ஐவர் – தமிழின் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்கள்

தமிழில் சமீபகாலத்தில் புனைவை எழுத வருகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கின்றது.  ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமானவர்களில் பெரும்பான்மையினர்,  எழுத்துக்கலையைக் கற்றவரோ அல்லது கற்பிப்பவர்களாகவோ இருப்பது போலல்லாமல்,  கல்விப்புலம் சாராத சாதாரண பின்னணியிலிருந்தும் தமிழில் பலர் எழுத முன்வருவது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் என்றே சொல்ல வேண்டும்.

சமகால உலக இலக்கியத்தை எடுத்துக் கொண்டால், குறிப்பாக ஜப்பான், கொரிய இலக்கியங்களில் பான்டஸிகூறுகள் அதிகம் உள்ளன.  நாவலில் அல்புனைவுத் தன்மைகள் அதிகம் உள்ளன.  டிவிட்டர் நாவல் வந்து விட்டது.  சென்ற வருட புக்கர் பரிசை வென்றது முழு உருவக நாவல். யுத்திகளில் பல மாறுதல்கள் செய்து நூல்கள் வருகின்றன.  போரா சுங் அபத்தவியலை மையமாகக் கொண்ட சிறுகதைத் தொகுப்பைச் சமீபத்தில் வெளியிட்டார்.  ரெபெக்கா யாரோஸ்  காதல்கதையையும் பான்டஸியையும் இணைத்து Romantasy என்ற புதுவகைமையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.  நம்மைச் சுற்றி ஏராளமான மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  

மருத்துவத்துறையையும் லண்டனில் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் பல சிக்கல்களையும் பிரியா விஜயராகவன் ‘ அற்றவைகளால் நிரம்பியவள்’ நாவலில் எழுதினார். நாவல் முழுதும் தகவல் தொழில்நுட்பத்தை மையமாகவைத்து கார்த்திக் பாலசுப்பிரமணியன் நட்சத்திரவாசிகள் நாவலை எழுதினார். அவரது தரூக் நாவல் மாற்றத்திற்கான பாதையில் அவர் தொடர்ந்து செல்வதன் அறிகுறி.

கண்மணியின் ‘இடபம்’ ஒரு முன்னெடுப்பு.  பங்குச்சந்தையின் நுட்பங்களுடன்,  இன்றைய பெங்களூர் பெண் பிரதிநிதியின் குணாதிசயத்தையும் கலந்து எழுதப்பட்ட நாவல்.   வாசு முருகவேலின் அன்னா சிதிலமடைந்த தேசத்தின் சிதறிய நினைவுகள்.  சிறிய நாவலில் எல்லாவற்றையும் அவரால் அடைக்க முடிந்தது. இது போல், தமிழில் பழகிய தடத்தை விட்டு விலகத் துடிக்கும் ஐவர் குறித்த பார்வை இது.

மயிலன் ஜி சின்னப்பன்

மயிலன், பிரபாகரின் போஸ்ட்மார்டம் என்ற நாவலின் மூலமாகவே தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமாகிறார்.  இந்த நாவலின் முக்கிய குணாதிசயம்

அதன் உலகத்தன்மை.   ஆங்கிலத்தில் எந்த நாட்டவரும் நெருக்கமாக உணரமுடியும், அதுபோக உள்ளடக்கத்தினால் அது ஒரு புக்கர் மெட்டிரியல்.

‘முப்போகம்’  நாவல் இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒன்றாகக் கலந்து கதை நகர்த்துகையில் ஒரு காலமயக்கத்தை வாசகருக்கு ஏற்படும் யுத்தி.  ஒருவகையில் எழுத்தாளர் வாசகரை உரிமையுடன் கிண்டல் செய்யும் பாணி.  முதல்நாவலின் பிரம்மாண்டத்தில் இதற்கு அதிக வெளிச்சம் விழவில்லை.

ஆரம்பத்தில் வெகுநீண்ட சிறுகதைகளை  எழுதிய மயிலன்,  பலமுறை எடிட் செய்யப்பட்ட,  கவனம் குவிக்கப்பட்ட கதைகளை எழுதுவதற்கு சான்றாக ஊடுவெளி, இருள் ஊடுருவும் சாளரம், வீச்சம், சரிவு’  போன்ற சிறுகதைகளைச் சொல்லலாம்.

மருத்துவரைப் பிரதான கதாபாத்திரமாக வைத்து மயிலன் எழுதிய ‘நிரபராதம்’  போன்றவை  தொழில் சமூகவாழ்வை மொத்தமாகக் கொத்தித் தின்பதை நுட்பமாகச் சொல்லும் கதைகள்.

மயிலனின் புதிய நாவலான ‘நீஸெவின் வேர்க்கனி ‘  வரலாற்று நாவல்களில் புதிய பாதையை மேற்கொள்ளும் பயணம். கதைமாந்தர்களால்,  உள்ளடக்கத்தால்,  சொல்லும் யுத்தியால் என்று எல்லாவற்றிலும் புதுமையான நாவல்.  மற்றுமொரு விஷயம் என்னவென்றால்,  இதுவும் உலகத்தன்மை வாய்ந்த நாவல், அவசியம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியது.  மயிலனின் ஆகச்சிறந்த படைப்பு இனிமேல் தான் வரப்போகிறது என்று எனக்கு உள்ளுக்குள் இருக்கும் கௌளி சொல்லிக் கொண்டே இருக்கிறது.

விஜய ராவணன்

புனைவின் எல்லைகளை எப்படி விஸ்தரிப்பது?  முதலாவது,  கதைகள் வேறு நாட்டில் நடப்பதாகக் கதைக்களங்களை யதார்த்தமாகச் சித்தரிப்பது.  அந்த நாட்டில் சிலநாட்களேனும் இருந்து கூர்மையாக அவதானிப்பு செய்திருக்க வேண்டும்.  இம்முறை ஜே.சி.பி விருதை வென்ற உபமன்யு சட்டர்ஜியின் கதை இத்தாலியத்துறவியின் பங்களாதேஷ் அனுபவங்கள்.  இத்தாலிக்குச் செல்லாமலேயே எழுதியது.  ஆனால் அவர் எழுதுவதற்குப் பிரதான கதாபாத்திரமான இத்தாலியத் துறவியே உறுதுணையாக இருந்தார்.  எல்லோருக்கும் இது அமைவதில்லை.  இரண்டாவது யுத்தியில் மாறுதல்.  மூன்றாவது மொழிநடையில் வித்தியாசம்.  நான்காவது வித்தியாசமான கருக்கள் கொண்ட கதைகள்.  விஜய ராவணன் இந்த நான்கையும் கலந்து கதைகளை எழுதுகிறார்.

முதல் தொகுப்பை எடுத்துக் கொண்டால் பத்துமே ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதைகள்.  பல யுத்திகளையும் பயன்படுத்தி இருந்தார்.  ஆனால் இரண்டாவது தொகுப்பான ‘ இரட்டை இயேசு’  இவரை மற்ற எழுத்தாளர்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்திய தொகுப்பு.  இவை தமிழில் எழுதப்பட்ட அயல்நாட்டுக் கதைகள் மட்டுமல்ல,  மொழிநடை, யுத்திகளில் நல்ல முதிர்ச்சி கொண்ட தொகுப்பு.

அவருடைய பச்சை ஆமை நாவல்,  மாற்றத்தின் பாதையில் மற்றுமொரு கிளைச்சாலை.  அத்தியாத்திற்கு அத்தியாயம் ஜானர் மாறும் சிறிய நூல்,  தமிழில் இதுவரை வந்திராத கதைக்களத்தைக் கொண்டது.

கனகராஜ் பாலசுப்பிரமணியம்

இவரது முன்னோர் தமிழகத்திலிருந்து நான்கு தலைமுறைகளுக்கு முன் கர்நாடகத்திற்கு சென்றவர்கள்.  தமிழைத் தன்விருப்பால் கற்றுக் கொண்டவர் கனகராஜ்.

வாட்டர்மெலன் என்ற சிறுகதைத் தொகுப்பு  இவர் கன்னடத்தில் எழுதி கே.நல்லதம்பியால் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.  தொகுப்பின் கதைகள் கர்நாடகத்திற்குப் புலம்பெயர்ந்த தமிழரின் வாழ்வியலையும், அரபுநாட்டிற்குச் சென்ற இந்தியர்களின் அலைக்கழிப்பையும் பேசுபவை.

அல்கொஸாமா நாவல் அரபுநாட்டு பதூவீக்கள் சமூகத்தின் நம்பிக்கைகள், ஆசாபாசங்கள், வன்மங்கள், உணவுப்பழக்கங்கள்,

அலைக்கழிப்புகள், போராட்டங்களைப் பின்நவீனத்துவ கதைசொல்லலில் சொல்வது. உள்ளடக்கத்தினால் மட்டுமல்ல,

கதை சொல்லும் முறையாலும் இது தமிழ்புனைவிற்குப் புதியது. அரபுப்பழங்குடிகளின் வாழ்வு நவீன உலகில் சிக்கலுக்குள்ளாவதைச் சொல்வதோடு இந்தியர்கள் அங்கு சந்திக்கும் இன்னல்களையும் சொல்வது.  Zadie Smith பாணியில் Hysterical realism யுத்தியில் எழுதப்பட்ட முதல் தமிழ்நாவல் இது.  இவருடைய குறுநாவலான பாலைவனத்தின் ஐந்தாம் சுவர் அபத்தவியல் யுத்தியை மையமாகக் கொண்டது.  ‘நில நகங்கள்’  என்ற சிறு நாடகம் அரபுநாட்டில் இந்திய பாகிஸ்தானி இருவரை வித்தியாசமான சூழலில் ஒன்றாக இருக்க வைக்கும் கதை.

தூயன்

தமிழில் பரிட்சார்த்தமாகத் தொடர்ந்து எழுதுபவர்களில் ஒருவர் தூயன்.

 பா. வெங்கடேசனின் புனைவுலகத்தால் பாதிக்கப்பட்டவர், மிலன் குந்தரேயின் ஆக்கங்களால் கவரப்பட்டவர்.

‘இருமுனை’  இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.  ஏழு கதைகள் ஒரு குறுநாவல் கொண்ட தொகுப்பில் ஒன்றுக்கொன்று தொடர்பு இன்றி வேறுவேறு பரிசோதனை முயற்சிகள் அதற்கு ஒத்துழைக்கும் மொழி என்று வியப்பை ஏற்படுத்தும் தொகுதி. உண்மையான நிகழ்வுகளின் தளத்தைப் பயன்படுத்தி யதார்த்தமான, வசீகரிக்கும் மொழியில் சொல்லப்பட்ட கதைகள். 

வாசகன் விஸ்தரிக்கும் வாய்ப்பைக் கொடுத்து கதைகள் நகர்கின்றன. 

இவரது நாவல் ‘கதீட்ரல்:  தமிழில் புதிய முயற்சி. ஆங்கிலக் காலனியாதிக்க காலத்தில் நடைபெறும் இந்த நாவலில் மேலைச் சிந்தனைகளும் இந்தியத்தத்துவ மரபும் இடைவிடாது ஒரு உரையாடலை நடத்திக் கொண்டே இருக்கின்றது. தூயனின் மொழிநடை இது போன்ற நாவல்களை எழுதுவதற்கு மட்டுமன்றி, புனைவுவெளியின் எல்லைகளை வாசகர்கள் அவரவர் விருப்பம்போல் விரித்துக்கொள்ளும் வண்ணமும் கச்சிதமாக அமைந்திருக்கிறது.  பாண்டஸி கதைகளின் அதிகபட்ச சாத்தியத்தை வெற்றிகரமாகக் கையாண்ட பிரதி.

இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘டார்வினின் வால்’  வரலாறும், புனைவும், நிஜமும், கனவுநிலையும் ஒன்றையொன்று பிரிக்கவியலாது ஒன்றரக்கலந்த கதைகள்.  பல தத்துவங்களைக் கதைகளின் இடையில் நுழைத்திருப்பார் தூயன்.  பல சாத்தியங்களுக்கான வாசிப்பை ஏற்படுத்திக் கொடுப்பவை தூயனின் கதைகள்.

மாஜிதா

மாஜிதா அதிகம் எழுதவில்லை.  இலங்கையில் பிறந்து தற்போது இங்கிலாந்தில் வசிப்பவர்.   சட்டத்துறையில் பணியாற்றுபவர்.

மாஜிதாவின் ‘ பர்தா’  நாவல் உள்ளிருந்து ஒலிக்கும் கலகக்குரல் என்று சொல்லி சாதாரணமாகக் கடந்துவிட முடியாது.  பர்தா வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதை மட்டும் அது பேசவில்லை.  பர்தா அணிந்தால் தான் நல்லபெண் என்று பலர் திடமாக நம்புவதையும் அதனால் மேற்கத்திய நாடுகளில் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அத்துடன் புதிய தலைமுறைப் பெண்களில் சிலர் இது நம் பாரம்பரியம் என்று விரும்பி ஏற்பதையும் குறிப்பிட்டிருந்தார்.  ஒரே பிரச்சனையை முந்நூற்று அறுபது டிகிரி கோணத்தில் ஆராயும் மிகச்சிறிய நாவல்.

அதை விட சமீபகாலமாக இவர் எழுதிவரும் சட்டம் சம்பந்தமான சிறுகதைகள் தமிழின் புனைவெல்லையை வேறொரு வகையில் விஸ்தரிப்பவை.  ஆசிய மனம் மேற்கத்திய கலவைக் கலாச்சாரத்தில் இயங்குவதையும்,  ஆவணங்கள் இல்லாது புலம்பெயர்ந்தோரின் சிக்கல் உட்பட பல சட்ட சிக்கல்களை அந்தக் கதைகளில் கொண்டு வருகிறார்.  தமிழுக்கு இது புதிது.

இவர்கள் ஐவரிடமும் நான் காணும் பொதுமைப்பண்பு என்னவென்றால் எழுதுவதென்பது மிகவும் சீரியஸான வேலை என்பதை நன்கு உணர்ந்திருப்பது.  பழைய வெற்றிகளைத் தலைக்குள் புகவிடாது திருத்தங்களுக்கான சாத்தியங்களைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருப்பது.   காலையில் தோன்றிய வெளிச்சக்கீற்றைக் கதையாக மாற்றி மாலைக்குள் பத்திரிகை மெயிலுக்கு அனுப்ப முயற்சிக்காது பிரதியில் தொடர்ந்து திருத்தம் செய்வது.   எல்லாவற்றுக்கும் மேலாக I have arrived என்ற கற்பிதத்தை வரவிடாதது.  புதிதாக எழுத வருபவர்கள் இதையே கடைபிடித்தால் இந்த எண்ணிக்கை ஐம்பதாக மாறுவது மிக எளிதாக நடக்கக்கூடிய ஒன்று.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஐவர் – தமிழின் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்கள்”

  1. நல்ல தொடக்கம், சரவணன். என் பட்டியலில் இவர்களோடு பிற இளைய தலைமுறை நண்பர்கள் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரு நேர்த்தியான சிறுகதை எழுதியிருக்கிறார்கள். சட்டென்று சொல்லச் சொன்னால் கலைச்செல்வி என்பேன். அற்புதமான காந்திய எழுத்தாளர்.

    – இன்னும் ஒருவர். படித்து முடித்து எழுந்த பிரமிப்பு அகலவில்லை. அனாகத நாதம் எழுதிய செந்தில் ஜகந்நாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.