சில வருடங்களுக்கு முன்னால் இளைய மகன், ஒரு காட்டுயிர் புகைப்படக்காரன் என்பதால், என் மகன்களோடு கர்நாடகக் காடுகளுக்கு பயணம் சென்றிருந்தேன். முதல் நாளில் கபினி காட்டுக்கு சென்றோம். ஒரு புலி அங்கு சமீபத்தில் நடமாடியதாக சொல்லப்பட்டதால் அங்கேயே பல சுற்றுக்கள் ஜீப்பில் பயணித்தும் கண்ணில் புலி உட்பட எந்த விலங்கும் தட்டுப்படவில்லை. திரும்பலாம் என்று நினைத்தபோது காட்டில் எங்களுக்கு முன்னேயே வந்திருந்து ஒரு உயர்ந்த திறந்தவெளி வேனில் நின்றபடி படம் எடுத்துக்கொண்டிருந்த பிரிடிஷ் காட்டுயிர் ஆவணப்பட ஒளிப்பதிவாளர் ஒருவர் எங்களை அங்கேயே காத்திருக்கும்படி சைகை செய்தார். அவர் கைகளை தாமரை அரும்பைப்போல குவித்தும் விரித்தும் காட்டினார். அதன்பொருள் மரங்களில் இருக்கும் பறவைகளும் குரங்கு உள்ளிட்ட விலங்குகளும் புலி வருவதைச்சொல்லி எச்சரிக்கும் alarm call என்று எங்களின் ஜீப் ஓட்டுநர் விளக்கினார்.
அவர் சொன்னபடியே சற்று நேரத்தில் மிக மிக அருகில் தொட்டுவிடலாம் என்னும் அண்மையில் ஒரு பெரும் புலி புதர்களுக்கு உள்ளிருந்து தழல் போல வெளிப்பட்டு ஜீப்பை நோக்கி வந்தது. ஜீப்பை மெல்ல ஓட்டுநர் பின்னோக்கி நகர்த்தியபடியே வந்தார், புலியும் உடன் வந்தது. ஆனால் அதன் கண்களில் அத்தனை மனிதர்கள் அங்கிருந்ததும், புலியை ஏராளமான காமிராக்கள் படமெடுத்ததும் தெரியவேவில்லை. மனிதர்களை அது கொஞ்சமும் பொருட்படுத்தவே இல்லை. அதற்கும் தெரிந்திருக்குமோ என்னவோ மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் அவனை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று.
மிகக்கம்பீரமான அந்த கருப்புப் பட்டைக் கோடுகளுடன் நெருப்பின் நிறத்தில் ஒரு அரசனைப்போல கம்பீரமாக அந்தப்புலி அத்தனை அருகில் நடந்துவந்து கொண்டிருந்ததைப் பார்த்தது என் வாழ்வின் உச்ச தருணங்களில் ஒன்று. அப்படியான பல உச்ச தருணங்களை வாசிப்பனுவபத்தில் அளித்த ஒரு நாவல் வேங்கை வனம்.
புலிகளுக்கிடையே நடக்கும் உக்கிரமான சண்டை. மனிதர்கள் புலிகளை வேட்டையாடுவது, காதலின் பொருட்டு நடக்கும் கொலைகள், தற்கொலைகள், வாழ்வு தாழ்வு என பல உச்சதருணங்களை இந்த நாவல் விவரிக்கிறது.
எம் கோபாலகிருஷ்ணனின் பிற நாவல்களான தீர்த்தயாத்திரை, மனைமாட்சி, அம்மன் நெசவு உள்ளிட்ட பல கதைகளின் களங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு கதைக்களத்தை கொண்டிருக்கிறது வேங்கை வனம்.

இந்த நாவல் வரலாறு, தொன்மம், விலங்கியல், காட்டியல் , உயிரியல் மற்றும் சூழியல் ஆகியவற்றோடு இந்திய அரசியலையும் இணைத்துக் காட்டுகிறது. வேங்கை வனம் வாசிப்பனுபவம் ஒரு கால இயந்திரத்தில் பயணிக்கும் அனுபவத்துக்கு இணையானதாக இருக்கிறது. 1110-ல் தொடங்கி முன்னும் பின்னும் பயணித்து நவம்பர் 2014-ல் முடிகிறது கதை.
வேங்கை வனம் ஜெயன் சௌகானின் கனவின் அடிப்படையில், ஒரு கோட்டை அமைக்கப் படுவதை தொடக்கப்புள்ளியாக கொண்டிருக்கிறது. ஜெயன் செளகான் குதிரையில் அக்கோட்டையின் பொருட்டு சிலருடன் குதிரையில் செல்லும் பயணத்தில் தொடங்கி, பிரிடிஷ் இந்தியாவிலும், முகலாய பேரரசிலும் நிகழ்ந்த முக்கிய சரித்திர நிகழ்வுகளும் இணைக்கப்பட்டு விரிகிறது வேங்கை வனம். ஜெயன் செளகானின் பயணத்தில் காலத்தில் பின்னோக்கித் துவங்கும் அந்தப் பயணம் 2014-ல் அப்போது காதலில் இருக்கும், தன் மூதாதையர்கள் பிருதிவிராஜ் சம்யுக்தை காதலை எண்ணி உருகும் ரவீந்திர செளகான் வரை நீள்கிறது.
இடையில் கோட்டை எழுந்து நிற்பது, அரசுகள் எழுவதும் வீழ்வதும், பிரிடிஷ் இந்தியா முகலாயப்பேரரசு என நீளும் கதையின் எல்லா கண்ணிகளையும் இணைக்கிறது புலிகள்.
வேங்கை வனம் ஒரு சூழியல் படைப்பாகத்தான் நம் முன் விரிகிறது. தலைப்பில் இருக்கும் வனம் என்னும் சொல்லை நியாயப்படுத்தும் விதமாக ஏராளமான காட்டுவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றிய விவரிப்பு நாவலெங்கும் இருக்கிறது.
ரணஸ்தம்பரக்கோட்டை, அது படிப்படியாக அமைக்கப்படுவது எப்படி அந்தக்கோட்டை ஒரு நல்லாட்சிக்கு அடித்தளமாக இருக்கிறது போன்றவை துவக்கத்தில் சொல்லப்படுகின்றன.
இந்த நாவலை எம் கோபாலகிருஷ்ணன் இரண்டு பாகங்களாக அளித்திருக்கிறார். முதல் பாகம் பத்து அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. இரண்டாவது அணிநிழல்தரு என்னும் இரண்டாம் பாகம் 43 நீண்ட அத்தியாயங்களுடன் நீண்டிருக்கிறது.
நாவலில் புலிகளுக்கு அடுத்தபடியாக கூடவே வருவது அந்தக்கோட்டைதான். மிக ரம்மியமான அந்தக் கோட்டையும், அந்தகோட்டை அமைந்திருக்கும் சிறு குன்றும், அந்தக்குன்றின் அடியில் வேட்டை,க்கென அமைந்திருக்கும் ஜோஹி மஹால் என்னும் தனி பங்களாவும் பத்மதடாகமும் மிக முக்கியமானவைகளாக வேங்கவனத்தின் இருக்கின்றன.
பத்ம தடாகத்தின் கரையில் இருக்கும் ஒரு கூடாரத்தின் வெளியே ஜஹாங்கிர் வந்து நிற்கும் காட்சியில் கதை ஒரு முக்கிய திருப்பத்தை நோக்கிச் செல்கிறது.
பத்ம தடாகம் என்னும் மிக அழகிய அந்தத் தாமரைக் குளத்தில் பாய்ந்து இளவரசியும் பிற பெண்களும் உயிரை மாய்த்துக்கொள்வது வேங்கை வனத்தின் உணர்வுபூர்வமான வாசிப்புத்தருணக்களில் ஒன்று.
பொதுவாக வரலாற்று நாவல்களில் போர்களின் போது கோட்டைகளும் அரண்மனைகளும் கைப்பற்றப்படுகையில் பெண்கள் நெருப்பில் பாய்ந்து உயிர் விடுவதை வாசித்திருப்போம். வேங்கைவனம் அப்படியான ஒரு சிக்கலான தருணமொன்றில் மாபெரும் நெருப்பு மூட்ட சமயமில்லாததால் ஒவ்வொரு பெண்களும் கால்களையும் கைகளையும் கயிற்றால் கட்டிக்கொண்டு பத்ம தடாகத்தில் பாய்ந்து மாய்ந்ததைக்காட்டுகிறது.
உருவாகி வளர்ந்து புகழின் உச்சியில் இருந்து மெல்ல மெல்ல சரிந்து மூன்றில் ஒரு பங்கு மட்டும் எஞ்சி நின்று, பின்னர் முழுக்க ஆலம் வேரோடி அழிந்துபோவது என இந்த கதையில் அக்கோட்டையின் அழிவு நம் சூழல் அழிவின் ஒரு குறியீடாகவே காட்டப்படுகிறது.
இந்த நாவல் மிக முக்கியமாகச் சொல்லுவது புலிகளின் பாதுகாப்பைத்தான்.
துவக்கத்திலிருந்தே கோட்டையில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது புலிவேட்டை. புலிவேட்டைகள் மிகக் கொடூரமாக நடந்திருக்கின்றன. நேரடியாகப் புலியின் வாயிலேயே ஈட்டியை சொருகுவது, ஒரே சமயத்தில் வாளால் வெட்டியும் ஈட்டியால் குத்தியும் புலிகளைக் கொல்வது தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. பல புலிகள் இதில் இருக்கின்றன. பாஹினி, மோஹினி, கிருஷ்ணவேணி என்னும் கிருஷ்ணா, சுல்தான் புரி , சுல்தான் புரியின் குட்டியான மற்றோரு சுல்தான் புரி, பிறகு மச்சிலி. முகத்தில் மீன் வடிவத் தழும்பைக் கொண்டிருக்கும் மச்சிலிதான் இந்த நாவலின் நாயகி.
வேங்கை வனம் புலி வேட்டைகள், அவை உருவாக்கும் சூழலியல் பிரச்சினைகள் மற்றும் புலிகளின் அழிவை விவரிக்கிறது. புலிகள் வேட்டையாடப்படுவதை, அவை அழிந்து கொண்டிருப்பதை சொல்லிக்கொண்டே வரும் இந்த நாவல் ஒரு புள்ளியில் பிரபஞ்ச விதிகளுக்கு மாற்றாக இரைதேட முடியாத மச்சிலிக்கு அக்காட்டில் வேலை செய்யும் மனிதர்கள் இரைதேடிக் கொடுப்பதைச் சொல்லி புலிகளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் பிணைப்பையும் சொல்லுகிறது. வாசிப்பனுவத்தின் இந்தப்பகுதி பெரும் மனநிறைவையளிக்கிறது.
வழக்கமாக புலிகளின் வாழ்நாளைக் காட்டிலும் அதிகமாக 19 வருடங்கள் வரை உயிருடன் இருந்து பல ,குட்டிகளை ஈன்ற மச்சிலியால் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது
மச்சிலியின் வாழ்வுத்தருணங்களில், பலவற்றை புகைப்படமெடுத்து ஆவணப்படுத்துபவர் மச்சிலியின் இறுதித்தருணத்தை படமெடுக்க மறுத்துவிடுகிறார்.
மச்சிலியை சிதையிலேற்றி இறுதிச்சடங்கிற்கான மரியாதைகளையும் செய்தபின்னர் எரியும் தழலில் மச்சிலியின் உடலின் கோடுகளைப்போலவே மஞ்சளும் கருப்புமாக தெரிவதை சொல்லுமிடத்தில் எம் கோபாலகிருஷ்ணன் எனும் கவிஞரைப் பார்க்கலாம்.
வேங்கைவனத்தில் பல விலங்கறிவியல் தகவல்கள் நிறைந்திருக்கின்றன.
புலிகள் வாழ்நாள், ஏன் மச்சிலி மட்டும் அதிகக் காலம் உயிருடன் இருந்தது, புலிகள் தங்கள் எல்லைகளை எப்படி நிர்ணயிக்கின்றன, ஒரு குறிப்பிட்ட பருவம் வந்தவுடன் புலியின் மகள்கள் எல்லையைப் பாதுகாக்கும் பொருட்டு தாயை விரட்டி அடிப்பது, புலிகளின் இனப்பெருக்கம் குறித்த தகவல்கள், புலிகளின் கலவி ஏன் சில நொடிகளில் முடிந்துவிடுகிறது, குட்டிகள் இருக்கும் பெண் புலிகள் கலவிக்கு தயாராவதில்லை என்பதால் குட்டிகளைக் கொல்ல வரும் ஆண் புலிகள், பெண்புலிகளுக்குக் குட்டிகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம், ஆண் புலிகளின் இச்சைக்கு சம்மதிக்க வேண்டிய நிர்பந்தம் என புலிகளின் வாழ்வை மிக அண்மையிலென வேங்கை வனம் காட்டுகிறது
தாய்ப்புலி குட்டிகளுக்கு வேட்டையாடவும் உணவுண்ணவும் கற்றுத் தருவதும் மிகச் சுவாரஸ்யமாக விளக்கப்பட்டிருக்கிறது.
கரடி குங்கிலிய மரப்பிசினைச் சுரண்டிச் சாப்பிடுவது போன்ற நுண்மையான காட்டின் விவரணைகளும் உண்டு வேங்கை வனத்தில்.
இவற்றோடு அக்காட்டின் தொல்குடியினரின் பாரம்பரிய அறிவும் சொல்லப்படுகிறது
கோட்டைக்கான இடத்தை தேர்வு செய்யப் போகும்போது தொல்குடிகள் மந்திரம் சொல்லிக்கொண்டே போவது, நிலத்தை அடையாளம் கண்டவுடன் விழுந்து வணங்குவது, கோட்டை அமையவிருக்கும் இடத்தில் விரலை அறுத்து குருதியை அர்ப்பணிப்பது போன்ற தகவல்கள் இருக்கின்றன.
முதல் அத்தியாயத்தில் முதுவர் என்னும் தொல்குடியினர் வருகிறார், பின்னர் காளிகோவிலுக்கும் கணேஷ் மந்திருக்கும் வருபவர்கள் என தொல்குடிகளைப் பற்றிய விவரணைகள் தொடர்ந்து சொல்லப்பட்டிருக்கிறது வேங்கை வனத்தில்.
புறாக்கள், செங்கால் நாரைகள், உள்ளான்கள், பொரி உள்ளான்கள், உள்ளிட்ட ஏராளமான பறவை இனங்கள், மான், கரடி, நீல்காய் என பலவித விலங்குகளின் விவரிப்புகள் நமக்கு அடர் காட்டுக்குள் இருந்து வாசிக்கும் அனுபவத்தை வேங்கை வனம் அளித்து விடுகிறது.
பல இடங்களில் வருகிறது. தோக் மரங்கள் (Anogeissus Pendula) நாணல் தர்ப்பை , கற்பூரப்புல். தவான் புல் உள்ளிட்ட பல வகைப் புற்கள் , அத்தி, ஆல், நாவல் குங்கிலியம் போன்ற பல வகை மரங்கள் அடிக்கடி நாவலில் இடம் பெறுகின்றன.
அக்காடு அமைந்திருக்கும் அந்த இடத்திற்கு சொந்தமான அனைத்து தாவர விலங்கு வகைகளை விளக்கும் ஒரு சூழியல் ஆவணமாகவும் வேங்கவனம் இருக்கிறது.
ஓரிடத்தில் நாணலில் மலர் மஞ்சரியை எம் கோபாலகிருஷ்ணன் கதிர்ப்பூக்கள் என்கிறார். அது ray florets என்னும் தாவர அறிவியல் பெயரின் மிகச்சரியான தமிழாக்கம்.
காடும், கோட்டையும் புலிகளும் நம்முடன் இணைந்து வந்து கொண்டே இருக்கின்றன. வேங்கை வனம் காட்டும் ஜோஹி மஹாலும் கோட்டையும் அதனருகில் இருக்கு மாபெரும் ஆலமரமும் இன்றளவும் இந்தியச்சூழல் சுற்றுலாவின் முக்கியமான இடங்கள்.
இயற்கைக் காடுகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணங்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் கிராமங்களில் உருவாகும் மானிட-விலங்கு முரண்பாடுகள் பற்றியும் வேங்கை வனம் விவரிக்கிறது.
வேங்கை வனத்தில் வரும் கதாபாத்திரங்களும் மிக மிக சுவாரசியமானவை
6 தோட்டாக்களில் 4 புலிகளைக் கொல்லும் மெஹர் என்னும் நூர்ஜஹான், என்னும் புலிகளின் ராணி. புலியால் நேரடியாக கொடூரமாகத் தாக்கப்பட்டு இரண்டு மண்டையோட்டு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல அறுவை சிகிச்சைகள் செய்தவரான, தப்பிப்பிழைத்த அருண் தாக்கூர், மீண்டும் மீண்டும் புலிகளையே பார்க்க முயல்பவர்.
பகதூர் என்னும் கன்சர்வேட்டர், இறந்த புலியின் உடலை அறுக்கும் குடுவன், குடுவன் புலிகளின் உடலை அறுத்து தோலை உரித்து பாடம் பண்ணும் பகுதிகள் வாசிக்க மிகவும் சங்கடமளிப்பவை. குடுவன் யாரிடமும் அதிகம் பேசாத, தனக்கு வேண்டிய ரொட்டியைத் தான் கொண்டு வரும் கோதுமை மாவிலிருந்து உண்டாக்கிக்கொள்ளும் சுவாரஸ்யமான கதாபாத்திரம். இவர்களுடன் சலீம் மற்றும் ஜஹாங்கீர் போன்ற வரலாற்று கதாபாத்திரங்களும் இருக்கிறார்கள்
“வேங்கைவனம்” நாவல் சூழலியல் இலக்கியத்தில் மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. 1100-களில் மிக அதிக எண்ணிக்கையில் இருந்த புலிகள் வேட்டையாடப்பட்டதைச் சொல்லித் தொடங்கும் வேங்கை வனம் பிரிடிஷ் இந்தியாவில் அது அரச விளையாட்டுகளில் ஒன்றாக மாறிவிடுவதைக் காட்டுகிறது,
மெஹர், சாரா, மார்கரெட் போன்ற பெண்களும் புலிவேட்டையில் ஈடுபடுகிறார்கள், மசான் என்னும் மரப்பரணிலிருந்து நேரடியாக யானைமீது தாவியேறி புலிவேட்டையாடும் பெண்களைக் குறித்தறிவது பரவசமளிப்பது.
புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகையில் வேட்டை நிறுத்தப்பட்டு புலிகளின் பாதுகாப்பு முன்னெடுக்கப்படுகிறது.
அதன்பின்னர் புலிவேட்டை வீரவிளையாட்டாக இல்லாமல் புலிக்கொலையாக தண்டனைக்குரியதாகி, காட்சி அப்படியே மாறுகிறது.பின்னர் வேங்கை வனம் புலிகளின் பாதுகாப்பிற்கு இந்தியாவில் கொண்டு வரப்பட்ட சட்டங்களையும் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களையும் சொல்லுகிறது
இவற்றோடு சட்டங்களைப் பாதுகாக்கும் அதிகாரிகளுக்கும் இயற்கையாளர்களுக்குமான ஆவணச்சிக்கல்களையும் வேங்கை வனம் நுட்பமாகப் பேசுகிறது. அத்தனை பாதுகாப்பு முயற்சிகளுக்குப் பிறகும் கள்ளச்சந்தை வணிகத்தின் பொருட்டு புலிகள் தொடர்ந்து கொல்லப்படுகின்றன.
மெல்ல மெல்ல சூழல் சுற்றுலாக்கள் இடம்பெறுகின்றன. மிதிவண்டியில் காடுகளுக்குள் வந்து கொண்டிருந்த ஒரு வனப்பாதுகாப்பு அதிகாரி ஜீப்பில் வரும்படியும் உடன் சுற்றுலாப் பயணியரை அழைத்து வரும்படியும் சொல்லப்படுகிறார்.
இந்நாவல் சூழல்சுற்றுலா உருவானதையும் அதன் சாதக பாதகங்களையும் விரிவாக அலசுகிறது
சூழல் சுற்றுலாவின் நீட்சியாகக் காடுகளின் விளிம்பிலிருக்கும் கிராமங்களில் நிகழும் வனவிலங்கு மனித மோதல்களும் விவரிக்கப்படுகின்றன.
இறுதி அத்தியாயங்களில் சூழல் சீர்கேடுகளை உருவாக்கும் பிளாஸ்டிக் அட்டைகள், கூரை இடப்பட்ட வீடுகள் ஆகியவை காடுகளுக்குள் நுழைந்துவிடுகின்றன.
இவற்றோடு முகலாயப் பேரரசில் நடக்கும் அதிகாரப் போட்டிகளும் தாஜ்மஹலின் அழகும் இடையில் வருகிறது. செங்கிஸ்கான், தைமூரிலிருந்து துவங்கி பாபர், அக்பர், ஜஹாங்கிர் என நீண்டு கடைசியாக ஔரங்கசீப் வரை கொடிவழியும் விரிவாக சொல்லப்படுகிறது இந்த நாவலில்.
மெஹரின் மீதான காதல், மெஹர் குலிக்கு மணமுடித்துக் கொடுக்கப்படுவது, மெஹரின் கண்முன்பாகவே குலி தலை துண்டித்துக் கொல்லப்படுவது, விரும்பிய அவராலேயே தொடுவதில்லை என சத்தியம் வாங்கிக்கொள்வது என சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லாத நாவல் இது. குஸ்ரூ, குர்ரம் போன்ற மேலும் சில முக்கியமான ஆளுமைகள் நாவலின் வாசிப்பனுபவத்தை கூட்டுகிறார்கள்.
வேங்கை வனத்தில் எம் கோபால் கிருஷ்ணன் மொழிநடை அபாரமானது. குறிப்பாக புலிவேட்டைகளின் போது நம்மீது ரத்தம் தெறிக்கும்.
புலிகளின் எண்ணிக்கை புலி வேட்டைகள், சூழல் அழிவு மற்றும் இயற்கை காப்பு முயற்சிகள் பற்றிய விவரங்களை முன்னிலைப் படுத்தும் வேங்கை வனம் நாவல் சூழலியல் இலக்கியத்தில் மிக மிக முக்கியமான ஒன்று
இறுதிப்பகுதியில் மச்சிலிக்கும் மனிதர்களுக்குமானாதாக காட்டப்படும் பிணைப்பானது மனிதர்களின் இயற்கை மீதான பிணைப்புத்தான்.
வயதாகி பற்கள் இழந்து இறுதிக்கணத்தில் இருக்கும் ஒரு கொல்புலிக்கு மனிதர்கள் உணவளித்துப் பாதுகாப்பதென்பது அழிந்து கொண்டிருக்கும் இயற்கையை மீள் கட்டமைப்புச் செய்யும் மனிதனின் முன்னெடுப்புக்களின் குறியீடுதான்.
2006-ல் வெறும் 1004 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2023-ம் ஆண்டின் புலிகளின் கணக்கெடுப்பில் சுமார் 3600 ஆகியிருக்கிறது. இந்தியாவின் இந்த புலிகளின் எண்ணிக்கை உலகப்புலிகளின் எண்ணிக்கையில் 75 %.
புலிகளின் பாதுகாப்பை முதன்மையாகச் சொல்லும் இந்த நாவல், கல்வி மையப் பாடநூலாகவும், மாணவர்களுக்கு சூழலியல் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது ஒரு அறிவியல் பேராசிரியராக என் பரிந்துரை .
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
