- ஈர்ப்பு அலைகள் – பகுதி 1
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 2
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 3
- “Mission impossible போல இருக்கிறதே. யார் சார் அந்த டாம் க்ரூஸ்?”
- பைனரி பல்ஸார் என்னது?
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 6
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 7
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 8
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 9
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 10
- ஈர்ப்பு அலைகள் – 11
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 12
ஒன்பதாவது வாரமும் இந்த ஈர்ப்பு அலைகள் சம்பந்தப்பட்ட உரையாடல் தொடர்ந்தது. இந்த வாரம், அருண், ஒரு முக்கிய கேள்வியோடு தொடங்கி வைத்தான்.
அருண்: “சார், இந்த வார விவாதம் தொடங்குமுன், ஒரு கேள்வியை கேட்கலாம் என்றிருக்கிறேன். இவ்வளவு மெனக்கிட்டு, நம் பூமியில் உள்ள எல்லா அதிர்வுகளிலிருந்தும் விடுதலை கொடுத்து, இத்தனை சன்னமான ஒரு ஒலி அலையைப் பதிவு செய்வதால், அப்படி என்ன பெரிய விஷயம் என்றும் இன்னும் பிடிபடவில்லை”
“அருமையான கேள்வி. நம்மை உடனே பாதிக்கும் விஷயம் நமக்கு பூதாகாரமாகத் தோன்றுவது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம். ஒரு பெரிய நிலநடுக்கம், மிகப் பெரிய பனிப்புயல், சக்தி வாய்ந்த காற்றுப்புயல் என்று இயற்கையில் நிகழும் பெரும் நிகழ்வுகள் நமக்குத் தெரியும். இன்று, நாம் பொதுவாக ஒப்புக் கொள்வது, 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், பூமியில் வாழ்ந்த டைனாஸர்கள், ஒரு மிகப் பெரிய விண்வெளித் தாக்குதலில், மடிந்தன என்பது. இவை யாவுமே, பூமியில், அல்லது பூமியை வந்தடையும் பொழுது, மிகவும் சக்தி வாய்ந்த நிகழ்வுகள்.
ஆனால், இந்த எல்லா நிகழ்வுகளும், நம்மைப் பொருத்தவரை மிகச் சக்தி வாய்ந்தவைகளாக இருந்தாலும், நம் பூமியைப் பொருத்தவரையில், இவை யாவும் சின்ன நிகழ்வுகள். பூமியின் இயக்கத்தை இவை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. அத்துடன், சூரிய குடும்பத்தையும், எந்த விதத்திலும், அதன் இயக்கத்திலிருந்து பாதிப்பதில்லை. அதாவது, spacetime என்னும் அமைப்பை எந்த விதத்திலும் சற்றுகூட அசைப்பதில்லை. சூரியனை விட, மிகப் பெரிய நட்சத்திரங்கள், மிகப் பெரிய கருந்துளைகள், சூப்பர் நோவா என்று பல்வேறு ரட்சச அமைப்புகளை, விண்வெளி ஆராய்ச்சியில் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால், இவை யாவும், நம்மைச் சுற்றியுள்ள அமைப்புகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆக, மிகப் பெரிய விண்வெளி அமைப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, ஈர்ப்பு அலைகள். பிரபஞ்சத்தில், மிகப் பெரிய மோதல்கள் நிகழ்ந்தால் மட்டுமே, ஈர்ப்பு அலைகள் உருவாகின்றன. இவை spacetime என்னும் அமைப்பை சற்று பாதிக்கின்றன. அதாவது, பூமியின் வழக்கமான இயக்கத்தில், ஒரு சின்ன பாதிப்பு! இதனால்தான், நமக்குப் பரிச்சயமான சக்திகளை விட மிகப் பெரிய சக்தி இது.”
அ: “புரியுது சார். இவ்வகை நிகழ்வுகள் நம் சூரிய குடும்பத்தில் நடந்தால், எவ்வாறு அவை நம்மை பாதிக்கும்?”
”சுறுக்கமாகச் சொன்னால், இந்த விவாதம் செய்ய நீங்களும், நானும் இருக்க மாட்டோம். இதன் சக்தி, சூரிய குடும்பத்தையே ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும்! இந்த சன்னமான ஈர்ப்பு அலையை உருவாக்கும் சக்தி எப்படிப்பட்டது? GW150914 -வை உருவாக்கிய சக்தி, 3 சூரியத் திண்மையினால் உருவாக்கப்பட்ட சக்தி. இதைத் தெளிவாக்க ஒரு லைகோ விஞ்ஞானி இப்படி விளக்கினார். இந்தப் பிரபஞ்சத்தில் பல பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நடசத்திரத்திற்கும், ஒரு பூமி இருப்பதாகக் கொள்வோம். ஆக, பல பில்லியன் பூமிகள் நம்மைப் போலவே சக்தியைப் பயன்படுத்துகிறார்கள் என்று கொள்ளுவோம். இந்தப், பல பில்லியன் பூமிகளின், 1 பில்லியன் ஆண்டுகளுக்கான சக்தி தேவையை, இந்த 20 மில்லிநொடி நிகழ்வில் உருவான சக்தி, பூர்த்தி செய்யும்! ”
மஞ்சு: “Wow, அத்தனை சக்தியை நினைத்து பார்க்கக்கூட முடியவில்லை. சென்ற வாரம் Triangulation பற்றி விளக்குவதாகச் சொன்னீர்கள்.”
”முதல் ஈர்ப்பு அலைப் பதிவினால், பல முன்னேற்றங்கள் இருந்தாலும், மிக முக்கிய விஷயம், அது அமெரிக்காவில் மட்டுமே பதிவு செய்த ஒரு நிகழ்வு. எப்படியாவது மற்ற மையங்களும் இதில் பங்கெடுத்தால், எங்கிருந்து இந்த நிகழ்வு நேர்ந்திருக்கக்கூடும் என்று கணிப்பது எளிது. மேலும், ஒரு வருடத்திற்கு, வாணியல் விஞ்ஞானிகளின் கணிப்புபடி, குறைந்தபட்சம் 30 நிகழ்வுகள் – அதாவது கருந்துளை மோதல்கள், பல்வேறு சூரிய திண்மை அளவில் (Varying solar masses) நடக்க வாய்ப்பிருக்கிறது. இதைப், பல்வேறு ஈர்ப்பு அலைகள் பதிவுத்தளங்கள் பதிவு செய்தால், இந்த அலைகள் பற்றிய புரிதலை மேலும் அதிகரிக்க வாய்ப்பளிக்கும். இதை ஒரு புதிய துறையாகவே விஞ்ஞானிகள் பார்க்கத் தொடங்கி விட்டனர் – Gravitational Wave astronomy. அத்துடன், இந்த நிகழ்வுகளை, வெறும் ஈர்ப்பு அலைப் பதிவு மையங்கள் மட்டுமே பங்கெடுக்கக்கூடாது. இதில் ஒளி, அகச்சிகப்பு, எக்ஸ் கதிர், மற்றும் காமா கதிர்களைப் பதிவு செய்யும் பூமி மற்றும் விண்வெளி தொலைநோக்கிகள் பங்கெடுத்தால், மேலும், ஈர்ப்பு அலைகள் மூலம், பிரபஞ்சத்தின் மிகப் பெரிய அழிவு நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள முடியும் என்பது தெளிவாகியது. ஆக, ஒவ்வொரு எதிர்கால நிகழ்வும், Triangulate and analyze பண்ணுவதற்கு எளிதாக மாறுதல் அவசியம். இந்தப் புரிதலால், இத்தாலியில் உள்ள Virgo, ஜப்பானில் உள்ள KAGRA மற்றும் புதிதாக Indian LIGO, எல்லாவற்றையும் துரிதமாக பதிவு செய்யும் அளவிற்கு வளர வேண்டும்”

ம:”அடுத்த பதிவுகளுக்கு எத்தனை மாதம்/வருடம் ஆகியது? எந்த மையங்கள் இதில் பங்கெடுத்தன?”
”உடனே நடக்கவில்லை. முதலில், லைகோ Engineering mode –லிருந்து, Scientific mode –க்கு, வர நவம்பர் 2016 ஆகியது. ஜனவரி 2017 –ல், GW170104, மற்றும் ஜூன் 2017 –ல், GW170608, பதிவாகியது. இத்தாலிய Virgo மெதுவாக, பதிவு செய்யும் கட்டத்தை அடைந்தது. இம்முறை, வழக்கமான கருந்துளை மோதல் பதிவோடு நில்லாமல், நமக்குத் தெரிந்து ஒரு மிக ராட்சச வானவேடிக்கையை விஞ்ஞானிகள் பதிவு செய்தார்கள். இது விஞ்ஞானப் பதிவுகளில், GW170817 என்று அழைக்கப்படுகிறது. இதை லைகோவின் இரு தளங்கள், விர்கோ மற்றும், பல ஒளி, எக்ஸ் கதிர், காமா கதிர் மையங்கள் பதிவு செய்தன.

விர்கோவினால், இந்த நிகழ்வை பதிவு செய்ய முடியவில்லை. இந்த நிகழ்வின் blind spot –ல் விர்கோ இருந்தது. இந்த 17 ஆகஸ்ட், 2017 நிகழ்வு, 2015/16 –ல் நடந்த பதிவுகளிலிருந்து மாறுபட்டது. இதன் தொடக்கம் 140 மில்லியன் ஒளி ஆண்டுகள் தள்ளியுள்ள, NGC 4993 என்ற நட்சத்திர மண்டலத்திலிருந்து உருவானது என்று கணக்கிடப்பட்டது. ஆனால், அதன் ஆரம்பம் ஒரு கருந்துளை அல்ல. இரண்டு நியூட்ரான் நடசத்திரங்கள், ஏறக்குறைய 2.82 சூரிய திண்மை எடையுள்ளவற்றின் சேர்க்கையால் உருவான ஈர்ப்பு அலை அது. இயற்கையில், நாமறிந்தவரை மிகத் திண்மையான பொருள் நியூட்ரான் நடசத்திரங்கள். இவற்றிலிருந்து எந்த ஒளியும் வெளிவராது – இதனால், இவற்றை இறந்த நட்சத்திரங்கள் என்று சொல்வதுண்டு. பல அபூர்வ கணிமங்களான, தங்கம், ப்ளாடினம், யுரேனியம் போன்ற கனிமங்கள், இவ்வகை நியூட்ரான் நடசத்திரங்கள் சேர்க்கை மற்றும் மோதலால் உருவாகிறது. இங்கு, அதை எப்படி திட்டவட்டமாக விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள் என்று விளக்கப் போவதில்லை. இன்னொரு உரையாடலில், அதைப் பார்க்கலாம்.

இந்த நிகழ்வை 7 கண்டங்களிலும், விண்வெளியிலும், பதிவு செய்தார்கள். 70 மையங்கள் (ஒளி, காமா, அகச்சிகப்பு, எக்ஸ்) 100 நொடிகள் நீடித்த இந்த நிகழ்வைப் பதிவு செய்தன”
அ: “முதல் பதிவிற்கும், இதற்கும் என்ன முன்னேற்றம் மற்றும் வேறுபாடு சார்?”
“பல வித்ததிலும், இந்த நிகழ்வு ஒரு மிகப் பெரிய பன்னாட்டு விஞ்ஞான வெற்றி என்று சொல்ல வேண்டும். இந்தப் பதிவு இவ்வாறு நடந்தது:
- உலகெங்கும் வானவியல் ஆராய்ச்சியாளர்கள், இந்த நிகழ்வு நடக்க சாத்தியம் உண்டு என்று தங்களுடைய தொலைநோக்கியை NGC 4993 அருகே திருப்பினார்கள். இம்முறை, எதிர்பாரா விதமாக நடந்த நிகழ்வல்ல இது
- முதலில், இந்த ஈர்ப்பு அலை, விர்கோவை அடைந்தது. முன்னமே சொன்னது போல, விர்கோவால், இதைப் பதிவு செய்ய முடியவில்லை. 22 மில்லிநொடிக்குப் பின் லைகோவின் லிவிங்ஸ்டன் மையத்தை அடைந்தது. இதன் 3 மில்லிநொடிக்குப் பின், லைகோவின் ஹான்ஃபோர்டு மையத்தை அடைந்தது.
- இம்முறை மூன்று பதிவுகள் கொண்டு, பூமியின் தென் துருவத்தில் குறிப்பாக ஒரு கோணத்தில், இந்த நிகழ்வு உள்ளது என்று சில மணி நேரங்களில் கணிக்க முடிந்தது
- லைகோ பதிவு செய்த பதினாறு நொடிகளுக்குப் பின், ஒரு காமா கதிர் அறிவிப்பு, காமா தொலைநோக்கிகளுக்குச் சென்றது. ஆறு நிமிடங்கள் கழித்து, லைகோவின் கணினிகள், இது ஒரு விசேஷ நிகழ்வு என்று லைகோவின் முக்கிய விஞ்ஞானிகளுக்கு செய்தி அனுப்பியது
- ஃபெர்மி காமா கதிர் தொலைநோக்கி, விண்வெளியில் இயங்கும் அமைப்பு. ஃபெர்மி, இந்த இரண்டு நியூட்ரான் கதிர் இணைந்த 2 நொடிக்குள் ஒரு சின்ன கதிர்வெடிப்பைப் (gamma ray burst) பதிவு செய்தது. இதற்குப், பல காரணங்கள் உண்டு. இணைந்த நியூட்ரான் நடசத்திடங்களிலிருந்து வெளியாகும் காமா கதிரின் பாதை, ஃபெர்மியின் பார்வை கோணத்தில் இருக்கத் தேவையில்லை
- உலகின் பல்வேறு வானவியல் ஆராய்ச்சியாளர்கள், காமா கதிர்வெடிப்பைப் பதிவு செய்யத் தொடங்கினார்கள்.
உலகின் பல்வேறு ஒளி தொலைநோக்கிகள் NGC 4993 –ஐப் படம்பிடிக்கத் தொடங்கின. முதலில் காமா கதிர்களாக வெளியேறும் இந்த ராட்சச நிகழ்வு, பத்து மணி நேரத்தில், ஒளிப் பிழம்பாக காட்சி அளிக்கும். சமீபத்தில் வெளிவந்த Oppenheimer திரைப்படத்தில், இதை நீங்கள் கவனித்திருக்கலாம். விண்வெளியில் இருக்கும் ஹப்பிள் தொலைநோக்கியும் இதைப் படம் பிடித்தது:

ம: “முதல் பதிவிற்கும், GW170817 சக்தி அடிப்படையில் என்ன வித்தியாசம்?” ”பல வித்தியாசங்கள் உள்ளன. கீழே சின்ன பட்டியல்:
| எண் | GW140915 | GW170817 |
| 1. | இரு பெரும் கருந்துளைகளின் மோதல் | இரு சிறிய நியூட்ரான் நட்சத்திரங்களின் சேர்க்கை |
| 2 | இரு கருந்துளைகள் 63 சூரிய திண்மை கொண்டவை | இரு நியூட்ரான் நட்சத்திரங்கள் 2.82 சூரிய திண்மை கொண்டவை |
| 3. | நிகழ்வால் உருவாகிய சக்தி 3 சூரிய திண்மையை மாற்றியதால் | நிகழ்வால் உருவாகிய சக்தி .025 சூரிய திண்மையை மாற்றியதால் |
| 4. | ஈர்ப்பு அலை 200 மில்லிநொடிக்கு மட்டுமே | ஈர்ப்பு அலை 100 நொடிகள் நீடித்தது |
| 5. | ஈர்ப்பு அலை மட்டுமே பதிவு செய்யப்பட்டது | ஈர்ப்பு அலையைத் தவிர, காமா கதிர் மற்றும் ஒளிப் பிழம்பு பதிவு செய்யப்பட்டது |
| 6. | ஈர்ப்பு அலையின் மூலம் 1 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவு | ஈர்ப்பு அலையின் மூலம் 130 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவு |
| 7 | ஈர்ப்பு அலையின் பின் விளைவுகள் தெரிய வாய்ப்பில்லை – தூரம் மற்றும் கருந்துளைகள் காரணம் | விஞ்ஞான கணிப்புபடி, 10,000 பூமி திண்மை பொருட்கள் விண்வெளியில் இந்த kilonova வால் உருவாக்கப்பட்டது |
இந்த இரு நிகழ்வுகளின் ஒலி வித்தியாசத்தை இங்கே கேட்கலாம்:
GW091415
GW170817
அடுத்த வாரம் தொடருவோம்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
