கருவியில் கிடைத்த சுநாதம்

இசை, இசைக்கலைஞர்கள் குறித்த வரலாறு, ஆய்வுக் கட்டுரைகள் என்று அரிய தகவல்களுடன் மிளிர்கின்றது. இதற்கு முன் கேள்விப்படாத பலவும் நூலில் இடம்பெற்றுள்ளன.

பரிவாதினி இசை மலர் (இரண்டாம் பாகமும்) தினமணி சிவகுமார் தொகுத்து வெளியாகி உள்ளது. பல நல்ல இசை ரசிகர்கள் எழுதிய கட்டுரைகள், அரிய புகைப்படங்கள், பழைய இசை கச்சேரி விளம்பரங்கள் என அழகாக வெளியாகி உள்ளது. மிகக் காத்திரமாக வந்துள்ளது. கவிதைகளுக்கு ‘கொங்குதேர் வாழ்க்கை’ தொகுப்பு ஒரு சுட்டு நூலாக இருப்பது போல இந்த நூலின் இரு பகுதியும் இசைக்கு அரிய ஒரு தொகுப்பு.

+919980992830 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் / parivadinimusic@gmail.com தொடர்பு கொள்க.

தலைசிறந்த நாகஸ்வர வித்வான்கள் என்று யாரைப் பட்டியலிடச் சொன்னாலும் அவர்கள் பட்டியலில் எல்லாம் சில பெயர்கள் நிச்சயம் இடம்பெரும். அவற்றுள் வித்வான் வேதாரண்யம் வேதமூர்த்தியின் பெயர் கண்டிப்பாக இருக்கும்.

வேதமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு, முனைவர் பி.எம்.சுந்தரத்தின் ‘மங்கல இசை மன்னர்கள்’ நூலிலும் வேறு இதழ்களிலும் பதிவான ஒன்றுதான். அவற்றை வைத்துப் பார்க்கும் போது வேதமூர்த்தி அவர்களின் சங்கீத வாழ்வின் திருப்புமுனை 1952-ல் நிகழ்ந்தது தெரிய வருகிறது. அந்த ஆண்டில்தான் அவர் மாற்றியமைத்த நாகஸ்வரம் அரங்கேறுகிறது. ராஜரத்தினம் பிள்ளை என்கிற பெரும் சங்கீத அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் நுழைந்து, முழுவதாக பத்தாண்டுகள் நிலைப்பதற்குள் – வெறும் 38 வயதில் காலமாகிவிட்ட கலைஞர் வேதமூர்த்தி. கிடைக்கின்ற ஒலிப்பதிவுகள் அத்தனையையும் திரட்டினாலும் 15 மணி நேரம் தேறினாலே பெரிது என்பதுதான் நிதர்சனம். இந்தச் சூழலில் தலைமுறைகள் பல தாண்டியும் வித்வான் வேதமூர்த்தியின் பெயர் நிலைத்து நிற்பதற்கான காரணம் என்ன?

வேதமூர்த்தி என்றதும் முதலில் மனத்தில் எழுவது அவர் கருவியில் கிடைத்த சுநாதம். ஸ்ருதி பத்திரிக்கையில் தொடர்ந்து கலைஞர்களைப் பற்றி எழுதிய சங்கரநாராயணன் ஒருமுறை சொன்னார், “பகவான் எதுக்கு ரெண்டு காதைக் கொடுத்திருக்கான் தெரியுமா? ஒரு காதுல காருகுறிச்சி அருணாசலத்தோட நாதத்தை நிரப்பிக்கணும். இன்னொரு காதுல வேதாரண்யம் வேதமூர்த்தியோட நாதத்தை நிரப்பிக்கணும்.”. பொதுவாக நாகஸ்வர கலைஞரின் நாதத்தை, பாடகரின் குரல்வளம் போல, இயற்கையில் அமைந்தது என்று கருதுவதுண்டு. வேதமூர்த்தியின் வரலாற்றைப் பதிவு செய்தவர்கள் , அவருக்கு இயற்கையில் அமைந்த நாதம் அத்தனை இனிமையாக அமையவில்லை என்று குறித்துள்ளனர். நாகஸ்வரக் கருவியில் நீண்ட குழாய் போன்ற பகுதியை உலவு என்றும், அதன் கீழே பொருத்தப்படும் கூம்பு போன்ற பகுதியை அணசு என்றும் குறிப்பதுண்டு. வேதாரண்யம் வேதமூர்த்தி இந்த இரு பகுதிகளுக்கும் இடையில் ஒரு தகரக் குழாயைப் பொருத்தியதன் மூலம் தன் வாசிப்பை சுநாதமாக்கினார் என்பதே பரவலாய் நம்பப்படும் கதை. இதில் உண்மையும் உண்டு என்றாலும், இதைச் சொல்லும் போது வேதமூர்த்தியின் சாதனையின் வீச்சு குறுக்கப்பட்டுவிட்டதோ என்று தோன்றுகிறது.

முதலில், ஒரு கருவியில் புதியதொரு அங்கத்தை நுழைத்து மாற்றியமைப்பதென்பது இமாலய சாதனை. நாகஸ்வர வரலாற்றை எடுத்துக் கொண்டாலே, ஸ்ருதி அளவு அதிகமாய் ஒலித்த திமிரி நாயனத்தின் நீளத்தைக் கூட்டி, ஸ்வரங்களுக்கான துளைகளைச் சரிவர இட்டு ஸ்ருதியின் அளவைக் குறைத்து இடை பாரி நாயனமாக்கவே பல பேரின் பல ஆண்டுகால உழைப்புத் தேவைப்பட்டு இருக்கிறது என்பதை உணர முடியும். இந்த அலகைக் கொண்டு பார்க்கையில் வேதமூர்த்தியின் புதிய முயற்சிக்குப் பின்னால் உள்ள ஆராய்ச்சியையும், உழைப்பையும் உணர முடியும்.

வேதமூர்த்தி அவர் செய்த மாற்றங்கள் என்ன? அந்த மாற்றங்கள், அவர் கருவியைக் கையாள்வதைச் சுலபமாக்கினவா அல்லது கடினமாக்கினவா? இந்த மாற்றங்களைச் செய்ய அவரைத் தூண்டியவை எவை?

இந்த மூன்று கேள்விகளில் முதல் இரண்டு கேள்விகளுக்கான விடையை நேரிடையாகக் கண்டு கொள்ள முடியும். மூன்றாவது கேள்விக்கான விடையை அனுமானிக்கத்தான் வேண்டியுள்ளது.

வித்வான் வேதமூர்த்தியின் தம்பியும், பிரபல தவில் வித்வானுமான வேதாரண்யம் பாலசுப்ரமணியம் கூற்றுப்படி வேதமூர்த்தி பயன்படுத்திய நாகஸ்வரம், மேதை திருவெண்காடு சுப்ரமண்யம் அவருக்கு பரிசாக வழங்கிய ஒன்று. இன்றும் இந்த வாத்தியத்தை வித்வான் பாலசுப்ரமணியம் பாதுகாத்து வருவதால் அதை ஆராய முடிந்தது. இந்த வாத்தியத்தின் இயற்கை ஸ்ருதி அளவு மூன்று கட்டை. முன் சொன்னது போல இதன் உலவுக்கும், அணசுக்கும் இடையில் இணைக்கப்பட்ட உலோகக் குழாயினால் இதன் ஸ்ருதி இயற்கை ஸ்ருதியிலிருந்து சற்று குறைந்து ஒலித்திருக்கும். மேலும் நாகஸ்வரத்தில் ஸ்வரங்கள் வாசிக்கும் துளைகள் உள்ள பகுதிக்குப் இரண்டு பக்கங்களிலும் (orthogonal planes) பிரம்ம துளைகள் இடம் பெறும். வழமையான நாகஸ்வரங்களில் இரண்டு பிரம்ம துளைகள் இருக்கும். இந்த மாற்றப்பட்ட நாகஸ்வரத்தில் நான்கு பிரம்ம துளைகள் உள்ளன. இந்த நான்கில் ஒரு துளை அடைக்கப்பட்டுள்ளது வாத்தியத்தைப் பார்க்கும்போது தெரிய வருகிறது.

இந்த மாற்றங்களைக் குறிப்பிடும் போது நாம் கவனிக்கத் தவறும் விஷயம் ஒன்று உண்டு. இந்த மாற்றங்களைச் செய்ததனாலேயே வாத்தியத்தின் இயற்கை ஸ்ருதி பல பதிவுகள் சுட்டும் ஒன்றரைக் கட்டை அளவிற்குக் குறைந்துவிடவில்லை. அவர் உபயோகித்த சீவாளியின் இயற்கை ஸ்ருதியமைப்பும் ஒன்றரைக் கட்டையில் ஒலிக்கவில்லை. எனில் அவர் வாசிக்க தேர்வு செய்த ஸ்ருதி வாத்தியத்தின் இயற்கைக்கும் குறைந்த ஸ்ருதியாய் ஒலிக்க, வாத்தியத்தை இசைக்கும் போது கொடுக்கும் காற்றளவைக் கட்டுப்பத்தியே (blowing control) செய்திருக்கிறார் என்கிற விஷயம் எங்கும் பதிவானதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தைச் சரியாக உணர்ந்து கொள்ளும் போது வேதமூர்த்தி செய்த மாற்றங்கள் அவர் வாசிப்பில் சுநாதத்தைக் கொண்டு வர அவர் வாத்தியம் எதையும் எளிதாக்கவில்லை; மாறாக இயற்கைக்கு மாறான ஸ்ருதியை காற்றளவில் மூலம் கட்டுப்படுத்தும் புதிய சவாலையே அவருக்குக் கொடுத்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இத்தனை இடர்களுக்கிடையில் இத்தனை சுநாதமாய் கருவியை ஒலிக்க வைக்க அவர் எத்தனை உழைத்திருக்க வேண்டும் என்பதைக் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை.

கருவியில் மாற்றம் செய்ய அவர் ‘நாகஸ்வர வழி’ என்று பரவலாக அறியப்பட்ட முறையிலிருந்து விலகி தனக்கென்று ஒரு வழியை அமைத்துக் கொண்டதே காரணம் என்பது என் அனுமானம். கருவியின்/கருவியைக் கையாளும் திறனின் எல்லைகளை ஒட்டி வாசிப்பின் வழியை அமைத்துக் கொள்வதே வழக்கம். வாசிப்பின் வழிக்கேற்ப கருவியை மாற்றி, அந்த மாற்றங்கள் வாசிக்கச் சில இடர்களை ஏற்படுத்தினாலும், வெளிப்படுத்த நினைக்கும் பரிமாணங்களுக்கு அதுவே பொருத்தமென்று அந்த இடர்களோடும் கருவியைக் கையாள்வது அபூர்வம்.

கர்நாடக சங்கீதத்தில் பொதுவாக இரண்டு வழிகளைக் குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. ஒன்று நாகஸ்வர வழி; மற்றொன்று வீணை வழி. ஒரு நாகஸ்வர கலைஞரின் வாசிப்பு முறையை ‘வீணை வழி’ என்று குறிப்பிடுவது வித்வான் வேதமூர்த்தியின் வாசிப்பைச் சொல்லும் போது மட்டும்தான்.

கம்பீரமான பேரொலியும், ஒற்றை மூச்சில் காலத்தைப் பழித்து நீண்டு ஒலிக்கும் தார ஸ்தாயி கார்வைகளையும், அடுக்கடுக்காய் பெருகி ஸ்வரக் கணைகளாய் பாய்ந்து பெருகும் ராகச் சுழல்களையும் நாகஸ்வர வழியின் முக்கியமான இயல்புகள். வீணையின் நாதத்திலும் கம்பீரம் உண்டெனினும் சமபங்காய் நளினமும், குழைவும் கலந்திருக்கும். வேதமூர்த்தி இந்த வகை நாதத்தையே நாடினார் என்பதைப் பதிவுகள் காட்டுகின்றன. நாகஸ்வரத்தின் போரொலிகளை விட துல்லியமாய் ஒலிக்கும் மென் ஒலிகள் ராகத்தை வெளிப்படுத்தும் ஒளிக்கீற்றுகளாய் பளிச்சிடுகின்றன. அவருடைய கச்சேரிகளில் பிரதானமாய் இடம்பெற்றுள்ள ராகங்களான பைரவி, சுருட்டி, சஹானா, தேவகாந்தாரி,நாட்டைகுறிஞ்சி போன்ற ராகங்களும் இவரது இந்த அணுகுமுறைக்கு ஏற்றவை என்பதையும் பொருத்திப் பார்க்கலாம். அவர் ஆலாபனைகளை ஆராயும் போது அவற்றில் பெரும்பங்கு மத்திய ஸ்தாயி சஞ்சாரங்களுக்கே என்று தெரிய வருகிறது. சில சஞ்சாரங்களின் போது தார ஸ்தாயி ஸ்வரங்களையும் அவ்வப்போது தொட்டுக் கொண்டாலும், அந்த ஸ்வரங்களில் கார்வையாக நின்றோ, அந்த ஸ்தாயியில் மட்டுமே நீண்ட சஞ்சாரங்களாக பெருகியோ ஒலிக்கும் வகையில் அவர் ஆலாபனைகள் அமைந்திருக்கவில்லை. இது அவர் மாற்றி அமைத்த நாகஸ்வரம் ஏற்படுத்திய தடையா அல்லது அவர் அழகியல் தேர்வா (aesthetic choice) என்று அறியக்கூடவில்லை.

நாகஸ்வரத்துக்கும் வீணைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு கமகங்களைக் கையாளும் போது தெரிய வரும். குறிப்பாக ஒரு ஸ்வரத்திலிருந்து தள்ளி இருக்கும் மற்றொரு ஸ்வரத்திற்கு வழுக்கிச் செல்லும் ஜாரு பிரயோகங்களை வீணையில் வெளிப்படுத்தும் வகையில் முழுமையாக நாகஸ்வரத்தில் வெளிப்படுத்துவது கடினம். தந்திக் கருவியில் ஒரு ஸ்வரத்திலிருந்து இன்னொரு ஸ்வரத்துக்கு வழுக்கிச் செல்வதைப் போன்ற லாகவத்தை காற்றுக் கருவியில் கொணர்வது கடினம். வேதமூர்த்தி வாசிப்பில் பிரபலமான சஹானா ராக ஆலாபனையில் பஞ்சமத்திலிருந்து வழுக்கி ரிஷபத்தைத் தொடும் ஜாருப் பிரயோகங்கள் வீணைக்கே உரியவை. ராகம் வாசிக்கும் போது ஒரு பிரயோகத்துக்கும் அடுத்தற்கும் இடையில் இடம்பெரும் நெடிய இடைவெளிகள் (pauses) விஸ்தாரத்தை மேலும் அர்த்தபுஷ்டியாக்குகின்றன.

எதை வாசித்தாலும் அதை அதன் முழுவீச்சில் வெளிக்காட்டும் மெனெக்கெடலும் அதே சமயத்தில் எதுவுமே அதிகமாகிவிடக் கூடாதென்பதில் கவனமும் அவர் வாசிப்பில் தெரிகின்றன. இவர் வாசிக்க வந்த போது உச்சியில் இருந்த திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, அவர் பாணியைத் தொடர்ந்த காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் போன்றோரின் கச்சேரிப் பங்கீட்டைப் பரிசீலிக்கும் போது அவர்களுக்கு ராக விஸ்தாரமே பிரதானம் என்று தெரிய வருகிறது. விஸ்தரிக்கப்படும் ராகத்தில் ஒரு கீர்த்தனை என்கிற வகையிலேயே கீர்த்தனைகள் இடம்பெருகின்றன. இதனால் இவர்கள் கச்சேரிகளில் சில சமயங்களில் கச்சேரியின் 30 நிமிட ராக ஆலாபனைக்குப் பின் 3 நிமிட துரித கீர்த்தனைகள் இடம்பெறுவதையும் பார்க்க முடிகிறது. வேதாரண்யம் வேதமூர்த்தியின் பதிவுகளில் கீர்த்தனைகளுக்கு பிரதான இடமளிக்கப்பட்டு வாசிக்கப்படும் கீர்த்தனைக்குப் பங்கீடாய் ராக ஆலாபனை – அளவிலும், பிரயோகங்களிலும் இடம்பெருகின்றன. உதாரணமாக பைரவி ராகத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பதிவுகள் நமக்குக் கேட்கக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று கீர்த்தனைக்கு வாசித்தது. மற்றொன்று ராகம் தானம் பல்லவிக்கு வாசித்தது. கீர்த்தனைக்கு வாசித்த பைரவி சுருக்கமாகவும், பெரும்பாலும் பாடலில் இடம் பெறும் பிரயோகங்களை விஸ்தரிக்கும் விதமாகவுமே அமைந்துள்ளது. பல்லவிக்கு உரிய ராகம் விஸ்தாரமாகவும் பல அரிய பிரயோகங்களொடும், சில தேசீய (folkish) பிரயோகங்களை அடக்கியும் இடம்பெற்றுள்ளது. முதல் ஆலாபனை கட்டுக்கோப்புடனும் இரண்டாவது ஆலாபனையில் சற்று நெகிழ்த்தன்மையுடன் இடம்பெற்றிருப்பதைக் கேட்பவர்கள் உணரலாம். கீர்த்தனைகள் வாசிக்கும் போது அவர் தேர்ந்தெடுக்கும் காலப்ரமாணமும் வழக்கமான நாகஸ்வர காலப்ரமாணத்தைவிட குறைந்த ஒன்றில் அமைந்திருப்பதை பல பாடல்களில் காணமுடிகிறது (உதாரணமாய் தோடியில் கமலாம்பா நவாவரண கீர்த்தனை). அவரைப் பற்றி வெளியாகியுள்ள கட்டுரைகள் அவர் ஆரம்ப காலத்தில் லய பிரதானமாய் வாசித்த பல்லவி வித்வானாக விளங்கினார் என்று பதிவிட்டாலும், கிடைக்கக் கூடிய பதிவுகள் அனைத்திலும் ராக பாவத்தை பிரதானமாக்கி வெளிப்படுத்து ஸர்வலகு முறையே பதிவாகியுள்ளது.

பொதுவாக நாகஸ்வர வித்வான்கள் பல்லவிகள் வாசிக்கும் போது ராக ஆலாபனைக்குப் பின் தானம் வாசிப்பதில்லை. நமக்கு வேதமூர்த்தி வாசித்து ஒரேயொரு பல்லவி பதிவு கிடைத்துள்ளது. அகில இந்திய வானொலி கச்சேரிதான் என்றாலும் அந்தக் குறைந்த நேரத்தில் கூட ராக ஆலபனையைத் தொடர்ந்து கணிசமான நேரத்தை தானத்துக்கும் அவர் ஒதுக்கியுள்ளார். இதுவும் கூட அவர் வாசிப்பை வீணை வழியில் வகைப்படுத்துவதற்கான முக்கிய காரணமாகலாம்.

இந்த அலசலுக்குப் பின், முதலில் கேட்ட கேள்வியை இன்னொருமுறை கேட்டுப் பார்க்கிறேன்.

தலைமுறைகள் பல தாண்டியும் வித்வான் வேதமூர்த்தியின் பெயர் நிலைத்து நிற்பதற்கான காரணம் என்ன?

ஆர்பாட்டமில்லாத தனித்துவ அழகு.

மேலும்:


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.