பாங்சி (Banksy) யார்?

எழுத்தாளர்கள் ஏன் புனைப்பெயருடன் எழுதவேண்டும்?, சூப்பர் ஹீரோக்கள் ஏன் முகமூடி அணியவேண்டும்?. எழுத்தும் , செயலும் தற்போதைய சமுதாய நெறிகளை, அறங்களை , ஆதிக்க வர்க்கங்களை, கூட்டுச் சிந்தனையை, மதிப்பமைப்புகளைத்  தகர்த்தெறியும் விதத்திலிருந்தால்,  உயிருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்புகள் இருக்கும்போது,  பெயரில்லாமல் அல்லது புனைப்பெயருடன் எழுதுவது சகஜம்.  கூச்ச சுபாவமுடையவர்கள் தங்கள் படைப்பு சபை ஏளனத்திற்கு ஆளாகிவிடுமோ என்ற பயத்தில் புனைபெயருடன் எழுதலாம். குசும்பிற்காகவும் சிலர் அப்படிச்  செய்யலாம். புனைப்பெயர்களின் தேர்வு சிக்கலான விஷயம். கொள்கை காரணமாகவோ (புதுமைப்பித்தன்), தன்னை கவர்ந்த  முன்னோடிக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவோ (பாரதிதாசன்) , இதிகாசத்தில் பிடித்த பாத்திரத்தினாலோ  (கவிஞர் வாலி ) இன்னும் பல காரணங்களால் படைப்பாளி தன் புனைப்பெயரை தேர்ந்தெடுக்கலாம் (சொந்த பெயருடன் எழுதுவதால் எனக்கு இந்த சிக்கல் ஏற்பட்டதில்லை. மேற்கண்ட காரணங்கள் எல்லாம் என்  அனுமானங்களே).  

புனைப்பெயருடன் செயல்படுபவர்களில் இரண்டு வகையினர் உண்டு. முதலானவர் பெயருக்குப் பின்னால் இருக்கும் நிஜ ஆளுமையை அறிமுகப்படுத்திக்கொள்ளத் தயங்காதவர்கள் (தேவதேவன், விக்கிரமாதித்தன், மார்க் ட்வைன், சாக்கி). ஆனால் இரண்டாம் பிரிவினர் விசித்திரமானவர்கள் , மர்மமானவர்கள். இப்பிரிவினர் எக்காரணத்திற்கும் தங்கள் நிஜ அறிமுகத்தைக் கொடுக்கமாட்டார்கள். தங்கள் தனிமைக்கும் ஆக்க சுதந்திரத்திற்கும் சுய அறிமுகம் பாதமாக அமைந்துவிடக்கூடாதென நினைப்பவர்கள். புகழின் பின் விளைவுகளை முற்றிலும் தவிர்க்கவோ அல்லது அதை வரம்பிக்க விரும்புவார்கள். பிரபல தமிழ் இலக்கிய ஆளுமை ‘பேயோன்’ , “நான் பப்ளிக் ஃபிகராக இருப்பதை விட வெறும் ஃபிகராக இருக்கவே விரும்புகிறேன்” எனச் சொல்வதில் வாசகர்களுடன் கண்ணாமூச்சி ஆடுவதில்  விருப்பமில்லாதவர் என்பது தெளிவாகிறது. கலைத்துறையைத் தாண்டி உலகமெங்கும் பரவலாக உபயோகிக்கப்படும் இக்ரிப்டோ (crypto) பணத்தின் ஆக்க வித்தகர் சடோஷி நாகமோடோ (Satoshi Nakamoto) தன்னை உலகிற்கு இன்னும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை.  

புனைப்பெயர்கள் பெரும்பாலும் இலக்கியத்தில் மட்டும் காணப்படும் சமகாலத்தில் ஓவியக்கலையில் மர்மமான பெயருடன் தனக்கே உரியத் தனித்துவ பாணியில் புதுமைகளை வழங்கிக்கொண்டிருப்பவர் பாங்சி. “பாங்சி யார்?” என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு சொல்லாட்சி கேள்வி (Rhetorical Question). ஒருவரின் அறிமுகம் என்பது பெயருடன் உருவத்தை ஜோடிக்கும் நிகழ்வு. அறிமுகம் கிடைத்ததும் ஒரு சிலரே அம்மனிதரைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள ஆசைப்படுவர். பாங்சி தன் பெயரைச் சொல்லவில்லையே தவிர  அதைவிட அதிகமாய் தன் சிந்தைக்குள் நுழையப் படைப்புகளின்மூலம் ஒரு ஜன்னலையும் ஏணியையும் கொடுத்திருக்கிறார். நாடோடி பாட்டிற்கும், பழமொழிகளுக்கும் தாய் தந்தை யாரென ஆராய்வதைவிட அவற்றில் உள்ளடங்கும் சுவையையும் ஞானத்தையும் ரசிப்பதே உகந்தது. எனவே பாங்சியை கண்டறிவதைவிட அவர் படைப்புகளுடன் நம்மை இனம் கண்டுகொள்வதே உசிதம். 

பாங்சியை பற்றிப் பேசும்போது இரண்டு விஷயங்களைப் பேசுவது முக்கியம். க்ராஃபீட்டி (Graffiti) மற்றும் ‘புலன் கவிழ்த்தல்’. முதலாவதை விளக்குவது  சுலபம். க்ராஃபீட்டி, ஓவியப்பிரிவுகளில்  மிக இளைய பிரிவு. க்ராஃபீட்டி என்பதன் தமிழாக்கம் ‘சுவர் சித்திரம்’ என்று பல வலை அகராதிகளில் காணக்கிடைக்கிறது. மிகச் சிறப்பாகத் தமிழ் விக்கினேரியில், ‘பொது இடங்களிலும், சுவர்களிலும் அத்துமீறி எழுதப்படும் எழுத்துக்கள்; சுவரெழுத்து; கிறுக்கல்’ என்றே விவரிக்கிறது. மரபு ஓவியங்களின் தளத்திலிருந்து பார்த்தால் இந்த விரிவாக்கம் உண்மையென்றே தோன்றும். க்ராஃபீட்டி இயக்கம் வெகுஜன ஒப்புதல் பெறாத , சிறிசுகளின் கிறுக்கல்கள் என்று ஆரம்பக்காலத்தில் பார்க்கப்பட்டது அக்காலகட்டத்தில் நடப்பில் இருந்த ஓவியக்கலை நெறிகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. பரந்த மனதுடன், திரைச்சீலையின்மேல்  பிரபல ஓவியர்கள் ‘வரைந்த’ (அல்லது கிறுக்கிய) படைபுகைக்கூட ஒப்புக்கொண்ட கலையுலக நிபுணர்கள் ஆரம்பக்காலத்தில் க்ராஃபீட்டி உள்ளடக்கும் வெளிப்பாட்டையத்தை (expressionism) இனம் கண்டுகொள்ளவில்லை. க்ராஃபீட்டி வகை வர்த்தக நுகர்விற்கு உகந்ததாக இல்லாததால் அதன் மீது கலையுலகிற்கு அதிக நாட்டம் இருக்கவில்லை. இந்த நிலை மாறி, கலையுலக மற்றும் விமர்சன ஒப்புதல் பெற்று அத்துறையின் முடிசூடா மன்னரென பாங்சி அமர இருபது வருடங்கள் ஆனது. 

பொது நுகர்விற்குக் கிடைக்கப்பெறும் ஓவியங்கள் அழகியல் சார் படைப்புகளாக இருப்பதில் தவறில்லை. ஓவியங்கள் பலதரப்பினரால் வெவ்வேறு காரணங்களுக்காக வாங்கப்படுகிறது. அதில் ஒரு சிறு சதவிகிதம்தான் ஓவியரின் வெளிப்பாட்டையத்திற்கு மதிப்பு கொடுத்து வாங்கப்படுபவை. பப்லோ பிக்காசோவிடம் (Pablo Picasso) ஐம்பதாயிரம் டாலர்கள் கொடுத்து ஓவியத்தை வாங்கிய பெண் ஒருவர்,  ‘நீங்கள் இதில் வரைந்திருப்பது புரியவில்லை, இதன் பொருள் என்ன?’ என்றதிற்கு பிக்காசோ ‘இதன் பொருள் ஐம்பதாயிரம் டாலர் மேடம்’ என்றாராம். புத்தரை வரவேற்பு அறையிலும், அமைதியான நிலப்பரப்பை அல்லது பூச்செண்டைப் படுக்கையறை சுவரிலோ தொங்கவிட நினைக்கும் வெகுஜனருக்கு ஏற்றாற்போல் வாழ்வாதாரத்திற்காக ஓவியர்கள் படைப்புக்களைக் கொடுப்பது தவறல்ல. இத்தகைய தேர்வின் ஒரே சிக்கல், அச்சடித்து வைத்ததுபோல ஒரே பாணியில், மந்தை உற்பத்தி செய்யப்படும் படைப்புகள் காலப்போக்கில் சுவருடன் சுவராகிவிடும். பாங்சியின் படைப்புக்களை வரவேற்பறையில் தொங்கவிடுவது (அதாவது படைப்பின் நகலை) வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுடன் கருத்து பரிமாற்றத்திற்கு அழைப்பிதழ் விடுக்கும் துணிச்சலான செயல். ஃபிரான்சிஸ் பேகனின் (Francis Bacon) உருவப்பட முயற்சிகளையோ அல்லது அவரது நெருங்கிய நண்பரான லூசியன் ஃபிராய்டு (Lucian Freud) வரைந்த மிக நுணுக்கமான முகங்களையோ வரவேற்பறையில் மாட்டுவதற்கு ஈடானது.  விருந்தாளிகளின் கவனத்திலிருந்து நிச்சயமாகத் தப்பாது. 

‘புலன் கவித்தல்’ ஒரு சிக்கலான சொல், அகராதியில் இல்லாத சுய படைப்பு. ஆங்கில ‘subversion’ என்ற சொல்லிற்கு வலைத்தளங்களில் கொடுக்கப்பட்ட அர்த்தங்களுடன்  ஒப்புதல் இல்லாததால் இந்த ஒத்திசைவு சொல்லை உருவாக்கினேன்.  பொது நுகர்வு  படைப்புக்களைப் பார்த்துச் சோர்ந்துபோன கண்களுக்கும், சிந்தைக்கும் அதிர்ச்சியைக் கொடுப்பது ‘புலன் கவிழ்தல்’ எனலாம். கலை விமர்சகர்களுக்கு மிக பிடித்தமான சொல்  ‘subversion’. புதுமையை அதுவும் இனம் கண்டுகொள்ள முடியாத சில அசிரத்தைகளை ‘subversion’ எனக் குறிப்பிட விமர்சகர்கள் தயங்குவதில்லை. தலைசுற்றுமளவுக்கு உபயோகிக்கப்படும் இந்த பதத்தைத்தவிர பாங்சியின் படைப்புக்களை விமர்சிக்க வேறு வார்த்தையில்லாததே துயரம். 

பாங்சியின் படைப்புகளில் காணக்கிடைக்கும் எதார்த்தம் மற்றும் நையாண்டித்தனம் அப்பட்ட எதிர்ப்பு வாதமல்ல, வன்முறைக்குக் குரலும் அல்ல. பாங்சியின் படைப்புகளின் குரல், புறநிலை வாதங்கள். பாங்சியின் க்ராஃபீட்டிகள் சமுதாயத்தை ஐயுருவியல் கண்களுடன் பார்ப்பதுமட்டுமின்றி, அபத்தத்தை, புறக்கணிப்பை, பாரபட்சத்தைப் பொலிவான ஆடைகளின்மூலம் மறைக்க நினைக்கும் சமுதாயத்தை, அரசியலை , மதிப்பமைப்புகளை பிறந்த மேனி கோலமாய் காட்டும் கண்ணாடியும்கூட. பாங்சியின்  படைப்புகள் ‘விழித்த’ (Woke) எண்ணங்களின் உதாரணம், கற்பனாவாதத்தின் உச்சம் என வலதுசாரிகள் விமர்சிப்பது ஓரளவுக்கு உண்மை. போராட்டங்கள், அதுவும்  மதிப்பமைப்பை எதிர்க்கும் போராட்டங்கள், சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பாடநூல் எதிர்ப்பு பேசும் சொற்பொழிவாளர்களின் வேலையல்ல. போராட்டங்கள் வீதிக்குச் சொந்தம். வீதி பொதுச் சுவர்களில் பாங்சியின் படைப்புகள் இருப்பதே  அவற்றிற்கு உகந்த இடம்.  

கற்பனைத்திறனின் எல்லைகளைப் படிமங்களின் மூலம் தீண்டுவதற்குத் தனித்திறமை தேவை. பலமுறை தணிக்கை செய்யப்பட்டும் ஆவணப்படங்களாகவும், நகல்களாகவும் நிலைத்து நிற்பவை பாங்சியின் படைப்புகள். மகாராணி எலிசபெத்தை நேர்பாலீர்ப்பு பெண்ணாகவும், குரங்கின் கையில் டைனமைட் குச்சியைக் கொடுப்பதிலும் உள்ள எண்ணங்களுக்கு மாறாகச் சிறுமியின் கையில் இருதய பலூனை கொடுக்கும் எண்ணம் வித்தியாசமானது. இதனால் பாங்சியின் சிந்தையில் வானவில்லின் வண்ணங்களுக்கேற்ப மாறுபடும் சிந்தை ஓட்டம் நிலவுவது புலப்படுகிறது.  க்ராஃபீட்டி பெரும்பாலும் (வேலையில்லா) இளைஞர்களின் பொழுதுபோக்கு என்பதில் எள்ளளவு உண்மையிருந்தால், பாங்சிக்கு  இப்போது ஐம்பது வயதைத் தாண்டி இருக்கும் நிலையில் நடுவயது சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்.  

கலை தனித்துவ அனுபவம். ஒருவர் கண்ணனுக்கு , சிந்தைக்கு ஓர் படைப்பு ஏற்படுத்தும் பாதிப்பு இன்னொருவருக்கு ஏற்படுத்தாது. சில கலைஞர்கள் காலப்போக்கில் பல படைப்புக்களைப் படைத்தும் ஒரு படைப்பே அவர்களுடைய அடையாளமாகிவிடும். உதாரணத்திற்கு எட்வார்ட் முன்க் வரைந்த ‘scream’. பாங்சியின் கலை பேழையில் இத்தகைய பல சிகரங்கள் உள்ளன.பாங்சியின் மிக அதிகமாக விற்பனையாகும் ‘சிறுமியும் பலூனும்’ (A Girl with Balloon) என்ற படைப்பை, இரு கோணங்களிலிருந்து புரிந்துகொள்ள முடியும். அன்பை (பலூன் வடிவில் ) குழந்தைப்பருவ பாதிப்புகளினால் (பலத்த காற்று) இழக்கும் ஒரு சிறுமி என்ற ஒரு கோணமும், பால்யம் விலகி பருவத்திற்கு வரும் ஒரு பெண்ணின் உருவமாக இன்னொரு கோணமாகப் பார்க்கமுடியும் . 

பாங்சி படைப்புகளில் அடிக்கடி தோன்றும் எலி,ஓர் சிந்தனை உருவகம்.”Rats are the only free citizens in the city.”  (எலிகளே நகரின் உண்மையான சுதந்திர குடிமக்கள்) என்பதன் பிரதிபலிப்பு. எலிகளைக் கலாச்சார எதிர்ப்பு செய்தி சொல்ல ஒரு ஊடகமாகவே உபயோகிக்கிறார். பாங்சியின் பல படைப்புகள் நகரக் கால்வாய் கரையோரம் இருக்கும் சுவர்களில்தான் காணப்படுவது, எலிகளின் உலகில் மனிதன் தலையிடுவதுபோல தோன்றுகிறது. கலைக்கும் அரசியலுக்கும் அதிக தூரங்கள் இல்லை. அரிசியால் அபத்தங்களைக் கலை அடையாளம் கண்டு வெளிப்படையாக விமர்சிக்க என்றுமே தயங்கியதில்லை. பப்லோ பிக்காஸோவின் ‘குயர்னிகா’ (Guernica), சதாத் ஹாசன் மண்டோவின் ‘டோபா டேக் சிங்க’ , ‘தாண்டா கோஷ்ட்’ போன்ற படைப்புகள் இந்த மீறலின் எடுத்துக்காட்டு . தெருக்களே திரையாகும்போது, அரசியல் பாங்சியின் படைப்புகளின் முக்கிய கருவாக அமைவதில் ஆச்சரியமில்லை. குறிப்பாக க்ராஃபீட்டி ஓவிய பிரிவு அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்த மிக உகந்த ஊடகம். தெருச் சுவர்கள் எல்லோரும் பார்க்க முடிந்த பொது திரைகள். ஒரு இடத்தில் தணிக்கை செய்தாலும் இன்னொரு இடத்தில் அதே படத்தை ஸ்டென்சில் நுட்பம் மூலம் வெகு விரைவில் வரைய முடியும். 

The Mild Mild West (1999) என்ற படைப்பில் அளவுக்கு அதிகமான அடக்குமுறை அல்லது ஆதிக்க ஒடுக்குமுறை சிந்திக்கும் படிமமாக வெளிப்பாட்டையம்  பெற்றுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் எல்லையில் ‘பூச்செண்டு எறிபவன்’ (Flower thrower) என்னும் படைப்பு குண்டுகளால் தகர்த்தெறியப்பட்ட குட்டிச் சுவரில் திடீரென ஒரு நாள் உதயத்தில் தோன்றியது. இத்தகைய அரசியல் நையாண்டித்தனம் பாங்சி படைப்பு களஞ்சியத்தில் மிக அதிகம். இது ஒருபுறமிருக்க Dismaland யில் இளவரசி  டயானா விபத்துக்குள்ளாகி பரிதாபமாக மரணமடைந்ததை, சிண்ட்ரெல்லா பயணிக்கும் ரதம் உடைந்து அதனைப் புகைப்படக்காரர்கள் சூழ்ந்துகொள்ளும் நிலைக்காட்சியின் (Installation) மூலம் வெளிப்படுத்தியதில் பாங்சி இங்கிலாந்தின் இதய இளவரசிக்குச் செலுத்திய உணர்ச்சிப்பூர்வமான  ஊமை அஞ்சலி தெரிகிறது. 

நவீன ஓவியக்கலை பார்வை அனுபவத்தைவிடச் சிந்தை தீண்டலின் பாதிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒரு ஓவியத்தை அல்லது கலைப் பொருளை (சிற்பம், நிலைக்காட்சி, புகைப்படம் எதுவே ஆகட்டும் ) உருவாக்கக் காரணமாய் இருக்கும் கரு, சில படைப்பாளிகளுக்கு நொடிப்பொழுதில் தோன்றலாம் அல்லது சில கலைஞர்கள் ஆழ்ந்த சிந்தனைக்குப் பின், பல குறிப்புகள் சேகரித்து காட்சி வடிவாக்கம் பெறலாம். சமகால கலை உலகின் போக்கு எதிர்க் குரலை அல்லது ‘புலன்  கவிழ்த்தல்’ பாணியையே பின்பற்றுகிறது. சக ஆங்கில கலைஞர் டேமியன் ஹிர்ஸ்ட் (Damien Hirst) சுறா ஒன்றைக் கண்ணாடி தொட்டிக்குள் கெடாமல் காட்சிக்கு வைத்தது சர்ச்சைக்குரிய கலை அனுபவம். எதைக் கலை எனத் தீர்மானிக்கலாம் என்ற அடிப்படை கேள்வியை அந்த நிலைக்காட்சி கலை பிரியர்களிடம் ஏற்படுத்தியது. அடிப்படையில் இக் கேள்வி, ‘ கலை என்பது எது?’ மீண்டும் சொல்லாட்சி கேள்விதான். சிந்தையைத் தீண்டும் எதுவும் கலைதான். உண்மையை உணரச்செய்யும் எதுவும் கலைதான். எதிர்ப்பை, காதலை, அடிப்படையில் மனித உணர்ச்சிகள் சகலத்தையும் ஆட்கொள்ளும் எதுவும் கலைதான்.   

அதிர்ச்சியை ஒரு ஆயுதமாகப் பலவகையில் உபயோகிக்கமுடியும். ஒரு மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விலைபோன படைப்பு ஏலச்சுத்தி விழுந்ததும் தானே  பாதி அழித்துக்கொண்டது அக்மார்க் பாங்சி ‘அதிர்ச்சி’ பாணி என்றாலும்  ‘அழிவில்லாமல் படைப்பில்லை’ என அதனை விமர்சித்தது நிஜமாகவே கொள்கையின் காரணமாகவா அல்லது மலிவு விளம்பரமா  என்ற கேள்விக்குப் பதிலளிக்காமல் புறக்கணித்தது மாபெரும் கலைஞனின் பாணியல்ல. முடிவில் கிழிக்கப்பட்ட படைப்பு விலைபோன மதிப்பைவிட இருமடங்கு மதிப்பில் அதிகரித்தது கலையுலகு  எந்தளவிற்கு முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தில் உள்ளதென்பதைக் கலை  ரசிகர்களுக்குத் திடுக்கிடும் வண்ணம் நினைவூட்டியது. கலை, அதிலும் முக்கியமாக ஓவியக்கலை, சாமானிய மக்களின், கலை ரசிகர்களின் சக்திக்கு அப்பால் போய்விட்ட நிலையில், அசல்கள் வங்கி இரும்புப்பெட்டியில் வர்த்தக முதலீடாக அடைக்கப்பட்டிருக்கும்போது, கலை,நகல்களின் மூலமே இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் பாங்சியின் சுவர் சித்திரங்களில் பல அச்சுவர்களுடன் சேர்ந்திருக்கும் வீட்டு முதலாளிகளுக்கு பெரும் செல்வத்தை  ஈட்டிக்கொடுத்திருப்பது கலையுலக போக்கிற்கு நேர் மாறாக இருப்பதினால், மீண்டும் ‘புலன் கவிழ்த்தல்’ என்ற சொல் பாங்சியின் படைப்புக்களை விளக்கத் தகுந்த பதம்  என்றே தோன்றுகிறது. 


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.