சிவக்குமாரின் துதிக்கைத் துழாவல் கவிதை நூல் குறித்து

கவிஞர் சிவக்குமார் ஏற்கனவே வெம்புகரி என்ற சிறுகதைத் தொகுப்பு, புல்லாங் குழலைச் சுவைக்கும் யானை, ஆத்மநாமின் கடவுள், தோடுடைய செவியள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவருடைய சமீபத்திய படைப்பு ” துதிக்கத் துழாவல் ” என்னும் கவிதைத் தொகுப்பு. 

கானுயிர்க் கலைஞனான சிவக்குமார் இயற்கை நேசர், புத்தகப் பிரியர், பயண ஆர்வலர் என்று பல தரப்பட்ட அனுபவங்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய கவிதைகளில் கவிஞரின் இத்தகைய பின்புலம் எல்லாக் கவிதைகளிலும் இரத்தமும் சதையுமாக ஊடாடி வருவதை எளிதில் இனங்காண முடியும். 

அப்படி இந்தத் தொகுப்பிலும், வாழ்வியல் சார்ந்த பல பொருண்மையில்  கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. எல்லாக் கவிதைகளிலும் உண்மையின் கூறுகள் மிளிர்வதைப் பார்க்க முடியும். எதுவும் கற்பனையில்லை. உண்மையின் அடிப்படையில் உதித்ததால்தான் உயிர் பெற்றிருக்கின்றன இந்தக் கவிதைகள்.

நிறைய கவிதைகளில் ஒரு சிறுகதைத் தன்மை இருக்கிறது. பல கவிதைகள் முதல் வாசிப்பில் பிடிபடவில்லை. அடுத்தடுத்த வாசிப்பில், வார்த்தைகளும் வரிகளும் காட்சிகளைப் புலப்படுத்துகின்றன. 

கவிதைகளை இரசிக்க , சுவைக்க பொறுமையும் அக்கறையும் வேண்டும் என்பதை ஒரு கவிதையில் அழகாக விளக்குகிறார் கவிஞர். 

ஒரு கவிதையை எப்படி வாசிக்க வேண்டும் ?

உரைநடையை வாசிப்பதைப்போல் கவிதையை வாசிக்க முடியாது என்கிறார் கவிஞர். வாசிக்கவும் கூடாது என்கிறார். 

வாகனத்தில் பயணித்துக் கொண்டே, சாலையோரக் கோயிலைப் பார்த்து கடவுளுக்கு ஒரு கையால் வணக்கம் சொல்லி வழிபாடு செய்வதைப் போல், எடுத்தேன் படித்தேன், முடித்தேன் என்று கவிதையை அணுக முடியாது. பிறகு எப்படி? 

பனிக்காலத்தில் மலைப்பிரதேசத்தில் சூடான தேநீர்க் கோப்பையை ஏந்தும் போது இருக்கும் பரவசத்தோடு கவிதையை வாஞ்சையோடு அணுக வேண்டும். பின் மிடறு மிடறாக இரசித்துக் குடிப்பது போல், வரி வரியாக வாசிக்க வேண்டும் என்கிறார். 

பேச்சிலும் மூச்சிலும்
வெண்புகை நடனமிடும்
மலைப் பிரதேசம் ஒன்றின்
பனிக்காலையின்
நேநீர்க் கோப்பையைப்போல்
கவிதையை கையில் ஏந்துங்கள்
சிறிது சிறிதாய் அருந்துவதைப் போல்
வரிகளை
நிதானமாக வாசியுங்கள்

கவிதையின் பல்வேறு நுட்பங்களை உள்வாங்க வேண்டும் என்றால், மனம் ஒன்றி வாசித்தால் தான் புலப்படும். மேலோட்டமாக வாசித்தால், கவிஞனின் உணர்வுநிலையோடு ஒன்ற முடியாது. கவிதையில் இடம் பெறும் வார்த்தைகளுக்கு எல்லா சமயத்திலும் ஒரே பொருள் இல்லை. சொல்லின் பொருள் என்பதைத் தாண்டி, ஒரு படிமமாக உருவகமாக கையாண்டிருக்கும் விதம் எல்லாம், முதல்  வாசிப்பில் புலப்படாமல் போகும் வாய்ப்பிருக்கிறது. 

கவிதை, ஆழ்மனதின் பிரதி என்றால், அந்த ஆழ்மனதை உணர்வதற்கு எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் போல் அமைந்திருக்கிறது இந்தக் கவிதை. 

பேருந்துப் பயணங்களில் சக பயணிகளின் நடவடிக்கைகளை கவனிப்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். ஒவ்வொருவரின் மனநிலை என்னவாக இருக்கும் என்று ஊகிப்பதே கூட ஒரு கலைதான். அப்படி ஒருமுறை கவிஞர் ஒரு பேருந்தில் பயணிக்கிறார். பக்கத்து இருக்கையில் ஒருவன் அமர்ந்திருக்கிறான். அப்போது, 

மலைப்பாதை சரிவில் பேருந்து
சரிவில் இறங்கியது மாதிரி
ஓர் அலைபேசி வந்தது.

எடுத்து, சொல்லு என்கிறான். சொல்லு என்று சொன்னதில் இருந்து எதிர்முனையில் அவனுடைய மனைவியாக இருக்கக் கூடும் என்று ஊகிக்கிறார் கவிஞர். மறுமுனையில் அவள் என்ன சொன்னாள் என்று தெரியவில்லை. ஆனால் அவன் முகம் கலங்க ஆரம்பித்து விட்டது.

ஏய், எதுக்கு இப்படியெல்லாம் பேசறவ ?

என்று அவன் சொல்லச் சொல்ல அலைபேசி துண்டிக்கப்பட்டது. அவன் கலங்கிய கண்ணுடன் அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பார்த்துக் கொண்டிருந்த கவிஞருக்கு மனம் தாளவில்லை. எதையாவது செய்ய வேண்டும் என்று மனம் பதைபதைக்கிறது.

அலைபேசியில் நுழைந்து
அந்த எண்களைப் பற்றி நடந்து
அப்படியெல்லாம் பேசிய
முகமறியா அந்தப் பெண்ணின்
கைகளைப் பற்றி
அவனுக்காக மன்றாடிக்
கொண்டிருக்கிறேன்

என்று முடிக்கிறார்.

முன்பின் அறியாத சக பயணிக்காக, முகமறியாப் பெண்ணிடம் மன்றாடுவது தான் கவியுள்ளம். அந்த அன்புள்ளம் வாசகனுக்கும் கடத்தப்பட்ட சூட்சுமம் நிகழ்ந்திருக்கிறது இந்தக் கவிதையில்.

மனிதர்கள் சதா கனவுகளைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். இருப்பதில் திருப்தி அடையாமல் இல்லாததை எண்ணி ஏங்குகிறார்கள். வாழ்வு குறித்தும், மரணம் குறித்தும் தேவையற்ற சிந்தனைகளில் மூழ்கி, இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் இழந்து தவிக்கிறார்கள். வாழ்கின்ற இந்த நொடி தான் உத்திரவாதம் என்ற உணர்வின்றி, தன்னைச் சுற்றி எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களை உணர மறுக்கிறார்களே என்று நாசூக்காக எடுத்துரைக்கிறார் ஒரு கவிதையில்…

வாழ்வு குறித்து
மரணம் குறித்த கவலைகளை
கொதித்துக் கொண்டிருந்த
மனதைக் கழட்டி
ஓரமாய் வைத்து விட்டு
ஒரு தேநீர் அருந்தினேன்
ஆஹா ,
கவுண்டர் கடை டீக்கு
என்ன ருசி

இப்படி கவுண்டர் கடை டீ போல சின்ன சின்ன சந்தோஷங்களின் தொகுப்புதானே வாழ்க்கை? அதில்லாமல் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கிறதா என்னும் கேள்வியை முன்வைக்கிறது இந்தக் கவிதை. 

நாகணாகுளம் கண்மாய்க் கரையில் காலையிலும் மாலையிலும் பலர் நடைப் பயிற்சி மேற்கொள்கிறார்கள். கண்மாயில் இயற்கை அழகு பல விதங்களில் பரவிக் கிடக்கிறது. சிறகுகளை உதறும் நாமக் கோழி, நீர்க்குச்சியில் நின்றபடி, நீரினுள் அசைவொன்றை சலிப்பின்றிக் கவனிக்கும் நாரை, நீர்ப்பரப்பைக் கிழித்தபடி நீந்தும் தாழைக் கோழி போன்ற இயற்கை அழகில் மனம் லயிக்காமல் செல்போனில் உரக்கப் பாடல் கேட்டபடி நடப்பதோடு, சுற்றி இருப்போரின் கவனத்தையும் சிதைக்கும் நடையாளர்களைக் கிண்டல் செய்கிறார் இயற்கையின் பெரும் இரசிகரான கவிஞர்… 

நாகணாகுளம் கண்மாயின் கரைச் சுற்றில்
கலோரிகள் எரிந்து கொண்டிருக்க
கடிகார எதிர்ச் சுற்றில்
எதிரே வருபவரின்
கையிலிருந்து கேட்கிறாய்
” என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ ? “

நடைப்பயிற்சியின் போது சுற்றுச் சூழலோடு ஒன்றி ஏகாந்த சிந்தனையில் ஆழ்ந்தால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும் என்பது தான் கவிஞரின் அங்கலாய்ப்பு.

தெரு நாய்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது. அவைகளுக்கு ப்ளூ கிராஸ் எனும் நீலச் சிலுவையின் பாதுகாப்பு இருக்கிறது. முன்பெல்லாம் தெருநாய்களை உள்ளூர் நிர்வாகத்தினர் கூண்டில் பிடித்துச் சென்று விடுவார்கள். அது முடியாது போன சூழலில் முக்குக்கு முக்கு நாய்கள் மாநாடு. அதுவும் இரவு நேரத்தில் அவைகளின் இராஜ்ஜியம் தான். ஏதோ பழகிய முகம் என்றால் பிழைத்தோம். அந்தப் பழக்கமும் நமது தெருவோடு சரி. அடுத்த தெருவில் துழைந்தால் அந்நியன் தான். உண்டு இல்லை என்று ஆக்கி விடும். கருத்தடை ஆபரேஷன் என்று என்னென்னவோ சொன்னாலும், நாய்த்தொகை ஒன்றும் குறைந்தபாடில்லை.

திடீரென்று குரைத்தபடி நாய் துரத்த வண்டியில் இருந்து தடுமாறி விழுதல் போன்ற சில்லறை அவஸ்தைகளை பொருட்படுத்தாதீர்கள், பாவம் அவர்கள், நீலச் சிலுவையால் ஆசீர்வதிக்கப்பட்ட பாக்கியவான்கள் என்று நையாண்டியாக ஒரு கவிதை…

அவர்கள் விளையாடும் போது
குறுக்கே வந்து
உங்கள் வாகனங்களைக் கவிழ்த்தது
உங்களின் பிழைதானே
லேசான சிராய்ப்பு தானே
கைகால் முறிவுதானே
உயிர்தானே போனது
முணுமுணுக்காதீர்கள்
அவர்கள் பாக்கியவான்கள்
நீலச் சிலுவைகளின்
நிழலில் இருக்கும்படி
ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்

இதில் உள்ள கிண்டலும் கேலியும் ரசிக்கத்தக்கது. மேலும் நீலச் சிலுவை என்பதில் உள்ள பொருள் முரண் நுட்பமாக வெளிப்படுகிறது. பொதுவாக சிலுவை என்பது மரணத்தின் குறியீடு. ஆனால் நாய்களை அந்த சிலுவைதான் மரணத்தில் இருந்து காக்கிறது என்பது தான் முரண்.

ஓரினச் சேர்க்கை, பாலியல் வறட்சி போன்ற சில பேசாப் பொருளையும் துணிந்து பேசியிருக்கிறார். இது போன்ற சிக்கல்களில் யார் பக்கமாக நின்று பேச வேண்டும் என்னும் தெளிவோடு உறுதியாக பேசுகிறார்.

குறைந்தபட்சம் ஒரு முத்தத்தையாவது எதிர்பார்த்து ஏமாந்த கவிதை, உங்கள் அவசரத்தைக் கண்டு, தன்னை அடியாழத்தில் புதைத்துக் கொண்டதை அறிவீர்களா என்று நேரடியாகவே குற்றம் காட்டுகிறார். இந்தப் பொருண்மைக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் பின்னட்டையில் போட்டிருப்பதிலேயே தெரிகிறது.

கவிதைத் தலைப்புகளைப் பற்றி ஒரு வார்த்தை. பல கவிதைகளுக்குத் தலைப்பில்லை. அது ஒரு குறையுமில்லை. நிறைய பேர் தலைப்பு தருவதில்லை. குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி, இந்த திசைவழியில் சிந்தி என்று வாசகனின் சிந்தனைப் பரப்பைக் குறுக்கி விடுகிறது என்ற பார்வையும் உண்டு.

மற்ற கவிதைகளுக்கு இவர் கொடுத்திருக்கும் தலைப்பு புதுமையாக இருக்கிறது. கலோரிகளை எரிப்பவர்களுடன் உடனிருப்பவர்கள், 5 ஜி நாட்களிலும் பட்டன் போன் உபயோகிப்பவர்கள், கடைசிக் காதல் கடிதத்தை கொலை செய்த நாளின் இரவு என்று தலைப்பில் இருக்கும் புதுமை உள்ளடக்கத்திலும், சொல்முறையிலும் இருப்பதை கவனிக்க முடிகிறது.

இலக்கியப் பரப்பில் தொய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பவர் கவிஞர் சிவக்குமார். தீவிர வாசிப்பாளர். வாசித்த புத்தகத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் மதிப்புரையை முகநூலில் தவறாமல் பதிவிடுவதை ஒரு தவம் போல் செய்கிறார். அது பலரையையும் வாசிக்கத் தூண்டும். அப்படி அறிமுகம் செய்யப்பட்ட பல புத்தகங்களை நான் வாங்கி வாசித்து பலன் பெற்றேன் என்பதையும் பதிவு செய்கிறேன்.

புத்தகம் வாசிக்கும் எல்லோரும் இந்த வேலையைச் செய்வதில்லை. அதற்கு நேரம் பிடிக்கும். உட்கார்ந்து மெனக்கெட்டு எழுத வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, மற்றவரை பாராட்டும் பெரிய மனசு வேண்டும்.

அந்த மனசுதான் படைப்பூக்கத்தின் அடிநீர் என்பதை சிவக்குமாரின் செழிப்பான படைப்புகள் உணர்த்துகின்றன.
இடைவெளி இல்லாமல் இயங்கி வரும் கவிஞர் சிவக்குமாரின் படைப்புகள் புதிய புதிய பரிமாணங்களில் பரிமளிக்கும் என்னும் நம்பிக்கை இருக்கிறது.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையம் !

பக்கம் 126
விலை ரூ 140
மௌவல் பதிப்பகம்
தொடர்பு 94435 58201


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.