அமெரிக்காவின் 35வது அதிபராக இருந்தவர் ‘ஜே.எஃப்.கே’ என்று அழைக்கப்பட்ட ‘ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி’. ஜனவரி 20, 1961 முதல் நவம்பர் 22, 1963 அன்று அவர் படுகொலை செய்யப்படும் வரை அதிபராக பணியாற்றியவர். அவரது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சமூக சுதந்திரம், சமத்துவத்திற்கான குடிமக்களின் உரிமைப் போராட்டங்கள், கம்யூனிச நாடுகளைச் சாதுரியமாக கையாண்ட முயற்சிகளுக்காக இன்றுவரையிலும் மக்களாலும் அரசியல்வாதிகளாலும் போற்றப்படுபவர். வசீகரமானவர். ஊக்கமளிக்கும் உரைகள் ஆற்றுவதில் நிபுணர். விண்வெளி ஆய்வில் தொலைநோக்கு பார்வை கொண்டிருந்தவர். அரசியல் பின்புலம் கொண்ட குடும்பம், ராணுவத்தில் பணியாற்றின அனுபவங்கள் உறுதுணையாக இருக்க, 1960ல் குடியரசுக் கட்சியின் வேட்பாளர், அன்றைய துணை அதிபர் நிக்சனை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற்றார்.
இளமையான, அமைதியான, நம்பிக்கையான தலைமையை வரவேற்ற சிறப்புமிக்க தேர்தலாக மட்டுமில்லாமல் வெள்ளைமாளிகைக்குச் சென்ற முதல் கத்தோலிக்க அதிபராகவும் வரலாற்றில் இடம்பெற்றார்.
கென்னடி ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல திறமையான எழுத்தாளரும் கூட. செனட்டில் பணியாற்றும் பொழுது “Profiles in Courage” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். கொள்கைகளுக்காக தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்த அமெரிக்க செனட்டர்களின் கதைகளை ஆராயும் இந்தப் புத்தகம், 1957ல் வாழ்க்கை வரலாற்றுக்கான ‘புலிட்சர்’ பரிசை வென்றது.
கலைகளின் தீவிர ஆதரவாளராகவும் இருந்ததால் அவரது ஆட்சிக்காலம் கலைகளுக்கான கலாச்சார மறுமலர்ச்சியாகக் கருதப்பட்டது.
உலக அரங்கிலும் துணிச்சல் மிக்க அதிபராக அறியப்பட்டவர். அவரது ஆட்சிக்காலத்தில் பெர்லின் சுவர் கட்டப்பட்ட பொழுது மேற்கு ஜெர்மனிக்கு ஆதரவாக அவர் ஆற்றிய புகழ்பெற்ற “இச் பின் ஐன் பெர்லினர்” உரை, ஐரோப்பாவின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த உரை ஜனநாயகத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடையிலான பனிப்போர் போராட்டத்தின் நீடித்த அடையாளமாகவும் மாறியது.
லத்தீன் அமெரிக்காவில் சோவியத் செல்வாக்கை எதிர்க்க, முன்னேற்றத்திற்கான கூட்டணியைத் தொடங்கினார் கென்னடி. பிராந்தியம் முழுவதும் நிலவிய வறுமையையும் சமத்துவமின்மையையும் நிவர்த்தி செய்ய பொருளாதார வளர்ச்சியையும் சீர்திருத்தத்தையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கம்யூனிசத்தின் ஈர்ப்பை எதிர்த்துப் போராடும் திட்டத்தையும் வகுத்தார்.
ஃபுளோரிடாவிலிருந்து 90 மைல் தொலைவில் இருக்கும் கியூபாவில் சோவியத் ஏவுகணைகள் கட்டப்படுவதை அமெரிக்க உளவு விமானங்கள் கண்டுபிடித்தபோது இருநாடுகளுக்கும் இடையே நெருக்கடி தொடங்கியது. கியூபாவைச் சுற்றி கடற்படை முற்றுகையை விதித்து,ஏவுகணைகளை அகற்றக் கோரினார். உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் தத்தளித்தது. 1962ல் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே 13 நாட்கள் தொடர்ந்த பதட்டமான மோதலை தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டால் அமைதியாகத் தீர்த்து வைத்தன் மூலம் தேர்ந்த “ராஜதந்திரி” பாராட்டையும் பெற்றுச் சிறந்த தலைவரானார்.
இத்தனை சிறப்புமிக்க அதிபர் நவம்பர் 22, 1963 அன்று, டெக்சாஸின் டல்லாஸ் நகரில் மோட்டார் வாகன அணிவகுப்பில் சவாரி செய்து கொண்டிருந்தபோது ‘லீ ஹார்வி ஆஸ்வால்ட்’ என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளி தனியாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டாலும் வேறு சில சதிகாரர்கள் இருக்கலாம் என்ற பல சதி கோட்பாடுகள் இன்றுவரை உள்ளன. ஜே.எஃப்.கேவின் துயர மரணத்தால் நாடே அதிர்ச்சியடைந்தது.

அவருடைய படுகொலையை விசாரணை செய்த வாரன் கமிஷனின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘ஆஸ்வால்ட்’ மட்டுமே படுகொலையில் ஈடுபட்டார் என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், பல தசாப்தங்களாக இந்த முடிவில் சந்தேகம் உள்ளது. ஏராளமான சதி கோட்பாடுகள், பிற தரப்பினரின் ஈடுபாடு குறித்த கேள்விகள், விசாரணையின் முழுமை குறித்த சந்தேகங்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலாகியும் கூட, பொதுமக்களின் ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
படுகொலை தொடர்பான அனைத்து கோப்புகளும் பொதுமக்களுக்கு கிடைக்கவும் பல வருட ரகசியத்தையும் ஊகங்களையும் முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்பதால் 1992ல் ‘ஜேஎஃப்கே பதிவுச் சட்ட’த்தை அமெரிக்க காங்கிரஸ் வடிவமைத்தது. கென்னடியின் படுகொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகள் குறித்த பல்வேறு ஆவணங்களின் தொகுப்புகள் வெளியிடப்பட்டன. CIA அறிக்கைகள், FBI கண்காணிப்பு கோப்புகள், படுகொலைக்கு முன்னர் ஆஸ்வால்டின் நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் இதில் அடங்கும். இருப்பினும், பல முக்கியமான தகவல்கள் மறைக்கப்பட்டன.
வெளியிடப்பட்ட கோப்புகள், படுகொலைக்கு முன்னர் ஆஸ்வால்டின் நகர்வுகளைக் கண்காணிப்பதில் CIA மற்றும் FBI ஆகியவற்றின் ஈடுபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியது. உதாரணமாக, படுகொலைக்குச் சற்று முன்பு ஆஸ்வால்ட் மெக்சிகோ நகரத்திற்குச் சென்றது குறித்து இரு நிறுவனங்களும் அறிந்திருந்ததாக ஆவணங்கள் உறுதிப்படுத்துகிறது. அங்கு அவர் சோவியத், கியூபா அதிகாரிகளைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்புகளின் தன்மை இன்னும் தீவிரமான ஊகங்களுக்கு அடித்தளம் அமைத்தது.
2017 வருடம் நெருங்கிய பொழுதும் பெரும்பாலான ஆவணங்கள் தேசிய ஆவணக் காப்பகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. சதி கோட்பாட்டாளர்களும் வரலாற்றாசிரியர்களும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான ரகசியம் குறித்து கேள்விகளை எழுப்பியதால், மீதமுள்ள ஆவணங்கள் விவாதத்தின் மையமாக மாறியது.
வெளியிடப்பட்ட கோப்புகளில் மிகவும் விவாதிக்கப்பட்ட அம்சங்களில் ஒன்று, ஆஸ்வால்ட்-ஐ ஓரளவு மர்மமான நபராகச் சித்தரிப்பது. அவர் அமெரிக்காவிற்குத் திரும்பிச் செல்வதற்கு முன்பு சோவியத் யூனியனில் வசித்து வந்தார். அங்கு காஸ்ட்ரோ ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இருப்பினும், படுகொலைக்கு முன்னர் ஆஸ்வால்டின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கு எவ்வளவு தெரியும் என்பது குறித்து இன்னும் கேள்விகள் உள்ளன. இந்தக் கோப்புகளை வெளியிடுவது, ஜே.எஃப்.கே கொலை செய்யப்படுவதற்கு முன்பு அமெரிக்க அரசாங்கம் ஆஸ்வால்டை நெருக்கமாகக் கண்காணித்து வந்ததா என்பது குறித்து தெளிவுபடுத்தும்.
படுகொலை தொடர்பான ஊகங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது ஆஸ்வால்ட் மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அல்ல என்பதே! சிலர் மாஃபியா, சிஐஏ, அமெரிக்க ராணுவதுறையினர் கூட படுகொலையில் ஈடுபட்டதாக வாதிடுகின்றனர். இருப்பினும், இதுவரையில் வெளியிடப்பட்ட கோப்புகள் இந்தக் கேள்விகளுக்கு முழுமையாக பதிலளிக்கவில்லை. சில கோப்புகள் சில கட்டுக்கதைகளை அகற்ற உதவியிருந்தாலும், மற்றவை மர்மத்தை ஆழப்படுத்தியுள்ளன. வெளியிடப்பட்ட பல கோப்புகள் ஒரு மர்மமான “இரண்டாவது கொலையாளி” கோட்பாட்டைப் பற்றி விவாதிக்கின்றன, ஆனால் அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை.
விசாரணையில் ஈடுபட்ட பல நபர்கள் அந்த நேரத்தில் உயிருடன் இருந்தனர் என்பதாலும், முழு வெளிப்பாடு தேசிய பாதுகாப்பை சமரசம் செய்யக்கூடும் என்றும், உளவுத்துறை, பனிப்போர் கால நடவடிக்கைகள் பற்றிய முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தக்கூடும் என்றும் சில அரசு நிறுவனங்கள்(!) அஞ்சின என்பதாலும் ஆவணங்களை வெளியிடுவதில் மேலும் சிக்கலானது.
ஆனால் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் மீதமுள்ள ஜேஎஃப்கேயின் படுகொலை குறித்த கோப்புகளை வெளியிட நிர்வாகம் அழுத்தம் கொடுத்தது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுக்கு இப்போது ஏன் ட்ரம்ப் அரசு இந்தக் கோப்புகளில் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது? இதனால் அவருக்கு என்ன லாபம் இருக்கக்கூடும்?
படுகொலையைச் சுற்றியுள்ள வெளிப்படைத்தன்மைக்கான பொதுக் கோரிக்கை அதிகரித்து வருவது ஒரு காரணமாக இருக்கலாம். அதுவும் சமூக ஊடக யுகத்தில், ‘ஜேஎஃப்கே’யின் மரணம் குறித்த சதி கோட்பாடுகள் தொடர்ந்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தக் கோட்பாடுகள் அனைத்தும் பெரும்பாலும் அரசாங்கம் மக்களிடமிருந்து எதையோ மறைப்பது போன்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. ஜனரஞ்சகத் தலைவரான ட்ரம்ப், ஜனநாயக அரசின் ‘டீப் ஸ்டேட்’ அதிகார அமைப்புகள் எதிர்ப்பதை வெளியிடுவதன் மூலம் தான் யாருக்கும் அஞ்சாத ஒரு துணிச்சல் மிக்க அதிபர் என்ற பிம்பத்தை ஏற்படுத்த நினைக்கிறாரோ? அரசாங்க ரகசியத்தை சந்தேகிக்கும் பழமைவாத கட்சியினரையும் வாக்காளர்களையும் ஈர்க்கும் தந்திரமாக கூட இருக்கலாம்.
ட்ரம்பின் முந்தைய பதவிக் காலத்தில்(2017-2021) மத்திய புலனாய்வு துறை , கூட்டாட்சி புலனாய்வு அமைப்பு, பிற அமெரிக்க அரசு நிறுவனங்கள் மீது மக்கள் நம்பிக்கையற்றவர்களாக இருந்தனர். இருக்கின்றனர். இந்தக் கோப்புகளை வெளியிடுவதன் மூலம், தன்னுடைய அரசு வெளிப்படைத்தன்மையை விரும்பும் அரசு என்று காட்டிக் கொள்ள விழைகிறாரோ?
சில தகவல்கள், குறிப்பாக உளவுத்துறை நடவடிக்கைகளின் அடையாளங்களை வெளிப்படுத்தக்கூடிய ஆவணங்களை, தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக மறைத்து வைத்துள்ளதாக CIA மற்றும் FBI ஆகியவை குறிப்பிடுவது சில நிறுவனங்கள் அல்லது தனிநபர்களின் நற்பெயரைப் பாதுகாப்பதற்காக என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இப்பெயர்களை மக்கள் அறிந்து கொள்வதன் மூலம் ஜனநாயகக்கட்சியின் முகத்திரையைக் கிழிக்கலாம் என்று நினைக்கிறாரோ? அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சும்மா விட்டுவிடுவாரா என்ன?
ஒருவேளை முழு வெளிப்படைத்தன்மை இல்லாமல் வரலாற்று நீதியை அடைய முடியாது என்பதை ட்ரம்ப் அரசு உணர்ந்திருக்கலாம். கோப்புகளை வெளியிடுவதன் மூலம், ஒரு வரலாற்று காயத்தை நிவர்த்தி செய்வதற்கான பெரிய சமூக செயல்முறைக்கு தான் பங்களித்ததாக இனி தன்னுடைய வாக்காளர்களிடம் பெருமையுடன் முழக்கமிடலாம் என்று ட்ரம்ப் எண்ணுகிறாரோ?
2020 தேர்தல் முடிவுகளின் நியாயத்தன்மையை கேள்விக்குட்படுத்துவது முதல் “டீப் ஸ்டேட்” தனக்கு எதிராக செயல்படுகிறது என்ற கருத்தை ஊக்குவிப்பது வரை, தனது ஆதரவாளர்களை அணிதிரட்ட அவர் அடிக்கடி “சதி கோட்பாடுகள்” என்னும் சொல்லாட்சியைப் பயன்படுத்தி வருகிறார். இந்தப் போக்கு JFK படுகொலை குறித்த அவரது நிலைப்பாடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களையும் வெளியிட தான் நிர்பந்திப்பதாக கட்சியினரிடம் தெளிவுபடுத்தினார். இதனால் அவரை வெளிப்படைத்தன்மையின் வீரராகவும் நீண்டகால அரசாங்க ரகசியங்களுக்குப் பின்னால் உள்ள “உண்மையை” அம்பலப்படுத்த விரும்புபவராகவும் அவருடைய வாக்காளர்கள் கருதுகின்றனர்.
இந்த ஆவணங்களின் வெளியீடு அமெரிக்க வரலாற்றை நாம் புரிந்துகொள்ளும் விதத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். கென்னடி படுகொலை 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய தருணம். பலருக்கு, ஜே.எஃப்.கே கோப்புகளை வெளியிடுவது என்பது தேசிய சோகம் பற்றிய உண்மையை எதிர்கொள்வதும் தலைமுறைகளாக நிகழ்வை மூடிமறைத்துள்ள நீடித்த, நிச்சயமற்ற தன்மைகளை நிவர்த்தி செய்வதும் ஆகும்.
JFKன் படுகொலை, 9/11 தாக்குதல்கள், 2020 தேர்தல் முடிவுகள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரிப்புகள் ஆழமான சந்தேகங்களையே வெளிப்படுத்துகிறது. JFK கோப்புகளின் வெளியீடு இந்த சந்தேகங்களுக்கு உறுதியான பதில்களை வழங்கத் தவறினால் பல்வேறு சதி கோட்பாடுகளைத் தூண்டிவிடும் அபாயமும் உள்ளது.
பொருளாதாரச் சரிவில் நாடு சிக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவுக்கு இணங்க, மார்ச் 18,2025 அன்று ஜேஎஃப்கே, அவருடைய சகோதரர் ராபர்ட் எஃப் கென்னடி, சமூக உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்-ன் மரணங்கள் தொடர்பான வகைப்படுத்தப்பட்டிருந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டன.
80,000 பக்கங்கள் கொண்ட பதிவுகளை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ததன் மூலம் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவர, அரசியல் ஒழுங்கை சீர்குலைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
“உங்கள் நாடு உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்காதீர்கள். உங்கள் நாட்டிற்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்று கேளுங்கள்” 1961ல் ‘ஜேஎஃப்கே’ ஆற்றிய தொடக்க உரை அன்று பலரையும் வசீகரித்தது. இரு வருடங்களுக்கும் குறைவாகவே அதிபராக நீடித்தாலும் அவரது கொள்கைகள் அரசியல் மாற்றத்திற்கான ஒரு உத்வேகத்தைத் தூண்டியுள்ளது. கென்னடி குடும்பமும் அவரது லட்சியங்களும் அமெரிக்க அரசியலில் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கும்.
ட்ரம்ப் நிர்வாகம் JFK தொடர்பான பல ஆவணங்களை வெளியிட நடவடிக்கை எடுத்தாலும், அரசாங்கம் இன்றுவரை சில கோப்புகளைத் தொடர்ந்து மறைத்து வருகிறது. இதனால் படுகொலைக்குப் பின்னால் உள்ள முழு கதையும் தீர்க்கப்படாத மர்மமாகவே உள்ளது.
இனி ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வாளர்கள் வெளியிடப் போகும் தகவல்களுக்காக காத்திருக்கலாம். ஆவல் அதிகமுள்ளோர் அரசாங்க இணைய தளத்திற்குச் சென்று வாசிக்கலாம்.( https://www.whitehouse.gov/jfk-files/ )
மர்ம அரசியல் மரணங்களின் உண்மையை அறிந்தவர் தான் யாரோ?
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
