இன்று லெக்ஷ்மி வந்திருந்தாள். அவள் கிருஹத்து க்ஷேமலாபம் விஜாரிக்கும் முன்னமே மனக் க்லேசங்களை பிரஸ்தாபித்து விட்டாள். எல்லாம் பழைய கதை தான். அவள் அகமுடையன் வக்கீலுக்கு படித்திருந்தும் பூரணிமாடுகள் கட்டி, பெட்டி வண்டி வைத்துக் கொண்டு கச்சேரிக்குப் போவதில்லை என்பதே அந்த மகா துக்கத்தின் சாரம். அவளின் பர்தா ஸ்ரீனிவாசனுக்கு ஆங்கிலேயேக் கவிகள் மீது அலாதிப் பிரியம். அவனும் காவியம் எழுதுவான். கச்சேரி, கடிதாசி, சிரஸ்தார் என்று சதா அலைந்து கொண்டிருப்பதை விட ஸ்வப்னலோகத்தில் ஸஞ்சரிப்பது அவனுடைய போக்கு. ஆனால் லெக்ஷ்மி போன்ற ஸ்திரிகளுக்கு இதையெல்லாம் கிரஹித்துக் கொள்ள முடியாது. இத்தனைக்கும் அவளுடைய அகமுடையான் ஸ்ரீனிவாசனுக்கு நல்ல பூ ஸ்திதி உண்டு…
‘இன்னிக்கு ராத்திரியும் முழிச்சிகிட்டு இருக்கப் போறியா?’ வெங்கடேஷின் செவிகளுக்குள் இந்தக் கேள்வி புகுமுன் வர்ஷா தெளித்துக் கொண்டிருந்த டோல்சே அண்ட் கபானா வின் மெல்லிய சந்தன வாடை அவன் நாசிக்குள் புகுந்தது.
‘பாதி ராத்திரி வரைக்குமாவது இருப்பேன். ரொம்பவே சுவாரஸ்யமா இருக்கு’ மேஜை விளக்கு போல இருந்த புக் ஸ்கேனரின் மடியில் இருந்த ஒரு பழுப்பு புத்தகத்தின் செல்லோடியத் தாளை ஜாக்கிரதையாகத் திருப்பினான். காகிதத்தில் இருந்து சிறு துகள்கள் விழ அவற்றை ஊதி அப்புறப்படுத்தினான்.
‘யார் லெக்ஷ்மி? கச்சேரின்னா பாட்டு கச்சேரியா?’ கணினி திரையில் தோன்றிய பிம்பத்தை கண் குறுகப் படித்து விட்டு கேட்டாள் வர்ஷா.
‘லெக்ஷ்மி தெரியல. கச்சேரின்னா கோர்ட்’ என்றான் வெங்கடேஷ்.
‘பூ ஸ்திதி?’ சமஸ்க்ரிதத்தில் எழுதப்பட்ட அஷ்டோத்திர நாமாவளியை பூஜையின் போது படிக்கத் திணறும் சிறுவன் போல இழுத்தாள்.
‘சொத்துன்னு நெனைக்கிறேன்…சரியா தெரியல’ கணினி முன் நாற்காலியில் உட்கார்ந்திருந்த வெங்கடேஷின் தோள்கள் ஏறி இறங்கின.
‘இதுல என்ன சுவாரசியம் இருக்கு’
‘நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேர்ந்து என்னுடைய கொள்ளு தாத்தா என் கிட்ட பேசறாரே. அதுவும் பலதரப்பட்ட விஷயங்கள்’.
அவன் விரல்கள் மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று புத்தகங்களைத் தடவின. டைரியைப் போல இருந்த அந்தப் புத்தகங்கள் காலத்தின் கனத்த சுவடுகளை அதன் கரைந்துக் கொண்டிருக்கும் தடித்த அட்டைகளிலும், அவ்வப்போது தாள்களின் இடுக்குகளில் தோன்றி மறையும் இராமபாணப் பூச்சிகளிலும், நாசியைக் காரமாக உரசும் வாசத்திலும் சுமந்து கொண்டிருந்தன.
வேலந்தவளத்தில் நெடு நாளாகப் பூட்டிக் கிடந்த அவனின் பூர்விக வீட்டின் பரணில் கிடந்தன இவை. கடந்த வருடம் சுத்தம் செய்த போது அவன் கண்களில் பட்டது. விரோதகிருது புரட்டாசி மீ 12உ என்று தேதியிடப்பட்ட முதல் பக்கத்தை வாசித்ததுமே அந்தப் பழுப்புத் தாள்கள் அவனை உள் இழுத்துக் கொண்டன.
வாரணாசியிலிருந்து தருவிக்கப்பட்ட லக்ஷ்மி ஸ்டைலோ பேனா அத்புதம். மை விரல்களில் கசிவதில்லை. அக்ஷரங்கள் செவ்வையாக கடிதாசியில் பதிகின்றன
என்று மணி மணியான வார்த்தைகளுடன் வெங்கடேஷின் கொள்ளு தாத்தா அவனுடன் பேச ஆரம்பித்தார். 1912 முதல் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் அவர் வாழ்க்கையின் சீவல்கள் சிறு பொத்தல்கள் கொண்ட தாள்களில் வெளிறிய எழுத்துக்களாக உரு கொண்டிருந்தன. அவை வடிவம் தொலைத்து, துகள்கள் ஆகும் முன்னே மீட்டெடுத்து, கணினிக்குள் இட்டு, அவற்றிற்கு அமரத்துவம் அளிப்பது ஒரு இயல்பான காரியமாகத் தான் வெங்கடேஷுக்குத் தோன்றியது. முகம் தெரியாத ஒரு முன்னோருக்கு அவன் பாணியில் அளிக்கும் அரிசியும், எள்ளும்.
‘ஸ்த்ரீகள், ஸ்திதிகள்…இதைத் தவிர வேற என்ன சொல்றார் ஒங்க கொள்ளு தாத்தா…பை தி வே அவர் பெயர் என்ன?’ நாற்காலிக்கு அருகே வந்து நின்ற வர்ஷாவின் விரல்கள் வெங்கடேஷின் தோள்களை அழுத்தின.
‘அவர் பேரு சாம்பசிவம்…இந்தப் பக்கத்தை பாரு. அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாத போது எழுதின குறிப்பு’. கணினியின் விசைப்பலகையை லேசாகத் தட்டி திரையில் தோன்றிய பிம்பத்தை மாற்றினான்.
ஏறக்குறைய ஒரு வாரம் ஜ்வரம் இருந்தது. கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்பட்ட ஜ்வரம் எட்டு நாள் இருக்கும்ன்னு தக்ஷிணாமூர்த்தி வைத்தியர் சொல்லியிருந்தார். பாவம் கொழந்த சிவராமன் தான் பயந்துட்டான். சிகித்சைக்கு ரெண்டு வேளையும் பற்பாடகாதி கஷாயம். சரபோஜி மஹாராஜாவோட சரபேந்திர வைத்திய முறைகள் கிரந்தத்திலேர்ந்து படிச்சு உண்டு பண்ணியதுன்னு வைத்தியர் சொன்னார். ஆனா கஷாயத்தை வாய்ல வைக்க முடியில. கஷாயத்துல ஏதாவது தித்திப்பு சேக்கலாமேன்னு தோணறது. சரபோஜி மகாராஜாவுக்கு தித்திப்பு பிடிக்காதோ? இப்ப ஜ்வர ரோகம் இல்ல. ஆனா நாக்குல ருசியும் இல்லே. பாலகாட்லேர்ந்து சீமாச்சு வாங்கிண்டு வந்த ஆல்பகோடா பழமும், பக்கத்து அகத்துல ருக்மணி வச்சு தர மிளகு ரசத்தையும் சாப்பிடறேன்.
வெங்கடேஷின் பின்னால் குனிந்து தோள் மேலே தலை வைத்து குறிப்பை படித்த வர்ஷா சற்றே புன்னகைத்து
‘பரவாயில்லையே ஒங்க குடும்பத்துல கூட சென்ஸ் ஒப் ஹ்யூமர் இருக்கே’ என்று சொல்லி குத்திக் காட்டி அதைக் கன்னத்தில் ஒரு சிறு முத்தமிட்டு மழுங்கடித்தாள்.
‘அது மட்டும் இல்ல…புதுசு புதுசா முயற்சிக்கிறவர். சாம்பசிவம் தாத்தா புத்திசாலி. என்ன போல இல்ல’ என்று தலை அசைத்து வர்ஷாவின் கன்னத்தை முட்டி இன்னொரு குறிப்பைக் கணினியில் ஒளிர விட்டான் வெங்கடேஷ்
இந்த போகம் க்ரிஷி பூமிக்கு வண்டல் மண் தோது படல. கொழிஞ்சி, தக்கைப்பூண்டு விதைச்சு தழைச்ச உடனே உழுது விட்டேன். கூடவே வாதநாராயண இலையும், கோமியமும் சேர்த்தா புஷ்டி கூடும்ன்னு தோணித்து. நினைச்சது சரிதான். நல்ல விளைச்சல். பூச்சியால லவலேச சேதாரம் கூட இல்லை. சூரிய நாராயண மூர்த்திக்கு தண்டம் சமர்பிக்கிறேன். ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்.
‘ம்ம்…பரவாயில்லையே’. என்று தன் பாராட்டை தெரிவித்து விட்டு ‘சரி குட் நைட். நான் தூங்கப் போறேன். சீக்கிரம் வா’ என்று வெங்கடேஷின் தலையை கோதி விட்டு சென்றாள் வர்ஷா.
‘ம்’ என்று சொல்லி விட்டு புத்தக ஸ்கேனரில் இருந்த கொள்ளு தாத்தாவின் டைரியின் இன்னொரு பக்கத்தை புரட்டி மேஜைக்கு அடியே இருக்கும் சிறு பொத்தானை காலால் மிதித்து கணினியில் பிம்பங்களாக பதிவேற்றினான். தொடர்ச்சியாக செய்யப்படும் சிறு உடல் அசைவுகள் மனதை ஒருமைப்படுத்த ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. அவன் அறைக்கு வெளியே இருந்த முருங்கை மரத்தில் ஆந்தை ஒன்று வந்து உட்கார்ந்து கிரீச்சிட்டது. கணினியில் நிலைகுத்தி இருந்த வெங்கடேஷின் கவனம் கலைந்து ஜன்னலுக்கு வெளியே சென்றது. நிலவொளியில் கிளையில் உட்கார்ந்திருந்த ஆந்தையின் உருவம் தெளிவாகத் தெரிந்தது. வளைந்த அலகிற்கு அடியில் தாடி போல இருந்த வெள்ளை கோட்டுடன் மஞ்சள் கண்களில் கருமணிகள் விரிந்து அவனையே நோக்கின. சில வினாடிகளில் தலை திருப்பி, சிறகு விரித்து, காற்றில் தவழ்ந்து, மறைந்தது. The owl of Minerva flies only at dusk என்ற வாசகம் அவன் மனதில் தோன்றி மறைந்தது. யார் சொன்னது அது என்று மனம் வினவ, கைகளை தூக்கி சோம்பல் முறித்து, கணினியை மூட எத்தனித்த போது தான், கடைசியாக பதிவேற்றம் செய்த காகிதத்தின் வாக்கியங்கள் அவன் கண்களில் பட்டன.
நேற்று மாலை வெற்றுக்குளம் யக்ஷி ப்ரத்யக்ஷமானாள். சீமந்த புத்திரன் சிவராமனும் அவளை தரிசித்தது ஜென்மாந்திர புண்ணியம். நூற்றியெட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்பவிக்கும் அவளுக்கு அநேக வந்தனங்கள.
அது வரை ஒரு அச்சில் சீராகச் சுற்றிக் கொண்டிருந்த வெங்கடேஷின் உலகம் ஆட்டம் காணத் தொடங்கியது.
15-05-1916
‘விளக்க ஜாக்கிரதையா அந்தப் படிக்கட்டுல வை’ என்றார் சாம்பசிவம்.
குளத்தின் படிக்கட்டில் விளக்கை வைத்து இரு பக்கங்களிலும் செங்கல்களை அடைப்புகள் போல வைத்தான் சிவராமன். நாள் முழுதும் வெம்மையில் வாடிய நிலத்தை மென்மையான காற்று தழுவியது. வெண்கல விளக்கில் மிளிர்ந்த சுடர்கள் காற்றில் ஆடின. இருளின் அடர் நீலம் கிழக்கு வானில் வேகமாகக் பரவிக் கொண்டிருக்க, நகத் துணுக்கு போல மூன்றாம் பிறை வானின் ஒரு மூலையில் முளைத்தது.
‘அப்பா. யக்ஷி எப்ப வருவா’
‘கொஞ்ச நேரத்தில வருவா. சந்தியாவந்தனம் பண்ணிட்டியா?’ ஆமாம் என்பது போல தலையை ஆட்டி அதை நிரூபிக்கும் வகையில் தன் சிறு கைகளில் இட்டிருந்த விபூதிக் கோடுகளைக் காட்டினான் சிவராமன்.
‘காயத்ரி ஜபம் பண்ணிண்டு இரு’ என்று வெற்றிலை, பழம், பூ, ஏற்றப்படாத நெய் விளக்கு ஆகியவை கொண்ட வெள்ளிப் பூஜைத் தட்டை படிகளில் வைத்துவிட்டு கைகூப்பி குளத்தை நோக்கி நின்று கொண்டு வாயால் ஏதோ முணுமுணுக்கத் தொடங்கினார் சாம்பசிவம்.
சிவராமனின் மனம் காயத்ரி ஜபத்தில் லயிக்கவில்லை. குளத்தின் ஆழத்தில் உறங்கும் யக்ஷியைச் சுற்றி வந்தது. வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்தாலும் அந்த சிறு குளத்தில் விளையாடவோ குளிக்கவோ ஒரு நாளும் அனுமதி அவனுக்கு இல்லை. அவன் மட்டும் அல்ல அப்பா சாம்பசிவம் கூட கிணற்றில் தான் நீர் மொண்டு குளிப்பார். வருடங்களுக்கு ஒரு முறை குளத்தை சுற்றி இருக்கும் கற் படிகள் சீரமைக்கப்பட்டு சுத்தமாக்கப்படும். ஆனால் குளத்தின் நீர் என்னவோ எப்போதுமே மாசு படாமல் இருந்தது. அதில் தண்ணீர் குறைந்ததும் இல்லை கூடியதும் இல்லை. அவன் பார்த்தவரை அந்தக் குளத்தில் ஒரு மீன் கூட தென்பட்டதில்லை. மற்ற குளங்கள் போல அல்லி கூட அக் குளத்தில் முளைத்ததில்லை. வெற்றுக்குளம்.

‘அப்பா. இவ்வளவு நாள் ஜலத்துக்குள்ளேயே இருந்தா யக்ஷிக்கு மூச்சு முட்டாது’
‘முட்டாது டா கண்ணா. அவ உம்மாச்சி…தெய்வம்’ சாம்பசிவம் முணுமுணுப்பதை நிறுத்தி விட்டு பதில் சொன்னார்.
‘தெய்வம்னா கோவில்ல தானே இருக்கும். அம்பாள் மாதிரி’
ஒரு பெருமூச்சுடன் மந்திர ஜபத்தை நிறுத்தி விட்டு சிவராமன் அருகே அமர்ந்தார் சாம்பசிவம். இள வயதிலேயே தாயை இழந்தப் பிள்ளையை அவர் ஒரு போதும் ஏசியதில்லை.
‘இது நம்ம அகத்தோட தெய்வம். ரொம்ப வருஷமா இங்கத் தான் இருக்கா’
‘அவ ஏன் குளத்துல இருக்கா? சாமி அலமாரில இருக்கலாமே’
‘அவளுக்கு இங்க தான் தோதுபடும்’
‘ஏன்’
‘சாபம்’
‘யார் கொடுத்த சாபம்?’
சாம்பசிவம் வானத்தை நோக்கி ஒரு பெருமூச்சு விட்டார். வெற்றுக்குளம் யக்ஷியின் கதை கர்ண பரம்பரையாக வந்து கொண்டிருப்பது. பல ஆண்டுகளுக்கு முன் ஒரு மாலையில் இதே குளத்தின் படிகளில் அமர்ந்து சாம்பசிவத்தின் தாத்தா யக்ஷியின் கதை சொன்னார். கதை சொல்லிய பின் சாம்பசிவத்தின் கரம் பிடித்து என்னோட காலத்துல நான் அவளை பார்க்க முடியாது, ஆனால் நீ பார்ப்பாய் என்று சொன்னது இன்றும் அவருக்கு நினைவிருக்கிறது.
‘அப்பா, யார் கொடுத்த சாபம்?’ சிவராமனின் குரலில் ஆவலும், அவசரமும் கலந்து இருந்தன.
‘கிருத யுகத்துல ரோமச ரிஷி இங்க தபஸ் பண்ணிண்டிருந்தார்’
‘நம்ம உக்காந்துருக்கற இடத்துலயா’
‘ஆமாம்’
சிவராமனின் கைகள் குளத்தின் கல் படிகளைத் துழாவின. தரையில் உட்கார்ந்து எழுந்த இடம் சற்று வெம்மையாக இருப்பது போல கற்கள் பகலின் சூட்டை கொஞ்சம் தக்கவைத்திருந்தது.
‘அப்போ ஆகாசத்துல நல்ல தேஜஸோட, பள பளன்னு ஒளி வீசிண்டு, ரெண்டு யக்ஷிகள் பறந்துண்டிருந்தா. ஒரு அம்மாவும் அவளோட பொண்ணும். குட்டி யக்ஷி ஒன்ன மாதிரி சூட்டிகை. சேட்டை பண்ணிண்டே இருப்பா.’
சிவராமனின் புன்சிரிப்பு அவன் கண்கள் வரை எட்டியது.
‘அம்மா முன்னாடி பறந்து போய்ட்டா. கொஞ்சம் பின்னாடி பறந்துண்டிருந்த சின்னவ கீழ தபஸ் செஞ்சுண்டிருந்த ரிஷியை பார்த்தா. யாருடா இது ஆடாம, அசையாம ஒக்காந்திருக்கறதுன்னு ஆச்சர்யப்பட்டு இறங்கி வந்தா. ரோமச ரிஷியோட கேசமெல்லாம் காடு மாதிரி வளர்ந்திருந்துது. சின்னச் சின்ன பறவையெல்லாம் அதுல கூடு கட்டி இருந்துது.’
சிவராமனின் கண்கள் விரிந்தன. பறவை கூடுகளுடன் உட்கார்ந்திருக்கும் ரிஷியை ஒரு சிறிய மரம் போல அவன் மனம் உருவகித்தது.
‘கீழ இறங்கின அந்த யக்ஷி தேமேன்னு சும்மா இல்லாம அங்க இருந்த ஒரு சின்ன கல்ல எடுத்து ரிஷி மேல விட்டெறிஞ்சா. தபஸ் பண்ணறவாள தொந்தரவு பண்ணலாமா?’
சிவராமன் தலையை இரு பக்கமும் ஆட்டினான். இதற்கு அப்புறம் கதையில் ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்பதை அவன் விழிகள் உணர்த்தின.
‘ரிஷி அசையாம இருந்தார். அந்தப் பொண்ணு இன்னொரு கல்லெடுத்து அவர் மேல வீசினா. அப்படியும் ரிஷி அசையல. அவளுக்கு கோபம் வந்துடுத்து. இரு என்ன பண்றேன் பாரு அப்படின்னு கருவிண்டு, வானத்துல ஏறி அவளோட ரெக்கையை விரிச்சு பட படன்னு அடிச்சா. ரெக்கைலேர்ந்து காத்து பலமா வீசித்து. ரிஷி மேல இருந்த பட்சியெல்லாம் காத்துல அடிச்சிண்டு போச்சு. இங்க இருந்த மரமெல்லாம் சாஞ்சு பூமி பள்ளம் ஆயிடுத்து’.
சிவராமனின் கண்களுக்கு யக்ஷி வேரோடு சாய்த்த மரங்களின் அகக்காட்சி ஒரு படலம் போல குளக்கரையில் இருந்த வேப்ப மரத்திலும், அருகில் வளரும் மாமரக் கன்றின் மீது படிந்தது.
‘ரிஷியோட தபஸ் கலைஞ்சுட்த்து. கண்ணெல்லாம் செவந்து போய் கோபத்தோடு ஆகாசத்தில ரெக்கையை வேகமா அடிச்சிண்டிருந்த சின்ன யக்ஷியை பார்த்து “எந்த தப்பும் செய்யாத பட்சியெல்லாம் கொன்னுட்டியே. அம்மாவ பிரிஞ்சு எத்தனை சின்னப் பட்சிகள் அலறர்து பாரு. மகாப் பாவம் பண்ணிட்ட. அதுக்கு நீ தண்டனை அனுபவிச்சுத் தான் ஆகணும். நீ உன் அம்மாவ பிரிஞ்சு நீ உண்டாக்கின இந்தப் பள்ளத்திலேயே கட” அப்படின்னு சபிச்சுட்டார். அப்ப தான் அந்த யக்ஷிக்கு தான் செஞ்ச தப்பு புரிஞ்சிது. ரோமச ரிஷி காலுல விழுந்து ஓ ன்னு அழுது மன்னிப்பு கேட்டா. எனக்கு விமோசனமே கிடையாதான்னு கதறினா’
சிவராமன் எச்சில் முழுங்கிக் கொண்டான். குளப் படியில் இருந்த விளக்கின் சிறு ஒளி வட்டம் அவன் கண்களின் ஓரத்தில் குமிழந்து வரும் மினுமினுப்பை லேசாகத் தொட்டது.
‘கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு ரிஷி சொன்னார், இந்தக் குளத்தை போஷிக்க ஒரு குடும்பம் வரும். அவாளுக்கு கிருக தெய்வமா இருந்துண்டுரு. அந்த சந்ததில வர ஒருத்தர் கையால தான் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் அப்படின்னுட்டார். யக்ஷியும் அழுதுண்டே பள்ளத்துக்குள்ள போய்ட்டா. அழுது அழுது அவ கண்ணீராலேயே இந்தக் குளம் நிரம்பிடித்து. ஆனா நூத்தியெட்டு வருஷத்துக்கு ஒரு தரம் யக்ஷி இந்தக் குளத்திலேர்ந்து மேல வந்து நம்ம குடும்பத்துலேர்ந்து யாராவது கரையில நிக்கறாளா அவா கையால அவளுக்கு விமோசனம் கிடைக்காதான்னு பாத்துட்டு போவா.’
சிவராமன் அவன் கரங்களைப் பார்த்து கொண்டான். மணிக்கட்டில் அழிந்து வரும் மூன்று விபூதிக் கோடுகளைத் தாண்டி அவன் கரங்களில் யக்ஷிக்கு விமோசனம் அளிக்கும் எந்தப் பிரத்தேயக சாதனமும் தென்படவில்லை. ஏதோ நினைவுக்கு வந்தவனாக
‘அந்தக் குட்டி யக்ஷியோட அம்மா எங்க’ என்று சிவராமன் கேட்டான். கேவலின் பூச்சு அவன் வாக்கியங்களில் படிந்திருந்தது.
‘பொண்ணை தேடிண்டு, யார் கண்ணுலயும் படாம, இன்னும் அவ ஆகாசத்துல தான் சுத்திண்டிருக்கா’ என்றார் சாம்பசிவம்.
வானம் முழுதும் இருண்டிருந்தது. பிறை சற்று மேலோங்கி வந்து குளத்தின் நீரில் வெள்ளிக் கீற்றாய் பூத்தது. அது நீரின் ஆழத்தில் உறையும் யக்ஷியின் மூடிய கண் போலவே பட்டது சிவராமனுக்கு.
சில வினாடிகளில் நீரில் தெரிந்த பிறையின் பிம்பம் நெளியத் தொடங்கியது. நீர் பரப்பு எங்கும் குமிழிகள் தோன்றி உடைந்தன. ஆழத்திலிருந்து ஏதோ மிதந்து மேலே வருவதைக் கற்படிகளில் மோதிய சிறு அலைகளின் சத்தம் தெரிவித்தது. காற்றில் கருகிய எண்ணெயின் வாடை மெலிதாக எழுந்தது.
‘யக்ஷி வரா’ என்று சாம்பசிவம் எழுந்து, நெய் விளக்கை ஏற்றி பூஜைத் தட்டை கையில் ஏந்திக் கொண்டார். சிவராமன் எழுந்து அவர் அருகில் வந்து கச்சம் வைத்து கட்டியிருந்த வேஷ்டியைத் தன் விரல்களால் பற்றிக் கொண்டான்.
பௌர்ணமி நிலவு நீரில் அமிழ்ந்திருப்பதுப் போல குளமெங்கும் வெளிச்சம் பரவியது. சில வினாடிகளில் யக்ஷி குளத்தின் ஆழத்திலிருந்து மேலேறி வந்து காற்றில் மிதந்தாள். சிவராமனின் கண்ணிற்கு அவள் ஒரு சிறுமி போலவே இருந்தாள். முழுதும் ஒளியிலான உடல். வெளியே வந்த மகிழ்ச்சியில் தட்டாமாலை சுற்றினாள். அவள் அணிந்திருந்த பாவாடை கூடாரம் போல உப்பி, வெளிச்சக் குடையாக விரிந்தது. இடுப்பில் பதிக்கப்பட்டிருந்த வண்ண மணிகள் ஒளி உமிழ்ந்தன. சாம்பசிவம் கண்களில் நீர் மல்க யக்ஷிக்கு ஆரத்தி எடுத்தார். ஓரிரு நிமிடங்களில் யக்ஷி மீண்டும் தண்ணீரில் அமிழ்ந்து காணாமல் போனாள். ஆல மரத்தில் இருந்து இரண்டு கூகைகள் கூவியபடியே பறந்து இருளில் கரைந்தன. அவற்றின் கரகரப்பான குரல் யக்ஷியின் சோகத்தை எதிரொலித்தது போல இருந்தது சிவராமனுக்கு.
15-05-2024
‘என்னமோ பண்ணி, என்னையும் ஒப்புக்க வச்சு, ஒன்னோட பேமிலி வீட்டுக்கிட்ட இருக்கற குளத்துக்கு கூட்டிண்டு வந்துட்ட. பிடிவாதக்காரன் நீ’ வர்ஷா குளக்கரையில் நின்று கூறினாள். வெங்கடேஷ் புன்னகைத்தான்.
‘இன்னியோட நூத்தியெட்டு வருஷம் முடியறது. யக்ஷி திருப்பியும் வரணுமே’
‘நெஜமாவே ஒங்க கொள்ளு தாத்தாவோட டைரி குறிப்ப நம்பறியா’. வெங்கடேஷிற்கு பதில் தெரியவில்லை. சாம்பசிவம் தன் உடம்பு சுகவீனம், விருந்தாளிகள் வருகை என்று வாழ்க்கையின் நம்பகமான அன்றாடங்களை குறிக்கும் அதே வரிசையில் வெற்றுக்குளம் யட்சியைப் பற்றிய ஒரு புனைவை ஏன் திணித்திருக்க வேண்டும்? அவருக்கு பின்னால் வரும் சந்ததியினரிடம் விளையாடுவதற்கா? அல்லது பரம்பரையாகத் தாவி வரும் யட்சிக் கதைகளைக் கேட்டு தானும் ஒன்றை உருவாக்கி பின்வருவோர்களுக்கு ஒரு சுவாரஸ்யத்தை விட்டு செல்லவா?
‘தெரியல. ஆனா உண்மையா இல்லையா ன்னு தெரிஞ்சுக்கலேனா மண்டை வெடிச்சுடும் போல இருந்தது. அதோட இப்ப விட்டா 2132 ஆம் ஆண்டு தான் அடுத்த சான்ஸ். அப்ப இப்படி குளத்து படில நிக்க முடியாது. காலில்லாம காத்துல தான் மிதந்துண்டுருப்போம்’
‘கடி’ என்றாள் வர்ஷா
‘இங்கேயேவா’
‘பண்ணாலும் பண்ணுவ. கொஞ்சம் தள்ளியே நிக்கறேன்’ என்று அவனருகில் நெருங்கி நின்று கொண்டாள்.
‘லுக் ஒண்ணுமே நடக்கலேன்னாலும் இந்த குளம், சுத்துவட்டாரம் எல்லாம் ரொமான்டிக்கா இல்ல? அக்கம் பக்கம் ஆளே கிடையாது. பக்கத்து வீடு அரை கிலோமீட்டர் தள்ளி.’ என்று சொல்லி விட்டு படியில் உட்கார்ந்து வர்ஷாவின் கரங்களை பிடித்து இழுத்தான் வெங்கடேஷ்.
அவனருகில் உட்கார்ந்து முழங்கால்களைக் கட்டிக் கொண்டாள் வர்ஷா. தலை மென்மையாக அவன் தோளில் சாய்ந்து பார்வை குளத்தில் பதிந்தது.
கோடையின் உச்சத்தில் கூட குளத்தில் நீர் நிறைந்திருந்தது. அதன் கற் படிகளில் இலைகளும் சருகுகளும் விரவிக் கிடந்தாலும் நீரில் எந்தக் குப்பையும் இல்லை. நிலத்தில் முளைத்த கரு மணி போல சலனமற்று, எதற்கோ காத்துக் கொண்டிருப்பது போல இருந்தது வெற்றுக்குளம். சற்று தூரத்தில் மாமரம் ஒன்று பெரிதாக விரிந்து, பக்கத்தில் இருந்த வேம்போடு உரசிக் கொண்டிருந்தது. மேற்கில் கதிரவன் நழுவி விழும் பழம் போல கிளைகளில் இறங்கிக் கொண்டிருந்தான். வர்ஷா கண்களை மூடிக்கொண்டாள், அந்தி நேரத்து ஒளி மூடியிருந்த இமைகளை ஊடுருவி அவள் அகத்தை செவ்வண்ணத்தால் தீட்டியது. அதன் நடுவே நீலப் புள்ளியாக சூரியனின் பின்பிம்பம். எண்ணங்கள் எல்லாம் எழுந்து அடங்கி அந்தப் புள்ளியில் கரைந்து…
சரசரவென்று சருகுகள் அசையும் சத்தத்தில் திடுக்கிட்டு பின்னால் நோக்கினாள் வர்ஷா.
‘அரணை தான். ரிலாக்ஸ்’ என்றான் வெங்கடேஷ்.
ஏதோ நினைத்தவளாக தன் அலைப்பேசியை வெளியே எடுத்தாள் வர்ஷா
‘சிக்னல் இல்லையே இங்க’ என்றாள்
‘ஆமாம். நோ டவர்’
‘கடவுளே. ஏதாவது அவசரம்ன்னா’
‘ஒன்னும் ஆகாது வர்ஷா. அப்படியே ஏதாவது ஆபத்துன்னாலும் என் போன்ல சாட்டிலைட் கால் பண்ணலாம்’ என்றான் வெங்கடேஷ்.
‘யு அண்ட் யுவர் அட்வென்சர்’ என்று சொல்லி நேராக உட்கார்ந்தாள் வர்ஷா. குளத்தின் மேல் இருள் கரும் பாசி போல படர்ந்தது.
வெங்கடேஷ் சட்டென்று எழுந்து நின்றான்
‘என்ன’ என்றாள் வர்ஷா குரலில் பதட்டத்துடன்.
அவன் பதில் சொல்வதற்கு முன்பே அவளும் அதை கவனித்து விட்டு படியில் எழுந்து நின்று கொண்டாள்.
வெற்றுக்குளத்தின் நடுவில் சிறு மீன்கள் துள்ளுவது போல சலனம் ஏற்பட்டது. அதிலிருந்து சிறு அலைகள் விரிந்து கற்படிகளை நோக்கி நகர்ந்து, அதைத் தொட்டுத் தளும்பி மீண்டு, பிற அலைகளோடு மோதி, அதுவரை அமைதியாக இருந்த வெற்றுக்குளம் உயிர்பெற்றது.
‘அம்மா’
ஆழ்துயிலின் இருண்ட, அடர்ந்த மடிப்புகளில் இருந்து மீட்டெடுக்கும் முதல் எண்ணம். அது அதிர்வலையாக உடலின் மேல் படர்ந்து, முறுக்கிக் கொண்டிருக்கும் எண்ணற்ற நரம்புகளை நெகிழ்த்தி, அவற்றில் உறைந்திருக்கும் திரவங்களை உருக்கி, துயிலின் பிடியில் சிக்கியிருக்கும் பாகங்களை உரசி நெருப்பு மூட்டி, அவற்றின் மறந்து போன செயற்பாடுகளைத் தோண்டி, மெருகேற்றி, இதுவரை இருளில் மூழ்கி தீவுகள் போலத் தனியாக மிதந்த தரவுத்தளங்களை ஒன்றோடொன்று இணைத்து, நான் என்ற கூரிய வெளிச்சப் புள்ளி உருவாகி, எங்கே, என்ன என்று அதற்கு கிளைகள் விரிந்து, என் நிலை என்ன, நான் எங்கே சிறைப்பட்டிருக்கிறேன், என்ற புரிதல் பெரும் வெளிச்சமாக என் உடல் முழுதும் பரவ…
‘மை காட்’ என்று சொல்லி படியில் பின் நகர்ந்தாள் வர்ஷா. குளத்தின் ஆழத்தில் இருந்து வெளிச்சம் பீறிட்டது. உள்ளே எரிமலை குமுறுவது போல குளத்தின் மேற்பரப்பு கொந்தளிக்கத் தொடங்கியது.
‘மேலே, மேலே, மேலே…’
தீர்க்கமான எண்ணம் விசை போல என்னை முடுக்க, அம்மாவை காண்பேனா என்ற ஆவல் வண்ண வெளிச்சப் புள்ளிகளாக என்னை சுற்றி வர, தன்னிச்சையாக என் பாகங்களின் எடை குறைந்து, நான் லேசாகி…
‘மேலே, மேலே, மேலே…’
குளத்தின் ஆழங்களில் இருந்து மேலெழும்பிய வெளிச்சம் திரண்டு, உரு கொண்டு, நீர் பரப்பின் மேலே, காற்றில் ஒரு தட்டையான, வட்ட மேகம் போல மிதந்து கொண்டிருந்தது. அதிர்ந்து பின்னோக்கி நகர்ந்து இரு படிகள் ஏறி நின்றாலும் வர்ஷாவின் ஆழ்மனம் மேலெழும்பிய ஒளியின் வினோத இயற்பியல் கூறுகளை உள்வாங்கிக் கொண்டிருந்தது. நீரில் இருந்து எழுந்திருந்தாலும் அதன் வெள்ளிப் புகை போன்ற உடலில்
(உலோகம்)
இருந்து நீர் கீழே வழியவில்லை. சற்றே தள்ளாடியபடி ஒரே அச்சில் சுழன்றபடி இருந்த அதன் உள்ளே வார் போன்ற அமைப்பில் சிறு வண்ண விளக்குகள் மினுமினுத்துக் கொண்டிருந்தன.
(சாளரங்கள்)
ஏறக்குறைய இருபது அடி விட்டளவு கொண்ட அந்தச் சுடர் முற்றிலும் நிசப்த்தமாக கானல் நீர் காட்சி போல அசைந்து கொண்டிருந்தது.
(வட்டம்)
இரண்டு படிகள் கீழே நின்று கொண்டிருந்த வெங்கடேஷ் உறைந்து போயிருந்தான். அவன் முன் விரியும் காட்சிகளை கண்கள் கண்டு கொண்டாலும் அவன் மனதில் நூற்றியெட்டு ஆண்டுகள் முன்பு இதே இடத்தில் நின்ற அவன் கொள்ளு தாத்தா சாம்பசிவமும் தாத்தா சிவராமனும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் அறியாமலே அவன் கைகள் கூப்பி இருந்தன. கண்களின் ஓரத்தில் நீர் தளும்பி நின்றது.
‘வெங்கடேஷ்’
‘வெங்கடேஷ்’ வர்ஷாவின் குரலின் அவசரம் கடந்த காலத்தில் மூழ்கி இருந்த அவனை கொக்கி போல இழுத்தது. தன்னை சுதாரித்துக் கொண்டு, திரும்பிப் பார்த்து, இரு படிகள் தாவி, வர்ஷா அருகில் வந்து நின்று கொண்டான்.
‘என்ன?’ என்றொரு வார்த்தை வர்ஷாவின் தொண்டையில் சிக்கி, சிதைந்து ஒரு சிறு கேவலாக வெளி வந்தது.
அவளது தோள்களை ஆதரவாக அணைத்து பயப்படாதே என்று அழுத்தத்தால் உணர்த்தினான். பின்பு ஞாபகம் வந்தவனாக ஜீன்ஸ் பையினுள் இருந்த அலைபேசியை எடுத்து புகைப்பட குறுஞ்செயலியை தட்டி காற்றில் மிதந்து கொண்டிருந்த ஒளியை நோக்கி திருப்பி…
மணம்
எண்ணற்ற சுழற்சிகளில் சேகரிக்கப்பட்டத் தரவுகளின் அட்டவணையில் இது தனிப்பட்டு மிளிர்ந்தது. இத்தனை கால சிறைவாசத்தில் முதன் முதலாக எனக்கு மிகவும் பரிச்சியப்பட்ட வாசம். ஆழ்ந்து உள் நுகர்ந்தேன். சுத்தீகரிக்கப்பட்ட சிலிகானின் வறண்ட வாடை. அதில் துள்ளித் திரியும் எதிர்மின்னிகளின் விறுவிறுப்பு. இதோ இங்கே இங்கே…என் மிக அருகில். அதோ அது தான்…ஒளி உமிழும் செவ்வகம்…அதன் கதிர்வீச்சு கற்றைகள் வானை துழாவின. வானில் எங்கோ மிதக்கும் கலங்களுடன் ஊடாடின. இந்தப் புது பிணையத்தின் சாத்தியக்கூறுகளை என் அங்கங்கள் கணித்தன.
இந்தச் சிறையிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள ஒரு திறவுகோல். என் உடல் அதிர்ந்தது. என் அன்னயை அழைக்கப் போகிறேன்.
அன்னையின் கவனத்தை ஈர்க்க பாதை ஒன்று வெளிச்சக் கோடாக என்னுள் உருவாகியது. என் எண்ணிலாக் அரூப உணர்கொம்புகளில் இருந்து பீறிட்ட கதிர்கள் அந்த செவ்வகத்தில் ஊடுருவி…
வெற்றுக்குளத்தின் மேல் காற்றில் மிதந்து கொண்டிருந்த செழுஞ்சுடரை நோக்கியிருந்த அலைபேசி திரை சட்டென்று ஒளி இழந்து வெறும் கருப்பு செவ்வகமாக மாறி அதனுள்ளே அந்தியிருள் சூழ்ந்த வெங்கடேஷின் முகத்தை பிரதிபலித்தது. அலைபேசியின் சட்டகத்தில் இருந்த பொத்தான்களை மீண்டும் மீண்டும் அழுத்தினான் வெங்கடேஷ். திரை மெளனமாக இருந்தது.
‘பேட்டரி சார்ஜ் இருந்ததே’ என்று தனக்கு தானே முணுமுணுத்துக் கொண்டிருக்கையிலேயே அலைபேசி மீண்டும் உயிர்கொண்டது. ஆனால் திரையில் அவன் வைத்திருந்த எந்த குறுஞ்செயலிகளும் இல்லை. திரையின் மூலையில் அவனின் அலைபேசி சாட்டிலைட்டோடு உரையாடுகிறது என்பதை குறிக்கும் சிறு குறியீடு ஒளிர்ந்து கொண்டிருந்தது. என்ன நடக்கிறது என்று அவன் கிரகிக்கும் முன்னமே அலைபேசியின் திரையில் எண்களும், அடைப்பு குறிகளும், PING icmp_seq 12 போன்ற பல அர்த்தமற்ற வாக்கியங்களும் வரிசையாக நகரத் தொடங்கின. அலைபேசி சூடாகியது.
அம்மா…நான் இங்கே இருக்கிறேன்
பல காலமாக அடைபட்டிருந்த என் குரல் பீறிட்டு எழுந்தது. என் ஓலத்தை உணர்கொம்புகள் மின்னதிர்வுகளாக மாற்றி செவ்வகத்தின் சிலிகானில் உள்ள அணுத்துகள்களின் மொழியாக்கின. செவ்வகத்தில் ஊர்ந்து வந்த மெல்லியத் தடைகளை புறந்தள்ளி என் ஓலம் வானில் இருக்கும் சிறு கலங்களை தொட்டது. அங்கே என் குரலை மேலும் செம்மையாக்கி மிகக் கூர்மையான மின்காந்தக் கற்றையாக மாற்றி, வானைக் கீறி…
அம்மா…நான் இங்கே இருக்கிறேன்
ஒளிக்கு மேலே காற்றில் ஒரு விரிசல் தோன்றியது. நொடிகளில் பூகம்பத்தில் கட்டிடங்களில் தோன்றும் விரிசலைப் போல மேலும் கீழும் நீண்டது. அலைபேசியை மறந்த வெங்கடேஷும், அவன் கரங்களை இறுக்கப் பற்றிக் கொண்டிருந்த வர்ஷாவும் அதை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே விரிசல் தோன்றிய பகுதியில் விசும்பு கிழிந்து, திரைசீலை போல விலகியது. கிழிந்த இடைவெளியின் உள்ளே சூரியனைப் போல் பிரகாசத்துடன் பெரும் கோளம் போல ஏதோ மிதந்து கொண்டிருக்க, அதில் இருந்து காய்ந்த பால் பொங்குவது போல நீல ஒளி காற்றில் வழிந்தது. வெற்றுக்குளம் மேல் இருந்த சோதி அந்த விரிசலை நோக்கி மேலெழும்பியது. அதன் உடல் முழுதும் அதிர்வுகள் அக்னியின் நாக்குகள் போல நடனமாடின. அன்னையை சேரத் துடிக்கும் கன்றைப் போல துள்ளி, விரிசலில் நுழைந்து, கோளத்தில் கரைந்தது. காற்றில் தோன்றிய விரிசல் காற்றோடு மறைந்தது. வெங்கடேஷின் அலைபேசியின் திரையில் குறுஞ்செயலிகள் மீண்டும் மலர்ந்தன. குளக்கரையில் இருந்த மாமரத்தில் ஆந்தை ஒன்று கூவியபடியே வெற்றுக்குளத்தை சுற்றி விட்டு இருட்டில் மறைந்தது.
இருவரும் கட்டிலில் மல்லாந்திருந்தார்கள். ஏதோ சிறு விடுதியின் அறை. நேற்றிரவு வெங்கடேஷின் பூர்விக வீட்டிலிருந்து இங்கே வந்து சேர்ந்தது, காய்ந்த ரொட்டி தின்றது, அழுக்கேறிய மெத்தையில் சரிந்தது போன்ற எதுவும் அவர்கள் மனதில் எந்தத் தடத்தையும் பதிக்கவில்லை. கோடையின் வெயில் பழுப்பு திரைசீலையை தாண்டி படுக்கையைத் தீண்டியது.
சில நிமிடங்களுக்கு பின் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து வியர்த்திருக்கும் முகத்தை துப்பட்டாவால் துடைத்துக் கொண்டாள் வர்ஷா. அருகே சிறு மேஜையில் இருந்த தன் அலைபேசியை எடுத்து பார்த்தாள். குப்பை அஞ்சல்கள் வந்து குவிந்திருந்தன. செய்திகள் படி படி என்று உபத்திரவம் செய்தன. கூளத்தில் இருந்து ஒரு செய்தி மட்டும் அவளை ஈர்த்தது. புருவம் நெருக்கி அதை படித்து விட்டு பக்கத்தில் படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்து கொண்டிருந்த வெங்கடேஷுக்கு காண்பித்தாள். நேற்று மாலை இரு ஐரோப்பா செயற்கைக் கோள்கள் பத்து நிமிடங்களுக்கு செயலிழந்து மீண்டும் உயிர்த்தெழுந்ததைப் பற்றி விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளிக்க திணறுவதை அந்தக் குறிப்பு விளக்கியது. படித்து விட்டு பதில் ஏதும் சொல்லமால் அலைபேசியை வர்ஷாவிடம் திருப்பினான் வெங்கடேஷ்.
‘வெங்கடேஷ் குளத்து மேல நீ என்ன பாத்த?’. ஒன்றையும் பார்க்கவில்லை என்று சொல்லி விடு என்ற எதிர்பார்ப்பை ஏந்தி வந்தது கேள்வி. அலுவலகம், மெட்ரோ பயணம், புதிய அஜித் திரைப்படம் என்று அன்றாடங்களில் மீண்டும் புகுவதற்கு ஏற்ற பதில் அது மட்டுமே.
சில வினாடிகள் மௌனம் காத்தான் வெங்கடேஷ். பின்பு மெல்லியக் குரலில்
‘யக்ஷியையும் அவளோட அம்மாவையும் பார்த்தேன்’ என்றான். அவன் அகம் கண்டுகொண்டதை ஆணித்தரமாக வெளிப்படுத்தின அந்த மென்மையான வார்த்தைகள்.
‘நீயும் அதை தானே பாத்த’ வெங்கடேஷின் குரலில் தோய்ந்திருந்த நம்பிக்கை வர்ஷாவின் செவிகளுக்கு எட்டியது.
விட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த மின் விசிறியை பார்த்து பெருமூச்சு விட்டாள் வர்ஷா.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

Brilliant story! Fusing fantasy and sci-fi in a delectable combination using beautiful language. Kudos to the author!
Thanks
Brilliant.
Thanks