ஜாதிக்காயின் சாபம்

இந்தோனேசியாவின் ”Banda Islands” ஜாவாவிலிருந்து மூவாயிரம் கிலோமீட்டர் கிழக்கிலும்  ஆஸ்திரேலியாவிற்கு  வடக்கிலும் முற்றிலுமாக தனித்து இருக்கின்ற தீவானது உலக வரைபடத்தில் ஒரு புள்ளிகளாக மட்டுமே தெரியக்கூடிய மிகச்சிறிய தீவுகளாகும். ஜாவாவிலிருந்து மிக தொலைவிலிருக்கும் பாண்டா தீவிற்கு செல்வது என்பது எளிதல்ல; விமானப்பயணம், கடல்பயணம் என நாட்கள் நீடிக்கும்.  இரண்டு கிலோமீட்டர் அகலமும், ஐந்து கிலோமீட்டர் நீளமும் கொண்ட பாண்டா தீவின் நிலப்பரப்பிற்கு Maluku என்று பெயர். முற்றிலும் கடல் நீரால் சூழப்பட்டு, மலுக்கு மொழியில் Gunung Api (Fire of Mountains)  என அழைக்கப்படும் கூம்பு வடிவமான எரிமலை, பாண்டாவின்  மூன்று தீவுகளில் ஒன்றாகும்.

எந்நேரமும் செயல்படக்கூடிய எரிமலைகளாக RING OF FIRE என்றழைக்கப்படும் தென் அமெரிக்காவின் சிலியிலிருந்து, அலஸ்கா, சீனா, ஜப்பான் என இந்தோனேசியா மற்றும் நியூசிலாந்து வரை தொடரும் எரிமலைகளின் மண்டலத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது பாண்டா தீவின் Gunung Api எரிமலை. எந்நேரமும் செயலாற்றக்கூடிய எரிமலை, ஆயிரம் மீட்டர் உயரம்வரை  சீறக்கூடியது. எரிமலை வெடிப்பின் போது ஏற்படும் சேதாரத்தால் அங்குள்ள மக்கள் பெரும் அழிவை சந்திக்க நேரிடுகிறது. இருப்பினும் இத்தகைய வெடிப்பானது,  இது பிரசவத்தின் போது ஏற்படும் வலியாகவே அவர்களால் கருதப்படுகிறது. எரிமலை சீற்றத்தின் போது வெளியேறும் வேதியியல் பண்புகளுடைய பொருட்கள், அங்குள்ள காற்று மற்றும் கால வானிலைகளால் அந்நிலப்பரப்பிற்கு செழிப்பான மண்வளத்தை அளிக்கின்றது. அவ்வாறு அங்கு அறியப்படும்  அரிய வகையான தாவர இனங்களில் மிக முக்கியமான ஒன்று சாதிக்காய்: Nutmeg, இதன் அறிவியல் பெயர் Myristrica Frgarans

நறுமணம் மற்றும் மருத்துவகுணங்கள் அடங்கிய சாதிக்காயும் அதன் மேற்புறமான தோல் (அல்லது ஓடு) பல்லாண்டுகளாக பயன்பாட்டில் இருப்பினும், பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இதன் மதிப்பு பன்மடங்கு உயரத்தொடங்கிற்று;ஒரு கையளவு உள்ள சாதிக்காயை கொண்டு வெனிஸ் நகரில் ஒரு கப்பலோ அல்லது பெரிய மாளிகையையோ வாங்கலாம். மேலும் ஐரோப்பிய செல்வந்தர்கள் மற்றும் அரசர்களிடையே ஆடம்பர பொருட்களில் ஒன்றாக கருதப்பட்டன. பதினாறாம் நூற்றாண்டிற்கு முன் ஐரோப்பாவின் பல இடங்களில்  மிக முக்கிய சந்தைப்பொருளாக பல வணிகர்களால் எகிப்து வழியே வெனிஸ் வந்து சேர்ந்தது. மிக செழிப்பான வர்த்தகம் செய்துவந்த வெனிசியர்களிடமிருந்து, Spice Trade எனும் அதிக லாபம் ஈட்டக்கூடிய வர்த்தகத்தை முற்றிலுமாக கைப்பற்றுவதை குறிக்கோளாக கொண்டனர். இப்பேராசையே ஐரோப்பிய மாலுமிகள் இந்திய பெருங்கடலை நோக்கிய தொலைதூர பயணத்திற்கான காரணமாயிற்று. இதன் முக்கியமான இலக்கு சாதிக்காயின்  பிறப்பிடத்தை கண்டறிவதே—பெரும் பணக்காரர்களும், ஆட்சியாளர்களும் நிதியுதவி அளித்த இப்பிரம்மாண்ட கடல்பயணமான “Spice Race” எனும் சாகசத்தை அக்காலகட்டத்தின் விண்வெளிப் பந்தயம் என குறிப்பிடுகின்றார் Timothy Morton, Philosopher and Ecologist.

பாண்டா தீவிலுள்ள வசித்துவந்த பாண்டனீஸ் எனும் பழங்குடிமக்கள் இந்தியப் பெருங்கடலிலுள்ள வர்த்தக வாணிபர்களிடையே நெருக்கமான நட்புறவுடன் இருந்தனர்; இவர்களை தேடிவரும் வாணிபர்களை வெறும்கையோடு அனுப்பியதில்லை. பாரம்பரியமான பாண்டனீஸ் சமூகம் நான்கு ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நாளடைவில் குறுகி அதே சமூகத்தில் வாணிபத்தில் செல்வந்தர்களாக இருந்த Orang Kaya என அழைக்கப்படும் வயதில் மூத்தவர்களிடமே பொறுப்புகள் இருந்தது. ஆட்சி அதிகாரமின்றி துறைமுக நிர்வாகத்தில் மட்டுமே இவர்களது கண்கானிப்புகள் இருந்துவந்தது.

ஐரோப்பியர்கள்—முதலில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஸ்பானிஸ்கள், அதன்பிறகு டச்சுகள்—நூறுவருடங்களுக்கு மேலாக சாதிக்காய் மற்றும் அதன் மேற்புற ஓடு இவற்றின் வர்த்தகத்தை கைப்பற்றி  முற்றிலுமாக தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதே முக்கிய நோக்கம் எனினும் இவர்களில் அதீத தீவரத்துடன் இறங்கியவர்களில் முதன்மையானவர்கள் டச்சுகள்; அதிகமான கப்பல் படைகளை அனுப்பி கட்டாயத்தின் பேரில் பல ஒப்பந்தங்கள் பாண்டனிஸ்களால் ஏற்றுகொள்ளப்பட்டன. இதனால் சில சந்தர்ப்பங்களில் ஆயுதங்களாலும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள கட்டாயம் ஏற்பட்டது. பாண்டா தீவில் 1609ஆம் ஆண்டு வந்திறங்கிய டச்சு கப்பல்படையானது, பாண்டனீஸ்களிடம் ஒப்பந்த்திற்கான கூட்டம் நடத்த அழைப்பு விடுத்தது. டச் வீரர்கள் தீவின் கரையோரங்களில் பதுங்கியிருந்தனர். இதனை அறிந்துகொண்ட பாண்டனீஸ்கள் அவர்களின் மீது தாக்குதல்களை தொடர்ந்தனர். இரு பிரிவினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டு 46 டச் வீரர்கள் மற்றும் ஒரு உயர் டச் அதிகாரி கொலை செய்யப்பட மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். தப்பியோடியவர்களில் ஒருவரான  Jan Pieterszoon Coen என்பவர் மூன்றுவருடமாக கவர்னர் ஜெனரலாக பயிற்சிபெற்று 1621ஆம் ஆண்டு பாண்டா தீவிற்கு கூவன் தலைமையில் மிகப் பெரிய கப்பல் படைகள் வருகின்றன.

கவர்னர் Sonck என்பவரை தீவிற்கு தலைமையாக நியமித்து இரண்டாயிரம் பேர்களுடன் பாண்டா தீவிலுள்ள கிராமங்களுக்கு தன் வீரர்களை அனுப்பி பாண்டனிஸ்களின் கிராமங்கள் முற்றுகையிடப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து பாண்டனிஸ்கள் சிறைபிடித்து தீவிலிருந்து வெளியேற்றுவது என அவர்கள் அனைவரையும் சரணடையும்படி உத்தரவுபோடப்பட்டது. அவ்வாறு சரணடையாதவர்கள் எதிரிகளாகவே கருதப்பட்டனர். உலகிலேயே வலிமை வாய்ந்த டச் கப்பற்படையை பாண்டனிஸ்களால் எதிர் கொள்ள முடியவில்லை. இவர்களிடம் சரணடையாமல் அடர் வனப்பகுதிகளுக்குள் சென்றனர். வெளியேற்றம் எளிதாக அமையவில்லை. ஏப்ரல் 21, இரவு கவர்னர் Sonk தலைமையில் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. நிலா இல்லாத முழுமையான அன்றைய இரவில் ஆலோசனையின் போது எரி விளக்குகள் அவர்களது கூடாரத்தின் மேல் விழுகின்றது. இதனால் அச்சமுற்ற வீரர்கள், எங்கிருந்து விழுகின்ற திசையறியாமல் கண்முன் தெரியாது  இருட்டினை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பிக்கின்றனர். தொடர் துப்பாக்கி சத்தத்தை தன் கப்பலிலிருந்து கேட்ட கூவன், இதற்குமுன் தாக்கப்பட்ட பாண்டனிஸ்கள் தற்போது இரவில் பதுங்கியிருந்து தாக்குகிறார்கள் என கலவரமடைந்து கப்பலிலிருந்து மேலும் நான்கு குழுக்குகளை கிராமங்களை நோக்கி அனுப்புகிறார். இதில் ஜாப்பனியர்களில் வாள்வீரர்களில் புகழ்பெற்ற என்பது ரோனின் (Ronin) வீரர்களும் அடங்குவர்; இவர்களுக்கு ஊதியம் குறைவு மற்றும் வெள்ளையர்களைவிட உழைப்பில் கடினமானவர்கள்.

பெரும்பாலான பாண்டனிஸ்களின் கை, கால்கள் துண்டாடப்பட்டன Orang kaya எனப்படும் தலைவர்களின் தலைகள் வெட்டப்பட்டு ஒரு கிணற்றில் வீசப்பட்டது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஜாவா தீவிற்கும், மற்றும் சிலரை இலங்கை வரைக்கும் அடிமைகளாக கடத்தப்பட்டனர். மேலும் அவர்களது உடமைகளான வீடு, படகுகள் என அனைத்தும் சேதப்படுத்தி எறியூட்டப்பட்டன—இவை அனைத்தும் ஜெனரல் கூவன் கட்டளையின்படி நடந்தேறியது. பத்து வாரங்களில் பாண்டனிஸ் பழங்குடி மக்கள் முற்றிலுமாக வெளியேற்றி பாண்டனிஸ் தீவானது டச் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. வேலையாட்களாக அடிமைகள் கொண்டுவரப்பட்டு வெள்ளையர்களை நிர்வாகிகளாக நியமித்து பாண்டனிஸ் தீவை சாதிக்காய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாற்றினர்.

Jan Pieterszoon Coen, Naval officer and former Governor-General of the Dutch East Indies

எரியும் விளக்கு விழுந்த பிறகு, தலைமுறைகளாக வர்த்தகம் செய்துவந்த பாண்டனிஸ் பழங்குடிமக்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்து வந்த தீவிற்குமான உறவு பத்து வாரங்களுக்குள் வேறோடு துண்டிக்கப்பட்டது—இனப்படுகொலை.

கூவன் தலைமையில் “burn everywhere their dwellings” என்று நடைமுறைப்படுத்தப்பட்டு அவர்களின் வாழ்வாதரங்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்ட நிலையில், உலகின் மற்றொரு மூலையில் இதே போன்று ஒரு இனப்படுகொலை அரங்கேறியது. 1636-1638 ஆண்டுகளில் வடஅமெரிக்காவில் நடைபெற்ற Pequot War என்ற போரானது—தற்போது Connecticut என்றழைக்கப்படும்—Pequot-ல் வசித்துவந்த, Algonquian எனும் பழங்குடிமக்களுக்கும், புதிதாக குடியேறிய ஆங்கிலேயர்களுக்கும் இடையே ஏற்பட்டது. முப்பது ஆண்டுகளாக நடந்த இப்போரில், Algonquian பழங்குடி மக்கள் அழிக்கப்பட்டனர். இது பின்னாளில் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் நடத்திய திட்டமிட்ட இனப்படுகொலை என அறிவிக்கப்பட்டது. 1621 ஆண்டு பாண்டனீஸ்களின் மீது டச் நடத்திய இனப்படுகொலையே அனைத்திற்குமான ஒரு தொடக்கம் என்கிறார் அமிதவ் கோஷ்.

காலனியாதிக்கத்தின் வரலாறுகளில், பாண்டா தீவில் நடந்தது  போன்று எண்ணற்ற நிகழ்வுகள் உலகத்தின் எல்லா இடங்களிலும் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்திருக்கின்றன. எனினும் வரலாற்றின் பிழைகளிலிருந்து கற்றுகொண்டு நாம் புதிய வாழ்க்கைப்பாதைக்காக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். மானுட வரலாற்றில் தாவரங்கள் மற்றும் அதனை சார்ந்திருப்பவைகள் மனிதர்களின் விதியை தீர்மானித்தது. இன்றைய நவீன உலகமான இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பூமியானது மனிதர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டு இயற்கையான பொருட்களை விட  மனிதனால் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு முன்னுரிமை பெறும் புதிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இக்கூற்று முற்றிலும் தவறு—என மாற்று வழியில் நம்மை அழைத்துச் செல்கின்றது The Nutmeg’s Curse.

தாவரங்கள் மற்றும் தாவரச் சூழலியல்களிடம் (Botanical Matter) இதற்கு முன் இல்லாத அளவிற்கு பெருமளவு சார்ந்திருக்கிறோம் அதாவது முந்நூறு வருடங்களுக்கு முன்பு இல்லாதளவிற்கு (500 வருடம் அல்ல, ஐந்து லட்சம் வருடங்களுக்கு முன்பில்லாத அளவிற்கு) வெறும் உணவிற்காக மட்டுமல்ல. இன்றைய நவீன உலகத்தில் மனிதர்கள் பெரும்பாலும் எரிசக்தியை சார்ந்தே இருக்கின்றனர் இவையாவும் பூமியிலிருந்து புதையுண்டிருக்கும் கார்பன் படிமங்கள்—நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இவையாவும் Fossilized Fuel எனும் தாவரம் மற்றும் அதன்சார் சூழல்களே?

எரிபொருள்கள், மனிதனால் தயாரிக்கப்பட்ட எத்தகைய எடைகொண்ட பொருட்களையும் கையாளுகின்றன. ஆண்டு விற்பனையில் மிகசொற்பமாக பத்து ட்ரில்லியன் டாலர்கள் ஒரு பொருளான எரிபொருள்களில் மட்டுமே கிடைக்கின்றன. மூன்று ட்ரில்லியன் கிடைக்கும் சர்வதேச பரிவர்த்தனையில் வர்த்தகம் மற்றும் எரிபொருளின் போக்குவரத்திற்காக இரண்டு மில்லியன் கிலோமீட்டர் பைப்லைன் உள்ளது 500 மில்லியன் எடைகளை வணிக போக்குவரத்து கப்பல்களால் கையாளப்படுகின்றன. உலகில் மிகப்பெரிய பத்து நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் எரிசக்தி நிறுவனங்களே. உலகத்தின் எரிசக்தி பயன்பாட்டின் தேவையை தணிப்பதற்காக வினாடிக்கு  2800 பீப்பாய் எண்ணெய்கள் எடுக்கப்படுகின்றன.

இன்றைய நவீன காலகட்டத்தில் பூமியின் வளங்களை சார்ந்து மனிதன் இருப்பதில்லை என்ற கட்டுக் கதையை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, ஆதிக்கம் செலுத்தி அவ்வளங்களின் மீது அன்றாடம் அதிகரித்துவரும் பயன்பாட்டை—இயற்கையின் மீது நாம் செலுத்தும் அடிமைத்தனம் என்ற யாதார்த்தத்தை ஒப்புக்கொள்வோமானால், பாண்டனிஸ்களின் கதை தற்போதைய நிலையிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்கிறார்.

நிச்சியமாக இத்தீவுகளின் வரலாற்றை மரமின்றி கூற இயலாது-ஆனால் மரம்தான் இம்மக்களின் தலைவிதியை எழுதியதோ அல்லது தீர்மானித்த்தோ என உறுதியிட முடியாது. பாண்டனிஸ்கள் வெளியேற்றப்பட்டதற்கு Nutmeg எனும் மரத்தை சுற்றியே கதைகள் இருப்பினும் இத்தகைய தாவர இனங்களின் நிகரற்ற வளத்திற்கு அங்கு அமைந்துள்ள எரிமலை சூழல்களும் ஒரு முக்கிய காரணிகளாகும். ஏனெனில் இதே சூழலிருந்த மற்றொரு தீவால் அங்குள்ள மக்களின் அழிவை தவிர்க்க முடிந்தது. பாண்டா தீவிலிருந்து வடக்கே நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள Ternate எனும் மற்றொரு தீவுகளுடன் ஒப்பிடுகிறார். மிக அரிய தாவர வகைகளைக் கொண்டு சிறு கூட்டங்களாக காணப்படும் இத்தீவுகளுக்கு Ternate என்று பெயர், சாதிக்காய் போன்று மிகவும் மதிப்பு வாய்ந்த பொருளாக கருதப்பட்டது கிராம்பு;சாதிக்காய் போன்று டெர்னேட் மக்களுக்கு மகத்தான செல்வத்தையும் அளித்ததோடு மட்டுமல்லாமல் காலனியாதிக்கத்தால் துயரத்தையும் சந்திக்க நேர்ந்தது.இருப்பினும் பாண்டா மக்களுக்கு நேர்ந்த கொடுமையிலிருந்து இவர்களால் தப்பிக்க முடிந்தது.   

இது எப்படி, ஏன்? பாண்டனீஸ்களை விட அதிக மக்கள் தொகை வாய்ந்த Ternate மற்றும் Tidore தீவுகள் சுல்தான்களின் பேரரசர்களிடம் இருந்ததானாலா? அடுத்தடுத்த நிகழ்வுகளின் தொடர்ச்சிகளின் தற்செயல்களா அல்லது ஏற்படுத்திய வாய்ப்புகளா? அல்லது கதையில் ஒரு கதாபாத்திரங்களாக அவர்களின் வளத்திற்கு வித்திட்ட கிராம்பு மற்றும் எரிமலைகளா? இத்தகைய கேள்விகள் கடந்த காலத்தின் ஒரு கதையை கூறுவதற்கு நம்மிடையே ஒரு தடையை ஏற்படுத்துகிறது. ஏனெனில் வரலாற்று புலமைகளின் அனுபவ ஆவண முறைகள் (1621-ம் ஆண்டு பாண்டனீஸில் நடந்தது என்னவென்று ஒரு காலவரிசையை மட்டுமே உருவாக்க முடிகின்றது)முற்றிலுமாக மொழி, எழுத்தறிவு, மற்றும் பிற எழுத்துகளை சார்ந்தே இருக்கின்றது. மேலும் இதற்கு முன் எழுதப்பட்ட பதிவுகளை சார்ந்தே இதன் சான்றுகளும் இருக்கின்றன. இவர்களின் கதையில் மனிதர்களே பிராதான பாத்திரங்களாக இருக்கின்றனர் மற்றவையாவும் (Non-Human Beings) மொழிகளற்று பின்னணியில் ஊமைகளாக நிற்கின்றன. கதைகளில் சாதிக்காய், கிராம்பு மற்றும் எரிமலை இடம்பெறுகின்றன எனினும் வரலாற்றாசிரியர்கள் கூறுகையில் இவைகள் கதாபாத்திரமாக அதாவது கதையை நிகழ்த்துபவராக ஒரு போதும் இருப்பதில்லை; ஏனெனில் இவற்றிற்கு சொந்தமான கதைகளை வரலாற்றாசிரியர்களால் கூற இயலாது.

இன்றைய நவீன காலகட்டத்தில் சாதிக்காயானது முழு நிலவினைப் போன்று ஒரு பாதியை மட்டுமே காணமுடிகின்றது அதாவது Myristica fragrans எனும் இனத்தை, ஒரு பாடமாக அறிவியல், வணிகம். மற்றொரு பாதியாக இது பாடல்களையும் கதைகளையும் மட்டுமே கொண்டதால் தவிர்க்கப்படுகின்றது. 1621ம் ஆண்டு பாண்டனீஸ்களின் இன அழிப்பிலிருந்து உயிர்பிழைத்து வழி வந்தவர்கள் அருகிலுள்ள Malukan தீவிலுள்ள கிராமங்களில் வசித்துவருகின்றனர். இவர்கள் பேசும் மொழி Turwandan; இது பாண்டனீஸ். இவர்களது பாடல்கள், கதைகள் பாண்டாவை உயிர்ப்பிக்க இன்றளவும் வைக்கின்றன.

we weep and weep

we, pearls of wisdom

when, on what day

”get on your way”

fruits of nutmeg have died…

pearls of wisdom

pearls of wisdom

pearls of wisdom

She sends a letter so we may speak

the fruits of nutmeg have died

the nutmegs have died

the nutmegs have died

there is no faith here

there is no blessing inside this land. (From “Songs of Travel and Stories of the Place” by Timo Kaartinen).

டச் காலனியாதிக்கத்தின் பார்வையில் பாண்டா தீவிலுள்ள வளங்களை பயன்படுத்தி லாபத்தை உருவாக்கும் நோக்கமே அன்றி அங்குள்ள எரிமலை சீற்றத்தை எதிர்ப்பாகவோ, பாண்டனிஸ்களுக்கும் மற்றும் நிலப்பரப்பிற்கும் தொடர்புள்ளதா என எண்ணவில்லை—பாண்டனிஸ்கள் வெளியேற்றப்பட்டவுடன், நிலங்களை பண்ணைகளாக மாற்றி அடிமைகள் கொண்டுவரப்பட்டு வேலையாட்களாக நியமித்து, வெள்ளையர்களை நிர்வாகிகளாக ஊதியம் அளித்து சாதிக்காய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறியது—பாண்டா தீவு. ஒரு இனக்குழுக்களை முற்றிலுமாக அழித்து, எவ்வித இடையூறுமின்றி ஒட்டுமொத்த தீவின் வளங்களையும் ஒரு உற்பத்தி காடாக மாற்றியது டச் காலனியாதிக்கம்—உலகின் அனைத்து முதலாளித்துவ நிறுவனங்களுக்கும் இந்நிகழ்வுதான் அடித்தளம் என்கிறார் அமிதவ் கோஷ். இத்தீவில் வேலையாட்களாக இருந்த அடிமைகள் குஜராத், பங்களாதேஷ் என பெரும்பாலும் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள்; இதுவே Racial Capitalism த்தின் துவக்கம். இன்றைய நவீன காலங்களிலும் அதன் கட்டமைப்பு மாறவில்லை என அதன் புள்ளியிலிருந்து ஒரு வரைபடத்தை அளிக்கின்றார்.

பூமி; இடைவிடாது இயங்கும் செயலற்ற துகள்களால் ஆன மிகப்பெரிய இயந்திரம் என்று பூமியை பற்றி கற்பனை செய்யப்பட்டது என்கிறார் Max Liboiron (author of “Pollution is Colonialism”). இயந்திர தன்மையின் வடிவமாக உலகை புதிய கற்பனை கண்ட ஐரோப்பா அவற்றை நடைமுறைப்படுத்தவதற்கான களத்தில் இறங்கியது. அதாவது சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு வாய்ந்த உயர் வகுப்பினரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஐரோப்பாவின் இரண்டு மிகப்பெரிய திட்டங்களில் ஈடுபட்டனர்; அமெரிக்காவை கைப்பற்றுவது மற்றொன்று அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களைக் கொண்டு வர்த்தகம் புரிவது. மனிதர்களை பேச்சற்ற வளங்களாக  மாற்றி அவர்களிடையே தெளிவற்ற நிலையை ஏற்படுத்தி அதன் மூலம் பூமி மற்றும் அதன் சார்ந்த அனைத்தையும் செயலற்ற தன்மைக்கு மாற்றியது Resource curse என்கின்ற ஐரோப்பியர்களின் புதிய கற்பனை. இத்தகைய இயந்திரத் தன்மையின் தத்துவங்கள் Descarte மற்றும் Mandeville, Bacon மற்றும் Boyle போன்ற அரசியல் தத்துவவாதிகளிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது. செயலற்று இருக்கும் அதிக அளவிலான இயற்கை வளங்களை பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்பதற்காக விவசாயிகளிடமிருந்து நிலங்கள் கைப்பற்றப்பட்டன. ஐரோப்பாவின் மேல்வர்க்கத்தை சேர்ந்த மக்களிடையே, இயற்கையின் முன் காண்பவையாவும் அடிபணிய செய்ய துவங்கி அவர்களின் பயன்பாட்டுக்குரிய பொருளாக மாற்றினர். அமெரிக்காவின் பழங்குடிகள், பிரிட்டிஷ் மற்றும் ஸ்காட்டிஸ் விவசாயிகளும்  விதிவிலக்கல்ல., விவசாயிகளின் விருப்பமின்றி இவ்வாறு கையகப்படுத்தப்பட்டு பொது நிலங்களை வேலிகளாகவும், பல பண்ணைகளாகவும் மாற்றப்பட்டன.

கடல்கடந்து மட்டுமல்லாமல், ஐரோப்பவின் விவசாயிகளிடமும் இரட்டை அடக்குமுறையானது அமல்படுத்தப்பட்டது;நிலத்தின் மீதான உரிமை மற்றும் அவர்கள் நிலப்பரப்புகளின் மீதுள்ள புனிதத் தன்மைக்கு இடையூறு ஏற்படுகையில் அதனை எதிர்த்த விவசாயிகளின் மீது காலனித்துவ வெற்றிக்கான வன்முறையாக தண்டிக்கப்பட்டது. இரக்கமற்ற அடுத்தடுத்த நடந்த வன்முறைகளால்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர்களில் மனிதர்கள் மட்டுமல்ல, இதில் ஊமைகளாக கருதப்பட்ட மனிதரல்லாது பிற உயிரினங்கள் – மரங்கள், விலங்குகள் மற்றும் நிலப்பரப்புகள்.

காலனியாதிக்கமானது தன்னுடைய கட்டுப்பாட்டில் மனிதர்களோடு நிலைநிறுத்திக் கொள்ளவில்லை; லாபத்திற்காக மொத்த உலகையும் ஒரு உயிரற்ற பொருளாக கருதி, தன்னுடைய சக்தியால் அவைகளுக்கான ”பயன்” என்னவென்று கண்டறிந்தனர்; அடிமைகள், வேலையாட்கள், மற்றும் பயனுள்ள அல்லது மதிப்பளிக்கக்கூடிய பொருட்கள்.  இதன் தொடர்ச்சி, மனிதர்கள் மட்டுமின்றி, பிற உயிரனங்களும் இயற்கையின் விதியால் தன் அழிவை சந்திக்க நேரிட்டது.

Muteness of Nature and Muteness of Brutes என்ற கொள்கையானது காலனியாட்சியாளர்களின் மந்திர சொல்லாக இருந்தது. ஆகையால், மக்கள், தாவரங்கள், மரங்கள் , மலைகள், நதிகள் என இயற்கை வளங்கள் யாவும் செயலற்ற அல்லது ஊமைகள் என 17ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய கருத்தியல் கொள்கைகளை கொண்ட இவர்கள் பெரும்பாலோனோர் Global Elites மற்றும் கல்வி நிலையங்களை சார்ந்த வரலாற்று ஆய்வாளார்கள், பொருளாதார் அறிஞர்கள் மற்றும் பிறர். இவர்களுக்கு சாதிக்காயின் பொருளாதாரம், வேதியில் பண்புகள், வரலாறு என அறிந்த அறிஞர்களால் சாதிக்காயின் பாடல்களை கூற முடிவதில்லை. ஏனெனில் வரலாற்றறிஞர், பொருளாதார அறிஞர்களின் நோக்கம் வேறு.

மனிதர்கள் மட்டுமே கதை சொல்ல தகுதியானவர்கள் என மனிதரல்லாத மற்றவை யாவும் மலினப்படுத்தப்படுகின்றன. இது ஒரு குழு சார்ந்த எண்ணங்களாக மக்களிடம் இல்லாமல், உலகில் பெரும்பாலானோர்களால் அறியப்படாமலிருக்கின்றது. இதற்கு மேல்தட்டு சிந்தனைகளால் உருவான செயல்முறைகள் மேலும் முன்னோக்கி செல்வதற்கு அடித்தளமாயிற்று. கதை சொல்லும் விலங்குகளாக மனிதன் தன்னை மட்டுமே முன்னிலைபடுத்துபவனாக அவனது கற்பனையின் பங்களிப்பு இருக்கின்றது என்கிறார் அமிதவ் கோஷ்.

Graham Swift எழுதிய Waterland  எனும் நாவலில் வருகின்ற கதாபாத்திரம் கூறுகையில், “விலங்குகள் மட்டுமே முற்றிலுமாக இங்கே இப்போது வாழ்கின்றது. இயற்கைக்கு நினைவுகளோ, சரித்திரமோ தெரியாது. ஆனால் மனிதன் மட்டுமே கதை சொல்லும் விலங்கு. எங்கெல்லாம் செல்கிறானோ அப்போதெல்லாம் தன்னுடைய துயரத்தை கதைகளாக விட்டுச் செல்கிறான்.”

Narrative is a peculiarly human way of organizing reality – Historian William Cronon

உண்மையில் ஆபத்தானது கதை சொல்லில் அல்ல, யார் அதற்கான முழு விளக்கத்தையும் அளிப்பது என்பதில்.பொருள் உருவாக்கக்கூடிய கதைசொல்லல் யாவும், மனிதனுடைய மொழியால் பிணைக்கப்பட்டுள்ளது. மொழியின்றி இது எவ்வகையில் சாத்தியப்படும் ? மொழி அறியாதவர்களிடத்திலிருந்து கிடைக்கக்கூடிய ஒன்று.இதற்கு உதாரணமாக குழந்தை மற்றும் நாய் என்று விவரிக்கிறார். குழந்தைகள் ஒரு விஷயத்தை தாங்களாகவே புரிந்து கொண்டு பல வகையில் விளக்கமளிக்க முயற்சிக்கின்றனர். மனிதர்களோடு மிக நெருங்கி பழக க்கூடிய நாய் அதன் வீடு, பூங்கா, மற்றும் ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களை அறிந்துகொள்கின்றன. இவ்வாறு நினைவுகள், பார்வை, அல்லது மணம் என பலவகைகளாக தங்களை தொடர்புபடுத்திக்கொண்ட நாய், தன்னுடைய கதை சொல்லியா அல்லது காலவரிசையின்படி செயல்படுகிறதா. இங்கே இப்போதே செய்ய வேண்டுமென செய்யவில்லை; அதன் அனுபவங்கள் தொடர்ச்சியாக காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்பவாறு முறையாக வரிசைப்படுத்தப்படுகின்றன.

 திமிங்கலங்கள், பறவைகள் என அதிகமாக புலம்பெயரக்கூடிய விலங்குகள் தங்களது நெடுந்தொலைவு பயணித்தாலும் குறிப்பிட்ட இடத்துடன் தனக்கான ஒரு உறவை உருவாக்கிகொள்கின்றது. இவற்றை இயற்கையாக நிகழும் தற்செயல் என்று அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கலாகாது. திமிங்கலமானது தனது வழிதடத்தினை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் தனது பாடல்களை மாற்றிக்கொள்ளும் என்கிறார் Marine Biologist Alexandra Morton. இவற்றை வெறும் தரவுகளாக மட்டும் நோக்காமல், தன் சுய அனுபவத்தின் மூலமாக காணும்பொழுது, மனிதர்களைப் போல் இவைகளும் எல்லையற்ற கதை உலகில் வசிக்க இயலும் மற்றும் யாதர்த்தத்தை பிரதிபலிப்பதில் மனிதர்கள் மட்டுமே கதை சொல்லும் விலங்கு அல்ல என்கிறார். 1983-ல் Graham Swift எழுதிய Waterland (Novel) மற்றும் Leslie marmon Silko  என்பவர் எழுதிய The Turquoise Ledge (Memoir) மற்றும் The Falling Sky: Words of Yanomamo Shaman by Davi Kopenawa என எடுத்துக்காட்டாக, இன்றளவும் மிக சிறந்த முறையில்  மனிதரல்லாதவற்றின் குரல்கள் கதைகளின் வழியே கொண்டாடப்பட்டு வருகின்றது என்கிறார்.

நிலப்பரப்புகள், விலங்குகள் பலவற்றுடன் தொடர்புகளுடைய மனிதனால் தன் கற்பனையின் வழியே திறம்பட கதை கூற முடியும். ஒரு கற்பனையில் அயற்சியை உருவாக்கும் எண்ணங்களாக இருந்தாலும், எல்லாவற்றையும் கதையாக உருவாக்க கூடிய கதையுலகில் மனிதனால் இது சாத்தியம். இதன் எல்லைகள்  குறுகிக்கொண்டே செல்லக்கூடிய வாய்ப்புகளும் இதன் விளைவாக இன்றைய ”தீவிர” இலக்கியத்தில் தொடர்ந்து மனிதரல்லாத குரல்களின் அழிக்கப்படுகின்றன. மேலும் பிற உயிரினங்களின் மீது குருட்டுத்தன்மையாக எதிர்காலத்தில் ஒரு அதிகாரப் பூர்வமான நவீனத்துவத்திற்கு வழிவகை செய்துவருகின்றது. மனிதரல்லாதவைகளின் இருப்பை நிலைநிறுத்துவதற்கு  முதல் நிகழ்வாக இருப்பது ”கதைகள்” மட்டுமே.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைத்துறை மற்றும் கதை கூறவதில் முக்கிய பங்காற்றும் அனைவருக்கும் மிகப்பெரிய கடமை இருக்கின்றது; மனிதரல்லாத குரல்களை கற்பனையாக மீட்டெடுக்கும் பணி. மனிதகுல வரலாற்றில் பல முக்கியமான கலை முயற்சிகளைப் போலவே இதுவும் கலைக்கான அழகியல் மற்றும் அரசியல் சார்ந்த கடமை-ஏனெனில் தற்போது பூமியை சூழ்ந்துள்ள நெருக்கடியால் மிக தீவிரமாக மக்களிடையே கொண்டு செல்லப்பட வேண்டிய ஒன்று.

The Planet will never come alive for you unless your songs and stories give life to all the beings, seen and unseen, that inhabit a living Earth—Gaia.

The Nutmeg’s Curse எனும் இந்த புத்தகத்தை பற்றிய வாசிப்பனுபவ கட்டுரையில், ஒரு குறிப்பிட்ட சில பக்கங்களே பிரதிபலிப்பே (அல்லது மொழிபெயர்ப்பே)இக்கட்டுரை எனினும் இது தற்போதைய சூழலில் முக்கியமான நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவும் இருக்கின்றது. சில மாதங்களுக்கு முன் வாசிக்க நேர்ந்த செய்தியினை இந்த பாண்டனிஸ்களின் சம்பவங்களும் வெவ்வேறு சம்பவங்கள் அல்ல இவற்றை இங்கு கூறாமல் இக்கட்டுரையை முழுமையடையாது என்றே தோன்றுகிறது.

உலகின் பதின்மூன்று நாடுகளிலிருந்து முப்பத்தி ஒன்பது அறிஞர்களால் இந்தியாவின் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முர் அவர்களுக்கு, கிரேட் நிகோபார் தீவின் மிகப் பெரிய கட்டுமான திட்டத்தை இந்தியா கைவிடுமாறு கடிதத்தின் மூலமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.  இத்திட்டமானது ஷோம்பன் எனும் பழங்குடி  சமூகத்திற்கு நிகழும் இனப்படுகொலை என அக்கடிதம் கூறுகின்றது.

கடந்த பத்தாண்டுகளாக முன்னேறிக்கொண்டிருக்கும் என கூறப்படும் இந்தியா—நவீன இந்தியா—இது வரை இல்லாத இன அழிப்பு ஒன்றை அதன் வரலாற்று மேடையில் அரங்கேற்ற உள்ளது.  நாற்பத்தி ஓராயிரம் கோடி ரூபாயில் “Hong Kong of India” எனப்படும் சர்வதேச கப்பல் துறைமுகம் நிறுவுவதற்கு தீர்மானித்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல் விமான நிலையம், மின் உற்பத்தி நிலையம், இராணுவ தளம், தொழிற்சாலை பூங்கா மற்றும் சுற்றுலா தளமாக உருவாக்குவதற்கு திட்டங்களை அறிவித்திருக்கின்றது.

நிகோபார் தீவு சென்னையிலிருந்து கிழக்காக 800 மைல் தொலைவிலும் இந்தோனேசியாவின் அசெ எனும் நகர்த்திலிருந்து 93 மைல் தொலைவிலும் வடக்கே அமைந்துள்ளது. நிகோபார் தீவில் நூறு அல்ல ஆயிரம் வருடங்களாக வெளியுலகில் எவ்வித தொடர்பின்றி அங்குள்ள அடர் வனங்களை சார்ந்தே இன்று வரையிலும் வேட்டையாடி வாழ்ந்து வருகின்றனர் ஷோம்பன் பழங்குடிகள். பல காலங்களாக தனித்தே வாழ்ந்திருந்தவர்களால் வெளியிலிருந்து வரும் மக்களால் தொற்று ஏற்பட்டு அவர்கள் இறக்க நேரிடும் என கல்வியாளர்கள் எச்சறிக்கின்றனர்.

“Hong Kong of India” திட்டம் இந்தியாவை தன்னம்பிக்கை மற்றும் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதில் ஒரு மைல்கல்லாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்” என துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் நீர்வழிப் பாதைத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவல் கூறுகின்றார்.

பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் பல கருத்துகளாகவும் கண்டனங்களாகவும் வலியிறுத்தப்பட்டிருக்கின்றன. Long tailed Macaques, Treeshrews and Scops Owls போன்றவை வாழ்விடம் நிகோபார் மட்டுமே. Conservation Action Trust, National Green Tribune மற்றும் Mumbai Environmental Organization போன்றவற்றின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ”திட்டமானது பழங்குடி மக்களின் வாழ்விடத்தையும், தீவின் தனித்துவமான சூழல்களையும் அழித்துவிடும்” என எழுபது அரசு அதிகாரிகள் மற்றும் தூதர்களால் கடிதமாக கையொப்பமிட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பட்டிருக்கின்றது. இந்த திட்டம் கிரேட் நிகோபார் தீவின் பல்லுயிர் பெருக்கத்திற்கும் மக்களுக்குக்கும் எவ்வித இடையூறுமின்றி கவனமாக கையாளப்படும் என அர்ஜீன் முண்டா Tribal affairs Minister அறிவிக்கிறார்.

Figure 1A Shompen boy                                                     Figure 2The Shompen people of Great Nicobar Island

மனித உரிமை அமைப்பின் ஒன்றான Survival International அமைப்பின் பேச்சாளர் கூறுகையில், ஷோம்பன்கள் நாடோடிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட எல்லைகள் உண்டு. அவர்களின் தற்காலிகமான நான்கு வசிப்பிடங்கள் இத்திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படுகின்றன. அழிக்கப்பட்ட பகுதியிலிருந்து  மீண்டும் அவர்கள் வனத்தை நோக்கி செல்லலாம். ஒரு இன அழிப்பை தடுப்பதற்காக இத்திட்டத்தை கைவிடப்பட வேண்டும் என்கின்றார்.

ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்திருந்த ஷோம்பன்களின் இன்றைய இக்கட்டான நிலை பாண்டனீஷ்களை நினைவுகூறுகின்றன. கடந்த சிலவாரங்களுக்கு நடந்த கனிம வள ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்களும், இன்று உக்ரைன் மீது ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய காலனியாதிக்கம் நாடுகளும் அதன் நோக்கங்களும் மற்றுமொரு உதாரணம். டெல்லியின் காற்று மாசுபாடு, வருடந்தவறாமல் புதிய பெயருடன் வரும் புயல், கலிபோர்னியாவின் காட்டுத் தீ, எண்ணிக்கையில் அதிகரித்து வரும் Data Colonisation, அகதிகள், ஆமைகள் ஏன் சில வருடங்களுக்கு முன் உலக மக்களையே அவர்களது வீட்டில் அடைத்த கொரனோ, என அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு மிக வேகமாக போகும் எங்கு சென்று கொண்டிருக்கின்றது—Modern People.

நியூசிலாந்து,ஈக்குவோடார் மற்றும் அமெரிக்கா, சீனா நாடுகளிலுள்ள பழங்குடியினர்கள் சட்ட பூர்வமாக பல வெற்றிகளை அடைந்திருக்கிறார்கள் காடுகள், மலைகள் மற்றும் நதிகள் என அவைகளுக்கும் தங்களுக்குமான உறவை போராட்டங்களாக முன்னிறுத்துகின்றனர். இதில் Chipko முதல் Standing Rock movement என பல உதாரணங்களாக Vitalist mass movement அவசியத்தை அறிந்த கொள்ள முடிகின்றது. புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை அதிகபேரிடம் நேரடியாக பேசியவர் போப் ப்ரான்சிஸ் மட்டுமே என்கிறார்.

இந்த Vitalist mass movement கோடிஸ்வரர்களால் உருவாகாது; தொழில் நுட்பத்தால் முடியாது இதுவரை தன்னை நிரூபித்திக்கொண்டிருக்கும் மனித உணர்வுகளால் மட்டுமே சாத்தியம் என அமிதவ் கோஷ் கூறுகையில் ஒரு நம்பிக்கை துளிர்க்கின்றது—The Nutmeg’s Curse.

1956-ல் கல்கத்தாவில் பிறந்த அமிதவ் கோஷ், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவில் வளர்ந்தார். டெல்லி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இவருடைய முதல் நாவலான Ibis Triology, Sea of Poppies 2008ஆம் ஆண்டு Man Booker Prize குறும்பட்டியலில் இடம்பெற்றது. 2018-ல் ஞானபீட விருது பெற்றார்.

 Imagining the Unthinkable என்ற கருப்பொருளை மையமாக வைத்து காலநிலை மாற்றத்தை பற்றி எழுதிய The Great Derangement மற்றும் The Nutmeg’s Curse புத்தகங்களுக்கு 2024 Erasmus Prize வழங்கப்பட்டது.


Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஜாதிக்காயின் சாபம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.