சுட்ட சட்டி சட்டுவமும் கறிச்சுவையும்   

பிரபஞ்சம் மண் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஐந்தாலானது. மனிதனுக்குள்ளும் அதே ஐந்துதானுள்ளது. மண்ணாக சதை தசை தோல் எலும்பு மஞ்ஞை நீராக ரத்தம் சிறுநீர் முதலியன. நெருப்பிருக்கிறது. அதனால் வெப்பமிருக்கிறது. உடலில் காற்று இருக்கிறது. சுவாசிக்கிறோம். மனம் ஆகாயமாயிருக்கிறது..பிறப்பு -முதல் இறப்புவரை மனதில் ஆகாயத்திலிருக்கிற நட்சத்திரங்களைவிட அதிக எண்ணங்கள் தோன்றி மறைகின்றன.  எது பிரபஞ்ச வெளியிலிருக்கிறதோ அதுவே மனிதனுக்குள்ளும் இருக்கிறது.. 

உடலென்பது ஐம்பூதங்கள் கலந்த ஒரு ரசாயனக்கூடு. அதை மனம்  ஆட்டிப் படைக்கிறது.. மனம் ஆசைகளால் அலைபாய்கிறது..

எதையேனும் நினைத்துக்கொண்டேயிருக்கிறது.  ஆக மனதைக் கட்டுப் படுத்தவேண்டுமென்றால் உடலைக் கட்டுப் படுத்தவேண்டும். உடலைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும்.            

 தங்களுடைய யமம், நியமம், தாரணம்,தியானம் முதலிய பயிற்சிகளால் அகங்காரம் (EGO) மனம் (mind) கடந்து சித்தம் (will) என்ற நிலையை அடைபவர்கள்  சித்தர்கள். உடலைக் கட்டுப்படுத்தினால் மனம் ஒருமைப்படும் என்ற நோக்கில் பல்வேறு மூச்சுப் பயிற்சிகள், ஆசனங்கள் மூலம் பசி தாகத்தைக் கடந்து மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருபவர்கள் யோகிகள். கடந்தும் உள்ளுமிருக்கிற ஒன்றை பக்தி செய்து மனத்தூய்மை  அடைபவர்கள் பக்திமான்கள். நாயன்மார்கள் ஆழ்வார்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

ஏதோ ஒரு விதத்தில் உன்னத நிலையை அடைவதே இவர்களின் நோக்கம்.                  அத்தகைய உன்னத நிலையை அடைவதற்கு ஒவ்வொருவரும் ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களில் சித்தர்கள் சற்று வித்தியாசமானவர்கள்.

சித்தர் மரபு என்று தமிழ்நாட்டிலிருப்பதுபோல் பிற மாநிலங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. சித்தர்கள் தவத்தால் முனிவர்கள். தமிழால் புலவர்கள். முக்காலம் உணர்ந்த ஞானிகள். மூலிகைகளால் தங்கள் தவவலிமையால்  மக்கள் நோய் தீர்க்கும் மருத்துவர்கள். வானியல் ஜோதிடம் அறிந்தவர்கள்  அதனால் விஞ்ஞானிகள். மூடநம்பிக்கைகளுக்கெதிரானவர்களென்பதால் சீர்திருத்தவாதிகள்.

சித்தர்கள் சுதந்திரமான சிந்தனையாளர்கள். இந்திய மெய்யியலின் உலகே மாயம் வாழ்வே மாயம் என்ற கருத்தை ஏற்கிறார்கள. கர்ம வினையையும் ஏற்கிறார்கள். சித்தர்கள் சிவனைக் குறித்தும் திருமாலைக் குறித்தும் வாலையைக் குறித்தும் தங்கள் பாடல்களில் குறிப்பிட்டாலும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் தத்துவம் சார்ந்வர்கள். சனாதன ஜாதி பேதங்களை சித்தர்கள் பின்பற்றுவதில்லை.

வைதீக மரபின் பல கருத்துக்களை ஏற்பதில்லை. உதாரணத்துக்கு மறுபிறவியை சிவவாக்கியர் மறுக்கிறார்.

‘கறந்த பால் மடிப்புகா கடைந்த வெண்ணெய் மோர் புகா

விரிந்த பூவும் உதிர்ந்த காயும் மீண்டுபோய் மரம் புகா’ என்கிறார்.       

மனதைக் கடந்து சித்த நிலைக்குச் செல்லும் . ‘தந்திரமெனும் 

தலந்தனில் நின்றோர்க்கு மந்திரமேதுக்கடி’

என்று பாடுகிறார் குதம்பைச் சித்தர். 

சித்தர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டவர்கள் . போகர் நவபாஷாணங்களால் பழனி முருகன் சிலையைச் செய்கிறார். சிவவாக்கியர் நட்ட கல்லும் பேசுமோ என்று பாடுகிறார். 

நான் படித்த வரைக்கும் சித்தர் பாடல்களில் சிவாக்கியரின் பாடல்கள் என்னைக் கவர்கின்றன. நேரில் பேசுகிறாற்போல் சொல்லும் திறன், உறுதி நிறைந்த வெளிப்பாடுகள் அதற்கான காரணம்.. .  . 

 சிவவாக்கியர் பாடல்களைப் போல  – ஆனால் – வாழ்வியல் உண்மைகளை   தெலுங்கில் ஒருவர் எழுதியிருக்கிறார். அவர் பெயர் கவியோகி வேமன.

குமாரகிரி வேம ரெட்டி என்ற பெயரின் சுருக்கம். தெலுங்கில் வேம என்றால் வேம்பு என்று பொருள். வேமன சித்தரில்லை. கவியோகி என்றுதான் அழைக்கப்படுகிறார். கவியோகி வேமனவின் கதை அரசனாயிருந்து ஆண்டியானவன் கதை.

இவர் வாழ்ந்த காலம் – பதினாலாம் நாற்றாண்டு என்று ஒரு பதிவும்இன்னொரு பதிவு (1652-1730). பதினேழாம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றன. சிற்றரசர் ஒருவரின் அரண்மனையில் பணிபுரிந்த இவருடைய தந்தையார் ஒரு சமயம் கொண்டவீடு என்ற கிராமத்துக்கு குடிபெயர்கிறார். அங்கு அவர்களுக்கு ஏராளமான நிலங்களிருத்தன. வசதியான குடும்பத்தில் பிறந்த வேமன பாலப் பிராயத்தில் சாப்பாட்டுப் பிரியர். இளமையில்பெண் பித்தர். தாசிகளின் வீடே கதியென்று கிடந்தவர்.  தந்தையின் மறைவுக்குப் பிறகு அண்ணனுடன் வாழ்ந்தவர். அண்ணி மீது பெரும் மரியாதை கொண்டவர். ஒருநாள் வேசிக்குப் பரிசு தர அண்ணியிடம் மோதிரம் கேட்கிறார். அச்சமயம் அவருடைய அண்ணி மோதிரத்தை வேமனவுக்குத் தருகிறார். கூடவே இடித்துரைக்கிறார். வேமன வேசிகளை மறக்கிறார். திருந்துகிறார்.  வேமனவுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கை அமைகிறது. 

வெறுத்துப்போன  வேமன நாடோடியாய் திரிகிறார். அப்போது லம்பிகா சிவயோகி என்பவரிடம் யோகம் கற்று அபார தேர்ச்சி பெறுகிறார்.

வேமனவின் குரு லம்பிகா சிவயோகி வீர சைவர். வீரசைவர்கள் இந்து மதத்தில் ஒரு பிரிவினர். பன்னிரண்டாம்  நூற்றாண்டில் பசவன்னா என்பவரால் உருவாக்கப்பட்ட பிரிவு. கர்நாடகாவில் லிங்காயத் என அழைக்கப்படுபவர்கள் வீரசைவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். சிவனை மட்டுமே வழிபடுபவர்கள்., உருவ வழிபாடு, ஜாதி வேறுபாடு இரண்டும் இவர்களுக்கு கிடையாது. வேமன  குருவின் வீரசைவ மரபைப் பின்பற்றுகிறார். ‘அசல’ என்ற மெய்யியல்தத்துவத்தை கடைப் பிடித்து வாழ்கிறார். 

இவருடைய கல்லறை அனந்தபூர் மாவட்டத்தில் கதிரி என்ற ஊரிலிருக்கிறது.

வேமன யோகியாகவும் துறவியாகவும் வாழ்ந்தாலும் போலித் துறவிகள் மீது அவருக்கு மரியாதையில்லை. பொருளீட்ட எந்த தொழிலும் செய்யாத பல உதவாக்கரைகள் யோகிகளாகவும் துறவிகளாகவும் வலம் வருகிறார்கள். முட்டாள்கள் அவர்களை வணங்குகிறார்கள்’ என்பது வேமனவின் கருத்து. பெண்டாட்டி கேட்டாளென்பதற்காக இல்லாத பொன்மானைத் தேடிப்போன ராமன் ஒரு முட்டாளென்று விமரிசனம்  செய்கிறார்.

வேமனவின் பாடல்களுக்கு வருவோம். சுமார் 5000 பாடல்கள் எழுதியதாக ஒரு குறிப்பு சொல்கிறது.. வேமன தன் பாடல்களை உடைந்த பானைத் துண்டுகளில் கரியாலோ சுண்ணாம்பாலோ எழுதி எறிந்துவிட்டுப் போய்விடுவாரென்றும், அவரைப்பற்றி அறிந்தவர்கள் அவற்றைச் சேகரித்து அடுத்த தலைமுறைகளிடம் விட்டுச் சென்றார்களென்றும் முந்தைய  நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழில் வெளியான ஒரு புத்தகத்தில் படித்தேன்.அது உண்மையாக இருக்கலாமென்று தோன்றுகிறது. ஏனென்றால் உ.வே.சா அவர்கள் ஊர்  ஊராகச் சென்று சங்க இலக்கியங்களைச் சேகரித்தது போல சி.பி.ப்ரௌன் என்ற ஆங்கிலேயர்  பெல்லாரி கடப்பா நெல்லூர் விசாகப்பட்டினம் சென்னையென்று பல ஊர்களுக்குச் சென்று பலரைச் சந்தித்து வேமனவின் பாடல்களைச்சேகரித்து 1829ஆம் ஆண்டில் 693 பாடல்களை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். இதுவே வேமனவின் முதற்பாடல் தொகுப்பு. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வேமன ஆந்திர மக்களால் பரவலாக அறியப்படுகிறார்.. அதன் பிறகு வேமனவின் பாடல்கள் நிறைய வெளிவந்திருக்கின்றன

வேமனவின் பாடல்கள் பாமரனும் புரிந்து கொள்ளும் எளிமை மிக்கவை. பேச்சுத் தெலுங்குக்கு நெருக்கமானவை. சிவவாக்கியரின் பாடல்களைப் போலவே அங்கதம் எளிய வார்த்தைகள், மத சமூக அவலங்களைச் சாடுதல், மறுபிறவி மறுப்பு, ஜாதி மறுப்பு நிறைந்தவை.. லௌகீக வாழ்க்கையைக் குறித்தவை.  

வேமனவின் பாடல்களை பொருள் ஒளிந்திருக்கும் சாடு பத்யமென்றழைக்கிறார்கள்.

இவர் சதகம், மற்றும் சிறுவர்களுக்கான (ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் போன்றவை) பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

வேமனவின் பாடல்கள் ஆடவேலடி (நடனமாது) என்ற தெலுங்கு பாவகையைச் சார்ந்தது.  நான்கு வரிகள் கொண்டது. பட்டினத்தாரின் திருவேகம்ப மாலையில் ஒவ்வொரு பாடலும் இறைவா கச்சி ஏகம்பனே என்று முடிவதுபோல வேமனவின் பாடல்கள் ‘விஸ்வதாபிராமா வினுரவேமா’ என்று முடியும்.

கர்நாடக சங்கீத பாடல்களில் முத்துசாமி தீட்சிதர் ‘குருகுக’ என்பதைத் தன்னுடைய முத்திரையாக அமைப்பார். அதுபோல ‘விஸ்வதாபிராமா வினுரவேமா’ என்பது வேமனவின் முத்திரை. இதை தெலுங்கில் மகுடமென்பார்கள். விஸ்வதாபிராமா என்பது விஸ்வத அபிராம என்று பிரியும். 

விஸ்வமென்றால் ப்ரம்மாண்டம் அல்லது பிரபஞ்சமென்று பொருள்படும். அபிராம என்றால் நேசிப்பவனென்று பொருள். பிரபஞ்சத்தை நேசிப்பவனென்று பொருள்.   

அபிராமாவைக் குறித்த வேடிக்கையான ஒரு பதிவுண்டு. வேமனவுக்கு அபிராமா என்ற ஒரு நண்பர் இருந்தார். அவரும் வேமனவும் பல யோகிகளைத் தேடிப் போனபோது ஒரு யோகி அபிராமாவை  தீட்சை தருவதற்கு மறுநாள் வரச் சொன்னாராம். வேமன பிராமாவை  தந்திரமாய் ஏதோ ஒரு சாக்கில் வீட்டில் இருக்கவைத்துவிட்டாரம். நண்பருக்குப் பதிலாக தான் போய் யோகியிடம் நின்று ‘அபிராமாவால் இன்று வர முடியவில்லை. நான் வந்திருக்கிறேன்.எனக்கு தீட்சை கொடுங்களென்று கேட்க முக்தியடையும் தருவாயிலிருந்த யோகி,  வேமனவிற்கு தீட்சை கொடுத்தாராம். பிறகு வேமன அபிராமாவிடம்  மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம். அவர் நினைவாக தன்னுடைய பாடல்களில் அபிராம என்ற பதத்தை சேர்த்திருக்கிறாரென்று ஒரு பதிவு சொல்கிறது.          

சிவவாக்கியர் உலோகங்களை மூலிகைகளால் பொன்னாகத் தெரிந்தவர். வேமனவும் ஸ்வர்ண ரசாயனம் (ஆல்கெமி – Alchemy) தெரிந்தவர். பாடல்களில் அதற்கான குறிப்புகளிருக்கின்றன. தகரத்தை பாலில் கொதிக்கவைத்து வெள்ளியாக்கலாம். வெள்ளைக் கரையான் புற்றிலுள்ள செம்மண்ணில் தங்கம் மறைந்திருக்கும். ‘துஷ்டா’ என்ற செடியின் பாலை செப்புத்தகடுமீது ஊற்றினால் செப்பு தங்கமாகும். வாழைப்பழத்தின் தோல், முதிர்ந்த வேம்புப்பட்டை, கருப்பு சர்க்கரை, பாதரசம் முதலியவற்றை சரியான அளவில் கொதிக்கவைத்து கலந்தால் தங்கம் செய்யலாமென்று சில பாடல்களில் குறிப்பிடுகிறார். அதேசமயம் ரசாயன சேர்க்கைகள் நன்கு நெரிந்தவர்களாலேயே இந்த வித்தையில் வெற்றி காணமுடியும். அறைகுறை அறிவுடன் இதை முயற்சிக்கவேண்டாமென்றும் எச்சரிக்கிறார். (உலோகங்களைப் பொன்னாக்கும்போது  நிகழும் ரசாயன மாற்றங்கள் அதிலிருந்து வரும் ஆவி,புகை முதலியன ஒருவரை பைத்தியமாக்கிவிடுமென்ற நம்பிக்கையும் அந்தக் காலத்திலுண்டு)  

தெலுகு தேசத்தில் வேமனவின் பாடல்கள் ஒன்றிரண்டாவது தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். கன்னடம் தமிழ் ஆங்கிலத்தில் பல பாடல்கள் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. வேமனவின் பாடல்கள் தெலுகு தேசத்தில் உயர்நிலைக் கல்வி பாட புத்தகங்களில் இடம் பெற்றிருக்கின்றன. 2006ல் ஆந்திர அரசு வேமனவைக் கௌரவிக்கும் வகையில் கடப்பாவில் யோகி வேமன பல்கலைக் கழகம் துவங்கியிருக்கிறது  .

இனி கவியோகி வேமனவின் பாடல்கள் .  

(தெலுங்கு மூலம் – ஆங்கிலவழி தமிழாக்கம்)

லாவண்யா சத்யநாதன் 

1
பசுக்களின் நிறங்கள் பலவிதம்
பாலின் நிறம் ஒன்றே
மலர்களின் வகைகள் பலவிதம்
பூஜை ஒன்றே
பலவிதமாகக் காணினும்
பரம்பொருள் ஒன்றே
விஸ்வத்தின் நேசனே வேமன கேளாய்!

          2 

காலணியிலொரு கல்லும் காதருகில் ஈயும்
கண்ணில் மகரந்தமும் காலில் முள்ளும்
சொற்போர் நடக்கும் வீடும் தாங்க முடியாதவை
விஸ்வத்தின் நேசனே வேமன கேளாய் !
3
திருமலைக்குச் செல்வதால்
முஸ்லிம் வைணவனாக முடியாது
காசிக்குச் செல்வதால்
பன்றி யானையாக முடியாது
கோதாவரிக் குளியலால் நாய் சிங்கமாகுமா?
விஸ்வத்தின் நேசனே வேமன கேளாய்!
4
அகத்தூய்மையில்லா ஆசாரமெதற்கு?
துலங்காத கலயத்தில் சமையலெதற்கு?
சித்த சுத்தியில்லா சிவபூஜை எதற்கு?
விஸ்வத்தின் நேசனே வேமன கேளாய்!

             5

வெண்ணீறு மறைக்குமோ கள்பானை வாடையை?
தோளின்மேல் பூணூலணிவதால் மட்டும்
ஒருவன் இருபிறவியாளனாவானா?
விஸ்வத்தின் நேசனே! வேமன கேளாய்!
6
அறிவிலிக்கு அதிகாரமளித்தால்
அறிவாளிகளை அதிகாரத்திலிருந்து நீக்குவான்
காலணியை மெல்லும் நாய்க்கு
கரும்பின் சுவை தெரியுமா?
விஸ்வத்தின் நேசனே வேமன கேளாய்!
7
ஈச்சங்கொட்டையளவு மன்மதபீடத்துக்கு
இச்சைப்படுபவன் அற்ப மனிதன்
ஆனால், அதை வென்ற தீரன் எவனடா?
விஸ்வத்தின் நேசனே வேமன கேளாய் !
8
பெண்களின் நகில்களை
பூச்செண்டெனப் புகழ்வார் (கவிஞர்)
பூச்செண்டு வியர்வை வாடை வீசுமா?
விஸ்வத்தின் நேசனே வேமன கேளாய் !
9
தூமைக்காலப் பெண்ணிடம்
தூய்மை அகன்றதென்று கூறுவோர்
தூமைக்கால பெண்டிரை
தொலைவிலே நிறுத்துவோர்
பத்துத் திங்கள் தூமையும்
சேயெனப் பிறந்ததும்
முத்தம் தந்து கொஞ்சுதல்
எப்படியென்று கேளடா
விஸ்வத்தின் நேசனே வேமன!
10
பசுவிறைச்சி உண்ணவைத்து பாமரரை
இஸ்லாத்துக்கு மாற்றினார் சுல்தான்
பெண்ணின் உதடுகளைச் சுவைக்க வைத்து
ஜாதிகளின் ஒழுக்கம் கெடுத்தான்
மலர்க்கணை தொடுக்கும் கடவுள்
விஸ்வத்தின் நேசனே வேமன கேளாய்!
11
மனைவியை ஒருவன் தலையில் வைத்தான்
மனைவியை ஒருவன் வாய்க்குள் வைத்தான்
மனைவியை ஒருவன் இதயத்தில் வைத்தான்
பெண்களுக்காக இப்படித் தடுமாறினார்கள்
விஸ்வத்தின் நேசனே வேமன கேளாய்!
12
உப்பில்லாத கறி எப்போதும் சுவைக்காது
பருப்பில்லாத உணவில் புரதச்சத்திருக்காது
கடனில்லாதவனே பெரிய செல்வந்தன்
விஸ்வத்தின் நேசனே வேமன கேளாய் !


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.