சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

1. வேறெங்கோ நிகழ்ந்தது வாழ்க்கை


கனவில் விரிகிற அனேகங்களின் முணுமுணுப்பு

சொல்லப்பட்டதற்கு மேலில்லை
இதன் அர்த்தங்கள்
காண முடிந்ததற்கு அப்பாலில்லை
இந்த வெளிச்சங்கள்

ஒரு விளிம்புதான்
தாண்டினால் போதும்
எதற்கும் எந்த வணக்கமும் இல்லாதாகிவிடும்

அலைக்கழிகின்றன எறும்புகள்


2. பிளாஸ்டிக் எறும்புகள்

பிளாஸ்டிக் துணுக்கை எடுத்துச் செல்கிறது எறும்பு

காலி பாட்டில்களை
குப்பைத் தொட்டிகளில் தேடுகிறான் ஒருவன்

எங்கும் நிழலே இல்லையென்ற வெயில்

என் வாடா மலரே
இப்போது பூக்காதே

மீதமிருக்கும் நம்பிக்கையே
நீ இப்போது சொல்லாகாதே


3. புரிந்துகொள்ள முடியாத ஒரு அந்தியில்

நான் தவறவிட்ட பேருந்து
நிறம் மங்கிய என் ஆடைகள்
நிலத்தில் பாவாத என் கால்களின் பதட்டம்
என் காலிடறும் கல்
என் பாரமேந்தும் பூமி

மேற்கை நோக்குகிறேன்
அந்தி
அந்தி
புரிந்துகொள்ள முடியாத என் அந்தி


4. காணக்கிடைத்தது

அந்தக் குளத்திற்கும்
வானத்திற்கும் இடையில்
வெயில் நிரம்பியிருந்தது

காணக்கிடைத்தது

தவித்த பறவைகள்
கரையோர மீன்கள்
கரையில் தனித்து நிற்கும் ஒருத்தி

உண்டான சிறு அலைகளில்
வெங்காயத்தாமரைகள் மெல்ல நகர்கின்றன

பறவைகள் பறந்துவிட்டன
மீன்கள் ஆழங்களுக்கு
அந்த ஒருத்தியை காணவில்லை

அவள் நின்ற இடத்தில்
இப்போது வெயில்


5. ஆரஞ்சு உலகங்கள்

நாங்களிருந்த வார்டின்
முப்பது படுக்கைகளுக்கும்
தலா ஒரு ஆரஞ்சு தந்தார்கள்

முப்பது பூமிகள்
அல்லது
முப்பது உலகங்கள்

என்னருகே ஒரு மூதாட்டி
ஆரஞ்சை உறிக்கிறாள்
பூமியின் தோலை உறிப்பதுபோல

அந்த வார்டெங்கும்
ஆரஞ்சின் மணம்

சட்டென உலகில் நோய்களே இல்லை என்ற பிரமை

மரணத்திற்கெதிராக
ஆரஞ்சு மணத்தை ஏவும் கிழவியே
ஆரஞ்சு சுளைகளுடன்
இவ்வுலகங்களையும் விழுங்கு


6. இரண்டு உடல்கள்


இரண்டு உடல்கள் அது
சார்ந்திருக்கும் தாவரங்கள் எனலாம்

படர்க தாவரமே



Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.