கீசக வதம்

மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா

தமிழாக்கம் : கார்த்திக்

பன்னிரண்டு வருட வனவாசத்திற்கு பிறகு ஒரு வருடம் மறைந்து வாழ வேண்டிய சூழலில், பாண்டவர்கள் தங்களது திரைமறைவு வாழ்விற்கு தேர்ந்தெடுத்த நாடு விராட நாடு. யுதிஷ்டிரன் அரசவையில் மன்னருக்கு ஆலோசனை கூறுபவனாகவும், பீமன் வல்லபன் என்ற பெயரில் மல்யுத்த வீரனாகவும் சமையல் கலைஞனாகவும், அர்ஜுனன் அவன் பெற்ற சாபத்தை உபயோகப்படுத்தி இளவரசியின் நடன குருவாகவும், நகுலன் குதிரைகளை பார்த்துக் கொள்பவனாகும், சகாதேவன் ஆடு மாடுகளை மேய்ப்பவனாகவும் தங்களை மாற்றிக் கொண்டு விராட நாட்டில் வசித்து வந்தனர். திரவுபதி இராணியின் தோழியாக தன்னை மாற்றிக் கொண்டாள்.

இராணியின் சகோதரனான கீசகன் அந்நாட்டின் படைத் தளபதியாக இருந்தான். உண்மையில் அவனே விராட நாட்டை ஆண்டான். அரசன் பெயரளவிலேயே இருந்தான். இந்நிலையில் கீசகன், திரவுபதியின் மேல் மையல் கொண்டு அவளை அடைய முயன்று வந்தான். முதலில், அவனை பற்றி மற்றவரிடம் சொல்ல தயங்கி கொண்டு தன் கணவர்கள் கந்தர்வர்கள் என்றும், அவளை அவர்கள் அவனைக் கொன்று விடுவார்கள் என்றும் பயமுறுத்தினாள். ஆனால் கீசகனோ அதற்கு பயப்படவில்லை. தன் சகோதரியை வற்புறுத்தி இரவில் தன் மாளிகைக்கு அனுப்ப வைத்தான். முதலில், பல காரணங்களை சொல்லி தவிர்த்தாலும், மகாராணியின் ஆணைக்கு கட்டுப்பட்டு அவளும் சென்றாள்.

அங்கே , கீசகன் அவளை பலவந்தப்படுத்த முயல, அவனிடம் இருந்து தப்பி அரசவைக்கு சென்று அரசனிடம் முறையிட்டாள். அவனோ தன் இயலாமையை காரணம் காட்டி தன்னால் எதுவும் செய்ய இயலாது என கை விரித்து விட்டான். அன்று இரவு எப்படியோ கீசகனிடம் இருந்து தப்பிய திரவுபதி சமையல் அறையில் இருந்த பீமனிடம் சென்று முறையிட்டாள். இருவரும் சேர்ந்து கீசகனை பழி வாங்க திட்டம் தீட்டினர்.

அதன்படி, மறுநாள் காலையில் கீசகனை சந்தித்த திரௌபதி முதல் நாள் இரவு நடந்தவைக்கு மன்னிப்பு கேட்டாள். பின் , கீசகனை இப்பொழுது புரிந்து கொண்டதாகவும் அன்று இரவு இளவரசிகளின் நடன அவை யாரும் இல்லாமல் இருக்கும் என்றும் அங்கே வருமாறும் கூறினாள். அவள் மேல் மோகம் கொண்ட கீசகனும் இரவு தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு அங்கே சென்றான். அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு இருட்டில் பீமன் சேலை அணிந்து பெண் போல் இருந்தான். இதை அறியா கீசகன் அருகே சென்று தோளில் கை வைக்க திடமான உடல் வாகைக் கண்டு திடுக்கிட்டான். பீமனும் தன் வேடத்தைக் கலைக்க துவந்த யுத்தம் துவங்கியது.

இருவரும் சம பலம் கொண்டவர்கள். மேலும் மிக சிறந்த மல்யுத்த வீரர்கள். அவர்களுக்கு இணையாக பலராமனை மட்டுமே சொல்ல இயலும். ஆதலால், வெகுநேரம் சண்டை நீடித்தது. இறுதியில், கீசகனை கொன்ற பீமன், அவன் உடலை சதைப்பிண்டமாக மாற்றி அங்கேயே விட்டுவிட்டு சென்றான். பின், குளித்து அலங்கரித்து நிம்மதியாக உறங்கினான்.

மறுநாள் காலை, கீசகனின் மரண செய்திப் பரவியதும், தன்னை தவறாக அவன் அணுகியதால் தன் கந்தர்வ கணவர்கள் அவனை கொன்றுவிட்டதாகக் கூறினாள். அதன்பின் அவள் விராட நாட்டில் இருந்தவரை அவளை யாரும் துன்புறுத்தவில்லை.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை

பகைவனுக்கும் அருள்வாய்! வீரனாக மாறிய பேடி

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.