‘ எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது ‘ என்கிற தலைப்பில் கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். இவை ‘ வார்த்தை ‘ மற்றும் ‘ சொல்வனம் ‘ இதழ்களில் வெளிவந்த பிறகு ‘ சிறுவாணி மைய ’ த்தாரால் புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளன. அதே தலைப்பில் எல்லா விஷயங்களையும் பற்றி வழக்கம்போல் எழுதலாம் என்கிற எண்ணம் தோன்றிய பொழுது இரண்டு தொடர்களுக்கும் இடையில் ஒரு குழப்பம் நேரிடலாம் என்பதால் எதைப்பற்றியும் ( அ ) இது மாதிரியும் தெரிகிறது – இரண்டாம் பாகம் ‘ என்று எழுதலாமா என்று யோசித்தேன். இந்த இரண்டாம் பாகம் என்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இந்தியன் என்று ஒரு படம் வந்தது; அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்று வந்து, வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. அதே மாதிரி தான் P.S. 1, P.S. 2. இது மாதிரியான சீக்வல்களில் இரண்டாவது முதலாவது போல் பெரும்பாலும் இருப்பதில்லை. இதற்கு விதிவிலக்குகளும் உண்டு.
அது தவிர ஒருவேளை இக்கட்டுரைகள் நூலாக வரும் பட்சத்தில் இந்த புதிய நூலை, அதாவது இரண்டாம் பாகத்தை பார்ப்பவர்கள் இது ஏற்கனவே படித்த புத்தகம் என்றோ அல்லது முதல் பாகத்தை படிக்கவில்லையே அது இல்லாமல் இதை படித்தால் தொடர்ச்சி இருக்காது என்றோ அதை வாங்காமல் / படிக்காமல் போகலாம் என்ற எண்ணமும் வந்தது. இவை எல்லாம் யாரோ இக்கட்டுரைகளைப் படிக்கப் போகிறார்கள் என்கிற ஒரு நேர்மறை அனுமானத்தில் விளைந்தவை.
வேறு ஒரு தலைப்பு வைப்போம். அதே சமயத்தில் எழுதும் விஷயங்களில் எதைப் பற்றியும் எழுதலாம் என்கிற சுதந்திரம் இருக்கட்டும் என்றுதான் இந்தத் தலைப்பு. தவிர வழக்கம் போல் இவை எனக்குத் தோன்றும் / தென்படும் உண்மைகள் மட்டுமே. தன் நெஞ்சறியப் பொய் அற்றவை.

பிறந்தநாள்
சமீபத்தில் திரு ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு எப்படி காந்தியடிகளுடைய பிறந்த நாள், பிறந்த நாளாக அமைந்தது என்பதை பற்றிய ஒரு பதிவை நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். ( தகவல் உபயம் திரு லலிதா ராம் ராமச்சந்திரன் என்கிற குறிப்போடு ). அதில் எப்படி தனது பிறந்தநாள் தன் தாயாருக்கே தெரியாமல் இருந்த சந்தர்ப்பத்தில் காந்தியடிகளுடைய பிறந்த நாளை, அதாவது அக்டோபர் இரண்டை, அவருடைய பிறந்தநாளாக வைத்தார்கள் என்பது விரிவாக சொல்லப்பட்டிருந்தது.
இது மாதிரியான விஷயங்கள் பலவும் நிகழ்கின்றன. எங்கள் குடும்பத்தில் என்னுடைய அம்மாவுக்கு மிக நெருங்கிய உறவினர் ஒருவருடைய பிறந்தநாள் மற்றும் திருமண நாள் இரண்டும் ஒரே ஆங்கிலத் தேதியில் இருந்தன. இதைப் பற்றி அந்தப் பெண்மணி சிறுவனாக இருந்த என்னிடம் பேசிய பொழுது “ டேய், உனக்குத் தெரியுமா ? என்னோட கல்யாண நாள் தேதி மட்டும்தான் தெரியும். பிறந்த தேதி யாருக்கும் தெரியாது. ஆனால் கல்யாணமான போது எனக்கு 13 வயது. அதனால, என்னுடைய பிறந்தநாளை கல்யாணமான வருடத்திலிருந்து பதிமூன்றைக் கழித்து, வந்த வருடத்தின் கல்யாண தேதி என்னவோ அதே தேதியாக வைத்துக் கொண்டு விட்டேன்.” அதேபோல் அவர் படித்ததும் எட்டாம் கிளாஸ் வரை என்று நாங்கள் எண்ணி இருந்தோம். என்னிடம் ஒரு நாள் கூறினார். “ பயலே ! நான் எட்டாம் கிளாஸ் வரை படித்ததாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். நீ இப்போ ஆறாங்கிளாஸ் வந்துட்ட. நானும் உண்மையிலேயே படிச்சது ஆறாம் கிளாஸ் வரைக்கும் தான். இந்த ரகசியம் யாருக்கும் தெரியாது. மிகவும் பத்திரமா வச்சுக்கோ “என்று சொல்லி சிரித்தார். இதை அவர் பலபேரும் இருக்கிற இடத்தில் தான் சொன்னார். அதனால்தான் நானும் அதை எழுதுகிறேன்.
இந்த பிறந்தநாள் குழப்பம் மிகப்பெரிய அறிஞர்களுடைய வாழ்விலும் நிகழ்ந்திருக்கிறது. உதாரணமாக ராஜாஜி அவர்களுடைய பிறந்தநாள் எட்டாம் தேதி அல்லது ஒன்பதாம் தேதி அல்லது பத்தாம் தேதி டிசம்பர் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த மூன்று தினங்களில் எது அவருடைய சரியான பிறந்த நாளாக இருக்கும் என்று ராஜாஜி அன்பர்கள் ஆராய்ந்து தீர்மானம் செய்து பத்தாம் தேதியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். எனக்கு அப்படிப் பத்தாம் தேதியை தேர்ந்தெடுத்ததில் ஒரு வருத்தமும் இருந்தது. அதாவது அவருடைய வாழ்நாட்களை கணக்கிடும் போது ஒரு இரண்டு நாள் குறைந்து விடுமே என்பது. நம்முடைய தமிழர்களுடைய வழக்கம் – அல்லது இந்தியர்களுடைய வழக்கம் – நமக்கு பிரியமானவற்றை மிகத் தொன்மையானது என்று சொல்வதும், முதன் முதலில் நாங்கள் தான் அதை சொன்னோம், நாங்கள்தான் அதை செய்தோம் என்பதும். இது தற்பெருமையால் வருவது என்பதை விட தன்னைச் சார்ந்த விஷயங்களின் பால் ஒருவர் கொண்டிருக்கும் அதீதமான அன்பினால் விளைவது என்று தான் சொல்ல வேண்டும். “ இதுவா இது பத்தாயிரம் வருடம் முன்பே இங்கு இருந்தது “ என்பதும், “ இதை ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே நாங்கள் சொல்லி விட்டோம் “ என்பதும், “ இதை ஸ்தாபிதம் செய்து 3000 வருடங்கள் ஆகின்றன “ என்று சொல்வதும், “ இந்த நூல் எழுதப் பெற்று நான்காயிரம் வருடங்கள் ஆகின்றன “ என்று சொல்வதும் ஒரு பழக்கம். இது கிட்டத்தட்ட ஒரு விளம்பரத்தில் இரண்டு சிறுவர்கள் பேசும் பொழுது “ என்னுடைய அப்பா உன்னப்பாவை விட பலசாலி “ என்று சொல்லி அல்ப சந்தோஷப்படுவதைப் போலவும் சில சமயம் அமைந்து விடுகிறது.
அக்டோபர் இரண்டு எப்படி ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு பிறந்த நாளாக அமைந்தது என்பது பற்றி சொன்னேன். அக்டோபர் 2 ஒரு முக்கியமான தினமாக மேலும் பலருடைய வாழ்வில் அமைந்துவிட்டது. மகாத்மா காந்திக்கும், முன்னாள் பாரதப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் அக்டோபர் 2 பிறந்த தினம். காமராஜர் அவர்களின் நினைவு தினம். சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த நாள் ஒரு நாள் முன்னம். அக்டோபர் 1.
இந்த பிறந்த நாட்களை பற்றி குறிப்பிடும் போது இன்னொரு மிகப்பெரிய அரசியல் தலைவர் ஒருவருக்கும், திரை உலகத்தில் மிகப் பிரபலமான ஒருவருக்கும் ஒரே நாள் தான் பிறந்த நாளாக அமைந்திருந்தது என்றும் அதை தவிர்ப்பதற்காக அந்த திரையுலக பிரமுகர் தன்னுடைய பிறந்தநாளை ஒரு நாள் முன்கூட்டியே இருப்பதாக அறிவித்து விட்டார் என்றும் ஒரு வதந்தி உண்டு.
பெரும்பாலும் தமிழ் நாட்டில் பலரும் இரண்டு பிறந்த நாட்களை அனுசரிக்கிறார்கள். ஒன்று ஆங்கில தேதி, மற்றொன்று நட்சத்திரப்படி. என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் திருப்பூரில் இருக்கிறார். அவர் பிறந்த நாள் மூன்று நாட்கள் கொண்டாடுகிறார். கொண்டாடுவது என்றால் நாங்கள் வாழ்த்துகிறோம். அவர் பிறந்தது தமிழ் நாட்காட்டிப்படி சித்திரை 1. அவர் பிறந்த வருடத்தில் சித்திரை 1 ஏப்ரல் 13-ஆம் தேதியே வந்து விட்டிருக்கிறது. சாதாரணமாக ஏப்ரல் 14ஆம் தேதி தான் வரும். ஆக அவருக்கு நட்சத்திர பிறந்தநாள் ஒன்று. சித்திரை 1 என்ற காரணத்தினால் ஏப்ரல் 14 ஒன்று. மற்றும் உண்மையாக ஆங்கில நாட்காட்டியின் படி ஏப்ரல் 13 ல் அவர் பிறந்திருக்கிறபடியால் அன்றும் ஒன்று.
இந்திய வழக்கப்படி ஒரு நாள் அதிகாலை 6 மணிக்குத் துவங்குகிறது. ஆங்கில வழக்கப்படி நள்ளிரவு 12 மணிக்கு. இதன் காரணமாகவும் பிறந்த நாள் குழப்பங்கள் உண்டு.
ஜே. கிருஷ்ணமூர்த்தியின் பிறந்த நாள் மே 11 என்றே குறிப்பிடப் பட்டு வந்தது. எனினும் அவர் மே 11 அன்று நள்ளிரவு தாண்டி பிறந்தமையால் மே 12 ஆக மாற்றி இப்போதெல்லாம் குறிப்பிடப் படுகிறது.
ரமண மகர்ஷியும் டிசம்பர் 29, இரவு மணி 1க்குப் பிறந்தமையால் அவர் பிறந்த நாள் ஆங்கில வழக்கப்படி டிசம்பர் 30 அதிகாலை ஆகிவிட்டது.
இந்தப் ‘ பிறந்த நாள் ‘ என்பது பற்றி ரமண மகர்ஷி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
“ பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது “
1912ல் ரமணர் திருவண்ணாமலையின் விருபாக்ஷ குகையில் இருந்த சமயம் மார்கழி மாதம் அவரது பிறந்தநாளை ஐயந்தி விழாவாகக் கொண்டாட அன்பர்கள் விரும்பி, அவருடைய அனுமதியை வேண்டினர். அவர்களுக்கு பதிலாக பிறந்தநாளின் உட்கருத்தை விளக்கி இரண்டு வெண்பாக்களை பகவான் ரமணர் இயற்றினார் (இந்தக் குறிப்பு ரமண நூற்றிரட்டு நூலில் உள்ளது). அதில் ஒன்று :
“ பிறந்த நாளேதோ பெருவிழாச் செய்வீர்
பிறந்தது எவண் நாம்? என்று பேணிப் – பிறந்திறத்தல்
இன்று, என்றும் ஒன்றாய் இலகு பொருளில் பிறந்த
அன்றே பிறந்த நாளாம்.”
மேற்கண்ட பாடலின் சாராம்சமான பொருள்:
பிறந்த நாளைப் பெரிய விழாவாகக் கொண்டாடும் அன்பர்களே, நாம் பிறந்தது எவ்வாறு (அதாவது சரீரத்தையே ‘நான்’ என்று கருதும் தேகாத்ம புத்தி வடிவாகிய அகந்தையாகிய நாம் பிறந்தது எங்கிருந்து) என்று விசாரித்து, அதன் பயனாக பிறப்பு இறப்பு இல்லாமல் என்றும் ஏகமாய் விளங்கும் மெய்ப்பொருளில் நாம் ஐக்கியப்படுகின்ற அந்த நன்னாளே உண்மையில் நாம் பிறந்த நாளாகும்.
பலருக்கும் எங்கள் வீட்டில் இன்னமும் வயதில் மூத்தவர்கள் நட்சத்திர பிறந்தநாள் அன்றுதான் அழைத்து வாழ்த்து சொல்கிறார்கள். அவர்களுக்கு ஆங்கில தேதி நினைவிருப்பதில்லை. அதை அவர்கள் குறித்துக் கொள்வதும் இல்லை. கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்வது போன்ற விஷயங்களையும் குழந்தைகளுக்கும், பிறருக்கும் நட்சத்திரத்தன்று செய்கிறார்கள். அன்றுதான் அவர்களுக்குத் திருநாள்.
மலையாளத்தில் ‘ நட்சத்திரம் ‘ என்பதற்கே ‘ திருநாள் ‘ என்று தான் சொல் இருக்கிறது. ஸ்வாதித் திருநாள், அவிட்டம் திருநாள், ஆயில்யம் திருநாள் முதலிய பெயர்களில் மஹாராஜாக்கள், மஹாராணிகள் அழைக்கப் படுகிறார்கள். பெயரில் உள்ள திருநாள் எல்லாம் ஒவ்வொருவரின் நட்சத்திரத்தைக் குறிக்கிறது. இந்த நட்சத்திரங்களை தமிழில் திருநாள் என்றும் நாம் சொல்லலாம். விண்மீன் என்று கவிஞர்கள் சொல்கிறார்கள். இந்த விண்மீன்களை Fishes in the sky என்று மொழிபெயர்த்தவர்களும் நம்மில் இருக்கிறார்கள்.
தேசத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள், ஜாதித் தலைவர்கள் என பலருக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும், வேறு விதங்களில் பிராபல்யமானவர்களுக்கும் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பெரிய பெரிய போஸ்டர்கள் அடிக்கப்படுகின்றன. பத்திரிகைகளில் பெரிய விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த விளம்பரங்களிலும் போஸ்டர்களிலும் சில சமயம் வெகு வேடிக்கையான சொல் தொடர்களும், அடை மொழிகளும் அமைந்து விடுகின்றன. சமூக ஊடகங்களால் கட்டமைக்கப் பட்டுள்ள தற்காலத்தில் முக நூல், வாட்ஸ்அப் முதலியவை காலை வணக்கப் பதிவுகளை அடுத்து, இப்பிறந்த நாள் வாழ்த்துகளால் நிரம்பி வழிகின்றன.
நம்முடைய பாரம்பரிய மரபிலேயே இந்த பிறந்த நாளை கொண்டாடுவது என்பது ஊறிப் போயிருக்கிறது. இதைப்பற்றி ஜெயகாந்தன் மிக அருமையாக சொல்லி இருக்கிறார். ராஜாஜி மறைந்த போது ஜெயகாந்தன் அவருக்காக எழுதிய நினைவஞ்சலி கட்டுரையில் நம்முடைய வழக்கம் மகத்தான மனிதர்களுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதுதான், இறந்த நாளை அல்ல. அதனால் தான் நாம் ராமநவமியைக் கொண்டாடுகிறோம், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறோம், காந்தி ஜெயந்தி கொண்டாடுகிறோம். எனவே ராஜாஜியினுடைய ஜெயந்தியைக் கொண்டாடுவோம் என்று எழுதி இருப்பார்.
நட்சத்திர பிறந்த தினம் தவிர வேறு விதத்திலும் பல ஆண்டுகளுக்கு முன் பிறந்த சிலருக்கு இரண்டு பிறந்த நாள் இருக்கும். ஒன்று பிறந்த நாள். மற்றொன்று பள்ளிச் சான்றிதழ் பிறந்த நாள். பள்ளியில் சேர்க்கப் போன போது ஐந்து வயது நிரம்பவில்லை என்பதால் ஐந்து வயது ஆன மாதிரி ஒரு தேதியைப் போட்டு சேர்த்து விடுவார்கள். அப்பொழுது இந்த பிறப்புச் சான்றிதழ் போன்ற விஷயங்கள் புழக்கத்தில் இல்லை.
பிறந்த நாள் தவிர பிறந்த நேரமும் தேவைப் படுகிறது, ஜாதகம் முதலியவை குறிக்க. எதை பிறந்த நேரமாக நாம் வைத்துக் கொள்ள முடியும் என்பதிலும் பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. எனக்கு இந்த ஜோசிய விஷயங்கள் பற்றி அறவே தெரியாது என்பதால் நான் அவற்றில் மிகவும் உள்ளே புகுந்து பார்க்க விரும்பவில்லை. அப்படி செய்வது தவறாகவே முடியும். ஆனால் அந்த பிறந்த நேரத்தை குறிக்கும் போது ‘ சிரஸோதயம் ‘ என்று சொல்கிற ஒரு நேரத்தை குறிப்பாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அவ்வளவு தீர்மானமாகக் கவனிப்பவர்கள் அந்த குழந்தையினுடைய கரு முதலில் உற்பத்தியானது என்ற ஒரு நேரத்தைக் கூடகணக்கில் எடுத்துக் கொள்ளலாம். துல்லியமாக அந்த குறிப்பிட்ட நேரத்தை எடுக்க முடியாவிட்டாலும் தோராயமாக அதை நாம் கண்டுபிடித்து விடலாம். இந்த எண்பதாவது வயது நிறைவு அதாவது ஆயிரம் பிறை கண்ட விழாவை கணக்கிடுகையில் அந்தக் கரு உற்பத்தியான நாளில் இருந்து கூட கணக்கிடுகிறார்கள்.
நினைவகங்களிலும், கல்லறைகளிலும் ‘ பிறப்பு ‘ ‘ இறப்பு ‘ என்று குறிப்பிடாமல் நாம் ‘ தோற்றம் ‘ ‘ மறைவு ‘ என்று குறிப்பிடுகிறோம். இது மிகவும் வேதாந்தமான உட்பொருள் கொண்டதாகவும் இருக்கிறது.
மனிதர்களுக்கு மட்டுமின்றி ராஜ்யங்களுக்கும் மாநிலங்களுக்கும் கூட பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் அந்த மாநிலம் உருவாக்கப்பட்ட நாளை ராஜ்யோத்ஸவம் என்று கொண்டாடுகிறார்கள். தமிழ்நாடு தோன்றிய நாளையும் நாம் கொண்டாடுகிறோம். இதேபோல் ஒருவேளை வீட்டு வளர்ப்பு செல்லப் பிராணிகளுக்குக் கூட பிறந்த நாள் கொண்டாடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இப்பொழுதெல்லாம் பல நூறு க்கும் மேற்பட்ட வீடுகளை, அடுக்ககங்களை கொண்ட பெரிய குடியிருப்புகளில் குழந்தைகளுக்கான பிறந்த நாளை அவர்களுக்கு இருக்கும் ஒரு கிளப் ஹவுஸில் மிக விமர்சையாக கொண்டாடுகிறார்கள். அல்லது ஹோட்டல்களில் கொண்டாடுகிறார்கள். பாட்டு கச்சேரி எல்லாம் வைத்து பேண்ட் வாத்தியம் முழங்க, விருந்து வைத்துக் கொண்டாடுகிறார்கள். அந்த குழந்தைகளை நாடி அந்த குழந்தையோடு கூட பள்ளியில் படிக்கும் குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும் வருகிறார்கள். அவர்கள் தரும் பரிசுகளும், அவர்களுக்கு இந்த பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகள் தரும் பரிசுகளும் பல இருக்கின்றன. ஒரு சிறிய பேனாவில் ஆரம்பித்து எலக்ட்ரானிக் டிவைஸஸ் வரைக்கும் இது மாதிரி தருகிறார்கள்; புத்தகங்களையும் பரிசளிக்கிறார்கள்.
இதுபோன்ற பெரிய பெரிய அளவில் செலவழித்து செய்யப்படும் பிறந்த நாட்களைத் தவிர அவரவர் இல்லங்களிலும் மிக எளிமையாக இந்த பிறந்த நாட்கள் கொண்டாடப்படுகின்றன. தாயார் ஒரு பாயசம் வைத்து அந்த குழந்தைக்கும், பிறருக்கும் கொடுத்து அந்த இனிமையான நாளை கொண்டாடுகிறார். அக்குழந்தைகள் மிட்டாய்களையோ, சாக்லேட்களையோ பள்ளிக்கு எடுத்துச் சென்று ஆசிரியர்களுக்கும், சக வகுப்புக் குழந்தைகளுக்கும் அளிக்கின்றன. வேறு சிலர் வெளியில் இருந்து இனிப்புகளை வாங்கி வந்து கொண்டாடுகிறார்கள். கேக் வெட்டுவது என்பது அனைத்து மதத்தினருடைய ஒரு வழக்கமாகப் போய்விட்டது. கேக்கை வெட்டுவதற்கு கத்தியை எடுப்பது, விளக்கை அணைப்பதற்கு ஒப்ப மெழுகுவர்த்தி அணைப்பது போன்ற விஷயங்களை சிலர் கூர்ந்து கவனித்து தவிர்க்கிறார்கள் என்ற போதிலும் இந்த விஷயமும் ‘ ஹாப்பி பர்த்டே ‘ பாட்டும் பல இல்லங்களிலும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஆனாலும் கோடிக்கணக்கான பேருக்கு அவர்களின் பிறந்த நாள் என்ன என்பது தெரியாது. கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு யாரும் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. அவர்களுடைய பெற்றோர்களுடைய ஏழ்மையும், அவர்களுக்கு இருக்கும் வேறு வேலை பளுக்களும் இதற்குக் காரணமாயுள்ளன. இதுபோன்ற சந்தோஷ தருணங்களை நினைவில் வைத்து கொண்டாடும் எண்ணமே தோன்றாத அளவுக்கு மற்ற பெரும் தொல்லைகளில் அவர்கள் மூழ்கி இருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் பிறந்த நாளை கொண்டாடும் வாழ்வு நிலையும், சந்தோஷமும் கிட்டட்டும்.
இந்தப் பிறந்த நாள், வயது இவையெல்லாம் என்ன ? நாம் மனித வாழ்க்கையில் இந்த மனதை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் கணக்கெடுக்கிறோம். இந்த மனம் வெறும் கணக்கு மெஷின் தான். எல்லாவற்றையும் அளந்து கொண்டே இருக்கும். மேலும் கதை மிக நிறைய அளக்கும். அது இது மாதிரி எல்லாவற்றையும் அளந்து கொண்டே இருப்பதால்தான் நமக்கு எதனுடைய உண்மையான மதிப்பும் தெரிவதில்லை; ஓரளவு எல்லாவற்றினுடைய உண்மையான விலைகளையும் தெரிந்து கொள்ளலாம். அவற்றை மார்க்கெட் கண்டிஷன்கள் வேறு மாற்றி அமைத்து விடுகின்றன.
பிறந்த நாட்களை சந்தோஷமாக கொண்டாடுவோம். அதைவிட, பாக்கியம் இருந்தால், அளக்கும் மனதை அப்பால் வைத்து விட்டு, மஹாகவி சொன்னதைப் போல் “ இன்று புதிதாய் பிறந்தோம்” என்று ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாகக் கொண்டாடுவோம்.
அடுத்த கட்டுரை:
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

சுவாரசியமான கட்டுரை