மயக்கமும் பித்தமும் கொண்டார்

தொகுப்பு நூல்களின் கட்டுப்பாடான அமைப்பை மீறிச் சில படைப்புகள் அவற்றில் இடம் பெற்று விடுவது என்பது தற்செயலான நிகழ்வாக இருக்கலாம். அல்லது தொகுப்பாளரின் தாராளத்துவத்தை உணர்த்துவதாகவும் இருக்கலாம். வீரயுகப் பாடங்களின் தொகுதியான புறநானூற்றில், அதன் அடிப்படை தொனியை மீறிய சில கவிதைகள் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. மாற்பித்தி என்ற பெண் கவிஞர் பாடியதாகப் புறநானூற்றில் அடுத்தடுத்து வைக்கப் பட்டிருக்கும் இரண்டு கவிதைகளும் (251,252) வழக்கமான புறப்பாடல்களிலிருந்து தொனியால் வேறுபடுபவை. வாகைத் திணையில் தாபத வாகைத் துறையில் அடக்கப்பட்டுள்ளவை. (திணை, துறைப் பகுப்பு என்பன பிற்காலத்தவை.) தாபத நிலை, தாபத வாகை என்ற இருவகைத் துறைப் பாடல்களில், தாபத நிலை என்பது கணவன் இறந்து போக, இருந்து வருந்தும் மனைவியின் கைம்மை நிலை குறித்துப் பாடுவது, தாபத வாகையாவது தாபத்தை வென்ற துறவுநிலையைச் சிறப்பித்துப் பாடுவது. இது வீரயுகக் கவிதைப் போக்கிற்கு மாறானது. ஆனால் யோசிக்கும் போது போர், மரணம் – என்பதைத் தொடர்ந்து கையறு நிலையும், நிலையாமை பற்றிய சிந்தனையும், துறவும் இயல்பான நீட்சிகளே என்று தோன்றுகிறது .

இனி மாற்பித்தியின் சித்திரம் போன்ற கவிதைகள் :

ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில்,
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழை நிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும்,
கழைக் கண் நெடுவரை அருவியாடிக்
கான யானை தந்த விறகின்,
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
புறம் தாழ் புரிசடை புலர்த்துவோனே.
(புறநானூறு 251)

கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள் இலைத் தாளி கொய்யுமோனே,
இல் வழங்கு மட மயில் பிணிக்கும்
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே.
(புறநானூறு 252)

மயிலை வலை கொண்டு மடக்கும் வேட்டுவன் போல, சொற்களைக் கொண்டு பெண்களை வேட்டையாடுபவனாக அறியப்பட்ட ஆணழகன், இன்று துறவியாக உருமாற்றம் அடைந்திருப்பதைப் பெண்ணின் பார்வையில் சித்திரிக்கும் பன்னிரண்டு வரிகள்.

‘பெண்கள் கண்களால் பருரும் மதுவைப் போன்றிருந்தது, ரகுவம்ச அரசன் சுதர்சனின் யௌவனம்’ என்ற காளிதாசரின் வரியை நினைவு படுத்தும் இளமையெழில் பொருந்தியவன் அந்த இளைஞன், வசீகரமான தோற்றத்தாலும், சொற்களாலும் பெண்களைக் கவர்ந்தவன். அவன் இன்று ஒரு துறவியாகப் புற உலகிலிருத்து விலகி இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறான். தனியனாக மலையருவியில் நீராடி, காட்டு யானை சுமந்து வந்த விறகில் தீ வளர்த்து முதுகில் புரளும் செஞ்சடையை உலர்த்திக் கொள்பவனாகவும், தாளி இலையைக் கொய்து பக்குவம் செய்து உண்பவனாகவும் காட்சி தருகிறான்.

‘தமிழ்த் தாபதன்’ என்று அவ்வை துரைசாமிப் பிள்ளை அவர்களால் அழைக்கப்படும் இந்த இளைஞனின் உருமாற்றம், அருகருகே வைக்கப்படும் இரு காட்சிகளால் உணர்த்தப் படுகிறது. (பாரி மகளிரின் பறம்பு மலை குறித்த கையறுநிலைக் கவிதையில் போல.) உருமாற்றத்தின் காரணம் வைக்கப்படாததாலேயே கவிதையில் தொனி கூடுகிறது. கவிஞரின் தன்வயப்படாத பார்வையும் கவிதையை சாத்தியமாக்கியிருக்கிறது. அதே சமயம் அவரது பெயரை மாற்பித்தி (மயக்கமும் பித்தமும் கொண்டார் ) என்று எடுத்துக் கொண்டு அந்த இளைஞனை நினைவால் தொடர்ந்தவர் என்று சொல்பவர்களும் உண்டு. பிறர்கண் தோன்றிய அசைவு பற்றிய அவலச் சுவைக்கு எடுத்துக் காட்டாக இந்தக் கவிதையை உரையாசிரியர் பேராசிரியர் அடையாளம் காண்கிறார், அந்த அவலத்தை அடக்கமாகக் கவிதையில் ஒலிக்கச் செய்த மாற்பித்தி, ஒரு நவீன கவிஞராகவே தோற்றம் கொள்கிறார்.

தமிழ்க் கவிதை சில குறிப்புகள் - ந.ஜயபாஸ்கரன்

பழையவரால் என்ன பயன்? காலைப் பூசல்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.