கோடை வானம் போல இளநீலச் சட்டை, கவனமாக பிளாஸ்டிக் ஹேங்கரில் தொங்கியது. விஜயனின் களைப்புற்ற விரல்கள் கீச்சென சிட்டுக்குருவி போலக் கத்தித் திறந்த லாக்கர் கதவின் சிறிய பூட்டுடன் தடுமாறின. ஆனால் நல்ல பருத்தி துணியில் பார்த்துப் பார்த்து வாங்கிய சட்டையைக் கண்டவுடன் முகம் மலர்ந்தது. அதன் மென்மையான பருத்தித் துணியில் தன் விரல்நுனிகளை நழுவவிட்டான், சிறு தூசு கூடப் படாத இளநீலம் எல்லாருக்கும் பிடிக்கும் என நினைத்துக் கொண்டான். விலைச்சீட்டு நீண்ட நாட்களுக்கு முன்பே நீக்கப்பட்டிருந்தாலும், அந்த எண்கள் 70 பவுண்டுகள். அவன் மனதில் மின்னி, நெஞ்சில் ஒரு துடிப்பை உண்டாக்கின. 20 வயதில் வேலைக்கு வந்தான். இப்பொழுது 22 வயது. சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் அவன் ஒருபோதும் ஒரு சட்டைக்கு இவ்வளவு பெரும் தொகையைச் செலவழித்ததில்லை.
லாக்கரின் உள்ளே இருந்த சிறிய அலமாரியில் வைக்கப்பட்டிருந்த கைக்கடிகாரத்தை நோக்கினான். இரவு 10:28 மணி. ஊழியர் வெளியேறும் வாசலை நோக்கித் திரும்பியவன், தன் சட்டை எப்படி ரயிலில் அவள் கண்களைக் கவரும் என்று கற்பனை செய்துகொண்டான். இன்றிரவு, அவளிடம் பேசியே தீருவது என உறுதி கொண்டான். லாக்கரின் உள்ளே இருந்த பையை முதுகில் மாட்டிக் கொண்டான். கைக்கடிகாரத்தினைக் கட்டிக் கொண்டான். “பெல்லா நபோலி” உணவகத்தின் சமையலறை,அதன் இத்தாலியப் பெயருக்கும் தைவான் நாட்டவரான உரிமையாளர் சார்லஸ் யேங் இடையே எந்தத் தொடர்பும் இல்லாதிருந்தும் கடை அடைப்பு நேரத்தின் அமைதியான சூழலில் தன்னை ஆழ்த்திக்கொண்டிருந்தது. கடைசி வாடிக்கையாளர்கள் அரை மணிக்கு முன்னரே விடைபெற்றுச் சென்றிருந்தனர், பெரும்பாலான பணியாளர்களும் தத்தம் வேலைகளை முடித்திருந்தனர். பெரிய பாத்திரம் கழுவும் இயந்திரங்களிலிருந்து எழும் நீராவி கிட்டத்தட்ட ஓய்ந்திருந்தது, மேலும் சமையலறையில் காற்றை உறிஞ்சி வெளியேற்றும் விசிறிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. கடந்த எட்டு நாழிகைகளாகக் காற்றில் கலந்திருந்த பூண்டும், பேசிலும் , தக்காளிச் சாறும், மீனும், வாத்தும் மெல்லிய நறுமணங்களாக எஞ்சியிருந்தன. சமையலறையின் சுவர்களுக்கு அப்பால், குயின்ன்ஸ் பொலிவார்டின் வீதி ஒலிகள் இன்னும் உள்ளே வடிகட்டப்பட்டு வந்துக் கொண்டிருந்தன. வாகன எக்காளங்கள், அவ்வப்போது கேட்கும் ஊர்திகளின் சைரன் ஒலிகள், மேலே உயர்ந்து ஓடும் 7ஆம் ரயிலின் தொடர்ச்சியான இரைச்சல். ஏப்ரல் மாதங்களில் லண்டன் தனது வேலையில் சுறுசுறுப்பாக இருந்தது, இரவு வந்தாலும் ஓய்வின்றி இருந்தது.

இரவுணவு நேரப் பரபரப்பு குறிப்பாகக் கடுமையாக இருந்தது. பணி வரிசையில் விஜயனின் நிலையம் ஒன்றன்பின் ஒன்றாக உணவாணைகளால் திணறியது, அவன் பல்வேறு பாஸ்தா உணவுகளை வதக்கி, தட்டில் அடுக்கி, அழகு செய்யும் போது அவன் கைகள் அவன் புத்தியிலிருந்து தனித்தியங்குவது போலச் செயல்பட்டன. நீண்ட நேரம் நின்றிருந்ததால் அவன் முதுகு வலித்தது, சிறிய எண்ணெய்த் தீக்காயங்கள் விண்மீன் குழுக்களைப் போல அவன் முன்கைகளில் புள்ளிகளாகப் படிந்திருந்தன. சமையல் பணியாளனின் தனித்துவமான அடையாளங்கள் அவை. இப்போது, தனது பணியிடம் சுத்தம் செய்யப்பட்டு, கருவிகள் யாவும் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அவன் வெளியேறத் தயாராக இருந்தான், ஏற்கனவே எந்த வெளியேற்றப் பாதை அவனை ரயில் நிலையத்திற்கு விரைவாகக் கொண்டு சேர்க்கும் என்று மனதில் கணக்கிட்டுக் கொண்டிருந்தான். அவளிடம் பேச வேண்டும் எனத் தனக்குத்தானே கட்டளையிட்டுக் கொண்டான்.
“விஜய், நீ போகும் முன்பு..” யேங் தனது அலுவலகத்திலிருந்து காய்கறி வாங்கும் மஞ்சள் பையில் நீட்டியுள்ள புடலங்காய் போலத் தன் ஒல்லியான உடலை நீட்டிப் பேசினார். அவரது கையில் சாவிகள் சலசலத்தன. “ இந்த கடைசி மரினாரா பாட்டில்களை உள்ளே வைத்துவிடு. நம் செப் மார்செல் சொல்ல மறந்து விட்டார்.”
குளிர் பெட்டியிலிருந்து எடுத்த முழுக் கோழி போல விஜயனின் உடல் விறைத்தது. தப்பியோடி மேகங்களில் மிதக்கும் மனநிலையில் இருந்தான். இந்த வேலை அதை குலைத்தது
“எனக்கு லேட்டாச்சு…” என்று அவன் பல்லைக் கடித்துக் கொண்டு வார்த்தைகளை உதிர்த்தான்.
“எடுத்து வச்சுட்டு போ… சொன்ன வேலையைச் செய்.” யேங்கின் குரல் இறுகியது, குரல் தாழ்ந்தது. விஜயனுக்கு அவரது கட்டளை தொனி புரியும்.
“சரி” தலையைக் குனிந்து முணுமுணுத்தான்.. யேங் விரலை பாட்டில்களை நோக்கிச் சுட்டிக் காட்டினார்.
இரவு 10:30 மணி. அவன் மூன்று மரினாராக்களை உள்ளே வைத்து மூடும் பணிகளை விரைவாக முடித்தால், வழக்கமான 11:15 ரயிலைப் பிடிக்க இன்னும் நிறைய நேரம் இருக்கும் மூன்று மாதங்களாக அவன் பயணித்த அதே ரயில். அவள் இருக்கும் ரயில். மரூன் நிற பொட்டும், கயல் போன்ற கண்களும் கொண்ட இந்தியப் பெண். அவள் அப்பா அவளுக்கு கயல்விழி எனப் பெயர் வைத்திருப்பாரோ… ஒவ்வொரு பாட்டில்களாக எடுத்துச் செல்லலாமா என யோசித்தான். மூன்று பாட்டில்களை ஒரே நேரத்தில் தூக்கினால் சீக்கிரம் வேலை முடிந்து விடும் எனப் புத்தி சொன்னது.
அவன் மூன்று பெரிய மரினாரா சாஸ் பாட்டில்களை எடுத்து, மார்போடு இரு கைகளும் அனைத்துக் கொண்டு அலமாரியினை நோக்கி நடந்தான். நடந்த பொழுது அவற்றைச் சமநிலையின்றி ஆடச் சமாளித்தான். அவன் மனம் அந்த பாட்டில்களைப் போலவே அலைபாய்ந்தது, கைவசமுள்ள பணியின் மீதல்ல, மாறாக ரயிலில் உள்ள அந்தப் பெண்ணின் மீதே கவனம் சென்றது. அவளது சீருடை அவள் மேரியாட்டில் பணிபுரிவதாக அவள் சீருடை ஒருநாள் குறிப்பிட்டது. அவளது பெயர் என்ன? அவன் மனதில் பல சிந்தனைகள்.
காலில் ஏதோ தடுக்கியது, உடலை நிலைப் படுத்திக் கொண்டு நிமிர்ந்தான். பாட்டில்கள் தரையில் இருந்தன. இரண்டு பாட்டில்கள் நொறுங்கியிருந்தது. தக்காளி கூழ் சிதறி இருந்தது. ஒரு பாட்டில் விழுந்தும் தப்பித்து இருந்தது. அவன் தரையைக் துடைத்து விட்டுக் துடைக்கும் குச்சியைத் தரையில் போட்டிருந்தான். அதில்தான் தடுக்கியிருந்தான். பல்லைக் கடித்து காற்றை உள்ளிழுக்கும் சப்தம் உதடுகளில் வரக் கண்ணை மூடி கழுத்தைத் திருப்பினான். பின்னால் அவனை ஏன் இப்படிச் செய்கின்றாய் , பொறுப்பில்லாதவனே எனக் கேட்கும் பாவனையில் யேங் நின்றிருந்தார். அவர் கதவைத் திறந்து அவ்வளவு விரைவில் வெளியே வந்து தன் அருகில் நிற்பார் என அவன் கற்பனை செய்யவே முடியவில்லை.
கீழே கிடந்த தரையைக் கூட்டும் குச்சியை எடுத்து அவன் கையில் கொடுத்தார்.
“பாட்டில்களைச் சுட்டிக் காட்டி இது உன் சம்பளத்திலிருந்து வருகின்றது” எனச் சொன்னார். அதே இறுக்கமான அமைதியான குரல். அவருடைய கட்டளைகள் பிறப்பிக்கும் தொனி.
சட்டையைக் கழட்டி கொஞ்சம் தள்ளி வைத்தான். அவர் கண்களைப் பார்க்காமல் குச்சியை வாங்கி மளமளவென விஜயன் துடைக்க ஆரம்பித்தான். அடுத்த 15 நிமிடங்களில் முடிந்தது, 15 நிமிடங்களில் யேங்கை 15000 முறை நரகத்துக்கு இட்டுச் சென்று நரக தண்டனைகள் அத்தனையையும் வாங்கிக் கொடுத்து விட்டான். ஆனாலும் அவர் இன்னொரு துடைக்கும் குச்சியை எடுத்து தரையைத் துடைத்துக் கொண்டு இருப்பதை அவனால் தடுக்க முடியவில்லை.
“நீ கிளம்பு, நான் பார்த்துக்கறேன்” என யேங் குரல் சற்று உரத்து ஒலித்தது.
துடைக்கும் குச்சியைத் தூக்கி வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டு, ஓட்டமும் நடையுமாகக் கடை கதவைத் திறந்து வெளியே வந்தான். யேங் ஒரு காலத்தில் இவர்களுடன் அமெரிக்காவில் வெர்ஜீனியா மாநிலத்தில் ஆர்லிங்டன் என்னும் ஊரில் உள்ள கடையில் வேலை பார்த்தவர். இன்றைக்குச் சொந்தமாகக் கடை வைத்துள்ளார்.
வெளியே அடித்த ஏப்ரலின் மழைச்சுவை கொண்ட காற்று விஜயனை குளிர்விக்க முயன்றது. அவளைக் காண வேண்டும் என்பது அடுப்பின் சூடாக அவனை இதப்படுத்தியது. இரவின் பிற்பகுதியாக இருந்தாலும், குயின்ஸ் பொலிவார்டின் குறுகலான சாலைகள் இன்னும் கொஞ்சம் உயிரோட்டத்துடன் இருந்தன. ஓரிரண்டு கடைகள் இன்னும் விளக்குகளை எரியவிட்டிருந்தன. அவன் கண்கள் ரயில் நிலையத்தை நோக்கி ஓடின. கயல்விழிப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவனைத் துரத்தியது…
அவன் தன் சட்டையைத் தற்செயலாகப் பார்த்த போது, அதில் பட்டிருந்த சிவப்புக் கறை அவன் கண்களில் பட்டது. அமெரிக்க 25 காசு அளவுக்கு அதன் அளவு இருந்தது. வெளிர் நீலத்தில் மரினாரா சாஸின் சிவப்பும் நிறம் பளீரென தெரிந்தது.
“அய்யோடா…” என்று வாய்க்குள் முனகினான். “இது உன் சம்பளத்திலிருந்து வருகின்றது” என்ற யேங்கின் குரல் இன்னும் அவன் காதுகளில் எதிரொலித்தது. மனதுக்குள் கசப்பாக சிரித்துக்கொண்டான். என் சம்பளத்திலிருந்து காசைப் பிடித்து, அதற்கு மேலாக என் சட்டையில் கறையையும் பரிசாகக் கொடுத்துவிட்டார். அவள் பார்த்தால் என்ன நினைப்பாள்? முதன்முறையாகப் பேச முயலும் போது, இந்தக் கறை அல்லவா அவள் கண்களில் முதலில் பதியும்? என்னை என்னவென நினைத்துக்கொள்வாளோ? விஜயன் சொற்களற்ற கோபத்துடன் பெருமூச்சு விட்டான். முட்டாள் யேங்! எல்லா வேலையையும் என் தலையில் சுமத்தி, ஓய்வே இல்லாமல் ஆக்கிவிட்டார்.
ரயில் நிலையத்தை நோக்கி நடக்கும்போது, விஜயனின் நெஞ்சில் அடுப்பில் வைத்த பால் போல கோபம் கொதித்தது. யேங் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார்? ஐந்து வயது குழந்தையிடம் பேசுவது போல, “சொன்ன வேலையைச் செய்” என்று எப்போதும் உத்தரவிடுகிறார். “பொறுப்பற்றவன்” என்ற வார்த்தை அவர் வாயிலிருந்து எளிதாக வருகிறது. ஆனால் இந்த இரண்டு வருடங்களில் யேங் அவனுக்காக என்ன பெரிதாக செய்துவிட்டார்? அவனது சிதைந்த எதிர்காலத்தைக் காப்பாற்றிய நாயகன் என்று தன்னைத்தானே கருதிக்கொள்கிறாரா? கான்குனில் நடந்த அந்த துயர சம்பவத்துக்கு உண்மையில் தான்தான் காரணமா? இந்தக் கேள்வி அவனை ஒரு நிழல் போல் எப்போதும் தொடர்ந்து கொண்டிருந்தது.
“கான்குனில் அந்த நாட்கள்…” என்று விஜயன் தனக்குள்ளே முணுமுணுத்தான். கண்களை இறுக மூடினாலும், அந்தக் கடற்கரை இரவின் நினைவுகள் கடல் அலைகள் போல அவன் மனதில் மோதிக்கொண்டிருந்தன. நண்பர்கள் அனைவரும் கூட்டமாக இரவில் கடற்கரைக்குச் சென்றது, கடலின் இருள் சூழ்ந்த அமைதி, நட்சத்திரங்கள் மின்னும் வானம். எல்லாம் உடைந்த மரினாரா டப்பாவின் கண்ணாடித் துண்டுகள் போல் சிதறிய நினைவுகளாக வந்தன. அன்று முதல் முறையாக அவன் ஏதோவொன்றைப் புகைத்தான். என்ன புகைத்தான் என்றே அவனுக்கு இன்னும் தெரியவில்லை.
காலை வந்தபோது, கூட வந்த நண்பர்கள் யாரும் கடற்கரையில் இல்லை. எல்லோரும் தங்கள் அறைகளுக்குத் திரும்பியிருந்தனர். எல்லோரும் சேர்ந்துதான் புகைத்தார்கள் என்பது மட்டும் நினைவில் இருந்தது, ஆனால் இவன் மட்டும் மணலில் தனியாகக் கிடந்தான். கூட வந்திருந்த ஒருவன் மட்டும் காணவில்லை. அந்த மாயமான நண்பனைப் பற்றி யாரிடம் விசாரித்தாலும், அனைவரும் விஜயனையே சந்தேகக் கண்களால் பார்த்து, குற்றவாளியைப் போல் கைகாட்டினார்கள். எத்தனை கேள்விகள்… எத்தனை குற்றச்சாட்டுகள்… அந்த ஒரே இரவு அவன் வாழ்க்கையையே மாற்றிவிட்டது
“உன் நண்பன் எங்கே?” என்ற முதல் கேள்வி, “நீங்கள் என்ன புகைத்தீர்கள்?” என்ற அடுத்த கேள்வி, பின் “உனது நண்பன் உயிருடன் இருக்கிறானா?” என்ற மூன்றாவது கேள்வி. அவன் சொன்ன எதையும் யாரும் நம்பவில்லை. அந்த ஓராண்டு சிறை வாசம்… வேஷம் போட்ட விசாரணைகள்… தகுந்த மொழிபெயர்ப்பாளர் இல்லாத விசாரணை அறைகள்… அப்பாவின் வேண்டுகோள்கள்… எத்தனை தூதரக அதிகாரிகள்… எத்தனை வழக்கறிஞர்கள்… அதில் ஒருவர் கூட தன்னை அப்பாவி என்று நம்பவில்லை. இறுதியில் சான்றுகள் இல்லாததால் வெளியே வந்தான். அப்போது அப்பாவின் முகத்தில் இருந்த கோபமா, ஏமாற்றமா, அல்லது இன்னும் மோசமான ஏதோ உணர்வா?
“இத்தனை காலம் உனக்காகப் போராடிப் போராடி என் முதுகெல்லாம் வளைஞ்சிடுச்சு,” என்று அப்பா சொன்னபோது, அவர் குரலில் இருந்த வேதனை விஜயனின் நெஞ்சை அழுத்தியது. அவனால் அழுகையை அடக்க முடியவில்லை. கண்ணீர் வழிந்தோடியது.
“நம்ம குடும்பத்துக்கே கறை விழுந்திடுச்சு,” அப்பாவின் குரல் உடைந்தது. “ஊரே தூற்றுது. லோக்கல் நியுஸ் சானல்ல பார்த்தால், நம்ம நியுஸ்தான். எங்கே போனாலும் மக்கள் முணுமுணுக்கிறாங்க.” அப்பா கைகளைத் தலையில் வைத்து இறுக பிடித்தார். “உன்னை நம்பி என்னால எப்படிடா இனி வாழ முடியும்?”
அவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அம்மா, அப்பாவுடன் படிப்பு, விளையாட்டு எல்லாமே அவர்கள் உணவகத்தில்தான் கழிந்தது. திங்கள் மட்டுமே விடுமுறை. ஐந்து வயதாகையில் விஜயன், அவன் அப்பாவுக்கு உதவியாகச் சமையலறைக்குச் சென்றான். காய் வெட்டுவான். பத்து வயதில் நன்றாகத் தோசை சுடுவான், இட்லி விடுவான்.
அப்பாவுக்கும், அம்மாவுக்கும், அவனுக்கும் உணவகமே உலகம். அவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் அவர்களிடம் மூன்று உணவகங்கள் இருந்தன. அவன் அப்பா அப்பொழுதும் உணவகத்தின் சமையல் அறைக்குச் செல்வதை நிறுத்த மாட்டார். தொழில் அங்கே உள்ளது என்பார். கல்லாப்பெட்டியில் அம்மா இருப்பார், நிறைய நாள் முன்பு யேங் கல்லாவில் இருந்தார். அப்பாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அவரும் அவ்வப்பொழுது உணவகச் சமையலறையில் உதவியாக இருப்பார்.
கான்குனில் இருந்து விஜயனைக் மீட்டுக் கொண்டு வந்த பின்னும், அவன் பெற்றோர் தொடர் அவமானத்தில் வாழ்க்கை நொறுங்கிப்போய், அடுத்து என்ன செய்வதென்று திசைகாணாமல் தவித்தனர். அப்பா பல முயற்சிகள் செய்தார். அதில் ஒரு பகுதியாக மேரிலாந்தின் பெத்திஸ்டாவில் வசித்து வந்த சுவாமிஜி.
இந்த சுவாமிஜி அவர்கள் குடும்பத்தில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருந்தார். விஜயன் ப்ரீகேஜி படிக்கத் தொடங்கிய நாள் முதலே, வியாழக்கிழமை மாலைகளில் நடத்திய பஜனை வகுப்புகளும், ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் நடத்திய ராமாயண, மகாபாரத, கீதை விளக்க வகுப்புகளும் விஜயனின் வாழ்க்கையின் அங்கமாக இருந்தன.சுவாமிஜிக்கும் விஜயனுக்கும் இடையே ஒரு தனிப்பட்ட பிணைப்பும் இருந்தது. குறிப்பாக விஜயனின் கைவண்ணத்தில் உருவான முறுமுறுப்பான தோசைகளையும், மணம் வீசும் சாம்பாரையும் சுவாமிஜி மிகவும் ரசித்துச் சாப்பிடுவார்.
அப்பா விஜயனை சுவாமிஜியிடம் அழைத்துச் சென்ற அன்று, சுவாமிஜி விஜயனின் அப்பாவிடமும்,அம்மாவிடமும் தனியே கூப்பிட்டு பேசினார். பின்னர் விஜயனையும் அழைத்துப் பேசினார். விஜயனின் கண்களில் இருந்த குழப்பத்தையும் உணர்ந்தவராய், ஒரு பெருமூச்சுடன், “இவன் இப்போது ஆர்லிங்டனில் இருக்கக் கூடாது,” என்றார். “இங்கே இருந்தால் பழைய நிழல்கள் அவனைத் துரத்தும். புதிய இடத்தில், நம்பகமான ஒருவரின் வழிகாட்டுதலில் இருக்கட்டும். படிப்பையும் இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைக்கலாம். அந்த இடைவெளி அவனுக்கு நல்லதாகவே அமையும்.”
“இவனைத் தனியே அழைத்து “வீட்டில் இருந்தால் அப்பாவுக்கும், உனக்கும் ஓயாத பிரச்சனை வரும், வெளியே இரு. இரண்டு வருடம் பல்லைக் கடித்துக் கொண்டு வெளியே இரு” என்றார்.
கான்குனில் பெற்ற ஒரு வருட அவமானம். ஒரு வருட நிச்சயமற்ற நிலை. ஒரு வருட இருள். பெரும் காயமாக இருந்தது. விஜயன் மனது அன்று சூடான எண்ணெய் சிந்தினால் வரும் வலியைப் போல் துடித்துக் கொண்டிருந்தது. அதனால் அன்று சுவாமி சொல்கையில் விஜயன் எதிர்த்துப் பேசவில்லை.
யேங் அப்பாவின் பழைய நண்பர், அமெரிக்காவில் அப்பாவின் உணவகத்தில் வேலை பார்த்து, இப்போது லண்டனில் சொந்த உணவகம் வைத்திருக்கின்றார். யேங்கிடம் அப்பா பேசினார்.அப்பா யேங்கிடம் கிட்டத்தட்ட அழுதே விட்டார். “நல்ல பையன் தான். ஆனால் கெட்ட நண்பர்கள், கெட்ட சூழ்நிலை. அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். உங்க பெயரை காப்பாற்றுவான்.” என்று அப்பா சொன்னார்.
“உன் மகனுக்கு சமையல் கலையில் திறமை இருக்கு. என் உணவகத்துக்கு ஆள் தேவை. இரண்டு வருஷம் லண்டனில் வேலை செய்தால் அவன் இந்த அனுபவத்தை மறப்பான், புதிய வாழ்க்கை தொடங்குவான், என் பொறுப்பில் விடுங்கள்,” என்று யேங் சொன்னார்.
யேங் அப்படி பொறுப்பாகவா இருக்கின்றார்? எந்நேரமும் கடுகடுவென இருக்கின்றார். அவர் அவனை அப்படி நடத்துவதே அநியாயம். ‘சொன்ன வேலையைச் செய்’ என்று சிறுபிள்ளை போல நடத்துகிறார். கொஞ்சம் மரியாதை இல்லையா? அவன் ஏதோ அடிமையா?
மாதம் 950 பவுண்டுகள் சம்பளம் கிடைக்கிறது. அதில் 550 பவுண்டுகள் அந்தக் குறுகலான அறை வாடகையாகச் செல்கிறது. அது யேங்கின் தங்கையின் வீடு, அதில்தான் ஓர் அறையில் தங்க வைத்துள்ளார். மீதிப் பணத்தில் 70 பவுண்டுகள் கொடுத்து வாங்கிய அந்த இளநீலச் சட்டை. இப்போது அதில் இந்த மரினாரா கறை.
ஒரு கணம் அப்பாவின் ஞாபகம் அவனைத் தாக்கியது. பத்து அரிசி மூட்டைகளை அவன் நெஞ்சில் தூக்கி வைத்தது போல விஜயனின் நெஞ்சைச் சுமையாக அழுத்தியது. தொலைப்பேசியில் கடைசியாகப் பேசிய சமயம், “தம்பி, யேங் இல்லேன்னா என்ன ஆகியிருப்போம்? ஒழுங்கா வேலை பாரு” என்று அப்பா சொன்னார். அப்பா இப்பொழுதெல்லாம் அழுவதில்லை, புலம்புவதில்லை என்பதைக் கவனித்தான். வழக்கமான அறிவுரைகள் தாண்டி எதுவும் சொல்வதில்லை.”அப்பா ஒரு பெஸிமிஸ்ட் ஆகிவிட்டார்,” என்று விஜயன் தனக்குள் முணுமுணுத்தான்.
விஜயன் ரயில் நிலையத்தை நெருங்க அவனுக்கு நன்றாகச் செய்யத் தெரிந்து இருந்த பார்மேசன் ரிசோட்டோவின் மென்மையும், அதன் மணமும், அதைச் செய்யத் தேவைப்படும் பொறுமையும் நினைவுக்கு வந்தன. அவனது வாழ்க்கையின் வெளிச்சம் மருன் பொட்டுள்ள கயல்விழியாளின் புன்னகையில் இருக்கிறது என்ற உணர்வு அவனை ஆட்கொண்டது. யேங்கை, அப்பாவை, அம்மாவைப் பற்றிய நினைவைக் கொஞ்சம் நினைவில் இருந்து உடைத்து வீசப்படும் முட்டை ஓடை போலத் தூரப் போட முயன்றான். அவன் கண்கள் சட்டையில் கறையைக் காண்கையில் எல்லாம் அவன் மனது அவன் தூக்கி வீசியதை எடுத்து வைத்து இதை கவனி என்றது.
குயின்ஸ் பொலிவார்டிலிருந்து விஜயன் வேகமாக நடந்து வந்தான். நார்தன் லைன் ரயில் நிலையம் நெருங்க, அவனது நடை வேகம் அதிகரித்தது. படிகளில் இறங்கி, சுரங்கப் பாதையின் வழியாக ஓடத் தொடங்கினான். நிலவறையில் பரவியிருந்த மங்கலான வெளிச்சம், சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரங்கள், ரயில் நிலையத்தின் பழைய கற்களில் படிந்திருந்த காலத்தின் கறைகள் எல்லாம் அவன் கண்களில் பட்டன.

ரயில் வரும் ஓசை கேட்டது. “வேகமாக!” என்று தனக்குள் முனகிக் கொண்டே அவன் இன்னும் வேகமாக ஓடினான். ரயில் நடைமேடையில் நுழைந்தது. கதவுகள் திறந்தன, மக்கள் இறங்கத் தொடங்கினர். அவன் நடைமேடையை நெருங்கியதும், “கதவுகள் மூடப்படுகின்றன” என்ற அறிவிப்பு கேட்டது. கடைசி நொடியில், ரயிலின் கதவுகள் மூட ஆரம்பித்த சமயத்தில், விஜயன் ஒரு பெரிய தாவு தாவி உள்ளே குதித்தான். கதவுகள் அவனது பின்னால் மூடிக் கொண்டன.
மூச்சு வாங்க, ரயிலின் கம்பியைப் பிடித்து சமநிலை கொள்ள முயன்றான். சில பயணிகள் அவனைப் பார்த்து புருவங்களை உயர்த்தினர். விஜயன் எல்லோரையும் பார்த்து சிறிதாகப் புன்னகைத்தான். அவன் சுற்றிலும் பார்த்தபோது, வழக்கம் போல ரயிலின் நெரிசல் குறைவாக இருந்தது. ஓர் இடம் கண்டு அங்கே நின்று கொண்டான்.
பெட்டியில் தன்னைச் சுற்றிலும் பார்வையை அலைய விட்டபோதுதான் விஜயன் அவளைக் கண்டான். இரவு ரயிலின் மங்கலான விளக்கொளியில், அவன் நின்ற இடத்திற்கு நேர் எதிரில், அலுவலகப் பணியிலிருந்து திரும்பும் பயணிகளுக்கிடையே ஜன்னலருகே அமர்ந்திருந்தாள் அந்தக் கயல்விழிப் பெண். வேலை முடிந்த களைப்பில் இருந்த பலரைப் போலல்லாமல், அவளது முகத்தில் ஒரு துடிப்பு இருந்தது. நாள் முழுவதும் வேலை செய்த சோர்வை மறைக்க முடியவில்லை என்றாலும், அவள் காதுகளில் சிறிய வெள்ளி நிற ஹெட்போன்கள் அவளை இந்த இரவுப் பயணத்தில் உற்சாகப்படுத்துவது தெரிந்தது.
ரயிலின் உள் விளக்குகளின் மஞ்சள் வெளிச்சத்தில் அவளின் அழகிய அம்சங்கள் அவன் கண்களுக்கு வெளிப்பட்டன. அவளது கண்கள், உண்மையான கயல் மீன் போல நீண்டு, விரிந்து, கருவிழிகளில் வெளிச்சத்தில் ஒளிர்ந்தன. வேலையின் களைப்பு அந்தக் கண்களில் சிறிதளவு படர்ந்திருந்தாலும், அதன் அழகை இழக்கவில்லை. அடர்த்தியான கருவிழிகளைச் சுற்றி வெண்மை மின்ன, நீண்ட கருமையான இமைகள் களைப்பின் கனத்தை சுமந்தபடி மெதுவாக அசைந்தன.
அவளது மூக்கு சிறியதாக, சீரான வடிவத்தில், நுனியில் சற்றே உயர்ந்திருந்தது. இதழ்கள் முழுமையாக, செம்பழுப்பு நிறத்தில், நாள் முழுவதும் அணிந்திருந்த லிப்ஸ்டிக் மங்கிப்போய் இயற்கையான நிறத்தில் காணப்பட்டன. அவ்வப்போது அவை சிறிதாகப் பிரிந்து ஒரு களைப்பான மூச்சை வெளியிட்டன.
அவளது கூந்தல் நாள் முழுவதும் அணிந்திருந்த ஹேர் பின்களிலிருந்து விடுபட்டு, கொஞ்சம் சிதறியிருந்தது. இதை அவள் அவ்வப்போது கையால் சரி செய்து கொண்டாள். நாள் முழுவதும் பணியிடத்தில் ஒழுங்காக அமைக்கப்பட்ட அந்தக் கூந்தல், இப்போது சற்றே கலைந்து, இயல்பான அழகுடன் தோள்களைத் தழுவி, இடையை நெருங்கியது.
மரூன் நிறப் பொட்டு இன்னும் அவள் நெற்றியில் பளிச்சிட்டது. அவள் அணிந்திருந்த வெள்ளை டீ-ஷர்ட் நாள் முழுவதும் அணிந்த பின்னும் சுத்தமாக இருந்தது, அதில் மென்மையான பூ வடிவங்கள் தெரிந்தன. நீல ஜீன்ஸ் அவள் நுண்ணிய இடையை அழுத்திக் காட்டியது. அவளது பக்கத்தில் ஒரு சிறிய தோல் பையை வைத்திருந்தாள்.
அவள் இருப்பதைக் கண்டு விஜயனின் இதயம் துடிக்கத் தொடங்கியது. என்ன செய்வதென்று குழப்பமாக இருந்தது. சட்டையின் மீது பட்டிருந்த மரினாரா கறையைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு சோர்வு எழுந்தது. “நான் இந்தக் கறையோடு அவளிடம் எப்படிப் பேசுவது?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். அவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள், பின் மீண்டும் தன் பாடலைக் கேட்கத் தொடங்கினாள்.
விஜயன் தன் சட்டையில் உள்ள கறையை விரல் நகங்களைக் கொண்டு சுரண்டி அகற்ற முடியுமா என முயற்சி செய்து கொண்டிருந்தான்.
“விஜய்” என யாரோ அழைக்கும் குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தான் சாரா கேம்பல் அமர்ந்திருந்தார்.இரண்டு வருடமாக அவனுடன் வரும் பயணி.
“இங்கே உட்கார்” என கைகாட்டினார். தூங்காமல் இருக்கும் நாட்களில் அவனுடன் ஏதாவது பேசிக் கொண்டு வருவார்.
“இன்றைக்கு எப்படிப் போனது? நல்ல டிப்ஸ் வந்ததா?” எனச் சிரித்தார்.
ஏன் எனக் கேள்வியோடு பார்த்தான்.
“புதுச் சட்டை” என ஆச்சரியத்தோடு கேட்டார்.
“இல்லை. சும்மாதான். சட்டை நன்றாக இருக்கின்றதா?” சிரித்தான்
“சட்டை என்ன ராஜகுமாரிக்கா…அது என்ன சட்டையில் கறை?” எனக் கேட்டுச் சிரித்தாள்
“சும்மா இருங்கள், யேங் செய்த கொடுமையில் சட்டை கறையாகி விட்டது.” விஜயனுக்கு சட்டையின் கறை குறித்த கவலையும், வெட்கமும் ஒருங்கே வந்தது.
“இது உன் சமையல் திறமையின் அடையாளம், வெறும் கறை அல்ல. இதுவும் ஒரு வகையில் உன் கலையின் வடிவமைப்புதான்,” கேம்பல் அந்தக் கறையைத் தன் விரலால் மெதுவாகத் தொட்டுப் பார்த்தார். “என் மகன் ஆட்டோ மெக்கானிக் வேலை பார்க்கிறான், அவனுக்கு கறையற்ற ஒரு நாள் கூட கிடையாது. அவன் அதை பெருமையாகவே நினைக்கிறான்.” சிரித்துக் கொண்டே தொடர்ந்தார், “சரி அது இருக்கட்டும். புதுச்சட்டை போட்டுக் கொண்டு என்னை இரவுணவுக்கோ, காபிக்கோ அழைக்கப் போகிறாயா? அப்படியெல்லாம் இல்லை என்றால், அந்தப் பெண்ணிடம் போய் பேசு… நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறது,” கேம்பல் கிண்டல் தொனியில் சொன்னார்.
“குழப்பமாக உள்ளது, நீங்க வேற எதையாவது கிண்டல் செய்யாதீர்கள். புதுச்சட்டை அவள் கண்ணுக்குத் தெரியுமா, கறை தெரியுமா..” கவலை தொனிக்கச் சொன்னான்.
உச் கொட்டினார். அவன் சொன்னதை நிராகரிப்பதைப் போலத் தலையாட்டினார். “கண்ணில் ரொமான்சுடன் வரும் விஜய்தான் தெரிவான், தைரியமாக போ”
“சட்டையில் கறையை வைத்துக் கொண்டு ரொமான்ஸுக்கு எங்கே போவது , எதையாவது சொல்லாதீர்கள்”
“நாளை என் மருத்துவமனைக்கு வா, டாக்டரிடம் சொல்லி உனக்குத் தைரியம் வர மருந்து தருகின்றேன்” எனச் சொல்லிச் சிரித்தார்.
“ஹா ஹா” எனப் போலியாகச் சிரித்தான்.“ஆமாம், நர்ஸுகளுக்கு எல்லா மருந்தும் தெரியும்.. வாயை மூடிக் கொண்டு அறிவுரை சொல்லாமல் இருக்க மருந்து உண்டா?”
தோள் குலுங்க கேம்பல் சிரித்தார். அவன் தலையில் தட்டினார்.
அப்போது ரயிலின் பொது அறிவிப்புக் கருவி ஒலித்தது. “நார்தர்ன் லைன் இன்று க்யூன்ஸ் பார்க் செல்லாது, ரயில் தடத்தில் சிக்கல்கள் உள்ளது. வருந்துகின்றோம். பயணிகள் கேம்டனில் இறங்கி ரயிலுக்கான மாற்றுப் போக்குவரத்து தடங்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்”
“ஓ ஓ” கேம்பல் சலித்துக் கொண்டார். “வர வர இந்தத் தொல்லை தாங்க முடியவில்லை”
“உங்களுக்கு என்ன தொல்லை, நீங்கள் கேம்டனில் இறங்கினால் உங்கள் மகன் ஷிப்ட் முடிந்து போகையில் கூட்டிப் போய் விடுவான்.. எனக்கு ஷட்டில் பிடிக்கனும்… இவளிடம் இன்றைக்குப் பேச முடியாதோ?”
ரயில் மெல்ல கேம்டனில் ஊர்ந்து நின்றது. பயணிகள் இறங்கி நடக்க ஆரம்பித்தனர்.
“உன் அப்பாவையும், யேங்கையும் பெஸிமிஸ்ட் என திட்டுவாய். இன்றைக்கு நீ பெஸிமிஸ்ட்” கேம்பல் மெல்ல எழுந்து நடந்தார். விஜயன் அவருடன் நடந்தான்.
“என்னுடன் வந்து என்ன செய்யப் போகின்றாய், அவள் பின்னே போ, வெம்ளி போவதற்குள் அவளுடன் பேசி விடு, ஓடு” விரட்டினார். “இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எல்லாவற்றுக்கும் கட்டளை கொடுக்க வேண்டியுள்ளது. அதுதான் இந்த தலைமுறை மீதுள்ள கறையும், குறையும்” சலித்தார்.
‘“நீங்கள், யேங் எல்லாம் வயதான கிழங்கள். உங்கள் பிரச்சனைகளே வேறு” என சொல்லி விட்ட அவசரமாகப் பையைப் பிரித்து ஒரு சிறிய ப்ளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் சாரா கேம்பல் கையில் திணித்தான். “யேங் எனக்கு பார்மேசன் ரிசோட்டோ ஸ்ரிம்ப் போட்டுச் செய்யச் சொல்லிக் கொடுத்தார் அல்லவா. அவருடைய சிறப்பு ரிசிப்பி. இன்று அவருக்கு தனியே சமைத்து எடுத்து வைக்கச் சொன்னார். உங்களுக்கும் கொஞ்சம் எடுத்து வைத்தேன். சாப்பிட்டு விட்டு எப்படி இருக்கின்றதென நாளை சொல்லுங்கள்…முன்னரே கொடுக்க மறந்து விட்டேன். உங்கள் அறிவுரைகள் சந்திர கிரகணம் போல என் நினைவை மறைத்து விட்டது. வயதானால் உள்ள பிரச்சனை”
“ஒரு கிழம் உனக்கு வேலை கொடுத்து, தங்க இடம் கொடுத்து, புது புது உணவைச் சமைக்கச் சொல்லிக் கொடுக்கின்றது, இன்னொரு கிழம் உனக்கு ரயில் சினேகமானாலும் நீ கொடுப்பதை எல்லாம் சாப்பிடுகின்றது. கிழங்கள் இல்லாவிட்டால் யாரிடம் கற்றுக் கொள்வாய் , யாரிடம் சாப்பிடக் கொடுப்பாய், இளம் பெண்ணிடம் பேசச் சொன்னால் குழம்பி விடுகின்றாய்…உன் வாழ்வில் கிழங்கள்தான் போல”.. கேம்பல் கிண்டலுடன் சொல்லி விட்டு விஜயன் கையில் திணித்த உணவு டப்பாவை தன் பையில் வைத்துக் கொண்டாள்.
“நன்றி விஜய். நாளை பார்க்கலாம். அவள் முன்னரே போய் விட்டாள்….சீக்கிரம் போ” என விரட்டினாள்
விஜயன் ஷட்டிலை பிடிக்க விரைந்தான்.விரைகையில் அவளைத் தேடினான், காணவில்லை. எப்படியும் அவளும் வெம்ளிக்குதான் வந்தாக வேண்டும். க்ரின் பார்க்தான் போகனும். இந்தக் கறை வந்த பின்னர் எதுவும் நினைத்தது போலச் செல்லவில்லை எனச் சொல்லிக் கொண்டான்.
பேருந்து கிளம்ப தயாராக நின்றது, ஏறி கால்களை எக்கி அங்கும், இங்கும் அவளைத் தேடினான். தூரத்தில் தெரிந்தாள், இவனைக் கண்டதும் மீண்டும் புன்னகைத்தாள்,கையசைத்தாள்,அவள் அருகில் உட்கார ஓர் இடம் இருந்தது. அதை நோக்கி கால் எடுத்து வைத்தான்.
“ஹேய் விஜய்.. என்ன அதிசயம்..” என்ற குரல் ஒலித்தது. தோளில் கைகள் விழுந்து அவன் நடப்பதைத் தடுத்தது.
அது ரித்தேஷ் சிங். விஜயனுடன் “பெல்லோ நேபாலி” உணவகத்தில் வேலை செய்தான். இப்பொழுது இல்லை.
“டே விடுடா.. நான் போகனும்” விஜயன் திமிறினான்.

“பஸ்தானே போகனும், நீ இங்க உட்காரு” ரித்தேஷ் இழுத்து அமர வைத்தான்.
“டேய் விடுடா ..” என விஜயன் சொல்லி முடிப்பதற்குள் அவள் பக்கத்தில் இன்னொரு பயணி வந்து அமர அந்த இடம் நிரம்பியது.
விஜயன் கசப்புடன் ரித்தேஷ் அருகில் அமர்ந்தான். கண்களை உருட்டி ரித்தேஷை கோபமாகப் பார்த்தான்.
“உயிரை எடுக்கவே நீ இருக்கடா”
“நான் என்ன செஞ்சேன். வாவ் புது சட்டை, சூப்பரா இருக்கே.. எதுவும் இண்டர்வ்யூ போனியா” ரித்தேஷ் புதிராகப் பார்த்துக் கேட்டான்.
“நைட் 11 மணிக்கு இண்டர்வ்யூ செய்யறாங்க…வா போகலாம்… குடிச்சிருக்கியா”
“லைட்டா… பப் போனோம், வசந்த கால கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்குதுல.. தயாரிப்பு…”
“ஏண்டா வேலைக்கு போகலியா…கிரிக்கெட் விளையாட போயிட்ட..”
“எந்தச் சமையல் வேலைக்குப் போனாலும் சமையல் செய்ய விடமாட்டங்கறாங்க. பாத்திரம் கழுவ விட்டறாங்க, எனக்கு பிடிக்கல” முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“உனக்குப் பாத்திரமும் கழுவ தெரியாதே” விஜயன் கிண்டலாகக் கேட்டான்.
“ஆமாம்டா, நீ, எங்கப்பா, அம்மா, அண்ணா, அக்கா, அத்தான் , யேங் எல்லாரும் இதையே சொல்லுங்க. ஒரு நாள் நான் இந்த லண்டன் புகழும் சமையல் கலைஞன் ஆகி நிற்பேன் பாரு” ரித்தேஷ் சவால் விட்டான்.
“சினிமா பார்த்துப் பார்த்து கெட்டு போயிட்டே… வாய்ப்பே இல்லை… நீ சோம்பேறிடா.. உனக்கு சமைக்க வராது..”
ரித்தேஷ் விஜயனின் தோளில் ஓங்கிக் குத்தினான். ரித்தேஷுக்கு கோபத்தில் முகம் சிவந்து போனது. குத்து வாங்கிய விஜயன் இவன் இப்படித்தான் மனநிலையில் பார்த்துக் கொண்டிருந்தான்.
ரித்தேஷ் ஐந்து நிமிடத்தில் திரும்ப வழக்கமான மனநிலைக்கு திரும்பி விட்டான். ரித்தேஷ் சிங்குக்கு நவரசத்தில் எந்த ரசம் வந்தாலும் அதிக பட்ச ஐந்து நிமிடமே, திரும்ப குழந்தை போல உலகை வேடிக்கை பார்க்கும் மனநிலைக்கு வந்து விடுவான்.
ரித்தேஷ் தன் செல்போனை எடுத்தான். “அப்பா மீண்டும் மெசேஜ் அனுப்பியிருக்கார்,” என்று பெருமூச்சு விட்டான். “இன்று மூன்றாவது முறை.”
“என்ன சொல்கிறார்?” விஜயன் கேட்டான்.
“அதே பழைய உபதேசம்தான். உன் அக்கா காலை உணவுக்கு முன்பே மூன்று அறுவை சிகிச்சைகள் செய்கிறாள், உன் அண்ணாவின் புற்றுநோய் ஆராய்ச்சி வெளியிடப்படுகிறது, ஆனால் நீ ஒன்னுமே செய்யறது இல்லை. என் கூட தாபாவுக்கு வா.. ப்ளா, ப்ளா, ப்ளா”
“உன் அப்பா உனக்காக எவ்வளவு செலவழித்திருப்பார்? அந்த உயர்தர சமையல் பள்ளிக்கு அனுப்பியதை மறந்திட்டியா?” விஜயன் கேட்டான்.
ரித்தேஷ் குறுக்கிட்டான், “அதை விடு. என் கூட வந்தா, நான் முதலீடு போடுவேன்.” அவன் முகத்தில் திடீரென ஆர்வம் தெரிந்தது. “நான் உணவு விற்கும் ட்ரக் வாங்க போறேன். நீ வேலைக்கு வரியா?”
“நான் எதுக்கு?”
ரித்தேஷ் விஜயனின் தோளைத் தட்டினான். “உனக்கு ஏற்கனவே நல்லா சமைக்கத் தெரியும். யேங் உனக்கு எல்லாம் கற்றுக்கொடுத்திருக்கிறார்.கடை திறப்பது, கடை அடைப்பது, சப்ளை வாங்குவது, கருவிகள் பழுது பார்ப்பது, கணக்கு பார்ப்பது… “
“உனக்கு எப்படித் தெரியும்?” விஜயன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
“நான் உன் கூடத்தானே வேலை பார்த்தேனே. எனக்கென்ன கண்ணில்லையா என்ன, நமக்கு ஒரு வாய்ப்பு. உணவு விற்கும் ட்ரக் முதலில், பிறகு உணவகம்…” அவன் கண்களில் கனவு தெரிந்தது.
விஜயன் ரித்தேஷின் கைப்பையைப் பார்த்தான். ஒரு புதிய கிரிக்கெட் மட்டை தெரிந்தது. “புதிய மட்டையா? எவ்வளவு விலை?”
“அம்மா வாங்கித் தந்தார்கள்.” ரித்தேஷ் சாதாரணமாகச் சொன்னான். “அம்மா கிட்ட புது கார் கேட்டேன், கார் இல்லைனு சொல்லிட்டாங்க, என்னை சமாதானம் செய்ய இதை வாங்கினாங்க. இந்த வாரம் நல்ல மேட்ச் இருக்கு, நீயும் வரணும். உங்கப்பா கிட்ட சொல்லி நீயும் ஒன்னு வாங்கு. உன்கிட்ட காசா இல்ல. உங்கப்பா மூனு உணவகம் வச்சிருக்காருல”
“ஆமாடா, எங்கப்பா காசும், என் காசும் ஒன்ன? நான் வாங்கினா என் காசிலதான் வாங்குவேன். இப்பத்தான் ஒரு சட்டை வாங்கினேன். அதுவே 70 பவுண்டு. உன் பேட் கிட்டத்தட்ட ஐநூறு டாலர் ஆகும், நான் அவ்வளவு காசுக்கு எங்க போவேன்.”
“ஓ மை காட், உங்க குடும்பமே ஒரு க்ரேசிடா…. சரி மேட்சுக்கு வா, நான் என் பேட் தரேன்”
“திங்கள்தானே? உன்கூட விளையாட வரும் வாரமெல்லாம் மறுநாள் செவ்வாய் காலை யேங் என்னை எப்படி எல்லாம் பார்ப்பார் தெரியுமா? உன் கூட கடைசியா மேட்சுக்கு வந்துட்டு, சினிமாவுக்கு போனப்ப எல்லாம் நான் தூங்கிக் கொண்டேதான் வேலை செய்தேன்.”
“அதனால்தான் என்னை வேலையிலிருந்து தூக்கிட்டாரு தெரியுமா?” ரித்தேஷ் கேட்டான், முகத்தில் கோபம் தெரிந்தது. “அந்தக் கிழத்துக்கு ஜாலியாக இருக்கவே தெரியாது. வேலை, வேலை என உயிரை எடுக்கும். நீ யேங்குக்கு அடிமைப்பட்டிருக்கிறாய்,” ரித்தேஷ் கண்களை உயர்த்தி பேருந்து கூரையைப் பார்த்துச் சொன்னான். “என் கூடவா… பார்ட்னர் ஆகலாம்.”
“உணவு விற்கும் ட்ரக்கெல்லாம் வாங்காதே, உனக்கு ஒரு வாரத்தில் போர் அடிச்சுடும், அப்புறம் என்ன செய்வ?” விஜயன் சிரித்துக் கொண்டே கேட்டான்.
ரித்தேஷ் ஒரு விநாடி முறைத்தான். அவனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. புது சினிமா வெளியீட்டுக்கு நண்பர்களிடம் இருந்து அழைப்பு. அதை வாசிக்கையில் முகம் ஓளிக்கொண்டது.
“சினிமாவுக்கு போகலாமா?.. அடுத்த திங்கள் வரியா?” துடிப்புடன் விஜயனை பார்த்துக் கேட்டான்.
“திங்கள் கிழமை யேங் கடை கணக்கு பார்க்க அவர் வீட்டுக்கு வரச் சொல்லியிருக்காரு. விளையாட போனால் திட்டுவாரு.. கஷ்டம். சினிமாவுக்கு போனால், விளையாட போனால் எங்கே போனாலும் அவர் குடும்பத்தோடுதான் போக வேண்டியிருக்கு” விஜயன் சலித்துக் கொண்டான்.
சட்டையை பார்த்து கறையில் விரல் வைத்து “இன்னைக்கு இந்த சட்டையை போட்டா சமைச்ச.. இது என்ன சட்டையில் கறை..” என்றான்.
“நமக்கு பின்னாடி ரெண்டு இருக்கை தள்ளி பாரு, வெள்ளை டீ ஷர்ட், ப்ளூ ஜீன்ஸ் போட்ட ஒருத்தி தெரியறளா. அவளுக்காகவே இந்த சட்டை” என்றான்.
ரித்தேஷ் எழுந்து நின்று திரும்பி பார்த்தான்.
விஜயன் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தான். “டேய் மானத்தினை வாங்காதே, அவ என்னை நினைப்பா”
“என்ன நினைப்பா, அவளைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்னு நினைப்பா, உனக்கு நல்லதுதானே… குட் சாய்ஸ். என்ன போன் நம்பர் வாங்கிட்டியா?”
“இல்லடா, அவ கூட உட்காரலாம்தான் போனேன், நீ கெடுத்திட்ட” கடுகடுவென சொன்னான்.
“என்கிட்ட முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே?”
“எப்படிடா?”
“வாயாலதான்”
“கிண்டலா”
“நான் போய் கேட்டு போன் நம்பர் வாங்கி வரட்டுமா?”
“வாயை மூடிக்கொள்,” விஜயன் விரக்தியுடன் சொன்னான். “அவளைப் பார்க்கவே இந்தப் புதுச் சட்டையை வாங்கி, இன்னைக்கு கறை விழுந்து எல்லாம் கெட்டுப்போச்சு. இந்தக் கறையுடன் எப்படி அவளிடம் பேசறது? முதல் சந்திப்பில் நான் பளிச்சென்று இருக்கனுமே” அவன் குரல் ஏக்கத்தில் தாழ்ந்தது. “அவளை நினைக்கும்போதே மனசில கொஞ்சம் இனிப்பு , நான் விரும்பும் ரெசிப்பியை மீண்டும் மீண்டும் படிப்பது போல ஒரு உணர்வு. எத்தனை திட்டங்கள் போட்டிருந்தேன்… எல்லாம் இந்தக் கறையால் தவறிப்போனது.”
ரித்தேஷ் புருவங்களை உயர்த்தி கிண்டலான சிரிப்புடன் சொன்னான், “கறை இருந்தால் என்ன? உனக்கு சமையலறையில்தானே வேலை , அது வெறும் சமையல் கறைதானே! காதல் விஷயத்திலும் சமையல் போலத்தான். முதன்முதலில் எதையும் சமைக்கும்போது சரியாக வருமா? ரிஸ்க் எடுத்து, முயற்சி செய்து பார்த்துத்தானே கற்றுக்கொள்கிறாய். காதலிலும் அப்படித்தான் , அதிலும் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும்!” அவன் முகம் முழுவதும் குறும்பான புன்னகை பரவியிருந்தது.
“இப்ப பேசலாம், அப்ப பேசலாம், அப்படினு ப்ளான் போட்டு போட்டு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகுதுடா”
“அது ஸ்ட்ரெஸ் இல்லட்டா, அதுதாண்டா ரொமான்ஸ்.. அதை அனுபவிக்கனும், அதில க்ரிட்டிக்கல் லென்ஸ் ஏன் போடற”
“போடா, உனக்கு என்ன கேர்ள் ப்ரெண்டா இருக்கு”
“எனக்கு மூணு கேர்ள் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க,” ரித்தேஷ் பெருமையுடன் அறிவித்தான்.
விஜயன் கேலியாகச் சிரித்தான். “உன் அக்கா, அம்மா, பாட்டி எல்லாரையும் கணக்கில் சேர்த்துட்டியா என்ன?”
ரித்தேஷின் முகம் சிவந்தது. கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். அதே நேரம் பேருந்து கிரீன் பார்க் நிலையத்தை அடைந்து நின்றது.
பேருந்து நின்றவுடனேயே அவன் கோபம் மறைந்தது. “அம்மா காரில் காத்திருக்காங்க, திங்கள் பார்க்கலாம், வர்ரேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டான்.
ரித்தேஷ் விரைந்து செல்வதைப் பார்த்துக்கொண்டே விஜயன் பெருமூச்சு விட்டான்.
விஜயன் உடலும் மனமும் களைத்திருந்தான். ரித்தேஷுடன் விளையாட்டு, வேலை என்று பல விஷயங்களைப் பற்றிப் பேசியதே அவனது எஞ்சியிருந்த சக்தியையும் உறிஞ்சிவிட்டது.
“இந்த ரித்தேஷ்!” விஜயன் மனதுக்குள் அலை அலையாய் எண்ணம் ஓடியது. “பட்டாம்பூச்சி போல பறக்கிறான். கிரிக்கெட், தொழில், சினிமா, நண்பர்கள் என்று ஒரே மூச்சில் ஒரு பஸ் பயணத்தில் எல்லாவற்றையும் சுற்றி வருகிறான். ஆனால் நான்… யேங் போல ஒரு யானைப்பாகன் கிட்ட யானை மரம் தூக்கும் வேலை செய்வது போல சமையல் என்ற ஒரு இடத்தில் இருக்கேன். அவர் அந்த ஒரே புள்ளியைச் சுற்றியே விரித்து, நகர விடாமல் என்னையும் அதில் இழுத்துக் கட்டி போடறார். அவர் என்னைய பிடிச்சி சுத்த விடறாரா, நான் அவரை பிடிச்சி சுத்திக்கிட்டு இருக்கேனா? என்ன நடக்குது? ஒரு நாள் சமையலறை போகாமல் இருந்தால் எனக்கு மனசு அப்செட் ஆகுது, ரித்தேஷுக்கும் அப்படி இருக்குமா, அவன் எதுக்கு அப்செட் ஆவான்?”
கிரீன் பார்க் நிலையத்தை நோக்கிச் செல்லும் பயணிகளுடன் அவனும் நடந்தான். கண்கள் அவளைத் தேடின, ஆனால் அங்கே அவள் இல்லை. ஏற்கனவே சென்றிருக்க வேண்டும். “மார்வெல் காமிக்ஸில் வரும் ஃப்ளாஷின் சகோதரி போல,” விஜயன் தனக்குள் எண்ணினான், “கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துவிட்டாள்.”
மெதுவாக ஜுபிலி லைன் ரயிலை நோக்கி நடந்தான். வீடு திரும்ப இன்னும் அரை மணி நேரம் ஆகும். நடைமேடையில் அவளுக்காகக் கண்கள் அலைந்தன. எங்கே போனாள் என்ற யோசனையில் இருந்தபோதே, திடீரென்று அவன் கண்கள் வேறொருவரைப் பதிவு செய்தன.
முழு மொட்டையுடன் பளபளவென மிளிரும் தலையும், நன்றாக சவரம் செய்யப்பட்ட முகமும், காவி நிற உடையின் மேல் தளர்வாகத் தொங்கும் பெரிய ஜாக்கெட்டும் கொண்டு நடைமேடையில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்த சுவாமியை கண்டதும் விஜயனின் கண்களில் கண்ணீர் திரண்டது. அது காலை முழுவதும் சந்தையில் தேடியும் கிடைக்காத அரிய சமையல் பொருள் ஒன்று, திடீரென்று சமையலறை குளிர்சாதனப் பெட்டியில் காத்திருப்பதைக் கண்டுபிடிக்கும் சமையல்காரனின் வியப்பு மகிழ்ச்சியைப் போன்றிருந்தது.
மளமளவென கிட்டப் போய் “ஹரி ஓம்” என்றான். அவர் திரும்பியதும் காலில் தொட்டு வணங்கினான். அவர் “ஹரி ஓம்” என்றார்.
சுவாமி அவனைக் கொஞ்சம் தூக்கத்துடனும், அன்புடனும் பார்த்தார்.
“என்னை ஞாபகம் இருக்கின்றதா சுவாமி” என்றான். அவன் வார்த்தைகளில் புதிர் போடும் தன்மை குறும்புடன் ஒட்டிக் கொண்டது.
“தெரியவில்லையே..” அவர் கண்களில் குழப்பம் இருந்தது
“நான் உங்க மாணவன். வெர்ஜீனியாவில் விஜயன் கேட்டரிங் சர்வீஸஸ் உரிமையாளர் சிவக்குமார் ஞாபகம் இருக்கின்றதா?, அவர் மகன். இரண்டு வருஷம் முன்னாடி பார்க்க வந்தேன். கான்குன் நிகழ்வு ஞாபகம் இருக்கின்றதா? நீங்கள்தான் கொஞ்சநாள் வெளியில் இருந்தால் பெட்டர் என்றீர்களே?”
சுவாமி முகம் மலர்ந்தது.”விஜயன்?” எனக் கேள்வியோடு பார்த்தார்.
“ஆமாம் “
“உன் அப்பாவைப் போன வாரம் கூட ஒரு நிகழ்வில் பார்த்தேன். நீ இங்கே வேலை செய்யறதாக சொன்னார். எங்கே?” ஒரு கேள்வியோடு முடித்தார்.
“நான் இங்கே ஓர் இத்தாலிய உணவகத்தில் பணியாற்றுகிறேன்,” விஜயன் மெதுவாகச் சொன்னான். அவன் குரலில் ஏதோ ஒரு தளர்வு. “உங்களைப் பார்த்ததும் நானே ஆர்லிங்டனுக்குத் திரும்பி அம்மா அப்பாவைச் சந்தித்தது போன்ற உணர்வு. ஏதோ வீட்டுக்கு வந்துவிட்ட மாதிரி…” அவன் உதடுகள் சற்றே துடித்தன. சுவாமிஜி வேறொருவருடன் முக்கியமான உரையாடலில் ஈடுபட்டிருப்பதைக் கவனித்து இருந்ததால், மேலும் தொந்தரவு கொடுக்க விரும்பாமல் பின் நகர்ந்தான். “நான் பிறகு பார்க்கிறேன் சுவாமி, உங்கள் நேரத்தைப் பறித்ததற்கு மன்னிக்கவும்.”
“இங்கே இரு. ஏதேனும் வேலை இருக்கின்றதா, ரயிலுக்குத்தானே காத்திருக்க?” சுவாமி கேட்டார்.
விஜயன் தலையசைத்தான்.
“நந்தா, இது விஜயன். தோசை கிங். இவன் கையால் தோசை சாப்பிட எனக்கு மிகப் பிடிக்கும். நம் மெரிலாந்த் பாலவிஹாரின் முன்னாள் மாணவன்” அவரது நண்பரிடம் அறிமுகம் செய்தார். சுவாமி தன் உணவினை பற்றி ஞாபகம் வைத்து சொன்னது விஜயனுக்கு சந்தோஷமாக இருந்தது. சுவாமியின் நண்பர் ஆமோதித்து சின்னதாக புன்னகைத்தார்.
“விஜய் நாங்கள் ஆக்ஸ்போர்ட்டில் ஒரு பேப்பர் ப்ரசண்டெஷன் நிகழ்வுக்கு வந்தோம். இன்று ஒரு சத்சங்கம் இருந்தது. முடிந்து வீட்டுக்குப் போகின்றேன். எங்கே தங்கியிருக்க?”
“ப்ரண்ட் தெரியுமா.. வெம்ளி அருகே இருக்குதானே… அங்க.”
“நீ உயர்நிலைப் பள்ளி முடிக்கவில்லைதானே?” சுவாமி குரலில் எந்த உணர்வும் இல்லை.
“ஆமாம்”
“அப்பா சொன்னார். ஊருக்கு வந்து அதை முடி, உணவகத் தொழிலில் ஒரு பட்டம் படித்து முடி. கூடவே தொழில் செய்”
“கஷ்டம். அங்கே வந்தால் கான்கூனை எல்லாரும் விசாரிப்பார்கள்”
“அது சின்ன கறைதான், தொடர்ந்து மேலே மேலே நீ செல்லக் கவனம் அதிலிருந்து போய்விடும்”
“பார்க்கிறேன். ஏதாவது மேஜிக் இருந்தால் அதை எடுத்திடலாம்” சொல்லி கசப்புடன் விஜயன் சிரித்தான்.
“நீதான் மேஜிக். இங்கே எப்படி வேலை போகிறது” சொல்லி விட்டு சுவாமி தட்டிக் கொடுத்தார்.
“வேலை மட்டுந்தான் இருக்கு. 11-11 வேலை, திங்கள் விடுமுறை, ஆனால் அன்னைக்கும் யேங் வீட்டில் கூப்பிட்டுக் கடை கணக்கு , வழக்க பார்க்க வைச்சிடறாரு”
“பார்த்திங்களா முத்து, நம்ம குருவை பத்திதானே பேசிக்கிட்டு இருந்தோம், இவனோடதும் அதைத்தான் சொல்லுது, நல்ல குரு. கொள்ளினும் நல்ல குருவைக் கொள்ளுக, உள்ளம், பொருள், உடல், ஆவி உடன் ஈய்க எனச் சொல்வார்கள்.” என திரும்பி முத்துவிடம் சொல்லிவிட்டு விஜயனை உற்று பார்த்தார்.
“என்ன சொல்லறிங்க” என விஜயன் புதிருடன் கேட்டான்.
“யேங் கிட்ட வேலை செய்யும் பொழுது உன் மனசு வேலையை தவிர வேற எதையும் பார்க்கல. கான்குன் கூட நினைக்கல. சரியா?” சுவாமி கேட்டு விட்டு புன்னகைத்தார்.
“எங்க நேரம் இருக்கு, எந்த நினைப்புக்கும் இடம் இல்லையே”
“ஊருக்கு வந்தால் உன்னால் முழு உணவகம் தனியா நடத்த முடியும்ல, அப்பாகிட்ட 3 இருக்கே, ஒன்னை நீ எடுத்து நடத்தலாம் இல்லையா”
“எனக்கு இப்ப நல்லாத் தெரியும், இங்கேயே நான்தானே கிட்டத்தட்ட நடத்தறேன்” விஜயன் குரலில் ஒரு நொடி ஆர்வம் எட்டிப் பார்த்தது.
“சொன்னேன்ல நீதான் உன் மேஜிக். ஆர்லிங்க்டன் வந்தும் நேரமில்லாமல் இரு. பிரச்சனை சரியாகி விடும்.” சுவாமிஜி சிரித்தார்.
விஜயன் ஒன்றும் பேசாமல் நின்றான்.
மெல்ல ரயில் ஸ்டேஷனில் வந்து நின்றது.
“சரி சமத்தா இரு. அப்புறம் பார்க்கலாம். எல்லாம் நல்லா இருக்கும்” சுவாமி விடை பெற்றுக் கொண்டு அவர் நண்பருடன் பேசியவாறே ரயிலில் ஏறினார். அடுத்தப் பெட்டிக்குள் ஓடி ஏறினான். சுவாமியை ரொம்ப தொந்தரவு செய்யக் கூடாது என எண்ணிக் கொண்டான்.
விஜயன் யோசித்தபடி ஏறினான். ஒரு இருக்கையில் அமர்ந்து கண்ணை மூடினான். யோசித்துப் பார்த்தான். “நேரமில்லாமல் இரு” என்பது காதுகளில் ஒலித்தது.
“எக்ஸ்க்யூஸ் மி”
குரல் கேட்க நிமிர்ந்தான்.
“நான் இங்கே உட்காரலாமா?” கயல்விழியாள் நின்றிருந்தாள். அவள் முன்னால் சற்று குனிந்து, மூச்சு சற்று அதிகமாக வாங்கியபடி, கண்களில் நீந்தும் பரபரப்புடன் அருகில் உட்கார அனுமதி கேட்டாள். அவளது இடக்கையின் விரல்கள் கைப்பையின் பக்கத்தில் ஆவலுடன் ஆடிக்கொண்டிருந்தன. வலக்கை காதில் இருந்த ஹெட்போன்களை ஒரே இழுப்பில் அகற்றி, கூந்தலை நெற்றியிலிருந்து விலக்கி காதுகளுக்குப் பின்னால் அள்ளி வைத்தாள்.
“உக்காருங்க” நகர்ந்து உட்கார்ந்து கொண்டான்.அவனுக்கு முன்னிருக்கையும், பின்னிருக்கையும் காலியாக இருந்தை கவனித்தான்.
அவள் மெல்லிய புன்னகையுடன் அமர்ந்தாள், ஆனால் இருக்கையில் அமர்ந்தவுடன் விஜயனை நோக்கி சற்று திரும்பி, தனது முழு கவனத்தையும் அவன் மீது செலுத்தினாள். அவளது தோள்கள் சற்று முன்னால் சாய்ந்திருந்தன, அதில் தூரம் குறைந்தது.
விஜயனின் உடல் இத்தனையும் கவனித்தது, அவன் மனம் பிரம்ம பிரயத்தனம் எடுத்து அவளைப் பார்க்காமல் இருக்க உடலை பிடித்து வைக்க போராடியது. அது தோற்றதில் விஜயனுக்கு ஒரு சின்ன மகிழ்ச்சி வந்தது. தலையை திருப்பி அவளைப் பார்த்து கொஞ்சம் பதட்டத்துடன் சிரித்து வைத்தான். விஜயனை நேராக, உற்றுப் பார்த்த அவள் கண்களில் நாள் முழுவதும் சேகரித்து வைத்திருந்த துணிச்சல் இருந்ததாக நினைத்தான்.
“உங்க சட்டையில் சின்ன கறை இருக்கே.குயின்ஸ் பொலிவார்டில் ஏறும் போதே பார்த்தேன். அப்பவே உங்களிடம் பேசனும்னு நினைச்சேன். பேச முடியலை.”
“குயின்ஸ் பொலிவார்டில் இருந்து என்னைப் பார்த்துக் கொண்டுள்ளாளா?” விஜயன் மனக்குரல் ப்ரஷர் குக்கரின் விசில் போல அலறியது. எடுத்தவுடன் தயக்கம் இன்றி மளமளவென பேசுகின்றாள் என்பதை நம்ப முடியாமல் திரும்பிப் பார்த்தான். “நான் விஜயன் சிவக்குமார்” மெல்லக் குரலில் சொன்னான்.
“உங்களை தினமும் பார்ப்பேன், நீங்களும் பார்ப்பிங்க..ரொம்ப கூச்சப்படறிங்க… என்கிட்ட இருக்கறது நல்ல ப்ரோடக்ட்…எல்லா கவலையும், உடல்வலியும் போயிடும். பயப்படாதிங்க. டென்ஷன், ஸ்ட்ரெஸ் எதுவும் இருக்காது…” அவள் தொடர்ந்து பேசினாள். பேசிக் கொண்டே பையை திறந்தாள். அதில் இருந்து சுருட்டப்பட்ட சிகரெட் போன்ற ஓன்றை எடுத்தாள், “நீங்க முதல் முறை வாடிக்கையாளர், உங்களுக்கு டிஸ்கவுண்ட்” என சொன்னாள். பின் அதன் விலையை சொன்னாள். தான் விற்கும் பொருள் வாழ்வின் அழுத்தத்தை நீக்குவதை பேச ஆரம்பித்தாள்.
விஜயன் உறைந்து அமர்ந்து இருந்தான். அவள் கையில் இருந்த பொருள் சில நொடிகள் அவன் கண் முன் தோன்றி அவளது அழகிய கரத்தின் அசைவுக்குள் ஆமை ஓட்டுக்குள் தலை நீட்டி பின் மறைந்தது போலானது. ஆனால் கண்ணில் மறைந்த அந்த விற்பனை பொருள் அவன் மனதில் மறையவில்லை.
ரயில் நிறுத்தம் ஒன்றில் நின்றது. நின்ற பொழுது ரயிலில் உருவான சின்ன அசைவு அவனுக்கு அன்றைய முழு தினத்தினையும் காட்டி மறைந்தது. அது அவன் வழக்கமாக இறங்குமிடம் இல்லை. தன் சட்டையை பார்த்தான் விரிநீலத்தில் கறை பளிச்சென இருந்தாலும் கரைந்து அப்பொழுது சிறிதென தெரிந்தது. அவளின் விற்பனை பேச்சின் மேல் ரயில் கதவு திறக்கும் உலோக ஓசை ரீங்கரித்து கலந்து அவனது உள்ளுணர்வின் ஆழத்துக்கு சென்றது. அடுத்தென்ன என அவனுக்குள் தெரிந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
