தனியன் – எம். கோபாலகிருஷ்ணனின் சிறுகதை பற்றி
நம் அன்றாட வாழ்வில் நாம் எத்தனையோ மனிதர்களைக் கடந்து செல்கிறோம். பலர் நினைவில் நிற்பதில்லை. நல்ல இலக்கியப் படைப்புகள், இப்படி சமூகத்தின் விளிம்பில், மெளனமாக வாழும் ஒரு தனிமனிதனின் ஆழமான அக உலகிற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. அப்படிப்பட்ட ஒரு நுட்பமான, மனதைத் தொடும் சிறுகதைதான் M.கோபாலகிருஷ்ணனின் “தனியன்”.
இந்தக் கதையின் நாயகனுக்கு 47 வயது. திருமணம் ஆகவில்லை. அம்மா, அண்ணன் தம்பிகள் , அவர்களுடைய மனைவிகள் குழந்தைகள் என கூட்டுக்குடும்பமாக திருப்பூரில் வசிக்கிறார். கோவையில் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை செய்கிறார். அவருடைய வாழ்வில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது கதை. பெரும்பாலும் அவரது அக ஓட்டம் வழியாக விரிகிறது.
உறவுகள் சூழ வாழ்கிறார். ஆனால், உண்மையில் அவர் தனியன்தான். எப்படி? கதை தொடங்குவதே ஒரு தற்காப்புடன்தான்! ஒரு பழைய தோழி சந்திக்க வருகிறார் என்று தெரிந்ததும், “நான் இல்லைன்னு சொல்லிடுமா” என்று கூறி மாடி அறைக்குள் விரைந்து கதவைத் தாழிட்டுக் கொள்கிறார். தாயிடம் அவர் கூறும் இந்த ஒற்றை வரியிலேயே, வெளி உலகிலிருந்தும், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் பார்வையிலிருந்தும் அவர் எவ்வளவு தூரம் விலகி நிற்க விரும்புகிறார் என்பது தெளிவாகிறது.

இந்த ஒதுங்குதல் வெறும் அறைக்கதவை மூடுவது மட்டுமல்ல, தன் மனக்கதவை மூடுவதும்தான். சில நேரங்களில் இது அவரது சொந்தத் தேர்வாக இருக்கலாம்; ஆனால் பெரும்பாலும் அவரைச் சுற்றியுள்ள குறுகிய மனப்பான்மையும், சமூகத்தின் சில மதிப்பீடுகளுமே அவரை இந்த உணர்வு ரீதியான தனிமைக்குள் தள்ளிவிடுகின்றன.
இந்தத் தனிமையின் சுவருக்குப் பின்னால் இருப்பது வெறுமையா? அங்கே அடக்கிவைக்கப்பட்ட ஏக்கங்களும், கூர்மையான அவதானிப்புகளும் நிறைந்த ஓர் ஆழமான உலகம் இருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு அலைபேசியில் ஒலிக்கும் ஒரு பெண் குரல், அவரை எவ்வளவு இளமையாக உணர வைக்கிறது! ஆனால், அந்த உற்சாகம் உடனடியாகப் பயமாக மாறுகிறது. “அவள் என்ன கேள்விகள் கேட்பாளோ?” என்ற தயக்கம் அவரை ஆட்கொள்கிறது. ஒரு உறவுக்காகவும், துணைக்காகவும் அவருக்குள் தவிப்பு எழுந்தாலும், அவருள் நிறைந்திருக்கும் ஆழ்ந்த கசப்பும் சலிப்பும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் செய்து விடுகின்றன.
இந்த ஏக்கத்தை ஆசிரியர் நேரடிச் சொற்களில் விவரிப்பதில்லை. தெருவில் தோளோடு தோள் சேர்த்து செல்லும் இளையவர்களை அவர் கவனிப்பது, தொடர்பற்றுப்போன உறவுகளை நினைத்துப் பார்ப்பது, இது போன்ற மெளனமான தருணங்களில்தான் அவரின் அடக்கப்பட்ட ஆசைகளும், வாழ இயலாமல் போன வாழ்க்கையின் வலியும் வெளிப்படுகின்றன.
இந்த ஏக்கத்திற்கு என்ன ஆனது? வாய்ப்புகளே வரவில்லையா? வந்தன! அஞ்சல் வழிக் கல்வியில் பழகிய அனு, வங்கியில் சந்தித்த பெண், கோயிலில் சந்திக்கவிருந்த பெண்… ஆனால், ஒவ்வொரு முறையும் என்ன நேர்கிறது? தயக்கம், பயம், அல்லது வெளி நபர்களின் குறுக்கீடு! சில சமயம் அவரே கூட அந்த வாய்ப்புகளை நழுவ விட்டிருக்கலாம். கனவுகள் கனவுகளாகவே கரைகின்றன; ஏக்கம் மட்டும் தீராமல் தொடர்கிறது.
இப்படித் தன் அக உலகப் போராட்டங்களோடும், நிறைவேறாத ஆசைகளோடும் வாழும் அவருக்கு, வெளி உலகமாவது ஆதரவாக இருக்கிறதா? இல்லை. சொந்த இல்லத்திலேயே அவர் படிப்படியாக அந்நியமாகிவிடுகிறார். இதில் மிக முக்கியமான, மனதை உறுத்தும் ஒரு காட்சி இடம்பெறுகிறது. அவர் தன் சகோதரர்களின் பெண் பிள்ளைகளைத் தன் சொந்தப் பிள்ளைகள் போலக் கருதிப் பாசத்துடன் பழகுகிறார், கணக்குப் பாடம் எடுக்கிறார். ஆனால், அந்தப் பிள்ளைகள் வயதிற்கு வந்ததும், குடும்பத்தினர் கூடிப் பேசுகின்றனர். திருமணமாகாத சித்தப்பா, வளரும் பெண்களுடன் மிக நெருக்கமாகப் பழகுவது சரியல்ல, “நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள்” என்று சமூகத்தின் பார்வைக்கு அஞ்சி, அவரை அந்தப் பிள்ளைகளிடமிருந்து விலகி இருக்கச் சொல்கிறார்கள். இனி வகுப்பு எடுக்க வேண்டாம் என்கிறார்கள்.
அப்போது, அவரின் அண்ணி (சியாமளா) ஏதோ நியாயப்படுத்த முற்படுகிறார், “நீங்கள் தவறாக நினைக்காதீர்கள்…” என்று தொடங்குகிறார். வழக்கமாக எதையும் அமைதியாகக் கேட்டுக்கொள்ளும் நாயகன், அப்போது ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர் வெறுமனே தன் அண்ணியைத் திரும்பிப் பார்க்கிறார். அந்தப் பார்வை! அதில் என்ன ஆற்றல் இருந்ததோ, அண்ணி பேச்சை அப்படியே நிறுத்திவிடுகிறார். அந்த ஒற்றைப் பார்வை போதுமானதாக இருந்தது. அதுவரை அவர் மனதிற்குள் அடக்கி வைத்திருந்த அத்தனை வலியும், அவமானமும், ‘போதும், இதற்கு மேல் கேட்பதற்கோ, சொல்வதற்கோ ஒன்றுமில்லை’ என்று சொல்வது போல அந்தப் பார்வை உணர்த்துகிறது. இது, அவரின் வழக்கமான செயலற்ற நிலைக்கு மாறாக, தன் நிலையை ஒரு கணம் மெளனமாக ஆனால் ஆழமாக அவர் வெளிப்படுத்தும் ஒரே தருணம்.
உண்மையில், ஒரு துணைக்காக ஏங்கும் தனித்த ஆண்களின் இந்த அகப் போராட்டமும் வலியும் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டிற்கு மட்டும் உரியதல்ல. உலக இலக்கியத்திலும் இதன் பிரதிபலிப்பைக் காணலாம். ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற ‘வெண்ணிற இரவுகள்’ (White Nights) கதையை உதாரணமாகக் குறிப்பிடலாம். அங்கும், ஒரு கனவுலகில் வாழும் தனிமையான நாயகன், ஒரு பெண்ணின் அன்பிற்காக ஏங்குகிறான். அவனுடைய ஆசைகள், ஒரு பெண்ணின் அன்பைப் பெற முடியாமல் போகும்போது ஏற்படும் விரக்தி, எதிர்காலம் குறித்த அவனுடைய கவலைகள் என ‘தனியன்’ கதையின் நாயகனின் உணர்வுகளோடு சில ஒற்றுமைகளைக் காண முடிகிறது.
இருவருமே தங்களைச் சுற்றி மனிதர்கள் இருந்தாலும் (ஒருவர் நகரத்தில், மற்றவர் குடும்பத்தில்), ஆழ்ந்த தனிமையை உணர்கிறார்கள். வெளித்தோற்றத்திற்கு அமைதியாகவோ அல்லது ஒதுங்கியோ காணப்பட்டாலும், அவர்களின் உள்மனம் ஏக்கங்களாலும், கற்பனைகளாலும், நிறைவேறாத ஆசைகளின் வலியாலும் நிறைந்துள்ளது. தஸ்தாயெவ்ஸ்கியின் நாயகன் தன் கனவுலகில் மூழ்குவது போல, ‘தனியன்’ கதையின் நாயகனும் தன் நினைவுகளிலும், அவதானிப்புகளிலும் தஞ்சமடைகிறான். இருவருமே உறவுகளை உருவாக்க முயன்று, அதில் ஒருவித தோல்வியையும், விரக்தியையும் சந்திப்பதோடு, தனிமையில் நீடிக்கவிருக்கும் எதிர்காலத்தைக் குறித்த அச்சத்தையும் சுமக்கிறார்கள். இந்த ஒற்றுமை, மனிதனின் அடிப்படைத் தேவைகளான அன்பு, இணைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், அவை கிட்டாதபோது ஏற்படும் வலியின் உலகளாவிய தன்மையையும் நமக்குக் காட்டுகிறது.
இப்படிப்பட்ட ஒரு சிக்கலான, பலவீனங்கள் கொண்ட, அதே சமயம் ஏக்கங்கள் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தை எழுத்தாளர் எப்படி அணுகுகிறார்? அங்கேதான் இந்தப் படைப்பின் சிறப்பு மிளிர்கிறது. அவர் நாயகனை நியாயப்படுத்தவில்லை, அதே சமயம் குற்றம்சாட்டவுமில்லை. அவரின் மெளனத்திற்குப் பின்னாலும், செயலின்மைக்குப் பின்னாலும் ஆழமான உணர்வுகள், கூர்மையான அவதானிப்புகள், தீவிரமான ஆசைகள் நிறைந்த ஓர் அக உலகம் இருப்பதை நமக்கு நுட்பமாக உணர்த்துகிறார்.
நாயகன் வெளிப்படையாகப் போராடாமல் இருக்கலாம், வாய்ப்புகளை நழுவ விடலாம். ஆனால், ஆசிரியர் அவர் மீதான நமது கவனத்தையும், கருணையையும் கோருகிறார். அமைதியாக இருப்பதும், செயல்படாமல் இருப்பதும் உணர்ச்சியற்ற தன்மையின் அடையாளம் அல்ல என்பதை அழுத்தமாக நினைவூட்டுகிறார்.
சிறந்த இலக்கியங்கள் யாவும், மிகக் குறிப்பிட்ட ஒரு வாழ்க்கையை ஆராய்வதன் மூலமே உலகளாவிய உண்மைகளைப் பேசுகின்றன. இந்தக் கதையும் அப்படித்தான். இது ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழும் தனி மனிதனின் உணர்வுகளைப் பற்றிப் பேசினாலும், அது சொல்லும் உண்மை எல்லைகளைக் கடந்து நிற்கிறது. தனிமை, அன்புக்கான ஏக்கம், சமூக அழுத்தங்கள், வாய்ப்புகளை எதிர்கொள்ளும் தயக்கம், செயல்பட முடியாமையின் வலி – இவையெல்லாம் எந்தக் காலத்திற்கும், எந்தச் சமூகத்திற்கும் பொதுவான மனித உணர்வுகள். அதனால்தான், இந்தக் கதையின் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவனுடைய உணர்வுகள், நமக்கும் மிக நெருக்கமானவையாக, நம்முடைய சொந்த அனுபவங்களின் பிரதிபலிப்பாகத் தோன்றுகின்றன.
நம்முடைய வேகமான வாழ்வில், நாம் கவனிக்கத் தவறும் இது போன்ற ‘தனியன்கள்’ நம்மைச் சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களை வெறுமனே புறக்கணித்துவிடாமல், சற்றேனும் மனிதநேயத்தோடு அணுக நம் ஒவ்வொருவரையும் இந்தக் கதை அழைக்கிறது.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

[Sorry for this anniya-language comment; I tried google-translate, but that comes out corny]
If our men were required to meet and date women so as to settle on a mate for life, we’d not be the billion-plus population today. No girl from postoffice or bank or green-grocers would magically transform to spouse without the help of caste-clan, horoscope matching, and family elders negotiating with their counterparts in the “other” family. Even the most shy, tongue-tied, homely fellow would get his chance with a woman in our blessed scenario.
The author may have depicted the protagonist without judgement. However, the reviewer can & should have used judgement: Why would a man with steady employment not get a mate through arranged marriage scheme ? On the other hand, as they say, கதைக்கு கை உண்டா, கால் உண்டா ? It is what it is.
I like the review, in that it piqued my curiosity to go and read MB’s story.