போப் பிரான்சிஸ்
விவிலியத்தில் அரசன், அர்ச்சகர், இறைவாக்கினர் என்று மூன்று முக்கிய பாத்திரங்கள் உள்ளன. (King, Priest and Prophet). தாவீது விவிலிய அரசர்களில் முதன்மையானவன், எலியா(Elijah), எசாயா (Isaiah) போன்றோர் முக்கிய இறைவாக்கினர்கள், ஆரோன் முக்கிய அர்ச்சகர் அல்லது குரு. பழைய ஏற்பாட்டில் இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்றுக்கொண்டவர்களில் முதன்மையானவர் மோசஸ் (மோசே). இம்மூன்று பாத்திரங்களின் உச்சமும் இயேசுவில் வெளிப்பட்டது என்பது கிறிஸ்துவ இறையியல். ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னை இம்மூன்று பாத்திரங்களாகவும் கருதி செயல்பட வேண்டும் என்பதுவும் ஒரு வழிகாட்டல். ஆனாலும் கத்தோலிக்க கிறித்துவத்தில் இம்மூன்று பாத்திரங்களையும் நேரடியாக செயல்படுத்தும் பதவி போப்பினுடையது. திருத்தந்தை என்பது போப்பிற்கான நவீன தமிழ் வார்த்தை. வத்திக்கான் நாட்டின் தலைவர் என்கிற முறையில் நேரடியாக அரசாளும் பணியும், உலக நாடுகளுக்கும் கிறித்துவர்களுக்கும் பல வேளைகளில் பிற மதத்தினருக்கும் கடவுளின் குரலாக ஒலிப்பவர் என்கிற வகையில் இறைவாக்கினராகவும், கத்தோலிக்க மதத்தின் குருக்களின் தலைவராகவும் ஒரு போப் விளங்குகிறார். அண்மையில் மறைந்த திருத்தந்தை பிரான்ஸிஸ் இம்மூன்று பாத்திரங்களிலும் துடிப்புடன் செயல்பட்டவராக அறியப்படுகிறார்.
அரசன்

ஒரு சர்வதேச தலைவராக, வத்திக்கானின் அரசராக அவர் பல்வேறு உலக அரசியல் நிகழ்வுகளில் தன் கருத்துக்களை வெளிப்படையாக முன்வத்துள்ளார். பூமியின் வடக்கு தெற்கு அரைக்கோளங்களிடையே பெரிதாகி வரும் பொருளாதார இடைவெளி, சுற்றுச் சூழல் அரசியல் மற்றும் பெருகிவரும் தேசியவாத அரசியல் ஆகியவற்றில் அவர் முக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இவரது புகழ் பெற்ற ‘Laudato si’ (உமக்கே புகழ்) எனும் கடிதம் (epistle) சுற்றுச் சூழல் குறித்த அறக் குரலை வெளிப்படுத்திய உலகப் புகழ்பெற்ற ஆவணமாகும். விவிலியத்தின்படி மனிதன் இயற்கையை பயன்படுத்துபவன் மட்டுமல்ல அதை கவனித்துக்கொள்பவனுமாக (Steward) உள்ளான் என்பதை முன்வைத்து கண்மூடித்தனமான நுகர்வையும், அறமற்ற முதலீட்டியத்தையும் அவர் விமர்சித்துள்ளார். தன் பதவிக்கான பெயராக அவர் எடுத்துக்கொண்ட புனித பிரான்ஸிஸ் சுற்றுச் சூழலின் பாதுகாவலராக அறியப்படுகிறார். சிறந்த கவிஞருமான புனித பிரான்ஸிஸ் எழுதிய கவிதையின் வரியே போப் எழுதிய இந்த மடலின் தலைப்புமாக அமைந்தது. The Canticle of Creatures எனப்படும் அந்தக் கவிதையில் புனித பிரான்ஸிஸ் சூரியனை சகோதரன் என்றும் நிலவையும் நட்சத்திரங்களையும் சகோதரிகள் எனவும் அழைக்கிறார்.
ஏழை நாடுகளுக்காகவும், போர் நிறுத்தங்களுக்காகவும், அகதிகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் போப் பிரான்ஸிஸ். சட்டத்துக்குப் புறம்பான குடிபெயர்வுக்கு எதிரான டிரம்ப்பின் அதிரடியான நடவடிக்கைகளை ‘அவமானம்’ என சாடினார். ரஷ்ய யுக்கிரைன் போருக்கு எதிராக குரல் கொடுத்தார். மரபுக்கு மாறாக தானே நேரடியாக ரஷ்ய தூதரகத்துக்குச் சென்று தன் எதிர்ப்பை தெரிவித்தார். காசா மீதான தாக்குதலுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். காசாவிலிருந்த கிறிஸ்துவர்களுடன் தினசரி உரையாடி வந்திருக்கிறார்.
இறைவாக்கினர்
அறம் சார்ந்த குரலாக ஒலிப்பதனால் அவர் அரசியலிலும் இறைவாக்கினராக செயல்பட்டார் எனலாம். மத நல்லிணக்கத்தை மிகத் தீவிரமாக முன்னெடுத்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். போப் ஆகும் முன்பே அர்ஜெண்ட்டீனாவில் யூத மத குரு (ரபி) அபிரகாம் கோர்க்காவுடன் இணைந்து பல நேர்மறையான விவாதங்களில் ஈடுபட்டார். கத்தோலிக்கத்தை நேரடியாக எதிர்த்து உருவாகிய இங்கிலாந்து திருச்சபையின் தலைவரான அரசர் சார்லஸ் உடன் நெருக்கமான உறவைப் பேணினார். இங்கிலாந்து திருச்சபையினரும் கத்தோலிக்கரும் இணைந்து நிகழ்த்திய வழிபாட்டில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். இது முந்தைய காலங்களில் பரவலாக நிகழாத ஒன்று. இவற்றையெல்லாம் விட அவர் இதுவரை இல்லாத வகையில் இஸ்லாமிய நாடுகளுக்குச் சென்று அந்நாட்டின் தலைவர்களையும் மக்களையும் சந்தித்து உரையாடினார். மேற்குலகுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே இருந்த இடைவெளியை குறைக்க உதவினார். முதன்முதலாக ஈராக் நாட்டுக்குச் சென்ற போப் இவர்தான். அதிக இஸ்லாமியர்களைக் கொண்ட நாடான் இந்தோனேசியாவும் தற்போது போப்பின் மறைவுக்கு பரவலாக துக்கம் அனுசரித்து வருகிறது, போப் பிரான்சிஸ் அங்கு சென்றபோது இந்தோனேசிய மக்களும் அரசும் மத குருக்களும் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
அர்ச்சகர்
ஒரு கத்தோலிக்க குருவாக அவர் முன்னெடுத்தவற்றில் முதன்மையானது அண்மையில் நடந்து முடிந்திருக்கும் சினாட் (Synod) ஆகும். இது உலகளாவிய 140கோடி கத்தோலிக்கர்களிடம் கருத்து கணிப்பு நிகழ்த்தி அதன் வழியாக கத்தோலிக்க திருச்சபை எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது என்பதை எடுத்து விவாதித்து சில வழிமுறைகளை முடிவு செய்யும் பிஷப்களின் மாநாடு அது. இதன் வழியாக திருச்சபைக்குள் குருக்கள் அல்லாத பொது நம்பிக்கையாளர்களுக்கு (Lay members) அதிக பங்களிப்பை வழங்க வழிகோலும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் ஒருபோதும் திருச்சபை ஒரு ஜனநாயக அமைப்பு அல்ல என்பதையும் முன்வைத்தார். அது எல்லோர் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாய் இருந்தது.
வெளிப்படையாக தன் கருத்துக்களை சொல்பவர் என்பதனால் அவர் பல முறை தன் கருத்துக்களுக்காக வலதுசாரி கத்தோலிக்கர்களால் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். ‘ஒரு ஓரினச் சேர்க்கையாளர் கடவுளுக்கு சேவை செய்ய விரும்பினால் அவரைத் தீர்ப்பிட நான் யார்?’ என்று அவர் அளித்த பதில் பலரையும் தொந்தரவு செய்தது. லத்தீன் முறையில் திருப்பலி நிறைவேற்றுவதற்கு அவர் விதிகளை உருவாக்கினார். அது பொது வழிபாடாக இருக்கக் கூடாது என்றார். பிற மதத்தினருக்கும் மீட்பு உண்டு என்று கூறினார். இவை பாரம்பரியவாதிகளை மிகவும் அதிர்ச்சியடையச் செய்தவை.
அதே நேரம் அவர் திருச்சபையின் நம்பிக்கைகளை மாற்றவோ, அல்லது நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யவோ முயலவில்லை. அதிக பட்சமாக அவர் தற்பால் ஈர்ப்புடையவர்களுக்கு ஆசீர் வழங்கலாம் எனும் விளக்கத்தை அறிவித்தார். அந்த ஆசீர் ஏற்கனவே பொதுமக்களுக்கும், பிற மதத்தினவருக்கும் வழங்கப்படும் ஆசீர். அதை தற்பால் ஈர்ப்புடையவர்களுக்கும் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. சில முக்கிய உயர் பதவிகளில் முதன்முதலாக பெண்களை பணியமர்த்தினார். ஆனாலும் சில எல்லைகளை மீறி செயல்பட்டவர்களை மதவிலக்கமும் செய்துள்ளார்.
அரசர், அர்ச்சகர், இறைவாக்கினர் ஆகிய மூன்று பதவிகளிலும் அவர் தன் அடிப்படை கருதுகோள்களில் ஒன்றான ‘உலக மாந்தர் அனைவரும் ஒரே குடும்பம்’ என்பதை ஒட்டி அமைந்தன. எனவே அவர் மக்களை நோக்கிச் சென்றார், எல்லா மக்களையும் நோக்கிச் சென்றார். அவர்களுக்காக சிந்தித்தார், செயல்பட்டார்.
அடையாளச் செயல்கள்!
ஐரோப்பிய அரசுகளுக்கு முதன்மை குருவாகவும் பல நேரங்களில் நேரடி அரசியல் முடிவுகளை எடுக்கவும் சக்தி கொண்டிருந்த போப் பதவி இன்று மதத் தலமை என்று சுருங்கிவிட்டது. எனவே அவரது செயல்களும் சொற்களும் அடையாளத் தன்மை (Symbolic) கொண்டவையாகவே அமைந்துவிட்டன. ஆனாலும் அவை முக்கிய அடையாளங்கள். பிரான்சிஸ் எனும் பெயரைத் தேர்ந்து கொண்டதிலிருந்தே அவர் எளிமையின் அடையாளத்தை ஏற்றுக்கொண்டார். போப்பின் மாளிகையில் வசிக்காமல் பிற குருக்கள் இருக்கும் ஒரு சாதாரண அடுக்ககத்தில் தங்கினார். தங்கச் சங்கிலியை, சிலுவையை அணியாமல் வெள்ளியில் அணிந்தார். எப்போதும் மக்களை நேரடியாக சந்தித்தார். இறப்பதற்கு முந்தைய நாளிலும் அவ்வாறே செய்தார். இந்த எளிமை இன்றைய காலத்தில் தலைவர்களிடம் வெளிப்படவேண்டிய ஒன்று. தெற்கு சூடானில் சண்டையிட்டுக்கொண்டிருந்த இரு குழுக்களின் தலைவர்கள் அவரை சந்திக்க வந்தபோது அவர்களின் கால்களில் விழுந்து முத்தமிட்டு அமைதியை நிலை நாட்டுங்கள் என்றார்.
அடுத்த போப்
‘A Fat Pope Follows a Thin One’ – ஒரு ஒல்லி போப்புக்குப் பின் ஒரு குண்டு போப் – என்பது ஒரு சொல்வழக்கு. அதாவது எதிரெதிர் கருத்துக்களை உடையவர்கள், குணாதிசயங்களை உடையவர்கள் அடுத்தடுத்து போப்பாக வருவது வழக்கம். கடந்த மூன்று போப்புகளும் இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் மாறு பட்டவர்களே. இரண்டாம் அருள் சின்னப்பர் (John Paul II) மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கை உடையவர், கம்யூனிசத்தை வீழ்த்த வித்திட்டவர், உலக அரசியல் தலைவர்களோடும் நேரடி தொடர்பில் இருந்தவர். அடுத்து வந்த பதினாறாம் பெனெடிக்ட் ஒரு மரபுவாத இறையியலாளர். அடுத்து வந்த பிரான்ஸிஸ் அரசியல், சமூகம், ஆன்மிகம் ஆகிய மூன்றிலுமே தீவிரமாக செயல்பட்டவர், குறிப்பாக தன் கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்தவர். அதன் மூலம் இயேசு ‘பிரிக்கவே வந்தேன்’ என்று சொன்னதைப்போல திருசபையை பல நேரங்களில் இடதும் வலதுமாகப் பிரித்தவர். 2022ல் நான் வத்திக்கான் நகருக்குச் சென்றபோது போப்புக்கு எதிராக அங்கு போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றை ஒட்டியிருந்தவர்கள் மரபுவாத கத்தோலிக்கர்கள்.
அடுத்து வரும் போப் இவரைப்போன்ற எளியவராக இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. போப் பிரான்ஸிஸ் ஏசு சைபையிலிருந்து வந்தவர். இத்தகைய சபை சார்ந்த துறவிகள் தூய்மை, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்கிற மூன்று வார்த்தைப்பாடுகளை (வாக்குறுதிகளை) இறைவனுக்கு வழங்குகின்றனர். அதன்படி அவர் எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றியிருக்கலாம்.
அண்மையில் திருவாரூர் தேரை திருப்பும் வீடியோ ஒன்றைக் கண்டேன். ஒரு பெரிய அமைப்பை அங்குலம் அங்குலமாகத்தான் திருப்ப முடியும். இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட உலகின் மிகப் பழமையான அமைப்பை ஒரு வளைவில் தேரைத் திருப்புவதைப்போல திருப்ப முயன்றவர் போப் பிரான்ஸிஸ்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

ஆழ்ந்த கருத்துக்கள். அருமை