- சின்னச்சின்ன தாஜ்மஹல்கள்
- இருள்
- டேய் தரங்கெட்டவனே!
- தபால் பெட்டி
- ஸர்கம் கோலா
- இறுதி சல்யூட்
- குவாரண்டீன்
- ஒரு துண்டு வெயில்
- ஒன்றரை அங்குலம் மேலே
- டெர்மினல்
- வான வேடிக்கை
- முஷ்ட்டி மாலிஷ்
- மார்ச், மா மற்றும் சகுரா: கீதாஞ்சலி ஸ்ரீ
அம்மாவின் ஜப்பான் வருகையை ஒட்டி சகுரா மலர்கள் மலர ஆரம்பித்திருந்தன.
நான் அம்மாவை ஏர்போர்ட்டிலிருந்து அழைத்து வரச் செல்லும் போதே எனக்கு ஏதோ தோன்றியது. நான் வருகை அறையில் அம்மாவுக்காக காத்திருந்தபோது, எல்லோரும் எப்போதும் எதிர்பார்ப்பதற்கு மாறாக ஏர் இந்தியாவின் விமானம் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தது. நான் கூட்டத்தை பார்த்து பயந்து கொண்டே நின்றிருந்தேன். ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகள் வெளியே வர தொடங்கியிருந்தார்கள். அம்மா வழி மறந்து போய் காய்ந்த இலையை போல் எங்கோ ஒரு மூலையில் நின்று நடுங்கிக் கொண்டிருப்பாளோ என்று எனக்கு பயமாக இருந்தது. என் பார்வை ஒவ்வொரு முகமாக தாவிக் கொண்டிருந்தது. பயணிகள் தங்கள் அளவு உயரமான சாமான் வண்டிகளில் பெட்டிகளை வைத்து தள்ளியபடி வந்து கொண்டிருந்தனர். தில்லியில் அம்மாவை வழி அனுப்ப ஒரு கூட்டமே சென்றிருக்கும். நண்பர்களும் உறவினர்களும் அவளுடைய சாமான்களை உள்ளே கொண்டு செல்வதில் உதவி இருப்பார்கள். ஆனால் இங்கு ஒரே மாதிரி காட்சியளிக்கிற சூட்கேசுகளின் சமுத்திரத்தின் நடுவே அவளுடைய வயது முதிர்ந்த கண்கள் மட்டுமே அவளுக்கு துணை. அம்மாவால் தன்னுடைய சூட்கேஸை அடையாளம் கண்டு கொள்ள முடியுமா? அம்மாவுக்கு ஒருவேளை என் காரின் நிறமோ அல்லது நம்பரோ கூட ஞாபகம் இருக்காது. ஏனென்றால் இதுவரை அந்த காரை அப்பாவும் அண்ணாவும் மட்டுமே ஓட்டி இருக்கிறார்கள்.
அப்போதுதான் நான் லவுஞ்சில் இளைஞன் ஒருவன் வருவதை கவனித்தேன். அவனுடைய முழங்கையை பிடித்தபடி கூடவே அம்மாவும். அந்த இளைஞன் தன்னுடைய சாமான்களோடு கூட அம்மாவுடைய சாமான் வண்டியையும் தள்ளிக்கொண்டு வந்தான். அம்மா தோளில் ஒரு சிறிய பையை மாட்டிக் கொண்டு அவனுக்கு பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தாள். அம்மா என்னைத் தவிர வேறு யாரையும் பார்க்க முடியாது படி, நான் ஒரே நொடியில் சுதாரித்துக் கொண்டு நின்றேன்.
அம்மா என்னை பார்த்தாள். அவளுடைய முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை படர்ந்தது. நான் குனிந்து அம்மாவின் காலை தொட்டு வணங்கினேன். அம்மா “இவனும் என்னைப்போல முதல் முறையாக இங்கு வருகிறான். என்னைப்போலவே பயந்திருக்கிறான். என் மகன் இங்கு தான் வசிக்கிறான். அவன் என்னை அழைத்துச் செல்ல வருவான். உனக்குத் தேவையானவற்றை நீ அவனிடம் கேட்டுக் தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்று அவனிடம் சொல்லியிருக்கிறேன்” என்றாள்.
என்னால் அப்போதே இதை புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் நான் இப்போதுதான் அதைச் சொல்கிறேன்.
நான் அப்போதே இதை தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இந்த வருடம் அம்மாவின் வருகையின் போது சகுரா மலர்கள் பூக்கத் தொடங்கி விடும்.
மார்ச் மாதம் பிறந்ததுமே அம்மா என்னை நச்சரிக்க ஆரம்பித்தாள்.
ஆனால் மார்ச் மிகவும் தாமதமாகத் தான் வந்தது. அம்மா இங்கு வந்த ஆரம்ப மாதங்களில் நான் அம்மாவுக்கு அடிக்கடி ஆபீசிலிருந்து ஃபோன் செய்வேன் – அம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாய். அம்மாவின் பதில் எப்போதும் ஒன்றே தான் – மகனே நான் உன் குர்தாவின் பிய்ந்து போன பட்டனை தைத்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்ச நேரத்தில் குளிக்கப் போகிறேன் அல்லது உனக்கு பிடித்த கேரட் அல்வா செய்து கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் துணிகளை துவைக்கப் போகின் – என்பதாகத்தான் இருக்கும். ” இன்றைய நாள் மிக அழகான நாள் தயவு செய்து வீட்டை விட்டு கொஞ்சம் வெளியே போய் வீட்டுக்கருகே கொஞ்ச தூரம் உலாவி விட்டு வா” என்று நான் அவளிடம் எண்ணற்ற முறைகள் சொல்லி இருக்கிறேன். அம்மா சின்ன குழந்தையை போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவளுடைய சன்னமாமான குரலை வைத்து என்னால் சொல்லிவிட முடியும் – ஒருவேளை நான் தொலைந்து போய்விட்டால்? நல்ல கதையாக இருக்கிறதே. நான் உன்னை நகரம் முழுவதும் சுற்றி வா என்றா சொல்கிறேன். நாங்கள் இருவரும் ஒன்றாக தான் அந்த தெருவில் உலாவ செல்கிறோம். ஆனால் அம்மா என்னுடைய எல்லா கோரிக்கைகளையும் அறிவுரைகளையும் உதாசீனப்படுத்தினாள். முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு உ ஆ என்று தேவையின்றி நாடகத் தனமாக ஓசை எழுப்புவாள். நான் அவளை மேலும் கடிந்து கொள்வேன்.

“நாம் எத்தனை முறை சூப்பர் மார்க்கெட் சென்று இருக்கிறோம் – போய் கொஞ்சம் பாலும் ஒரு வாரத்துக்கு வீட்டுக்குத் தேவையான சாமான்களும் வாங்கி வா” என்பேன்.
“அட, என்னால் வீடு திரும்பும் வழியை கூட யாரிடமும் கேட்க முடியாது”
“நீ எந்த வழியாக போகிறாய் அதே வழியில் திரும்பி வந்துவிட முடியும் இருந்தாலும் என் முட்டாள் அன்னையே உனக்கு அவ்வளவு பயமாக இருந்தால் என்னுடைய முகவரி அட்டையை வைத்துக்கொள். யாரிடம் காட்டினாலும் அவர்கள் போக வேண்டிய சரியான வழியை சொல்லி விடுவார்கள். அது மட்டும் இல்லை, அவர்கள் உன்னை வீடு வரை கூட வந்து விட்டு விட்டுப் போவார்கள்.
“என்னால் கதவை திறக்க முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது? ரொம்பவும் சிக்கலான விஷயம் முதலில் வலப்புறம் திருப்ப வேண்டும் பிறகு இடப்புறம்” அம்மா அலுத்துக்கொள்வாள்.
“அம்மா தயவு செய்து வீட்டை விட்டு வெளியே போய்விட்டு வா” நான் அவளை அதட்டுவேன்.
“வேண்டாம். நான் இங்கு நன்றாகத் தான் இருக்கிறேன் நீ திரும்பி வந்த பிறகு நான் உன்னுடன் வெளியே வருகிறேன்”
மாலை நேரங்களில் நான் அம்மாவை பிளாக்மெயில் செய்ய முயற்சிப்பேன். உனக்காகத்தான் ஆபீசிலிருந்து அவசரமாகஓடி வர வேண்டி இருக்கிறது என்று நான் சொல்வேன். நாள் முழுவதும் நீ வீட்டில் தனியாக வீட்டை விட்டு எங்கும் வெளியே போகாமல் இருப்பதால்நான் என்னுடைய எந்த நண்பர்களையும் சந்திக்க போக முடிவதில்லை. உன்னால் தனியாக எல்லா இடங்களுக்கும் போக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ரொம்ப தூரம் இல்லாவிட்டாலும் நமது பிளாக்கை சுற்றியாவது உலாவி விட்டு வர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நான் இப்படிச் சொன்னதுமே அம்மாவுக்கு மூக்கு விடைத்து விடும். “மகனே என்னிடம் இப்படி எல்லாம் பேசாதே. எனக்கு எவ்வளவு வயது ஆகிவிட்டது என்பதை சற்று யோசித்துப் பார் என்பாள். அவளுடைய கை வளையல்களில் கோர்த்திருக்கும் சேஃப்டி பெண்கள் ஆம் என்று ஆமோதிக்கிற வகையில் அசைந்தாடும்.
பிப்ரவரி மாத கடைசிக்குள் நகரின் எல்லா மரக் கிளைகளிலும் மொட்டுகள் மலர ஆரம்பித்திருந்தன. அம்மா தனக்கு தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் மீன் கடையில் அமர்ந்திருக்கும் இளைஞனுடன் பேச ஆரம்பித்திருந்தாள். ஜப்பானிய இளைஞன் மீனை வைத்து என்ன சமைக்க விரும்புகிறாள் என்று அம்மாவிடம் கேட்க, இந்திய அம்மா அவனிடம் மீன் ஊறுகாய் செய்முறையை பகிர்ந்து கொள்வாள். கூடவே ஒன்றிரண்டு கண்ணாடி ஜாடிகள் நிரம்ப ஊறுகாய் செய்து தருவதாகவும் வாக்களிப்பாள். அம்மாவின் ஆங்கிலத்தில் இருந்த பிளவுகள் ஆங்கிலேயன் உள்ளே தடுக்கி விழ போதுமான ஆழம் நிறைந்தவையாக இருந்தன.
அதற்குப் பிறகு ஒரு நாள் அல்லது ஒரே ஒரு நாள், அம்மா தோளில் கைப்பையை மாட்டிக்கொண்டு வேகவேகமாக வீட்டை நோக்கி வருவதையும் அந்த மீன் கடைக்கார ஜப்பானிய இளைஞன் சாமான்களை சுமந்தபடி அம்மாவின் பின்னால் வருவதையும் நான் பார்த்தேன்.
வேறொரு நாள் பக்கத்து வீட்டு பையன் அம்மா சமைத்திருந்த முட்டை குழம்பை சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அந்நிய மொழியின் அழுத்தத்தில் சிறைப்பட்டிருந்த அவன் உங்களுக்கு இந்திய உணவு மிகவும் பிடிக்கும் என்று சொன்னான். எனக்கு என்பதற்கு பதிலாக உங்களுக்கு என்கிற வார்த்தையை உபயோகித்து விட்டான். அவ்வளவுதான்.
அம்மா சிரித்துக்கொண்டே அவனுடைய கண்ணத்தில் கை வைத்தோடல்லாமல் தேவைக்கு மேலேயே மற்றும் சற்று அழுத்தமாகவும் தேவையை விட சற்று கூடுதல் நேரம் கையை வைத்துக் கொண்டிருந்ததைப்போல எனக்குத் தோன்றியதால் நான் உடனடியாக பார்வையை அகற்றிக் கொண்டேன்.
அந்த இளைஞன் போனதும் நான் அம்மாவிடம் சொன்னேன் – தூரத்திலிருந்து குனிந்து வணக்கம் சொல்வதுதான் இங்கு பழக்கம் .நீங்களும் பார்த்திருப்பீர்களே. வேண்டுமானால் வெள்ளைக்காரர்களைப் போல கை குலுக்க முடியும். ஆனால் என்னால் மேற்கொண்டு பேச முடியவில்லை. என் முகம் சிவந்து வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக் கொண்டன.
என்னால் என்ன சொல்லிவிட முடியும்? இதற்கு முன்னால் ஒருபோதும் சொல்லாததை இப்போது நான் எப்படி சொல்ல முடியும்? இருந்த போதிலும் சில விஷயங்களை சொல்ல முடிந்தது. அம்மா நான் சொன்னதை உள் வாங்கிக் கொண்டு என்னுடைய அறிவுரையின் படி நடந்து கொண்டாள். அதனால் அம்மா முற்றிலும் வேறான ஒன்றை அடைந்தாள்.
பழக்கமில்லாத வேறு எதையோ செய்ய வேண்டி இருந்ததால் நான் மௌனமாக இருப்பதே உசிதம் என்று கருதினேன். என்னுடைய கவலைகளை நான் அம்மாவிடம் உள்ளபடி கூறினேன் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். நான் அம்மாவிடம் சொன்னேன் – மா, மிகவும் குளிராக இருக்கிறது புடவையோ நைட்டியோ குளிர் தாங்க உதவாது. என்னுடைய குர்தா பைஜாமா உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால் படுக்கும்போது மட்டும். சூழ்நிலையை மனதில் கொண்டு இதை சொல்லாமல் இருக்க வேண்டி வந்தது. இப்போது அம்மா அந்த இளைஞனுக்கு முன்பாகவே என்னுடைய மென்மையான பட்டு குர்தாக்களையும் அலிகர் பைஜாமாக்களையும் உல்லன் மஃபலரையும் அணிய ஆரம்பித்தாள்.
வெளியிலா? இந்த வார்த்தை என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே அம்மா தன்னுடைய பஷ்மினா ஷாலை குர்தாவின் மீது – என்னுடைய குர்தா – போர்த்திக் கொண்டு
வயிற் கதவை நோக்கி நடந்தாள். இது வேடிக்கையான விஷயம் தான். நீங்கள் என்ன உடை உடுத்த வேண்டும் எதை உடுத்த கூடாது என்று யாரும் சொல்வதில்லை. நாம் உடுத்தும் உடையை பற்றி யாருக்கும் இதுவும் தெரிவதில்லை எனவே யாரும் நம்மை தொந்தரவு செய்வதும் இல்லை என்று அம்மா சொன்னாள்.
எனக்கு தெரியும். இல்லையா?
இன்னுமொரு கேள்வி என் வாயிலிருந்து வெளிவராமல் நின்றுவிட்டது.
இப்போது அவள் மெட்ரோவில் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறாள். ஸ்டேஷன்களின் பெயரை உச்சரித்து அவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள விரும்புகிறாள். வரைபடத்தில் இருக்கும் கோடுகளை தன் விரல் நுனியால் தொட்டு பார்க்கிறாள். “வெளியே செல்ல இந்த ஒரு வழி மட்டும் தானா? நல்லது. யாரும் காணாமல் போய் விட முடியாது” “தெகுசி என்றால் வெளியே செல்லும் வழி என்று என்னிடம் கர்வத்துடன் கூறுகிறாள். இது நாக்கானோ ஷிம்பாஷி. நாம் இங்கு ஏறினோம். இது நாகானோ சாகாவு. இறங்கு. சீக்கிரம். இங்கிருந்து நேர் எதிரே நாம் ஷிகுகுவிற்கு ட்ரெயின் பிடிக்க முடியும். இங்கிருந்து அகாஸாக்கா- மித்ஸுகே, கின்ஸா, டோக்யோ, ஓடேமாச்சி அல்லது ஓ-சா-னோ-மிஸூ ( அம்மா இதை ஓச்சோநமாசு என்று தவறாக உச்சரித்ததற்காக நான் அவளை கடிந்து கொண்டதால், இந்த இடத்தின் பெயரை மட்டும் அம்மா மிகவும் ஜாக்கிரதையாக உச்சரிக்கிறாள். தவறாக உச்சரித்ததற்காக மட்டுமா நான் அம்மாவை கடிந்து கொண்டேன்?) அல்லது இக்கேபுகுரோ வரை போக முடியும். மிகப்பிரமாதம்! மிகவும் எளிதான சாதாரணமான கேள்வியை நான் கேட்டது போல அம்மா சிரித்துக் கொண்டே அனா யாசமாக பதிலளிப்பாள்.
அம்மா தான் எனக்கு
ஷின்ஜுகு க்யோயென்மாயே ஷின்ஜுகு க்யோயெனை விட வீட்டுக்கு அருகே இருக்கும் ஸ்டேஷன் என்றும் நாம் நினைத்தபடி ஷின்ஜுகு இல்லை என்று சொன்னாள்.
நான் ஷின்ஜுகு க்யோயென் போகிறேன் – நான் ஆபீஸில் இருக்கும் போது அம்மா ஒருமுறை எனக்கு போன் செய்தாள். நீ ஏர்போர்ட்டில் சந்தித்தாயே அந்த இளைஞனை ஞாபகம் இருக்கிறதா? நான் அவன்கூடத்தான் போகிறேன். அதனால் கவலைப்பட வேண்டாம்.
இதைக் கேட்டு நான் பயந்து போனேன். சற்று அதிகமாகவே கவலைப்பட ஆரம்பித்தேன்! அம்மா இந்த இளைஞர்களை எங்கிருந்து கண்டுபிடிக்கிறாள்! அம்மா வாத்சல்யத்துடன்
அவர்களது முதுகை ஏன் தட்டிக் கொண்டே இருக்கிறாள்? என் காதுகள் புகைந்தன. நீ என்னை விட மிகப்பெரியவள் என்பதை நான் மறந்துவிடக்கூடாது என்று தான் நீ என்னிடம் அனுமதி கேட்டாயோ? நான் காகிதங்களுக்குள் தலையை கவிழ்த்தபடி யோசித்தேன்.
மார்ச் மாதம் நெருங்கிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் அம்மா மார்ச் மாதம் வருவதற்கு முன்பாகவே “நான் சகுராவை பார்த்து விட்டேன்” என்று அறிவித்தாள்.
என்ன சொல்கிறாய் – நான் சிடுசி டுத்தேன் – இது சகுரா மலரும் நேரமில்லை.
அப்படி இல்லை – அம்மா சொன்னாள். என்னுடைய கேள்வியில் அம்மாவின் கண்கள் மின்னின. அவள் சகுரா மரத்தின் மீது ஏறி மலர்களை தொட்டனைக்காமல் அவை மலராது, மலரவும் முடியாது என்பது போல அவளுடைய கண்கள் கோபத்தில் ஒளிர்ந்தன.
“உன்னுடைய மண்டைக்குள் ஏதோ ஒரு வண்டு புகுந்து விட்டது” என்று நான் கேலி செய்தேன்.
உன் வீட்டு அருகே ஒரே ஒரு மரம்தான் இருக்கிறது என்றாள் அம்மா. பக்கத்து வீட்டு இளைஞன் அம்மாவிடம் இதைப் பற்றி கூறியதோடு மட்டுமல்லாமல் அந்த மரத்தை காண்பிக்கவும் செய்திருந்தான்.
வா அந்த மரத்தை போய் பார்த்து விட்டு வரலாம் அது எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டு வரலாம் என்று அம்மா என்னிடம் கூறுவாள். உண்மையில் அம்மா பீனா நாகா சிக்னலில் இருந்த பாதசாரிகளுக்கான சுவிட்சை அழுத்திப் பார்க்கவே விரும்பினாள். என் ஒருத்திக்காக மட்டும் பாதசாரிகளுக்கான லைட் பச்சையாக மாறும் என் ஒருத்திக்காகவே கார்கள் நிற்கும் என்னும் பெருமையில் அவளுடைய கண்கள் மிளிரும். அவள் பட்டனை அழுத்திவிட்டு முயல் குட்டியை போல வேகமாக பாதையை கடப்பாள். அப்படி என்னதான் இருக்கிறது இந்த ‘சகுரா மலரும் கேளிக்கை’யில் என்று பார்ப்பதற்காக நாங்கள் அம்மாவின் தலைமையில் சகுரா மரத்தை பரிசீலனை செய்வதில் மாலைப் பொழுதே கழிப்போம்.
ஒருவழியாக மார்ச் மாதமும் வந்தது. காற்று பேய் போல வீசியது. டெலிவிஷன் தமது ஒளிபரப்புக்கும் அறிவிப்புகளுக்கும் நடுவே சகுரா மரக்கிளைகளையும் அவற்றின் மீது துளிர் விட்டிருக்கும் மொட்டைகளையும் இலைகளையும் தினமும் சிறிய இடைவெளிகளில் காட்டினர்.
ஹொக்காடோ இப்போது மலராது. அம்மா டெலிவிஷனில் கட்டப்பட்ட சித்திரங்களை எல்லாம் தவறாது பார்த்துக் கொண்டிருந்தாள்.
அம்மாவின் கண்களில் மொட்டுகள் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன.
“உன்னை கேட்காமல் எப்படி மலரும்?” நான் சிரித்தேன்.
நான் எல்லா இடங்களுக்கும் போக விரும்புகிறேன். நான் எல்லாவற்றையும் பார்க்க விரும்புகிறேன். ஹொக்காடோவைக்கூட. அம்மா தன் கைகளை வானை நோக்கி விரித்தாள். மொட்டுகள் அவள் இல்லாமல் மலர முடியாமல் தவிப்பதை உணர்ந்தவள் போல கருணையுடன்.
“நீ சிறு குழந்தை போல இருக்கிறாய அம்மா” எனக்கு அவள் மீது மெலிதாக கனிவு கூடியது.
மகனே எனக்கு எழுபது வயது ஆகிவிட்டது. இனி பயப்பட என்ன இருக்கிறது? அம்மா தன் கைகளை காற்றில் வீசினாள். அவளுடைய தோள்பட்டையில் இருந்து குர்தா நழுவியது. மெலிந்த கைகளில் இருந்து தொங்கும் சதை தெரிந்தது. என்னுடைய அம்மாவுக்கு 70 வயது. என்னுடைய தந்தையோ அவள் அருகில் இருக்கிறாளா இல்லையா என்பததை நினைவில் வைத்துக்கொள்ளக்கூட முடியாதபடி முதுமை எய்தியவர்.. தன் வாழ்நாளில் முதன்முறையாக அனைவரையும் தனியாக விட்டுவிட்டு அவள் என்னிடம் இங்கு வந்திருந்தாள்.
ஒரு நாள் அம்மா என் ஆபிசுக்கு எதிரே நிற்பதை பார்த்தேன் “நீ தனியாக வா வந்தாய்?”
சப்வேயில் வீடு திரும்பும் போது நான் அம்மாவை திட்டிக்கொண்டே வந்தேன் ஆனால் அவளோ ஸ்டேஷன்களின் பெயரை மனப்பாடம் செய்வதில் ஆழ்ந்திருந்தாள். ஹராஜுகூ ஸ்டேஷன் வந்தவுடன், போர்வீரர்கள் கமாண்டரின் அழைப்பை கேட்டவுடன் துள்ளி குதித்து எழுவது போல அவள் சில்வர் இருக்கையில் இருந்து துள்ளி எழுந்து தன் கையை என் கையுடன் பிணைத்துக் கொண்டாள். நான் என்ன ஏது என்று விசாரிப்பதற்கும் அம்மா எனக்கு பதில் அளிக்கும் முன்னரே நான் ரயில் பெட்டியின் கதவை நோக்கி தள்ளப்பட்டேன். நல்ல வேலையாக எங்கள் இருவரின் கைகளும் கதவுடுக்கில் எப்படி நசுங்காமல் இருந்தது என்று கடவுளுக்கு தான் தெரியும். என்னை இழுத்துக் கொண்டு அவள் யோகி பார்க்கை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
இடமா வலமா அம்மா தனக்குள்ளேயே முணுமுடித்துக் கொண்டு, இடப்பக்கம் திரும்பினாள்.
எனக்கு தெரியும். எனக்கு தெரியும். என்னுள் இருந்த, ஏமாற்றத்தால் பிடிக்கப்பட்ட கிழவன், தன் முழங்கால்களுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான். அவள் வேறு யாரோ ஒரு இளைஞனுடன் இங்கு ஏற்கனவே வந்திருக்கிறாள் என்பது எனக்குத் புரிந்தது.
சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. மாலை வான் முழுவதும் கவிழ்ந்து கொண்டிருந்தது. எங்கள் கண்ணெதிரே மழைத்துளிகள் சகுரா மரத்தின் மீது விழ ஆரம்பித்தன. அம்மாவும் அதைப் பார்த்துக்கொண்டு எனக்கும் காண்பித்தாள். மொட்டுகள் அப்போதுதான் அசைய தொடங்கி இருக்கும் போல. அந்த மாலை நேரத்தில் லேசான மழைத்தூரலில் தான் சகுரா மலர ஆரம்பித்தது. நிலவு பொழியும் இரவில் மின்னும் மணல் துகள்களைப் போல சகுரா மொட்டுகள் மின்னிக் கொண்டிருந்தன.
நான் குடையைப் பிரித்தேன். இருவரும் சற்று நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தோம். அம்மா என் விரல்களிலிருந்து நழுவி அந்த மணல் துகள்களை நோக்கி ஓடினாள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் மிகவும் பயந்திருந்தேன். அவள் அங்கு இல்லாத நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்தால், அதுவும் தில்லியில் இருந்து வந்தால், அவர்களிடம் நான் என்ன சொல்லி இருப்பேன்?
மார்ச் மாதம் முடிய இருந்தது. அம்மாவைப் பின்பற்றி, டோக்யோ நகரம் முழுவதும் பைத்தியமாக ஆகியிருந்தது. அம்மாவைப் போலவே ஒவ்வொரு வரும் சகுரா சகுரா என்றே ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள். இன்னும் நான்கு நாட்கள் தான். ஞாயிற்றுக்கிழமை நாம் சகுரா மலர்கள் மலர்ந்திருப்பதை காணலாம். எப்போதும் போல, ஆரம்பத்தில் தங்கள் புத்தியை உபயோகித்தோ அல்லது நிதானத்தை கடைபிடித்தோ அல்லது நீங்கள் இதை எந்த பெயரிட்டு வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள், அமைதியாக இருக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் வசந்தம் வந்ததுமே, அவர்கள் தன்னிலை இழந்து விடுகிறார்கள். நானும் அம்மாவைப்போலவே அவளுடைய பாட்டை தான் பாடிக் கொண்டிருக்கிறேன். அம்மா முழு டோக்கியோவின் மீதும் படர்ந்து தன்னுடைய ராகத்தை ஆலாபனை செய்து கொண்டிருப்பது போல, நானும் அதிலேயே மிதந்து கொண்டிருக்கிறேன்.
கொஞ்ச நாட்களிலேயே, கடலில் பேரலைகள் எழும்புவது போல சகுரா நகரம் முழுவதும் மலர ஆரம்பித்திருந்தது. அம்மாவும் மற்ற டோக்கியோ நகர வாசிகளும் தலையை பின்புறம் சாய்த்து வானத்தை நோக்கி பார்த்தவாறு நடக்க ஆரம்பித்தார்கள். ஆனால் வானத்துக்கு பதிலாக வானம் முழுவதும் கண்ணுக்கட்டிய தூரம் வரை முடிவற்ற வெள்ளை மலர்கள் அலை போல துள்ளி ஆடிக்கொண்டிருந்தன. நீண்டு விரிந்து கொண்டே இருந்தன.
எல்லோரும் வானை நோக்கிய வண்ணம் கண்களை மூடியபடி தட்டு தடுமாறி நடந்து கொண்டிருந்தார்கள். சகுராவின் மெல்லிய நறுமணம் காற்றியும் அதை சுவாசிப்பவர்களின் நுரையீரல்களையும் நிரப்பி அவர்களை உன்மத்தம் கொள்ளச் செய்தது. மரத்தின் கீழே வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களிலும் ஸாக்கே பாட்டில்களிலும் கூட அதன் நறுமணம் பொங்கி வழிந்தது.
மரத்தின் மேலே எவ்வளவு பூக்கள் இருந்ததோ அதே அளவு மரத்தின் கீழே மனிதர்களும் இருந்தார்கள். அம்மா என்னை அழைத்துக் கொண்டு வந்த சிதோரிகாஃபூச்சீ பார்க்கில் ஒருவர் குளோசப் ஷாட் எடுத்துக் கொண்டிருந்தார் மற்றவருவர் தன்னைத்தானே படம் எடுத்துக் கொண்டிருந்தார். ஒருவர் படம் வரைந்து கொண்டிருந்தார். ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஒருவர் பாட்டு பாடிக்கொண்டிருந்தார். வேறொருவரோ இங்கும் அங்கும் குதித்துக் கொண்டிருந்தார். அம்மா என்னை சிறிது தூரம் அழைத்து சென்று நிறுத்துவாள் பிறகு மறுபடியும் கொஞ்சம் முன்னால் அழைத்துச் சென்று நிறுத்துவாள். கீழே நதி ஓடிக்கொண்டிருந்தது மறுபக்கம் சகுரா. அதற்கு மேல் உயரமான கட்டிடங்கள்.
அம்மா உயரமான கட்டிடம் ஒன்றை சுட்டிக்காட்டி அது என்ன என்று கேட்டாள்.
ஃபேர்மான்ட் ஹோட்டல் என நான் பதிலளித்தேன்.
அம்மா நின்று செதுக்கப்பட்ட ஒரு பாறையின் மீது காலை வைத்துக்கொண்டாள். சகுரா மரத்தின் ஒரு கிளை குனிந்து அவளுடைய உதடுகளை வருடிச் சென்றது.
அம்மாவும் அதனை முத்தமிட்டிருக்கக்கூடும்.
நாங்கள் அங்கு நின்று கொண்டிருந்தோம் எங்கள் கைகள் ரெய்லிங்கை பற்றிக்கொண்டி ருந்தன. எங்களுக்கு மேலும் அதற்கு மேலும், முன்னாலும் பின்னாலும் முடிவற்ற வெண்கடல விரிந்திருந்தது.
அம்மா உயரமான கட்டிடம் ஒன்றை சுட்டி, ” அங்கு என் வீடு இருந்திருந்தால் நான் சாகுராவை எப்பொழுதும் எந்நேரமும் பார்த்துக் கொண்டே இருந்திருப்பேன் என்றாள்.
பிறகு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சகுரா படபடக்க ஆரம்பித்தது. சமுத்திரம் மேலே எழுந்து கீழே இறங்கியது. மறுபடியும் மேலே எழுந்து கீழே இறங்கியது. நாங்கள் ஹோட்டலில் இருந்த அப்பார்ட்மெண்ட்டின் ஜன்னல் அருகே நின்று கொண்டு இருப்பது போல எனக்கு தோன்றியது – அது அப்பார்ட்மெண்ட் இல்லை அம்மாவின் வீடு- அலைகள் எங்களை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. நாங்கள் இங்கில்லாமல் அங்கு இருப்பது போலவும் அம்மா மலரின் இதழ் போல காற்றில் படபடப்பது போலவும் எனக்கு தோன்றியது.
என்னுடைய கைக்கு பக்கத்தில் தான் அம்மாவுடைய கை இருந்தது. ரெய்லிங்கை இறுக்கிப்பிடித்த சுருக்கங்கள் நிறைந்த கை.
எங்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் கராவோகேயை ஆரம்பித்திருந்தது.
நான் என்னுடைய பிளாஸ்கிலிருந்து சாக்கேவை எடுத்தேன். அம்மா தனது கோப்பையை உதட்டில் வைத்தாள். கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஃபிளாஸ்கை அகற்றிவிட்டு நான் என்னுடைய கோப்பையை எடுத்துக் கொண்டேன். சகுராவிற்கு சியர்ஸ் என்று உரக்கச் சொல்லிக் கொண்டே நான் கைகளை உயர்த்தினேன். பின்னாலிருந்து கரவொலிகள் கேட்டன. அஸ்தமன மாலை பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் ஒளிரும் சகுரா மலர்களைப் போல அம்மாவின் முகமும் ஒளி வீசிக் கொண்டிருந்தது. அம்மா என் கையை தன் கையோடு கோர்த்துக்கொண்டு நடனமாட ஆரம்பித்தாள். சகுராவின் இதழ்கள் பட்டாம்பூச்சிகளைப் போல காற்றில் அலை போல மிதந்து கொண்டிருந்தன. நதின் மறுபுறம் வேறொரு காலத்தில் அம்மாவின் வீடாக இருந்த ஃபேர்மான்ட் ஹோட்டலின் ஒரு ஜன்னல் திறந்திருந்தது. அங்கு அவள் இருந்தாள். என் அம்மா. எழுபது வயது கிழவியாக அல்ல, சிறு பெண்ணாக. நாங்கள் சகுரா மரத்தின் கீழே குதிப்பதையும் நடனமாடுவதையும் பார்த்துக் கொண்டு அவள் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
- https://bombaylitmag.com/march-me-sakura/
- मार्च, माँ और साकुरा / March, Ma and Sakura
- Geetanjali Shree / गीतांजलि श्री
- Paperback : 180 pages
- ISBN-10 : 8172237537
- ISBN-13 : 978-8172237530
- Publisher : HarperCollins India (1 Oct. 2008)
பட உதவி: கிராஃபிட்டி கலைஞர் அ-கில்லின் “சுஷி பட்டி” சுவர் சுவரோவியம் தமிழ்நாட்டின் புதுச்சேரிக்கு வெளியே குயிலாபாளையத்தில் உள்ள சகுரா சுஷி உணவகத்தில்.
ஏ-கில் யார்? கலைஞரின் சொந்த வார்த்தைகளில்: “”நான் அக்யூல், சென்னையில் உள்ள கிராஃபிட்டி கலைஞர். எனது குறிச்சொல் பெயர் அகில் மற்றும் சென்னை T3K (டிக் டாக் டோ, தி தேர்ட் கைண்ட்) இல் முதல் கிராஃபிட்டி குழுவின் இணை நிறுவனர். நான் மலேசியாவில் டிஜிட்டல் விளக்கப்படம் நான்காண்டுகள் படித்தேன். நான் 2010 முதல் ஓவியம் வரைகிறேன். அவருடைய வேலையை இங்கேயும் இங்கேயும் பாருங்கள்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
