியின் விவரணை அட்டைகளின் துணையுடன், பார்வையாளருக்குப் போரைக் காட்சிப்படுத்தின. ஆனால் என்னைப் போன்ற ஜாய்ஸ் பித்தனுக்கோ, வேக்-இல் உள்ள பிரபலமான ம்யூட் ஜூட் (Mute /Jute) அத்தியாயத்தை மட்டுமே நினைக்க முடியும், அதில் ம்யூட் க்ளோன்டார்ஃப் போரில் தனது செவித்திறனை இழந்ததாகக் கூறுகிறான் – Boru Usurp / Cedric Silkyshag / Dungtarf) Inns /grilsy growsly – இவற்றை எண்ணிச் சிரிக்கிறேன். நாவல் ஒற்றைப்படை வரலாற்றின் ஆணவத்திற்கு ஒரு ஆரோக்கியமான திருத்தமாகவும் பயன்படலாம்.
ஆனால் இப்போது குடும்பத்தினருக்கு ஷாப்பிங் செய்யும் ஆர்வம் வந்துவிட்டது, நாங்கள் அருங்காட்சியகத்தை விட்டு வெளியேறி, என் மனைவி தனது சகோதரர், என் மகன் மற்றும் அவரது தோழிக்குப் பரிசுகள் வாங்க விரும்பிய அரன் (Aran) ஸ்வெட்டர் சந்தையை நோக்கிச் சென்றோம். மைத்துனிக்கு சில கொலை-மர்மம் சார்ந்த புத்தகங்களை வாங்க டப்ளின் புத்தகக் கடைகளுக்குச் செல்லும் சாக்கை முன்வைத்து தந்திரமாகக் கழண்டு கொண்டேன். ஆ! ஐரோப்பாவின் புத்தகக் கடைகள்! அங்கு புத்தகங்கள் இன்னமும் கலைப் பொருட்களாகக் கருதப்படுகின்றன, உரிய கவனத்துடன் வடிவமைக்கப்படுகின்றன, கண்ணுக்கு இன்பம் அளித்து வாசகர்களிடம் என்னைத் தேர்ந்தெடு என்று தூண்டுகின்றன. (Pulchra sunt quae visa placent – புலன்களுக்கு இன்பம் அளிப்பது அழகு; Bonum est in quod tendit appetitus – பசியைத் தூண்டும் வஸ்துவே நல்லது என்று தோமிஸ்ட் ஸ்டீபன் போர்ட்ரெய்ட் இல் நமக்குக் கற்பித்ததைப் போல.) நான் புகழ்பெற்ற பி.டி. ஜேம்ஸின் ‘அன்சூடபிள் ஜாப் ஃபார் எ வுமன்’ (PD James, Unsuitable Job for a Woman) மற்றும் பிரசித்தி பெற்ற ஜப்பானிய முன்னோடியான சீஷி யோகோமிசோவின் ‘த ஹோன்ஜின் மர்டர்ஸ்’ (Seishi Yokomizo, The Honjin Murders) புத்தகங்களை முதலில் தேர்ந்தெடுத்தேன். ஜாய்ஸ் பகுதிக்குச் சென்று பல்வேறு பதிப்புகளை ஆசையுடன் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. சாம் ஸ்லோட்டின் ‘அனோட்டேஷன்ஸ் டு த யூலிசிஸ்’ (Sam Slote, Annotations to the Ulysses), யூலிசிஸ்-ஐ முடிப்பதற்குள் டென்னிஸ் எல்போ வரும் அளவுக்கு அருவருப்பான கனத்துடன் இருந்ததால், அதை அலமாரியில் அவசரமாக வைத்துவிட்டு, போர்ட்ரெய்ட்டின் அழகான பதிப்பொன்றை எடுத்தேன், கைக்கடக்கமாக மிகவும் மனிதாபிமானமாக இருந்தது. எதைத் தேடுகிறேன் என்பதைப் பற்றிய தெளிவில்லாமல், ஆரம்ப அத்தியாயங்களின் சில வேடிக்கையான பகுதிகளைப் படித்தேன், இறுதியில் ஸ்டீஃபனுக்கும் அவன் டீனுக்கும் இடையே நிகழும் உரையாடல்களால் ஈர்க்கப்பட்டேன், முன்னதாக நான் நினைவுகூரிய அழகைப் பற்றிய தோமிஸ்க் கோட்பாட்டைப் பற்றி விவாதிக்கும் பகுதிகள். அதோ! அங்கே இருந்தது… அதைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்! டீன் தனது முந்தைய அழகியல் கேள்விக்கு (அழகு என்றால் என்ன?) ஸ்டீஃபனிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் கூறுகிறார்:
“இந்தக் கேள்விகள் மிகவும் ஆழமானவை, மிஸ்டர் டெடலஸ்,” என்று டீன் கூறினார். “மோர் மலைகளின் உச்சியிலிருந்து ஆழத்தைப் பார்ப்பது போல இது. ஆழத்திற்குச் செல்லும் பலர் மேலே திரும்பி வருவதில்லை. பயிற்சி பெற்றவர் மட்டுமே அந்த ஆழத்திற்குச் சென்று அதை ஆராய்ந்து மீண்டும் மேற்பரப்பிற்கு வர முடியும்.”
பெரும் மோர் ஆழங்களைப் பீரிட்டுக் கொண்டிருக்கையில், நான் நினைவுகூரத் தவறிய பகுதி இதுதான். புது உற்சாகத்துடன் கடையை உலாவினேன். சில்வினா ஓ கேம்போ போர்ஹெஸ் மற்றும் சிசாரெஸுடன் (Silvina O Campo, Borges, Cesares) தொகுத்த அந்த மிகுகற்பனைக் கதை தொகுப்பை நான் படித்ததிலிருந்து அவரை மேலும் படிக்க விரும்பிக் கொண்டிருக்கிறேன். அவரது ‘இம்பாஸ்டர் அண்ட் அதர் ஸ்டோரீஸ்’ (Impostor and Other Stories) தொகுப்பு, கார்டரேஸ்குவின் ‘சோலனாய்ட்’ (Carterescu, Solenoid), இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய உச்சங்களின் சுருக்கங்களை வழங்கும் ஜான் கிரேஸின் நையாண்டிப் புத்தகமான ‘பிரைட்ஸ்ஹெட் ரிவிசிட்டெட்’ (John Crace, Brideshead Revisited), ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்தேன். என் மகன் அவர்கள் கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஜாய்ஸின் சிறுவனைப் போல் பொக்கிஷங்களைக் கையிலேந்தியபடி, அரன் ட்வீட்ஸ் கடையை நோக்கி நடந்தேன். டெட் கதையில் வரும் அந்த நேர்மை பாவனைகள் மிக்க பெண் கேப்ரியலை அரன் தீவுகளுக்குத் தானே அழைத்தாள்? ஆனால் என் மனம் இன்னும் போர்ட்ரெய்ட்டையே அசை போட்டுக் கொண்டிருந்தது. அது ‘டப்ளினர்ஸ்’ ‘ ஸ்டீபன் ஹீரோ ‘ மீது நிகழ்த்திய ஒரு வகையான அறுவைசிகிச்சை; லிரிக் வகைமைக்கான, கசப்பினிமை மிக்க, குறிப்பாக நமது இலக்கிய உணர்வுகளுக்கு ஏதாக அமைந்த, ஜாய்ஸின் பிரியாவிடை. பிற்கால யூலிசிஸ் வேக்கைவிட அது நமக்கு இணக்கமாக உள்ளது. ஆனால் ஆரம்பத்திலிருந்தே இதுதான் திட்டம் என்று நம்மிடம் ஸ்டீஃபன் கூறிவிட்டானே, க்ரான்லி (Cranly) மற்றும் லிஞ்ச்சிடம் (Lynch) அளிக்கும் அழகியியல் விளக்கங்களில் அக்வினாஸின் (Aquinas) “புரிந்து உள்வாங்கிக்கொள்கையில் இன்பம் அளிப்பது அழகு” என்பதிலிருந்து தொடங்கி, இந்த உள்வாங்கிக்கொள்தலின் கட்டங்களுக்கு அவன் நகர்கிறான். அக்வினாஸின் இன்டெக்ரிட்டா, கான்சோனன்சியா, கிளாரிடாஸ் (Integrita, Consonontia, Claritas) ஆகியவற்றை முழுமை, இணக்கம் மற்றும் பிரகாசமென மொழிபெயர்க்கிறான். டப்ளினர்ஸ்சின் எபிஃபனி இப்போது குவிடிடாஸாக (quidditas) மாறுகிறது, அதாவது உணரப்பட்ட பொருளிலிருந்து வெளிப்படும் அதன் தன்மை, இது “அழகியல் இன்பத்தின் ஒளிரும் அசைவிலா அமைதியான நிலைப்பாட்டிற்கு” வழிவகுக்கிறது. மூன்று முக்கிய இலக்கிய வடிவங்கள் அடையாளம் காணப்படுகின்றன, அதாவது கலைஞன் தனது உருவத்தைத் தனக்கு உடனடித் தொடர்பில் முன்வைக்கும் பாடல், அவன் தனக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான மத்தியஸ்தத் தொடர்பில் முன்வைக்கும் காவியம், மற்றும் மற்றவர்களுக்கு உடனடித் தொடர்பில் முன்வைக்கும் நாடகம் (lyric, epic, drama). வடிவத்தின் பரிணாம வளர்ச்சியில் கலைஞனின் ஆளுமை லிரிக் மையத்திலிருந்து தொடங்கி, காவியம் வழியாகவும், இறுதியில் நாடகத்தன்மைக்குக் கடந்து செல்லும்போது படிப்படியாக தன்னைத்தானே சுத்திகரிக்த்துக் கொள்கிறது. பாடல் விதை உதிர்த்து, காவியம் வழியாக நாடகமாக மலர்கிறது. நான், நானும் அவர்களும், நாம் அல்லது ‘போர்ட்ரெய்ட்‘ யூலிசிஸ்’, ‘ஃபினிகன்ஸ் வேக்’ .
—————————————-
பயணம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. குழந்தைகள் புறப்பட்டுச் சென்றிருந்தனர் (என் மகன் எனக்கு “ஹேப்பி ப்ளூம்ஸ் டே” (Happy Bloom’s day) அட்டையையும், தந்தையர் தினத்துக்காக ஒரு சிறிய ஜாய்ஸ் மேற்கோள் புத்தகத்தையும் கொடுத்துவிட்டு கிளம்பினான்), இரண்டு நாட்கள் மைத்துனருடன் செலவிட பர்மிங்ஹாமுக்கு (Birmingham) போய்விட்டு, மறுநாள் பாஸ்டனுக்கு விமானமேற டப்ளினுக்குத் திரும்பி வந்திருந்தோம். சில மணிநேரம் பாக்கி இருந்ததால் நகர மையத்துக்குத் திரும்பிச் சென்று கடைசியாக ஒருமுறை நடக்க முடிவு செய்தோம். ‘புக் அப்ஸ்டேர்ஸ்’ (Book Upstairs) புத்தகக்கடை டி’ஓலியர் (D’Olier) தெருவில் ஒரு அழகான ஜார்ஜியக் கட்டிடமொன்றில் அமைந்திருந்தது. அக்கட்டிடம் ‘டப்ளின் ரிவியூவின்’ (Dublin Review) தலைமையகமாகவும் இருந்தது. கடையின் புத்தகச் சேகரம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. எனது டப்ளினர்ஸ் பிரதியை பர்மிங்ஹாமிலேயே விட்டுவிட்டு வந்ததால் நான் மனமுடைந்திருந்தேன். வீட்டில் அதைக்காட்டிலும் பெரிய பதிப்பொன்று இருந்ததால், புதுப் பிரதியை வாங்க மனம் ஒப்பவில்லை. இயல்பாகவே, நான் ஜாய்ஸ் பகுதிக்கு நகர்ந்தேன், அங்கே விதி சமச்சீராக இருக்க விரும்பியதைப் போல, டப்ளினர்ஸ் 100 (Dubliners 100) புத்தகத்தின் ஒரு பிரதி, டப்ளினர்ஸ்சால் ஈர்க்கப்பட்ட 15 கதைகளின் தொகுப்பு, எனக்காகக் காத்திருந்தது. மைல்கல் புத்தகத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் அது பதிப்பிக்கப்பட்டிருந்தது. ஒரு டப்ளினர்ஸ் பிரதியை இழந்து மற்றொன்றைக் கண்டெடுப்பது எனக்குச் சரியாகப்பட்டதால் அப்புத்தகத்தையே வாங்கிக்கொண்டேன்.
கடைசி கடமை ஒன்று மீதமிருந்தது. இந்த டப்ளின் பயணம் முழுவதும் நான் ஜாய்ஸைப் பற்றி மட்டுமே வெறித்தனமாக நினைவுகூர்ந்தேன், அதன் மற்றொரு பெரும் கலைஞர் பெக்கெட்டைப் (Beckett) புறக்கணித்திருந்தேன். அதற்கான பிராயச்சித்தத்தைச் செய்வது போல, மனைவியை என்னுடன் கடைசியாக ஒருமுறை பலமுறை ஏற்கனவே நடந்திருந்த கஸ்டம் ஹவுஸ் குவே வழியாக நடக்கச் சம்மதிக்க வைத்தேன். கஸ்டம் ஹவுஸ், பஞ்ச நினைவுச்சின்னத்தைக் (famine memorial) கடந்து, ஷான் ஓ’கேசி (Sean O’Casey) பாலத்துக்கு (நான் புறக்கணித்த மற்றொரு ஐரிஷ் எழுத்தாளர்) வலதுபுறம் திரும்பினோம்: அங்கே லிஃபி நதியின் குறுக்கே படகுகளுக்கு அப்பால் சாமுயல் பெக்கெட் (Samuel Beckett) பெயரிடப்பட்ட ஹார்ப் வடிவ ஸ்விங் பாலத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது – யாழ் அயர்லாந்தின் (Ireland) தேசிய சின்னம் என்று அந்த ப்ளூம் நடைபயணப் பையன் கூறியது நினைவுக்கு வந்தது.
அயர்லாந்தை விடைபெறவிருந்த நிலையில், அவரது நாடகங்களோ, நகைச்சுவையாக விரக்தியடையும் நாவல்களோ நினைவுக்கு வரவில்லை. இறக்கும் தறுவாயில் கிரேட் புக் ஆஃப் அயர்லாந்து (Great Book of Ireland) திட்டத்துக்காக அவர் பொறித்த கவிதையின் நெகிழ்ச்சியான வரிகளே நினைவுக்கு வந்தன; அத்திட்டம் கிட்டத்தட்ட 140 கலைஞர்களை நேரடியாக விலங்குத் தோலில் (vellum) பொறிக்கச் செய்வதன் மூலம் ஒரு ‘நவீன புக் ஆஃப் கெல்ஸை’ உருவாக்கும் பாராட்டத்தக்க இலக்கைக் கொண்டிருந்த ஒரு முயற்சி. தனது தந்தையின் மரணத்தைக் குறித்து இயற்றிய ஒரு குவார்டேனையே (Quartain) பெக்கட் தேர்வு செய்திருந்தார்:
redeem the surrogate goodbyes
the sheet astream in your hand
who have no more for the land
and the glass unmisted above your eyes
பின்னர், தனது படைப்புகளிலிருந்து வெளிப்படும் தனது ஆளுமைக்கு ஏற்ப, எக்காலத்திற்கான ஒரு சைகையைப் போல், மூலம், மை பாட்டில், பேனா மற்றும் மீதமிருந்த விலங்குத் தோல்களை அவர் குப்பைக் கூடைக்குள் தள்ளிவிடுகிறார். நான் அவரது பாலத்தைக் கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு, டப்ளின் தெருக்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

———————————————–
விமானத்தில் டப்ளினர்ஸ் 100 -ஐப் படித்துக்கொண்டிருந்தேன். கட்டண மலிவுக்காக ப்ளூம்ஸ் தினத்தன்று டப்ளினை விட்டுப் புறப்பட்டதுக்காகச் சற்று எரிச்சலாக இருந்தேன், முன்பதிவு செய்தபோது அதை உணர்ந்திருக்கவில்லை என்று சப்பைகட்டிக் கொண்டேன். ஆனால் பிடித்த கதாபாத்திரங்களை வேறு வேடத்தில் மீண்டும் சந்திப்பது புது மாதிரியாக இருந்தது. அவர்கள் அனைவரும் பெரும்பாலும் அதே பெயர்களுடன் உலா வந்தாலும் சிலர் பால் மாற்றம் செய்து கொண்டுவிட்டார்கள் (எவலின் (Eveline) எவ்லினாகவும் (Evelyn), ‘கிளே’ இன் மரியா கானராகவும் (Conor) ‘கவுண்டர்பார்ட்ஸின் ஃபாரிங்டன் எலிசபெத்தாகவும் (Elizabeth) உருமாறியிருந்தார்கள்); சிலர் தொழில் மாற்றம் (ஜேம்ஸ் டஃபி (James Duffy) ஒரு உணவக விமர்சகராக மாறியிருந்தார், அவர் நிராகரிக்கும் அவரது ஆத்ம தோழியோ இப்போது செயின்ட் டசிடோஸில் (St.Tacitos) துறவியாக வசிக்கும் பில் ஆகிவிட்டார்); மற்றும் சிலரோ புதிய மூர்க்க விழைவுகளால் அலக்கழிக்கப்படுகிறார்கள் (‘கவுண்டர்பார்ட்ஸ்’ இன் கதாநாயகி சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி விட்டார், அதுவே, (மது அல்ல)அவரது வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். “போர்டிங் ஹவுஸின்” மிஸ்டர் டோரன் பலான படங்களில் லயித்திருக்கிறார்); ஜாய்ஸ் வெறியர்களும் (மேற்கூறிய எலிசபெத் மற்றும் ‘டூ கேலண்ட்ஸ்’ (Two Gallants) இன் ரூத்-Ruth) வருவது சுவாரசியாக இருந்தது; மீதமுள்ள ஆச்சரியங்களை எதிர்கால வாசகரிடம் பட்டியலிடுவதற்கு விட்டுவிடுகிறேன். டப்ளினர்ஸ்-இன் நுட்பமான கலைத்திறனின் நீண்ட ஆயுளுக்கு இப்புத்தகம் ஒரு சான்றாகும். ஆனால் அனைத்து கதைகளும் நிறைவளிக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். சில கதைகள் மூலப்பிரதியின் ஈயடிச்சான் காப்பிகளைப் போல் இருந்தன (ஒருவேளை ஆசிரியர் டப்ளினில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எதுவும் மாறவில்லை என்ற தனது அனுமானத்தை வலுக்கட்டாயமாக முன்வைக்க விரும்பினாரா?), உரைநடை சில சமயங்களில் ஜாய்ஸின் எபிஃப்பனி போல உயிர்ப்பிக்கிறது உதாரணமாக, பேட்ரிக் மெக்காபே (Patrick McCabbe) எழுதிய ‘சிஸ்டர்ஸ்’-ஐ (Sisters) முடித்து வைக்கும் பத்திகள் அல்லது பால் முர்ரே (Paul Murray) எழுதிய மிகச் சிறப்பாக எழுதப்பட்ட ‘பெயின்ஃபுல் கேஸ்’ (Painful Case), என்றாலும் மூலத்தை போல் ஒற்றைக் கலைப் பார்வையால் ஒருங்கிணைக்கப்படாதது ஒரு குறையே. ஆனாலும் கண்டிப்பாக வாசியுங்கள்.
ஜாய்ஸை சற்று மறப்பதற்காக நான் சேனல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்., பாப் டிலனைப் (Bob Dylan) பற்றிய பயோபிக்கான எ கம்ப்ளீட் அன்நோன் -ஐத் (A Complete Unknown) தேர்ந்தெடுத்தேன். நாங்கள் காபுள்ஸ்டோனில் கின்னஸ் அருந்திக் கொண்டிருக்கையில் என் மகன், நாங்கள் இருவரும் டிலனை எப்படி நேசித்தோம் என்று தன் தோழி ஆபியிடம் சொல்லிக் கொண்டிருந்தான். எண்பதுகளில் நான் முதன்முதலில் அமெரிக்காவுக்கு பயணித்தபோது என் உறவினன் ஒருவன் டிலனின் ஹிட் பாடல்கள் பதிவுசெய்யப்பட்ட ஒரு கேசட்டைப் பரிசளித்தது எனக்கு நினைவிருக்கிறது; அன்று முதல் பல ஜிங்கில்-ஜான்கிள் காலைகளில் அவர் என்னை ஆசுவாசப்படுத்தியிருக்கிறார். அவரே எனது டாம்பூரீன் மான் (Tambourine Man). திரைப்படம் மிகக் சுவாரசியாமாக ஓடிக் கொண்டிருந்தது. அதைச் சற்று நிறுத்திவிட்டு அதைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவன் நினைவு வந்தது என்று மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். பின்னர் திடீரென்று கல்யாண்ராமன் நினைவுக்கு வந்தார்; மிஸ்டர் மொழிப்பெயர்பாளர், அவரும் டிலன் வெறியர். அவருக்கும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். டப்ளினிலிருந்து திரும்புவதாகவும், அந்தத் திரைப்படம் அவரைப் பற்றி சிந்திக்க வைத்ததை அவரிடம் தெரிவித்தேன். அவரும் அத்திரைப்படத்தைப் பார்த்திருந்தார், டிலனின் ஆரம்பகால மேதைமையால் கவரப்பட்டிருந்தார். சைமன் & ஷூஸ்டர் அவரது தலைசிறந்த ‘வாடிவாசல்’ மொழிபெயர்ப்பின் புதிய பதிப்பைக் கொண்டுவருவதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார்! நான் டிலன் பாணியில் “Look out kid! you’re gonna be a hit!” என்று கிண்டலடித்தேன். அவரும் நான் ப்ளூம்ஸ்டே அன்று (Bloomsday) புறப்படுவதாகப் பதில் கிண்டலடித்தார். ஆமாம், நான் ஒரு மகா தண்டம் என்று அவரிடம் புலம்பினேன். பின்னர் அவர் 1977இல் டப்ளினுக்கு மேற்கொண்ட பயணம் பற்றியும், ஓ’கானல் ஸ்ட்ரீட் மார்டெல்லோ டவர், ட்ரினிட்டி கல்லூரி, ஸ்டீபன்ஸ் க்ரீன், அபே தியேட்டர் வழியே தனிமையில் உலாவியதைப் பற்றியும் கூறினார். மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என்பதையும். என் மார்டெல்லோ டவர் இழிவுகளை அவரிடம் பேச வெட்கப்பட்டேன், ப்ளூம்ஸ்டே அவமானமே தாளமுடியாததாக இருந்தது. மொழிபெயர்ப்பதை நிறுத்திவிட்டு, தனது சொந்த அனுபவங்களை, 50 ஆண்டுகளுக்கு முன்பு டப்ளினுக்கு சென்றதைப் பற்றி எழுதுமாறு அவரைக் கேட்டுக்கொண்டேன். அவரது பதில் சோகமாக இருந்தாலும் ஆறுதலாகவும் இருந்தது: “நிச்சயமாக இதை நினைவில் வைத்துக்கொள்வேன். உண்மையிலேயே நான் அதைச் செய்தாக வேண்டும்.” திரைப்படத்தில் டிலனின் காதலியாக வரும் ஜோன் பேஸுடன் காதலில் விழ இருப்பதைக் காரணம் காட்டி அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன்.
வீடு திரும்பியதும் மாடிக்குச் சென்று நூலகத்தின் இரண்டாவது புத்தக அலமாரியின் கீழ்தளத்தில் உள்ள ஜாய்ஸ் அடுக்கத்துப் புத்தகங்களை ஏக்கத்துடன் உற்றிருந்தேன். அவற்றை மீண்டும் அணுக்கமாக்கிக்கொள்ள நான் அயிரக்கணக்கான மைல்கள் பயணிக்க வேண்டியிருந்தது. ஒருவனை அவன் நூலகத்திலிருந்து வெளியேற்றிவிடலாம் ஆனால் அவன் நூலகத்தை அவனிடமிருந்து வெளியேற்ற முடியாது என்று நினைத்துக் கொண்டேன். ஆண்டனி பர்ஜெஸ் (Anthony Burgess) தனது ‘ரிஜாய்ஸ்’ (ReJoyce) புத்தகத்தில், தேதிகளைப் புனிதப்படுத்துவது ஜாய்ஸுக்கு எப்படி எளிதாக வந்தது என்பதையும், அப்பழக்கம் எப்படி அவரது விசிறிகளையும் தொற்றிக்கொள்கிறது என்பதையும் பேசுகிறார். அவர் அப்புத்தகத்தை ஜேம்ஸ் ஜாய்ஸின் இருபத்தி மூன்றாம் ஆண்டு நினைவு நாளான ஜனவரி 13, 1964இல் தொடங்கினார். எழுத்தாளனிடமிருந்து படைப்பிற்கு மடைமாற்ற நான் இதை ப்ளூம்ஸ் டேயில், ஜூன் 16, 2025இல் தொடங்கினேன்.
————
நம்பி / ஆகஸ்ட் 2025
மூலநூல்கள் / மேலும் படிக்க:
- Joyce, James, Dubliners, Illustrated Edition, St. Martin’s Griffin, 1995
- Joyce, James, Portrait of the Artist as a Young Man, Modern Library, 1996
- Joyce, James, Ulysses, Modern Library, 1992
- Joyce, James, Finnegans Wake, Penguin, 1999
- Kenner, Hugh, Dublin’s Joyce, Columbia University Press, 1987
- Lawrence, Karen, The Odyssey of Style in Ulysses, Princeton University Press, 1981
- Burgess, Anthony, ReJoyce, W.W. Norton, 1968
- Morton, H.V, In Search of Ireland, Dodd, Mead & Co, 1984
- Dubliner’s 100, Edited by Thomas Morris, Tramp Press, 2014
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
