ஸ்வப்ன வாசவ தத்தா – 9

This entry is part 9 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

பாகம் – 6

கஞ்சுகி வருகிறாள்:  ஆ, இது என்ன யாருமே இல்லாமல் வாசல் கதவு திறந்தபடி இருக்கிறது. காவலர்கள் எங்கே? 

ஒரு பணிப்பெண் வருகிறாள்:  விஜயாம்மாவா? வாங்க, என்ன விஷயம்? நான் ஏதாவது செய்ய வேண்டுமா? 

கஞ்சுகி- ஆமாம். உடனே போய் சொல்லு.  அவசரமாக அறிவிக்கப் படட்டும்.  வத்ஸ ராஜன் போரில் வெற்றி வீரனாக வந்து விட்டான்.  

மேலும், (வாசவ தத்தாவின் தந்தை )மகா சேன அரசனிடமிருந்து தூதன் வந்திருக்கிறான். ரைப்ய கோத்ரத்து அல்லது அந்த பெயரில் ஒரு அந்தணன், வந்திருக்கிறார். மகாராஜாவின் பத்னி அங்காரவதியின் அந்தரங்க பணிப்பெண், வசுந்தரா என்பவள், வாசவதத்தாவின் தாத்ரி- குழந்தையை பேணும் அரண்மனை பணிப் பெண்- ஏதோ  அவசர செய்தி சொல்ல அரண்மனை வாசலில் வந்து நிற்கிறாள் என்பதையும் சொல்லு. 

அம்மா, கேளுங்கள். இந்த செய்திக்கு அவசியமில்லை.  வத்ஸ ராஜன், வெற்றி வீரனாக இளவரசி பத்மாவதியைக் காண அவள் அறைக்குச் சென்றாரா-  வீணையின் நாதம் கேட்டு நின்றார். யார் வாசிப்பது என்று விசாரித்தவர், கோஷவதி என்ற வீணையின் நாதம் போல் தெரிகிறது என்றார். 

நன்றாக வாசிக்கிறாள். ஸ்வர சுத்தமாக  என்று பாராட்டினார்.  இது போன்ற வீணை எங்கே கிடைத்தது எனவும், அதைக் கொண்டு வந்து அவர் கையில் கொடுத்தனர்.  நர்மதா நதிக் கரையில் புல் வெளியில் கிடைத்தது, அரசரிடம் கொண்டு வந்து காட்டுங்கள், அவரும் வீணா கலைஞரே என்று பத்மாவதி ஆணையிட,  கொண்டு வந்தனர். அதை மடியில் வைத்து மீட்டிய வத்ஸ ராஜனின் கண்கள் குளமாயின.  கோஷவதி என்ற பெயர் கொண்ட அந்த வீணை கிடைத்து விட்டது. இதை வாசிக்கும் என் ப்ரிய பத்னியை காணவில்லையே என்று வருந்தினார்.  

சித்திரம் : சங்கர் கோவிந்தராஜ்

விஜயாம்மா, இந்த சமயம் நான் போய் செய்தி சொல்வது உசிதமா? 

விஜயா என்ற கஞ்சுகி- போய் சொல்லு. இதுவும் அதை ஒட்டிய செய்தியே.

அவளும் அரண்மனை உள்ளே வந்து பார்க்கிறாள். இதோ வத்ஸ ராஜன், படியில் இறங்கி வந்து கொண்டிருக்கிறார். உடனே போய் சொல்கிறேன். 

உதயணன்: ஹே, வீணையே, ஸ்ருதி சுத்தமான உன் நாதம் தான் எவ்வளவு இனிமை, கேட்கவே சுகமானது. எப்படி உன் தேவியை விட்டு பிரிந்தாய்? அவள் மார்பில் சாற்றி வைத்துக் கொண்டும், மடியில் வைத்துக் கொண்டும் வாசிப்பாளே, அந்த உடல் ஸ்பரிசத்தை கூட மறந்து விட்டாயா?  பறவைகளின் எச்சமும், தூசியும் நிறைந்த புல்லில் கிடந்தாயா? பயங்கரமான காட்டில் வசிக்கும்படி உனக்கும் சாபமா?

தவிர, கோஷவதி, உனக்கு அவளிடம் பரிவே கிடையாதா?  தபஸ்வி அவள். உன்னை எப்படி பராமரித்தாள்.  வாசிக்கும் சமயம் இடைவெளியில் தன் மார்பில் வைத்துக் கொண்டு பாடம் கேட்பாள். நீயும் என்னைப் போலவே அவள் அன்புடன் அணைப்பதை மறந்தாயா?  சில சமயம் என்னைக் குறித்து ஏதோ விளையாட்டாகச் சொல்வது போல் உன்மேல் அவள் விரல்கள் நடனமாடும். சிரித்துக் கொண்டே ஏறிட்டுப் பார்ப்பாள். 

அரசனின் மனக் குமுறலைக் கேட்டுக் கொண்டிருந்த வசந்தகன், சமாதானமாக சொல்கிறான்.  அரசே!  மனதை திடப் படுத்திக் கொள்ளுங்கள். நடந்தது திரும்பி வரவா முடியும்? நீங்கள் அறியாததா?

உதயணன்- அப்படியல்ல.  அனேகமாக மறந்து விட்டேன் போலும். இந்த வீணை நினைவுறுத்தி விட்டது.  அந்த தேவியைக் காண முடியவில்லை. அவளுக்குத் தான் இந்த கோஷவதி (வீணை)  நெருங்கிய தோழி போல பிரியமானவள். 

வசந்தக, இதே போல வீணையை,  வீணை வாத்யங்களை செய்பவர்களிடம் சொல்லி இதே போல தரமானதாக செய்யச் சொல்லி வாங்கி வா.  சீக்கிரம்.

வசந்தகன்: அப்படியே, இந்த வீணையை கொடுங்கள். இதைக் காட்டி இதே போல என்று சொல்கிறேன். 

வாசல் காவல்காரி வருகிறாள்.  ஜயது ராஜா! வாழ்க நம் அரசன்.  ஐயா, மகாசேனரின் ஒரு அந்தணரும், ரைப்யர் என்று சொன்னார். கோத்ரமோ அவர் பெயரோ, அவருடன் மகா சேனரின் மனைவி அங்காரவதியின் அந்த;புர தாத்ரியும் வந்திருக்கிறாள்.  மகா ராணி அனுப்பியதாக சொல்கிறாள். அவள் பெயர் வசுந்தராவாம். அவள் அரண்மனையில் வாசவதத்தாவை குழந்தை பருவத்திலிருந்து வளர்க்கும் பொறுப்பில் இருந்தவளாம்.  இருவரும் தங்களைப் பார்க்க காத்திருக்கிறார்கள். 

உதயணன்: அப்படியா, பத்மாவதியை கூப்பிடு

ஒரு பணிப்பெண் தொடர, பத்மாவதி வருகிறாள்.

உதயணன் அவளிடம், என்ன விஷயம்? மகா சேனரிடமிருந்து செய்தி. 

இதோ, தேவியே வந்து விட்டார்கள்.

பத்மாவதி: ஜயது ஆர்ய புத்ர:!  

பத்மாவதி,இதைக் கேள். மகா சேனரிடமிருந்து ரைப்யரும், ஒரு அரண்மனை பணிப் பெண்ணும் வந்திருக்கிறார்களாம். மகா ராணி அங்காரவதி அனுப்பினாளாம்.  வசுந்தரா என்ற தாத்ரி, இருவரும் காத்திருக்கிறார்களாம்.

பத்மாவதி: சொல்லுங்கள். எனக்கும் அறிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறது. புகுந்த வீட்டு விஷயம் தெரிந்து கொள்வது நல்லது தானே. 

உதயணன்: ராணிக்குரிய பெருந்தன்மையோடு பேசுகிறாய்.  சக்களத்தி வாசவதத்தாவின் குடும்பத்தினரும் உனக்கு மதிப்புக்குரியவர்களே என்பது போல.  உட்கார். ஏன் இன்னும் நிற்கிறாய்?

ஆர்ய புத்ர! இது என்ன அரச சபையா? என்னுடன் அமர்ந்து தரிசனம் தர

உதயணன்: அதனால் என்ன, இதுவும் அரச சபை போலத்தான்.

பத்மாவதி: உங்கள் முதல் மனைவியின் உறவினர்களின் செய்தி. இது புது மனைவி என்று அவர்களுக்கு மனத் தாங்கல் இருக்கலாம்.

உதயணன்: நான் விதிமுறைப்படி மணந்த பெண்ணுடன் இருப்பதில் தோஷம் எப்படி வரும்? அப்படி தோஷ புத்தியுடன் பார்ப்பதே தவறு. வா. வா உட்கார். 

பத்மாவதி: சரி.  நீங்களே சொன்ன பின், பெரியவர்கள் யாராவது தவறு என்று சொன்னால் கூட ( பொது இடத்தில் தம்பதி சேர்ந்து அமருவது)   ஏதாவது சொன்னால் கூட இனி பொருட்படுத்த மாட்டேன். 

பத்மாவதி! சரியாக சொன்னாய். பத்மாவதி, உண்மையில் எனக்கே என்ன சொல்வார்களோ என்ற அச்சம் தோன்றுகிறது. அவர்கள் வீட்டில் மகனுக்கு சமமாக  மதிப்புடன் நடத்தினார்கள்.  பேரரசர் அவர்,  நான் ஒரு சிற்றரசன் தானே.  அது தான் நேரடியாக பெண் கேட்கத் தயக்கம்.  அதனால் தான்  அவர்கள் மகளை நான் கடி மணம்  செய்து கொண்டேன், அவளை காக்கத் தவறி விட்டிருக்கிறேன்.  அறிந்தோ, அறியாமலோ விரும்பாமலோ ஏதோ தவறு செய்து விட்டு, பெரியவர்கள், பெற்றோர், மற்றும் உறவினர் மனம் வருந்தச் செய்து விட்டு,  தந்தையைக் காணவே தயங்கும் தனயன் போல அல்லவா நான் இருக்கிறேன்.

பத்மாவதி: சமயம் கிடைத்த பொழுது, பரிகாரமாக ஏதாவது செய்வோம். இவர்களைச் சந்தித்தாலே ஏதாவது வழி பிறக்கக் கூடும். மனதை தேற்றிக் கொள்ளூங்கள். 

காவல்காரி: இதோ இருவரும் இங்கு வந்து விட்டார்கள், அழைத்து வரவா.

உதயணன்:  அழைத்து வாருங்கள்.

காவல்காரப் பெண்: வணங்கி விட்டுச் செல்கிறாள்.

அவளுடன் வந்தவர்களும் வந்து சேருகின்றனர். 

வந்த கஞ்சுகி: சம்பந்தி வீட்டில் நிழைந்திருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண் கொடுத்த இடத்தில் மங்கள காரியங்கள் என்றால் மகிழ்ச்சியுடன் போவோம். அரசகுமாரி இருந்திருந்தால் அது சாத்யமாகி இருக்கும். ஹா கடவுளே! மனமார்ந்த வணக்கங்கள்.  மருமகனுக்கு ராஜ்யமும் கிடைத்து விட்டது, மனைவியும் நலமாக இருக்கிறாள்.

வந்த கஞ்சுகி: ஜயது ஆர்ய:! வாழ்க நம் அரசன்.

தாத்ரி: ஜயது ஜயது

உதயணன்: அவளை அடையாளம் கண்டு கொண்டு பணிவுடன் தாயே, வர வேண்டும்.

உலகில் அரச பதவியில், வாழ்வதும், வீழ்வதும் சகஜம்.  அரச வம்சத்தினர் அதை பொருட்படுத்தி வருந்துவதோ, மகிழ்ச்சி கொள்வதோ இல்லை.  அது கிடக்கட்டும். உங்கள் அரசர் நலமா? நான் மிக விரும்பி அவர் குடும்பத்தில் இணைந்தேன். பந்துவாக என்னை ஆசீர்வதிக்க வேண்டும்.

கஞ்சுகி: அதற்கென்ன. மகா சேன அரசன் நலமே. இங்கும் அனைவரின் நலனை வேண்டுகிறார். 

உதயணன்: எழுந்து நின்று, என்ன ஆணை அரசரிடமிருந்து?

உதயணனின் தாய் விதேக வம்சத்தினள். அதனால் வைதேஹி. 

கஞ்சுகி சொல்கிறாள் : வைதேஹி மகன் மரியாதை அறிந்தவன். அதனால் எழுந்து நின்று தூது பொருளை கேட்க நினைக்கிறான். அரசே, அமருங்கள்.  அமர்ந்தபடியே கேட்கலாம்.

உதயணன்: அப்படியே.

கஞ்சுகி: நல்ல விஷயம் தான்.  மகிழ்ச்சிகரமான செய்தி. சத்ருக்களை வெற்றிக் கொண்டு, திரும்ப அரசுரிமையை மீட்டுக் கொண்டு வந்தவராக பார்க்க மகிழ்ச்சி என்றார். அரச பதவி தானாக கிடைக்காது. அதற்கான மன வலிமையும் போராடி  வெற்றி கொள்ளும் குணமும் அமைந்தவர்களே நல்ல ஆட்சியைத் தர முடியும்.  வாழ்த்துக்கள். இது உஜ்ஜயனி அரசனின் செய்தி. மகா ராணியின் சொல்லை இதோ தாத்ரி சொல்வாள்.

உதயணன்: தாயார் நலமா? பதினாறு மகிஷிகள், அனைவரிடமும் நட்புடன் இருப்பார்.  என்ன சொன்னார், சொல்லுங்கள். 

தாத்ரி: உங்களை குசலம் விசாரித்தார். ‘வாசவதத்தாவின் இழப்பு எங்களுக்கும் பேரிடி தான். ஆனால் உலகில் பிறப்பும் இறப்பும் நம் கையிலா உள்ளது.  கிணற்றிலிருந்து கயிற்றில் குடத்தைக் கட்டி நீரை இறைப்பவன், குடம் நீரோடு வரும் என்று தான் எதிர்பார்ப்பான். நடுவில் கயிறு அறுந்து குடம் கிணற்றில் விழுந்து விடுகிறது போல மரணம்  ஜீவன்களுடன் விளையாடுகிறது.  மரங்களைப் பார்த்து கற்றுக் கொள்வோம். கிளைகளை வெட்டினாலும், புது துளிர்களோடு உத்சாகமாக இருக்கும் மரங்களைப் போல வாழ்க்கையை தொடரவே முயல வேண்டும். ‘

தேவி, மகாசேனரின் மகள் எனக்கு கிடைத்த நல்ல மாணவி, பிரியமான மனைவி. எப்படி மறப்பேன்?

மகாராணி மேலும் சொன்னதைக் கேளுங்கள் அரசே. ‘என் மகள் வாசவதத்தா மறைந்து விட்டாள்.  எனக்கும், மகா சேனருக்கும் எங்கள் மகன்கள் கோபால, காபாலிகர்கள் போலவே தான் நீங்களும். நாங்களே முன்னால் தீர்மானித்து விட்டிருந்தோம். எங்கள் மருமகன் உதயணன் தான் என்று.    உஜ்ஜயினிக்கு உங்களை அழைத்து வந்த காரணமும் அதுவே.  அக்னி சாக்ஷியாக விவாக நடை முறைகள் இன்றி வீணை கற்றுக் கொள்ள என்று உங்களிடம் அனுமதித்த பொழுதே உங்களுக்கு என்றே கையளித்து கொடுக்கப் பட்டவள் போலத்தான்.  இடையில் உங்கள் இருவருடைய சபலம்- விவாக பந்தம் என்பதை முறையாக எங்களிடமிருந்து பெறாமலே அடைந்தீர்கள்.  அதனால் நாங்கள் அதே நினைவாக உங்கள் இருவரின் திருமணத்தை எங்கள் மனதில் தோன்றியபடி சித்திரமாக வரையச் செய்திருக்கிறோம்.  அதை அனுப்பி இருக்கிறேன். மன அமைதிக்கு அது உதவும். 

உதயணன், உணர்ச்சி வசப் படுகிறான். ஆஹா, என்ன பெருந்தன்மை மகா ராணிக்கு. ஆயிரம் அரசுகளை   தன் வலிமையால் வெற்றி பெறுவது இந்த அனுசரணையான சொல்லுக்கு ஈடாகாது.  அபராதம் செய்தவனிடம் இந்த அன்பு, யாரால் எதிர் பார்க்க முடியும். 

பத்மாவதி: ஆர்ய, சித்திரத்தில் உங்கள் பிரிய மனைவியை பார்க்க ஆவலாக இருக்கிறது. பார்க்கலாமா? 

தாத்ரி: இதோ பாருங்கள். என்று சொல்லி காட்டுகிறாள்.

பத்மாவதி: இந்த பெண் என்னிடம் வந்துள்ள அவந்திகா போலவே இருக்கிறாளே.  ஆர்ய புத்ர, இது உங்கள் வாசவதத்தாவைப் போலவே இருக்கிறாளா? சித்திரத்தில் அடையாளம் தெரிகிறதா?

உதயணன்: தானும் பார்த்து. ஆமாம். அவளே தான். இந்த அளவு மென்மையான  உடலும், குணமும், அக்னி தேவனுக்கு  எப்படி எரிக்க மனம் வந்தது.

தாத்ரி: இந்த சித்திரத்தையும் பாருங்கள். இது வத்ஸ தேசத்து அரசன், எங்கள் குலத்து மருமகன். 

பத்மாவதி: இந்த சித்திரத்தில் உங்களைத் தத்ரூபமாக காண்கிறேனே, அதை வைத்து இதுவும் உங்கள் பிரிய மனைவி வாசவதத்தாவாகத் தான் இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

பத்மாவதி! என்ன விஷயம், இந்த சித்திரங்களைப் பார்த்து உன் முகத்தில் ஏதோ குழப்பம் தெரிகிறது. என்ன யோசிக்கிறாய்.

ஆர்ய புத்ர! இதே போல ஒரு பெண், எங்கள் அரண்மனையில் இருக்கிறாள்.

என்ன வாசவதத்தாவின் உருவச் சாயல் கொண்டவளா?  இருக்கலாம். உலகில் ஒரே சாயல் உள்ளவர்கள் இருப்பது உண்டு.

பத்மாவதி: நம் திருமணத்துக்கும் முன், கன்யாவாக நான் இருந்த பொழுது ஒரு அந்தணர் வந்து, என் சகோதரி, சில காலம் உங்களிடம் பாதுகாப்பாக இருக்கட்டும். இவள் கணவன் தன் தொழில் முறையாக வெளியூர் சென்றிருக்கிறான். இவள் சுபாவமாக மிகவும் கூச்சம் உடையவள். தனியாக வெளியில் சென்றறியாதவள். வேற்று மனிதர்களைக் காணவும் தவிர்ப்பாள்.  எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கிறது. அதை முடித்து விட்டு வந்து அழைத்துச் செல்கிறேன் என்றார். 

அந்தணரின் சகோதரியா? அதனால் தான் தன்னை பாதுகாத்துக் கொள்ளத் தெரியாமல், பயப்படுகிறாள். வேறு யாரோ தான். வாசவதத்தா இல்லை.

ஒரு பணிப் பெண் வருகிறாள்:  இளவரசியே! யாரோ ஒரு அந்தணர் வந்திருக்கிறார். அவர் சகோதரியை உங்களிடம் பாதுகாப்பாக விட்டுச் சென்றாராம். அழைத்துச் செல்ல வந்திருக்கிறாராம். வாசலில் நிற்கிறார். 

பத்மாவதி, நீ சொன்ன அதே அந்தணர் தானா?

இருக்கலாம். பணிப்பெண்ணைப் பார்த்து, சீக்கிரம் அவரை அழைத்து வா.

பத்மாவதி! நீயும் அவளை அழைத்து வா.

முதன் மந்திரி யௌகந்தராயன் யோசித்துக் கொண்டே வருகிறார்.  பத்மாவதியுடன் அரசரின் விவாகம் நன்மைகள் தரும் என்று நாம் எண்ணியது நல்ல படியாக நடந்து விட்டது. ஆனால் அதற்காக நான் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அரசர் சரியாக உணர வேண்டுமே. 

பணிப்பெண்: ஐயா! உள்ளே செல்லுங்கள். அரசர் இருக்கிறார். 

மந்திரி: ஜயது ஜயது ஸ்வாமி!

உதயணன்: கேட்ட குரலாக இருக்கிறதே. அந்தணரே! உங்கள் சகோதரியை பத்மாவதியிடம் விட்டுச் சென்றதாக அறிகிறேன்.

மந்திரி: ஆமாம்.

அப்படியானால், அவள் சகோதரியை அழைத்து வாருங்கள். சீக்கிரம்.

பத்மாவதி அவந்திகாவுடன் வருகிறாள்.  ஆர்யே! ஒரு நல்ல விஷயம். உங்கள் சகோதரர் வந்து விட்டார்.

அவந்திகா தனக்குள்- நல்ல வேளை.

வா பத்மாவதி, ந்யாசமாக- பாதுகாப்பாக வைக்கச் சொல்லிக் கொடுத்த பொருளை சாட்சிகளுடன் ஒப்படைக்க வேண்டும். இதோ ரைப்யரும், இந்த தாத்ரியும் சாட்சிகளாக இருப்பர். 

பத்மாவதி, யௌகந்தராயரிடம், பெரியவரே! இதோ உங்கள் சகோதரி, அழைத்துச் செல்லுங்கள். 

தாத்ரி, ஆ இது எங்கள் இளவரசி வாசவதத்தாவே தான். 

உதயணன்: என்ன, மகா சேனரின் மகள் என்றா சொல்கிறாய். பத்மாவதி, இவளையும் உள்ளே அழைத்துப் போ. பார்த்துச் சொல்லட்டும். 

உள்ளே செல்வானேன். என் சகோதரி தான்.

என்ன சொல்கிரீர்கள்.? இவள் அதே மகாசேன ராஜாவின் மகள் வாசவதத்தா இல்லையா?

யௌகந்தராயன்:  அரசே! நல்ல குலத்தில் பிறந்தவர் நீங்கள். (பாண்டவ வம்சத்தில் அபிமன்யுவின் வழித் தோன்றலாக வந்தவன் உதயணன் என்பதைச் சொல்கிறார்)  பாரதர்களின் குலத்தில் வந்தவர்.  வினயமும், நல்ல குணமும் கொண்டவர்.  ராஜ தர்மத்தை மீறி, என் சகோதரியை அபகரிப்பது தகாது. 

(விஷ்ணு புராணத்தின் படி அபிமன்யுவின் இருபத்து ஐந்தாவது- தலைமுறையோ, அல்லது வம்சத்தில் பிறந்தவர்களோ- வந்தவன் உதயணன் – அதனால் பாண்டவ வம்சத்தினன் எனச் சொல்கிறார்)

கண்டு பிடிக்கலாமே யார் என்று. உங்கள் சகோதரியா? அல்லது இந்த தாத்ரி  சொல்வது போல மகா சேனரின் மகளா என்று. 

யௌ: ஜயது ஸ்வாமி

உள்ளே வந்தபடி வாசவதத்தா: ஜயது ஆர்ய புத்ரோ! 

ஆ இது என்ன? கனவா நனவா? ஆர்ய யௌகந்தராயன், தாங்களா? அந்தண வேஷத்தில் அறியாமல் போனேன். 

யௌ: அரசே, சில செயல்களை நீங்கள் அறியாமல் செய்ய வேண்டியிருந்தது. அதனால் தேவியை இங்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்தேன். 

பொறுப்பான மந்திரி பதவியில் இருப்பவர்கள், ராஜ்யத்தின் நலனுக்காக, அரசனுக்கு சில வழி காட்டுதல்கள் செய்ய வேண்டியுள்ளது. வெளிப்படியாகவோ, மறை முகமாகவோ, தர்ம சாஸ்திரங்களை கடை பிடித்தோ, மந்திரிகள் குழாமாக சிந்தித்து ஏற்றுக் கொண்டதாகவோ, ராஜ்யத்தின் நலனே பிரதானமாக பின்னின்று செய்வதுண்டு. 

முன் நடந்ததை சொல்கிறார். ப்ரத்யோத ராஜா என்னை சிறை பிடித்தார். அங்கு நான் அடைபட்டிருந்த சமயத்தில் நீங்கள் உங்கள் கலையால் வீணை கற்பிக்க அந்தபுரம் சென்று விட்டீர்கள். சமயோசிதமாக என்னை புத்தி பிசகியவன் என்று சொல்லி விடுவித்து விட்டீர்கள். நானும் சிதிலமாகி கிடந்த வத்ஸ ராஜ்ய  நிர்வாகத்தை மற்ற மந்திரிகளுடன் சேர்ந்து சீராக்கினோம். வாசவதத்தாவை விரும்புவதையறிந்து அவளை உங்களுடன் சேர்த்து வைத்தேன்.

பத்மாவதி: ஆர்யே! உங்களை யாரென்று அறியாமல், சகியாக மட்டுமே நினைத்தேன். மரியாதைக்குரியவர், என்றும், எனக்கு முன்னால் அரசரின் மனைவியாக வந்தவர் என்பது இப்பொழுது தானே அறிகிறேன். வணங்குகிறேன்.

வாசவதத்தா: பத்மாவதி, எழுந்திரு.  போதும். முதன் மந்திரி என் தனம் – என்னைச் சார்ந்த சகோதரி என்று  சொல்லித் தானே  ஒப்படைத்தார். அதை நீ பத்திரமாக காப்பாற்றி விட்டாய்.

உதயணன்: முதன் மந்திரி! எதற்கு இந்த நாடகம்?

யௌ: ராஜ்யத்தைக் காப்பாற்ற. சில காலம் தேவி, உங்கள் எதிரில் இல்லாமல் இருந்தால், உங்கள் கவனத்தை ராஜ்ய காரியங்களில் செலுத்தவும், யுத்தம் செய்து இழந்த ராஜ்யத்தை மீட்கவும் தீர்மானித்தோம்.

உதயணன்: யாரெல்லாம்.

யௌ: மந்திரி மண்டலம் முழுவதும். தேவி வாசவதத்தாவிடம் சொல்லி அனுமதியும் பெற்றோம்.

உதயணன்: பத்மாவதியிடம் ஏன் வர வேண்டும்?

யௌ: புஷ்ப பத்ர முதலான சித்த புருஷர்கள் பத்மாவதியின் பிறந்த கால ராசிகளை வைத்து, அவள் சக்ரவர்த்தினி ஆவாள் என்றனர். இன்னும் தெளிவாக உங்கள் பெயரையும் சொன்னார்கள். அதனால் தான் இங்கு வந்தோம்.

வந்தோம் என்றால், ருமன்வானுக்கும் தெரியுமா?

தெரியுமே. மந்திரிகள் அனைவருக்கும் தெரியும்.

உதயணன்: ருமன்வான் தெரிந்ததாக காட்டிக் கொள்ளவேயில்லை. என்ன சாமர்த்யம்?

யௌ: அரசே! இந்த நல்ல செய்தியைச் சொல்ல மகா சேன அரசனின் தூதுவர்கள்,  இவர்களிடமே சொல்லி அனுப்புவோம்.

உதயணன்: நாம் அனைவருமே போகலாம். 

யௌ: அப்படியே ஆகட்டும்.

முடிவு: பரத வாக்யம் : (நாடகாசிரியரின் வாக்கு)

இந்த பூமியை ஹிமவானை தலைமையாகக் கொண்டு விந்த்ய குலாசலங்கள் குண்டலங்களாக பிரகாசிக்க தென் கோடியில் சாகரம் வரை ஒரே வெண் குடையின் கீழ் ஆளும் ராஜ சிம்ஹன் சம்பூர்ணமாக இந்த பூமியை ஆளட்டும். 

ஸ்வப்ன வாசவதத்தா

ஸ்வப்ன வாசவ தத்தா – 8

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.