எழுது சித்திரம்

சங்கக் கவிதை, பக்திக் கவிதை – என்ற இரண்டுக்கும் இடையே சில நூற்றாண்டுகள் கிடக்கின்றன. (பரிபாடலிலும்,     திருமுருகாற்றுப் படையிலும் பக்தியின் முளைகள் தென்படுகின்றன). இந்த இடை நூற்றாண்டுகளில் தமிழ்க் கவிதை உருவத்திலும், உள்ளடக்கத்திலும் பல வகையான மாறுதல்களை எதிர்கொள்கிறது. கவிதையின் மையப்புள்ளி மனிதனிடமிருந்து நகர்கிறது, புறப்பாடல்களில் அரசரும், அகப்பாடல்களில் தலைவுரும் பெற்றிருந்த இடத்துக்கு இறைவன் வருகிறார் . ‘வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லன்‘ என்று சற்று அழுத்தமான குரலில் தெரிவிக்கிறார் நம்மாழ்வார். அகப்பாடல் தலைவியின் நிலைப்பாட்டை பக்தியுகக் கவிஞர்கள் சிலர் ஏறிட்டுக் கொள்கிறார்கள். நம்மாழ்வார் பராங்குச நாயகி ஆகிறார். திருமங்கை ஆழ்வார் பரகால நாயகி ஆகிறார். மாணிக்கவாசகரிடமும் இந்த நாயகித் தன்மையை உணர முடிகிறது.

இந்தப் புதிய அனுபவங்களைக் கடத்துவதற்கு ஏதுவாக மொழி நெகிழ்ச்சி அடைகிறது. உணர்ச்சி அதிகம் கலக்காத சங்கத் தமிழ், உணர்ச்சி ததும்புகிற பக்தித் தமிழ் ஆக மாற்றம் கொள்கிறது. ‘மதநிலை எடுகோள்களை வினாவுக்கு உட்படுத்தாது பார்த்தால் தமிழ் இலக்கியம் மதவுணர்வு வெளிப்பாட்டால் செழுமை அடைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும் என்ற பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் அவதானிப்பு கவனத்துக்கு உரியது.

உணர்ச்சி பெருகுகிற நிலையிலும், சங்கத் தமிழின் கச்சிதத் தன்மையைக் கைவிடாத பக்தியுகக் கவிதைகள் பலவற்றைக் காண முடிகிறது. எடுத்துக் காட்டாகக் கண்ணன் குழல் ஊதுகிற காட்சியைக் கச்சிதமான கவிதையாக மாற்றி விடுகிறார் பெரியாழ்வார்.

சிறு விரல்கள் தடவி பரிமாற செம் கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க
குறு வெயர் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டு கவிழ்ந்து இறங்கி செவி ஆட்டகில்லாவே

என்ற பெரியாழ்வார் திருமொழிப் பாசுரம் ‘ எழுது சித்திரம் போல்’ அமைந்து விடுகிறது. ‘சித்திரக் கடலில் மிதக்கும் சித்திரக் கப்பல் போல‘ என்ற ஆங்கிலக் கவிஞர் கோல்ரிட்ஜின் கவிதை வரியை நினைவுறுத்துகிறது. கண்ணனின் குழலிசையும் அதற்கான விலங்குகளின் எதிர்வினையும் கவிதையில் இரண்டிரண்டு அடிகளில் மிகச்சரியாக வகிர்ந்து அளிக்கப் படுகின்றன. குழலூதும் கண்ணனின் மெய்ப்பாடுகளும், இசை நுகரும் விலங்குகளின், பறவைகளின் உடல் மொழியும் இயல்பாகக் கவிதையில் பதிவு செய்யப் பட்டுள்னை, அளவான விவரணைகளும் அவற்றின் துல்லியமும் அதி கேள்வி அனுபவத்தைக் காட்சி அனுபவமாக மாற்றிக் கொடுத்து விடுகின்றன.

ஓரு சட்டத்திற்குள் வைக்கப்பட்ட சித்திரம் போன்ற இந்தக் கவிதையினுள் ஆண்டாள் புகும்விதம் பிரமிப்பை அளிக்கிறது. இந்தச் சட்டத்தைப் பிரித்து அதற்குள் தன்னுடைய அனுபவத்தை வேறு விதமாக எழுதிப் பார்க்கிறார் ஆண்டாள்:

அழிலும் தொழிலு முருக்காட்டான்
அஞ்சே லென்னா னவனொருவன்
தழுவி முழுசிப் புகுந்தென்னைச்
சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே
நெடுமா லூதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு
குளிர முகத்துத் தடவீரே

இங்குக் கண்ணனின் குழலிசைக்கு மாறாக, அவனது இதழ் ஈரம் படிந்த குழலே பிரதானமாகிறது. அந்தக் குழலின் துளைவாய் நீரை குளிர முகத்துத் தடவ வேண்டுகிற ஆண்டாளின் தாபம், கவிதையை வேறு ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. தந்தையும், மகளும் தத்தம் வழியில் தமிழ்க் கவிதையைப் புது உயரங்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள் .ஒரு பொது அனுபவத்தோடு தன்னுடைய தனி அனுபவத்தை இயல்பாகப் பொருத்தும் போது நிகழும் அதிர்வலைகளைக் காரைக்காலம்மையின் கவிதைகளிலும் உணர்கிறோம்.

துத்தங் கைக்கிளை விளரிதாரம் உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிதம் துந்துபி தாளம்வீணை
மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங் குடமுழா மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே

என்ற திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகப் பாடலில், பேய்கள் ஏழு சுரங்களோடு கூடிய பண் பொருந்தும்படிப் பாடிக் கொண்டு, பல்வேறு தோல் கருவிகளையும், நரம்புக் கருவிகளையும் வாசிக்க, அந்த ஒலி விரைவுக்கு ஏற்ப சிவபெருமான் ஆடும் ஊர்த்துவ தாண்டவம், ஓவியம் போல் காரைக்காலம்மையாரால் தீற்றப்படுகிறது. இந்த நடனத்தினுள் தனக்கென்று ஒரு சிறு இடத்தை அற்புதத் திருவந்தாதியில் செதுக்கிக் கொள்கிறார் அவர்.

அடிபேரில் பாதாளம் பேரும்
அடிகள் முடிபேரில் மாமுகடு பேரும்-
கடகம் மறிந்தாடு கைபேரில் வான் திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றாது அரங்கு

என்ற கவிதையில் சிவனின் ஊழிக்கூத்தினுள் அம்மை நுழைந்து, ஒரு தாயின் கனிவுடன், அறிந்தாடு; ஆற்றாது அரங்கு’ என்று வேண்டுகிறார். அந்தக் கணத்தில் தமிழ்க்கவிதை பாவனா சக்தியின் நூதன அழகைப் பெறுவதை உணர முடிகிறது.

தமிழ்க் கவிதை சில குறிப்புகள் - ந.ஜயபாஸ்கரன்

நீளமான கவிதை வடிவத்திலும் கலை ஒருமையைச் சாதிக்குமா வரலாற்றுவமைக்குப் பரணர்

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “எழுது சித்திரம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.