தன் கணவர் மற்றொரு பெண்ணிற்கு உரியவனாக ஆகப் போகிறான்

This entry is part 6 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

பாகம் – 2

பத்மாவதி தன் சகிகள் மற்றும் அவந்திகாவுடன் உபவனத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவந்திகா எதோ ஒரு பொருளை பத்மாவதியிடம் கொடுக்க வருகிறாள்.  இதையா தேடினாய்? என்ற கேட்ட அவந்திகாவிடம் பத்மாவதி அது கிடக்கட்டும் என்று சலிப்புடனே சொன்னாள்.  அவள் ஏதோ கவலையில் இருப்பதாக புரிந்து கொண்ட அவந்திகா ( வாஸவதத்தா )  என்ன விஷயம் என்று வினவினாள். அவள் கேள்விப்பட்டது  மஹாசேனரின் மகனான  ராஜ குமாரனுக்காக சம்பந்தம் பேச வரப் போகிறார்கள் என்று அவள் அறிந்திருந்ததால்,  பரிகாசமாகவே சீண்டினாள். இதோ ராஜகுமாரன் வரப் போகிறான், அது தான் உன் முகமே மலர்ந்து இருக்கிறது என்றாள்.  மகாசேன ராஜ குடும்பத்து மணமகள் என்றால் சும்மாவா? என்றாள். 

பத்மாவதி -யாரது மகாசேனன் ?

அவந்திகா: உஜ்ஜயினி தேசத்து அரசன் ப்ரத்யோதன் என்பவர். அவருடைய படை – சேனை- மிகப் பெரியது என்பதால் மஹாசேன என்பர்.  அவர் மகனுக்காக  உன் சகோதரனிடம் பெண் கேட்டதாக கேள்வி.

சேடி: சகோதரி! அந்த வரன் எங்கள் ராஜ குமாரிக்கு பிடித்தமாக இல்லை.

அவந்திகா: பிடிக்காமல் போக காரணம்? பெரிய அரச குடும்பம், வேறு யாரை விரும்புகிறாள்? 

சேடி: வத்ஸ ராஜா உதயணன் என்பவரைத் தெரியுமா? அவரைத்தான்  எங்கள் ராஜகுமாரி விரும்புகிறாள்.

அவந்திகா: (தனக்குள்- முதல் மந்திரி  யௌகந்தராயன் விரும்பியதே இதைத்தானே)  என்ன காரணம்?

சேடி: நல்ல குணவான், தயாளு என்கிறார்கள்.  குணம் சரி, எப்படி இருப்பார் என்று கண்ணால் காணாமலே எப்படி சொல்வது? ஒரு வேளை அழகனாக இல்லாமல், குரூபியாக இருந்தால்.

அவந்திகா (தனக்குள்) அது எனக்கு தெரியுமே)  சட்டென்று, குரூபம் எல்லாம் இல்லை, வசீகரமானவன் தான்.

சேடி: ஆர்யே! (மரியாதைக்குரியவரை விளிக்கும் சொல்)  உங்களுக்கு எப்படித் தெரியும்? 

அவந்திகா (தனக்குள்- எப்படி சமாளிப்பது) உஜ்ஜயினியில் பேசிக் கொள்வார்கள்.  அது தான். 

பத்மாவதி, அது சரிதான். உஜ்ஜயனி மக்கள் அறிந்திருப்பார்கள். அந்த தேசத்து ராஜ குமாரியை மணந்தவன். அருகில் இருந்து பார்த்திருப்பார்கள்.  

தாத்ரி என்ற அரண்மனை சேவகி வருகிறாள். ராஜகுமாரி, மங்களம் உண்டாகட்டும்.   இளவரசி! வாழ்த்துக்கள். உன் திருமணம் நிச்சயம் ஆகி விட்டது.

அவந்திகா- ஓ அப்படியா? யார் மணமகன்?

தாத்ரி: வத்ஸ தேசத்து அரசன் உதயணன்

அவந்திகா: அந்த அரசன் நலமாக ஆகி விட்டானா ?

தாத்ரி: நலமாகித் தான் வந்து இருக்கிறார். நம் அரசர் நமது கண்மணி பத்மாவதியை அவருக்கு தருவதாக வாக்களித்து விட்டார்.

அவந்திகா: அடடா ? ஆச்சர்யம்.

தாத்ரி: என்ன ஆச்சர்யம் இதில்.

அவந்திகா, சமாளித்துக் கொண்டு, சற்று முன் தானே அந்த மாணவ ப்ரும்மசாரி சொன்னான், மிகவும் வருந்துகிறான் என்று. அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டு விட்டாரா?

தாத்ரி: மகா புருஷர்கள், பெருந்தன்மை உடையவர்கள். சுகம் துக்கம் என்று ஒரேயடியாக மகிழ்வதோ, வருந்துவதோ இல்லை என்பார்கள்.  அவராக வரவில்லை. வேறு ஏதோ விஷயமாக வந்தவரை நமது அரசர் போய் பார்த்து பேசியிருக்கிறார். நடந்தது  நடந்து விட்டது.  மேற் கொண்டு நடப்பதை பார்ப்போம் என்று அவருக்குச் சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறார். 

 வாஸவதத்தா-(தனக்குள்)    தானாக வந்து பெண் கேட்கவில்லை என்பதே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் இருவரும் இவ்வளவு தூரம் ஊரை விட்டு வந்ததும் வீணல்ல. இது தானே முதன் மந்திரி சொன்னார்.

தாத்ரி:  நம் தர்சக மகாராஜா வியந்து அவரை சற்று நேரம் பார்த்தபடியே இருந்தார். தான் வந்த காரியம் பற்றி அவர் சொல்லவும், அவருடன் பேசும் பொழுதே  அரசனுக்குரிய பெருந்தன்மையும்,   உயர் குணமும், நல்ல குலத்தினர் என்பதும் அவருக்கு புரிந்து விட்டது.  அரச காரியம் என்பதால் வேறு எதுவும் பேசவில்லை. அப்பொழுதே தீர்மானித்து விட்டார் போலும். நம் கண்மணி ராஜகுமாரியைத் தருவதாக வாக்களித்து விட்டார்.  

வாஸவதத்தா பத்மாவதியை அருகில் இருந்து கவனித்த வரை அவளிடம் அன்புத் தோழியாகவே ஆகி விட்டிருந்தாள். தானாக வந்த லக்ஷ்மி தேவி போல, பத்மாவதி தன் கணவருக்கு மனைவியாக கிடைத்ததில் மகிழ்ச்சியும், திருப்தியுமே அடைந்தாள்.   

ஒரு சேடி ஓடி வந்து, இன்றே நல்ல நாள் என்று கௌதுக மங்களம் ஏற்பாடு செய்கிறார்கள்.  மகாராணி- தர்சக அரசனின் மனைவி உங்களை கூட்டி வரச் சொன்னார். வாருங்கள். போகலாம் என்றாள். 

அனைவரும் அரண்மனை நோக்கிச் செல்கிறார்கள். 

பாகம்:3. 

வாஸவதத்தா உபவனத்தில் நடந்து கொண்டிருக்கிறாள். அனைவரும் திருமண ஏற்பாடுகளில் மூழ்கி இருக்கிறார்கள். அங்கு எனக்கென்ன வேலை என்று நினைத்தாலும், உள் மனதில் வலி மேலோங்கி நின்றது. தன் கணவர் மற்றொரு பெண்ணிற்கு உரியவனாக ஆகப் போகிறான்  என்பதே தாங்க முடியாத துக்கமாக இருந்தது.  ஆறுதலாக யாரிடம் பேசுவது அல்லது யார் தான் இந்த விஷயத்தில் ஆறுதல் சொல்ல முடியும். அரண்மனை கோலாகலமாக இருந்தது.  ஒவ்வொருவரும் மலர்ந்த முகத்துடன் விரும்பி திருமண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். மணமகன் பக்கத்திலிருந்து யாரெல்லாம் வருவார்கள், அவர்களுக்கு தங்க இடம் மற்ற வசதிகள் செய்ய வேண்டும் என்றனர்.  அவள் யாரிடமும் முகம் கொடுத்து பேசக் கூட தயங்கினாள்.  தனிமையே ஏற்றது. நாலடி எடுத்து வைத்தவள், இனி நம் நிலைமை என்னாகும்? என்ற கவலையும் உடன் எழுந்தது. அரச குலத்து வழக்கம் தான் பல மனைவிகளை ஏற்பது. சக்ரவாகப் பறவைகள் துணையை பிரிந்தால் உயிரையே விடுமாம். அது மேல். மனித பிறவியில் அது முடியுமா?  

சங்கர் கோவிந்தராஜ் / Shankar Govindaraj
சித்திரம் : சங்கர் கோவிந்தராஜ்

கூடை நிறைய பூக்களுடன் ஒரு பணிப் பெண் வந்தாள்.  அம்மா அவந்திகே! உங்களைத் தான் தேடினேன். இந்த பூக்களைக் கொண்டு மணமகளுக்கான வர மாலையை உங்கள் கையால் கட்டிச் தரச் சொன்னார்கள். உற்ற உறவினர் அல்லது சகிகள் தான் செய்ய வேண்டும். பத்மாவதி ராஜ குமாரிக்கு நீங்கள் தானே உற்ற தோழி. மகாராணி சொன்னார்கள், நீங்கள் நல்ல குலத்தில் பிறந்தவர், கருணையும், பரிவும் உள்ளவர், திறமைசாலி, அறிவிற் சிறந்தவர் என்றெல்லாம் புகழ்ந்தார். அதனால் தாங்கள் தான் இந்த கௌதுக மாலையை தொடுத்து தர வேண்டும் என்றார். 

யாருக்கு இந்த மாலை?

நம் ராஜ குமாரிக்குத் தான்.  மணமகனை நீராட அழைத்து சென்று விட்டனர். இதோ தயாராகி விடுவார் என்று சொல்லியபடியே, பூக்களை வரிசைப் படுத்தி வைத்துக் கொண்டு தானும் அமர்ந்தாள். 

நீ பார்த்தாயா மணமகனை? 

விடுவோமா, நாங்கள் எல்லோருமே பார்த்தோம்.  ராஜ குமாரி பத்மாவதியை இங்கு அனைவருக்கும் பிடிக்கும். அதனால் ஆவல் தாங்க மாட்டாமல் அவருக்கு மணாளனாக வரப் போகும் அரசரை பார்த்தோம்.

எப்படி இருக்கிறார்?

ஆ, அதை எப்படி விவரிப்பேன்.  இது வரை இப்படி ஒருவரைக் கண்டதேயில்லை. 

சொல்லு, சொல்லு,  அழகனா? 

உண்மையைச் சொல்லட்டுமா, கையில் மலர் அம்பு இல்லாத மன்மதனே தான்.

நல்லது. இருக்கட்டும் விடு.

ஏன் தடுக்கிறீர்கள்.

பிற புருஷனை நாம் என்ன வர்ணித்து பேசுவது. அது சரியல்ல. 

ஆமாம். நம் கடமையை செய்வோம், பூத் தொடுக்க ஆரம்பிக்கலாமா? 

பூக்களை அவள் வரிசையாக எடுத்துக் கொடுக்க, வாஸவதத்தா மாலையாக தொடுக்கிறாள். இது என்ன இலை? 

இது மங்களமானது. நீண்ட நாள் தம்பதிகள் அன்புடன் வாழச் செய்யும்.

நிறையவே கொடு. நீண்ட நாள் சுமங்கலியாக இருக்க வேண்டும் நம் அரச குமாரி. 

பூக்களையும், துளிர்களைகளையும் அடுத்தடுத்து  அதன் குணங்களை சொல்லியபடி அந்த பணிப் பெண் தர மாலை வேகமாக தயாராகியது.  இது என்ன?

(शफालि )பாரிஜாதம். ராஜகுமாரி தானே வைத்து பராமரித்து வருகிறார். அவருக்கு பிடித்தமானது. 

அடுத்தது ?

இதுவா, தேவையில்லை, இருந்தாலும் இதையும் சேர்ப்போம்.சக்களத்தி வராமல் இருக்க என்று சொல்லியபடியே அவள் சிரித்தாள். இதன் பெயர் சபத்னி மர்தனம்.

பின் எதற்கு? பத்மாவதியை மணந்த பின் வேறு யாரை நினைக்கப் போகிறான். வேண்டாம், விடு.   ஏற்கனவே இருந்தவளும் போய் விட்டாள். 

மற்றொரு பணிப்பெண் வந்து, மாலை தயாரா,  யாவரும் வந்து மணமேடையில் கூடி விட்டார்கள். இதோ, என்றபடி இருவருமாக மாலையை பத்ரமாக எடுத்துக் கொண்டு மறைந்தனர். 

வாஸவதத்தா  பெரு மூச்சு விட்டபடி, கை நழுவிப் போன பின் இனி என்ன செய்ய.   நடக்கிறபடி நடக்கட்டும் என்று எண்ணியபடியே உபவனத்தில்  ஒரு மேடையில் அமர்ந்தாள். 

ஸ்வப்ன வாசவதத்தா

ஸ்வப்ன வாசவ தத்தா – 5 பாரிஜாத புஷ்பங்கள் எனக்கும் பிடிக்கும்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.