ஒரு கடற்கன்னியும் சில செர்ரி மலர்களும்

ஜப்பான் மூலக்கதை: ஹிரோமி கவாக்கமி

ஆங்கிலத்தில்: Allison Markin Powell

தமிழாக்கம்: லதா அருணாச்சலம்

என்னுடைய பயணத்தின் போது விசித்திரமான ஒன்றைக் காண நேர்ந்தது. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் எனோமோட்டோ இப்படித்தான் என்னிடம் கூறினான்.

எனோமோட்டோ ஒரு ஓவியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர். அடுக்ககக் குடியிருப்பில் எனது வீட்டுக்கு நேரே மேல்தளத்தில் இருப்பவன். இருவருமே குடியிருப்போர் சங்கத்தில் சேவையாற்றிய போது சந்தித்து அதன்பின் நண்பர்களாக இருக்கிறோம். அடிக்கடி அலைபேசியில் அழைத்து, “நான் நல்ல காஃபியைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறுவான்.சுவையான காஃபியை அருந்த நானும் படியேறி எனோமோட்டோவின் குடியிருப்புக்குச் செல்வேன்.எங்களுக்குள் சிறு உரையாடல் நடக்கும், பின்னர் மாடிப்படிகளில் இறங்கி எனக்கு சொந்த இருப்பிடத்திற்குத் திரும்புவேன்.அதுதான் எங்கள் உறவின் வரையறையாக இருந்தது.

எனோமோட்டோவின் குடியிருப்பு அப்படியே என்னுடைய குடியிருப்பின் அமைப்பையையும் வரைவையும் கொண்டது. இருப்பினும் அங்கிருக்கும் உணர்வு முற்றிலும் மாறுபட்டது. திருமணமாகாத ஒற்றை ஆண் வசிக்கும் குடியிருப்பு என்று கூற முடியாத அளவு மிகத் தூய்மையாக இருந்தாலும் அவனுடைய ஓவியத்துக்கான பொருட்கள், பொழுது போக்கு புகைப்படக்கருவிகள் மற்றும் அவை சார்ந்த சஞ்சிகைகளும் எங்கும் இறைந்து கிடக்கும்.ஆயினும் சுவாரஸ்யம் என்னவென்றால் அவனுடைய குடியிருப்பு என்னுடையதை விடத் தெளிவாக வரையறைக்கப்பட்டது போல ஒரு பிம்பத்தைத் தோற்றுவிக்கும்

தான் தயாரிக்கும் காப்பியை எப்போதுமே “நல்ல காஃபி” என்றே குறிப்பிடுவான் எனோமோட்டோ. கையால் இயக்கக்கூடிய சிறிய அரைவை இயந்திரத்தில் காஃபிக் கொட்டைகளை அரைத்து அதை வடிப்பதற்குத் துணி வடிப்பானைப்  பயன்படுத்துவான். பின் அதை வெதுவெதுப்பான காப்பிக் கோப்பைகளில் மெல்ல ஊற்றுவான். அந்த நறுமணம், அந்த சுவை இரண்டுமே அதீத மேன்மை கொண்டவை. அதனால்தான் அவன் எப்போது காஃபிக்கு அழைத்தாலும் செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே கைவிட்டு விட்டு மாடிப்படியேறி ஓடி விடுவேன்.

இப்போதெல்லாம் எனோமோட்டோவிடமிருந்து “நல்ல காஃபிக்கு” அழைப்பேதும் வருவதில்லை. இரண்டு மாதங்களுக்கு  முன்பு தானொரு விசித்திரமான விஷயத்தைக் கண்டதாக அலைபேசியில் கூறியதற்குப் பின்னர்தான் என்னை அவன் குடியிருப்புக்கு அழைக்கவேயில்லை. அந்த விசித்திரமான ஒன்று என்னவென்று விவரமாக என்னிடம் எதுவும் சொல்லவில்லை. சரியான நேரத்தில் எல்லாம் புரியும் என்று நினைத்துத் தயங்கியிருக்கலாம். செர்ரி மலர்கள் அப்போதுதான் அரும்பத் தொடங்கியிருந்தன. என்னுடைய குடியிருப்புக்கு வெளியே பெரிய செர்ரி மரங்கள் உள்ளன, காற்று வீசும்போதெல்லாம் செர்ரி மலர்கள் தங்கள் இதழ்களை என்னுடைய சிறு முற்றத்தில் தூவுகின்றன.

எனோமோட்டோ தன்னுடைய குடியிருப்பிலிருந்து செர்ரி மரங்களின் மேற்பகுதியைக் காண முடியும். அவை முழுவதுமாகப் பூத்து நிற்காத போதும் கூட பலத்த காற்று சில இதழ்களை அங்குமிங்கும் இறைத்துச் செல்கிறது. அவ்விதழ்களை எடுத்து நீர் நிரம்பிய பாத்திரத்திலிட்டு மிதக்க வைக்க முயன்றேன். மெல்லிய இளஞ்சிவப்புச் சாயல் கொண்ட அந்த மலர்கள் நீரின் மேற்பரப்பில் அலைந்தன. எனோட்டோவிடமிருந்து அழைப்பு வருகையில் நான் அதில்தான் கவனமாக இருந்தேன். “உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால் உன்னிடம் ஒரு ஆலோசனை கேட்க விரும்புகிறேன்’ என்றான். உடனே மாடிப்படிகளில் விரைந்து குடியிருப்பு 402 ன் அழைப்பு மணியை அழுத்தினேன்.

அவன் கதவைத் திறந்தவுடனேயே ஒரு வாசத்தை உணர்ந்தேன். காலணிகளைக் கழற்றியபடியே அது என்ன வாசமென்று யோசித்து சுற்றுமுற்றும் நோட்டமிட்டேன். பத்திரிகைகள்,அலமாரியில் பத்திரமாக வைக்கப்படிருந்தன. புகைப்படக் கருவிகள்,  முடிக்கப்படாத ஓவியம்,  அனைத்துப் பொருட்களும் அதனதன் இடத்தில் இருந்தன.

“நான் காஃபி தயாரிக்கிறேன்” சமையலறையில் நின்றபடியே கூறினான் எனோமோட்டோ.சற்று நேரத்தில் அந்த இடத்துடன் பொருந்திப் போனேன்,முதலில் நான் உணர்ந்த வாசம் உண்மையிலேயே அங்கு இருந்ததா என்று நிச்சயமாகத் தெரியவில்லை.அது இன்னும் வீசுகிறதா என்று கூடக் கூற முடியாத மனநிலையை அடைந்தேன். 

“இதோ காஃபி” கைக்கு ஒன்றாக இரண்டு கோப்பைகளைப் பிடித்தவாறு சமையலறையிலிருந்து வெளியே வந்தான் எனோமோட்டோ.அவன் கொஞ்சம் மெலிந்திருக்கிறானா என்ன?.

“எப்படி இருக்கிறாய் எனோமோட்டோ?

புருவங்களைச் சுருக்கிக் கொண்டே ஒரு சிரிப்புடன் பதிலளித்தான், “நன்றாக இருக்கிறேனென்றும் சொல்லலாம், ஆனால் நன்றாக இல்லையென்றும் சொல்லலாம்” என்றான். “இது அவ்வளவொன்றும் சரியான பதிலில்லை என்றும் எனக்கே தெரிகிறது” மீண்டும் சிரித்தான்.அவனுடன் சேர்ந்து சிரித்தபடியே காஃபியை அருந்தினேன். எப்போதும் போலவே அதி சுவையுடன் இருந்தது.

“மிக சுவையாக இருக்கிறது” என்றேன். தலையசைத்து ஆமோதித்தவன், “ இரண்டு மாதங்களுக்கு முன்” என்று சட்டென்று ஏதோ வார்த்தைகளை உதிர்த்தான்

தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ளும் புதிரான ஆள் இல்லை எனோமோட்டோ. கண்களைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருந்தவன் உடனே தன்னுடைய கதையைக் கூற ஆரம்பித்தான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அவன் தெற்குப் பகுதியில் கடற்கரையோரமாக ஒரு பயணம் மேற்கொண்டான்.வீடு திரும்புவதற்கு முந்தைய தினம் ஒரு மீன்பிடி கிராமத்தின் சிறிய விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தான். பயணத்தின் கடைசி நாளன்று அடிக்கடி நடப்பது போல உறங்குமளவு அவன் களைப்பாக இல்லை.அந்த இரவில் அலைகளின் ஓசைகளைக் கேட்டவாறு நீண்ட நேரம் படுத்திருந்தான். உறக்கமின்றி முழு விழிப்புடன் இருந்ததால் நடு இரவில் படுக்கையிலிருந்து எழுந்து கரையோரம் நடக்கச் சென்றான்.கடற்கரையோரமாக இருந்த சாலையின் விளக்குகள் மணல்திட்டுகளில் பட்டு ஒளிர்ந்தன.நீர்ப்பரப்பின் விளிம்பில் மீன்பிடி வலைகள் விரிக்கப்பட்டிருந்தன.அங்குமிங்கும் நடந்து அமரக்கூடிய ஒரு இடத்தைத் கொண்டிருந்தபோது அவனையறியாமல் வலைகளுக்கருகில் சென்று விட்டான். எந்த நோக்கமுமற்று அவற்றையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த  (பார்த்துக் கொண்டிருக்கையில் அதிலொன்றில் ஏதோ ஒரு பொருள் இருப்பதைக் கண்டான்.அது அசையவில்லை.அது சூரை மீனை விடச் சிறியதாக ஆனால் விளை மீனை விடப் பெரியதாக இருந்தது.அதனுடைய வால் துடுப்பு நீளமாக இருந்தது.துடுப்பிலிருந்து அதன் வயிறு வரை பல நிறங்களில் செதில்கள் மேவியிருந்தன வயிற்றுக்கு மேலே செதில்கள் ஏதுமின்றி மென்மையான,வெளிர் சருமம் இருந்தது.நீண்ட கேசம் அதன் மேலுடம்பைச் சுற்றி வளைத்திருந்தது அந்தக் கேசக்கற்றைகளுக்கிடையே வளமான மார்பு தெரிந்தது.அவனுக்கு முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்ததால் முக அமைப்பைக் கணிக்க முடியவில்லை.காதுகள் கேசத்துக்கிடையே இருந்தன மற்றும் அவற்றில் அழகிய பன்னிற மிளிர்வுடன் செதில்கள் இருந்தன. அது சுவாசித்துக் கொண்டிருக்கிறதா இல்லையா என்றறிய அதன் முகம் தெரியும் பக்கமாகத் திரும்பிப் பார்த்தான்.கண்களும் வாயும் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன.அந்தக் கண்களும் வாயும் வழவழப்பான வெண்ணிறக் கல்லில் கத்தியால் கீறிக் கோடிழுத்தது போல இருந்தன.சற்றே எடுப்பாக இருந்த நாசி அதே வெண்ணிறக் கல்லில் சீராகப் பொருத்தி, மென்மையாக இழைத்து மெருகேற்றப்பட்டது போல இருந்தது.அதையே உற்று நோக்கிக் கொண்டிருந்தவன் சற்று நேரங்கழித்து அதன் தோள்கள் உயர்வதையும் தாழ்வதையும் பார்த்தான்.அது உயிரோடிருப்பது போலிருந்தது.அது உயிரோடு இருக்கும் பட்சத்தில் அது ஒரு கடற்கன்னியாக இருக்கலாம் எனத் தோன்றியது.வளர்ந்த மனித உருவத்தின் மூன்றிலொரு பங்கு அளவுள்ள கடற்கன்னி

“நீ எதிர்கொண்ட ஒரு விஷயம்” என்று நீ சொன்னது -ஒரு கடற்கன்னியா? ஆச்சரியத்தில் உறைந்தேன் நான்.

“ஆமாம்” தாடியைத் தடவிக் கொண்டே கூறினான் எனோமோட்டோ.

“ஹ்ம்ம், அப்போ கடற்கன்னிகள் அவ்வளவு சிறியவர்களா?”

“ம்ம், எனக்கு மற்ற கடற்கன்னிகளைப் பற்றித் தெரியாது” என்று பதிலளித்தான்.

நாங்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.அதற்கு மேல் வேறு என்ன கேட்பது என்ற குழப்பத்தில் நான் மௌனமாகி விட்டேன்.பின்னர் குளியலறைக் கதவைத் திறந்த எனோமோட்டோ என்னை உள்ளே வருமாறு அழைத்தான்.

அங்குதான் கடற்கன்னி இருந்தாள்.குளியல் தொட்டி முக்கால் பாகம் நீரால் நிரப்பப்பட்டிருக்க அதில் கடற்கன்னி நீந்திக் கொண்டிருந்தாள்.தொட்டியின் ஒருமுனையை அடைந்தவுடந்தவுடன் எதிர்த்திசையில் திரும்பி மறுமுனையை அடையும்வரை நீந்திச் சென்று பின் மீண்டும் திரும்பி மறுமுனை என மாற்றி மாற்றி அப்படியே அவசரமேதுமின்றி, நிதானமாக குளியல் தொட்டிக்குள் நீந்திக் கொண்டிருந்தாள் கடற்கன்னி. கடல் நீரின் கடுமையான உப்புக் கவிச்சை அங்கு விரவியிருந்தது .அங்கு வந்தபோது வீட்டுக்கதவை அவன் திறந்தவுடன் நான் அடையாளம் கண்ட வாசம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். கடல்கன்னி எங்கள் பக்கமே திரும்பாமல் முன்னும் பின்னும் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கையில் அவளுடைய நீண்ட கூந்தல் நீரில் அசைந்தாடிக் கொண்டிருந்தது.

“இந்த அளவுக்குத்தான் அதன் எல்லை’ என்றான் எனோமோட்டோ.

“அதன் எல்லை?ஆனால் எந்த அளவென்றாலும் நாம் உள்ளே வந்ததிலிருந்து அவள் முன்னும் பின்னுமாகத்தான் நீந்திக் கொண்டிருக்கிறாள்” நாள் முழுக்க இப்படியேதான் நீந்திக் கொண்டிருப்பாளா? என்று கேட்டேன்.

தலையாட்டினான் எனோமோட்டோ. “பெரும்பாலும் அப்படித்தான், அவள் பசியாக இல்லாத நேரம் தவிர.

இந்தக் கடற்கன்னி-என்று தொடங்கிய நான் பின் என்னைத் திருத்திக் கொண்டு இந்த நபர் – என்றேன். கடற்கன்னிக்கு மனிதர்களின் பேச்சு புரியுமா என்று எனக்குத் தெரியவில்லை, மேலும் அவள் தன்னை மனித இனத்துடன் அடையாளம் காண விரும்பவில்லையென்றால் கடற்கன்னி என்ற சொல் தரும் அர்த்தத்துக்குள் அவளை உள்ளடக்கிக் காயப்படுத்த விரும்பவில்லை. இருப்பினும் கடற்கன்னி என்பதற்குப் பதிலாக நபர் என்று அடையாளம் காண்பது பொருத்தமானதா இல்லையா என்பதும் கடினமான விஷயம்தான்.

இந்த நபர், எப்போதுமே இங்குதான் இருப்பாளா?”

“ஆம், அவளை நான் வீட்டுக்கு எடுத்து வந்ததிலிருந்து” என்று கூறிக்கொண்டே குளியல் தொட்டிக்கு அருகிலிருந்த சிங்க்கிலிருந்து கெளுத்தி மீன்களை எடுத்து கடற்கன்னிக்குக் கொடுத்தான்.

நீந்துவதை நிறுத்திய கடற்கன்னி அந்த கெளுத்தி மீனை வாங்கிக் கொண்டு அதன் தலையையும் வாலையும் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டாள்.குளியல் தொட்டியின் சுவரில் சாய்ந்தவாறு ஒரு ஹார்மோனியத்தை வாசிப்பது போல கெளுத்தியின் தலையிலிருந்து வால்வரை தன் வாயைச் சரித்தாள்.ஒரே அசைவில் எலும்பிலிருந்த மீனைச் சுத்தமாகக் காலி செய்தாள்.அது முற்றிலும் நேர்த்தியாக உண்ணும் முறை. கடற்கன்னி முழு மீனையும் உண்டாள்-ஒரு சிறிய சிதறல் கூட இல்லாமல், மேலும் நீரையும் அழுக்காகவில்லை.இன்னொரு மீனைக் கொடுக்க அதே போல உண்டாள்.அவள் ஐந்து மீன்களையாவது உண்டிருக்கக் கூடும்.அவள் மீன்களை உண்ணும் காட்சியை என்னால் என்றென்றும் பார்த்துக் கொண்டிருக்க முடியும், ஆனால் எனோமோட்டோ அதற்கு மேல் தரவில்லை.கடைசி மீனை முடித்ததும் முன்னும் பின்னுமாக நீந்தத் தொடங்கி விட்டாள் கடற்கன்னி. குளியலறையிலிருந்து வெளியேறிய எனோமோட்டோவை மனமில்லாமல் பின்தொடர்ந்தேன்.ஆனால் கடற்கன்னி இருக்குமிடத்திலிருந்து நான் வெளியேற விரும்பவில்லை.

“உனக்கு அங்கிருந்து வெளியே வர விருப்பமில்லை,,அப்படித்தானே? மற்றொரு காஃபியைத் தயார் செய்த பின் எனோமோட்டோ கேட்டான்.

“என்ன? “ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“குளியலறையிலிருந்துதான்” என்றான்.

இப்போது நீ அதை வாய்விட்டுக் கேட்டே விட்டதால், ஒருவேளை விருப்பமில்லையோ என்றுதான் நினைக்கிறேன்.அந்த வார்த்தைகளைக் கூறும் போது கடற்கன்னியை விட்டு விலகி வர விருப்பமில்லாத உணர்வு நன்றாகவே நினைவிருந்தது.

“அந்தளவு தாக்கம் செலுத்துவார்கள் போலிருக்கிறது” கடற்கன்னிகளைப் பற்றிய தொன்மக்கதைகளைக் குறிப்பிட்டும் அவை மனிதர்களை எவ்வளவு கவரக்கூடியவையாக இருக்கின்றன என்பதைப் பற்றியும் சுருக்கமாக விளக்கிக் கூறினான்.

இரண்டு மாதங்களுக்கு முன் அந்த இரவில் கடற்கன்னியை வலையிலிருந்து பிரித்தெடுத்து விருந்தினர் இல்லத்துக்குக் கொண்டு வந்தான் எனோமோட்டோ.ஆச்சரியப்படும் வகையில் அந்தக் கடற்கன்னி எடை குறைவாக இலகுவாக இருந்தாள். அவளை ஒரு ஈரத்துணியில் சுற்றி நெகிழிப் பைக்குள் வைத்து அப்படியே வீட்டுக்கு எடுத்து வந்து விட்டதாகக் கூறினான். அங்குள்ள கோபான் காவல் நிலையத்துக்கு * எடுத்துச் செல்லவோ அல்லது வேறு ஏதாவதோ செய்வதற்குப் பதில் ஏன் வீட்டிற்கு எடுத்து வந்தானென்று எனோமோட்டோவுக்கே விளங்கவில்லை-அவளை வீட்டிற்குக் கொண்டு வருவது விநோதமான செயலென்று அவனுக்குத் தோன்றவே இல்லை.அவன் அதைத்தான் விரும்பினான், அப்படியே செய்து விட்டான்,பையில் அவளை வைத்து விட்டது-அவள் எடையற்று இருக்கலாம், ஆனால் அவனுடன் எடுத்து வருவதென்பதென்பது அதிக இடத்தைப் பிடித்தது.

“அவளைக் கோபானுக்கு எடுத்துச் சென்றிருக்கலாமென்று நீ நினைக்கவில்லையா?” என்று கேட்டேன்.

முகத்தைச் சுருக்கினான் எனோமோட்டோ. நான் மிகத் தீவிரமாக இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்,அதனால் தயவு செய்து நீயும் அதே பொறுப்புடன்  இதைக் கேள்”.

“நான் தீவிரமாகத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தொலைந்த பொருட்களைக் கண்டுபிடிப்பது பற்றிய சம்பிரதாயங்களை எண்ணி வியக்கிறேன்”ஆனால் நான் கூறிய எதையுமே கவனிக்காமல் தன்னுடைய கதையைக் கூறிக் கொண்டிருந்தான் எனோமோட்டோ.

“முதலில் அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது என்று மட்டும் நினைத்தேன்.கடற்கன்னி நீந்தும் விதம் அல்லது அது மீனை உண்ணும் அழகைப் பார்த்துக் கொண்டிருப்பது-அதனால்தான் அதை விட்டு வருவது எனக்கு அவ்வளவு கடினமாக இருந்தது.ஆனால்,ஒரு கட்டத்தில் என்னால் வேலைக்குக்கூடச் செல்ல முடியவில்லை.காலையில் சில மீன்களை அவளுக்கு உண்ணத் தருவேன், அவ்வளவுதான் -அங்கேயே ,குளியலறையிலேயே தங்கி அமர்ந்து கொண்டிருக்க விரும்பினேன். ஒருவழியாக வேலைக்குச் செல்ல மனதைச் சமாதானப்படுத்தினேன், ஆனால் பலனேதுமில்லை- என்னால் செய்ய  முடிந்ததெல்லாம் பணிபுரியும் நேரம் முழுவதும் கடற்கன்னியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதைத்தான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பணி நேரம் முடிய வேண்டுமென்று ஏங்கிக் கொண்டிருப்பேன், மாணவர்களுக்குப் பாடம் கற்றுத் தரும் வேளையோ அல்லது ,மதிய உணவு உண்ணும்போதோ அல்லது ஆசிரியர் விவாத நேரமோ எதுவாக இருந்தாலும் நான் அமைதியற்று கவனச்சிதறலோடு இருந்தேன்.உண்மையிலேயே வீட்டிற்குப் பறந்து வந்து உடனே குளியலறைக்குச் சென்று விடுவேன்.கடற்கன்னி வெறுமனே நீந்திக் கொண்டுதானிருப்பாள், ஆனால் என்னால் அவளைப் பார்ப்பதிலிருந்து கண்களை எடுக்கவே முடியாது.நான் ஓவியம் தீட்ட முயன்றேன், ஆனால் ஓவியத்திரையின் முன் நிற்கும்போதும் கூட என் பாதங்கள் மீண்டும் குளியலறைக்கே என்னை இட்டுச் சென்றன. ஒரு டஸன் முறைக்கும் மேலாக அங்கு எட்டிப் பார்த்துக் கொண்டே இருப்பேன். அதன்பின் அதிக நாட்களாகவில்லை,,  நான் முழுக்க முழுக்க அங்கேயே என் நேரத்தைக் கழிக்க ஆரம்பித்தேன்.உணவுண்ணும், உறங்கும் நேரம் தவிர நான் குளியலறையே பழியாக இருந்தேன்.கடற்கன்னியின் அருகே இருந்தால் போதும், மனம் இலகுவாக இருப்பதை உணர்ந்தேன்.அவள் அண்மையிலிருந்து கொண்டு புத்தகங்கள் வாசிக்கவோ அல்லது மற்ற வேலைகளோ செய்து கொண்டிருந்தேன்.

கொஞ்ச நாட்களுக்கு இந்த நிலையே எனக்கு மனநிறைவாக இருப்பதாக உணர்ந்தேன், ஆனால் ஒருநாள் காலை என்னால் கடற்கன்னியை விட்டு விலகிச் செல்லவே இயலாமல் அன்று பணிக்குச் செல்வதை விட்டேன்.அன்றிலிருந்து ஐந்து முறை இப்படிப் பணிக்கு விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருந்து விட்டேன். இப்படியே தொடர முடியாது என்று தெரிந்ததால்தான் உன்னிடம் அறிவுரை கேட்பதென்று முடிவு செய்தேன்”.

“ஆனால், எனோமோட்டோ, இப்போது பதட்டமோ கவனச்சிதறலோ இல்லாமல்தானே இருக்கிறாய்?”என்று கேட்டேன்.

“அப்படிக் காட்டிக் கொள்ளாமலிருக்க கடும் பிரயத்தனம் செய்கிறேன்.உண்மையைச் சொல்வதென்றால் இப்போதும் கூட உள்ளே சென்று கடற்கன்னியோடு இருக்க வேண்டுமென்பது மட்டும்தான் என் விருப்பமாக உள்ளது”.

எனோமோட்டோ இதைக் கூறிய கணத்தில் கடற்கன்னியோடு இருக்க வேண்டுமென்ற தீவிர ஆசை என்னை ஆட்கொண்டதை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கடற்கன்னியின்பால் ஏன் அவ்வளவு ஈர்க்கப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் அந்த ஈர்ப்பு தடுக்கவியலாததாக இருந்தது.

இருவரும் அமர்ந்தவாறே தேவைக்கும் சற்றுக் கூடுதலான நேரமெடுத்து காஃபியை அருந்திக் கொண்டிருந்தோம் ஆனால் இருவராலுமே அதைச் சுவைக்க இயலவில்லை.எனோமோட்டோ முதலில் எழுந்தான், நான் உடனே அவனைப் பின்தொடர்ந்தேன்.ஏதோ ஓட்டப் பந்தயம் போல இருவரும் குளியலறை நோக்கி ஓடினோம்.கடற்கன்னி புத்துணர்வுடன் முன்னும் பின்னுமாக ஒரே சீராக நீந்திக் கொண்டிருந்தாள்.

“தயவுசெய்து அவளை உன்னுடன் எடுத்துச் செல், நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், என்னால் இனியும் இப்படி இருக்க முடியாது.எனோமோட்டோவின் தொடர்ந்த மன்றாடலை முதலில் மறுத்துக் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் என்னால் மாட்டேனென்று கூற முடியவில்லை.எங்கள் இருவருக்குமே கடற்கன்னியை மீண்டும் கடலுக்கே கொண்டு சேர்ப்பிப்பதுதான் சிறந்தது என்று தெரிந்தாலும் நாங்கள் அதற்கு மாற்றாக பாசாங்கு செய்து கொண்டிருந்தோம்.அவளுடன் சொற்ப நேரமே உடனிருந்த என் நிலையே இப்படி இருக்கும்போது எனோமோட்டோவுக்கு எப்படியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே கொஞ்சம் அச்சமாக இருந்தது. இறுதியில் அவளை எடுத்துச் செல்ல ஒப்புக் கொண்டேன்.

நான் என்னுடைய குளியல் தொட்டியை நிரப்பும்வரை காத்திருந்த எனோமோட்டோ கடற்கன்னியை ஒரு பைக்குள்ளிருந்து நீருக்குள் நழுவ விட்டான். எனோமோட்டோவின் வீட்டிலிருந்ததைப் போலவே சற்றும் மாற்றமின்றி உடனடியாக நீந்த ஆரம்பித்து விட்டாள்.

“ம்ம், வா,போகலாம். நம்மிருவருக்கும் தேநீர் தயாரிக்கிறேன் “ என்றேன், ஆனால் குளியல் தொட்டியின் பக்கமிருந்து அவன் அகலவேயில்லை. அவன் கையைப் பிடித்து நான் இழுத்தாலும் கூட மசியவில்லை.

“அவளை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்” எனோமோட்டோ மெதுவாக நிமிர்ந்து பார்த்தான்.

என்னையே வெறித்துப் பார்த்தவனின் கண்களில் ஒளியே இல்லை.அந்த ஒளியற்ற கண்களை என் மீது பதித்திருந்தவனின் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது? முழுநேரமும் மௌனமாக என்னையே வெறித்துக் கொண்டிருந்தான்.

“என்ன விஷயம் எனோமோட்டோ? நான் கேட்டாலும் மௌனமாக இருந்தான்.

“வா, போகலாம்.நாம் இரவுணவு சாப்பிடப் போகலாம், என்ன சொல்கிறாய்?”

ஆனால் எனோமோட்டோ அப்போதும் எதுவுமே பேசாமல் அமைதியாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அச்சமுற்றவளாக அவனை விட்டு விட்டுக் குளியலறையிலிருந்து வெளியேறினேன்.

ஆனால் எனோமோட்டோ அப்போதும் மௌனமாகவே இருந்தான்.என்னை அமைதியாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்;பயந்தவாறே அவனை விட்டு விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன்.கதவு வழியாக உற்றுக் கேட்ட போது குளியலறைச் சுவர்களில் கடற்கன்னியின் நீச்சலால் எழுந்த நீர்த்தெறிப்போசையின் எதிரொலி மட்டுமே காதில் விழுந்தது.எனோமோட்டோ எந்த சப்தங்களையுமே எழுப்பவில்லையென்றாலும் கூட அவனுடைய இருப்பு எனது குடியிருப்பு முழுவதும் கனமாகப் படர்ந்திருந்தது.இரண்டு மணி நேரங்கள், மூன்று மணி நேரங்கள் கடந்தன, எனோமோட்டோ வெளிவரவேயில்லை.என் முயற்சியைக் கைவிட்டு நான் உறங்கச் சென்று விட்டேன்,இருப்பினும் உறங்க முடியவில்லை என்பதே உண்மை.நள்ளிரவில் ஏதோ ஒரு ஓசை கேட்டதாக நினைவு-குளியலறைக் கதவு திறந்தபடி இருக்க எனோமோட்டோ தட்டி விழுந்து விடுபவன் போல நடந்து வெளியே வந்தான். ஒரு அலறல் எழுப்பியபடி குடியிருப்பின் கதவைத் திறந்து வெளியே ஓடினான்.கடற்கன்னியை எடுத்துச் சென்றிருப்பான் என்று எண்ணியபடி குளியலறையை எட்டிப் பார்த்தேன், ஆனால் அவள் அங்குதான் இருந்தாள்.அவள் மிதந்து கொண்டிருந்தாள்,உடலின் பாதிப்பகுதி நீரில் மூழ்கியிருந்தது.மிக இயல்பாக மிதந்து கொண்டிருப்பவள் போலிருந்தாள்.செர்ரிப் பூக்களின் இதழ்கள் கண்ணாடிக் கோப்பை நீரில் மிதந்து கொண்டிருப்பதைப் போல கடற்கன்னி நீரில் மெதுவாக மிதந்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள்.

உண்மையிலேயே அவளை விட்டு விலகியிருப்பது நிச்சயமாகக் கடினமான விஷயம்தான்.தினமும் காலையில் கெளுத்தி, சாளைமீன், உலர்மீன் போன்ற மீன்களை உணவாக அளிப்பேன்;அதன்பின் அலுவலகத்துக் கிளம்புவதென்பது சிரமமானதாக இருந்தது.

எனோமோட்டோ கடற்கன்னியை என்னிடம் ஒப்படைத்து சில நாட்களாகி விட்டன, ஆனால் அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.அந்த இறுதி அலறல்-அது எப்படியான சத்தமாக இருந்தாலும் இன்னும் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. வழக்கமான முறையில் என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.பணிக்குச் செல்வது, வீட்டுக்குத் திரும்புவது,இரவுணவு உண்பது,கடற்கன்னியைப் பார்த்துக் கொண்டிருப்பது,உறங்குவது,.பணி,வீடு,இரவுணவு, கடற்கன்னியைப் பார்ப்பது, எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அவளருகில் அமர்ந்திருப்பது, உறக்கம், இப்படியாகத் தொடர்ந்து பின்னர் அருகிலமர்ந்திருப்பது மட்டுமன்றி கடற்கன்னிக்குப் பக்கத்திலேயே உறக்கம் என மாறியது.

இதுவெல்லாம் எனக்குப் புரியும் முன்னரே  எனோமோட்டோ இருந்த நிலையில் நானும் இருந்தேன்.இரவில் கடற்கன்னியைத் தனியாக விட்டு விட்டுத் தள்ளி உறங்கச் செல்கிறேனென்பதெல்லாம் பொய்யாக இருக்கலாம்.உணவருந்துவது என்று வந்து விட்டால் நிச்சயமாக அதுவும் குளியலறையில்தான் நடக்கிறது.சமைப்பதில் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் தயார் செய்யப்பட்ட துரித உணவுப்பண்டங்களை வாங்க ஆரம்பித்து விட்டேன்.குடியிருப்பைப் பெருக்காத காரணத்தால் எங்கும் தூசியாகவும் குப்பையாகவும் இருந்தது. திரைச்சீலைகளை பெரும்பாலும் விலக்குவதே இல்லை,, துணிகளை எப்போதாவதுதான் துவைக்கிறேன். வெறுமனே குளியலறையில்தான் அமர்ந்திருக்கிறேன்.ஒரு நாற்காலி,போர்வை, உணவுண்ணும் பாத்திரங்கள் போன்றவற்றை வாங்கிக் கொண்டு வந்து அங்கேயே குடியிருக்க ஆரம்பித்தேன்.நான் எப்போது வெளியே சென்றேன் என்பதெல்லாம் ஞாபகமே இல்லை. எந்நேரமும் கடற்கன்னியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது இது நிலையற்றது என்று மனதில் தோன்றும், ஆனால் அந்த நினைப்பை அவசரமாக அழித்து விடுவேன்.எனோமோட்டோவுடன் பேச வேண்டுமென்ற மெல்லிய ஆசை இருக்கிறதென்றாலும் கூட மற்றவர்கள் யாருடனும் உரையாடத் துளியும் விருப்பமில்லை.குளியல் தொட்டியில் கடற்கன்னியைப் பார்ப்பேன்,பின் உறங்குவேன், மறுநாள் காலையில் எனோதானோவென்று அலுவலகம் கிளம்பிச் செல்வேன்.இந்த நிலை நிலையற்றது என்ற எண்ணமும் படிப்படியாக மறைந்து விட்டது.எனோமோட்டோ வீட்டுக்கு வந்த போது இது போன்ற எண்ணங்களெல்லாம் முற்றிலும் என் மனதிலிருந்து அகன்று விட்டன. அப்போது கடற்கன்னியை எடுத்துக் கொண்டு வந்து வெறும் ஒரு வாரம் மட்டுமே ஆகியிருந்தது.

பலமாகக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது.அழைப்புமணியை அழுத்துவதற்குப் பதிலாக யாரோ நேராகக் கதவைத் தட்டுகிறார்கள்.நான் அதைக் கண்டுகொள்ளவில்லை, ஆனால் யாராக இருந்தாலும் அவர் நிறுத்தவேயில்லை. மூச்சுக்கூட விடாமல் குளியலறையில் நின்று கொண்டிருந்தேன், ஆனால் இது நீண்ட நேரத்துக்குத் தொடர்ந்து கொண்டேயிருந்ததால் நான் வெளியே வந்தேன். அழைப்பு ஒலிவாங்கியில் யாரென்று கேட்ட போது, “நான் எனோமோட்டோ” என்று பதில் வந்தது.

கதவைத் திறந்தபோது அவன் அங்கு நின்று கொண்டிருந்தான்.

என்ன விஷயம்?- என் கண்களிலிருந்த ஒளியற்ற பாவனை – கடற்கன்னியை எனோமோட்டோவிடமிருந்து எடுத்து வர நான் சென்ற போது குளியலறையிலிருந்து வெளியே வர விரும்பாத அவனுடைய கண்களில் கண்ட அதே பார்வையைப் போலத்தான் இருந்திருக்கக் கூடும்.

“என்ன விஷயம்?”

“நான் கடற்கன்னிக்காக வந்திருக்கிறேன்”

“ஏன்?”

“ஏனா? இது தற்காலிகமான ஏற்பாடு மட்டும்தானே?”

“இன்னும் அதற்கான நேரம் வரவில்லையல்லவா?”

பேசிக்கொண்டிருக்கும்போதே நான் ஓரடி பின் வாங்கினேன்.தேநீர் தயாரிக்கட்டுமா? என்று கேட்டுக்கொண்டே குளியலறை நோக்கி நடந்தேன்.எனோமோட்டோவின் பார்வைக்கு இது தப்பவில்லை,என் வழியை மறித்து நினறான்.

“நான் ஒரு காரை வாடகைக்கு எடுத்திருக்கிறேன்”.

“என்ன? கார் எதற்கு?”

“நான் அவளை கடலுக்கே திருப்பி எடுத்துச் செல்லப் போகிறேன்”.

இந்த அறிவிப்புடன் என்னைத் தள்ளி விட்டு குளியலறைக்கு விரைந்தான் எனோமோட்டோ.கடற்கன்னியை எடுத்துத் தன்னுடன் கொண்டு வந்திருந்த பெரிய நெகிழிப்பையில் போட்டான். அவன் அந்தப் பையை வைத்திருந்ததை நான் கவனிக்கவில்லை.

“வேண்டாம்! நீ இதைச் செய்யக் கூடாது.நான் அலறினேன். நான் பையை அவனிடமிருந்து பிடுங்க முனைந்தேன்.ஆனால் அவன் வலுவானவன்.

“அதனால்தான் இந்தப் பையைக் கொண்டு வந்தேன். நான் அவளைப் பார்க்கமலிருக்கும்வரை எல்லாமே சரியாக இருக்கும்.அவளுடன் நீண்ட நாட்கள் இருந்து விட்டால் எப்படி இருந்தேனோ அதே நிலைமைக்குத் திரும்பி விடுவேன். நாம் சீக்கிரமாகப் போக வேண்டும். அவசரமாகப் பேசினான் எனோமோட்டோ.கடற்கன்னி இருக்கும் பையை ஒரு கையில் தொங்கவிட்டுக் கொண்டு மறு கையால் என்னுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மின்தூக்கியை நோக்கி ஓடினான்.நான் முன்பின் பார்த்திராத பச்சை வண்ண கார் தெருவில் நின்றது. காரின் டிக்கியில் கடற்கன்னி இருக்கும் பையை வைத்து மூடிவிட்டு காரை இயக்கினான் எனோமோட்டோ.

“நீ அவளை அப்படி டிக்கியில் வைத்திருக்கக் கூடாது!’ என்றேன். “நாம் விரைவில் அந்த இடத்தை அடைந்து விடுவோம். எல்லாம் சரியாக இருக்கும்” என்று பதிலளித்தான்.

“வேண்டாம்! நிறுத்து! நீ இப்படி செய்ய முடியாது! “ கார் நகரத் துவங்கியதும் எனோமோட்டோவின் கையை இழுத்தபடி நான் கத்தினேன்,

“இப்படிச் செய்யாதே, நாம் விபத்துக்குள்ளாகி விடுவோம். உன்னுடைய சீட்பெல்ட்டை அணிந்து கொள்” எனோமோட்டோ உற்சாகமாகக் கூறினான்.தயக்கத்துடன் சீட்பெல்ட்டை அணிந்து கொள்ள கடற்கரையை நோக்கி வாகனத்தைச் செலுத்தினோம்

,செர்ரி மரங்கள் பெயர் தெரியாத அந்தக் கடற்கரைச் சாலையெங்கும் வரிசையாக நின்றிருந்தன. அரிதாகவே அங்கு காற்று வீசிய போதும் செர்ரி மலர்களின் இதழ்கள் தொடர்ச்சியாக உதிர்ந்து கொண்டிருந்தன..சில செர்ரி மரங்கள் இலைகளால் வேயப்பட்டிருந்தன. கடற்கன்னி இருந்த பையை எடுத்துக் கொண்டு நீரின் விளிம்பை நோக்கி விரைவாக நடந்தான் எனோமோட்டோ.அது ஒரு பிரகாசமான நாள். நீர்முகத்திலிருந்து கடற்காகங்கள் மேலே பறந்து கொண்டிருந்தன.கதிரொளி அதிகமாகச் சுட்டெரிக்கவில்லையென்ற போதும் நீரின் மேற்பரப்பில் அதன் ஒளி பட்டுக் கண்களைக் கூச வைத்தது.கடற்கரை வெறிச்சோடிக் கிடந்தது.மணலில் நிறையச் சிப்பிகள் இறைந்திருந்தன, கடலலைகளால் அவற்றின் விளிம்புகள் தேய்ந்திருந்தன.அலைகளின் ஓசை கேட்டது எனக்கு மயக்கத்தை வரவழைத்தது, என்னுடைய பதற்றத்தையும் விஞ்சி எனக்கு மயக்கமாக இருந்தது. 

எனோமோட்டோ அடி பிறழாமல் சீராக நடந்து போய்க் கொண்டிருந்தான்,

எனோமோட்டோ- அவனைப் பின்னாலிருந்து அழைத்தேன், ஆனால் அவன் திரும்பவே இல்லை.

அலைகளின் ஓசை என்னுடைய குரலை அமிழ்த்தி விடாதிருக்க வேண்டி மீண்டும் அவனுடைய பெயரை உரக்கக் கூவி அழைத்தேன். ஆனால் அவனோ தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான்.

நீரின் விளிம்பை அடைந்து அந்தப் பையை வைத்தான் எனோமோட்டோ.மிகக் கவனமாக அந்தப் பையைத் திறந்தான்.அவன் அப்படிச் செய்ததுமே தண்ணீர் வடிந்து கடற்கரை மணலில் ஓடியது.உடனடியாக நீரை உறிஞ்சிக் கொண்டது மணல்.

“நீ உண்மையிலேயே அவளைத் திருப்பி அனுப்பப் போகிறாய்” கண்ணீர் முட்டக் கூறிக் கொண்டே அவனோடு ஓடினேன்.

“நான் அவளைத் திருப்பி அனுப்பப் போகிறேன்” காரிலிருந்த போது வெளிப்பட்ட தீவிரம் குறைந்து இப்போது கொஞ்சம் வலுவற்று ஒலித்தது அவன் குரல்.

“நாம் இதைச் செய்ய வேண்டாம்” என்றேன்.எனோமோட்டோ கண்களை மூடித் திறந்தான்.

“அப்படித்தான் செய்யப் போகிறேன்”, அவனுடைய குரல் மேலும் சன்னமாக ஒலித்தது.

“இது சரிதான் -, நாம் தவறேதும் செய்யவில்லையே” அவனைத் தூண்டி விடுவது போன்ற தொனியில் கூறினேன்.என்னுள்ளிருந்து இது போன்றதொரு குரல் எங்கிருந்து வந்ததென்றே எனக்குப் புரியவில்லை.

“இல்லையென்று எனக்குத் தெரியும், ஆனால்”-எனோமோட்டோ சங்கடமான பார்வை பார்த்தான்.

“இது ஒரு அற்புதமான தினம். நாம் வீட்டிற்கு நடந்தே செல்லலாம். கடற்கன்னியும் நம்முடனே வரட்டும்”.

மிக மென்மையான, இனிமையான குரல்.அது என்னுடைய குரலைப் போலவே ஒலிக்கவில்லை.இப்படிச் செய்யாதே, அவனிடம் இந்தத் தொனியில் பேசாதே என்று என் மனம் நினைத்தது.ஆனால் என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

“நீ சொல்வது சரியாக இருக்கலாம்”. இப்போது ஆழ்நிலை மயக்கத்திற்குக் கட்டுப்பட்டவன் போலக் கூறினான் எனோமோட்டோ. 

“இப்படிச் செய்யாதே,, இப்படிச் செய்யாதே” என்று என்னுள் நானே நினைத்துக் கொண்டேன், ஆனால் அதை வார்த்தைகளாக மாற்றவில்லை.நாம் “அவளைத் திருப்பி அனுப்ப வேண்டும்” ஆனால் வார்த்தைகள் வெளிவரவேயில்லை.கடற்கன்னி மணலில் படுத்துக் கிடந்தாள். மணல் அவள் உடலைத் தாங்கிக் கொண்டிருப்பது போல தடுமாற்றத்துடன் அங்கேயே, கிடந்தாள்.அவள் எதுவும் பேசவோ,செய்யவோ இல்லை, ஆனால் எங்கள் இருவராலும் அவளிடமிருந்து எங்களைப் பிரித்துக் கொணர இயலவில்லை.

“நான் அவளை திருப்பித் தந்து விடப் போகிறேன்” தன்னை வலுவாக்கிக் கொண்டவன் போலிருந்தான் எனோமோட்டோ.

பற்களை இறுகக் கடித்துக் கொண்டு நின்றேன் .வாயைத் திறந்தால் மீண்டும் அந்த மென்மையான இறைஞ்சும் குரல் வெளிப்பட்டு விடுமென்று தெரியும்.

கடற்கன்னியை கையிலேந்திக் கொண்டு அமைதியாக நீருக்குள் நடந்தோம்.எங்கள் காலணிகள் ஈரமாகி விட்டன.ஆனால் நாங்கள் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. கடற்கன்னியின் வால் துடுப்பை எனோமோட்டோ பிடித்திருக்க நான் என்னுடைய இரு கைகளையும் அவளுடைய தோளுக்குக் கீழே வைத்துத் தூக்கிச் சென்றோம். முழங்கால் மூழ்கும் அளவு நீரில் நின்ற போது, “இங்கே விடலாம்” என்றான் எனோமோட்டோ.

அவன் ஒரு கூக்குரலை வெளிப்படுத்தினான். “ஹீவ்,ஹோ! எனோமோட்டோ  தன்னை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டு சாந்தமாக எத்தனையோ முறை ஹீவ் ஹோ என்று கத்தினாலும் இருவராலும் கடற்கன்னியை விட்டு விட முடியாது என்று அந்தக் குறிப்பிட்ட கணத்தில் மனதில் நினைத்துக் கொண்டேன்,  

“இது ரொம்பக் கடினமானது”என்றேன். எனோமோட்டோ சிறு புன்னகை புரிந்தான்.அவன் புன்னகைப்பதைப் பார்க்கையில் என்னால் கடற்கன்னியை விட்டு விட முடியுமோ என்று தோன்றியது.

ஹீவ்-ஹோ! இம்முறை நான்தான் அதைக் கூறினேன்,அதன்பின் இறுதியில் நாங்கள் இருவரும் கடற்கன்னியைக் கடலுக்குள் வீசினோம்.அவள் கடலலைகளில் மூழ்கும் போது அந்தப் பன்னிறச் செதில்கள் மின்ன மின்ன ஒரு துள்ளலில் பார்வையிலிருந்து மறைந்தாள்.

“நாம் அவளைத் திரும்பக் கொடுத்து விட்டோம்” இந்த வார்த்தைகளை எனோமோட்டோவிடம் நான் முணுமுணுத்தவுடனேயே எனக்கும் அவனுக்குமிடையே மிதந்து வந்து முகம் காட்டினாள் கடற்கன்னி. அதிர்ச்சியில் தலைகுப்புற விழுந்தேன் நான். தோள்வரை  கடல்நீர் மூழ்கியிருக்க என்னுடைய ஆடைகள் முற்றிலும் நனைந்து விட்டன.

ஒரு  முறை என்னை நேருக்கு நேராகப் பார்த்தாள் கடற்கன்னி.அவள் எனோமோட்டாவைப் பார்க்காமல் என்னை மட்டுமே பார்த்தாள்.கடற்கன்னியின் முகத்தை முதன்முதலாக மிக நெருக்கத்தில் நான் பார்த்தேன்.வழவழப்பான வெண்ணிறக் கல்லில் செதுக்கப்பட்டது போலிருந்த கண்கள் என்னையே உற்றுப் பார்த்தன.

“என்னால் இப்படியெல்லாம் விட முடியாது”என்றுதான் கூற முனைந்தேன்.

என்னால் விட முடியாது

அந்த நொடியில் கடற்கன்னி வாய்திறந்தாள்.அவளுடைய மெலிதான இதழ்கள் விரிந்தன.

“நான் உன்னைப் போக விட மாட்டேன்” என்றாள் கடற்கன்னி.

அவளுடைய குரல் துல்லியமாக ஒலித்தது. என் முகத்தில் பார்வையைப் பதித்துக் கொண்டே கூறினாள்.

அன்றிரவு என் வீட்டிலிருந்து ஓடிச் செல்கையில் எனோமோட்டோவின் வாயிலிருந்து வெளிப்பட்ட அதே அலறல் இப்போது என் இதழ்களிலிருந்து வெளிப்பட்டது.

கத்திக் கொண்டே கரையை நோக்கி ஓடத் தொடங்கினேன்.நீரின் எதிர்ப்பு விசையாலும் நனைந்த ஆடைகளாலும் என்னால் விரைவாக ஓட முடியவில்லை.கனவில் ஓட முயல்கிறேன் என்பது போல இருந்தது.என்னுடைய கையைப் பற்றிக் கொண்டான் எனோமோட்டோ. ஒன்றும் புரியாத குழப்பத்துடன் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தேன்.ஒருவழியாக கடற்கரையை அடைந்து மூச்சு வாங்க நின்றிருந்த போது மீண்டுமொரு முறை அந்தக் குரல் என் பின்னாலிருந்து ஒலித்தது.

“உன்னைப் போக விட மாட்டேன்”.

காதுகளைப் பொத்திக் கொண்டு மணலில் முகத்தைப் புதைத்துக் கொண்டேன்.

எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை. நிமிர்ந்து பார்த்தபோது என் முன்னால் மண்டியிட்டுக் குனிந்தபடி அமர்ந்திருந்தான் எனோமோட்டோ, என் உடலைச் சுற்றி ஒரு போர்வை போர்த்தப்பட்டிருந்தது.

ஏதோ ஒரு இடத்தில் கடற்கன்னி சென்று மறைந்து விட்டது. கடலுக்குள் மீன்பிடிப் படகுகள் சென்று கொண்டிருந்தன.

கரையின் இந்த முனை வரை செர்ரி மலர்கள் சிதறிக் கிடந்தன. மெல்லிய பனித்தூவல் போல மணல்வெளி இதழ்களால் மூடப்பட்டிருந்தன. என்னுடைய நனைந்த ஆடையிலும் கேசத்திலும் செர்ரி மலர்களின் இதழ்கள் சிக்கிக் கொண்டிருந்தன.ஆங்காங்கே நின்றிருந்த செர்ரி மரங்களை சற்று நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.நானும் எனோமோட்டோவும் ஒன்றாக மண்டியிட்டு மலரிதழ்களின் தூவலைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அடுத்த நாள் எனக்குக் கடுமையான காய்ச்சல் வந்து விட்டது.அதன்பின் சில நாள்கள் கழித்து ஒருவழியாக நான் நானாகவே உணர்கையில் செர்ரி மரங்கள் தனது அத்தனை இதழ்களையும் இழந்து விட்டிருந்தன.எனோமோட்டோவை அலைபேசியில் அழைத்து நன்றி கூறினேன்.

“நான் அருமையான காஃபி தயாரிக்கிறேன்” என்று அவன் கூறியவுடன் படியேறி அவன் குடியிருப்பை அடைந்தேன். பூவிதழ்கள் கொண்ட செர்ரி மரத்தின் உச்சிப் பகுதிகள் அவனுடைய குடியிருப்பின் ஜன்னல்களிலிருந்து தெரிந்தன.

‘இதுதான் பருவகாலம், மரங்களில் இலைகள் துளிர்க்கையில் பறவைகள் வரத் தொடங்கும்”.காஃபி தயாரித்துக் கொண்டே கூறினான் எனோமோட்டோ.

 “பறவைகள், ஓ, பறவைகள் அருமையானவை” விட்டேத்தியாகப் பதிலளித்த என்னைப் பார்த்துச் சிரித்தான் எனோமோட்டோ.

“பறவைகள் கடற்கன்னியை விடப் பரவாயில்லை” மீண்டும் சிரித்தான்.

“அது என்னதான் “கடற்கன்னி” நான் முணுமுணுத்தேன்.

“நாம் அதன் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தோம்” தீவிரத்தன்மையோடு மறுமொழி கூறினான் எனோமோட்டோ.

“எனோமோட்டோ, உன்னால் அவளை எப்படி மீண்டும் திருப்பி அனுப்ப முடிந்தது? 

“ஆனால், கடைசியில் அதைச் செய்தது நீதானே?” என்றான் எனோமோட்டோ.

வீசிய காற்று  செர்ரி மரங்களின் கிளைகளை அசைத்தது.அவை கடற்கரையோரமிருந்த செர்ரி மரங்களை நினைவூட்டின. கடற்கன்னியின் தோற்றம் எப்படி இருந்ததென்பதையோ  அல்லது அவளை விட்டு விலகியிருக்காகூடாதென்ற தனித்துவமான விருப்பத்தையோ என்னால் இப்போது தெளிவாக நினைவு கூர முடியவில்லை.இறைந்து கிடந்த செர்ரி மலர்களே என்னுடைய துல்லியமான நினைவாக இருந்தது.

“அந்தக் கடற்கன்னி உன்னிடமும் அதையேதான் கூறியதா எனோமோட்டோ?”

அவன் தலையசைத்தான்.உன்னுடைய இருப்பிடத்தில் வைக்க அவளை எடுத்து வந்த பின் மூடிய குளியலறைக் கதவுக்குப் பின்னால் நானும் அவளும் மட்டும் தனித்திருந்த போது என்னிடம் கூறினாள்” என்று மென்மையாகக் கூறினான் எனோமோட்டோ.

இருவரும் மௌனமாக காஃபியை உறிஞ்சிக் கொண்டிருந்தோம்.


ஹிரோமி கவகாமி -வாழ்க்கையும் எழுத்து பயணமும்

Hiromi Kawakami –(1958) ஜப்பானின் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்களுள் ஒருவர். வழக்கத்திற்கு சற்றே மாறுபட்ட படைப்புகள் இவருடையது. நாவல், கவிதை, இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எனப் பல தளங்களில் இயங்குபவர். மனிதர்களின் அகச்சிக்கல்களையும், உணர்வுகளின் தெளிவின்மையையும்  அன்றாடம் அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளைக் கொண்டே விவரிக்கிறார்.இவருடைய பல கதைகளில், மாய யதார்த்தம்,மீபுனைவு போன்ற கூறுகள் எழுத்தாளப்பட்டுள்ளன. கவகாமியின் எழுத்து முறை நேர்த்தியானது,  இலகுவானது, கவிதைநயமுடையது மற்றும் உணர்ச்சிகரமானது. அவரது கதைகள் மெய்நிகர் சாத்தியங்களுக்கும் யதார்த்த உலகத்துக்கும் இடையே உலவி அசாதாரணமான திருப்பங்களை கொண்டு, வாசகர்களை ஒரு மாயமான உலகிற்குள் அழைத்துச் செல்கின்றன.

 Lewis Carroll, Banana Yoshimoto இருவரின் படைப்புகளோடு இவரது படைப்புகளை விமர்சகர்கள் ஒப்பு நோக்குகிறார்கள். இவரது பல ஆக்கங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 

Akutagawa Prize, the Tanizaki Prize, the Yomiuri Prize, Izumi Kyoka prize for Literature,Man Asian Literary Prize போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இந்த கதை Granta இதழில் ” I won’t let you go ” என்ற தலைப்பில் Allison Markin Powell என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.



Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “ஒரு கடற்கன்னியும் சில செர்ரி மலர்களும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.